Friday, 21 November 2014

ஒரு புடவையும் மூன்று ரவிக்கைகளும்.........


ஒரு நாளின் எந்த நேரத்தில் உன்னைப் பார்த்தாலும் மடிப்பு கலையாத உடையுடன் , படிய வாரிய தலையுடன் எப்படி இருக்கே என்று பள்ளித் தோழி எஸ் ஆர் புஷ்பாவும் , வயதில் குறைந்தவர்கள் கூட துவண்டு வந்திருக்காங்க நீங்க மட்டும் நாள் முழுவதும் எப்படி இத்தனை புத்துணர்ச்சியுடன் விதம் விதமா உடை உடுத்தி வந்து (மிக்ஸ் & மேட்ச்) பளிச்சுன்னு இருக்கீங்க மேடம் என்று சக ஊழியைகளால் பாராட்டப் பெற்ற எனது இன்றைய நிலை???? அயகோ...... யாதென உரைப்பேன்  ??

காலை எழுந்தவுடன் படிப்பு ... இல்லை இல்லை .....கவலை .
தினமும் இன்னைக்கு என்ன புடவை அதற்கு என்ன ரவிக்கை??  ஊதா நிறப் புடவைக்கு மஞ்சள் ரவிக்கையா? பச்சை ரவிக்கையா இல்லை மரவண்ண ரவிக்கையா? (நேத்து போட முடிந்த பச்சை ரவிக்கை கூட இன்று கை உள்ளேயே போகலை)
கை சுற்றளவு 1 இன்ச் கூட வைத்து மேலும் வைத்திருந்த 3 அதிகப்படி தையலையும் பிரிச்சாச்சு..........
விசேஷங்களுக்கு செல்ல என்றே ஒரு(ரே) பட்டுப் புடவை ரவிக்கை, எல்லாத் தையலையும் பிரித்து விட்டு கடந்த 10 விசேஷங்களுக்கும் அதே தான் . 11 ஆவது விசேஷம் ஒரு திருமணம். அந்த ரவிக்கையையே காணவில்லை.....( தேடினேன் தேடினேன்......இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன்....)
  
ஜிம்மில் சேரும் போது பயிற்சியாளரிடன் என் வாழ்நாள் ஆவலான அத்லெடிக் ஆர்ம்ஸ் & ஃப்லாட் அப்ஸ் தான் என்னுடைய குறிக்கோள் என்று கூறினேன்.(நம்ம மனசுல தீபிகா படுகோனேவும் பிபாஷா பாசுவும்ல இருக்காங்க)...... பயிற்சியாளர் அப்படியே செய்துடுவோம்ன்னு சிரிக்காமல் சொன்னார் . அதனாலயே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(மனசுல என்ன நினைத்திருப்பாரோ???)]

ஜிம் பயிற்சியாளர் என் ஆசையை நிறைவேற்ற  மற்றும் என் தேய்ந்து போன எலும்புகளுக்கு வலுவூட்டும் வண்ணம் செய்யச் சொல்லும் எடை தூக்கும் பயிற்சிகளுக்கும் இதில் முக்கிய பங்குண்டு. ஆர்ம்ஸ் மட்டும் பயில்வான் போல ஆகிட்டே இருக்கு........ எந்த சட்டையும் உள்ளேயே ஏறலை.....இதில் பிரித்து விட தையலும் கிடையாது.

தினமும் காலையில் எழும்போதே தினமும் ஏதாவது ஒரு வலி...தலை வலி, கால் வலி, அரிப்பு, வயிற்றுவலி.....(என்னம்மா நீ .பெரிய பாட்டி மாதிரி தினமும் வியாதி சொல்றே _ என் மகள்)
மருத்துவரிடம் சென்று மாஸ்டர் செக் அப்பும் முடிச்சாச்சு.......
இவர் சொல்லும் காரணம்....மத்திய வயது....... ஹார்மோனல் இம்பேலன்ஸ் .
தலை வலித்தாலும் , கால் வலித்தாலும், கண் வியர்த்தாலும்(எல்லாத்துக்கும் அளுக்காச்சி அளுகாச்சியா வருதுங்க), எரிச்சல் கூடினாலும், உரக்கக் கத்தினாலும்(4 வருஷமா இப்படித்தான் இருக்காய் _ என் கணவர்) ,அதிகம் வியர்த்தாலும், உடல்  அரித்தாலும் எல்லாத்துக்கும் ஒரே காரணம்தாங்க......ஹார்மோனல் இம்பேலன்ஸ் ...எல்லாம் சரி...... ரவிக்கை பத்தலைன்னாலும் அதே காரணம் சொல்றாங்களே........... என்ன கொடுமை சரவணன் இது?????

