POKHRA-JOMSOM (SUMMIT AIR)
JOMSOM-MUKTHINATH (JEEP/DOLI/TREK)
எட்டு நாள் நேபாளப் பயணத்தில் முதல் நாள் சென்னையிலிருந்து நேபாள எல்லையில் உள்ள சித்தார்த் நகர் @ பைரஹவாவை அடைந்தோம். மறுநாள் காலை அங்கிருந்து 25 கிமீ தொலைவிலுள்ள புத்தர் பிறந்த இடமான “லும்பினி’ சென்று பல்வேறு நாட்டினரும் அமைத்துள்ள புத்தர் கோவில்களையும் அவர் பிறந்த இடத்தையும் தரிசித்து விட்டு அன்று மதியம் போக்ரா என்னும் ஊரை அடைந்தோம். அங்குள்ள விந்த்யபாசினி கோவிலுக்கு சென்றோம்.
11/10/2025
மூன்றாவது தினத்தின் காலை ஐந்து மணியளவில் எழுந்து தயாராகி 6.30 மணிக்கு அறையை காலி செய்து விட்டு, பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழிறங்கினோம். முக்திநாத்தின் நுழைவாயில் எனக் கூறப்படும் Jomsom சென்று அன்றே கடவுளை தரிசித்து விட்டு இரவு Jomsomல் தங்கி விட்டு மறுநாள் காலை மீண்டும் Pokhra திரும்ப வேண்டும் என்பதால் ஒரு நாளுக்குத் தேவையான பொருட்களை மட்டும் ஒரு சிறு பையில் எடுத்துக் கொண்டு மற்ற பெட்டிகளை விடுதி அலுவலகத்தில் வைத்து விட்டோம்.
Bread, butter, jam, cereals, fruits, poori, potato, corn salad & tea ஆகியவை அன்றைய தினத்தின் காலை உணவுகள். காலை மதியம் இரவு என சப்பாத்தி, பூரி, வேகாத சாதம் என உண்டதால் வயிறு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. செரிமானத்திற்கான மருந்தை காலையிலேயே எடுத்துக் கொண்டேன். அன்றைய தினம் மிக முக்கியமில்லையா?
8.30 மணிக்கு விமானம் கிளம்பும் என்பதால் சுறுசுறுப்பாகக் கிளம்பினோம். பொக்ரா city of nine lakes எனப் பெயர்பெற்றது. எங்கும் நீர்நிலைகளும் பின்புலத்தில் பனிபடர்ந்த சிகரங்களுமாக உள்ள ஊர் இது. ஊரில் ஒவ்வொரு இடம் கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு உயரத்தில் அமைந்துள்ளதால் பருவநிலை கூட வித்தியாசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விடுதி தொடங்கி விமான நிலையம் வரை Machapuchchare, Annapurna I, Manaslu போன்ற சிகரங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகின்றன. மொத்தத்தில் மிக அழகான ஊர்.
7.30 மணியளவில் விமான நிலையம் சென்று பைகளை Check-in செய்து விட்டு மீண்டும் வெளியில் வந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். நம் ஊர்களைப் போல எந்த கெடுபிடியும் இல்லை. காத்திருப்பு நேரத்தில் அந்த சிறிய விமான நிலையத்தில் Sree, Tara, Summit, Buddha, Yeti போன்ற விமான நிறுவனங்கள் Fishtail (Machhapuchhare), Dynasty போன்ற ஹெலிகாப்டர் நிறுவனங்களின் அலுவலகங்களைக் காண முடிந்தது. இந்த ஊர் அன்னபூர்ணா சிகரத்திற்குச் செல்லும் ஆரம்ப இடமாக உள்ளது மேலும் முக்திநாத் செல்லவும் இதுவே வழி.
STOL (Short Take Off and Landing) flights எனப்படும் சிறிய விமானங்கள் இங்கிருந்து செல்கின்றன. நிறைய வெளிநாட்டவர்கள் தனி விமானம் (chartered flight) அல்லது ஹெலிகாப்டரில் சென்றார்கள். மிகச் சிறிய காத்திருப்பு அறை, அதை தாண்டியதும் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே விமானங்களின் நடமாட்டம் தெரியும் வகையில் உள்ளது. எங்கள் Summit air விமானம் அரை மணி தாமதத்திற்குப் பிறகு கண்ணில் தென்பட்டது மிகச் சிறிய 18 பேர் அமரும் விமானம்.
விமான நிலைய ஊழியர்கள் ஏறக்குறைய தம் கைகளாலேயே நம் பைகளை எடுத்துச் சென்று cockpit அருகில் இருக்கும் சிறிய அறையில் எங்கள் ஏற்றினார்கள். கதவே படிக்கட்டாக மாறும் விமானத்தில் வரிசையாக உள்ளே ஏறினோம். ஆரஞ்சு வண்ண சீருடை அணிந்த அழகிய நேபாள யுவதி. நமஸ்தே என கைகூப்பி உடனே குட்டையான கதவுப் பகுதியில் தன் ஒரு கையை வைத்து please mind your head என்றார். 18 பேருக்கும் நமஸ்தே please mind your head உண்டு. Cockpitல் இரண்டு விமானிகள் (அவ்வளவு சிறிய இடத்தில் எப்படி அமர்ந்து விமானத்தை ஓட்டுகிறார்கள்???) தனிக் கதவெல்லாம் கிடையாது, துணியால் ஆன ஒரு படுதாவை விமானப் பணிப்பெண் இழுத்து விட்டார். அவ்வளவே 😊ஓரு வரிசையில் இரண்டிரண்டு பேராக நால்வர் அமரலாம். கடைசியில் விமானப் பணிப்பெண். விமானம் கிளம்பும் முன் அவர் பயணிகளுக்குக் கூறியது: மைக் இல்லை.
