17 வயதில் திருமணம், சமையல் சுமாராக செய்யத் தெரிந்தாலும் மாமியார் உடன் இருந்ததால் நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை....(கிட்டிய பிறகு என்ன செய்தாய்என்று கேட்காதீர்கள்)
முதற் கட்டம் :
இஞ்சி துவையல், வற்றல், தச்சி மம்மு தான் என் முதல் விருந்தினருக்கு நான் செய்த சமையல். அடுத்த விருந்தினருக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பு, வேப்பம்பூ ரசம், பாகற்காய் பொரியல் (அன்று வீட்டில் வெல்லம் stock இல்லை)
இன்று வரை மீண்டும் அவர்கள் இருவரும் என் வீட்டிற்கு வரவே இல்லை...
இரண்டாவது கட்டம் :
புத்தகத்தை பார்த்து சமைக்க பழகிய காலத்தில் சகோதரி விஜயா எங்கள் இல்லம் வந்திருந்தார். புது மாதிரியான அடை செய்தேன்.
அரிசி, துவரம் பருப்பு, ராகி, கோதுமை எல்லாவற்றையும் ஊற வைத்து (ஆட்டுரலில் நான் ஏழு மாத கர்ப்பத்துடன் ஒரு அடி தள்ளி அமர்ந்து மாவை தள்ள சகோதரி குழவியை சுற்ற ..) அரைத்து செய்தது.
என் சகோதரி: மாமா அக்கா எத்தனை கஷ்டப்பட்டு செய்திருக்கார், நீங்க எதுவுமே சொல்லலையே....
மாமா : எல்லாம் சரி தான்..... ஒவ்வொரு சமையல் குறிப்புக்கு கீழேயும் "தயிரில் தோய்த்து விழுங்கவும்" என உன் அக்காவை எழுதிக்க சொல்லு என்றார்.
மூன்றாவது கட்டம் :
என் சகோதரர் என்னுடன் தங்கி இருந்த நாட்களில், அக்கா......கிரீன் டைகர்....... என்று கூறி விட்டு பள்ளி செல்வார்..(குழம்பு பச்சை புளி வாசனை மாறாமல் இருக்கிறது நீ சாப்பிடும் முன்பு மீண்டும் கொதிக்க வைத்து எடு என்பது அதன் பொருள்) சுமாராக செய்யத் தெரிந்த புளிக் குழம்புக்கே இந்த விமர்சனம். சற்றே வயதான பிறகு, என் மகனிடம் அடேய்..... எதுவும் சொல்லாம சாப்பிட்டுடலாம்டா..... அடுத்த வேளை சாப்பாடு எப்படி இருக்குமோ? என்பார்.
நான்காவது கட்டம்:
ஒரு நாள் காலை ...கீழ் வீட்டில் குடியிருந்த மாமி , இன்னைக்கு உங்க வீட்டுல கேரட் பொரியல் தானே என்றவாறு மாடிக்கு வந்தார்.
ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க, உங்க வீட்டுல என்ன பொரியல்னு எனக்கு தினமுமே தெரியுமே..... உன் மகள் காலையில் நான் தலை வாரும் நேரம் தினமும் என் தலையில் தானே தூக்கி வீசுகிறாள் என்றார்.
மாலையில் என் மகன்: அம்மா........ (அலறல்) அக்கா இன்னைக்கு காயை சைக்கிள் ரிக்சால வரும் போது தான் சாப்பிட்டாள் (அ) தூக்கி வீசிட்டாள்
மகள் : அம்மா....... அவன் காயை தொடவே இல்லை. அப்படியே திருப்பிட்டான்.....
ஐந்தாவது கட்டம் :
நான் சாம்பார் பொடி அரைத்த விதம் சரி இல்லியோ என்று பக்கத்து வீட்டு அக்காவின் டப்பாவிலிருந்தே எடுத்து போட்டும் செய்து பார்த்தேன்.
(எப்படிம்மா வருஷம் முழுவதும் ஹோட்டல் போல ஒரே மணம் குணமா சமைக்கறே - என் தகப்பனார்)
ஆறாவது கட்டம் :
(1)ஒரு நாள் அலுவலகம் முடிந்து இரவு திரும்பும் நேரம் மகனுடன் பேசினேன்.
மகன் : அம்மா டின்னர் தயாரா இருக்கு
நான் : (மகிழ்ச்சியுடன்) காலேஜ்லேர்ந்து வந்து சமைச்சியா?
