Saturday, 2 May 2015

வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா......[எம் ஜி ஆர் வீடு - 2]

 எம் ஜி ஆர் வீட்டில் எங்களின் வாழ்க்கை முறை அலாதியானது. காலை 6 மணிக்கு காவேரி விநாயகரின் கோவில் மணியோசையுடன் தொடங்கி இரவு 9க்கு அதே மணியோசையுடன் முடியும் . சித்திரை தொடங்கி பங்குனி வரை தினமும் ஒரு வைபவம் தான். நவராத்திரி 9 நாட்களும் கொலுவும் கலை நிகழ்ச்சிகளுமாக அமர்க்களப்படும். 



சதுர அடி ரூ 975/- அன்றைய விலையில். இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் ஒரு அறை நிரந்தரமாக மாமியார் வசம். வழக்கம் போல மீதி இடத்தில் எங்களின் வாசம் ஏப்ரல் 23, 2000 அன்று தொடங்கியது. என் கணவரது அலுவலக நண்பர்கள் பலரும் அருகருகே வசிக்கிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் என வந்து செல்வார்கள். 

குடியேறிய அன்று இரவு ஒரு திருடன் எங்கள் குடியிருப்பை தாண்டி பூங்காவில் குதித்து ஓட.. யாரோ பிடித்து போலீசில் ஒப்படைக்க.... விடிந்ததும் போர்க்கால அடிப்படையில் கதவு ஜன்னல்களுக்கு கிரில் கதவுகள் போட்டோம்.

பள்ளி முடிந்து வந்ததும் பிள்ளைகள் அனைவரும், காம்பௌண்டு சுவரை எட்டி குதித்து பூங்காவில் விளையாட சென்று விடுவார்கள் . என் மகள் 10 ஆம் வகுப்பு எனினும் அனைவரையும் ஒன்று சேர்ந்துக் கொண்டு விளையாடுவாள். வளையாடப் போய்ட்ட்ட்ட்ரம்மா.......இந்த மா ..முடிவதற்குள் ஆள் காணாமல் போயிருக்கும்.

தென்னாட்டை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாடி முடிந்த பிறகு அன்று இரவு லட்சுமி பூஜையுடன் ஆரம்பித்து முதல் தள நண்பர் வீட்டில் (வட நாட்டவர்) கொண்டாடுவர். அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது புடவை அணிந்து செல்வோம். அவர்களே நம் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு , அழகான குட்டிப் பானையில் பொரி சக்கரை மிட்டாய் மற்றும் வெற்றிலை பாக்கினை நம் முந்தானையில் வைப்பார்கள்.

பக்கத்து வீடு [G1] எங்களின் 30 வருட நண்பரது இல்லம். எங்கள் வீடுகளின் கதவுகள் விசேஷ நாட்களில் திறந்தே இருக்கும். இரண்டு வீட்டிற்குள்ளும் எல்லாரும் புழங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.[G1  பாட்டி, பின்னாடி கதவை திறந்தே வையுங்க அப்ப தான் நான் வந்து போக வசதியா இருக்கும் என்று பேரன் கேசவ் வரை அதே பழக்கம் தான்] 

யார் வீட்டுக் குழந்தைக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்பதும் தெரியும். இன்னிக்கு என்ன சாம்பார், ரவா தோசையா, புளி சாதமா என்று பிள்ளைகள் தாங்களாகவே தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வருவார்கள். [என் மகனும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் தவறாமல் சங்கடஹர சதுர்த்திக்கு கோவிலுக்கு செல்வார்கள். பக்தி இல்லை..புளிசாதம்]



மதியம் பக்கத்து வீட்டினர் உறங்கும் வேளையில் கிரிக்கெட், டார்ட் எனப்படும் அம்பு விடுதல் போன்ற விளையாட்டுக்களை தீவிரமாக பொது சுவரில் என் மகன் பயிற்சி செய்வார் டேய்..வேணாம்டா என கதற கதற. தாத்தா செல்லம்.எந்த நேரமும் தாத்தா செய்தித் தாள் வாசிப்பதை காணலாம் வாசலில் அமர்ந்தவாறு.

மகளின் தோழி காயத்ரி, மகனது தோழன் திவாகர் தினமும் வருவார்கள். இல்லையென்றால் மகன் திவாகர் வீட்டில் இருப்பான். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது. மிக அருகில் பள்ளி இருந்தது இருவருக்கும் மிக வசதியாக இருந்தது. கடைசி நிமிடம் வரை வீட்டை விட்டு ந...க..ர மாட்டார்கள். [அம்மா வழி அனுப்பவெல்லாம் வர வேண்டாம் பொதிகைல படத்தோட கிளைமாக்ஸ் என்னன்னு பாத்து வை, வந்து கேட்டுக்கறேன்_ மகள்] 

கலைவாணரின் பாட்டு ஒண்ணிலிருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் 21 லிருந்து 30 வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம் என்று விதம் விதமாய் பாட்டுப் பாடி கிண்டல் செய்வார்கள்.

ஒரு முறை ஹெபடைடிஸ் பீ எனப்படும் காமாலை நோய் வராமல் இருக்க இருவருக்கும் தடுப்பூசி ரூ 1800 கொடுத்து போட்டு வந்த அடுத்த நாளே இருவருக்கும் ஹெபடைடிஸ் பீ தாக்கியது. தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்ணும் போன கதை தான் இருவர் மன நிலையும். ஒரு வாரம் அவர்களை சமாளிக்க நான் பட்ட பாடு...  

ஒவ்வொரு வீட்டையும் அதன் எண்ணை வைத்துக் குறிப்பிடுவது வழக்கம். என் பிள்ளைகள் எனக்கு வைத்த செல்ல பெயர் G2 அம்மன். கைல வேப்பிலை தான் இல்லை அம்மா... (ரெண்டும் சரியான வாலுங்க) 

பாட்டு, கட்டுரை, பேச்சு, பகவத் கீதை, திருக்குறள் எனப் பல போட்டிகளில் பிள்ளைகள் பங்கு பெற்று பரிசுகள் பெற்றார்கள். போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்வோம். 

குடியிருப்பில் பொது சேவையும் அவ்வப்போது இடம் பெறும். 2 ஆம் தள பாட்டியாரை கோவிலுக்கு கைபிடித்து அழைத்து செல்லுதல், தெரு முனை வரை பைக்கில் அழைத்து செல்லுதல், பேருந்து நிலையத்தில் கொண்டு விடுதல், அலுவலகம் அழைத்து செல்லுதல் என யாரும் யாருக்கும் உதவுவார்கள். [S3 பாட்டியாருக்கு பாலாஜி -என் மகன் அமெரிக்கா போனது கை உடைஞ்சது போல இருக்காம்]

பூகம்பம், சுனாமி, பெரு வெள்ளம், கடும் வறட்சி என எல்லா நிகழ்வுகளையும் சமாளித்திருக்கிறோம். 

ஆசிரியப் பணியின் போதும் சொந்தமாக சென்டர் நடத்திய போதும் விரிவானது நட்பு வட்டம். யார் என்ன பாடம் சொல்லி தருகிறார்களோ அவர்களிடன் அனுப்பி வைப்போம், எந்த வித போட்டி பொறாமையும் இல்லாமல்.அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

தனிமை என்ற உணர்வே தோன்றாது. காலை, மாலை வேளைகளில் வாசலில் வந்து நின்றாலே போதும். நண்பர்கள், உறவினர்கள், பழைய மாணவர்கள், அவர்கள் பெற்றோர்கள், அண்டை அயலார் என 10 பேரையாவது காணலாம். பக்கத்தில் கடைகள், வங்கிகள், தபாலாபீஸ், பேருந்து நிலையம், உணவகங்கள், வடபழனி பஸ் நிலையம், தியேட்டர்கள், தற்சமயம் மால்கள் என வசதிக்கு குறைவில்லாதது எங்கள் எம் ஜி ஆர் வீடு. 

இன்று எம் ஜி ஆர் வீட்டுக் குழந்தைகள் அனைவரும் வளர்ந்து பள்ளி கல்லூரி வேலை திருமணம் குழந்தைகள் என இருக்கிறார்கள். நட்புடன். 

காலம் மாறிப் போச்சு....

