Saturday, 6 December 2014

பொத்தூஊ..........

Son in girl attire sporting Pottu & pink ribbon
சிறு வயதில் நெற்றியில் வைக்கும் இந்த பொட்டை வட்ட வடிவில் இல்லாமல்  திலகமாக நீள வாக்கில் மட்டுமே வைத்து விடுவார் என் தாயார். 

அதற்கடுத்த கட்டமாக அச்சுக்களை ((பல வித வடிவங்களில் ஒரு வளையத்தில் கோர்த்து செய்திருப்பார்கள்)  கண் மையில் தோய்த்து நட்சத்திரம், பூ, காய், நாய், பேய்ன்னு வித விதமாய் வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் முகப்பவுடரை ஒத்தி விடுவார்கள். ஒரு வித கறுப்பு வெள்ளை கலவையாக அலைவோம்.

Raghav & Keshav Sporting Pottu
6,7 வயதுக் காலத்தில் திருமணமாகி மும்பை சென்ற என் சித்தி திரும்பி வருகையில் பச்சை நிற பிளாஸ்டிக் பொட்டு, குட்டை முந்தானை வைத்து உடுத்திய சேலை,பப்பின்ஸ் ஸ்டைல் தலை அலங்காரம்(அதாங்க மண்டைல கொண்டை வெச்சு தூக்கி வாரிக்கறாங்களே ... இன்றைய நயன்தாரா போல , அந்த கால ஷர்மிளா டாகூர் போல )  என  வந்தார். கருப்பு சிவப்பில் மட்டுமே பொட்டு இருக்கும் என்று நினைத்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விதம் விதமான நிறங்களில் மேட்சி மேட்சியாக அலங்கரித்துக் கொள்வார். முன் தினம் பார்த்தே......னே  பாட்டில் வரும் சிம்ரன் போல பொட்டை நடு நெற்றியில் வைத்துக் கொள்வார். ( எல்லாப் பெண்களும் அப்படித்தான், ட்விஸ்ட் நடனம் ஆடாதது தான் குறை)


நான் ஐந்தாம் வகுப்பு வந்தவுடன் , பல நிறங்களில் சாந்து பொட்டுக்கள் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். தோழிகளுக்குள் 16, 18 என யார் அதிக நிறங்களில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு போட்டியே நடக்கும்.(வட்டமாக எல்லா குப்பிகளும் அடுக்கி வைக்கப்பட்டு மேலே மூடி போட்டு இருக்கும்) 

அதில் என்ன கொடுமை என்றால் யார் மிகச் சிறிய பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்பதில் ஒரு போட்டி. நான் குண்டூசியை திருப்பி அதன் முனையில் சாந்தைத் தோய்த்து வைத்துக் கொள்வேன். (என் தாத்தா- பொட்டு கண்ணுக்கே தெரியலையே ...... நல்ல்ல்ல்லா பாருங்க... ஆமாம் இருக்கு அதென்ன ஈயோட  பீ அளவுல இருக்கு...கொஞ்சம் பெரியதா வெச்சா என்னம்மா..... உங்களுக்கு ஒண்ணும் தெரியாது தாத்தா  இது தான் ஃபேஷன்.... ஹைய்யோ ஹைய்யோ _தாத்தா) மஞ்சள், காப்பர் சல்பேட் நீலம், அடர் பச்சை என் அபிமான நிறங்கள்.(இந்த நிறங்களுக்கு தனி ஹைய்யோ..)

 Friends Meena to my right & Santhana Lakshmi to the left

அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒரு புகைப்படம் இது.... நான் அதில் பொட்டு வைத்திருக்கிறேனா இல்லையா என்பதை மிகச் சரியாகக் கண்டு பிடித்துச்  சொல்பவர்களுக்கு ஆலய மணி படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் பயன்படுத்திய சோப்பு டப்பா இலவசம்............

பல வருடங்கள் , மகள் பிறக்கும் வரை சாந்துப் பொட்டுக்கள் தான். அதை நாங்கள் பயன்படுத்தியதை விட கை தவறி (??!) கீழே கொட்டியது தான் அதிகம். இவைகள் விரல் உயர குப்பிகள், ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி குப்பி.


 இரு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலே உள்ள இடமே பொட்டு என்றும், நெற்றிப் பொட்டில் வைக்கும் சின்னமே பொட்டு என்பதும்,  அந்த இடம் நம் மனத்துடன் சம்பந்தப் பட்டது என்றும், யாரேனும் உற்றுப் பார்த்தால் நம் மனத்தை தம் வயப்படுத்த முடியும் என்றும் புரிந்த பிறகு சற்றே பெரிய பொட்டுக்கு மாறினேன். (இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட செய்தி)


மகன் சிறுவயதில் அம்மா எனக்கு "பொத்தூஊ" வேணும் என்று அடம் பிடித்து "பப்பௌ" போட்டு "பொத்தூஊ" வைத்துக் கொள்வார்.அம்மா பாவம்மா குழந்தை கேட்குது வெச்சு விட்டுடு_ என் மகள்.(என் மகளால் குழந்தை எனக் குறிப்பிடப்படும் என் மகன் சமீப காலங்களில் ..............
அக்காவை விட்டு விட்டு எனக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லும் போது நாயாகவும் , நான் தம்பியை கடைக்கு அனுப்பி உனக்கு தேவையானதை வாங்கி வர சொல்லு என்றால் குழந்தையாகவும் மாறுவார்)

பிறகு வந்தது வித வித நிறங்களில் , அளவுகளில் பிசின் வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள். பல நிறங்களில் ஆரம்பித்து கடந்த வருடம் வரை கருப்பு, சிவப்பு, கருப்பில் சிவப்பு, சிவப்பில் கருப்பு வட்டம் , நீட்டு பொட்டு என விதம் விதமாக என்னுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் மூடுக்கு ஏற்ற வகையில் மற்றி மாற்றி வைத்துக் கொள்வேன்.(மிக்ஸ் & மேட்ச் வகை ??)

Younger Grandson Raghav
என் தந்தையின் கருத்தில், மாமியாருக்கும் மருமகளுக்கும் கருத்து வேற்றுமை வர முக்கியக் காரணம் இந்த பொட்டுதான். மருமகள் வட்டப் பொட்டு வெச்சுகிட்ட நீளப் பொட்டு வெச்சுக்கோன்றது நீளமா வெச்சுகிட்ட வட்டமா வெச்சுக்கோன்றது... அவரவராக எதற்காக பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து செய்து கொள்வதே சிறப்பு...... மற்றவர்கள் சொல்வது சரியாக இராது என்பார்.

