Showing posts with label Tamil - Others. Show all posts
Showing posts with label Tamil - Others. Show all posts

Monday, 12 August 2024

காதலென்ன கத்திரிக்காயா?

இன்று காலை உடற்பயிற்சி சமயத்தில் ஏற்பட்ட ஏதேதோ சிந்தனைகளில் கத்திரிக்காய் பற்றிய நினைவுகளும் ஒன்று.

முதல் நினைவு சிறுவயதில் பாடிய இந்தப் பாடல் தான்: 

கத்திரிக்காய் சொத்தை கடலூரு மெத்தை

ஏண்டி சரோஜா எப்போ கல்யாணம்

நேத்து மத்தியானம் போடு மத்தா(த)ளம்

கத்தரிக்காய் எனத் தூய தமிழிலும் விக்கிபீடியாவிலும், கத்தாரிக்காய் என என் மாமியாராலும், குண்டுக் கத்தீ..ரிக்கா எனக் காதலன் கன்னத்தை விவரித்துத் திரைப்படப் பாடலிலும், கத்….ரிகா என தெருவில் கூவி விற்கும் வியாபாரிகளாலும், Eggplant, Aubergine மற்றும் Brinjal என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இந்தக் கத்திரிக்காயின் பிறப்பிடம் தென்னிந்தியாவும் இலங்கையுமே என்பது குறிப்பிடத்தக்கது. பூத்துக் காய்க்கும் செடிகொடியினம் என்னும் வகையிலான “solanaceae” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் உயிரியல் பெயர் “solanum melongena” (சொலானம் மெலோஞ்சினா) தக்காளி, உருளை, வெள்ளரி ஆகியவையும் கத்திரிக்காயின் சகோதர சகோதரிகள்தான். (solanaceae family)     

இந்தக் காயில் கார்போஹைடிரேட், புரதச் சத்துக்கள், தாதுக்கள் உள்ளன என்பதால் உலகளவில் உணவுத் தயாரிப்பில் இதற்குச் சிறப்பான இடம் உண்டு. இரும்புச் சத்து நிறைய உள்ள காய் எனக் கூறக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் விக்கிமாமா இரும்புச் சத்து 1% எனக் கூறுகிறார்.

கத்திரிக்காய் பொதுவாக ஊதா, இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது. குண்டுக் கத்திரி, ஒல்லிக் கத்திரி,வேலூர் முள்ளுக் கத்திரி, நீளக் கத்திரி, வரிக் கத்திரி எனப் பல வகைகள் உள்ளன என்பதை நாம் நன்றாகவே அறிவோம். தமிழகத்தில் ஒன்பது வகையான கத்திரிக்காய் வகைகள் பயிரிடப் படுகின்றன. இதில் தேனி சின்னமனூர் “சிம்ரன்” கத்திரிக்காயும் உண்டு.

இப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் குண்டான இரண்டைத் தேர்ந்தெடுத்து என் கணவர். 2014 வருடத்தில் ஒரு நாள் காலையில் வாங்கி வந்தார் சமையற்கலைக்கும் எனக்கும் இடைவெளி அதிகம் “அன்றும் இன்றும் என்றும்”.

பச்சடியா துவையலா என மிகவும் யோசித்து (எப்படியும் இரண்டுமே செய்யத் தெரியாது) என என் தாயாரின் செய்முறைப் பக்குவத்தில் இவற்றைத் துவையலாக மாற்றுவது என முடிவு செய்தேன். கண்ணால் கண்டது தான். வேறெந்த விதமான குறிப்பும் கையில் இல்லை.

நான் ஆர்வத்துடன் கத்திரிக்காய்களைக் கழுவித் துடைத்து மேலே எண்ணை தடவி கத்தியால் சிறு சிறு ஓட்டைகளைப் போட்டு அடுப்பில் வைத்துச் சுட்டு எடுத்தேன். கேஸ் அடுப்பின் மேல் வைத்து அப்பளம், சப்பாத்தி போன்றவற்றைச் வாட்டி எடுக்கும் தகடு என்னிடம் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு நெருப்பில் கைபடாமல்  சுட்டெடுத்தேன். (அதையும் மீறிக் கையில் சூடு பட்டது தனிக் கதை)

அடுத்ததாக கத்திரிக்காயின் மேலுள்ள தோலை நீக்கும் படலம் ஆரம்பம். தோல் பிய்ந்து வருவேனா என அடம் பிடிக்க, நான் விடுவேனா என இழுத்துப் பிடித்துத் தோலை முதலில் கையால் பிய்த்தெடுக்க முயற்சித்தேன்.  அடுத்து கத்தியை வைத்து தோலைப் பிரிக்க முயற்சித்தேன். சதைப் பகுதியுடன் சேர்ந்து வந்தது. தொடர்ந்து ஸ்பூன் வைத்துப் பிரிக்க முயற்சித்துக் கடைசியில் கருகியும் கருகாமலும் இருந்த தோலை எடுத்து உள்ளிருந்த சதைப் பகுதியை விதைகளில்லாமல் பிரித்து வைத்தேன். ஸ்ஸப்ப்ப்ப்ப்பா…

அடுத்த கட்டமாக துவையலுக்குத் தேவையான பருப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றை வறுத்தெடுத்து கொண்டு மிக்ஸியில் அரைக்க ஆரம்பித்தேன். பருப்பு வகைகள் “அறைஞ்சுடுச்சா” எனப் பார்த்து விட்டு கடைசியாகக் கத்திரிக்காயையும் சேர்த்து அரைத்தேன். சுவையான சூடான( அவ்வைப் பாட்டியாரின் சுட்டபழம் போல இது சுட்ட காய் இல்லையா?) கத்திரிக்காய் துவையல் தயார்.

நிற்க.

YouTube போன்ற சமூக வலைத் தளங்களில் காட்டப்படும் சமையல் செய்முறை நேரங்களில் மிக்சியில் நன்றாக “அறைஞ்சுடுச்சா” எனப் பாருங்கள் எனக் கூறுகிறார்கள். அறைஞ்சுடுச்சா என்றால் மிளகாயா, பருப்பா உப்பா எது யாரை அறைந்தது யார் கன்னம் பழுத்தது எனக் கேட்கத் தோன்றவில்லை? நன்றாக அரைபட்டு விட்டதா, அரைக்கப்பட்டு விட்டதா போன்ற பதங்களை உபயோகிப்பதே சரி என ஒரு தமிழறிஞர் கூறியதாக என் தோழி சமீபத்தில் கூறினார்.

மேலே செல்வோமா? ரை..ரை…

சாப்பாட்டு மேசையில் என் கணவருக்குத் துவையலை ஆசையாகப் பரிமாற யத்தனித்த சமயத்தில் இது என்ன எனக் கேட்டார். நான் என்னவெனக் கூறவும் “உனக்கே உனக்காக”த் தான் கத்திரிக்காய் வாங்கி வந்தேன் எனக்கு வேண்டாம் என மறுத்தார். சிறிதளவு நான் உண்ட பிறகு மீதியை என் மாமியாரின் துணிகளுக்கு சோப்பு போட்டு ஊற வைத்து, நல்லா பிரஸ்(brush) போட்டு, கசக்கி, குமுக்கி, ரெண்டு பக்கெட் தண்ணீரில் நன்றாக அலசி ஒட்டப் பிழிந்து (அவரது வார்த்தைகள் 😊) பால்கனியில் (தண்ணீர் சொட்டச் சொட்ட) காய வைத்து விட்டு உள்ளே வந்த என் வீட்டு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினேன்.

அறைந்து விட்டதா?