பின் குறிப்பு : முதல் பதிவு எம் ஜி ஆர் வீட்டை சினிமாத் துறை எந்த அளவுக்கு இரண்டறக் கலந்திருக்கிறது இருக்கிறது என்பதாக மட்டும் இருந்தது. இந்தப் பதிவில் எங்களின் வாழ்க்கை முறை உள்ளது. ஆட்டோக்காரரிடன் கோவிலையோ பூங்காவையோ அடையாளம் சொல்வதை விட விஜய் வீட்டு தெரு என்றால் வேலை சுலபம். 


Saturday, 18 April 2015

எம்.ஜி.ஆர் வீடு


 சாலிகிராமத்தின் ஒரு பகுதியில் 1984 - 1999 வரை ஒரே வீட்டில் குடியிருந்த நாங்கள் சொந்த வீடு வாங்க எண்ணி அச்சமயம் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளத்திலுள்ள வீட்டை வாங்கினோம். பின்புறம் காவேரி விநாயகர் ஆலயம் , வீட்டை ஒட்டி பூங்கா என்று அமைந்த இடம்.பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் (17 ஈ உள்ளேயே சென்று நிற்கும்) என எங்கு செல்லவும் வசதியான பகுதி. [கோலிவுட்!!]


மங்களம்(M) கணேசன்(G) தம்பதிகளின் மகன்கள் பெயர் ராஜன்(R), ரமேஷ், ராமு மற்றும் ரவி . (எம் ஜி ஆர் எப்படி வந்தார் இங்கே என்று இப்போது புரிகிறதா?? இதில் திரு ராமு என்பவர் அப்போது புகழ்பெற்ற வெள்ளரிக்கா பாட்டுக்கு நடனம் ஆடிய ராம்ஜி.) சகோதரர்கள் 4 பேர், நாங்கள், எங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அனேகரும் பரிச்சயமானவர்களே. 2000 ஏப்ரல் மாதம் 22,23 தேதிகளில் அனைவரும் கிருகப்பிரவேசம் செய்து குடியேறினோம். குழந்தைகளுக்கு பூங்காவும் பெரியவர்களுக்கு கோவிலும் என மகிழ்ச்சியாய் கழிந்தன நாட்கள்.


சுற்றிலும் சினிமாத் துறை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. மிகப் பெரிய வித்தியாசம். 1/2 கிமீ தொலைவில் இருந்த புது வீடு ஒரு புதிய உலகம் போல தோன்றியது. பழைய வீட்டு பகுதியில் 3 தேங்காய் 10 ரூபாய் புது வீட்டுப் பகுதியில் ஒரு தேங்காய் 10 ரூபாய். காரணம் நடிகர் திரு விஜய் அவர்கள் எங்கள் தெருவில் குடியிருந்தது தான். கோவிலில் மூங்கில் தடுப்பு வைத்து கட்டி பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது போல இவர்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகள் ஜே ஜே என்று கூட்டமாக இருக்கும். தென் மாவட்டங்களிலுருந்து பேருந்துகளில் ரசிகர்கள் திரு விஜயை சந்தித்து, பிரியாணி பொட்டலம் பெற்றுக் கொண்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள். எங்கள் வீட்டு வாசல் வரை கூட்டமாக இருக்கும்.[ தற்சமயம் ரசிகர்களை சந்திக்கவென்றே புதிதாக வேறு பகுதியில் வீடு வாங்கி இருப்பதாகப் படித்தேன்].வருட ஆரம்பத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் நோட்டுக்கள் வழங்குவார். கூட்டமோ கூட்டம்.

அருகிலுள்ள கண்ணம்மாள் தெரு மிகப் பிரபலம். திரு விஜயகாந்த், திரு வடிவேலு, திருமதி தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வசிக்கும் தெரு. தற்சமயம் சண்டை ,கல்லடிகளுக்கு பெயர் பெற்றிருக்கும் இத்தெரு, முன்பு திரு விஜயகாந்த் அவர்களின் இலவச மருத்துவமனைக்கு பெயர் பெற்றது.

இடது புறம் 2 வீடுகள் தள்ளி ஷூட்டிங் வீடு என்று அழைக்கப்பட்ட பங்களா. எப்போதும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்.
எதிர்வீட்டில் நடன இயக்குனர் திரு பாலாஜி, இரண்டு வீடு தள்ளி திரு செந்தில், சற்று தள்ளி திரு விஜய், திரு கவுண்டமணி , முன் தெருவில் ரம்பா, பின் தெருவில் திரு பாலுமஹேந்திரா, திரு நாசர் , திரு ரியாஸ்கான் என எங்கும் எப்போதும் நட்சத்திர அணிவகுப்புத்தான்... நடைப் பயிற்சியின் போது சர்வ சகஜமாக பல பிரபலங்களைக் காண முடிந்தது. [என்னது...ரம்பாவை கோவிலில் பார்த்தியா..இரு நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்..] ஜிம் போகும் வழியில் திரு மயில் சாமி, ஜிம் உள்ளே திரு இளவரசன், திருமதி ஷமிதா..

வீட்டை ஒட்டி பூங்கா.. அங்கு அவ்வப்போது ஷூட்டிங், சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி என நடைபெறும். திரு பாலு மஹேந்திரா அவர்களின் கதை நேரம் சீரியலில் பல காட்சிகள் எங்கள் வீட்டு வாயிலில் எடுக்கப்பட்டவை.

திரு பாலுமஹேந்திரா அவர்களின் "வீடு" படப்பிடிப்பை தினமும் கண்டிருக்கிறேன்.[பணிக்கு செல்லும் வழியில்] . அந்த வீடு உருவானதை, அஸ்திவாரத்திலிருந்து கண்டிருக்கிறேன்.

இன்னார் இன்னாருடன் அதிகாலை 4 மணிக்கு நடைபயிற்சி செய்தார் என பத்திரிக்கை கிசுகிசுவெல்லாம் முன்னாடியே எங்களுக்குத் தெரியும்.

என்னுடைய டியூஷன் செண்டரில் படித்த பிரபலங்களின் பிள்ளைகள் நிறைய. பிரபல கிளரினட் கலைஞர் திரு ஏ கே சி நடராஜன் அவர்களின் பேத்திகளுக்கு சங்கீத பால பாடம் கற்றுத் தர சொல்லி அவர்களது தகப்பனார் (ஆனந்தபுரத்து வீடு இசையமைப்பாளர்) என்னை கேட்டது தனிக் கதை.[சில சின்ன பாடல்கள் கற்றுத் தந்தேன்]. அவரே 20 வருடங்கள் பல வகை இசையும் பயின்றவர். அவரது மனைவி டப்பிங் ஆர்டிஸ்ட். 
சினிமாவிலோ டீவீ சீரியலிலோ ஒரு நடிகரையோ டைரக்டரையோ காண நேர்ந்தார், அட ... இவரா(ளா ) என கேட்பது சர்வ சாதாரணம் அங்கே..

இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா.....

பின் குறிப்பு : எங்கள் எம் ஜி ஆர் வீடு கூட பல படத்துல நடிச்சிருக்குங்க...[காலம் மாறிப் போச்சு]

Wednesday, 18 March 2015

இது தாண்டா போலீஸ்!

2001-2003 க்குள் ஏதோ ஒரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி. அன்று எங்கள் பக்கத்து வீட்டு தம்பதியினரின் திருமண நாள். [அதனால் தேதி மறக்கவில்லை]12 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் தரைத் தளத்தில் எங்கள் இல்லங்கள். . 

காலை 6.30 மணியளவில் எங்கள் குடியிருப்பின் வீட்டு வேலைகளில் உதவுபவர் தன்னுடன் ஒரு 16 வயது மதிக்கத் தக்க இளம் பெண்ணை அழைத்து வந்தார். யார் என்னவென்று விசாரித்தோம். தாம் பேருந்திலிருந்து இறங்கி வருகையில் அந்தப் பெண் தெருவோரம் ஒரு டீக்கடை பக்கத்தில் நின்று அழுது கொண்டிருந்ததாகவும் பல ஆண்கள் அவரை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்தப் பெண்ணை காப்பாற்றும் விதமாக அழைத்து வந்ததாகவும் கூறினார். அப்படி நினைத்திருந்தால் மிக அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குத் தானே நீ போயிருக்க வேண்டும் எதற்கு எங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தாய் என்று கடிந்து கொண்டோம். காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் பிறகு நம்மால் அந்தப் பெண் என்ன ஆனார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது பாவம் பெண் பிள்ளை , அண்ணன்மார்களே அக்காமார்களே பார்த்து உதவுங்கள் என்று கூறிவிட்டு தம்முடைய வேலைகளைப் பார்க்க சென்று விட்டார். 

அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச்சுக் கொடுத்து அவரைப் பற்றிய விவரங்களை அறிந்தோம். 12 ஆம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் படிப்பவர். காவல் துறையில் சேர்ந்து பணி புரியும் ஆர்வம் உடையவர். பெற்றோர் மறுத்ததால் வீட்டை விட்டு வந்து விட்டார். ஆள் இல்லை என்றால் அந்தப் பெண் மீண்டும் எங்காவது சென்று விட்டால்? மாற்றி மாற்றி காவல் இருந்தோம். உணவு கொடுத்தோம். [நான் காமர்ஸ் டீச்சர் என்பதால் என்னை அந்தப் பெண்ணுக்கு அக்கௌண்டன்சி கற்று தர சொல்லி சிபாரிசு வேறு. [Partnership accounts - Sacrificing ratios & Gaining ratios கற்றுத் தந்தேன். சூட்டிகையான பெண்]

மீண்டும் பேச்சுக் கொடுத்து அறிவுரை கூறி அவரது வீட்டின் தொடர்பு விவரங்களை அறிய மதியம் ஆகிவிட்டது. உடனே குடியிருப்பில் உள்ள மற்றொரு நண்பர் அப்பெண்ணின் இல்லம் இருக்கும் ஊரான (பவானி) குமாரபாளையத்தை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாரை நேரில் வந்து அழைத்து செல்லுமாறு ஏற்பாடு செய்தார். ஈரோடு அருகிலிருந்து அவர்கள் வந்து அழைத்து செல்ல நள்ளிரவாகி விட்டது. அவர்கள் இல்லத்தை தொடர்பு கொண்ட நண்பரே அவரது பெற்றோர் வரும் வரை தன்னுடைய வீட்டில் வைத்திருந்து ஒப்படைத்தார். 

வீட்டை விட்டு வெளியில் வருவது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது படிக்காத எங்கள் வீட்டு உதவியாளருக்குத் தெரிந்த அளவு கூட படித்த அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை.சேலையில் முள் கிழித்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத் தான்.  தம்முடைய நோக்கம் நிறைவேற பெற்றோர்களிடன் எடுத்து சொல்லி ஜெயிக்க வேண்டுமே தவிர , வீட்டை விட்டு வரக் கூடாது. பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தபடி தான் நம்முடைய லட்சியங்களை அடைய போராட வேண்டும்.வீட்டில் இருக்கும் நம்முடைய பெற்றோர் உடன் பிறந்தாரையே வெல்ல முடியாதவர்கள் உலகை எப்படி வெல்ல முடியும்?? நல்ல உள்ளங்கள் உதவியதால் பத்திரமாக வீடு போனார் இல்லை என்றால்??? பாலியல் வன் கொடுமைகள் எக்காலத்திலும் உண்டு. இக்காலத்தில் பெண்கள் வெளி உலகுக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள் என்பது பெரிய முன்னேற்றம். 

பெற்றோர்களே !பிள்ளைகள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் ஆசைகள் கோரிக்கைகள் நியாயமாக இருப்பின் அவை நிறைவேற உதவுங்கள். உங்கள் கருத்துக்கள் ஆசைகளைப் பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள். பிள்ளைகளை கடுமையாகக் கண்காணிக்காதீர்கள். இதுவே பல தவறுகளுக்கும் காரணமாகிறது. இளம் பிள்ளைகள் பெற்றோரின் அக்கறையைத் தவறாகப் புரிந்து கொண்டு , எதிர்பாலர் யாரேனும் நட்புடன் பழகினால் அதை காதல் என்ற பெயரில் நினைத்து வழி தவறுவதும் நடக்கிறது. பொறுப்புகளைப் புரிய வைத்து, சுதந்திரம் கொடுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகள். வழி நடத்தி செல்லுங்கள்.

பிள்ளைகளே,  பெற்றோர்கள் உங்கள் எதிரிகள் அல்லர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


Wednesday, 4 March 2015

Muffler Man !!

(1) 
Walks in the streets our cheerful man
For whom I'm a greatest fan
As  weather gets hotter
Can he fly as  feather
World still doubts with his muffler on !!

(2)
Here comes the man of power
Swears to wear a  muffler
Weather gets hot
Will he trade for hat
Still a question worth million dollar !!

Tuesday, 3 March 2015

MY LIMERICKS ....

(1) My Maiden

My maiden limerick here to the sweety
Nature’s bushes thickets around the lady
Water in the lake shines so blue
As the sun seems to bid adieu 
Awaits for her lens man to do his duty!!

(2)Up in the sky I live 

Rainbow  lightning   big  rain drops , 
Seen in the sky above the clouds
Cats and dogs  ‘twas  pouring down
Heard in water people drown
Nothing was known,  as I live in Flats!!

(3)Feeling Poetic

Read few Satires Sonnet   and Epic
Deep in mind I felt poetic
Tried  to write with perception
Nothing  came out in conception
Out and out the result was  pathetic!!

(4)காத்திருக்கிறார் நம் கண்மணி

மரமும் செடியும் சூழ அமர்ந்த என் தங்கையே
இடையில் கதிரவனும் ஆற்றுகிறான் தன் பங்கையே
பாறையும் குளமும் ஒட்டி உறவாட
அக்கம் பக்கம் யாரை உன் கண்கள் தேட
பொறுத்திரு அவர் உனை விட்டு செல்லார் மங்கையே..

P.S : 

For further reference about Limericks : 
http://en.wikipedia.org/wiki/Limerick_%28poetry%29

Wednesday, 25 February 2015

என்னம்மா... இப்பிடி பண்றீங்களேம்மா????

சிறு வயது முதலே வீட்டிற்கு யார் வந்தாலும் , முதலில் பார்ப்பவர்கள் வரவேற்று , அமர சொல்லி, தண்ணீர் தந்து உபசரித்து விட்டு பின்பே பேச ஆரம்பிக்க வேண்டும் என்பதே நமக்கு சொல்லித் தரப்பட்ட நல்ல பழக்கம். 

அதன் தொடர்பான என் சில பல அனுபவங்கள் இங்கே இதோ ::

இது ஒரு வகை :

(1)சமீபத்தில் ஒரு உறவினர் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அனைவரின் நலம் விசாரித்து முடித்து (அவர்களது மகளுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்)  எங்களின் பேச்சு கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் நீடித்து ஒரு வழியாக கிளம்பும் சமயம், உங்கள் மகள் தோழிகளுடன் படிக்க சென்றிருக்கிறார்களா என்று கேட்ட போது , இல்லை வீட்டில் தான் இருக்கிறாள் என்றார்கள். (முதல் அதிர்ச்சி) கேட்ட பின்பும் அவரது தாயார் தம்முடைய மகளை பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியில் வரச் சொல்லவில்லை.

(2)மற்றொரு உறவினர் வீடு. பல மாதங்கள் முன்பு. அவரது மகன் (உயர்படிப்பு படித்து முடித்து அமெரிக்காவில் வேலை செய்பவர்) வந்திருப்பதாகக் கூறி பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்ததால், என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த மகனாரோ தம்முடைய கைபேசியை தடவுவதை நிறுத்தவும் இல்லை(டச் போன்) தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. அவரது தாயாரும் மகனிடம் எதுவும் சொல்லவில்லை.


(3)ஒரு இளம்பெண், தம்முடைய (இது அமெரிக்க அனுபவம்) ஒரு வயது மகளுக்கு தன்னுடைய பெற்றோருடன் தினமும் பல மணி நேரங்கள் பேச வைப்பார். தம்முடைய கணவரது பெற்றோருடன் அவர்களுக்கு கணினியை இயக்கத்  தெரியாமல் இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் மகளை பேச வைக்கலாம். ம்ஹூம்... அப்படி உறவினர்கள் இருப்பது போன்ற பேச்சையே எடுக்க மாட்டார் மகளிடம்.
(4)பல வருடங்கள் முன்பு உறவினரது 4 வயது குட்டிப் பையன் அத்தை நாங்க நேத்து எங்க ..... தாத்தாவையும் பாட்டியையும் தனிக்குடித்தனம் 
வைச்சிட்டு வந்தோம் என்றார். இவர்கள் அந்த குடும்பத் தலைவரது பெற்றோர். 

