Tuesday, 16 September 2014

ஆலிவுட்டு போனே(ன்) ஆர்னால்ட் வூடு பாத்தே(ன்)......


என் முதல் அமெரிக்கப் பயணத்தின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 3 நாள் பயணமாக காரில் சென்றோம். 

மூன்றாவது நாள் அந்த நகரின் முக்கியப் பகுதியான ஹாலிவுட் புலவா(ர்)ட் என்னும் இடத்திற்கு சென்றோம். (இந்த புலவா(ர்)ட் என்பது நம்ம ஊர் பாக்கம், பட்டி, பாளையம் போல அங்கங்கே சேர்க்கப்பட்டிருக்கும்)

ஹாலிவுட் புலவா(ர்)ட் (Hollywood Boulevard) பகுதியில் ,காரை நிறுத்திய இடத்தில் என்னைக் கவர்ந்தவைகள் ....  மல்டி லெவல் பார்க்கிங், தெருவோரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லிமசின்( limousine) கார்கள். (வாடகைக்கு விடுவாங்களோ?)

ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் (Hollywood Walk of Fame ) எனப்படும் ஹாலிவுட் புலவா(ர்)ட் பகுதியில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சைனீஸ் திரையரங்கத்தின் அருகில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதிகளான சன் செட் புலவா(ர்)ட் (Sunset Boulevard), பெவர்லி ஹில்ஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா வண்டிகளில் ஏற வேண்டும். 

அந்தத் தெருவின்(Hollywood Walk of Fame )இரு பக்க நடைபாதைகளிலும் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி என புகழ் பெற்றவர்களின் பெயர்களும் அவர்களது துறைகளும் குறிக்கப் பட்ட நட்சத்திரங்கள் நெடுகிலும் புதைக்கப் பட்டிருக்கிறது..... 

சுற்றுலா வண்டிக்காக சைனீஸ் தியேட்டர் வாசலில் காத்திருந்த சமயம் அங்கே கண்ட காட்சிகளில் மனதைக் கவர்ந்தவை...



தரையில் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் கை விரல்கள் பாதங்கள் சிமெண்ட் தரையில் பதியப் பெற்றிருந்தது,

ஸ்கூட்டரில்  சக உல்லாசப் பயணியாக ஒரு காலில் மாவுக் கட்டுடன் வந்த தனியாக வந்த பெண்மணி...(ஒரு சின்ன மயிரிழை அளவு எலும்பு உடைந்து சேர்ந்ததுக்கே கடந்த ஒன்றே கால் வருடங்களாக அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கியே மஞ்சுளா!!)

காதில் ஹெட் ஃபோன் மாட்டி கிளம்பினோம். உடனடியாக வர்ணனை காதில் கேட்கத் தொடங்கியது. நம்முடைய ஊர்தி சிறிய வேன் போலத் தான்.... மேலே மூடி இல்லை.... வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். (சரியா சொல்லணும்னா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தாப்ல)

ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்றார்கள். ஹாலிவுட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் மலை(அதோ பாருங்க எல்லாரும்) மற்றும் அந்த ஊரின் சாலைகளயும் கண்டோம்.

அடுத்து நேராக . சன்செட் புலவா(ர்)ட், பெவெர்லி ஹில்ஸ் பகுதி..... ஹாலிவுட் நட்சத்திரங்களின் குடியிருப்புப் பகுதி.....மலைப்பாங்கான இடம்.... சுற்றிலும் மரங்கள்.. இங்கே ஒவ்வொரு வீடும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை...

இதோ .........இது தான் ஆர்னால்ட் வீடு...

(ஒரு சின்ன பையன் தன் தந்தையிடம் :இன்றைய தேர்வில் உனக்கு பிடித்த ஹீரோ(வீரன்) யார் என்று கேட்டார்கள், நான் உங்கள் பெயரை எழுதினேன்.... 

தந்தை :(மகிழ்ந்து போய் )நான் தான் உன் ஹீரோவா இது வரை சொல்லவே இல்லையே... 