. 

 

 

 

 

Thursday, 3 June 2021

ஆராரோ ஆரிராரோ.......


விழி ஆடி அறுவை சிகிச்சை , புரியும் தமிழில் சொன்னால் கேடராக்ட் ஆபரேஷன் 🙂 முடிந்து , ஓய்வில் இருக்கும் என் தாயாருக்கு எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் எழுதிய “ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்” என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆழ்வாருக்கும் [ஆழ்வார்: எதிலும் தீவிரமாக ஆழ்பவர்கள் , ஈடுபடுபவர்கள்] ஒரு அத்தியாயம் என 12 ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சொல் பொருள் யாப்பு என ஆராய்ந்து, மதம் சாராமல் எழுதி உள்ளார்.
அருமையான
விளக்கங்கள். பாமரருக்கும் புரியும் வகையில். (இப்ப தான் ஏதோ கொஞ்சம் புரியற மா...........திரி தோணுது)
பெரியாழ்வார் தம்மை யசோதையாகப் பாவித்துக் கண்ணனைத் தன் குழந்தையாக்கிப் பாடிய "பிள்ளைத் தமிழ்" பாடல்கள் மிகுந்த அன்பும் வாத்சல்யமும் கொண்டவை.
ஒரு குழந்தையின் பிறப்பு ,
தாலாட்டு (மாணிக்கங்கட்டி வைரமிடை கட்டி....),
அம்புலி (நிலா நிலா ஓடி வா...),
செங்கீரை(குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் தலையை அங்கும் இங்குமாய் அசைத்துப் பார்க்குமே...),
சப்பாணி (இரு கைகளையும் தட்டுமே...சப்பாணி சப்பாணி கொட்டுமாம் அப்புச்சி குடுத்தா தின்னுமாம்..),
தளர் நடை,
கிட்டே வருதல்,
புறம் புல்கல் (குழந்தை பின்புறமிருந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளுமே..),
அம்மம் (தற்காலத்தின் மம்மு, மம்மம் சாப்பிடு என் செல்லம்....),
உண்ணல், காது குத்தல், நீராட்டல், தலை வாரல், பூச்சூடல், காப்பிடல் என பல்வேறு நிலைகளுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.

கண்ணனைக் குட்டன் என அன்போடு அழைக்கிறார். தற்காலத்தில் மலையாளக் கரையோரம் சென்று விட்டது இந்த வார்த்தை. [குட்டனும் குட்டுவும் எங்கிருந்து வந்தார்கள் என்று இப்போது புரிந்தது.]

பாடல்களைப் படிக்கும் போது நாமே கண்ணனின் அன்னையான உணர்வு. பாக்களின் சொல்லும் பொருளும் யாப்பும் என்னை சிலிர்க்க வைத்தது உண்மை. ஆழ்வார்கள் சிறந்த தமிழ்ப் புலவர்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வப்போது வாய்விட்டுப் படிக்க இயலாத நெகிழ்வு. கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்....... உண்மை.

இறைவனின் பிறப்பு பற்றிய இரு பாடல்கள் உங்களுக்காக.......

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு , அக்குழந்தை இறைவனின் அம்சம் என்று உணர்ந்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடுவதாக அமைக்கப் பட்டுள்ளது இந்தப் பாடல்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி என்பதாகப் பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பைப் பற்றிய நிகழ்வினைக் கூறுகிறார்.
மேற்கண்ட பாடல் வரிகளைப் படிக்க நேர்ந்த போது ஆங்கில இலக்கியத்தில் நான் படித்த , இதனையொத்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

W. H. Auden என்பார் "Musee des Beaux Arts" (Museum of Fine Arts) என்னும் கவிதையை தாம் ஐரோப்பிய நகரமான பிரஸ்ஸல்ஸ் நகரின் அருங்காட்சியகத்தில் கண்ட ஓவியங்களின் அடிப்படையில் எழுதி உள்ளார்.
Brueghel என்பவர் வரைந்த "The Numbering of Bethlehem" (also known as The census at Bethlehem) என்னும் ஓவியத்தில் (The Royal Museum of Fine arts of Belgium, Brussels) ஏசுபிரானின் பிறப்பு மற்றும் அது குறித்த மக்களின் மனநிலை பற்றியும் நுணுக்கமாக வரையப் பட்டுள்ளது. அதன் பாதிப்பில் எழுதப் பட்ட கவிதை இது. இந்த கவிதை Ekphrasis என்னும் அமைப்பில் உள்ளது. ஒரு பொருளை அப்படியே வார்த்தைகளால் வர்ணிப்பது. (visual representation of a person, place or thing)

About suffering they were never wrong,
The old Masters: how well they understood
Its human position: how it takes place
While someone else is eating or opening a window or just walking dully along;
How, when the aged are reverently, passionately waiting
For the miraculous birth, there always must be
Children who did not specially want it to happen, skating
On a pond at the edge of the wood:

ஏசுபிரானின் பிறப்பிற்கான நேரம். அவரது தாயார் மிகுந்த வேதனையில் இருந்த சமயம் , மக்கள் சிலர் எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்து செல்கின்றனர். வயதில் மூத்த பெரியோர் மிகுந்த ஆர்வமுடன் அபூர்வமான நிகழ்வான இறைவனின் பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறுவர்கள் எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். யார் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மன நிலையில் பலரும் இருப்பார்கள் என நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

[The old Masters (நம் முன்னோர்கள் என்பதாகக் கொள்ளலாம்) were never wrong about human suffering and its position in context with the rest of human society. While someone is suffering, others are going about their regular business. The elderly live in desperate hope for a miracle, but children are not particularly concerned. Even a martyr dies on the margins of society.]
இறைவனின் பிறப்பை ஏற்கனவே மக்கள் அறிந்திருந்தார்கள் என்பது போல இரு பாடல்களும் உள்ளன.
கண்ணே என் கண்மணியே....இன்னும் உறங்கலியோ........
ஆராரோ ஆரிரரோ.......
பின் குறிப்பு :
எனக்குப் புரிந்த வகையில் தெரிந்த வகையில் விளக்கியுள்ளேன்.
Courtesy : http://koodal1.blogspot.in/2008/05/11.html (4000 கற்போம்)
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்(திரு. சுஜாதா)