இது வேறு வகை :

(1)தோழியின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அவரது மகள் சற்று முன்பு தான் தோழியின் இல்லம் சென்று திரும்பி இருப்பதாகக் கூறினார். 5 நிமிடங்கள் ஆனதும் தோழி தம்முடைய கணவரிடம் மகள் இன்னும் ஏன் வெளியில் வரவில்லை, அழைத்து வாருங்கள் என்று மகளை வரவழைத்து பேச வைத்தார். (அதிகம் இல்லை நலம் நலமறிய ஆவல் தான்)

(2) 4 வயது ஹர்ஷா (சகோதரர் மகன் ) வாங்கத்தே உக்காருங்கத்தே தண்ணி குடிக்கறீங்களா அத்தே கிளம்பிட்டீங்களா அத்தே அப்ப போயிட்டு வாங்க அத்தே என்று கற்ற வித்தை முழுவதையும் ஒரு சேர அவிழ்த்து விட்டார் ஒரு முறை (தற்சமயம் 9 வயது)
எங்களின் வளர்ந்த பிள்ளைகள் சொல்வது "சின்ன வயசுல கட்டாயப் படுத்தி வெளில வர சொல்வீங்க அப்ப கோவமா வரும், ஆனால் இப்ப தான் அது 
எத்தனை நல்ல பழக்கம்னு புரியுது"

வீட்டிற்கு வருபவர்களை சந்திக்கும் சில நிமிடங்களை  மூலதனமாகக் நினையுங்கள். எல்லா உறவுகளையும் , நட்புகளையும் அறிமுகப் படுத்துங்கள். சிறு பிள்ளைகள் பதின்ம வயதில் யாருடனும் பழக விரும்புவதில்லை. சொல்லி புரிய வையுங்கள். அந்த வயதில் நான் ஏற்படுத்தும் இந்தப் பழக்கம் அவர்களின் பிற்காலத்தில் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.  பிள்ளைகள் வர மாட்டார்கள் என்று பெரியவர்களே தங்கள் வசதிக்கு சொல்லிக் கொள்வதே அதிகம்..  
  
நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து , வீட்டிற்கு ஒரிரு பிள்ளைகள் என்றாகி விட்ட இந்தக் கால கட்டத்தில் , பெற்றோரின் முக்கிய கடமை சொத்து சேர்ப்பது மட்டுமில்லை, பிள்ளைகளுக்கு உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தருவது தான். 
   
இது அம்மாக்களுக்கு மட்டும் இல்லை ... அப்பாக்களுக்கும் தான்...


Thursday, 29 January 2015

அந்திக்கு முந்து....

ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாட வேளை....... வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியை திருமதி சிவகாமி அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்வி:  உயிரினங்கள் ஆக்சிஜனை உள் வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் தீராமல் இருப்பது எப்படி?
வழக்கம் போல் எங்கள் பதில்..... பே..பேபே...... 
மறு நாள் வகுப்பில் எங்கள் வகுப்பு மாணவி மீனா (எ) வேணி அவரது தாயாரிடம் (நம்ம டீச்சர்தான் அவங்க அம்மா) கேட்டு வந்து வகுப்பில் சொன்ன பதில் : தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. இது ஒரு சுழற்சி போல பயன்படுத்தப் படுகிறது.

வணக்கம் ....... வெட்னெஸ்டே சமையலில் நாம் கற்கப் போவது தாவரங்களின் சமையல் முறை பற்றியது
இதற்குப் பெயர்  போடோசிந்தசிஸ் .....
தேவையான பொருட்கள் :  வேரிலிருந்து உறியப்படும் நீர், கர்பன் டை ஆக்சைடு மற்றும் பச்சையம் (கர்ட் ரைஸ் வித் பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ் மா....திரி) 
சூரிய ஒளியை வைத்து மேற்படி உணவினை தாவரங்கள் தயாரித்து இலைகளில் சேமித்து வைக்கும்.....
(முக்கியக் குறிப்பு :இரவு நேரத்தில் சூரிய ஒளி இல்லாததால் தாவரங்களின் சமையலறை மூடப்படும்.)

அதிகப்படியான நீரை நாம் எல்லாருமே இலைகளின் மேல் பார்த்திருப்போம். அது சூரிய ஒளியில் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாக மாறி பூமிக்கு வந்து சேர்கிறது. மீண்டும் தாவரங்கள் அந்த தண்ணீரை உறிஞ்சி , உணவாக்கி, ஆவியாகி, மேகமாகி, மழையாகி, .....  இது முடிவில்லாத ஒரு வட்டம். (இதையே மழை சுழற்சி என்பார்கள்)

மழைக்குத் தேவை மரங்கள்..... மரங்களைக் காக்க நம்மால் ஆன சிறு செயல்கள் .... 
(1)சிறு பிள்ளைகளுக்கு காகிதங்களை வீணாக்கக் கூடாது என்பதை சொல்லித் தர வேண்டும். 
(2)மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.(மறு சுழற்சி முறையில் காகிதங்கள் பயன்படுத்தப்படும்)

[என் மகன் பள்ளி சேர்ந்த புதிதில் அன்று எழுதிய காகிதம் மறு நாள் நோட்டில் இருக்காது. எங்கே என்று நான் கேட்டதற்கு அவரது பதில்....... அதான் எழுதியாச்சே....... நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது புது நோட்டா எடுத்துட்டு போக வேண்டாமா? அதான் இன்னைக்கு எழுதின பக்கத்தை கிழிச்சுட்டேன்.]

ஆங்....... சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன்.......

மாலை வேளைகளில் நடைப் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் அந்தி சாயும் முன்பே நடைப் பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும் ........ (அந்தி - சூரியன் மறையும் நேரம்) இரவில் திறந்த வெளியில் தூங்குவதும் நல்லதல்ல...... குறிப்பாக மரங்கள் அடர்ந்த பகுதியில் மேற்கண்டவைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்....அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை தாவரங்கள் இரவு நேரங்களில் வெளியேற்றும்....


பின் குறிப்பு : புரியாத புலவர்களுக்காக :
During the day, plants photosynthesise more than they respire so more carbon dioxide is used up than produced.  During photosynthesis energy from the sun changed into energy stored as sugar and oxygen is produced as water is broken down.  This is why we think of plants as producing oxygen and using carbon dioxide.  At night however, photosynthesis can’t happen (because it’s dark!) and plants make carbon dioxide as they consume oxygen during cellular respiration. 


Sunday, 18 January 2015

STEP MOM


It was a regular practice during our higher secondary school (1981-1983) days to screen a movie in the small auditorium once in a fortnight or two , to the hostellers @ Avinasilingam Home Science College campus.(Coimbatore , Tamil Nadu, South India)

One such movie we  watched  during a week end was  “Chiththi” which in one context means “Step mom” in Tamil. It was a Sunday.

The story line is about the heroine (Padmini) with many siblings from a poor family who loves a lad, due to family circumstances , happens to get married to a rich  old man (M.R.Radha) with 7 or 8 kids (Don’t remember exactly) and becomes their step mom. The eldest of her step kid is a teenage daughter and the last one is an year old baby girl. (The lullaby ...kalamithu kaalamithu kannurangu magale kalamithai thavara vittal thookkamillai magale lingers in my ears..)

How her  eldest step daughter and her eldest brother(Muthuraman) get in love and into wedlock forms the rest of the plot.

There is this  duet by the lovers (santhippoma inru santhippoma..thanimaiyil nammai patri sinthippoma) is a good number and the words are easy to remember and the picturisation too..(through phone they fix their meeting , go there biking and meet in a park..)

I remember all the hostellers enjoyed singing that song with their own lyrics according to the situation.

We discussed in depth , about each and every dialogue, song , situation , acting etc with our classmates  the next day , the first thing in the morning of Monday, which pretty much tempted  them to plead through the School Pupil Leader to our Warden cum Head mistress to screen the movie to the whole school again.

We enjoyed immensely (the second time too ) with our classmates sitting in the front rows.. cooing… shouting… singing….mocking the dialogues.. teasing every possible person around right from the projection crew.. missing our classes… It was Tuesday.

Six (6) of us were a group of friends (common factors …well disciplined, studious, early risers & presentably dressed round the clock and cheerful and of course as you guess mischievous???)