கடந்த அமெரிக்க பயணத்தின் போது பல அட்டைகள் மகளுக்காக வாங்கிச் சென்றதில் அளவு சரியில்லை என்று திருப்பி விட்டார். திரும்ப வந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மறுத்து அலற அலற பல அட்டைகளை தானம் செய்த பின்பும் , அன்று முதல் நேற்று வரை ஒரே அளவிலான கருப்பு நிற வட்ட வடிவப் பொட்டு தான்... அலுக்க சலிக்க..........(தயவு செய்து சிவப்பு நிறப் பொட்டு வெச்சுக்கோயேன் _ என் அத்தை மகள்)

நேற்று போல் இன்று இல்லை.......... சிவப்பு திலகம் என் நெற்றியில்.......
இன்று போல் நாளை இல்லை...... சிவப்பு நிறத்தில் கறுப்பு வட்டப் பொட்டு....

பின் குறிப்பு : பொட்டு வட்ட வடிவமாக இருப்பது சிறப்பு. எப்படி நகர்ந்தாலும் அதே வடிவம் தான்.
இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான சக்கரம் என்ன வடிவம் சொல்லுங்க பாக்கலாம்?
வீதியோர சாக்கடைகளின் மூடி வட்டமா சதுரமா? பார்த்திருக்கீங்களா? (சதுர மூடி குறுக்காக வைத்தால் சாக்கடையின் உள்ளேயே விழுந்து விடும்)



Monday, 1 December 2014

ஜோடிப் பொருத்தம் (रब ने बना दी जोड़ी)

வேலைக்கு செல்லும் தாயான என்னால் மகளது பிரசவ தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் விடுப்பு கிடைத்து சான் ஹொசே நகரம் செல்ல முடிந்தது.

அக்டோபர் 17, 2013.... இனிய காலை பொழுது ... (அங்கே சூரிய பகவான் லேசாக எட்டிப் பார்த்தாலே இனிய காலைன்னு சொல்வாங்க...எல்லா நாளும் எல்லா நேரமும் பிரிட்ஜுக்குள்ளே இருக்கற மாதிரியே இருந்தது நான் இருந்த 6 மாதங்களும்)

அது நாள் வரை மகளுக்கு சமைத்துத் தராததை ஈடு கட்டும் விதமாக அவளுக்குப் பிடித்த உணவை நண்பகலில் சூடாக சமைத்துத் தருவதாக சொல்லி இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் பொழுதை போக்குவது எப்படி? (4.30 ~ 11.00 தினமும் பரபரப்பாக இருந்தவள் நான்..)


அங்கே உள்ள நெட் ஃப்லிக்ஸில்" ரப் நே பனா தி ஜோடி" படம் பார்க்க சொன்னார் மகள். நான், என் கணவர் , மூத்த பேரன் மூவரும் மிக சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு காட்சியில் பஞ்சாப் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் கதா நாயகன் , கதா நாயகிக்கு தன் காதலை உணர்த்த எண்ணி ஒரு மலை மேலே அழைத்துச் செல்வார். அங்கிருந்த படி ஊருக்குள் பார்க்க சொல்வார். அப்போது ஊரிலுள்ள மொத்த விளக்குகளும் அணைந்து விடும். அந்தக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதே கணம் எங்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலும் விளக்குகள் அணைந்து விட்டது. காரிருள் சூழ்ந்தது ??!

நான் மகளிடம் திரைப்படத்தில் தான் மின் தடை.... இங்கே தொலைக்காட்சி திரையும் இருட்டாகி விட்டதே என்று கேட்க , அவள்...அம்மா நம் வீட்டிலும் மின்  தடை என்றாள்.(அமெரிக்காவுல கரண்டே போகாதுன்னுல்ல சொல்வாங்க??)

அப்போது நேரம் 11.30 ... மின் அடுப்பில் மதிய உணவு எப்படி சமைப்பது?? வேறு வகை அடுப்பும் கிடையாது......

சற்று தொலைவில் வசித்து வந்த மகளது தோழிக்கு தொலை பேசி , அவரை எங்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயாரிக்க சொல்லி விட்டு, பொடி நடையாய் அவரது இல்லம் சென்று உண்டு முடித்தோம். (மகளால் அச்சமயம் கார் ஓட்ட முடியாத நிலை)

வரும் போது அவரது தோழி எங்களை காரில் அழைத்து வந்து விட்டு சென்றார். 

வீட்டை ஒட்டி பிரதான சாலை, மின் தொடர் வண்டி நிலையம் , ரயில், கார் இரண்டுக்கும் பொதுவான சிக்னல் ..ரயில் மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க சில மைல்களுக்கு சாலைகளில் சிக்னல் இல்லை... (மகளது தோழியிடம் , பார்த்து பத்திரமா வீட்டுக்கு போம்மா.போயிட்டு போன் பண்ணும்மா.....)

சில மணி நேரங்கள் கழித்து மின்சாரம் வந்த பிறகு .. விட்ட இடத்திலிருந்து படத்தை பார்த்து முடித்தோம். முதல் நாள் வரை சிங்கார சென்னையில் தினசரி 2 மணி நேர மின் தடையை அனுபவித்ததால் எனக்கு சிரமமாக தெரியவில்லை...... சமைக்க முடியவில்லை என்பது தவிர....

என் கணவர் முக நூலில் போட்ட ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா??:
"ஒரு ஆள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் போது மின் தடையையும் சேர்த்தே கொண்டு வந்து விட்டார்"





Saturday, 22 November 2014

அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

நான் பயணிக்கும் ஆட்டோக்கள் மற்றும் கார்களின் ஓட்டுனர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களது அனுபவங்களைக் கேட்பது என் பல வருட வழக்கம்.

அலுவலகப் பயணங்களின்  சில அனுபவங்கள் இங்கே  உங்களுக்காக.......

1) ஒரு ஆட்டோ ஓட்டுனர் தம்முடைய பிரயாணியாக வந்த மத்திய வயது ஆண் தற்காலத்தில் பெண்களும் ஆண்களும் முகத்தை மறைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுகிறார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டே வந்தாராம்.
ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்கும் சமயம் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பர்தா அணிந்த ஒரு இளம் பெண்ணும் ஓர் இளைஞரும் வந்து நின்றார்களாம். 
இவரது பயணி அந்தப் பெண்ணின் கொலுசணிந்த கால்களைக் கண்டு தன்னுடைய மகள் என்று அடையாளம் கண்டு "சங்கீதா" என்று அலறினாராம். அந்தப் பெண் அதிர்ந்து போய் நிற்கையில் இவரது பயணி அங்கேயே இறங்கி சென்று மகளுடன் பேச சென்று விட்டாராம்.