Thursday, 27 May 2021

பறவைப் பார்வையில் ஒரு பாடம்

பல மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் அமெரிக்க

ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். என்னவாக இருக்கும் என்று ஒரு குட்டி ஆராய்ச்சியில் இறங்கிய சமயம் , அது பற்றிய தகவல்கள் சில.
(தவறுகள் இருப்பின் மன்னித்து சுட்டிக் காட்டவும். நன்றி)
Here we go!
முதலில், மொழி (language) என்பது என்ன? வட்டார வழக்குகள்(Dialects) என்பது என்ன?
இன்னா நைனா ஊட்டாண்ட சொல்லிகினு வண்ட்டியா? நடூ ரோட்ல போய்கினேகீறே அகராதி புடிச்சவனே _ இது சென்னை செந்தமிழ் (Dialect)
உங்கூட்ல சொல்லிப்போட்டு வந்துட்டீங்ளாண்ணா? ரோட்டுக்கு குறுக்கால போறீங்கோ..அக்குரும்பா இருக்குதுங்ணா _ இது கொங்கு தமிழ்(Dialect)
Dialect is a particular form of a language which is peculiar to a specific region or social group.
மேற்கண்ட வார்த்தை அமைப்புகள் சிலருக்குப் புரியும் சிலருக்குப் புரியாது. அனைவருக்கும் புரிவது போல் , ஒரு மொழியின் பல வட்டார வழக்குகளையும் சேர்த்தமைத்து, பொதுவான நடையில் , இலக்கணத்துடன் பேச, எழுத வசதியாக அமையப் பெறுவதே மொழி. (A language is the method of human communication, either spoken or written, consisting of the use of words in a structured and conventional way.)
சகோதரா, இப்படி நடுவீதியில் நடந்து போவது ஆபத்தானது. சாலையின் ஓரமாக நடந்து செல்லுங்கள்(Language)
ஆங்கிலம் இன்று உலகளாவிய அளவில் பேசப்படும் மொழியாக உள்ளது. Indo - Germanic மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. Anglo-saxon என்பது ஆங்கில மொழியின் ஆதிகாலப் பெயர். (Angles ->Ingles ->English)
You will be surprised to know that the dialect spoken by some people in all parts of England, Wales, Scotland and Ireland is the English language, the world uses now. (Especially, the dialect used in the courts, educational institutions and by the upper class people of London)
அமெரிக்க ஆங்கிலம் Vs பிரிட்டிஷ் ஆங்கிலம்
பேச்சு வழக்குகள் தான் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் இருகரையிலும் வேறுபடுகிறது. எழுத்து மொழி(இலக்கிய மொழி) ஒன்றே.
17 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு குடியேறிய ஐரோப்பியர்கள் பயன்படுத்திய வார்த்தைகளும் அவற்றின் பயன்பாடுகளும் ஐரோப்பாவில் இன்று மறைந்து விட்டாலும், அமெரிக்காவில் வசிக்கும் சில பகுதியினரால் இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது. (ஐரோப்பியர்கள் இதைப் புரிந்து கொண்டதால், அமெரிக்க ஆங்கிலத்தை ஏற்க ஆரம்பித்தார்கள்)
பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்குமான வித்தியாசம் ஓசையும் உச்சரிப்பும் தான். (Rhythm and intonation).
அமெரிக்க ஆங்கிலத்தின் சிறப்பியல்பு (1)வார்த்தைகளின் தெளிவு, உருவகங்களைப் பயன்படுத்தி விளக்கும் விதம் (vividness and terseness in metaphorical expression) (2)இழுத்து நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை உச்சரித்தல் மற்றும் தமிழில் மெல்லின எழுத்துக்களை உச்சரிப்பது (ங,ஞ, ண, ந, ம, ன) போல உச்சரிப்பது ஆகியவை ((Drawl and nasal tone)
அமெரிக்கா பல்வேறு துறைகளிலும் ஆளுமையுடன் இருப்பதால் , அங்கே பேசப்படும் ஆங்கிலம் அனைவராலும் கவனிக்கப்பட்டு , உச்சரிப்புகள், புதுப்புது வார்த்தைகள் கற்றுக் கொள்ளப் படுகிறது. குறிப்பாக திரைப்படங்கள், இண்டர்நெட் போன்றவைகள் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதுவார்த்தைகள் விரைவில் பரவும்.
ஆயினும், புது வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெற்றால் மட்டுமே , ஆங்கில மொழி வார்த்தையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. (ஏறக்குறைய 2,10,000 வார்த்தைகள் உள்ளன)
சில உதாரணங்களை முன் வைத்து உச்சரிப்பு மற்றும் பொருள் வேறுபாட்டை சொல்ல முயற்சிக்கிறேன்.
(1)Usage of words
அமெரிக்காவில் மின் தூக்கியில் செல்ல....Levels( first, second, third…) ஐரோப்பாவில் Floors (Ground, first, second, third…)
ஹோட்டல் அறைகளின் எங்கள் அந்தத் தளத்தின் எண்ணுடன் ஆரம்பிக்கும். 320 என்றால் மூன்றாம் தளம் 20 ஆம் எண் அறை எனக் கொள்ள வேண்டும் என்பது பொது விதி.
ஐரோப்பா: மின் தூக்கியில் 3 ஐ அழுத்தி விட்டு அது நின்றதும் இறங்கினோம். 220. ஆம் அறை. அடக் கடவுளே ! நாம் ஐரோப்பாவில் இருக்கிறோம் , 4 ஐ அழுத்த வேண்டாமா?? நடந்தே மேலே ஏறுவோம் அல்லது மீண்டும் மின் தூக்கி.
Travel by Rail (A.E) Travel by Train(B.E)
Dude (A.E) Mate (B.E) - Friend
Garbage can (A.E) Dustbin (B.E)
I’m open, hit me! (A.E) I am ready to eat, you can give me the dish! (B.E)
Today is Thursday, I think (B.E) Today is Thursday, I guess(A.E)
Its weird that I happen to meet her – (A.E) That was odd I met her on the road.
(2)Pronunciation: (உச்சரிப்பு)
பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் “R” ஓசையில்லாமல் வரும் . அமெரிக்க ஆங்கிலத்தில் நாக்கை சுழற்றி உச்சரிப்பார்கள்.
(உ-ம்): Birthday Party , Doctor’s car
[அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணம் : இந்தியாவில் கலந்து கட்டி குழப்பமாகப் பேசுகிறோம். உச்சரிக்கிறோம். இந்த தொல்லைக்காகத் தான் ஆண்டிராய்டு பாப்கார்ன் வெர்ஷனில் இண்டியன் இங்கிலீஷ் என்ற ஒரு தனி மொழியையும் பட்டியலில் சேர்த்து விட்டார்களோ??]
அமெரிக்கா, ஐரோப்பா மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அது அவர்கள் தாய்மொழி. ஆனால் உலகளவில் எல்லாராலும் எப்படி ஒரே போலப் பேச எழுத முடிகிறது?
(1)காரணம் Received pronunciation. (The standard pronunciation is received through proper methodical teaching in schools)
(2)Print media எனப்படும் அச்சுக் கலை முக்கியக் காரணம். Spelling மற்றும் உச்சரிப்பு மொழி வல்லுநர்களால் நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது.
கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்படும் மொழியானது , உலகினர் அனைவரும் ஆங்கில மொழியை சிறப்பாகப் பயன்படுத்த உதவுகிறது.
(3)அகராதியில் Phonetics என்னும் பொது உச்சரிப்பு மொழியும் ஒவ்வொரு வார்த்தையின் அருகிலும் அச்சிடப்படுகிறது. (International Phonetic Alphabets)
(4)ஆங்கில உச்சரிப்பை முறையாக்கும் விதமாக British Broadcasting Corporation செயல்படுகிறது. (தந்தி தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி இரவு 7.30 -7.45 செய்திகளைப் பாருங்கள். தமிழ் உச்சரிப்பையும் முறைப்படுத்திப் பேசுகிறார்கள்.)
நோவா வெப்ஸ்டர்(Noah Webster) என்பவர் 1828 ல் American Dictionary of the English Language ஐ வெளியிட்டார். அப்போது அவர் பழமையான பிரிட்டிஷ் ஆங்கில வார்த்தகளுக்கான spellings ஐ மாற்றி எழுதி இருந்தார். அதற்குக் காரணங்களாக அவர் சொன்னது , Commonsense and convenience. பின்னர் உலகளாவில் தன்னுடைய அகராதி விற்பனை ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் , அந்த மாற்றம் செய்யும் வேலையைக் கைவிட்டதாகக் கூறுகிறார்கள்..(Dictionary – say like dikshanry)
செய்திகள், திரைபடங்கள் (சப்டைட்டிலை படித்துக் கொண்டே உச்சரிப்பை கற்கலாம்), யூ டியூபில் பதிவேற்றப் பட்ட மேடைப் பேச்சுக்கள், Phonetics முறைப்படி உச்சரித்துக் பழகுதல், Duolingo போன்ற Apps, mangolanguages.com என பல வழிகள். பள்ளிப் பிள்ளைகள் , IT கம்பெனி ஊழியர்கள் என யார் பேசினாலும் உச்சரிப்பைக் கவனியுங்கள்.
Language learning is sort of personal involvement and kind of thirst for learning,and my post is just a sample of what I learnt so far, I guess for sure!!
பின் குறிப்பு :
Links related to Webster and few things to be avoided by second-language English speakers
[கர்சரை(cursor) லிங்க்(link) மேலே வைத்த வண்ணம் கண்ட்ரோல் (ctrl)பட்டனை அழுத்தவும். கை உருவம் தெரியுதா? இப்போ கிளிக் பண்ணுங்க]
Yessss…….You are a genius!!