மகன் : எனக்கு ஆர்னால்ட் ஸ்வாஸ்னெக்கருக்கு ஸ்பெல்லிங் தெரியாது உங்க பெயருக்குத் தான் தெரியும்) 

இது தான் மைக்கேல் ஜாக்சன் வீடு, இது தான் ....... 

(டாடீ எனக்கு ஒரு டவுட்டு...... வர்ணனை நம்ம காதுல கேட்டுதே அது நேரடி வர்ணனையா இல்லை முன்னாலயே பதிவு செய்ததா? எது யார் வீடுன்னு நமக்கு என்ன தெரியும்?எப்படி சரி பார்க்கறது?)

திரும்பும் வழியில் ரோடியோ டிரைவ்....(Rodeo drive) (பெவர்லி ஹில்ஸின் ஒரு பகுதி)
2 மைல் நீளமுள்ள தெரு...... புத்தக கடைகள், அழகுப் பொருட்கள், துணிமணிகள், நகைகள் என அனைத்தும் விற்கப்படும் இடம்.இந்தத் தெருவின் சிறப்பம்சம் அங்குள்ள மின் பிளக் உட்பட அனைத்தும் வெள்ளியின் நிறத்தில் ..... நட்சத்திரங்களை (வானம் & சினிமா) குறிப்பிடும் வகையில் (உங்க கையில் பையில் சில லட்சங்களாவது இருக்கா..... குறைந்த பட்சம் நிறைய பணம் உள்ள வங்கிக் கணக்குக்கான  செக் புத்தகம், அப்படீன்னா வாங்க கடைக்குள்ள போகலாம்)

மீண்டும் சைனீஸ் தியேட்டர் வாசல். 

அதன் வலப்பக்கத்தில் மேடம் டுசா மெழுகு அருங்காட்சியகம்.
பாடகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள்,கதா பாத்திரங்கள்,சின்னத் திரை , பெரிய திரைகளில் புகழ் பெற்றவர்கள் எனப் பல பிரிவினருக்கும் மெழுகினால் ஆன சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு சிலையும் தத்ரூபமாக இருந்தது. (ஒரே பிரச்சினை அதில் பெரும்பாலானோர் யார் என்றே தெரியவில்லை...... இப்ப தெரியுமே...கூடுதல் கட்டணம் கட்டி ஹாலிவுட் படங்களை விடாம பாக்கறம்ல?)
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். யார் என்றே தெரியாத சிலைகளுடன் புகைப்படம் வேண்டாம் என்று நான் மறுக்க ... என் மருமகன் நான் பிறகு 
யார்ன்னு சொல்றேன் என்று சமாதானம் செய்து படம் பிடித்தார் (தேங்க்ஸ் மாப்ளே....)

இந்த அருங்காட்சியகத்தின் சமீபத்திய சேர்க்கை Anne Hathaway .....(Bride Wars, Alice in Wonderland, Les miserables)

பின் குறிப்பு - 1 :ரோடியோ டிரைவ் பற்றி மேலும் புரிந்து கொள்ள "ப்ரெட்டி உமன்" திரைப்படம் பாருங்கள்.....(ஜூலியா ராபர்ட்ஸ்)

பின் குறிப்பு - 2 : Boulevard என்பது இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதை

பின் குறிப்பு - 3: எங்க கோலிவுட்டு இத வுட சூப்பரா இருக்குமுங்க......(சாலிக்கிராமம் )துரையரசன் தெருவுல விஜய் வூடு, கண்ணம்மாள் தெருவுல விஜய்காந்த் வூடு, அதுக்கு முன் தெருவுல வடிவேலு வூடு , எம் ஜி ஆர் தெருவுல ரம்பா வூடு, இந்திரா காந்தி தெருவுல பாலு மகேந்திரா வூடு, அவரூட்டுக்கு அடுத்தாப்ல நாசர் வூடு... இன்னொரு நாள் நானே உங்களை அங்கெயெல்லாம் அழைச்சிக்கிட்டு போறேன்....









No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...