Attention passengers. Good morning. Welcome on behalf of the Summit Air. Please be seated with the seat belt until the plane lands in Jomsom. Flight time is 20 minutes. There are four emergency doors, two in the front and two at the back. No photography inside the aircraft.
அவ்வளவு தான். Safety measures பற்றிய எந்த விளக்கமும் இல்லை. Emergency door எனப்படுவது நாம் ஏறி வந்த குட்டி கதவு. மற்றவை ஜன்னல்களே. எனக்கு முன் இருக்கையில் திறக்க வசதியாக ஒரு கைப்பிடியுடன் ஜன்னல் இருந்தது. அது தான் அவசர காலக் கதவு போல! பயணம் தொடங்கியது. சிறிய ஓடுபாதை (runway) என்பதால் விமானம் உடனே மேலேறியது. பொக்ரா நகரின் சிறப்பு அந்த நகரம் உயரம் குறைவாக இருந்தாலும் ஊரைத் தாண்டியவுடன் உயரம் அதிகமாகி 1,000 அடி குன்றுகள் 26,000 அடி உயர சிகரங்களாகி விடுகின்றன. பொக்ராவில் நாங்கள் கண்ட மச்சபுச்சரே போன்ற உயரமான பனி மலைச் சிகரங்களுக்கு மிக அருகில் விமானம் பறந்து சென்றது. தரை மார்க்கமாகச் சென்றால் Annapoorna circuit எனப்படும் இந்தப் பகுதி நகரிலிருந்து 50 கிமீ தொலைவில் தான் உள்ளதாக அறிகிறேன். ஆங்காங்கே வளைந்து செல்லும் வெள்ளை கண்டகி(Seti Gantaki)
வழியெங்கும் அடுக்கடுக்கான இமய மலைத் தொடர்கள். கீழே பாயும் Seti (வெள்ளை) கண்டகி நதி, அடர்த்தியான பைன் மரக் காடுகள் எனத் தொடங்கி ஜம்சம் பகுதிக்கு வந்ததும் ஏறக்குறைய Grand Canyon (Arizona, USA), Mahabaleshwar (Maharashtra, India) போல மரங்களற்ற/மிகக் குறைந்த மரங்களுடன் canyonகள் தென்பட்டன. நீலகிரி (Nilgiri), தவளகிரி (Daulagiri) ஆகியவை இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் உயரமான சிகரங்கள்.
Jomsom விமான நிலைய ஓடுபாதை மிகவும் சிறியது என்பதால் மிகத் திறமையான விமானிகளே ஓட்டுகிறார்கள். ஓடுபாதைக்கு மிக அருகில் நதி ஓடுகிறது. ஓடுபாதையின் முடிவில் மண் தரை அதையடுத்து நதி. YouTube வீடியோக்கள் இந்த Takeoff & landingஐ மிக பயங்கரமாக சித்தரிக்கின்றன. கடவுளை நம்பி நேர்மறைக் கருத்துக்களுடன் சென்றால் பயம் தெரிவதில்லை. அருமையான Landing. விமானத்தை விட்டு கீழிறங்கி எதிரில் தெரிந்த பனிமலையின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டு Baggage claim பகுதிக்கு சென்று சேர்ந்தோம். (எங்கள் குழுவை உள்ளே அனுப்புவதற்குள் அங்கிருந்த காவலருக்கு நாக்கு தள்ளியிருக்கும் 😊)
காத்திருக்கும் பயணியர் அதே விமானத்தில் மீண்டும் பொக்ரா செல்ல வேண்டும். அதற்குள் எங்கள் பைகளை வெளியே எடுத்து அடுத்த செட் பைகளை உள்ளே அடுக்கி, எரிபொருள் நிரப்பி, விமானத்தை பழுது எதுவும் இருக்கிறதா என சரிபார்த்த, சில நிமிடங்களுக்கும் அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதால் நாம் குறிப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இமாலய மலைப் பகுதிகளில் காலநிலை சீராக இருந்தால் மட்டுமே விமானங்களை இயக்க முடியும் என்பதும் ஒரு காரணம்.நம் மக்கள் காவலர் 10 முறை கூறிய பிறகே நகர்ந்தார்கள். அடுத்து சென்ற பயணியர் குழு வரிசையாக மஞ்சள் கோட்டிற்கு வெளியில் சீராக நடந்து சென்றதைக் கண்டேன்.