மகன்: காலைல நீ செய்தது தான்.
நான்: (வருத்தத்துடன்)குண்டான் குண்டானா சமைச்சு வெச்சிட்டு போறேன் நீ இப்படி பண்றியே கண்ணா.....
மகன்: அளவு முக்கியம் இல்லை..... அது சாப்பிடற மாதிரியும் இருக்கணும்மா........
(2) என் மகன் : அம்மா.நீ அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த இரண்டு காயையும் சேர்த்து சமைக்க மாட்டேன்னு வாக்குறுதி கொடு
ஏழாவது கட்டம் :
(1).அமெரிக்காவில் 3 வாரங்கள் கால் உடைந்ததில் என்னால் மகளுக்கு பத்தியம் செய்து போட முடியாததை ஈடுகட்ட அடுத்த 3 மாதங்கள் பத்திய சமையல் தான் (வள்ளுவர் இதைத் தான் கொல்லாமை வேண்டும்னு சொல்லியிருப்பாரோ)
(2).சில நாட்கள் என் மருமகன் நான் தட்டில் சாப்பாடு போடும் போது கண் கலங்குவதை கண்டிருக்கிறேன். (மாப்ஸ் ....... நீங்க கண் கலங்கினது இந்த அம்மா சாப்பாட்டை நினைத்தா புஷ்பா அம்மா சாப்பாட்டை நினைத்தா? Please clarify
(3).என் மகளின் தோழி தொலைபேசியில் ஒரு நாள், அம்மா பீர்க்கங்காய் தோலை எப்படி துவையல் செய்வது என்று கேட்டார். எனக்கு தெரிந்த பக்குவத்தை சொன்னேன்.(இன்றளவும் அது எப்படி இருந்தது என்று கேட்கவில்லை...) நமக்கு பீர்க்கங்காய் உள்ளே இருப்பதையே எப்படி சமைப்பது எப்படி என்பது தெரியாது என்ற தகவல் அவருக்கு எப்படி தெரியும்?
(4).என் மகள் தொலைபேசியில் என்னிடம் சொன்னது : அம்மா...... நீ கிளம்பிய பிறகு உன் மருமகன் இனிமேல் புதினாவே வாங்காதே என்று சொல்லி விட்டார்
சமீப காலங்களில் :
(அ)என் மகன் : அம்மா இன்னைக்குக் காலையில் என்ன சாப்பாடு?
இதை மூன்று விதமாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.
1.பல் கூட விளக்காமல் அதிகாலையில் Facebookல என்ன வேலை?
2. பசி வந்திருக்கும்
3.நிஜமாவே அம்மா சாப்பாட்டை மிஸ் பண்ணி இருக்கலாம், அமெரிக்கா போய் ஏழு மாதங்கள் ஆகி விட்டன ...(இது என்னுடைய அல்ப ஆசை)
(ஆ) என் மகள்: அம்மா பச்சை மிளகாய் ஊறுகாய் எப்படி போடறதுன்னு பெரியம்மாவை கேட்டு சொல்லு...(ரொம்பத்தான் தெளிவா இருக்காய்ங்கப்பா...)
(இ)என் மாமியார் எனக்கு பசிக்கவே இல்லைன்னு சொல்லி விடுகிறார் அனேக நாட்கள்
முக நூலில் விதம் விதமாக சமைத்து படம் பிடித்து போடுவதை பார்க்கும் போது எனக்கும் அப்படி எல்லாம் செய்து பார்க்க ஆசை 1/100 வினாடிகள் வருவதென்னவோ உண்மைதான்.......
பிரபல நிறுவனம் நடத்திய மகளிர் தினத்தை ஒட்டிய ஆன்லைன்
போட்டிக்கு ஒரு ஸ்லோகன் எழுதி அனுப்பி இருக்கோம்ல?
I love cooking because................
(சமைக்க சொன்னாத்தான் பிரச்சினை ... எழுத இல்லையே.....)
பின் குறிப்பு : எங்கள் சித்தி எப்போதும் சொல்வது: நன்றாக சமைத்துப் போட்டால் தான் நம் கணவருக்கு நம் மேல் "பியார்"(Affection, Love) வரும்.
வரூ(ம்) ஆனா வராது.......
நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க என்பது இந்த மாதிரியான சமையல் புலி(ளி)களுக்குத்தான் தானோ!
ReplyDelete