Three (3) of us stayed in room no 40 and the others in 42. All of us had our code numbers 1 to 6 . Representative (Malliga) from Room no 42 ,would trespass(??!!)  Room no 41 , from where through the wooden cupboard,  would start singing 42 her code no followed by 40, something like 42140 ( five digit telephone numbers were used then)….

As response, our representative (who else can it be???) would  sing 40 our code no 42…
42 girl would sing about the situation…santhippoma mess la santhippoma…(shall we meet in the mess, yeah it’s time for food)]

Realised while watching the movie recently that the pleasantries of the movie still holds good … and I remember most of the lyrics of the song santhippoma till date…
Though we watched many movies, “Chiththi” is close to my heart till date........

P.S: A recent article read in a Tamil magazine about the great tamil Novelist of good old times MRS.VAI.MU.KOTHAI NAYAKI AMMAL , whose novel was picturised as a movie  and was a roaring success in the box office , ploughed  me down the memory lane of watching the tamil movie “CHITHTHI” (yeah, that’s it)



Wednesday, 7 January 2015

It’s a jungle out there.......Mr.Monk Mr.Monk....

See.....who is watching Monk !!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதில் விருப்பம் காட்டாத எனக்கு , அமெரிக்க வாசத்தில் புத்தகங்கள் , குட்டீஸ் தவிர்த்து வேறு பொழுது போக்கு இல்லாததால், அதையும் பார்க்க ஆரம்பித்தேன். நெட் ஃப்லிக்ஸ்  (Net Flix )மூலம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப் பட்ட நிகழ்ச்சிகளைக், குறிப்பாக ஹிந்தி , தமிழ் படங்களைக் காண ஆரம்பித்தேன். அவ்வப்போது மகளும் (குட்டிப்பையன் பாலர் பள்ளி செல்லும் தினங்களில் மட்டும்)
அடுத்த கட்டம், ஆங்கிலப்படங்கள். நான் பார்த்த படங்களைப் பற்றி மகள் கணவரிடம் சொல்லி இருப்பார் போல. மிஸ்டர் மாங்க் பாருங்கள் என்று சிபாரிசு செய்தார். (பார்த்ததும் பிடிக்கலை.... பார்க்கப் பார்க்கத் தான் பிடித்தது.) அதே சமயத்தில் மருமகன் ஆப்பிள் டீவீ சாதனம் ஒன்றை வாங்கி தொலைக்காட்சிப் பெட்டியுடன் பொருத்தித் தந்தார்.(ஆங்கில வசனங்களுக்கே சப் டைட்டில் போல வரும்)
ஆரம்பித்தது எங்கள் மாங்க் மராத்தான்
நான் , மகள், மருமகன் கணினி, ஐபோன்,டீவி என மாறி மாறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் , அவரவர் தனித்தனியாக ,விடாமல் பார்த்தோம். (மொத்தம் 125 எபிசோடுகள் 8 சீசன்கள்) ஒரே மாதத்திற்குள்... (ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் மற்றவர்கள் பார்க்கும்போதும்....)
தினமும் நாங்கள் பார்த்த கதைகள் பற்றிய விமர்சனங்களும் உண்டு.....
சான் பிரான்சிஸ்கோ காவல் துறையின் சிறந்த துப்பறியும் நிபுணர் மிஸ்டர் மாங்க் தன்னுடைய மனைவி ட்ரூடி ஒரு கார் வெடிகுண்டில் இறந்த பிறகு, மிகுந்த மன நல பதிப்புக்கு உள்ளாகிறார். காவல் துறையிலிருந்து வெளியேற்றப் பட்டு மன நல சிகிச்சை பெறுகிறார். சற்றே குணமடைந்ததும் மீண்டும் காவல் துறை இவரை ஃப்ரீலான்ஸ் முறையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.பல வழக்குகளை தீர்க்கிறார் தன் மனைவியின் கொலையைத் தவிர. (கடைசி எபிசோடு எதுக்கு இருக்கு?)
இவருக்கு செவிலியாகப் பணிபுரியும் ஷரோனா மற்றும் சில வருடங்கள் கழித்து உதவியாளராக வரும் நடாலி, காவல் துறைத் தலைவர் ஸ்டாடில்மெயர், அவரது உதவியாளர் ரேண்டி என ஒரு கட்டத்தில் அனைவரும் எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் உணர ஆரம்பித்தோம்.
மிஸ்டர் மாங்க் எப்போதும் எல்லாவற்றையும் சுத்தப் படுத்திக் கொண்டே இருப்பார். லைசால் போட்டு துடைத்தல், கிருமிகளைப் பற்றிய பயம் காரணமாக கையை துடைத்துக் கொண்டே இருத்தல் (தெனாலி கமல் போல எல்லாத்துக்கும் பயம்) , எதையும் ஒழுங்காக வைத்தல், எல்லாவற்றையும்  இரட்டைப்படையாக வைத்தல், சதுரங்களில் மேலான ஈர்ப்பு என ..... அவரது கதாபாத்திரம் விரியும்.(Obsessive Compulsive Personality Disorder)
கொலைக் கதையாயினும் எங்கும் ரத்தம் துப்பாக்கி கிடையாது.......
பட்டீ....... மிஸ்டர் மாங்க் பாக்கறீங்களா ? _ மிகச் சரியாக கிளைமாக்ஸ் சமயத்தில் . டைட்டில் பாட்டிற்க்கு நடனம் ஆடுவார்.
 (அவருக்கு ஒரு நாளுக்கு 1/2 மணி மட்டுமே)
ஒரு நாள் பீட்ரூட் காயை ஒரே சதுரமாக வெட்டி (எப்பவும் அப்படித்தான்) சமைத்துக் கொடுத்து விட்ட அன்று மருமகன் மகளிடன் அம்மா மாங்க் மாதிரி இன்னைக்கு காயை நறுக்கி இருந்தார் என்று ஒரே கிண்டல்.
சில கதைகள் உணர்வுபூர்வமாக இருக்கும் . மாங்க் அண்ட் தி கிட்..... பட்டீ இந்த கதை சொல்லுங்க என்று பல முறை கேட்டார்.....
2002ல் ஒளிபரப்பாகி , மறு ஒளிபரப்பு, மறு மறு ஒளிபரப்பு என்று அமெரிக்க தொலைக்காட்சிகளில் சக்கை போடு போடுகிறார் மிஸ்டர் மாங்க்.....
நடாலியாக நடித்த டெய்லர் க்ரோவர்டை இந்தியா வந்த சில நாட்களில் ஒரு திரைப்படத்தில் பார்த்தபோது நமது உறவினரைப் பார்த்த மகிழ்ச்சி .....
மாங்க் , ட்ரூடி ஆகியோரையும் திரையில் பார்க்கும் போது இன்றளவும் மனதிற்கு நெருக்கமான அதே உணர்வு...........
அனைத்து எபிசோடுகளும் மாங்க் என்ற பெயருடனேயே அமைந்திருப்பது இதன் சிறப்பு (ஒன்றோ இரண்டோ தவிர)

Here is what happened ….



Saturday, 6 December 2014

பொத்தூஊ..........

Son in girl attire sporting Pottu & pink ribbon
சிறு வயதில் நெற்றியில் வைக்கும் இந்த பொட்டை வட்ட வடிவில் இல்லாமல்  திலகமாக நீள வாக்கில் மட்டுமே வைத்து விடுவார் என் தாயார். 

அதற்கடுத்த கட்டமாக அச்சுக்களை ((பல வித வடிவங்களில் ஒரு வளையத்தில் கோர்த்து செய்திருப்பார்கள்)  கண் மையில் தோய்த்து நட்சத்திரம், பூ, காய், நாய், பேய்ன்னு வித விதமாய் வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் முகப்பவுடரை ஒத்தி விடுவார்கள். ஒரு வித கறுப்பு வெள்ளை கலவையாக அலைவோம்.