Baggage claim என்பது 10*10 அறை. 4 மீட்டருக்கு ஒரு belt. அதன் மேல் பெட்டிகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. நம்முடைய பைகளை எடுத்துக் கொண்டால் வெளியே செல்ல வேண்டியது தான். வெளியில் வரும் பாதை சற்றே elevation உடன் கூடிய ஒற்றையடி மண் பாதை. அதைத் தாண்டி வெளியில் வந்தால் சற்றே சீரான நுழைவாயில். வெளியில் எங்களுக்காக ஒரு இளைஞர் (வழிகாட்டி) இரண்டு ஜீப்புகளுடன் காத்திருந்தார்.
காலை 10.30 மணியளவில் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வாசலில் கண்டகி நதி ஓசையோடு செல்கிறது. சிறு குன்று போல சாலை. மேலேறி எங்கள் அறைக்குச் சென்றதும் மிகச் சிறிய அந்த அறையில். குளிர் நடுக்கியது. குளிராடைகள் அனைத்தையும் அணிந்த பிறகும் குளிராக இருந்தது. இந்த ஊரில் காற்று பலமாக எப்போதும் வீசும் விடுதிக் கதவை மூடியே வைத்திருந்தார்கள். கண்ணாடி வழியே கண்ட போது நம் ஊர்களில் வீசும் புயற்காற்றின் ஆரம்பம் போல காற்று வீசிக் கொண்டிருந்தது. 12 மணிக்கு மதிய உணவை முடித்துக் கொண்டு ஜீப்பில் 20 கிமீ பயணித்து அடிவாரத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மலை மேலேறி கோவிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு மலைப்பயணம் என்பது கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதில்லை என்பதால் வாந்தி தலைசுற்றல் போன்றவை வர வாய்ப்பில்லை என்பது தெரியாமல் உடனே கிளம்புவோம் என எண்ணி வாந்தி வராமல் இருக்கும் மருந்தை விழுங்கி விட்டேன். அதன் பலனாக தூக்கமாக வந்தது கூடவே தொண்டை வறட்சி வேறு. (தேவையற்ற வேலை)காத்திருக்கும் நேரத்தில் இந்த ஊரைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோமா?
மூர்த்தி சிறியதாக இருப்பினும் கீர்த்தி பெரிது என்னும் பழமொழிக்கேற்ப ஊர் சிறியதாக இருந்தாலும் பல சிறப்புக்களைக் கொண்டது இந்த ஊர். உலகின் மிக ஆழமான Ravine (செங்குத்தான பக்கங்களையுடைய ஒடுக்கமான ஆழ்ந்த பள்ளத்தாக்கு / குறுகிய மலையிடுக்கு) என்னும் சிறப்பு பெற்றது இந்த ஊர். கண்டகி நதியால் ஏற்பட்ட பள்ளத்தாக்காக இது விளங்குகிறது. 8900 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஊரில் சுற்றிலும் அமைந்துள்ள மலைச் சிகரங்களால் மிகுந்த காற்று வீசுகிறது. அதைத் தாங்கும் வகையில் இங்குள்ள வீடுகள் கட்டப்பட்டுள்ளன. காலி கண்டகி நதி இந்த ஊரின் குறுக்கே பாய்கிறது. “சாளக்கிராமம்” என்னும் கருப்பு நிறப் படிவங்கள் உலகிலேயே இந்த நதியில் மட்டும் தான் கிடைக்கிறது. இவைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்கள்/விலங்குகளின் படிவங்கள். விஷ்ணுவின் அவதாரமாக இவைகள் கருதப் படுவதால் பூஜைக்குரிய பொருளாக இது போற்றப்படுகிறது.Jamsom ஊரும் Mustang பகுதியில் முக்திநாத் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அன்னபூர்ணா மலைச் சிகரத்திற்குச் செல்லும் நுழைவாயிலாகவும் முக்திநாத் செல்லும் நுழைவாயிலாகவும் இந்த ஊர் செயல்படுகிறது. தக்காலி சமுதாயத்தினர் இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சமயம் தக்காலி தாலி பற்றி இங்கே எனக்குப் புரிந்த வகையில் கூறுகிறேன்.
