![]() |
Tony among other dolls |
![]() |
Make over from Western to Ethnic |
சிறு வயதில் சத்தியமங்கலத்தில் கொண்டாடிய நவராத்திரி பண்டிகை தினங்கள்......சில மலரும் நினைவுகள்.
மரத்தாலான பிரம்மாண்டமான 9 படிக்கட்டுகள் கொண்டது எங்கள் வீட்டுக் கொலு. (இதன் புகைப்படம் யாரிடம் தற்சமயம் இருக்கிறது என்று தெரியவில்லை)
எங்கள் கொலுவில் பாடி முடித்த கையோடு ......................நான் , என் இளைய சகோதரி சுஜாதா (எ) விஜயா , எங்கள் தோழிகள் வேணி மற்றும் பத்மாவுடன் 4 தெருக்கள் கொண்ட அக்ரஹாரத்தில் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன், பட்டாடைகளுடன் ,விதம் விதமான தலையலங்காரங்களுடன் (எங்கள் பாட்டி இதில் கைதேர்ந்தவர்) மஞ்சள் நிற சாமந்திப் பூக்களுடன் .... கூச்சமே படாமல் [என் 13 ஆம் வயது வரை] தினமும் மாலையில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி**, பாட்டு பாடி, கொலு பொம்மைகளை விமர்சித்து , சுண்டல் வாங்கி கொண்டு [இதே பையிலேயே போட்டுடுங்க மாமி] வீடு திரும்ப எப்படியும் இரவு 8 மணியாகி விடும்.
Bhaktha Meera's visit to SJ House |
[**அனைத்து வீடுகளும் தெருவிலிருந்து 5 (அ) 7 படிக்கட்டுகள் உயர்த்தி கட்டப்பட்டிருக்கும், எங்கள் பின் வாசல் கதவுடன் ஒட்டியே பவானி நதிக்கு செல்லும் படிக்கட்டுக்கள்]
![]() |
Navarathri get ups of Keshav - 2012 |
[ஒரு தெருவின் அடுத்தடுத்த வீடுகள் இவை ----அத்தங்கா வீடு, நடேச மாமா வீடு ( தேள் கடி மந்திரிப்பவர்), பகவதி விலாஸ் வீடு, மணி அண்ணா வீடு( இவரது தாயார் புள்ளிக் கோலங்கள் போடுவதில் நிபுணர்... ஒரு நாள் பார்த்த கோலம் மறு நாள் இருந்ததே இல்லை....) , ஹாசனூர் கணக்குபிள்ளை வீடு, கிருஷ்ண வேணி மாமி அம்மா வீடு- இந்த மாமி என் தாயாரின் தோழி, இன்றும் தொடர்பில், திரும்பினதும் சரோஜா டீச்சர் வீடு, மணி டாக்டர் வீடு, மெத்தை வீடு, வெங்கடரங்கன் மாமா வீடு, வெங்கட பதி மாமா வீடு...இப்படி 4 தெருக்களில் உள்ள ஒவ்வொரு வீட்டாரையும் பரஸ்பரம் தெரியும்....புதிதாக யாராவது குடித்தனம் வந்திருந்தாலும் கூட]
கடைசியாக , அவரவர் பையில் உள்ள எல்லார் வீட்டு சுண்டலையும் கலந்து கட்டி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு சுண்டலையும் சாப்பிடுவோம். பிறகு மோர் சாதம் .....
![]() |
Fur dolls - Current Year |
இந்த வைபவம் 9 நாட்களும் தொடர்ந்து நடக்கும். என் நினைவில் உள்ள வரை எங்கள் யாருக்குமே வயிற்றுக் கோளாறு வந்ததாக நினைவே இல்லை... வீட்டு பெரியவர்கள் தான் அது குறித்து கவலைப் படுவார்கள். :) :D :)
நினைவில் நிற்பவை :
![]() |
Current Year Kolu |
1. மெத்தை வீடு என்பது பெரிய பணக்காரர் வீடு.பங்களா.... கொலு மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
2.வெங்கடபதி மாமாவின் மகள் பத்மினி அக்கா பாட்டு சாதகம் செய்வதை அவர்கள் வீட்டு ஜன்னலில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்போம் (இவர் பிரபல கர்னாடக இசை பாடகி திருமதி காயத்ரி கிரீஷ் அவர்களின் தாயார்)
3.யார் வீட்டிலாவது கொலு வைக்கவில்லை என்றாலோ, வருபவர்களுக்கு பிரசாதம் தரவில்லை என்றாலோ, சின்ன பிள்ளைகள் தானே என்று விரட்டி விட்டாலோ, உடனே கோரஸாக வாசலில் நின்று எல்லாரும் சேர்ந்து "பொம்மைக்கோல் பட்சணம் வீட்ட(டை) பாத்தா லட்சணம் என்று கத்துவோம்.
![]() |
Current yr - Pillaiyar Collection |
4.மாறுதலுக்கா இல்லை சோம்பேறித்தனமா தெரியவில்லை...நடுவில் ஒரு நாள் உடைத்த கடலையுடன் (எங்கள் ஊரில் பொட்டு கடலை) வெல்லம் சேர்த்து பொடியாக்கித் தருவார்கள். அதற்கு எங்கள் மூத்த தலைமுறை வைத்த பெயர் பஃப் பஃப் மாவு. இந்த மாவை காகிதத்தில் பொட்டலம் போட்டு வைத்திருந்து தருவார்கள். அங்கேயே அப்போதே பிரித்து வாயில் போட்டுக் கொண்டு பஃப் பஃப் என்று சொல்லி அவர்கள் வீட்டு கூடத்திலேயே ஊதி விட்டு செல்வோம்.[அவ்வீட்டினரின் அலறலுக்கிடையே தான்]
5. கிழக்கு தெருவில் இருக்கும் சாமி நாத வாத்தியார் [இவர் நாங்கள் படித்த ரமணி எயிடட் எலிமெண்டரி பள்ளியின் தாளாளர்] வீட்டில் நாங்கள் என்றைக்கு சென்ற போதும் வெங்காய தோசை தருவார்கள். (நேரம் கழித்து போவோம் ..சுண்டல் தீர்ந்து போயிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.)
