Wednesday, 10 September 2014

தகதிமிதா.............


என் தந்தையார் மருத்துவராக பணிபுரிந்த உக்கரம் என்னும் குக்கிராமத்தில் நாங்கள் வசித்த நாட்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் பக்கத்து வீட்டில் தன் தாயுடன் வசித்த சின்னம்மா (அவரது பெயரே அது தான்) என்ற பெண்மணி நடனம் ஆட கற்றவர், நிறைய நிகழ்ச்சிகளும் செய்தவர் என்பதை அறிந்த போது எனக்கும் அவரிடம் நடனம் கற்கும் ஆர்வம் வந்தது. இவர் தந்தையாரின் மருத்துவமனையில் செவிலியாக(Nurse) வேலை செய்து வந்தார். 

என் நடன வகுப்பு அவர்கள் இல்லத்தின் பின்புறம் அமைந்த வராண்டாவில் (அரசாங்க குடியிருப்புகளில் தரை வீடுகளில் பின்பக்கம் செல்லவும் கதவு இருக்கும்). அக்காவின் தாயாரைப் பாட்டி என்று அழைப்போம். 

அக்காவிடம் சம்மதம் பெற்று வகுப்பில் சேர்ந்தேன்.

அக்கா முதலில் நடன அசைவுகளிலேயே வணக்கம் சொல்வது எப்படி என கற்றுத் தந்தார்.
 
அக்கா : அரை மண்டி போடு, அப்புறம் கைகளை மடக்கி இடுப்பில் வெச்சுக்கோ

நான்: சரிங்க அக்கா (அதே போல செய்வேன்)

அக்கா: வலது காலை தூக்கி தரையில் டப் என்று சத்தம் வருமாறு தட்டு (இது தாங்க "தை")
அடுத்து இடது காலை தூக்கின் தரையில் டப் என்று சத்தம் வருமாறு தட்டு (இதுவும் "தை" தாங்க)

இதே போல செய்து பழகு. "டப்"புனு நல்லா சத்தம் வராப்ல தட்டணும் சரியா? சுவரைப் பார்த்த படி திரும்பி நின்று பயிற்சி செய் கண்ணு.

நான் : சுவரைப் பார்த்து கொண்டே  வலது காலால் ஒரு டப், இடது காலால் ஒரு டப் (தை தை )
  
பாதம் வலிக்க தொடங்கும். திரும்பி பார்த்தால் அக்கா இருக்க மாட்டார்.

நான் பத்மினி, ராகினி, பத்மா சுப்பிரமணியம் போல ஒரு நாட்டிய தாரகையாகும் பேரார்வத்துடன் (ஆர்வக்கோளாறா வயசுகோளாறா???) பாதம் வலித்தாலும் தொடர்ந்து "தை தை" போட்டு கொண்டே இருப்பேன்.

சிறிது நேரத்தில் பாட்டி வாயில் வெற்றிலையை மென்ற படி அந்தப் பக்கமாக வருவார். 

பாட்டி : நான் ஆடுவதை அங்கீகரித்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...என்பார். ஹாலிவுட் ஸ்டைலில் போல சொன்னால் You are doing great என்பது போல ஒலிக்கும் அந்த ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நான் : (தீனமான குரலில் ) பாட்டி...பாட்டி...அக்கா எங்கே பாட்டி?

பாட்டி : வருவாங்க வருவாங்க, நீ ஆடிட்டு இரு சாமி (சாமி என்பது கோவை மாவட்டத்தில் சிறு பிள்ளைகளை செல்லமாக அழைக்கும் சொல்)

நான்: மறுபடியும் தை தை...

சிறிது நேரத்தில் பாட்டி மறுபடியும் ஏதோ வேலையாக வருவது போல வந்து மேற்பார்வையிடுவார்.

நான் : (முன்பை விட மிகவும் தீனமான குரலில்) ...பாட்டி அக்கா எங்கே பாட்டி?

இம்முறை என் தீனக் குரல் கேட்டு அது வரை வாசல் பக்கமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அக்கா தான் குடித்துக் கொண்டிருந்த  டீ டம்ளருடன் உள்ளே வருவார், .

நான் : அக்கா , முடித்து விட்டேன். அடுத்த அசைவை சொல்லி கொடுங்கள்.

அக்கா: (டீ குடித்து கொண்டே) நான் நடனம் கற்க சென்றபோது 6 மாதம் இதே பயிற்சி தான், சலிக்காமல் செய்த பிறகே என்னுடைய குரு அடுத்தடுத்த பயிற்சிகளை சொல்லி தந்தார் என்பதாக ஒரு மிக நீண்ட லெக்சர் கொடுப்பார்.

நான்: சரிங்க அக்கா ...(மீண்டும் தை தை...) 

ஒரு மாதமாகியும் தினமும் அதே "தை தை", அதே லெக்சர் என தொடர்ந்தது.

அரை மண்டியிட்ட நிலையில் கையை மடக்கி இடுப்பில் வைத்த படி தை தை போட்டவர்களுக்கு இதன் அருமை பெருமைகள் புரியும்.

6 மாதங்கள்  "தை"க்க எனக்கு பொறுமை இல்லாத  காரணத்தால் நடனபயிற்சி வகுப்பு நிறைவுற்றது. 

இன்றளவும் Salsa, Zumba போன்ற நடனங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளது என் மனத்தில். 

அந்த காலத்துல நாங்க ஆடாத ஆட்டமா? :) :) :) 

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...