[நேற்று பார்த்த GUESS WHO என்ற ஆங்கிலப் படத்தில் கதா நாயகி தன் தந்தையிடம் அப்பா அழுதீர்களா என்று கேட்கிறார்... No , I was sweating in my eyes என்று பதில் சொல்கிறார்............ சுட்டுட்டாங்கய்யா...........சுட்டுட்டாங்க......கதைய தான் சுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,,,,,,,,,,,,வசனத்தையேல்ல சுட்டிருக்காங்க.......]

என்றும் எப்போதும் ஒரு புடவைக்கு 2, 3 நிறங்களில் ரவிக்கை வாங்கி உபயோகிக்கும் வழக்கம் எனக்கு உண்டு(அலுவலக நண்பர் ஆலோசனை உபயம்..... புதுசு புதுசா கட்டிட்டு வர மாதிரி தெரியும்ல??)
அப்படி வாங்கி சேர்த்த கார்ப்பொரேட் பட்டு வகைகள், கனத்த பட்டு வகைகள், ஜரிகை போட்ட புடவைகள், சாதாரண புடவைகள்,அவற்றிற்கேற்ற ரவிக்கைகள் , சூடிதார்கள் , ஸ்டிரெட்ச் பேண்டுகள், விதம் விதமான நிறங்களில் டாப்ஸ், பல வண்ணங்களில் டிசைன்களில் துப்பட்டாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பருவ காலங்களுக்கேற்ற உடைகள் என் அலமாரியில் இருக்கின்றன.....இருக்கின்றன........ மிக அழகாய் துணிக் கடைகளில் உள்ளது போல அடுக்கப்பட்டு பல மாதங்களாக......

இது தான் இப்படி..... சூடிதார், பேண்ட் சட்டைகள் போட்டு சமாளிக்கலாம் என்றால் அதிலும் பிரச்சினை..... பேண்ட்டுகள் லெக்கின்ஸ்கள் கூட சதி பண்ணுதுங்க....அதனால் அவைகளுக்கும் நாடா இருப்பது போல வாங்கி போட்டு சமாளிக்கிறேன்

விதம் விதமாய் முயற்சித்து ஏதோ ஒரு பேண்ட்டுக்கு (அ) புடவைக்கு ஏதோ ஒரு நிறத்தில் சட்டை என அணிந்து என் நாட்களைக் கழிக்கின்றேன்........... மிக்ஸ் & மேட்ஸ் அப்படின்னு ஒரு விஷயம் வந்துதோ நான் தப்பிச்சேன்..........

சில தோழிகள் என்னை முன்பு போல நல்ல விதமாக உடுத்த சொல்கிறார்கள்....... (எப்படி இருந்த நீ இப்படி மாறிட்டே.)
அது எப்படின்னு தான் புரியலை..........எனக்கு மட்டும் தான் இப்படியா?? இல்லை...........

பின் குறிப்பு :
பிரபல எழுத்தாளர் மறைந்த திருமதி அனுராதா ரமணன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் , இளம் பெண்களே..மத்திம வயதில் இருக்கும் உங்கள் தாயார் விசேஷங்களுக்கு செல்லவோ வெளியில் செல்லவோ தன்னை அலங்கரித்துக் கொள்ள கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அவரை கடிந்து கொள்ளாதீர்கள். அந்த வயதுக்கே உரிய பல பிரச்சினைகள் அவர்கள் நேற்று அணிந்த ரவிக்கையை இன்று அணிய முடியாதபடி செய்திருக்கும். பொறுமையாக அவரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் என்று எழுதி இருந்தார். அவரை நான் நினைக்காத நாளில்லை


1 comment:

  1. ROFL

    ANU Madam - my fav - KOOTU PUZHUKKAL ( PUN (un)intended)) :) / Oru Malarin Payanam

    ReplyDelete

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...