இதன் மற்றொரு பகுதியான Thak kola valleyயைச் சேர்ந்த சமுதாயத்தினரை Thakali என அழைக்கிறார்கள். உயரமான இமய மலைத் தொடரின் பருவநிலை காரணமாக அதிகமாக பயிர்கள் விளைவதில்லை. அங்கே பயிராகும் buckwheat, barley, uba (a millet), உருளைக் கிழங்கு போன்றவற்றை வைத்து மாமிசத்துடன் சேர்த்தும் சேர்க்காமலும் தனித்துவமாக சமைப்பது தான் தக்காலி தாலி. பொதுவாக தாமிரம் அல்லது எவர்சில்வர் தட்டுக்களில் பறிமாறப்படும் இந்த உணவு வகைகள். [Rice, lentil, fermented leafy greens, sauteed greens, spiced potatoes, tomato Sichuan pepper chutney, radish pickle, ghee herbs and spices, dessert and meat] மதிய உணவாக சாதம், பருப்பு, தயிர், சப்பாத்தி, mixed vegetables ஊறுகாய், சட்னி, கீரை ஆகியவை தரபட்டன. மேற்சொன்ன உணவுகள் நேபாலி தாலி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது சைவ தக்காலி தாலி என நினைக்கிறேன். உணவு சமைக்கப் பட்ட முறையிலும் சற்று வித்தியாசம் தெரிந்தது. பூரிக்கு செய்யும் மசால் போல அல்லாமல் இங்கு நம் ஊர் போல Fry ஆக வறுத்திருந்தார்கள். என்ன கீரையோ தெரியவில்லை தண்ணீரில் போட்டு எடுத்தது போல (blanching) இருந்தது. லேசான கசப்பு. அறையில் கெட்டில் இல்லாததால் சாப்பாட்டுக் கூடத்திலிருந்த ஹீட்டரில் வெந்நீர் சேகரித்துக் கொண்டோம். மதிய நேரம் அறைக்குள் இருந்தது போலக் குளிர் இல்லை. ஆனால் காற்றடித்துக் கொண்டிருந்தது. அமைதியான சூழல் நீல வானம் மனதில் எப்படிக் கோவிலை அடையப் போகிறோம் என்ற கவலை எனக் கலந்து கட்டிய உணர்வுடன் முக்திநாதரை தரிசிக்கக் கிளம்பினோம். இந்தப் பகுதியில் ஆக்சிஜன் மிகக் குறைவாக (70-80%) தான் இருக்கும் மூச்சு திணறலாம் நடக்க முடியாமல் போகலாம் என பல கருத்துக்களைப் பலரும் கூறக் கேட்டிருந்தேன். 12,000 அடிகளை சாதாரணமாக அனைவரும் கடந்து விடலாம் என்பது என் திடமான நம்பிக்கை. (அனுபவத்தினால் ஏற்பட்டது தான்)
12.30. கிளம்பும் நொடி வரை எந்தப் பிரச்சினையும் எங்கள் குழுவினர் யாருக்கும் வராமல் சாதாரண உடல் நிலையுடனேயே இருந்தோம். குழுவினர் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பயணம் செய்தோம். சற்றே கரடுமுரடான சாலை. பனிக்காலம் முடிந்து பனி உருகி வரும் தண்ணீரால் தார்ச்சாலைகளில் பள்ளங்கள் இருப்பது சகஜமே! ஊருக்குக் கிளம்பும் முன்பே என் தோழி இடுப்பை/முதுகைப் பாதுகாக்கும் வகையில் belt வாங்கிச் செல்லுங்கள் சாலைப் பயண நேரத்தில் உதவும் எனக் கூறியபடி என் physiotherapist உதவியுடன் பெல்ட் வாங்கிச் சென்றது உபயோகமாக இருந்தது. அதிகம் குலுக்கல் இல்லை என்றாலும் மீதிப் பயணத்தை ஆரோக்கியமாகக் கடக்கலாமே !
20 கிமீ தொலைவு தான் என்றாலும் ஒரு மணி நேரப் பயணம். மாத்திரையின் தாக்கத்தில் மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்தை முடிக்கவும் அடிவாரம் வரவும் சரியாக இருந்தது. அடிவார ஊரின் பெயர் Ranipauwa; இதுவும் முக்திநாத் தான். இங்கு தான் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இங்கிருந்து தான் மலையேற்றம் ஆரம்பம்.
மேடம் நீங்கள் நடையா குதிரையா டோலியா? நான் பார்த்த YouTube வீடியோ படி குதிரை மலையோரமாக கீழே பார்த்தால் நடுங்கும் அளவுக்குப் பள்ளத்தை ஒட்டிச் சென்றது. டோலி என்பது ஒரு நாற்காலியில் நாம் அமர நான்கு இளைஞர்கள் நம்மை மேலே தூக்கிச் செல்வது. நான் கண்ட வீடியோவில் ஒரு பெண்மணி படுத்த வண்ணம் செல்கிறார் அவருக்கு மேலே அவரது சிறு குழந்தை அதன் diaper bag என ஒரு மார்க்கமாக இருந்தது. நான் படிக்க நேர்ந்த பதிவுகளும் படுத்தவாக்கில் தான் செல்ல வேண்டும் எனக் கூறின. கடவுளே என்ன சோதனை இது என மனதுக்குள் புலம்பினாலும் கேட்டவர்களிடன் அங்கே அந்த நொடி கடவுள் என்ன கட்டளையிடுகிறாரோ அதன் படி செய்வேன் என கெத்தாகக் கூறினேன்.
