சாலிகிராமத்தின் ஒரு பகுதியில் 1984 - 1999 வரை ஒரே வீட்டில் குடியிருந்த நாங்கள் சொந்த வீடு வாங்க எண்ணி அச்சமயம் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளத்திலுள்ள வீட்டை வாங்கினோம். பின்புறம் காவேரி விநாயகர் ஆலயம் , வீட்டை ஒட்டி பூங்கா என்று அமைந்த இடம்.பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் (17 ஈ உள்ளேயே சென்று நிற்கும்) என எங்கு செல்லவும் வசதியான பகுதி. [கோலிவுட்!!]
மங்களம்(M) கணேசன்(G) தம்பதிகளின் மகன்கள் பெயர் ராஜன்(R), ரமேஷ், ராமு மற்றும் ரவி . (எம் ஜி ஆர் எப்படி வந்தார் இங்கே என்று இப்போது புரிகிறதா?? இதில் திரு ராமு என்பவர் அப்போது புகழ்பெற்ற வெள்ளரிக்கா பாட்டுக்கு நடனம் ஆடிய ராம்ஜி.) சகோதரர்கள் 4 பேர், நாங்கள், எங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அனேகரும் பரிச்சயமானவர்களே. 2000 ஏப்ரல் மாதம் 22,23 தேதிகளில் அனைவரும் கிருகப்பிரவேசம் செய்து குடியேறினோம். குழந்தைகளுக்கு பூங்காவும் பெரியவர்களுக்கு கோவிலும் என மகிழ்ச்சியாய் கழிந்தன நாட்கள்.
சுற்றிலும் சினிமாத் துறை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதி. மிகப் பெரிய வித்தியாசம். 1/2 கிமீ தொலைவில் இருந்த புது வீடு ஒரு புதிய உலகம் போல தோன்றியது. பழைய வீட்டு பகுதியில் 3 தேங்காய் 10 ரூபாய் புது வீட்டுப் பகுதியில் ஒரு தேங்காய் 10 ரூபாய். காரணம் நடிகர் திரு விஜய் அவர்கள் எங்கள் தெருவில் குடியிருந்தது தான். கோவிலில் மூங்கில் தடுப்பு வைத்து கட்டி பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது போல இவர்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகள் ஜே ஜே என்று கூட்டமாக இருக்கும். தென் மாவட்டங்களிலுருந்து பேருந்துகளில் ரசிகர்கள் திரு விஜயை சந்தித்து, பிரியாணி பொட்டலம் பெற்றுக் கொண்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள். எங்கள் வீட்டு வாசல் வரை கூட்டமாக இருக்கும்.[ தற்சமயம் ரசிகர்களை சந்திக்கவென்றே புதிதாக வேறு பகுதியில் வீடு வாங்கி இருப்பதாகப் படித்தேன்].வருட ஆரம்பத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் நோட்டுக்கள் வழங்குவார். கூட்டமோ கூட்டம்.
அருகிலுள்ள கண்ணம்மாள் தெரு மிகப் பிரபலம். திரு விஜயகாந்த், திரு வடிவேலு, திருமதி தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வசிக்கும் தெரு. தற்சமயம் சண்டை ,கல்லடிகளுக்கு பெயர் பெற்றிருக்கும் இத்தெரு, முன்பு திரு விஜயகாந்த் அவர்களின் இலவச மருத்துவமனைக்கு பெயர் பெற்றது.
இடது புறம் 2 வீடுகள் தள்ளி ஷூட்டிங் வீடு என்று அழைக்கப்பட்ட பங்களா. எப்போதும் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்.
எதிர்வீட்டில் நடன இயக்குனர் திரு பாலாஜி, இரண்டு வீடு தள்ளி திரு செந்தில், சற்று தள்ளி திரு விஜய், திரு கவுண்டமணி , முன் தெருவில் ரம்பா, பின் தெருவில் திரு பாலுமஹேந்திரா, திரு நாசர் , திரு ரியாஸ்கான் என எங்கும் எப்போதும் நட்சத்திர அணிவகுப்புத்தான்... நடைப் பயிற்சியின் போது சர்வ சகஜமாக பல பிரபலங்களைக் காண முடிந்தது. [என்னது...ரம்பாவை கோவிலில் பார்த்தியா..இரு நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்..] ஜிம் போகும் வழியில் திரு மயில் சாமி, ஜிம் உள்ளே திரு இளவரசன், திருமதி ஷமிதா..
வீட்டை ஒட்டி பூங்கா.. அங்கு அவ்வப்போது ஷூட்டிங், சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி என நடைபெறும். திரு பாலு மஹேந்திரா அவர்களின் கதை நேரம் சீரியலில் பல காட்சிகள் எங்கள் வீட்டு வாயிலில் எடுக்கப்பட்டவை.
திரு பாலுமஹேந்திரா அவர்களின் "வீடு" படப்பிடிப்பை தினமும் கண்டிருக்கிறேன்.[பணிக்கு செல்லும் வழியில்] . அந்த வீடு உருவானதை, அஸ்திவாரத்திலிருந்து கண்டிருக்கிறேன்.
இன்னார் இன்னாருடன் அதிகாலை 4 மணிக்கு நடைபயிற்சி செய்தார் என பத்திரிக்கை கிசுகிசுவெல்லாம் முன்னாடியே எங்களுக்குத் தெரியும்.
என்னுடைய டியூஷன் செண்டரில் படித்த பிரபலங்களின் பிள்ளைகள் நிறைய. பிரபல கிளரினட் கலைஞர் திரு ஏ கே சி நடராஜன் அவர்களின் பேத்திகளுக்கு சங்கீத பால பாடம் கற்றுத் தர சொல்லி அவர்களது தகப்பனார் (ஆனந்தபுரத்து வீடு இசையமைப்பாளர்) என்னை கேட்டது தனிக் கதை.[சில சின்ன பாடல்கள் கற்றுத் தந்தேன்]. அவரே 20 வருடங்கள் பல வகை இசையும் பயின்றவர். அவரது மனைவி டப்பிங் ஆர்டிஸ்ட்.
சினிமாவிலோ டீவீ சீரியலிலோ ஒரு நடிகரையோ டைரக்டரையோ காண நேர்ந்தார், அட ... இவரா(ளா ) என கேட்பது சர்வ சாதாரணம் அங்கே..
இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா.....
பின் குறிப்பு : எங்கள் எம் ஜி ஆர் வீடு கூட பல படத்துல நடிச்சிருக்குங்க...[காலம் மாறிப் போச்சு]
No comments:
Post a Comment