Raghav & Keshav Sporting Pottu
6,7 வயதுக் காலத்தில் திருமணமாகி மும்பை சென்ற என் சித்தி திரும்பி வருகையில் பச்சை நிற பிளாஸ்டிக் பொட்டு, குட்டை முந்தானை வைத்து உடுத்திய சேலை,பப்பின்ஸ் ஸ்டைல் தலை அலங்காரம்(அதாங்க மண்டைல கொண்டை வெச்சு தூக்கி வாரிக்கறாங்களே ... இன்றைய நயன்தாரா போல , அந்த கால ஷர்மிளா டாகூர் போல )  என  வந்தார். கருப்பு சிவப்பில் மட்டுமே பொட்டு இருக்கும் என்று நினைத்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம். விதம் விதமான நிறங்களில் மேட்சி மேட்சியாக அலங்கரித்துக் கொள்வார். முன் தினம் பார்த்தே......னே  பாட்டில் வரும் சிம்ரன் போல பொட்டை நடு நெற்றியில் வைத்துக் கொள்வார். ( எல்லாப் பெண்களும் அப்படித்தான், ட்விஸ்ட் நடனம் ஆடாதது தான் குறை)


நான் ஐந்தாம் வகுப்பு வந்தவுடன் , பல நிறங்களில் சாந்து பொட்டுக்கள் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். தோழிகளுக்குள் 16, 18 என யார் அதிக நிறங்களில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு போட்டியே நடக்கும்.(வட்டமாக எல்லா குப்பிகளும் அடுக்கி வைக்கப்பட்டு மேலே மூடி போட்டு இருக்கும்) 

அதில் என்ன கொடுமை என்றால் யார் மிகச் சிறிய பொட்டு வைத்துக் கொள்கிறார்கள் என்பதில் ஒரு போட்டி. நான் குண்டூசியை திருப்பி அதன் முனையில் சாந்தைத் தோய்த்து வைத்துக் கொள்வேன். (என் தாத்தா- பொட்டு கண்ணுக்கே தெரியலையே ...... நல்ல்ல்ல்லா பாருங்க... ஆமாம் இருக்கு அதென்ன ஈயோட  பீ அளவுல இருக்கு...கொஞ்சம் பெரியதா வெச்சா என்னம்மா..... உங்களுக்கு ஒண்ணும் தெரியாது தாத்தா  இது தான் ஃபேஷன்.... ஹைய்யோ ஹைய்யோ _தாத்தா) மஞ்சள், காப்பர் சல்பேட் நீலம், அடர் பச்சை என் அபிமான நிறங்கள்.(இந்த நிறங்களுக்கு தனி ஹைய்யோ..)

 Friends Meena to my right & Santhana Lakshmi to the left

அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒரு புகைப்படம் இது.... நான் அதில் பொட்டு வைத்திருக்கிறேனா இல்லையா என்பதை மிகச் சரியாகக் கண்டு பிடித்துச்  சொல்பவர்களுக்கு ஆலய மணி படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் பயன்படுத்திய சோப்பு டப்பா இலவசம்............

பல வருடங்கள் , மகள் பிறக்கும் வரை சாந்துப் பொட்டுக்கள் தான். அதை நாங்கள் பயன்படுத்தியதை விட கை தவறி (??!) கீழே கொட்டியது தான் அதிகம். இவைகள் விரல் உயர குப்பிகள், ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி குப்பி.


 இரு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலே உள்ள இடமே பொட்டு என்றும், நெற்றிப் பொட்டில் வைக்கும் சின்னமே பொட்டு என்பதும்,  அந்த இடம் நம் மனத்துடன் சம்பந்தப் பட்டது என்றும், யாரேனும் உற்றுப் பார்த்தால் நம் மனத்தை தம் வயப்படுத்த முடியும் என்றும் புரிந்த பிறகு சற்றே பெரிய பொட்டுக்கு மாறினேன். (இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட செய்தி)


மகன் சிறுவயதில் அம்மா எனக்கு "பொத்தூஊ" வேணும் என்று அடம் பிடித்து "பப்பௌ" போட்டு "பொத்தூஊ" வைத்துக் கொள்வார்.அம்மா பாவம்மா குழந்தை கேட்குது வெச்சு விட்டுடு_ என் மகள்.(என் மகளால் குழந்தை எனக் குறிப்பிடப்படும் என் மகன் சமீப காலங்களில் ..............
அக்காவை விட்டு விட்டு எனக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லும் போது நாயாகவும் , நான் தம்பியை கடைக்கு அனுப்பி உனக்கு தேவையானதை வாங்கி வர சொல்லு என்றால் குழந்தையாகவும் மாறுவார்)

பிறகு வந்தது வித வித நிறங்களில் , அளவுகளில் பிசின் வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள். பல நிறங்களில் ஆரம்பித்து கடந்த வருடம் வரை கருப்பு, சிவப்பு, கருப்பில் சிவப்பு, சிவப்பில் கருப்பு வட்டம் , நீட்டு பொட்டு என விதம் விதமாக என்னுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் மூடுக்கு ஏற்ற வகையில் மற்றி மாற்றி வைத்துக் கொள்வேன்.(மிக்ஸ் & மேட்ச் வகை ??)

Younger Grandson Raghav
என் தந்தையின் கருத்தில், மாமியாருக்கும் மருமகளுக்கும் கருத்து வேற்றுமை வர முக்கியக் காரணம் இந்த பொட்டுதான். மருமகள் வட்டப் பொட்டு வெச்சுகிட்ட நீளப் பொட்டு வெச்சுக்கோன்றது நீளமா வெச்சுகிட்ட வட்டமா வெச்சுக்கோன்றது... அவரவராக எதற்காக பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து செய்து கொள்வதே சிறப்பு...... மற்றவர்கள் சொல்வது சரியாக இராது என்பார்.

கடந்த அமெரிக்க பயணத்தின் போது பல அட்டைகள் மகளுக்காக வாங்கிச் சென்றதில் அளவு சரியில்லை என்று திருப்பி விட்டார். திரும்ப வந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மறுத்து அலற அலற பல அட்டைகளை தானம் செய்த பின்பும் , அன்று முதல் நேற்று வரை ஒரே அளவிலான கருப்பு நிற வட்ட வடிவப் பொட்டு தான்... அலுக்க சலிக்க..........(தயவு செய்து சிவப்பு நிறப் பொட்டு வெச்சுக்கோயேன் _ என் அத்தை மகள்)

நேற்று போல் இன்று இல்லை.......... சிவப்பு திலகம் என் நெற்றியில்.......
இன்று போல் நாளை இல்லை...... சிவப்பு நிறத்தில் கறுப்பு வட்டப் பொட்டு....

பின் குறிப்பு : பொட்டு வட்ட வடிவமாக இருப்பது சிறப்பு. எப்படி நகர்ந்தாலும் அதே வடிவம் தான்.
இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான சக்கரம் என்ன வடிவம் சொல்லுங்க பாக்கலாம்?
வீதியோர சாக்கடைகளின் மூடி வட்டமா சதுரமா? பார்த்திருக்கீங்களா? (சதுர மூடி குறுக்காக வைத்தால் சாக்கடையின் உள்ளேயே விழுந்து விடும்)



Monday, 1 December 2014

ஜோடிப் பொருத்தம் (रब ने बना दी जोड़ी)

வேலைக்கு செல்லும் தாயான என்னால் மகளது பிரசவ தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் விடுப்பு கிடைத்து சான் ஹொசே நகரம் செல்ல முடிந்தது.

அக்டோபர் 17, 2013.... இனிய காலை பொழுது ... (அங்கே சூரிய பகவான் லேசாக எட்டிப் பார்த்தாலே இனிய காலைன்னு சொல்வாங்க...எல்லா நாளும் எல்லா நேரமும் பிரிட்ஜுக்குள்ளே இருக்கற மாதிரியே இருந்தது நான் இருந்த 6 மாதங்களும்)

அது நாள் வரை மகளுக்கு சமைத்துத் தராததை ஈடு கட்டும் விதமாக அவளுக்குப் பிடித்த உணவை நண்பகலில் சூடாக சமைத்துத் தருவதாக சொல்லி இருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் பொழுதை போக்குவது எப்படி? (4.30 ~ 11.00 தினமும் பரபரப்பாக இருந்தவள் நான்..)


அங்கே உள்ள நெட் ஃப்லிக்ஸில்" ரப் நே பனா தி ஜோடி" படம் பார்க்க சொன்னார் மகள். நான், என் கணவர் , மூத்த பேரன் மூவரும் மிக சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு காட்சியில் பஞ்சாப் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் கதா நாயகன் , கதா நாயகிக்கு தன் காதலை உணர்த்த எண்ணி ஒரு மலை மேலே அழைத்துச் செல்வார். அங்கிருந்த படி ஊருக்குள் பார்க்க சொல்வார். அப்போது ஊரிலுள்ள மொத்த விளக்குகளும் அணைந்து விடும். அந்தக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதே கணம் எங்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலும் விளக்குகள் அணைந்து விட்டது. காரிருள் சூழ்ந்தது ??!