என் தோழி இந்தக் கோவிலுக்கு நடந்து செல்வது மிகச் சுலபம் கேதார்நாத் போல பனிபடர்ந்த மலைகளோ கிடுகிடு பாதாளத்தில் ஓடும் நதியோ இல்லை. அகலமான சாலை, படிக்கட்டுக்கள் என அதிகபட்சம் 1.5-2 கிமீ தூரம் கூட இருக்காது. முடிந்தவர்கள் நடந்தே செல்லலாம் எனக் கூறி இருந்தார். அதனடிப்படையில் நடந்து செல்லலாம் என எண்ணி இருந்தேன். எனக்கு முன்னால் எங்களுடன் வந்த தோழிகள் இருவர் டோலியில் ஏற அவர்களை உட்கார்ந்த வண்ணமே தூக்கிச் செல்வதைக் கண்டதும் நானும் அது போல செல்ல முடிவு செய்தேன். கடந்த மாதம் உடற்பயிற்சி செய்யும் போது muscle cramp ஆகி, இடுப்பு முதுகு வலி, பல பயிற்சிகளுக்குப் பிறகு தற்சமயம் சரியான நிலையில் மீண்டும் படியேறி வலியை வரவழைத்துக் கொள்வது அவசியமில்லை. (Round trip ₹4,000 for persons with average weight)
என்னைத் தூக்கிய நால்வரும் ஒரு மேட்டின் மேல் ஏறி (குறுக்கு வழி) கடைவீதி சாலை வந்ததும் கீழிறக்கி வைத்து விட்டு எங்கோ மறைந்து விட்டார்கள். எனக்கு முன்னும் பின்னும் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. எனக்கு ஹிந்தி குச் குச் மாலும் பேசத் தெரியாது. சரி நடப்பது நடக்கட்டும் என அப்படியே கைப்பையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு (அவர்களது break time) மீண்டும் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். என்ன தான் பணம் தருகிறோம் நம்மால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கிறது இது ஆண்டவன் விதித்த செயல் என்று தோன்றினாலும் மனதில் குற்ற உணர்ச்சியை வெல்ல முடியவில்லை. ஏறக்குறைய 300 படிகள். நடந்தால் 45-60 நிமிடங்களில் சென்று விடலாம். டோலியில் செல்ல 30-40 நிமிடங்களாவது ஆகும்.
உயரத்தில் ஏறும்போது நாற்காலியில் சாய்ந்து அமரச் சொன்னார்கள். பக்கவாட்டுக் கட்டையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டே மனதில் இறைவன் நாமத்தைக் கூறிக் கொண்டே முன்னேறினோம். ஊரின் கடைத் தெருவெங்கும் சாளக்கிராமங்களும் ருத்திராட்சங்களும் விற்பனைக்கு சாலையோரத்தில் இருபக்கமும் வைக்கப் பட்டிருந்தன. சாளக்கிராமம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் படிவம் ஆகும். கருப்பு, பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலக் கற்களாக அவைகள் உருமாறி கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கும் அரிய பொருளாக உள்ளன.
சாளக்கிராமங்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதால் மக்கள் அவற்றை வாங்கி வந்து வீட்டில் பூசை செய்வர். ஒவ்வொரு நிறக் கல்லும் ஒரு அவதாரமாகக் கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் சக்கரம், பாதம் போன்றவையும் அக்கற்களில் படிவங்களாக உள்ளன. (வெள்ளை – வாசுதேவர், கருப்பு-விஷ்ணு, பச்சை-நாராயணர், தங்க நிறமும் பொன்சிவப்பும் -நரசிம்மர், மஞ்சள் -வாமனர் எனப் பாகுபாடுகள் உண்டு)
சில நிமிட நடைக்குப் பிறகு படிக்கட்டுக்கள் தொடங்கும் இடத்தில் உள்ள வளைவை அடைந்தோம். நடுவிலும் ஓரத்திலும் கம்பிகளுடன் கூடிய படிக்கட்டுக்கள். பக்தர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் இடது பக்கமாக ஏறி இறங்குகிறார்கள். நடப்பவர்களுக்கும் டோலியில் செல்பவர்களுக்குமான பாதை இது. (அருகிலேயே மலையில் குறுகிய சரிவான ஒற்றையடி மண் பாதையில் குதிரையின் மேல் செல்கிறார்கள்) மேலேறி செல்லச் செல்ல நடந்து சென்ற எங்கள் குழுவினரைக் கண்டேன். ஏற்கனவே கூறியபடி திறந்த வெளியில் அமைந்த மிகப் பெரிய புத்தர் சிலையும் மடாலயமும் வலப்புறமாக தென்பட்டன. கோவிலைக் காணவில்லை. மேலும் சிறிது தொலைவு ஏறியதும் என்னை சுமந்தவர்கள் சிரமப்படுவது போலத் தோன்றவே இறக்கி விடச் சொல்லி 30 படிகள் போல நானே ஏறினேன். (கோவில் வந்து விட்டது என நினைத்ததும் ஒரு காரணம்) அந்த அன்பர்கள் சில நிமிட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் என்னை நாற்காலியில் அமரச் செய்து கோவிலை நோக்கி அழைத்துச் சென்றார்கள். சாதாரணமாக நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும் 2 கிமீக்கும் குறைவான தொலைவு தான் என்றாலும் மலைப்பாதை காரணமாக வெகு தூரம் வந்த உணர்வு. மீண்டும் மண் சாலையில் சிறிது தொலைவு ஏறியதும் இடப்புறமாக முக்திநாதரின் கோவில் கண்ணில் பட்டது. (இந்த இடத்தில் வலப்புறம் திரும்பினால் புத்தரை -அவலோகிதேஸ்வரர்-தரிசிக்க செல்லலாம்.) மிகச் சிறிய இந்தக் கோவில் 12,172 அடி (3710 m) உயரத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் எனப் போற்றப்படுபவற்றுள் ஒன்று இது. [105 கோவில்கள் இந்தியா, 1- நேபாள், 2- திருப்பாற்கடல் & திருவைகுண்டம்] இந்தக் கோவிலில் உள்ள கடவுளை வணங்கினால் முக்தி அடைய முடியும் என்பது நம்பிக்கை.