2) 3,4 வருடங்கள் முன்பு ஒரு நாள் மாலையில் , அலுவலகம் உள்ள அசோக் நகர் பகுதியிலிருந்து வீடு செல்ல(சாலிகிராமம்) ஷேர் ஆட்டோ கிடைக்குமா என்று காத்திருந்தேன். அந்தத் தடத்தில் ஷேர் ஆட்டோ கிடையாது என்பது எனக்கு தெரியாது. 
என்னை கவனித்துக் கொண்டு இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்து நான் கூட்டி போறேன் வாங்கன்னு அழைத்து சென்றார். வழியில் அவர் சொன்னது, அம்மா உங்களைப் பார்க்க வயதில் சிறியவராக தெரிகிறது (அப்படியா??) தயவு செய்து ஷேர் ஆட்டோவில் செல்லாதீர்கள் , ஆவடியில் ஒரு பெண்ணை இன்று ஒரு புதரில் .... செய்து விட்டார்கள் அவளது காதலனே அதற்கு உடந்தை என்று சொல்கிறார்கள் . பணம் செலவானால் பரவாயில்லை, சாதாரண ஆட்டோவிலேயே செல்லுங்கள் என்றார். [இன்றளவும் பின்பற்றுகிறேன். உடன் என் கணவர் வந்தால் மட்டுமே ஷேர் ஆட்டோ, அதுவும் மிக சில முறைகளே.]

3)அதே அசோக் நகர் பகுதி... வீடு செல்ல காத்திருந்தேன். சற்று தொலைவில் ஒரு ஆட்டோ நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டுனர் என்னை அங்கே வர சொன்னார். வண்டி ஓடத்தொடங்கியதும் பேச்சும் தொடங்கியது. 
திடீரென்று நினைத்தார்போல , மேடம் நீங்க என்னை விட வயதில் பெரியவர்கள் உங்களை நடந்து வந்து ஆட்டோவில் ஏற சொல்லி மரியாதை குறைவாக நடத்திட்டேன், மன்னிச்சுக்கோங்க என்று பல முறை சொன்னார். உங்கள் தோற்றத்தை வைத்து அப்படி எண்ணி விட்டேன் என்று கூறினார். நான் உங்களுக்கு அருகில் வந்திருக்கணும் என்று வழியெல்லாம் புலம்பி விட்டார். (வெளியூரிலிருந்து வந்து சென்னையில் வாழ்பவர் போல)

4)திரைப்படத் துறையில் பணி புரிந்த ஒருவர் என் அலுவலக காரின் ஓட்டுனராக சில மாதங்கள் பணி புரிந்தார். போடா போடி படத்திற்காக ஓட்டுனராக இருந்த ஆந்திர மாநிலத்துக்காரர். 
திரைத் துறை பற்றியும் நடிகர்களுடனான தன் அனுபவம் பற்றியும் (சிம்புவுடன் கிரிக்கெட் விளையாடினேன்) திரைத் துறை ஓட்டுனர்கள் சங்கம் அதன் செயல்பாடுகள், சினிமா படம் எடுப்பதில் ஓட்டுனர்களின் பங்கு, வருமானம் , ஆந்திரா சாப்பாடு எந்த இடங்களில் நன்றாக இருக்கும் எனப் பல செய்திகள் அறிந்து கொண்டேன். (வளசரவாக்கம் உடுப்பி டாடா ஹோட்டல் இட்லி ரொம்ப நல்லா இருக்கும் மேடம்)

5)மற்றொரு ஓட்டுனர் மூலம் பி எஃப் பற்றியும், வெஸ்டெர்ன் யூனியனில் பணம் அனுப்புவது வாங்குவது பற்றியும் எனப் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
இரவு எத்தனை நேரமானாலும் தம்முடைய மனைவி சாப்பிடாமல் காத்திருப்பார் என்று எதுவும் சாப்பிடாமல் வீட்டிற்கு செல்வார்.

6) சமீபத்திய கால் டேக்ஸி பயணத்திலும் ஓட்டுனருடன் பேசிய படியே சென்றேன் . தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு.. அவர் எங்களை இறக்கி விட்டவுடன் ஏர்போர்ட் பிறகு பெங்களூர், வரும் வழியில் விருத்தாசலம் , தீபாவளிக்குள் வீடு என வேலை இருப்பதாக சொன்னார்.
அன்று சென்னையில் அடை மழை வேறு. 665 ரூபாய்கள் மீட்டர் படி நான் 700 கொடுத்து விட்டு நன்றி சொல்லி விட்டு (எப்போதும் சொல்வோம் நானும் என் அம்மாவும்) தீபாவளி வாழ்த்துக்களும் சொன்னேன்.


கவனித்துக் கொண்டிருந்த என் தம்பி மனைவி கேட்டது...... 

அக்கா ..... அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

பின் குறிப்பு : ஆண்டி முதல் அரசன் வரை எல்லாரும் நமக்கு ஃப்ரெண்டு தான் தங்கச்சி !!

Friday, 21 November 2014

ஒரு புடவையும் மூன்று ரவிக்கைகளும்.........


ஒரு நாளின் எந்த நேரத்தில் உன்னைப் பார்த்தாலும் மடிப்பு கலையாத உடையுடன் , படிய வாரிய தலையுடன் எப்படி இருக்கே என்று பள்ளித் தோழி எஸ் ஆர் புஷ்பாவும் , வயதில் குறைந்தவர்கள் கூட துவண்டு வந்திருக்காங்க நீங்க மட்டும் நாள் முழுவதும் எப்படி இத்தனை புத்துணர்ச்சியுடன் விதம் விதமா உடை உடுத்தி வந்து (மிக்ஸ் & மேட்ச்) பளிச்சுன்னு இருக்கீங்க மேடம் என்று சக ஊழியைகளால் பாராட்டப் பெற்ற எனது இன்றைய நிலை???? அயகோ...... யாதென உரைப்பேன்  ??

காலை எழுந்தவுடன் படிப்பு ... இல்லை இல்லை .....கவலை .
தினமும் இன்னைக்கு என்ன புடவை அதற்கு என்ன ரவிக்கை??  ஊதா நிறப் புடவைக்கு மஞ்சள் ரவிக்கையா? பச்சை ரவிக்கையா இல்லை மரவண்ண ரவிக்கையா? (நேத்து போட முடிந்த பச்சை ரவிக்கை கூட இன்று கை உள்ளேயே போகலை)
கை சுற்றளவு 1 இன்ச் கூட வைத்து மேலும் வைத்திருந்த 3 அதிகப்படி தையலையும் பிரிச்சாச்சு..........
விசேஷங்களுக்கு செல்ல என்றே ஒரு(ரே) பட்டுப் புடவை ரவிக்கை, எல்லாத் தையலையும் பிரித்து விட்டு கடந்த 10 விசேஷங்களுக்கும் அதே தான் . 11 ஆவது விசேஷம் ஒரு திருமணம். அந்த ரவிக்கையையே காணவில்லை.....( தேடினேன் தேடினேன்......இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன்....)
  
ஜிம்மில் சேரும் போது பயிற்சியாளரிடன் என் வாழ்நாள் ஆவலான அத்லெடிக் ஆர்ம்ஸ் & ஃப்லாட் அப்ஸ் தான் என்னுடைய குறிக்கோள் என்று கூறினேன்.(நம்ம மனசுல தீபிகா படுகோனேவும் பிபாஷா பாசுவும்ல இருக்காங்க)...... பயிற்சியாளர் அப்படியே செய்துடுவோம்ன்னு சிரிக்காமல் சொன்னார் . அதனாலயே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(மனசுல என்ன நினைத்திருப்பாரோ???)]

