Monday, 22 September 2014

கீதா ........காதல் வராதா?


பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல பள்ளியில் வேலையில் சேர்ந்த புதிது.(அங்கே வேலை செய்தது மொத்தம் 6 மாதங்கள் மட்டுமே)

என் மகள் அவ்வருடம் ஆறாம் வகுப்பில் அதே பள்ளியிலும் குட்டிப் பையன் வீட்டிற்கருகில் வேறு ஒரு பள்ளியில். UKGயும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் பள்ளியில் மாணவர்களுக்குத்  தனியாகவும் ஆசிரியர்களுக்குத் தனியாகவும் பகவத் கீதை வகுப்பு வாரம் ஒரு நாள் நடக்கும்.

பிரதி வியாழன் மாலை 4 - 5 மணி. மடத்திலிருந்து ஒரு சாமியார் அம்மா வந்து சொல்லித் தருவார்.

ஆடியோ விஷுவல் ரூமில் ஒரு ஜமுக்காளம் விரித்து , மின் விசிறிகள் போடப்பட்டு , சாமியார் அம்மாவுக்கு சற்றே உயர ஆசனம் போடப்பட்டு வகுப்பு ஆரம்பம்....

உண்மையாகவே கற்கும் ஆர்வம் உள்ளவர்கள்,நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள், பல வருடங்களாக அங்கே வேலை செய்பவர்கள் , சமஸ்கிருதம் (அ) தமிழில் பகவத்கீதை ஸ்லோகத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள், தலைமை ஆசிரியை, இன்கிரிமெண்ட் எதிர்பார்ப்பவர்கள் முன்வரிசைகளிலும், புதிதாக சேர்ந்தவர்கள், கீதையை எந்த மொழியிலும் படிக்கத் தெரியாதவர்கள், நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்கள் (என்னை மாதிரி என வைத்துக் கொள்ளலாம்) பின் வரிசைகளிலுமாக அமர்ந்திருக்க. வகுப்பு ஆரம்பிக்கிறது.

என்ன சொல்ல வருகிறார் என புரியுமுன் முன்வரிசைகளிலிருந்து ஒரு பகவத் கீதை ஸ்லோகத்தை எல்லாரும்  ராகத்தோடு (புத்தகத்தைப் பார்த்துத் தான்)  பாடுவார்கள் . 

அந்த ஸ்லோகத்திற்கு சாமியார் அம்மா. ஆங்கிலம் மலையாளம் சமஸ்கிருதம் கலந்த மொழியில் விளக்கம் சொல்ல ஆரம்பிப்பார்.

சா.அ : கீதா சேஸ் வீ ஹேவ் டு ஃபோர்கோ வாசனாஸ் (இந்த வாசனாஸ் ஐ மூக்கை லேசாக அழுத்தி பிடித்தபடி படிக்க வேண்டும்)

ஆசிரியை 1: (ரகசியக் குரலில் ) மஞ்சு , 5D ஐந்து மணிக்கு சரியாக கிளம்புடுவான்பா , அடையாறு போகணும் நான்...

சா.அ: லார்ட் க்ரிஷ்ணா சேஸ் ............விளக்கம் தொடரும்

நான் : மேடம், பையனுக்கு ஸ்கூல் விட்டிருப்பாங்க....... என்ன பண்றானோ தெரியலை..

சா.அ: வாசனாஸ் ஆர் தி பேசிக் திங் வீ ஹேவ் டு.......

ஆசிரியை 2: ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........ கால் வலிக்குது.... (காலை நீட்டிக் கொள்வார், ஆவ்.. கொட்டாவியுடன்)

சா.அ:   ஆல் ஆஃப் யூ லிசன் ப்ராபர்லி.........(முறைப்பார்)

நான்: என் மகள் வேறு தனியாக வீட்டில் இருப்பாளே.... குழந்தைக்கு பசிக்குமே?

ஆசிரியை 1: பஸ் கிளம்பிட்டா கஷ்டம்பா...... முடிஞ்சுடுமா?
(முன் வரிசையில்  பாட ஆரம்பிப்பார்கள் மீண்டும்)

சா.அ: மீண்டும் எங்களை முறைப்பார். சுவாரசியமற்ற முறையில் விவரம் கூறிக் கொண்டே செல்வார். 

பக்கத்தில் ஒரு ஆசிரியை வைத்திருந்த தமிழ் பதிப்பில் படிக்க முயன்றேன். சமஸ்கிருத ஸ்லோகம் தமிழில். இருந்தது. சுமாராக வார்த்தைகளை பி(ப)டித்தால், ராகம் பிடிபடவில்லை.. ராகத்தை பிடித்தால் வார்த்தைகள் அம்பேல். மூன்று மொழிகளைக் கலந்து பேசுவார் என்று சொன்னேன் இல்லையா? அதனால் பொருளும் பிடிபடவில்லை.  மொத்தத்தில் எப்போது வகுப்பு முடியும் என்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். 

வகுப்பு முடிந்தவுடன் அட்டண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கை எழுத்துடன் நேரத்தையும் குறிக்க வேண்டும் (அதற்கு காவலாய் மற்றொரு சா.அ)

ஒரு வழியாக வகுப்பு முடிந்ததும் , சிறு குழந்தைகள் பசிக்குமே,  மகள் தனியாக வீட்டு வாசலில் காத்திருப்பாரே  என்ற கவலைகள். மழையோ வெய்யிலோ சேறோ சகதியோ குட்டிப் பையனின் பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாக செல்வேன். 

மாலையில் வகுப்பு வைத்தால் ஒழுங்காக கவனிப்பதில்லை என்பதால் காலையில் 9 - 10 என நேரத்தை மாற்றினார்கள்.காலையில் எழுந்து வேலை செய்த களைப்பு, நேரத்திற்கு வந்து சேரவேண்டும் என்ற டென்ஷன் என மறுபடியும் அதே கதை தான். 

மாணவர்கள் 10 மணிக்குத் தான் கூடுவார்கள். இந்த நேரமும் எனக்கு நிம்மதியை தரவில்லை. மகள் அதே பள்ளியில் படித்தாலும் என்னுடன் உள்ளே வர அனுமதிக்க மாட்டார்கள். அவள் பள்ளி வந்து சேரும் வரை அமைதியற்ற நிலை.

நானும் முன் வரிசை, பின் வரிசை சமஸ்கிருதம் , தமிழ் என விதம் விதமாக முயற்சித்தும் எதுவும் உதவவில்லை. 

சாமியார் அம்மா இன்னைக்கு வரமாட்டார் என்ற செய்தியை கேள்விப்படும் தினங்களில் ஸ்டாஃப் ரூமில் காணப்படும் நிம்மதியான முகங்களை காண கண் கோடி வேண்டும்.

பின் குறிப்பு: 
கற்றல் ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டும் என்பதை உணர வைத்த வகுப்புகள் அவை. (என் வகுப்புகளில் மாணவர்களின் முகங்களில் எப்போதும் புன்னகையைக் கண்டிருக்கிறேன்.....நான் சிரிக்க மாட்டேன்..)

1 comment:

  1. ROFL X 100

    Neenga sirikkala... anga nadandhadha nenacha , ippo enakku semma sirippu varudhu....

    chumma attagaasamaana writing ponga....

    ReplyDelete

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...