வைணவக் கோவில்களில் திருவரங்கம், திருமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், தோதாத்ரி, புஷ்கர்,பத்ரிநாத் மற்றும் முக்திநாத் ஆகிய எட்டும் சுயம்புவாகத் தோன்றியவை எனக் கூறப்படுகின்றன. இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமான முக்திநாதர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களின் ஆளுயர சிலைகள் தங்கத்தாலானவை. சந்நிதியை சுற்றி சிறிய பிராகாரம். பிராகாரத்தின் வெளிப்புறம் 108 குழாய்கள் என அமைப்பு. கோவிலுக்கு மிக அருகில் பாயும் காலி கண்டகி பள்ளத்தாக்கில் பாய்ந்தோடி அந்தப் பகுதியை வளப்படுத்துகிறது. இங்கு தான் சாளக்கிராமம் எனப்படும் கற்கள் கிடைக்கின்றன. குலசேகராழ்வார்(1) பெரியாழ்வார்(1) மற்றும் திருமங்கையாழ்வார்(10) ஆகியோர் இந்தத் திருத்தலம் பற்றி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
பௌத்தர்களுக்கும் இந்த இடம் ஒரு தனிச் சிறப்பானது. இங்குள்ள புத்த விஹாரமும் சிறப்புப் பெற்றது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. சதி தேவி கோவிலுக்கு நாங்கள் செல்லவில்லை. அங்கு நீண்ட நெடுங்காலமாக ஒரு விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். (இயற்கை வாயு) இரண்டு மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக அவரவர் கடவுளை வணங்கும் சிறப்புப் பெற்றது இந்த முக்திநாத்.
1.30 மணியளவில் கோவிலை அடைந்த போது எனக்கு முன்னே சென்ற தோழிகள் இருவரும் அமர்ந்திருந்த அரச மரத்தினை அடைந்ததும் மற்றவர்கள் வந்து சேருமுன் அங்கிருக்கும் சிறு குளங்கள் இரண்டு மற்றும் 108 குழாய்களில் குளித்து தயாராக இருக்கலாம் என முடிவு செய்தோம். கோவில் அருகில் 100க்கும் குறைவான பக்தர்களே அப்போது அங்கே 4-degree Fahrenheit. நீல வானம், சூரியனின் கிரணங்கள் எங்கள் மீது பட்டாலும் குளிராக இருந்ததால் குளிப்பதா எனத் தயங்கிய என் தோழி இவ்வளவு தொலைவு வந்து விட்டோம் குளிக்காமல் எப்படி வா என என்னை அழைத்துச் சென்றார். குளிராடைகளை மட்டும் கழற்றி விட்டு முதல் குளத்தின்(பாபக் குளம்) படிக்கட்டில் காலை உள்ளே விட்டதும் உச்சந்தலை வரை குளிர் சுண்டி இழுத்தது. எங்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. முழங்கால் வரை இறங்கி நின்று கொண்டு கை முகம் கழுவிய பிறகு கைகாளால் நீரை மேலே வாரி இறைத்து நனைத்துக் கொண்டு அடுத்த குளத்திலும்(புண்ணியக் குளம்) அதே போல செய்தோம். குளிர் நடுங்கியது. அடுத்ததாக 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள குழாய்களின் கீழ் தலையைக் காட்டியவண்ணம் நடக்கத் தொடங்கினேன்.