ஜிம் பயிற்சியாளர் என் ஆசையை நிறைவேற்ற  மற்றும் என் தேய்ந்து போன எலும்புகளுக்கு வலுவூட்டும் வண்ணம் செய்யச் சொல்லும் எடை தூக்கும் பயிற்சிகளுக்கும் இதில் முக்கிய பங்குண்டு. ஆர்ம்ஸ் மட்டும் பயில்வான் போல ஆகிட்டே இருக்கு........ எந்த சட்டையும் உள்ளேயே ஏறலை.....இதில் பிரித்து விட தையலும் கிடையாது.

தினமும் காலையில் எழும்போதே தினமும் ஏதாவது ஒரு வலி...தலை வலி, கால் வலி, அரிப்பு, வயிற்றுவலி.....(என்னம்மா நீ .பெரிய பாட்டி மாதிரி தினமும் வியாதி சொல்றே _ என் மகள்)
மருத்துவரிடம் சென்று மாஸ்டர் செக் அப்பும் முடிச்சாச்சு.......
இவர் சொல்லும் காரணம்....மத்திய வயது....... ஹார்மோனல் இம்பேலன்ஸ் .
தலை வலித்தாலும் , கால் வலித்தாலும், கண் வியர்த்தாலும்(எல்லாத்துக்கும் அளுக்காச்சி அளுகாச்சியா வருதுங்க), எரிச்சல் கூடினாலும், உரக்கக் கத்தினாலும்(4 வருஷமா இப்படித்தான் இருக்காய் _ என் கணவர்) ,அதிகம் வியர்த்தாலும், உடல்  அரித்தாலும் எல்லாத்துக்கும் ஒரே காரணம்தாங்க......ஹார்மோனல் இம்பேலன்ஸ் ...எல்லாம் சரி...... ரவிக்கை பத்தலைன்னாலும் அதே காரணம் சொல்றாங்களே........... என்ன கொடுமை சரவணன் இது?????

[நேற்று பார்த்த GUESS WHO என்ற ஆங்கிலப் படத்தில் கதா நாயகி தன் தந்தையிடம் அப்பா அழுதீர்களா என்று கேட்கிறார்... No , I was sweating in my eyes என்று பதில் சொல்கிறார்............ சுட்டுட்டாங்கய்யா...........சுட்டுட்டாங்க......கதைய தான் சுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,,,,,,,,,,,,வசனத்தையேல்ல சுட்டிருக்காங்க.......]

என்றும் எப்போதும் ஒரு புடவைக்கு 2, 3 நிறங்களில் ரவிக்கை வாங்கி உபயோகிக்கும் வழக்கம் எனக்கு உண்டு(அலுவலக நண்பர் ஆலோசனை உபயம்..... புதுசு புதுசா கட்டிட்டு வர மாதிரி தெரியும்ல??)
அப்படி வாங்கி சேர்த்த கார்ப்பொரேட் பட்டு வகைகள், கனத்த பட்டு வகைகள், ஜரிகை போட்ட புடவைகள், சாதாரண புடவைகள்,அவற்றிற்கேற்ற ரவிக்கைகள் , சூடிதார்கள் , ஸ்டிரெட்ச் பேண்டுகள், விதம் விதமான நிறங்களில் டாப்ஸ், பல வண்ணங்களில் டிசைன்களில் துப்பட்டாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பருவ காலங்களுக்கேற்ற உடைகள் என் அலமாரியில் இருக்கின்றன.....இருக்கின்றன........ மிக அழகாய் துணிக் கடைகளில் உள்ளது போல அடுக்கப்பட்டு பல மாதங்களாக......

இது தான் இப்படி..... சூடிதார், பேண்ட் சட்டைகள் போட்டு சமாளிக்கலாம் என்றால் அதிலும் பிரச்சினை..... பேண்ட்டுகள் லெக்கின்ஸ்கள் கூட சதி பண்ணுதுங்க....அதனால் அவைகளுக்கும் நாடா இருப்பது போல வாங்கி போட்டு சமாளிக்கிறேன்

விதம் விதமாய் முயற்சித்து ஏதோ ஒரு பேண்ட்டுக்கு (அ) புடவைக்கு ஏதோ ஒரு நிறத்தில் சட்டை என அணிந்து என் நாட்களைக் கழிக்கின்றேன்........... மிக்ஸ் & மேட்ஸ் அப்படின்னு ஒரு விஷயம் வந்துதோ நான் தப்பிச்சேன்..........

சில தோழிகள் என்னை முன்பு போல நல்ல விதமாக உடுத்த சொல்கிறார்கள்....... (எப்படி இருந்த நீ இப்படி மாறிட்டே.)
அது எப்படின்னு தான் புரியலை..........எனக்கு மட்டும் தான் இப்படியா?? இல்லை...........

பின் குறிப்பு :
பிரபல எழுத்தாளர் மறைந்த திருமதி அனுராதா ரமணன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் , இளம் பெண்களே..மத்திம வயதில் இருக்கும் உங்கள் தாயார் விசேஷங்களுக்கு செல்லவோ வெளியில் செல்லவோ தன்னை அலங்கரித்துக் கொள்ள கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அவரை கடிந்து கொள்ளாதீர்கள். அந்த வயதுக்கே உரிய பல பிரச்சினைகள் அவர்கள் நேற்று அணிந்த ரவிக்கையை இன்று அணிய முடியாதபடி செய்திருக்கும். பொறுமையாக அவரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் என்று எழுதி இருந்தார். அவரை நான் நினைக்காத நாளில்லை


Wednesday, 19 November 2014

சரோசா........குப்ப கொட்றியா...கொட்டு கொட்டு.....

40 வயதுகளில் கடுகடு சிடுசிடுவாக நாமும் மாறாம இருக்கணும்னா ,இளம்வயதில் படிக்கலாமேன்னு நினைச்சேன் ? படிச்சேனே .... தொடர்ந்து 43 வயது வரை...... 

23 வருடங்கள் ஆசிரியையாக , அலுவலக பொது மேலாளராக பணிகளும் இடையில் சொந்த தொழிலும் வெளியில் செல்ல முடியாத காலங்களில் வீட்டிலேயே பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தும் முக்கிய காலகட்டங்களில் பணிக்கு செல்லாமலும்.....இப்போதும் இன்றும் இங்கும்...... (படிங்க படிங்க படிச்சுக்கிட்டே இருங்க.......)

படிப்பு என்பது வாழ்க்கைக்கானது....... (அதாங்க வாழ்க்கைக் கல்வின்னு பொதிகை டீவி ல கூட சொல்வாங்களே)

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக."

