திருமணமான புதிது. 17 வயது. என் மாமியார் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர், நன்றாக பாடக்கூடியவர்.
(தாமே சுயமாக பாடல்களை இயற்றும் வல்லமை படைத்த முன்னோர்களின் வாரிசு, அப்பாடல்களில் சிலவற்றை நாங்கள் குடும்ப பாடலாக இன்றும் பாடிக்கொண்டிருக்கிறோம்- ஆட்டுகுட்டி ரே ரே பாட்டோ, ஜானகி தேவி ராமனை தேடி பாட்டோ உங்கள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது )
அவரின் வற்புறுத்தலால் பின் தெருவில் இருந்த ஒருவரிடம் சேர்ந்தேன். மதியம் 1 - 2 வகுப்பு நேரம். அவர்களின்
உணவு நேரம் காலை 11 (பிரன்ச் தான் தினமுமே), அதன் பிறகு தூங்கி எழுந்து பின்பு தான் சொல்லி தரமுடியும்
என்று சொல்லிவிட்டார்கள் அவரும் அவரின் மகளும்.
(அப்போதெல்லாம் பால் லாரி தெருமுனையில் வந்து பூத்தில் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். வீட்டில் குளிர்சாதன பெட்டியும் கிடையாது. இப்போது போல கடைகளில் பால் கிடைக்காது.)
முன் அறிமுகம் போதும்...............வகுப்புக்கு செல்லலாம்......
மாமி : ஸா........பா..........ஸா............
(அவங்களுக்கு பாதி தூக்க கலக்கம் , எனக்கு அப்போது தான் உண்ட களைப்பு.......)
நான்: ஸா........பா..........ஸா............
மாமி : ஸ ரி க ம (ஒவ்வொரு எழுத்தையும் 4 எண்ணிக்கை என்று மனசில் வெச்சுட்டு பாடு)
நான்: சரி மாமி ... ஸ ....... ரி.........(மனசுல பால் வேன் சத்தம் கேக்குதா???)
மாமி : பாடும்மா ......க... ம......
நான்: க..................ம............. (வேன் சத்தமே கேக்கலையே..........)
மாமி: ஸரிகமபதநிஸ்...............
நான் : ஸ்நிதபமகரிஸ (வேன் போற சத்தம் கேக்கறாப்ல இருக்கே)
மாமி: ஸரி ஸரி ஸரி கம........
நான் :ஸரி ஸரி ஸரி கம........ (வேன் தெருமுனை போய் நிற்கும் சத்தம் கேட்கிறது)
மாமி :ஸரிகமபதநிஸ்......
நான் : மாமி பால் வேன் வந்துடுச்சு, இப்ப விட்டா பால் நாளைக்கு காலைல தான்..... நான் கிளம்பறேன் மாமி
மாமி : சரி வீட்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு அடுத்த வகுப்புக்கு வா.....
பாவாடை தாவணி அணிந்த ,குட்டி பெண்தானே .....தெருவில் ஓடி வருவேன்.... என் மாமனார் (என் தாய் வழி பாட்டனார்) இந்தாம்மா பை வேன் வந்துடுச்சு என்பார்..... வாசலோடு பையை வாங்கி கொண்டு தெருமுனைக்கு ஓடுவேன்.
(குட்டி அக்கா போறாங்க என்பார்கள் என் வயதை ஒத்தவர்கள்)
2 மாதங்கள் இது தொடர்ந்து முடிவுக்கும் வந்தது.
பின் குறிப்பு : பல வருடங்களுக்கு பிறகு , என் மகனுக்கு துணையாக அவனது சங்கீத வகுப்பிற்கு சென்ற போது
எனக்கே ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக் கொண்டேன்.
ஸ........ப.......... ஸ்............ ப..........ஸ............
No comments:
Post a Comment