Wednesday, 6 May 2020

என்ன சத்தம் இந்த நேரம்....

பறவைகளின் இன்னிசை , எங்கோ தூரத்தில் செல்லும் ஒற்றை வாகனத்தின் ஓசை , யார் வீட்டு தொலைக்காட்சி பெட்டியிலிருந்தோ வரும் பக்தி பாடல் ஓசை , மின்விசிறியின் ஓசை இவ்வளவுதான் lockdown தினங்களின்
அதிகாலை ஓசைகள் . (பூ பூக்கும் ஓசை அதை[யும்] கேட்கத்தான் ஆசை ....)
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் "வாரம் ஒரு பாசுரம் " புத்தகத்தில் 7 ஆம் நூற்றாண்டின் சப்தங்களுடன் தற்போதைய சப்தங்களை ஒப்பிட்டு சொல்லி இருப்பது நினைவிற்கு வருகிறது .

காகங்கள், ஒற்றை குயில், தாழப் பறக்கும் விமானத்ததின் ஓசை, பக்கத்துக்கு காலனியில் காய்கறி விற்பவரின் குரல் ...என இன்றைய ஓசைகள் பற்றி சொல்லிவிட்டு அந்நாளில் கதிரவன் கிழக்கே சிகரத்தை அடைந்து விட்டான் இருள் நீங்கியது பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன ... அரங்கனே எழுந்தருள்வாய் என "கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான் " என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுக்கு விளக்கம் எழுதி விட்டு கடைசியில் இன்றைய தினங்களின் நாராசத்தில் அரங்கன் தூங்கவே மாட்டான் என்று முடித்திருக்கிறார்.(அரங்கன் தற்சமயம் 21 நாட்கள் பகலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு இரவில் நன்றாக உறங்குவார் என நம்பலாம்.)

பல வருடங்களாக மேலை நாடுகளில் நடப்பில் இருக்கும் work from home கலாச்சாரம் இங்கும் நுழைந்து விட்டது. அலுவலக வேலை தொடங்கி நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்புகள் வரை அனைவரும் zoo(m)மிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீடியோ கால் மற்றும் தொலைபேசி மூலம் உறவும் நட்பும் பலப்படுவதென்னவோ உண்மை . (ஏன்டா போன் பேசும்போது சிரிச்சாப்ல பேச கூடாதா _ தாயார் , அம்மா இது அலுவலக மீட்டிங் கால் அம்மா _மகன் )
சம்ஸ்கிருத வகுப்பு சமயத்தில் ஏன் வீட்டு பாடங்களை எழுதவில்லை சகோதரி என்று என் மாணவிகளை கேட்டால் எங்களுக்கு பிள்ளை/பேரன்களுக்கு மாலையில் என்ன நொறுக்கு தீனி செய்து தருவது என்று யோசிக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்கள். பாடத்தை நிறுத்தி விட்டு அவற்றிற்கான குறிப்புகளைக் கொடுத்தேன் . (வாழ்க்கைக் கல்வி?!)
என்றோ எகனாமிக்ஸ் வகுப்பில் படித்த scarce means, more demand to be managed with limited resources என்பதை பயன்படுத்தி கைவசம் இருக்கும் மளிகை காய்கறிகளை வைத்து சுவையாகவும்(?!) சத்தாகவும் சமைப்பது சவாலாக உள்ளது.

இந்த lockdown மக்களை முழுநேர creators ஆக்கி விட்டதென்னவோ உண்மை . விதம் விதமான மீம்ஸ்கள் (மீமீஸ் என்று சொல்லு பாட்டி _என் குட்டி பேரன்), கட்டுரைகள் , பக்தி செய்திகள் , சமையல் குறிப்புகள் தனிமையான இந்த நாட்களின் வெறுமையை அருமையாக விரட்டுகின்றன.

மனதில் பதிந்த சில பதிவுகள்.
மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பாராட்டுக் கைதட்டலில் எதற்காக வீட்டிற்குள் நாள் முழுவதும் அடைந்து இருந்தோம் என்பதையே மறந்து மக்கள் கூட்டமாய் கூடி கைதட்டியது கண்டு பொருமி ஒரு இளைஞர் f ... வார்த்தையை விதம் விதமாக உபயோகித்து தன்னுடைய ஆற்றாமையை கூறி இருந்தார் .

130 கோடி மக்களும் ஒரே 'C' வார்த்தையை நினைத்துக் கொண்டே, சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதனால் negative vibration ஏற்படுகிறது. 'C' வார்த்தையை நினைப்பதை சொல்வதை தவிர்ப்போம் என்கிறார் ஒரு பதிவின் ஆசிரியர்.

Zoom மற்ற video apps ஐ விட எப்படி சிறப்பாக செயல்படுகிறது, வீட்டையே ஒரு பிகினிக் தலமாக எப்படி மாற்றுவது, பிள்ளைகளுடன் பொழுதை பயனுள்ளதாக கழிப்பது எப்படி (3D animal videoவும் இதில் உண்டு), புத்தகப் பிரியர்களுக்கான பல்வேறு links எனப் பல பதிவுகள்.
சம்ஸ்க்ருத பாரதியில் மிக அருமையான பயனுள்ள Blogspot மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். (அம்மா நாங்கள் இங்கே அமெரிக்காவில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உன் ஆசிரியரை கேட்டு சொல் _மகள்)

emoji களின் உதவியுடன் ஊர்களின் பெயரை கண்டுபிடியுங்கள், கிரிக்கெட் வீரர்களின் பெயரை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற quizகள் . (எங்கள் தாயார் எந்த துறை பற்றிய quizஆக இருந்தாலும் கண்டு பிடிக்கிறார்.)
உறவு நட்புக்களை காண சென்று திரும்பி வீடு செல்ல/வர முடியாதவர்களே! பிள்ளைகள் உறவினர்கள் என மொத்தமாக வீட்டிற்குள் (சிக்கி கொண்டு ?!) இருப்பவர்களே! மறந்தே போன scrabble , monopoly , பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை முயற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு கதைகள் சொல்லலாம் . DD தொலைக்காட்சியில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் ஆகிய தொடர்கள் காண்பிக்கிறார்கள். எளிய உடல் பயிற்சிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் பயனுள்ள வகையில் பொழுதை செலவிடுங்கள். இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது.

எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என்ற புலம்பல் அதிகமாக கேட்கிறது . பிள்ளைகளை சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள் தாய்மார்களே . அவர்கள் உங்கள் பிள்ளைகள் தானே ? பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல் , சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் என ஆரம்பித்தது வயதிற்கேற்ற வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள் .
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்று சொல்லி இருக்கிறார் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை. வீட்டு வேலைகளும் கைத்தொழில்தான் . எப்போதும் என் நினைவுக்கு வரும் ஒரு திரைப்பட பாடல் "எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடணும் அது எப்போதும் தப்பில்லே ஒத்துக்கிடணும் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா இல்லாத நேரத்தில் கைகொடுக்கும்" (புதுப்புது அர்த்தங்கள்) .

சிங்கார சென்னையில் பலவருடங்களுக்கு முன் அனுபவித்த கடற்காற்று , ஒற்றை பறவை பறக்கும் ஓசை , எங்கோ ஒலிக்கும் தொலைபேசியின் அழைப்பு , நடுநிசியானாலும் தூங்காமல் லூட்டி அடிக்கும் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் என பலவற்றையும் மீண்டும் வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க இது ஒரு சந்தர்ப்பம் .

"சத்தம் இல்லாத தனிமை வேண்டும்" என்று கவிஞர் வைரமுத்து எழுதினர். தற்சமயம் அவரது ஆசை நிறைவேறி விட்டது, காரணம் எதுவாக இருப்பினும்.

கடைசியாக இன்று காலை படித்த ஒரு பதிவினை பகிர விரும்புகிறேன் . இத்தாலியில் 95 வயதான பெரியவர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து நோய் சரியாகி வீடு செல்லும் முன் உங்களுக்கு ஒரு நாள் செயற்கையாக சுவாசம் (ventilator) கொடுத்தோம். நீங்கள் அதற்கு $5000 பணம் கட்ட வேண்டும் என்று கூறினார்களாம். அந்தப் பெரியவர் அழுதாராம் . பணம் இல்லை போலும் என்று மற்றவர்கள் நினைக்க அவர் கூறியது இது தான் " நான் 95 வயது முடிய இந்த பூமியின் காற்றை எந்த கட்டணமும் இல்லாமல் சுவாசித்தேன் ஆனால் ஒரு நாள் செயற்கை சுவாசம் பெற்றதற்கு பணம் தர வேண்டி உள்ளது. இயற்கைக்கு நான் இது நாள் வரை நன்றி செலுத்தவில்லையே என்று அழுதேன்"

சுலபமாக பெரும் பொருட்களை நாம் மதிப்பதில்லை, இனியேனும் இயற்கையை மதிப்போம் . நலம் பெறுவோம்.

வாழ்க்கை வளமுடன் வாழ்வதற்கே. கவலை வேண்டாம் .

கூடிய விரைவில் நாமும் செல்லலாம் போத்தீஸ், Forum, Phoenix மால்களுக்கு ...
Courtesy : தொண்டரடிப்பொடி ஆழ்வார் , எழுத்தாளர் சுஜாதா , கவிஞர் வைரமுத்து , நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை மற்றும் Social Bloggers

பூங்(கா)கவனம்

பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டே நம்மை சுற்றி நடப்பவைகளை காண்பது ஒரு விதம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோ வீட்டில் இருந்தபடியே அருகில் அமைந்துள்ள பூங்காவை கவனிப்பது மற்றொரு விதம்.
இரண்டுமே சுவாரஸ்யமானவைகளே என் வரையில்.
வேகநடை, மிதவேக நடை,அன்னப்பட்சி நடை ,ஓட்ட நடை,உடற்பயிற்சி நடை,கைபேசியபடி நடை, அரட்டை நடை,காதலர்கள் நடை,பள்ளிப்பிள்ளைகளின் குதிநடை,குதிகால் நடை , செருப்பு , ஷூக்கள், காலணிகளே அணியாமல் நடை, பந்தயம் நடந்து கொண்டிருப்பது போன்ற நடை, இரவு உடையின் மேல் ஒரு துண்டு அணிந்து நடை என மக்கள் நடையாய் நடப்பதை சொல்லவா?

நடிகநடிகைகள், நடிகராக விரும்புபவர்கள் என பலரும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சி சண்டை பயிற்சியை பற்றி சொல்லவா ?
தினமும் மாலை 4 மணிக்கு தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் ஒல்லி பெண் 6 மாதங்கள் நான் அமெரிக்க சென்று திரும்பிய பிறகு 10 கிலோ எடை கூடித் தெரிந்த அவரது எடைக்கு இன்றளவும் ஏறுமுகம் தான் என்பதை சொல்லவா?
தினமும் மாலையில் மல்லிகை பூ சூடி அன்னம் போலே நடந்து சென்றே சற்றே இளைத்து காணப்படுகிறாரே அவரைப் பற்றி சொல்லவா?
வெள்ளை T - shirt வெள்ளை அரைக்கால் சராய் வெள்ளை ஷூக்கள் அணிந்து ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயிற்சி செய்த , இன்றளவும் காணகிடைக்காத நண்பரைப் பற்றி சொல்லவா?

காலை 9 மணியளவில் கைபேசியில் பேசியபடி நடைப்பயிற்சி செய்து கொண்டே, அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகளை பார்த்து , பாப்பா நீ சினிமாவில் நடிக்கிறாயா மாமி உங்களுக்கு மடிசார் நன்றாக இருக்கிறது என விமர்சித்து செல்வாரே பிரபல திரைப்பட இயக்குனர் , அவரை தற்சமயம் ஏன் காணக் கிடைப்பதில்லை?

எங்கிருந்தோ நடந்தே வந்து இந்த பூங்காவில் அமர்ந்து கதை பேசும் வயதில் மூத்த பெண்டிர் பலரும் என் நட்புக்களே என்பதை சொல்லவா வேண்டும்?
மேடம் உங்களை எங்கேயோ பார்த்த நினைவு , வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டீர்களா? என் orchestra வில் பாடுகிறீர்களா எனக் கேட்டு விசிட்டிங் கார்டு தந்த அன்பரைப் பற்றி சொல்லவா? (பல வருடங்களுக்கு முன்பு நான் வயலின் கற்றுக் கொண்டிருந்தபோது பார்த்த நினைவு போல )
மற்றொரு முறை நான் படித்த கம்பியூட்டர் சென்டரின் மேலாளர் பூங்காவில் நண்பர்களுக்கு கைரேகை ஜோசியம் பார்த்துக் கொண்டே , மேடம் நல்லா இருக்கீங்களா என குசலம் விசாரித்ததை சொல்லவா?

25 வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்த தோழியின் தாய் உன்னுடன் சில நிமிடங்கள் பேசி செல்வது மனதுக்கு இதமாக இருக்கிறது என்றதை சொல்லவா?
தோழியுடன் இன்று எந்த பூங்காவில் நடைபயிற்சி செய்யலாம் என்று யோசித்து , வாட்ஸ்ஆப்பில் முடிவு செய்து , நடை பயின்றதை சொல்லவா?
தினம் ஒரு நிகழ்வு தினமொரு சந்திப்பு ...
இங்கே இப்படியென்றால் அமெரிக்காவில் மற்றொரு விதம். பரப்பளவு அதிகம் உள்ள பூங்காக்கள்.
காலை 6 -8 நாய்களுடன் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் , நாய் மலம் கழித்துவிட்டால் அதை அவர்களே சுத்தம் செய்து குப்பை தொட்டியில் போட்டு செல்வதை காண நேர்ந்ததை சொல்லவா?( அதற்கென ஒரு டப்பாவில் பிளாஸ்டிக் பைகள் இருக்கும். )
ஒரு சுற்று நடந்து முடிக்க 15 நிமிடங்கள் ஆகும் பூங்காவில் 3,4 பேர்களே நடந்து கொண்டோ ஓடிக்கொண்டோ இருப்பார்களே அதை சொல்லவா? இவர்கள் கையில் , தோள்பட்டையில் Fitbit , கைபேசி app என எதையாவது அணிந்தே செல்வதை சொல்லவா ?
பூங்காவின் உள்ளேயே சைக்கிள் ஓட்டி செல்வதை சொல்லவா?
வெயிற்காலத்தில் 12 மணி வெய்யிலில் sunny day என மிக்க மகிழ்ச்சியுடன் கால் பந்து விளையாட்டை கூட்டம் கூட்டமாக எல்லா வயதினரும் விளையாடி நம்மை ஆயாசப்படுத்துவார்களே அதை சொல்லவா?