(கடனேன்னு படிக்காதீங்கப்பா.........40 மதிப்பெண்கள் வாங்கினாலும் பரவாயில்லை... அந்த அளவுக்காவது கண்டிப்பா.நல்லா படிங்க........படிச்சதை செயல்படுத்துங்க.....)

அடுப்பில் குழம்பை கொதிக்க வைக்க வாயகன்ற பாத்திரத்தில் வைக்க வேண்டும். முதல் முறை கொதிக்க தொடங்கியதும் அடுப்பின் தீயை )குறைத்து விடலாம்.... ஒரு முறை திரவம் கொதி நிலைக்கு வந்தாச்சுன்னா  குறைந்த அளவு வெப்பமே போதும். அதே அளவுல கடைசி வரைக்கும் கொதிக்கும். (முயற்சி பண்ணி பாருங்க....) குறுகலான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை விட வாணலி போன்றவற்றில் குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கலாம். துணிகளை விரித்து பரத்தி காயப் போட்டால் சீக்கிரம் உலரும். (மேலே சொன்ன எல்லாம் தெர்மோஸ்டாட்  விதிகள் தான்....... புத்தகத்தில் படித்தது தாங்க.....நம்மது காமர்ஸ்ங்க..)

உங்கள் பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து படிக்கலாம்.... ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் நமக்கு தெரியாத ஓராயிரம் செய்திகள் இருக்கக் கூடும்.(அம்மா நீ ரொம்ப பேசுறாய் என்னை, நீ இந்த பாடத்தை படிச்சு பரீட்சை எழுதினால் பெயில் ஆயிடுவாய்_ என் மகன், அப்படி சொன்ன மகன் இன்று சொல்வது :I think you are doing good so far and I am quite confident that you can improve a lot . All the best!!
P.S:I personally feel that you are better at writing stories with humor infused in it. I would be glad if you could prove me wrong.? Cheers, Bala.) [இன்னாமா இங்கிலீஸ் எளுதராரு பாருங்க.... ]

தினமும் ஏதாவது படிங்க....... குமுதம் , விகடன் கூட படிக்கலாம்.... பல நல்ல கருத்துக்கள் கிடைக்கும். காஜல் அகர்வாலின் ஆண் நண்பரை பற்றி கவலைப்படாதீங்க.வேற்று மாநில பெண் இங்கே வெற்றி பெற்றிருப்பதை பாருங்கள்........... ஸ்ருதி ஹாசன் நள்ளிரவு 12 மணிக்கு பாடல் ரிகார்டிங்க் வந்தார் என்பதை படிக்கும் போது அந்த நேரத்திலும் உழைக்கும் அவரது ஆர்வம் மற்றும் உற்சாகத்தைப் பாருங்கள்.......

லெஃப்ட் அப்படின்னா கேமராவுக்கு இடது பக்கம்னும் ரைட் என்றால் இடது பக்கம் என்பதும் சினிமா மொழி.. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அழகை அப்படியே பராமரிக்கறதெல்லாம் லேசுபட்ட வேலை இல்லீங்க.....

டீவீ பார்த்தாலும் முக நூல் பார்த்தாலும் கற்கலாம்.....

தொட்டனைத் தூறும்மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

(கிணத்துலேந்து தண்ணியை சேந்திகிட்டே  இருந்தா தான் தண்ணி ஊறுங்ளாமா...... அந்தாப்லெங்கோ நாமுளு படிச்சிகிட்டே இருந்தாதே அறிவு வளருங்றாரு வள்ளுவரு..... புரியுதுங்ளா??)

அதே போல , வேலைக்கு போயிட்டிருந்தேன் இப்ப பிரேக் விழுந்துடுச்சு என்பது இக்கால பெண்களின் அன்றாட புலம்பல். நேற்று என்பது முடிந்த கதை.... நாளை என்பது இல்லை..... இன்று மட்டுமே நிஜம்..... இன்று மகிழ்வுடன் இருங்கள்......

நம்முடைய முன் அனுபவங்களும் இன்றைய ஞானமுமே மீண்டும் வேலையில் சேர அடிப்படைத் தேவைகள்.

திருமணம் , குழந்தைகள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான கால கட்டம்.

சரோசா போல குப்பை கொட்டுங்க... கூடவே "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான் "என்று பாடிகிட்டே சுத்தம் செய்ங்க.... (மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு விதம் விதமா இருக்குங்க...... அதை கத்துக்கிட்டாலே உலகத்தின் பாதி பிரச்சினைகள் குறையும்)

வீட்டை பராமரித்து, குழந்தைகளை நல்ல விதமாய் வளர்த்து
அவர்கள் முழு நேரம் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு நாம் நமக்கான துறையில் பணி செய்ய போகலாம்.

நம் பிள்ளைகள் ஜெயித்தால் தான் நாம் ஜெயித்த கணக்கு என்பார் என் மாமன். அது உண்மை....... நாம் ஜெயிக்கறது சுலபங்க

அவர்களை ஜெயிக்க வைப்பது தான் நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ..... 

படிங்க ..... வேலைக்கு போங்க....... சூழ்நிலை சரியா இல்லைன்னா கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க.... அப்பவும் ஏதாவது படிங்க.....
இப்ப இணையம் மூலம் நிறைய படிப்புகள் இருக்கு.......

மொத்தத்தில் இந்த கணத்தை அமைதியா நிம்மதியா வாழுங்க....... அதே சமயம் ....உங்கள் அறிவை பெருக்கிக்கோங்க........

நமக்கு எது தேவையோ மிக சரியான நேரத்தில் நம்மை வந்து சேரும் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்கணும்.(தினமும் சில முறைகள் சொல்லி தான் பாருங்களேன்...... என் மகன் எனக்கு சொல்லி கொடுத்தான்...... நல்லது மட்டுமே நடக்குதுங்க.... நீங்க இந்த போஸ்டை படிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்....... படிச்சிட்டீங்க பாத்தீங்களா?? )

பின் குறிப்பு: என் நட்பு வட்டத்தில் மனதாலும் வயதாலும் இளையவர்களே அதிகம் இருப்பதால் ஒரு சிறு விளக்கம்....இந்த தலைப்பு அந்த கால பஞ்ச் டையலாக்,
சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி அவர்கள் கதாநாயகி சுமதியை பார்த்து சொல்(ஜொள்ளும்)லும் வசனம் இது.
குப்பை கொட்டுவதை அத்தனை பாராட்டுதலா சொல்வார்...










Thursday, 13 November 2014

மல...ஏளு மல......

என் கணவர் ஒரு முறை வீட்டிலிருந்த படுக்கை விரிப்புகளை எடுத்து மலைக்கு கொடுத்துட்டேன் என்றார்.

யாருக்கு அண்ணா மலைக்கா? - மைத்துனர் மகன்
உண்ணா மலைக்கா? - மகள்
தண்ணீர் மலைக்கா? - நான் 
இல்லை இல்லை ஏழு மலைக்கு - என் கணவர்.

