Saturday, 22 November 2014

அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

நான் பயணிக்கும் ஆட்டோக்கள் மற்றும் கார்களின் ஓட்டுனர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களது அனுபவங்களைக் கேட்பது என் பல வருட வழக்கம்.

அலுவலகப் பயணங்களின்  சில அனுபவங்கள் இங்கே  உங்களுக்காக.......

1) ஒரு ஆட்டோ ஓட்டுனர் தம்முடைய பிரயாணியாக வந்த மத்திய வயது ஆண் தற்காலத்தில் பெண்களும் ஆண்களும் முகத்தை மறைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுகிறார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டே வந்தாராம்.
ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்கும் சமயம் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பர்தா அணிந்த ஒரு இளம் பெண்ணும் ஓர் இளைஞரும் வந்து நின்றார்களாம். 
இவரது பயணி அந்தப் பெண்ணின் கொலுசணிந்த கால்களைக் கண்டு தன்னுடைய மகள் என்று அடையாளம் கண்டு "சங்கீதா" என்று அலறினாராம். அந்தப் பெண் அதிர்ந்து போய் நிற்கையில் இவரது பயணி அங்கேயே இறங்கி சென்று மகளுடன் பேச சென்று விட்டாராம்.

2) 3,4 வருடங்கள் முன்பு ஒரு நாள் மாலையில் , அலுவலகம் உள்ள அசோக் நகர் பகுதியிலிருந்து வீடு செல்ல(சாலிகிராமம்) ஷேர் ஆட்டோ கிடைக்குமா என்று காத்திருந்தேன். அந்தத் தடத்தில் ஷேர் ஆட்டோ கிடையாது என்பது எனக்கு தெரியாது. 
என்னை கவனித்துக் கொண்டு இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்து நான் கூட்டி போறேன் வாங்கன்னு அழைத்து சென்றார். வழியில் அவர் சொன்னது, அம்மா உங்களைப் பார்க்க வயதில் சிறியவராக தெரிகிறது (அப்படியா??) தயவு செய்து ஷேர் ஆட்டோவில் செல்லாதீர்கள் , ஆவடியில் ஒரு பெண்ணை இன்று ஒரு புதரில் .... செய்து விட்டார்கள் அவளது காதலனே அதற்கு உடந்தை என்று சொல்கிறார்கள் . பணம் செலவானால் பரவாயில்லை, சாதாரண ஆட்டோவிலேயே செல்லுங்கள் என்றார். [இன்றளவும் பின்பற்றுகிறேன். உடன் என் கணவர் வந்தால் மட்டுமே ஷேர் ஆட்டோ, அதுவும் மிக சில முறைகளே.]

3)அதே அசோக் நகர் பகுதி... வீடு செல்ல காத்திருந்தேன். சற்று தொலைவில் ஒரு ஆட்டோ நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டுனர் என்னை அங்கே வர சொன்னார். வண்டி ஓடத்தொடங்கியதும் பேச்சும் தொடங்கியது. 
திடீரென்று நினைத்தார்போல , மேடம் நீங்க என்னை விட வயதில் பெரியவர்கள் உங்களை நடந்து வந்து ஆட்டோவில் ஏற சொல்லி மரியாதை குறைவாக நடத்திட்டேன், மன்னிச்சுக்கோங்க என்று பல முறை சொன்னார். உங்கள் தோற்றத்தை வைத்து அப்படி எண்ணி விட்டேன் என்று கூறினார். நான் உங்களுக்கு அருகில் வந்திருக்கணும் என்று வழியெல்லாம் புலம்பி விட்டார். (வெளியூரிலிருந்து வந்து சென்னையில் வாழ்பவர் போல)

4)திரைப்படத் துறையில் பணி புரிந்த ஒருவர் என் அலுவலக காரின் ஓட்டுனராக சில மாதங்கள் பணி புரிந்தார். போடா போடி படத்திற்காக ஓட்டுனராக இருந்த ஆந்திர மாநிலத்துக்காரர். 
திரைத் துறை பற்றியும் நடிகர்களுடனான தன் அனுபவம் பற்றியும் (சிம்புவுடன் கிரிக்கெட் விளையாடினேன்) திரைத் துறை ஓட்டுனர்கள் சங்கம் அதன் செயல்பாடுகள், சினிமா படம் எடுப்பதில் ஓட்டுனர்களின் பங்கு, வருமானம் , ஆந்திரா சாப்பாடு எந்த இடங்களில் நன்றாக இருக்கும் எனப் பல செய்திகள் அறிந்து கொண்டேன். (வளசரவாக்கம் உடுப்பி டாடா ஹோட்டல் இட்லி ரொம்ப நல்லா இருக்கும் மேடம்)

5)மற்றொரு ஓட்டுனர் மூலம் பி எஃப் பற்றியும், வெஸ்டெர்ன் யூனியனில் பணம் அனுப்புவது வாங்குவது பற்றியும் எனப் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
இரவு எத்தனை நேரமானாலும் தம்முடைய மனைவி சாப்பிடாமல் காத்திருப்பார் என்று எதுவும் சாப்பிடாமல் வீட்டிற்கு செல்வார்.

6) சமீபத்திய கால் டேக்ஸி பயணத்திலும் ஓட்டுனருடன் பேசிய படியே சென்றேன் . தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு.. அவர் எங்களை இறக்கி விட்டவுடன் ஏர்போர்ட் பிறகு பெங்களூர், வரும் வழியில் விருத்தாசலம் , தீபாவளிக்குள் வீடு என வேலை இருப்பதாக சொன்னார்.
அன்று சென்னையில் அடை மழை வேறு. 665 ரூபாய்கள் மீட்டர் படி நான் 700 கொடுத்து விட்டு நன்றி சொல்லி விட்டு (எப்போதும் சொல்வோம் நானும் என் அம்மாவும்) தீபாவளி வாழ்த்துக்களும் சொன்னேன்.


கவனித்துக் கொண்டிருந்த என் தம்பி மனைவி கேட்டது...... 

அக்கா ..... அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

பின் குறிப்பு : ஆண்டி முதல் அரசன் வரை எல்லாரும் நமக்கு ஃப்ரெண்டு தான் தங்கச்சி !!

1 comment:

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...