Kolu 2009 @ my tuition centre |
6.ஒரு முறை எங்கள் மாமன் மகன் [ஒரு வயதுக்குள் இருக்கும்] வாசு தேவனை இடுப்பில் சுமந்து கொண்டு கிளம்பிய ஐந்தாவது நிமிடம் தூங்கி விட்டார். வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு போகணும் என்ற அளவுக்கு யோசிக்காமல் ..4 தெருவையும் நாங்கள் நால்வரும் அவரை மாற்றி மாற்றி சுமந்து சென்றோம் [ செம கனம்]
7.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வாணிக செட்டியார் வகுப்பினர் ஏற்படுத்திய கோவில். நவராத்திரி நாட்களில் அவர்களது வீட்டு பெண்மணிகள் அணிந்த நகைகளை அணிந்து தினம் ஒரு வித அலங்காரத்துடன் அம்மன் வலம் வருவார்.
சரஸ்வதி பூஜை ....அல்லது புத்தகங்கள் பாதுகாப்பு தினம்
காலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து சாமந்திப் பூ வைத்துக் கொண்டு புத்தகங்களை தொட்டி முற்றத்தில் வெய்யிலில் காய வைத்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எங்கள் வீட்டில் வாசலில் ஆரம்பித்து சமையல் அறை தாண்டி மாட்டு கொட்டகை வரை எங்கும் புத்தகங்கள்.
[பாட்டி எங்களுக்கு பால் கூட தர மாட்டார். பூஜை முடிந்தவுடன் தான் சாப்பாடு.]
![]() |
Lord Shiva @ San Jose |
ஓலை சுவடிகள் (பூஜை அறை), புராணங்கள், பத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் பைண்டு செய்யப்பட்டவை(கூடத்து அலமாரிகள்), ஆங்கிலப் புத்தகங்கள், என் தகப்பனாரின் மருத்துவ புத்தகங்கள், மாமன்கள் அம்மா சித்தியின் புத்தகங்கள் (அறை), அதற்கும் மீறிய பல வகை புத்தகங்கள் (அட்டத்தில் டிரங்கு பெட்டிகளில்), நரசிம்ஹப்ரியா, ரங்க நாத பாதுகா, சப்தகிரி (சமையல் அறை, மாட்டுக் கொட்டகை) என அவ்வளவும் வெயிலில் காய வைக்கப்படும். [மாட்டுக் கொட்டகை மரங்கள் சூழ்ந்த இடம், பாட்டி ஓய்வு நேரங்களில் அங்கே உள்ள பென்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார், தூங்கும் வழக்கம் இல்லை]
பின்பு மீண்டும் புத்தகங்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்.
மாலையில் ஆய்த பூஜை. மாமன்கள், அப்பா சைக்கிள் ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜை செய்வார்கள்.
நாங்கள் கோவில், நண்பர்கள் உறவினர்கள் விளையாட்டு என்று இரவு தான் வீட்டிற்குள் நுழைவோம்.மீனாட்சி அம்மன் கோவில் , பெரிய கோவில் , கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் பூஜைகள் , ஊர்வலங்கள் அமோகமாக நடைபெறும் ஒன்பது நாட்களும். (நாங்கள் இல்லாமலா??)
அரசு பள்ளியில் படித்ததால் ஒரு லாபம் விஜய தசமியன்றும் பள்ளி விடுமுறை. எனவே அன்று தான் வீட்டு பாடங்களை செய்து முடிப்போம்.
பஃப் .....பஃப்...... பஃப்...... பஃப்...........
பின் குறிப்பு :
[1] என் மகளின் பிறந்த நாள் (நட்சத்திரம்) நவராத்திரியின் இரண்டாம் நாள் வரும். அப்போது புரட்டாசி மாதம் சென்னையில் பருவ மழை பெய்யும். ஒவ்வொரு முறையும் புத்தாடை அணிந்து கிளம்பி சற்று நேரத்தில் மழையில் நனைந்து (அ) வழுக்கி விழுந்து அழுது கொண்டே வருவார். அவரது 15 வயது வரை மழை பெய்தது... ..
![]() |
Visitors @ San Jose , California |
14 வருடங்களுக்குப் பிறகு இம்முறை தினமும் மழை.....
பிள்ளைகள் சிறு வயதில் தினமும் பாட்டு நோட்டை பார்த்து பாடுவோம். சரஸ்வதி பூஜை அன்று முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ....பே பே தான்....ஒரு பாட்டு கூட பாடமாக தெரியாது.
[2]சமீப வருடங்களில் மகளின் அமெரிக்க நவராத்திரி கொலுவுடன் நேர்த்தியாக நடைபெறுகிறது. கேசவ் தன்னுடைய இன்றைய அலங்காரம் என்ன என்று சொல்லி விடுகிறார்.( அம்மா ..இன்னிக்கு சோட்டா பீம், இன்னிக்கு சிவன்) . சின்னப் பாப்பாவும் தயாராகி விட்டார்.
அனைவரும் உற்றார் உறவினர் நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று வருகிறார்கள். கோவில்களும் இங்குள்ளபடியே....
அருமையான அனுபவம் ......