[ஏழு மலை எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலராக சேர்ந்த புதிதில்]

ஏழு மலைக்கு [திருப்பதி] செல்லும் பேறு 5 வருடங்களுக்குப் பிறகு கடந்த 11 ஆம் தேதி கிடைத்தது. வழக்கமாக அங்கே வாலண்டியராக சேவை செய்ய செல்லும் குழுவினருடன் சென்றோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்போது அந்த சேவை தடை என்பதால் தரிசனம் மட்டுமே.

சப்தகிரி எக்ஸ்பிரஸ், காலை உணவு, திருச்சானூர் தாயார் தரிசனம், வேனில் திருமலை.
திருச்சானூரில் கூட்டம் மிக அதிகம். சில நொடிகளே தாயாரை தரிசிக்க முடிந்தது [நீங்க அம்மாவைப் பார்க்கணும்னு அவசியம் இல்லை பக்தர்களே, அம்மா நீங்க எங்க இருந்தாலும் உங்களை பார்ப்பா..._ சன்னதியில் இருந்த ஒரு கைடு பெண்மணி ஜருகண்டியை இப்படி நாசூக்காக தமிழில் சொன்னார்]
திருமலையில் கோவிலுக்கு மிகவும் தொலைவில் கிட்டத் தட்ட ஊருக்கு வெளியே தங்குமிடம்.

மாலை 5 - 6 தரிசன நேரம் என ஆன்லைன் பதிவின் படி 4 மணிக்கே கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பல இடங்களில் கடும் செக்யூரிடி சோதனைகள் கோவில் வாசல் உட்பட.[ தேவுடு ஓடியா போக போகிறார் இங்க இருந்து , அமைதியா செக்யூரிடி செக்கிங் முடிச்சுட்டு போங்க - கோவில் ஊழியை]

கோவில் வாசல், அங்கிருந்து ஆர்ஜித சேவா நுழைவு வாசல், உள்ளே வரிசையில் 1.30 மணி நேரம் நடை என 4 - 6.45 தொடர் நடைக்குப் பின் கடவுளை தரிசித்தோம். [10 வினாடிகள் நல்ல தரிசனம் சற்றே உயரமானவர்களுக்கு மட்டும்.] மற்றவர்களால் அதற்கும் குறைவான வினாடிகளே ஏழுமலையானை தரிசிக்க முடிந்ததாக கூறினர்.

                                          காணவில்லை

1. கோவில் வாசலில் பக்தர்களின் கால்கள் நனையும் வண்ணம் நீர் வந்து கொண்டே இருக்கும். 
2. திருப்பதி என்றாலே குரங்குகள்.
3. வரிசையில் நிற்கையில் கேட்கும் பக்தர்களில் ஏடு கொண்டலவாடா வெங்கட் ரமணா கோவிந்தா கோவிந்தா என்ற குரல்கள்
அதிகம் கண்டது
4. டிரடீஷனல் வியர் என சொல்லப் படும் நம் பாரம்பரிய ஆடை வகைகள் [ டிசைனர் ரவிக்கைகள், டிசைனர் ஆடைகள், ஹை ஹீல் செருப்புகள், ஜீன்ஸ் பேண்ட்டுகள், செஃபீக்கள்- காலம் மாறி போச்சா இல்லை எனக்கு வயசாயிடுச்சா?? ரெண்டும் தான் ] 
5. திருப்பதி என்றாலே மலைகளும் கோவிலும் தான். தங்கி இருந்த இடத்திலிருந்து இவைகள் பார்வைக்கே  படவில்லை.சென்னையில் இருப்பது போன்ற தோற்றம்]
6. நவம்பர் மாதத்தின் நடுக்கும் குளிர் . விடியற்காலையில் கூட வெது வெதுப்பான கால நிலை

மகிழ்ச்சி
1. மலையில் உள்ள மரங்கள் வெட்டப் படவில்லை
2. புது நண்பர்கள்
3. மலை சுற்றுப் பயணம் - மனதில் திக் திக், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி, யாராவது அருகில் பேசினால் , என்ன சொன்னீங்க?? காது அடைப்பு,
  மைசூர் மலை பயண நினைவுகள் நெஞ்சில், இன்னும் சற்றும் குறையாத வயிற்றைப் புரட்டும் உணர்வு
4. திருப்பதியில் கால், தலை வலிக்க வலிக்க நடை
5. தாயின் கர்ப்பத்துக்குள் தூங்குவது போன்ற பாதுகாப்பான உறக்கம்
6. திருப்பதி பீமாஸ் காலை உணவு, சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஏசி கோச் பயணம்
7. குழுவினருடன் கலந்துரையாடல் [அந்த காலத்துல ... 20 - 50 வயதுக்குள் மிக சிலரே] அந்த காலத் திருமலைக்கும் இன்றைய நிலைக்கும் உள்ள வித்தியாசங்களை அறிய முடிந்தது. 

ஆற்றாமை
வருத்தம் என்று சொல்ல முடியாது, ஆயினும் விடவும் முடியாது..... என் கணவர் மட்ட்ட்ட்டும் அதிகாலையில் ஜீயருடன் செல்லும் குழுவினருடன் சேர்ந்து சென்று ஏழுமலையானை ஆர அமர தரிசித்து வந்தார். பெண்டிருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை.
மொத்தத்தில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட , 1 1/2 வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வெளியே சென்ற இனிமையான நிறைவான ஒரு பயணம். 
[மேற்கே செம்பரம்பாக்கம் (சம்பந்தி வீடு) , தெற்கே செம்பாக்கம் (சகோதரர் வீடு) தான் என் எல்லை.] 


ஏடு கொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா!!!!

பின் குறிப்பு :

எங்கும் எப்போதும் வீட்டை விட்டு வெளியில் வேலைக்கு போகும் பெண்களே மற்றவர்களுடன் [ஆண் பெண் புதியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல்] பழக முன்வருகிறார்கள். மற்றவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். புதியவர்களுடன் அறிமுகப் படுத்திக் கொள்ளவே தயங்குகிறார்கள்.ஏன்??????



Saturday, 8 November 2014

தக தகன்னு சிவப்பா...... அழகா...........