நான் மகளிடம் திரைப்படத்தில் தான் மின் தடை.... இங்கே தொலைக்காட்சி திரையும் இருட்டாகி விட்டதே என்று கேட்க , அவள்...அம்மா நம் வீட்டிலும் மின்  தடை என்றாள்.(அமெரிக்காவுல கரண்டே போகாதுன்னுல்ல சொல்வாங்க??)

அப்போது நேரம் 11.30 ... மின் அடுப்பில் மதிய உணவு எப்படி சமைப்பது?? வேறு வகை அடுப்பும் கிடையாது......

சற்று தொலைவில் வசித்து வந்த மகளது தோழிக்கு தொலை பேசி , அவரை எங்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயாரிக்க சொல்லி விட்டு, பொடி நடையாய் அவரது இல்லம் சென்று உண்டு முடித்தோம். (மகளால் அச்சமயம் கார் ஓட்ட முடியாத நிலை)

வரும் போது அவரது தோழி எங்களை காரில் அழைத்து வந்து விட்டு சென்றார். 

வீட்டை ஒட்டி பிரதான சாலை, மின் தொடர் வண்டி நிலையம் , ரயில், கார் இரண்டுக்கும் பொதுவான சிக்னல் ..ரயில் மட்டும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க சில மைல்களுக்கு சாலைகளில் சிக்னல் இல்லை... (மகளது தோழியிடம் , பார்த்து பத்திரமா வீட்டுக்கு போம்மா.போயிட்டு போன் பண்ணும்மா.....)

சில மணி நேரங்கள் கழித்து மின்சாரம் வந்த பிறகு .. விட்ட இடத்திலிருந்து படத்தை பார்த்து முடித்தோம். முதல் நாள் வரை சிங்கார சென்னையில் தினசரி 2 மணி நேர மின் தடையை அனுபவித்ததால் எனக்கு சிரமமாக தெரியவில்லை...... சமைக்க முடியவில்லை என்பது தவிர....

என் கணவர் முக நூலில் போட்ட ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா??:
"ஒரு ஆள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் போது மின் தடையையும் சேர்த்தே கொண்டு வந்து விட்டார்"





Saturday, 22 November 2014

அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

நான் பயணிக்கும் ஆட்டோக்கள் மற்றும் கார்களின் ஓட்டுனர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களது அனுபவங்களைக் கேட்பது என் பல வருட வழக்கம்.

அலுவலகப் பயணங்களின்  சில அனுபவங்கள் இங்கே  உங்களுக்காக.......

1) ஒரு ஆட்டோ ஓட்டுனர் தம்முடைய பிரயாணியாக வந்த மத்திய வயது ஆண் தற்காலத்தில் பெண்களும் ஆண்களும் முகத்தை மறைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுகிறார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டே வந்தாராம்.
ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்கும் சமயம் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பர்தா அணிந்த ஒரு இளம் பெண்ணும் ஓர் இளைஞரும் வந்து நின்றார்களாம். 
இவரது பயணி அந்தப் பெண்ணின் கொலுசணிந்த கால்களைக் கண்டு தன்னுடைய மகள் என்று அடையாளம் கண்டு "சங்கீதா" என்று அலறினாராம். அந்தப் பெண் அதிர்ந்து போய் நிற்கையில் இவரது பயணி அங்கேயே இறங்கி சென்று மகளுடன் பேச சென்று விட்டாராம்.

2) 3,4 வருடங்கள் முன்பு ஒரு நாள் மாலையில் , அலுவலகம் உள்ள அசோக் நகர் பகுதியிலிருந்து வீடு செல்ல(சாலிகிராமம்) ஷேர் ஆட்டோ கிடைக்குமா என்று காத்திருந்தேன். அந்தத் தடத்தில் ஷேர் ஆட்டோ கிடையாது என்பது எனக்கு தெரியாது. 
என்னை கவனித்துக் கொண்டு இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் அருகில் வந்து நான் கூட்டி போறேன் வாங்கன்னு அழைத்து சென்றார். வழியில் அவர் சொன்னது, அம்மா உங்களைப் பார்க்க வயதில் சிறியவராக தெரிகிறது (அப்படியா??) தயவு செய்து ஷேர் ஆட்டோவில் செல்லாதீர்கள் , ஆவடியில் ஒரு பெண்ணை இன்று ஒரு புதரில் .... செய்து விட்டார்கள் அவளது காதலனே அதற்கு உடந்தை என்று சொல்கிறார்கள் . பணம் செலவானால் பரவாயில்லை, சாதாரண ஆட்டோவிலேயே செல்லுங்கள் என்றார். [இன்றளவும் பின்பற்றுகிறேன். உடன் என் கணவர் வந்தால் மட்டுமே ஷேர் ஆட்டோ, அதுவும் மிக சில முறைகளே.]

3)அதே அசோக் நகர் பகுதி... வீடு செல்ல காத்திருந்தேன். சற்று தொலைவில் ஒரு ஆட்டோ நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டுனர் என்னை அங்கே வர சொன்னார். வண்டி ஓடத்தொடங்கியதும் பேச்சும் தொடங்கியது. 
திடீரென்று நினைத்தார்போல , மேடம் நீங்க என்னை விட வயதில் பெரியவர்கள் உங்களை நடந்து வந்து ஆட்டோவில் ஏற சொல்லி மரியாதை குறைவாக நடத்திட்டேன், மன்னிச்சுக்கோங்க என்று பல முறை சொன்னார். உங்கள் தோற்றத்தை வைத்து அப்படி எண்ணி விட்டேன் என்று கூறினார். நான் உங்களுக்கு அருகில் வந்திருக்கணும் என்று வழியெல்லாம் புலம்பி விட்டார். (வெளியூரிலிருந்து வந்து சென்னையில் வாழ்பவர் போல)

4)திரைப்படத் துறையில் பணி புரிந்த ஒருவர் என் அலுவலக காரின் ஓட்டுனராக சில மாதங்கள் பணி புரிந்தார். போடா போடி படத்திற்காக ஓட்டுனராக இருந்த ஆந்திர மாநிலத்துக்காரர். 
திரைத் துறை பற்றியும் நடிகர்களுடனான தன் அனுபவம் பற்றியும் (சிம்புவுடன் கிரிக்கெட் விளையாடினேன்) திரைத் துறை ஓட்டுனர்கள் சங்கம் அதன் செயல்பாடுகள், சினிமா படம் எடுப்பதில் ஓட்டுனர்களின் பங்கு, வருமானம் , ஆந்திரா சாப்பாடு எந்த இடங்களில் நன்றாக இருக்கும் எனப் பல செய்திகள் அறிந்து கொண்டேன். (வளசரவாக்கம் உடுப்பி டாடா ஹோட்டல் இட்லி ரொம்ப நல்லா இருக்கும் மேடம்)

5)மற்றொரு ஓட்டுனர் மூலம் பி எஃப் பற்றியும், வெஸ்டெர்ன் யூனியனில் பணம் அனுப்புவது வாங்குவது பற்றியும் எனப் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
இரவு எத்தனை நேரமானாலும் தம்முடைய மனைவி சாப்பிடாமல் காத்திருப்பார் என்று எதுவும் சாப்பிடாமல் வீட்டிற்கு செல்வார்.

6) சமீபத்திய கால் டேக்ஸி பயணத்திலும் ஓட்டுனருடன் பேசிய படியே சென்றேன் . தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு.. அவர் எங்களை இறக்கி விட்டவுடன் ஏர்போர்ட் பிறகு பெங்களூர், வரும் வழியில் விருத்தாசலம் , தீபாவளிக்குள் வீடு என வேலை இருப்பதாக சொன்னார்.
அன்று சென்னையில் அடை மழை வேறு. 665 ரூபாய்கள் மீட்டர் படி நான் 700 கொடுத்து விட்டு நன்றி சொல்லி விட்டு (எப்போதும் சொல்வோம் நானும் என் அம்மாவும்) தீபாவளி வாழ்த்துக்களும் சொன்னேன்.


கவனித்துக் கொண்டிருந்த என் தம்பி மனைவி கேட்டது...... 

அக்கா ..... அதுக்குள்ளே ஃப்ரெண்ட் ஆயிட்டீங்களா?