கிழக்காசிய மக்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் காலை 10 மணியளவில் வயதானவர்களின் மிக மெதுவான நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி , தம்மை தாமே குறிப்பிட்ட இடங்களில் அடித்துக் கொள்ளும் பயிற்சி ,(குறிப்பிட்ட இடத்தில் அடித்துக் கொண்டால் குறிப்பிட்ட வியாதி போகும் என்பது ஒரு வித வைத்திய முறை), வாள் பயிற்சி, சிலம்பு பயிற்சி என வித்தியாசமான உடற்பயிற்சிகளை சொல்லவா?
குளிர்காலங்களில் சூரியன் எப்போது வருவார் என்று காத்திருந்து வயதானவர்கள் தெருவில் நடைப்பயிற்சிக்கு வருவார்கள்.அப்படியே பூங்காக்களும் .
இந்திய மக்கள் பூங்காக்களில் கூடி , பேசி, தங்கள் குறை நிறைகளை விவாதித்து , முடிந்தால் சிறிது நடைப்பயிற்சியும் செய்வார்களே அதை சொல்லவா? (இந்த பார்க் இருக்கோ நான் பாயை பிராண்டாமல் இருக்கேன்_ ஒரு முதிய பெண்மணி )
தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் தனித்தனி குழுக்களாக பேசிக்கொண்டும் ,தமிழர்கள் ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழர்களுடன் மட்டுமே பேசிக்கொண்டும் இருப்பார்களே அதை சொல்லவா?

வீட்டு தோட்டத்திலிருந்து எலுமிச்சை, ஆரஞ்சு இன்ன பிற பழங்கள் காய்கறிகளை பங்கிட்டு கொள்ளுதல் , யார் வீட்டில் அடுத்த வாரம் லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் , நவராத்திரி அழைப்புக்கள் , potluck டின்னர் , ராஜா புது வீடு வாங்கி இருக்கிறார் தெரியுமா போன்ற தகவல் (வம்பு) பரிமாற்றங்களும் நடைபெறுமே அது பற்றி சொல்லவா?
நான் சென்ற அதே மாதங்களில் வந்திருந்த என் சகோதரியுடன் தினமும் படித்த புத்தகங்கள், பார்த்த நாடகங்கள், சென்ற இடங்கள் என பேசிக்கொண்டே பூங்காவில் நடந்ததை சொல்லவா? (அக்கா sun வந்துடுச்சு , கிளம்பலாமா ?)

விஸ்கான்சின் மாநிலத்தில், பூங்காக்களில் ஆப்பிள் மரங்கள் காய்த்து ,பழுத்து கீழே விழுந்து கவனிப்பாரற்று கிடக்கும் . தெருக்களில் நடைப்பயிற்சி செய்யும் போது ஆரஞ்சு, சிவப்பு மற்றும் அடர்வண்ண வண்ண உடை அணிந்து சென்றால் நாய்கள் குறைப்பதை கண்டு பயந்து , (இங்கே நாய் கடித்தால் 1 மில்லியன் டாலருக்கு வழக்கு போடலாம் அப்பா _ எங்கள் மகன்). google map ஐ உபயோகித்து மாற்றுப் பாதையில் உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தோமே அதை பற்றி சொல்லவா?
மணிக்கணக்காக நடைபாதையிலோ பூங்காவிலோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் அங்கே நடக்கலாம் என்பதை சொல்லவா?
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து போனபோதும் ஆஸ்திரேலியாவின் Melbourne போன போதும் பூங்காக்களும் நடைப்பயிற்சியும், Gold coast நகரின் கடற்கரையும் என்னை கவர்ந்திழுத்து நடக்க வைத்ததை சொல்லவா?

மீண்டும் இங்கே ......
சோகமான ஒரு நாளில் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடரும் வழக்கம் இது மலையளவு சோகமும் நொடிப்பொழுதில் மறைந்து போகும் .

சமீப நாட்களில் பூங்காவில் பின்னோக்கி நடந்து, அடிபிரதட்சிண நடைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒருவர்.

எங்கேயோ பார்த்த ஞாபகம்


உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை Netflix/Amazon Primeல் கண்டிருந்தாலும் உலகெங்கும் மிகப் பிரசித்தமாக பலராலும் பார்க்கப்படும் K-drama எனப்படும் கொரிய தயாரிப்புகளைப் பார்ப்பதில் எனக்கு தயக்கமே . காரணம் அவர்களின் வித்தியாசப்படுத்தி அறிய முடியாத முகச் சாயல். (கவுண்டமணி மீம்ஸ் ஒன்றில் வந்தது போல ஏண்டா டேய்...ஒருத்தனே மாறுவேடம் போட்டுக்கிட்டு எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்கிறீங்களா ?)
மிக நீண்ட கால யோசனைக்கு பிறகு , சமீப நாட்களில் தென் கொரிய தொடர்களை காண ஆரம்பித்துள்ளேன். ஒரு தொடரை பார்க்க ஆரம்பித்ததும் பல எபிசோடுகளுக்கு பிறகு ஆள் அடையாளம் பிடிபட தொடங்கியதும் சுவாரஸ்யம் கூடியது.
10 வயதில் சந்தித்த கதாநாயகனும் கதநாயகியும் 25+ களில் சந்திக்கிறார்கள்.
கதாநாயகிக்கு (செஃப்) முதல் எபிசோடிலேயே கதாநாயகனை அடையாளம் தெரிகிறது. கதாநாயகனுக்கு (மருத்துவர்) 12 ஆவது எபிசோடில் தான் தெரிகிறது.
வெண்ணையால் செய்தது போன்ற முகத்துடன் அன்பே உருவான துறுதுறு கதாநாயகி. இறுக்கமான முகத்துடன் கதாநாயகன்.
முகத்தில் சிரிப்பு/உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பெற்றோரை இழந்த பணக்கார கதாநாயகன் ,
தாயால் கைவிடப்பட்டு மன நலம் பாதிக்கபட்டு பின் சரியாகி, பின்பு ஒரு விபத்தில் சுவை மணம் உணரும் ஆற்றல் இழந்தாலும் அருமையாக சமைக்கும் கதாநாயகி, தறுதலை தம்பி, தமிழ் சீரியல் மாமியார் போல ஒரு மாமியார்(என் மகனை விட நீ புத்திசாலி என்று தானே உன் அப்பாவின் கடன்களை அடைத்து உன்னை என் மருமகளாக்கினேன்), நியூரோ சர்ஜன்களான சித்தப்பா பெரியப்பா மகன்களின் (அடித்து புரண்டு) சண்டை, இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகள் எனப் பல விதமாக கதாபாத்திரங்கள்.
அலுக்க சலிக்க சென்டிமென்ட் காட்சிகள். ஆண்கள் பிழிய பிழிய கதறி அழுகிறார்கள். (Close-up காட்சிகள் ) ஆளை வைத்து அம்மாவே மகனை அடிக்கிறார். சண்டையிட்ட சகோதரர் வைத்தியம் செய்கிறார். கடைசி எபிசோடில் கதாநாயகி எங்கேயோ சென்று விடுகிறார். கதாநாயகன் அன்பே சிவம் பட ரீதியில் விமானத்தில் ஆரம்பித்து கடைசியில் ஓடி அவரை கண்டு பிடித்து ஒன்று சேர்கிறார்.
ஏழைகள் எனப்படுவோர் கூட விதம் விதமான உயர்ரக ஆடை அணிந்து வருகிறார்கள். கிம்சி (ஊறுகாய் போன்ற உணவு )தயாரிப்பதை விதம் விதமாக சொல்கிறார்கள் செய்தும் காட்டுகிறார்கள். அனைவரும் விலை உயர்ந்த கைபேசியை பயன்படுத்துகிறார்கள்.
அனைருக்குமே கார் ஓட்ட தெரிகிறது. அவர்களின் மொழியை இழுத்து இழுத்து கொஞ்சி கொஞ்சி பேசுகிறார்கள்.
கதாநாயகன்/நாயகி பெற்றோரை இழந்தவர் அல்லது பெற்றோர் மணவிலக்கு பெற்றவர்கள். இருவரும் முன்பே எங்கோ சந்தித்து இருக்கிறார்கள் .(நான் பார்த்த மூன்று தொடர்களிலும் நாயகன் நாயகி முன்பே அறிமுகமானவர்களே). தனியாக வசிக்கிறார்கள். குடும்ப சண்டைகள் , குழப்பங்கள் , குடும்பத்திற்குள்ளேயே வில்லத்தனங்கள் என நாம் அறிந்த விஷயங்கள்.
Incheon International Airport , Military base, மருத்துவமனை என வித்தியாசமான கதைக்களங்கள். (Settings)
விமான நிலையத்தில் என்னென்ன பிரச்சினை கள் வரும் எப்படி சமாளிக்கிறார்கள் என விரிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்த விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் காத்திருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் சென்றோம். தொடரை பார்க்கையில் நானும் அங்கிருப்பது போல் உணர்ந்தேன்.
நம் மொழிப்படங்களை பார்ப்பது போன்ற உணர்வு தான் இந்த K -ட்ராமாக்களின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன் . மனதிற்கு நெருக்கமாக உள்ளது .
ஒரு சின்ன சந்தேகம். தற்போது காணும் தொடரில் Mr.Eun ஆக நடிப்பவர் மற்றொரு தொடரில் Dr.Jun ஆக நடித்தவரோ ?





