3 மகள்களுக்குத் பெற்றோரான அவர்களது தினசரி நடப்புகள் நம் இந்தியக் குடும்பங்களை ஒத்தே இருந்தது. மூத்த மகளுக்கு திருமணமாகி அவருக்கு இரண்டு மகன்கள். (சிறு வயது தாத்தா பாட்டிதான் அவர்களும்) .... கடைசி மகள் ஸ்கூல் படிப்பதாக சொல்வார்கள்.(அமெரிக்காவில் கல்லூரியும் ஸ்கூல் தான் என்பதால் என்ன படித்தார் என்று தெரியவில்லை??!!)
வீட்டுக் கூடத்தில் , பால்கனியில், கார் நிறுத்தும் கராஜில் என எங்கும் அவர்கள் இல்லத்தில் பசுமை, செடிகளும் கொடிகளுமாக...........வீட்டை தினமும் சுத்தம் செய்வார்கள்.செடிகளுக்கு நீர் ஊற்றுவார்கள்.....
ஹாலோவின் தினத்திற்காக (அக்டோபர் 30) , பரங்கிகாயை குடைந்து அழகான உருவம் செய்து அதற்குள் மெழுகு வர்த்தியை தினமும் மாலையில் மாதம் முழுவதும் வாசற்படியில் ஏற்றினார்கள்.(கேசவின் விருப்பப்படி நாங்களும் செய்தோம்...)
தேங்க்ஸ் கிவிங்க் டே அன்று அமெரிக்க வழக்கப்படி பிள்ளைகள் பெற்றோருடன் கூடி மகிழ்ந்தனர்.
அடுத்து கிறிஸ்துமஸ் .... அந்த சமயத்தில் டிசம்பர் 3,4 & ஜனவரி 1 ஆம் வாரங்கள் விடுமுறை தினங்களாக கொண்டாடுகிறார்கள்.

பெரும்பாலான அலுவலகங்களுக்கு விடுமுறை அல்லது மக்களே விடுப்பில் சென்று விடுகிறார்கள். (மருமகனுக்கு கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் புது வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை.....)
கேசவ் சைக்கிள் ஓட்டப் பழகியது பற்றி அறிந்ததும் அவரது மனைவி.......கேசவ் நீ ரொம்ப நல்லா சைக்கிள் ஓட்டறியாமே மாமா சொன்னாங்க.......நல்லா ஓட்டி பழகிக்கோ (ஆங்கிலத்தில் தான்) என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் கூறினார். (அச்சமயம் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது.....)
குட்டிப் பாப்பாவின் பெயர் சூட்டு விழாவிற்கு அழைத்தால் வருவார்களோ மாட்டார்களோ என்று தயங்கிய சமயத்தில் திரு தாமஸ் தாமே பாப்பாவுக்கான பரிசை கொண்டு வந்து தந்து சென்றார்.
ஒரு நாளில் எத்தனை முறை காண நேர்ந்தாலும் ஹாய் சொல்லாமல் செல்ல மாட்டார்கள் திரு தாமஸும் அவர் மனைவியும். இன் முகத்துடன் குடும்பத்தினர் நலம் விசாரிப்பார்கள். வீட்டுப் பெண்டிர் எப்போதும் முழு உடலையும் மூடிய ஆடைகளையே அணிந்திருந்ததைக் காண நேர்ந்தது. தினமும் இரு வேளைகளும் திரு தாமஸ் அல்லது அவரது மனைவி, மூன்றாவது மகளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று வருவார்கள்.

அமெரிக்க பாட்டிக்கும் இந்திய பாட்டிக்குக்கும் வித்தியாசம்......
அவர் பேண்ட் சட்டை நீண்ட பாப் தலை முடியுடன்,
நான் சேலை, நீண்ட பின்னலுடன் .....
இருவருக்கும் பொது-----கையில் துடைப்பமும் பிளாஸ்டிக் முறமும் :) :)
பின் குறிப்பு : எலும்பு முறிவு சிகிச்சைக்கு சென்ற நாட்களில் சீன மருத்துவர்... (DR. FRANK WONG) காலை தூக்கி வைத்து கொண்டு வேலை செய்யுங்க.....டீவீ பாருங்க , கம்ப்யூட்டர்ல வேலை செய்யுங்க , தயிர் சாப்பிடுங்க என்றார். கட்டு பிரித்தவுடன், சமைக்க ஆரம்பித்து விட்டீர்களா, வீட்டை சுத்தம் செய்தீங்களா , குழந்தைகளை கவனிக்கறீங்களா, கடைக்கு போறீங்களா .என்றெல்லாம் கேட்டார். (ஒரு சீன படத்தில் ஒரு சீன டீக்கடைக்காரர் ஒரு குவளையில் எடுத்து வாசல் தெளிக்கும் காட்சியைக் கண்டேன்)
No comments:
Post a Comment