1979 மாநிலங்களவைத் தேர்தல் சமயம். அ.இ.அ.தி.மு.க சார்பாக திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் எங்களது ஊர் புஞ்சைப் புளியம்பட்டிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவதாக தகவல் தெரிந்தது. அது சமயம் நான் 8 ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இரவில் தான் கூட்டம் நடக்கும் என்பதால் , ஒரே பரபரப்புடன் அவரைக் காணும் ஆவலில் பக்கத்து வீட்டு அத்தை திருமதி நாகமணி சுப்பையனுடன் நாங்கள் 3 சகோதரிகள் , அவரது மகள் காந்திமதி , மகன் சேகர் ஆகியோரும் கிளம்ப தயாரானோம். எங்கள் குட்டித் தம்பி அடம்பிடித்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.
(இவர் வந்தால் பிஸ்கட், தண்ணீர், குல்லாய் என எடுத்து போக சோம்பல், எங்களைப் பற்றி எங்கள் தாயாரிடன் கோள் வேறு சொல்லி விடுவார், அவரை கழற்றி விடத் தான் முடிந்த மட்டும் முயற்சி செய்வோம்)
இரவு 9 மணி.ஊரை விட்டு வெளியில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் காத்திருக்க ஆரம்பித்தோம்.......... எப்பங்க இங்க வருவாரு? அந்த ஊர்ல இருக்காருங்ளாமா..இந்த ஊர்ல பேசிக்கிட்டிருக்காருங்ளாமா.வந்துகிட்டே இருக்காருங்ளாமா என அவரவருக்குத் தெரிந்த வகையில் தகவல்களை பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். கட்டுக்கோப்பான கூட்டம். (அமைதியாகக் கலவரம் செய்யாமல் கத்தாமல்) அக்கம் பக்கத்து சிற்றூரிகளில் இருந்தெல்லாம் மக்கள் கூடிக் காத்திருந்தார்கள்.
குட்டி பையனுக்கு தாகம், பசி, உச்சா....... என நடு நடுவில் (என் மேல் ஏனோ அவருக்கு கொள்ளை பிரியம், என்னை விட்டு நகரவே மாட்டார், என்னைப் பற்றி அளவாகத் தான் போட்டுக் கொடுப்பார்) கடைசியாக தூக்கம்.....
மைதானத்தில் குளிர் அதிகமானது. பக்கத்து வீட்டு அத்தையின் உறவினர் மைதானத்துக்கு அருகில் வசித்து வந்தார்கள். அவர்களின் இல்லத்திற்கு சென்று குட்டிப் பையனை படுக்க வைத்து விட்டு மீண்டும் மைதானம் , காத்திருப்பு...........
12 மணி வரை காத்திருந்தோம்........... மறு தினம் பள்ளி செல்ல வேண்டுமே........திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களைப் பார்க்காமலே,மன வருத்தத்துடன் , பக்கத்து வீட்டு அத்தையின் உறவினர் வீட்டில் படுத்து உறங்கி விட்டு விடியலில் வீடு வந்து சேர்ந்தோம்.
திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கு வந்து பிரச்சாரம் செய்து விட்டு சென்றதாக அறிந்தோம்..... அவரைக் காண முடியாதது ஒரு பெரும் குறையாக இருந்தது பல வருடங்களுக்கு........
திருமணமாகி சென்னை வந்த சில வருடங்களில் (1986) எனது பெரிய தந்தையாரை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற போது தக தகன்னு சிவப்பா அழகா ...... வேட்டி உடுத்தி (கண்ணாடி தொப்பி அணியாமல்) கம்பீரமாக தம் சக மாநிலங்களவை உறுப்பினர்களோடு (உடல் நலமில்லாத மற்றொரு அமைச்சரை காண்பதற்காக வந்திருந்தார்) நேர் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த அவரை பல நிமிடங்கள் எதிர் பாராமல் காத்திருக்காமல் காண நேர்ந்தது....... மிக சாதாரணரைப் போல சில கணங்கள் என் முன் நின்று பிறகு அவர் கடந்து சென்றது இன்றும் நினைவில் நிற்கும் ஒரு காட்சி.....
இவரும் ........எப்ப வருவார் எப்படி வருவார் என்று தெரியாது ..... ஆனால் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்.......
பின் குறிப்பு : அன்றிருந்த கட்டுக் கோப்பான தலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.... (டீவீ பாருங்க...... கொடிய கீழே இறக்கு, உஷ்.......சத்தம் போடாதே......)
No comments:
Post a Comment