1979 மாநிலங்களவைத் தேர்தல் சமயம். .இ.அ.தி.மு.க சார்பாக திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் எங்களது ஊர் புஞ்சைப் புளியம்பட்டிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவதாக தகவல் தெரிந்தது. அது சமயம் நான் 8 ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இரவில் தான் கூட்டம் நடக்கும் என்பதால் , ஒரே பரபரப்புடன் அவரைக் காணும் ஆவலில் பக்கத்து வீட்டு அத்தை திருமதி நாகமணி சுப்பையனுடன் நாங்கள் 3 சகோதரிகள் , அவரது மகள் காந்திமதி , மகன் சேகர் ஆகியோரும் கிளம்ப தயாரானோம். எங்கள் குட்டித் தம்பி அடம்பிடித்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். 
(இவர் வந்தால் பிஸ்கட், தண்ணீர், குல்லாய் என எடுத்து போக சோம்பல், எங்களைப் பற்றி எங்கள் தாயாரிடன் கோள் வேறு சொல்லி விடுவார், அவரை கழற்றி விடத் தான் முடிந்த மட்டும் முயற்சி செய்வோம்)

இரவு 9 மணி.ஊரை விட்டு வெளியில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் காத்திருக்க ஆரம்பித்தோம்.......... எப்பங்க இங்க வருவாரு? அந்த ஊர்ல இருக்காருங்ளாமா..இந்த ஊர்ல பேசிக்கிட்டிருக்காருங்ளாமா.வந்துகிட்டே இருக்காருங்ளாமா என அவரவருக்குத் தெரிந்த வகையில் தகவல்களை பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.  கட்டுக்கோப்பான கூட்டம். (அமைதியாகக் கலவரம் செய்யாமல் கத்தாமல்) அக்கம் பக்கத்து சிற்றூரிகளில் இருந்தெல்லாம் மக்கள் கூடிக் காத்திருந்தார்கள்.

குட்டி பையனுக்கு தாகம், பசி, உச்சா....... என நடு நடுவில் (என் மேல் ஏனோ அவருக்கு கொள்ளை பிரியம், என்னை விட்டு நகரவே மாட்டார், என்னைப் பற்றி அளவாகத் தான் போட்டுக் கொடுப்பார்) கடைசியாக தூக்கம்.....
மைதானத்தில் குளிர் அதிகமானது. பக்கத்து வீட்டு அத்தையின் உறவினர் மைதானத்துக்கு அருகில் வசித்து வந்தார்கள். அவர்களின் இல்லத்திற்கு சென்று குட்டிப் பையனை படுக்க வைத்து விட்டு மீண்டும் மைதானம் , காத்திருப்பு...........

12 மணி வரை காத்திருந்தோம்........... மறு தினம் பள்ளி செல்ல வேண்டுமே........திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களைப் பார்க்காமலே,மன வருத்தத்துடன் , பக்கத்து வீட்டு அத்தையின் உறவினர் வீட்டில் படுத்து உறங்கி விட்டு விடியலில் வீடு வந்து சேர்ந்தோம்.

திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கு வந்து பிரச்சாரம் செய்து விட்டு சென்றதாக அறிந்தோம்..... அவரைக் காண முடியாதது ஒரு பெரும் குறையாக இருந்தது பல வருடங்களுக்கு........

திருமணமாகி சென்னை வந்த சில வருடங்களில் (1986) எனது பெரிய தந்தையாரை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற போது தக தகன்னு சிவப்பா அழகா ...... வேட்டி உடுத்தி (கண்ணாடி தொப்பி அணியாமல்) கம்பீரமாக தம் சக மாநிலங்களவை உறுப்பினர்களோடு (உடல் நலமில்லாத மற்றொரு அமைச்சரை காண்பதற்காக வந்திருந்தார்) நேர் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த அவரை பல நிமிடங்கள் எதிர் பாராமல் காத்திருக்காமல் காண நேர்ந்தது....... மிக சாதாரணரைப் போல சில கணங்கள் என் முன் நின்று பிறகு அவர் கடந்து சென்றது இன்றும் நினைவில் நிற்கும் ஒரு காட்சி.....

இவரும் ........எப்ப வருவார் எப்படி வருவார் என்று தெரியாது ..... ஆனால் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்.......

பின் குறிப்பு : அன்றிருந்த கட்டுக் கோப்பான தலைமைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.... (டீவீ பாருங்க...... கொடிய கீழே இறக்கு, உஷ்.......சத்தம் போடாதே......)

Thursday, 6 November 2014

Dreamz….. unlimited



It’s story time now……


“I’ve got a dream …….you’ve got a dream.”



[1] Visualise

A young girl by name Sarah, used to travel by bus to work daily.
She  had a great passion for music and learnt to play the piano but could not afford to buy a new one. She always had visualised  to have a piano at her house to play with at least for 6 months .

One fine day, while travelling in the bus , she heard an old woman talking to her friend about her visit to her son’s house for 6 months and  was looking for  some one to take care of her piano during that period.


Sarah felt excited and offered to take care of the piano  and return back when the old lady was back in town.

As Sarah  visualised , she got the piano for just 6 months. If she had visualised about playing her “OWN” piano, who knows, the old lady herself would have sold the piano to her for an affordable price.

Visualise your dreams extensively . Your dreams should be genuine and realistic. [unlike I will touch the moon, pluck the stars blah blah]

If your dreams are genuine, sure they will happen to you.

Moral : For our dreams to come true , we have to dream them as DR. A.P.J.ABDUL KALAM has quoted.

THINK BIG

 [2]Achieve

Here comes another story read in an article by Mr.V.IRAI ANBU , IAS several years back

Discussion between a  butterfly and a dragon fly :

Dragonfly : How do u look beautiful  while I am not?

Butterfly:  I sit inside the cocoon without food , water for several days[10 – 14 days ] and at the end of it I become beautiful while coming out.

If you do Penance, you will get the BOON.


Moral: For achieving your boon, you have to do your penance. Move towards your dream each step a day and at the end you too are a BUTTERFLY.

P.S : The above two stories have refined  my life and brought me up to feel my limit to achieve is the SKY.







Wednesday, 5 November 2014

ஆண்டியான அத்தை.....


சிறு வயதில் எங்களுக்கு கற்றுத் தரப்பட்ட முக்கியமான நல்ல பழக்கம் , அனைவரையும் மரியாதையுடன் உறவு முறை சொல்லி அழைக்க வேண்டும்.