தமிழ் எழுத்து வடிவம் “ப” போன்று உள்ள அந்த அமைப்பில் மலை மேலிருந்து பனியுருகி வரும் நீரை ஒரு வாயகன்ற குழாயிற்கு வரும்படி செய்து முன்பகுதியில் 108 காளைகளின் வாய் வழியாக நீர் வெளியேறுவது போல அமைக்கப் பட்டுள்ளது. இவைகள் 108 வைணவத் திருத்தலங்களைக் குறிப்பவை. “ப” வடிவின் ஒரு பகுதி குழாய்களில் நன்றாக நனைந்து குளித்தாலும் தொடர்ந்து நனைந்து கொண்டே மொத்த தூரத்தையும் கடப்பது அசாத்தியம் எனத் தோன்றவே இரண்டிரண்டு குழாயாக இரண்டு கைகளாலும் நீரை சேகரித்துத் தலையில் ஊற்றியவாறே நகர்ந்தேன். கடைசியில் முடிக்கும் சமயம் பெரிய குழாய் வழியாக வரும் நீர் மொத்தமாக என் தலையில் விழ ஒரு வழியாக நடுங்கிக் கொண்டே “mukthi dhaaraa” எனப்படும் அந்தப் புனித நீர்க் குளியலை முடித்தேன். என் தோழியாரும் எனக்கு முன்னால் செல்ல, உடை மாற்ற ஒதுங்கிடங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் பவானி/காவிரி நதிக்கரையில் பிறந்து நதியிலும் வாய்க்காலிலும் குளித்து வளர்ந்த அனுபவத்தின் பலனாக அருகிலிருந்த உயரமான இடத்தில் மரத்தின் கீழேயே உடைமாற்றிக் கொண்டு குளிராடைகளை அணிந்து வெந்நீர் குடித்து apricot சாப்பிட்டு…காத்திருந்தோம். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் மூச்சு விடுவது சிரமாக இருக்கும் போனோமா வந்தோமா என இருக்க வேண்டும் எனப் பல பயமுறுத்தல்களை கேட்டிருந்ததால் என்ன நடக்குமோ என யோசித்த வண்ணம் இருந்தோம். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த தோழிக்கு கூட எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. 12 ஆயிரம் அடி என்பது சாதாரணமாக செல்ல முடியும் தூரம் தான் என்பது என் அனுபவம். (Manali Rotang pass 14,000 அடி. அங்கு தான் மூச்சு விட திணறினேன்)
கணவருடன் சேர்ந்து தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதனால் சற்று காத்திருக்க நேர்ந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் பனி உருகி ஓடையாக மலையை விட்டு இறங்கி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து ரசித்தேன். புத்தரின் மிகப் பெரிய சிலையையும் அங்கிருந்தே காண முடிந்தது. மலைப் பகுதியில் ஏறி அங்கு சென்று பார்க்க சுவாரசியம் இல்லை என்பதுவும் ஒரு காரணம். கோவிலைத் தான் சுற்றிச் சுற்றி வந்தோம்.
நிற்க.
கணவரும் நண்பர்களும் படியேறி வந்து சேர்ந்ததும் அவர்கள் குளிக்கக் கிளம்பினார்கள். அந்த இடைவெளியில் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்து கடவுளை வணங்கினேன். அடுத்து ஒவ்வொரு தம்பதியாக கடவுளின் சந்நிதிக்கு சென்று முக்திநாதரை தரிசித்தோம். சிறு இடம் அதுவும் இடுப்பு வரை தடுப்பு, மூன்று படிக்கட்டுக்கள் மேலேறினால் தான் கடவுளைக் காண முடியும். பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் ஜருகண்டி தான். ஆனால் மீண்டும் ஒரு சுற்று மீண்டும் படிக்கட்டு என்று சுற்றி சுற்றி வந்து வணங்க முடிந்தது. சந்நிதிக்கு உள்ளே ஒரு இளம்பெண் பிரசாதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் கொண்டு சென்ற பாதாம் முந்திரி கல்கண்டுகளை இறைவன் காலடியில் சமர்ப்பித்து எடுத்துத் தந்தார். அச்சம்யம் மாலை மணி நான்கு.
என் கணவர் ஏறும் வழியில் ஓய்வெடுத்த போதே பாசுரங்களைக் கூறி முடித்ததாகக் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் நடந்து வந்தவர்கள் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கவும் எனக்கும் என் தோழி ஒருவருக்கும் மட்டும் டோலி வரவில்லை. நான் 4.30 என்று கூறியதால் அவர்கள் தாமதித்தனர். ஏறக்குறைய 3 மணி நேரம் அந்தக் கோவிலில் அமைதியாகக் கழிக்கும் வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கு நன்றிகள். அதற்குள் தோழியுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு மீண்டும் சந்நிதிக்கு ஒவ்வொருவராகச் செல்வது என முடிவு செய்து முதலில் நான் வேகமாகச் சென்றேன். சாளக்கிராம வடிவில் இருந்த பத்ரி நாராயணர் கடைசி சுற்றில் தான் என் கண்ணில் பட்டார். 2009ல் திருவில்லிபுத்தூர் ஜீயர் இந்தக் கோவிலில் நிறுவிய ஆண்டாள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் மற்றும் கருடாழ்வாரும் இங்கே எழுந்தருளியுள்ளனர்.. உள்ளே பிராகாரத்தினுள்ளே ஒரு குட்டிப் பிள்ளையாரும் உள்ளார்.
திரும்பி வருகையில் தோழியின் டோலி வந்து விட அவரால் மீண்டும் செல்ல முடியவில்லை. எங்கள் வழிகாட்டி நாங்களனைவரும் கிளம்பியதை உறுதி செய்த பிறகு படிக்கட்டுகளில் கீழிறங்கினார். (டோலி தூக்குபவர்களுக்கு அவர்களது உடையில் எண் குறிக்கப்பட்டுள்ளது. நம்மை மேலே இறக்கி விட்டதும் என் முதுகில் உள்ள எண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி நம்மை புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள் அடையாளம் காண)
முக்திநாத் கோவிலை விட்டுப் படிக்கட்டிகளில் கீழிறங்கத் தொடங்கினோம். பையில் இருந்த துணிகள் ஈரமானதில் அதிக கனமாக இருந்ததாக டோலி சுமப்பவர்கள் கூறினார்கள். கைப்பிடி மூங்கில் பிடித்துக் கொள்ள முடியாமல் வழுக்கியது வழியில் என் கணவர் குழுவை கடந்த போது புகைப்படம் எடுக்குமாறு சைகை செய்தார். கையை விட்டு விட்டு கைபையை திறந்து தொலைபேசியை எடுத்து புகைப்படம் எடுப்பது சாத்தியமேயில்லை. டோலி தூக்கியவர்கள் எங்கும் கீழிறக்காமல் ஒரே மூச்சில் நான் ஏறிய இடத்தில் இறக்கி விட்டார்கள். கையிலிருந்த 4000 இந்தியப் பணத்தை அவர்களிடம் தந்த போது என்னவோ கூறினார் ஒருவர் எனக்கு புரியவில்லை. (டிப்ஸ் கேட்டிருப்பாரோ?) இவர்கள் ஒரு ஏஜன்சியை சேர்ந்தவர்கள் நாம் தரும் 4000 அவர்களுக்கு முழுதாகப் போய் சேராது என்று பிறகு அறிந்தேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மேலேறத் தொடங்கினார்கள். வழியில் கடைவீதியில் மக்கள் சாளக்கிராமம், ருத்ராட்சங்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எதுவும் வாங்கவில்லை.