பின் குறிப்பு : ஆண்டி முதல் அரசன் வரை எல்லாரும் நமக்கு ஃப்ரெண்டு தான் தங்கச்சி !!

Friday, 21 November 2014

ஒரு புடவையும் மூன்று ரவிக்கைகளும்.........


ஒரு நாளின் எந்த நேரத்தில் உன்னைப் பார்த்தாலும் மடிப்பு கலையாத உடையுடன் , படிய வாரிய தலையுடன் எப்படி இருக்கே என்று பள்ளித் தோழி எஸ் ஆர் புஷ்பாவும் , வயதில் குறைந்தவர்கள் கூட துவண்டு வந்திருக்காங்க நீங்க மட்டும் நாள் முழுவதும் எப்படி இத்தனை புத்துணர்ச்சியுடன் விதம் விதமா உடை உடுத்தி வந்து (மிக்ஸ் & மேட்ச்) பளிச்சுன்னு இருக்கீங்க மேடம் என்று சக ஊழியைகளால் பாராட்டப் பெற்ற எனது இன்றைய நிலை???? அயகோ...... யாதென உரைப்பேன்  ??

காலை எழுந்தவுடன் படிப்பு ... இல்லை இல்லை .....கவலை .
தினமும் இன்னைக்கு என்ன புடவை அதற்கு என்ன ரவிக்கை??  ஊதா நிறப் புடவைக்கு மஞ்சள் ரவிக்கையா? பச்சை ரவிக்கையா இல்லை மரவண்ண ரவிக்கையா? (நேத்து போட முடிந்த பச்சை ரவிக்கை கூட இன்று கை உள்ளேயே போகலை)
கை சுற்றளவு 1 இன்ச் கூட வைத்து மேலும் வைத்திருந்த 3 அதிகப்படி தையலையும் பிரிச்சாச்சு..........
விசேஷங்களுக்கு செல்ல என்றே ஒரு(ரே) பட்டுப் புடவை ரவிக்கை, எல்லாத் தையலையும் பிரித்து விட்டு கடந்த 10 விசேஷங்களுக்கும் அதே தான் . 11 ஆவது விசேஷம் ஒரு திருமணம். அந்த ரவிக்கையையே காணவில்லை.....( தேடினேன் தேடினேன்......இன்னும் தேடிக்கிட்டே இருக்கேன்....)
  
ஜிம்மில் சேரும் போது பயிற்சியாளரிடன் என் வாழ்நாள் ஆவலான அத்லெடிக் ஆர்ம்ஸ் & ஃப்லாட் அப்ஸ் தான் என்னுடைய குறிக்கோள் என்று கூறினேன்.(நம்ம மனசுல தீபிகா படுகோனேவும் பிபாஷா பாசுவும்ல இருக்காங்க)...... பயிற்சியாளர் அப்படியே செய்துடுவோம்ன்னு சிரிக்காமல் சொன்னார் . அதனாலயே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(மனசுல என்ன நினைத்திருப்பாரோ???)]

ஜிம் பயிற்சியாளர் என் ஆசையை நிறைவேற்ற  மற்றும் என் தேய்ந்து போன எலும்புகளுக்கு வலுவூட்டும் வண்ணம் செய்யச் சொல்லும் எடை தூக்கும் பயிற்சிகளுக்கும் இதில் முக்கிய பங்குண்டு. ஆர்ம்ஸ் மட்டும் பயில்வான் போல ஆகிட்டே இருக்கு........ எந்த சட்டையும் உள்ளேயே ஏறலை.....இதில் பிரித்து விட தையலும் கிடையாது.

தினமும் காலையில் எழும்போதே தினமும் ஏதாவது ஒரு வலி...தலை வலி, கால் வலி, அரிப்பு, வயிற்றுவலி.....(என்னம்மா நீ .பெரிய பாட்டி மாதிரி தினமும் வியாதி சொல்றே _ என் மகள்)
மருத்துவரிடம் சென்று மாஸ்டர் செக் அப்பும் முடிச்சாச்சு.......
இவர் சொல்லும் காரணம்....மத்திய வயது....... ஹார்மோனல் இம்பேலன்ஸ் .
தலை வலித்தாலும் , கால் வலித்தாலும், கண் வியர்த்தாலும்(எல்லாத்துக்கும் அளுக்காச்சி அளுகாச்சியா வருதுங்க), எரிச்சல் கூடினாலும், உரக்கக் கத்தினாலும்(4 வருஷமா இப்படித்தான் இருக்காய் _ என் கணவர்) ,அதிகம் வியர்த்தாலும், உடல்  அரித்தாலும் எல்லாத்துக்கும் ஒரே காரணம்தாங்க......ஹார்மோனல் இம்பேலன்ஸ் ...எல்லாம் சரி...... ரவிக்கை பத்தலைன்னாலும் அதே காரணம் சொல்றாங்களே........... என்ன கொடுமை சரவணன் இது?????

[நேற்று பார்த்த GUESS WHO என்ற ஆங்கிலப் படத்தில் கதா நாயகி தன் தந்தையிடம் அப்பா அழுதீர்களா என்று கேட்கிறார்... No , I was sweating in my eyes என்று பதில் சொல்கிறார்............ சுட்டுட்டாங்கய்யா...........சுட்டுட்டாங்க......கதைய தான் சுடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,,,,,,,,,,,,வசனத்தையேல்ல சுட்டிருக்காங்க.......]

என்றும் எப்போதும் ஒரு புடவைக்கு 2, 3 நிறங்களில் ரவிக்கை வாங்கி உபயோகிக்கும் வழக்கம் எனக்கு உண்டு(அலுவலக நண்பர் ஆலோசனை உபயம்..... புதுசு புதுசா கட்டிட்டு வர மாதிரி தெரியும்ல??)
அப்படி வாங்கி சேர்த்த கார்ப்பொரேட் பட்டு வகைகள், கனத்த பட்டு வகைகள், ஜரிகை போட்ட புடவைகள், சாதாரண புடவைகள்,அவற்றிற்கேற்ற ரவிக்கைகள் , சூடிதார்கள் , ஸ்டிரெட்ச் பேண்டுகள், விதம் விதமான நிறங்களில் டாப்ஸ், பல வண்ணங்களில் டிசைன்களில் துப்பட்டாக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பருவ காலங்களுக்கேற்ற உடைகள் என் அலமாரியில் இருக்கின்றன.....இருக்கின்றன........ மிக அழகாய் துணிக் கடைகளில் உள்ளது போல அடுக்கப்பட்டு பல மாதங்களாக......

இது தான் இப்படி..... சூடிதார், பேண்ட் சட்டைகள் போட்டு சமாளிக்கலாம் என்றால் அதிலும் பிரச்சினை..... பேண்ட்டுகள் லெக்கின்ஸ்கள் கூட சதி பண்ணுதுங்க....அதனால் அவைகளுக்கும் நாடா இருப்பது போல வாங்கி போட்டு சமாளிக்கிறேன்

விதம் விதமாய் முயற்சித்து ஏதோ ஒரு பேண்ட்டுக்கு (அ) புடவைக்கு ஏதோ ஒரு நிறத்தில் சட்டை என அணிந்து என் நாட்களைக் கழிக்கின்றேன்........... மிக்ஸ் & மேட்ஸ் அப்படின்னு ஒரு விஷயம் வந்துதோ நான் தப்பிச்சேன்..........

சில தோழிகள் என்னை முன்பு போல நல்ல விதமாக உடுத்த சொல்கிறார்கள்....... (எப்படி இருந்த நீ இப்படி மாறிட்டே.)
அது எப்படின்னு தான் புரியலை..........எனக்கு மட்டும் தான் இப்படியா?? இல்லை...........

பின் குறிப்பு :
பிரபல எழுத்தாளர் மறைந்த திருமதி அனுராதா ரமணன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் , இளம் பெண்களே..மத்திம வயதில் இருக்கும் உங்கள் தாயார் விசேஷங்களுக்கு செல்லவோ வெளியில் செல்லவோ தன்னை அலங்கரித்துக் கொள்ள கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் அவரை கடிந்து கொள்ளாதீர்கள். அந்த வயதுக்கே உரிய பல பிரச்சினைகள் அவர்கள் நேற்று அணிந்த ரவிக்கையை இன்று அணிய முடியாதபடி செய்திருக்கும். பொறுமையாக அவரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் என்று எழுதி இருந்தார். அவரை நான் நினைக்காத நாளில்லை