Thursday, 13 June 2019

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு/வருகை பகுதிகளுக்கு பலவருடங்களாக சென்று வருகிறேன்.

சில தினங்களுக்கு முன்  அதிகாலையில் (இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா) மகிழுந்தில் 3 மணிக்கு விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டோம் மகள் மற்றும் பேரன்களை வரவேற்க , விமானம் அதிகாலை 2.30 சரியான நேரத்தில் தரையிறங்கி விட்டது என்ற என் மகளின் தகவலுடன் .

வெளிச்சமாய் இருந்த  Arrival/வருகை பகுதியில் எங்களுடன் பேரன்களின் மற்றொரு தாத்தாவும் பாட்டியும்  சேர்ந்து கொள்ள....காத்திருப்பு ஆரம்பம். 

வெளியே வரும் கதவருகில் ஒரு காவலர். (சென்னை விமான நிலைய காவலர்கள் தமிழர்களாக ஏன் இருப்பதில்லை ? )

மெட்ரோ ரயில் 4.30 am - 11.00 pm வரை செயல்படும் என ஒரு விவரப்பலகை கூறுகிறது . 

"Free shuttle for transit passengers to city side"என்கிறது மற்றொரு விவரப்பலகை . 

6,7 விமானங்கள் ஒரே நேரத்தில் துபாய் தோஹா குவைத் அபுதாபி சிங்கப்பூர் என பல ஊர்களிலிருந்தும் வருகை என தகவல் பலகை காட்டியது .

கம்பித்தடுப்பின் ஒரு பக்கம் பலதரப்பட்ட மக்களும் தூக்க கலக்கத்துடன் ஒரு வித ஆர்வத்துடன் நின்றிருந்தார்கள் (நானும்).  நேரெதிரில்.... பிரபல ஹோட்டல்களில் வாகன ஓட்டிகள் கையில் ....Hotel , Mr ...., Ms ....... என பெயர்பலகைகளுடன் ..... வருகைப்பாதையின் முடிவில் டாக்ஸி ,OLA,ஆம்புலன்ஸ்,போலீஸ் வேன் ,  டாக்ஸி ஓட்டிகள்(டாக்சி வேணுமா sir /madam) நின்றிருந்தார்கள். இது தவிர அருகில் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கைகளில் அமர்ந்து, தூங்கி, நின்று  என ஒரு கூட்டம். குளிர்பானங்களுக்கான Automatic Vending Machine தற்போது கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளது.(நான் பார்த்த வரையில் ஒருவரும்  உபயோகிக்கவில்லை)

மெட்ராஸ் காப்பி சென்டரில் 3 மணிக்கே சுடச்சுட பருப்பு வடை வந்திறங்கியது . தலப்பாக்கட்டியில் யாரும் இல்லை .

(நேரமாகுது போய் காப்பி குடிச்சுட்டு வாம்மா _ யாரோ ஒரு கணவர் எனக்கு வேண்டாம் நீங்க நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்களே ....அவரது மனைவி)

இடையிடையே மக்கள் தம் உறவினர்/நண்பர் வருகை கண்டு ஹாய் ஹூய் சப்தங்கள் .

2 மாதங்கள் கூட நிரம்பியிராத ஒரு குழந்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஒரு தகப்பன்....
தனியாய் 4,5 பெட்டிகளை தள்ளமுடியாமல் ட்ராலியில் தள்ளி செல்லும் முதிய பெண்மணிகள் , அந்த அதிகாலை நேரத்திலும் லிப்ஸ்டிக் அணிந்து தலைவாரி .. புத்துணர்ச்சியுடன் வரும்  யுவதிகள், ஸ்வெட்டர் அணிந்து வரும் மக்கள்,  சென்னை வெய்யிலின் தாக்கம் தாங்காமல் அழுது கொண்டே செல்லும் சிறுகுழந்தைகள் , பிறந்ததிலிருந்து  காணாத தன் குழந்தையை உள்ளிருந்தே வாங்கிக்கொண்ட இளம்தந்தை,   உடல்நலம் சரியில்லாமல் சக்கர நாற்காலியில் வந்து ஆம்புலன்ஸில் ஏறி சென்றவர் என பலரும் வந்து கொண்டே இருக்க .....  அனைவரின் கண்களிலும் தூக்கத்தின் சாயல்.

இடையிடையே பயணிகள் வெளியில் எடுத்து செல்லும் ட்ராலிகளை ஒரு சிறிய வண்டியின் உதவியுடன் பின்னாலிருந்து ஒருவர் உந்தித்தள்ள , முன்னால் ஒருவர் அவைகளை சரியாக வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார்கள்.

 விமான பணிப்பெண்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் தவிர்த்து வெகு சில பயணிகளே புதிதாக வலது பக்கமாக வெளியேறி செல்லும் பாதையை பயன்படுத்தினார்கள் . வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது புறம் திரும்புவார்கள் என எங்கோ படித்த நினைவு (அ ) எப்போதும் வெளியேறும் இடப்பக்க பாதையையே கரடுமுரடாக இருந்தாலும் பழக்கம் காரணமாக செல்கிறார்கள். 