பனிக்காலத்தில் கடும் பனிப் பொழிவு இந்தப் பகுதியில் இருந்தாலும் பத்ரிநாத் போல இந்தக் கோவில் மூடப்படுவதில்லை. முடிந்தவர்கள் மேலேறிச் சென்று தரிசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள்/பக்தர்களின் வருகை வெகுவாகக் குறைந்தாலும் அன்னபூர்ணா போன்ற சிகரங்களில் ஏற விரும்புபவர்களும் பனி சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களும் நிறைய பேர் பனிக்காலத்திலும் வருவார்கள் எனக் கூறினார்கள்.
அரைமணிக்குள் அனைவரும் வந்து சேர 5.30 மணிக்கு ஜீப்பில் ஏறி Jomsom நகரை நோக்கிப் பயணித்தோம். சூரியன் மங்கத் தொடங்கிய நேரம். இலையுதிர்கால தொடக்கத்தின் அடையாளமாக மரங்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டன. ஊர்ப் பகுதியில் மலையை ஒழுங்குபடுத்தி காய்கறிகளை விளைவிக்கிறார்கள். வழியெங்கும் ஆப்பிள் மரங்களும் தென்பட்டன. கீழிறங்கும் சமயம் ஒரு பக்கம் காலி கண்டகி நதி தெரிகிறது. அடர்த்தியான வனங்கள் இந்த இமாலயப் பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். மேலும் கீழிறங்க மரங்களற்ற canyon பகுதியில் பெரிய எறும்பு புற்றுக்கள் போன்ற தோற்றம் கொண்ட பகுதிகள் உள்ளன. தார்ச்சாலை பனியுருகி ஆங்காங்கே சென்றிருப்பதால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இருட்டிய வேளையில் மீண்டும் கண்டகி நதியை ஒட்டியபடி பயணித்து எங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதி வாசலிலேயே ஓ…வென்ற சத்தத்துடன் சீறிப் பாயும் கண்டகியும் எதிரில் தெரியும் பனிச் சிகரங்களும் கண்கொள்ளாக் காட்சிகள். இந்தப் பகுதியில் கற்கள்/சாளக்கிராமங்கள் இல்லை தண்ணீர் மட்டுமே.முக்திநாத் பயணம் என்றாலே பயங்கரமான சிரமங்கள்/தடைகள் இருக்கும் எனப் பலரும் கூறக் கேட்டிருந்த நிலையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் தரிசித்து வந்தது பெருமலைப்பாக இருந்தது (இருக்கிறது இன்றளவும்) வியந்து பேசி மகிழ்ந்து விட்டு அவரவர் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம். இடையில் ஈரத் துணிகளை வெளியில் காயவைத்தோம். (மறுநாளுக்கு அலாரம் வைத்துக் கொண்டோம்; மறுநாள் காலை வரை அவ்வளவு காற்றிலும் துணிகள் காயவே இல்லை) இரவு உணவும் அதே நேபாளி தாலி தான். என் கணவர் ஏன் எனக் கேட்டதற்கு இந்தப் பகுதிகளில் என்ன விளைகிறதோ அதை வைத்து தான் சமைக்க முடியும் எனக் கூறப்பட்டது. அறைக்குள் குளிர் நடுக்கியது. குளிராடைகளை அணிந்து கொண்டு உறங்கினோம்.
கண்டகி நதிக்கு சென்று நாமே சாளக்கிராமங்களை பொறுக்கி எடுக்கலாம் என ஒரு கருத்து பரவலாக உள்ளது. நாங்கள் சென்ற பகுதிகளில் ஆற்றுக்கு அருகில் செல்ல எங்குமே அனுமதி இல்லை. Accessibilityயும் இல்லை. தனியாக trekking செல்பவர்கள் அதற்கான பகுதிகளில் ஆற்றில் இறங்கலாம் போலும் (Courtesy: YouTube videos)
மூன்றாம் நாள் சுற்றுலா முடிவுக்கு வந்தது.
அனுபவங்கள் தொடரும்…













No comments:
Post a Comment