அண்டை அயலாரை பெரியவர்கள் அக்கா அண்ணா என்றும் சிறுவர்கள் அத்தை, மாமா என்றோ மாமி மாமா என்றோ தான் அழைப்போம். 
(கணவன் மனைவியாக இருந்தாலும், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் எங்களுக்கு அக்கா அண்ணா தானுங்கோ)
தோட்டம் சுத்தம் செய்பவர், மரம் ஏறி தேங்காய் பறிப்பவர் என யார் வந்தாலும் வாங்க போங்க தான் ... அதனால் அவர்களும் என்னிடம் (எங்களிடம்)மிகுந்த பிரியத்துடன் சின்னம்மா வாங்க போங்க என்றே அழைப்பார்கள். 
இங்கே வந்த புதிதில் எங்கள் ஹெல்ப் மேட் .தே.... இங்க வா என்று தான் என்னை அழைப்பார். 4 நாட்களில் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டேன்.(இந்த தே... பழக பல வருடங்கள் ஆனது)
என் மகள் சிறு வயதில் வாசலில் நின்று கொண்டு அனைவரையும் உறவு முறை சொல்லி அழைப்பார்.... பாட்டீ, தாத்தா , அக்கா, மாமா, அண்ணா என்று அவர்களின் வயதை மனதில் கொண்டு உறவு சொல்லி அழைத்து அசத்துவார். அதனால் இவரிடம் நின்று பேசி விட்டுச் செல்வார்கள். (வீட்டு உரிமையாளர் கண்ணா யாரையும் பாட்டீன்னு சொல்லாதே மாமி இல்லைன்னா அத்தைன்னு சொல்லு...எதுக்கு வம்பு. )உடனே இவர் .நாயுடன் வரும் பெண்மணியை நாய் மாமீ என்பார். இன்றளவும் அந்த பெண்மணி உன் மகள் எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்காமல் இருப்பதில்லை....
மாமா, மாமி என்று அழகாக அழைத்து வந்த சிலர் இப்போது ......ஆன்டீ  அங்கிள் என்று அழைக்கிறார்கள்..... (நம்மை ஆண்டியாக்கிட்டாங்களே.... )
சமீபத்திய ஹெல்ப் மேட் எங்கள் குழந்தைகள்.தன்னை தன் பெயருடன் சேர்த்து அக்கா என்று அழைப்பதை விரும்புவார். (ஷியாமளா அக்கா) தற்சமயம் என் பேரனும் அக்கா என்று அழைக்க. எத்தனை வருஷம் என்னை அக்கான்னே கூப்பிடுவீங்க..... ஆயான்னு கூப்பிடு செல்லம் என்பார். இவரும் அன்பாக.ஆயா என்று அழைத்துப் பேசுவார்.
எப்போதும் நான் நினைத்து வியப்பது...... ஆண்கள் தாத்தா என்று கூப்பிடுவதை உடனே ஏற்றுக் கொள்வது போல பெண்கள் என்றும் ஏற்றுக் கொள்வதே இல்லை. ஏன்??????????? ஏன்???????? ஏன்??????????
பாட்டி என்பது அழகான உறவு முறை இல்லையா? அம்மா, அம்மம்மா, க்ரேண்ட்மா, டேடிம்மா, மம்மிம்மா ..ஒய் மா?
(பாட்டி பாட்டி, பப் பப், பா...., பட்டீ, பாப்பி பாப்பீ, பப் பப் பாப்பீ...... இதெல்லாம் கேட்கவே நிறைவா இல்லை?)
ஒரு முறை என் பேரன் கேசவ் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கியவுடன் அவரை வரவேற்க சென்ற எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உறவு முறையை பெயருடன் சேர்த்து அச்சு அத்தை, உசா பட்டீ, முரளி தாத்தா, கோவிந்தன் தாத்தா, சுப்பா பட்டீ, பாலா மாமா... என சொல்லி அசத்தினார். (உபயம் : ஸ்கைப் சாட்)
அமெரிக்க வாசத்தில் அனைவரும் உறவு முறை சொல்லி அம்மா, அப்பா, தாத்தா , பாட்டி என்றே அழைத்தார்கள்.
சில நாட்கள் முன்பு பூ விற்கும் பெண்மணியின் ஒரு வயது பேரன் அவர் இடுப்பிலிருந்தபடி என்னை பார்த்து "ஆயா" என்று அழைத்தார்....... அவர் 
ஆன்டீன்னு கூப்பிடு என்று சொல்லித் தந்தார்.... ஆயாவை ஆயான்னு கூப்பிடுவது தான் அழகு மாத்தி சொல்லித் தராதீங்க என்று சொன்னேன்.
சரி தானே நட்பூஸ்?
இன்றும் நான் பேசுவதைக் கேட்டு நீங்கள் கோவையை சேர்ந்தவர்களா என்று கேட்கிறார்கள்..... (உங்களுக்கு நான் சொல்லாமலே புரிஞ்சிருக்கும் என்னுடைய முக நூல் குறிப்புகளில் நிறைய அக்கா, அண்ணா தென்படும்.)

பின் குறிப்பு : உறவுகள் தொடர்கதை........... சில நாட்கள் முன்பு என் மகனிடம் நான் பல முறை அழைத்தும் நீங்கள் தொலை பேசவே இல்லையே ஏன் என்று கேட்டதற்கு , அம்மா அப்போது அனந்த் அண்ணா வந்திருந்தார் என்றார். உடன் யார் வந்திருந்தார்கள் ? சுபா அக்கா ..... 
(இதெல்லாம் ரத்ததுலயே வாரதுங்கோ, எங்க போனாலும் மாறாதுங்க்ணா.......)

Monday, 3 November 2014

How to conduct yourself to your parents ????

Orchestrate your life ..........

May God give us sense of ability to follow these guidelines.


1. Put away your phone in their presence.

2. Pay attention to what they   are saying.

3. Accept their opinions.

4. Engage in their  conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Avoid sharing bad news with  them.

9. Speak well of their friends  and loved ones to them.

10. Keep in remembrance the good things they did.

11. If they repeat a story, listen like it's the first time they  tell it.

12. Don't bring up painful memories from the past.

13. Avoid side conversations in  their presence.

14. Sit respectfully around  them.

15. Don't belittle/criticize their  opinions and thoughts.

16. Avoid cutting them off when they speak.

17. Respect their age.

18. Avoid hitting/disciplining  their grandchildren around  them.

19. Accept their advice and  direction.

20. Give them the power of  leadership when they are present.

21. Avoid raising your voice at them.

22. Avoid walking in front or ahead of them.

23. Avoid eating before them.

24. Avoid glaring at them.

25. Fill them with your appreciation even when  they don't think they  deserve it.

26. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

27. Don't speak ill of them to the point where others  speak ill of them too.

28. Keep them in your prayers always possible.

29. Avoid seeming bored or tired of them in their presence.

30. Avoid laughing at their  faults/mistakes.

31. Do a task before they ask  you to.

32. Continuously visit them.

33. Choose your words carefully when speaking with them.

34. Call them by names they like.

35. Make them your priority above anything.

Parents are treasure on this land. Appreciate your parents while you still can.
Today lets make loads of prayers for our beloved parents, alive or deceased.

May God ease the burdens of our beloved parents,        

God remove their burdens due to debt,

God ease their pain,         

God heal them from all the sicknesses they're suffering from,

God never make them dependent on anyone besides YOU until their last breath,

We should respect and honour our parents.

Never hurt them, part of the reason of all the troubles they're undergoing is due to us.

Their debts are due to fulfilling our needs,

Their poor health is due to their efforts in giving us the best,

Their every breath is a sacrifice made for their children...

God bless our parents with Happiness.

Make a promise that u would at least do one thing today which will make YOUR parents happy.


(Oh, God have mercy upon them as they have raised me from the cradle)

May God bless our parents with good health, wealth, prosperity and blessings.



May God bless our parents.

P.S : Content courtesy : Whatsapp Group friends 

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...