பெட்டிக்கு மேல் plastic சுற்றி அல்லது டிவி printer போன்றவைகளுடன் DOH, DXB போன்ற  எழுத்துக்கள் உள்ள bag tag மற்றும்  பாரம்பரிய உடைகளுடன் வந்தால் (அதிலும் பெண்களின் முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரியும் வகை, முகத்தை மறைக்காத வண்ணம், நீளமும் வெள்ளையும் கலந்து Haj Travels Pvt Ltd என எழுதப்பட்ட ஆடை என விதவிதமானவைகள்)  ..... ஐக்கிய அரபு நாடுகள். (மற்ற வகை உடை அணிந்தவர்களும் உண்டு .)

[DOH,DXB போன்றவை எந்த ஊரில் இருக்கும் விமான நிலையம் என்பதை குறிக்கும் குறியீடு.  LAX(Los Angeles ),MAA(Madras) என்பது போல. பலவருடங்களுக்கு முன்பு இரண்டெழுத்து குறியீடுகளும் இருந்தனவாம். உலகின் அனைத்து இடங்களுக்கு பொதுவானதாக 3 எழுத்து குறியீடு மாற்றி அமைக்க பட்டபோது  LA என்பது LAX, DB என்பது DXB ஆனது. கணிதத்தில் X குறியீடு போல]

3.15

"Here comes trouble" என்ற வாசகம் கொண்ட சட்டையை அணைந்த கு(சு)ட்டிப் பையன் குதித்து கொண்டே வெளியில் வந்தான். அவனது பெற்றோரின் பெட்டியில் SFO - MAA. ஆஹா ......சான்பிரான்சிஸ்கோ மக்கள் வர தொடங்கி விட்டார்கள் . வந்துட்டாங்கய்யா .....வந்துட்டாங்கய்யா .....

விதவிதமான வாசகங்கள் கொண்ட உடைகள் அணிந்த ஆண்கள்,  ஸ்வெட்டர் அணிந்த முதியவர்கள் , பள்ளி விடுமுறை சமயமாதலால் சிறுவர் சிறுமியர் , இடையிடையே outdated fashionல் தைக்கப்பட்ட [பலவருடங்களுக்கு முன்பு தைத்து இந்திய வருகைக்காக என reserve செய்து வைக்கப்பட்ட]  சுடிதார்கள் ரவிக்கைகளுடன்  குட்டையாய் வெட்டிவிடப்பட்ட கூந்தலை குட்டிக் கொண்டையாக்கி (அ) குதிரைவாலாக்கிய பெண்கள் ....என 24 மணி நேரங்கள் பயணம் செய்த களைப்புடன் வந்தார்கள்.

அம்மா ..என்னுடைய பெட்டிகளில் ஒன்று மட்டும் வரவில்லை,காத்திருக்கிறேன் _ மகளின் வாட்ஸாப் தகவல் 

மீண்டும் ...ஐக்கிய அரபு நாட்டு விமானங்களின் வருகை ... மீண்டும் மக்களின் வருகை 

4.00 

இன்னும் பெட்டி வரவில்லை _ மகளின் குறுஞ்செய்தி 

காத்திருப்பு மண்டபத்தில் அமர்ந்து காத்திருந்தோம் இப்போது ...இடையிடையே மகளிடமிருந்து தகவல் உண்டா என்று ...

இன்னும் வெளியில் வரலையே ... உள்நாட்டு விமான நிலையம் போய் அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டுமே ... நீங்கள் அடுத்த விமானத்தின் நேரத்தை பார்த்து சொல்லுங்க _ ஒரு இளைஞர் முதியவரிடம் சொல்ல முதியவர் வெள்ளெழுத்து கண்களால் தன் கைபேசியில் தேடுகிறார்.


4.15

பெட்டி வரவே இல்லை . புகார் கொடுத்து விட்டு வருகிறேன். International Roaming 2G யில் இருப்பதால் உங்களுடன் பேச இயலவில்லை  _ மகள். 

2 வயது கூட நிரம்பியிராத குட்டி பாப்பா அம்மாவின் கைபேசியை வாங்கி தனக்கு வேண்டிய appஐ கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்க ....நேரம் கடந்து கொண்டே இருந்தது. (குட்டிஸ்களுக்கு எப்படித் தான் எந்த நேரத்திலும் அவ்வளவு energy இருக்கிறதோ???)

 மேலை நாட்டவர்கள் எப்போதும் எங்கும் சட்டங்களை மதிப்பவர்கள் என்று தான் நினைத்திருந்தேன் கம்பியை தாண்டிக்  குதித்து காத்திருப்பு மண்டபத்தின் உள்ளே வந்தவரை பார்க்கும் வரை . 

5.00

சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பும்போதே 1.45 மணி நேரம் தாமதமாய் புறப்பட்ட விமானம் துபாய் நகரை அதே தாமதத்துடன் வந்தடைந்து, அங்கிருந்து சென்னை கிளம்ப வேண்டிய விமானத்தை 30 நிமிடங்கள் தாமதிக்க வைத்து, சரியான நேரத்தில் சென்னையை வந்தடைந்து... வந்து சேராத ஒரு பெட்டி என் மகள் மற்றும் பேரன்களின் வருகையை 2.30 மணிநேரங்கள் தாமதப் படுத்தி .......

எங்களையும் சேர்த்து படுத்தி ......(சான்பிரான்ஸிஸ்கோவில் கிளப்பியது முதல் , துபாய் வந்து மாற்று விமானத்தில் ஏறி சென்னையில் தரை இறங்கும் வரை தூக்கம் இல்லை . விமானத்தில் WIFI வசதி இருப்பதால் சாப்பிடீர்களா தூங்கினீர்களா என குசலம் விசாரித்தல் ,அம்மா தற்சமயம் துபாயில் என்ன நேரம் இன்னும் 4.30 மணி நேரம் என்றால் எப்போது போய் சேரும் பார்த்து சொல்லு என்பது போன்ற வினா விடை நிகழ்ச்சிகள் , Track Flight Live பார்த்தல் , பார்த்ததை சம்மந்தி வீட்டிற்கு update செய்தல் , சரியான நேரத்திற்கு விமான நிலையம் கிளம்புதல் என பயணம் செய்பவர்களை விட அதிக மன அழுத்தம்) 

காத்துக் காத்து.. கண்கள் பூத்திருந்தோம் ......

பல வருடங்களுக்கு முன்பு .. வெளியில் வரும் கதவிற்கு மேலாக ஒரு திரையில் , விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதியை கடந்து வரும்போது , வருபவர்கள் தெரியும் வண்ணம் வைத்திருப்பார்கள். அங்க பாருங்க பாருங்க .... நீல நிற சட்டை போட்டிருக்கிறார், பச்சை நிற புடவை உடுத்தி இருக்கிறார் என உற்சாகமாக கூவிக் கொண்டிருப்பார்கள் உறவினர்கள். தற்போது அது இல்லை. Landed,Taxiing,Immigration என status update கள்தான்.

விடியத் தொடங்கிய அந்த நேரத்தில் ...  மகளும் பேரன்களும்  நொந்து நூலாகி  வந்து சேர்ந்தார்கள்.  

விடிவெள்ளியாய் ..... 

அச்சச்சோ... டூத் பிரஷ் களை எந்தப் பெட்டியில் வைத்தேன் என்று நினைவில்லையே அம்மா....

பின் குறிப்பு : உடன்வராத பெட்டி  வீட்டிற்கே இன்று வந்து சேர்ந்தது  .