It’s a jungle out there.......Mr.Monk
Mr.Monk....
![]() |
See.....who is watching Monk !! |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதில் விருப்பம் காட்டாத எனக்கு , அமெரிக்க வாசத்தில் புத்தகங்கள் , குட்டீஸ் தவிர்த்து வேறு பொழுது போக்கு இல்லாததால், அதையும் பார்க்க ஆரம்பித்தேன். நெட் ஃப்லிக்ஸ் (Net Flix )மூலம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப் பட்ட நிகழ்ச்சிகளைக், குறிப்பாக ஹிந்தி , தமிழ் படங்களைக் காண ஆரம்பித்தேன். அவ்வப்போது மகளும் (குட்டிப்பையன் பாலர் பள்ளி செல்லும் தினங்களில் மட்டும்)
அடுத்த கட்டம், ஆங்கிலப்படங்கள். நான் பார்த்த படங்களைப் பற்றி மகள் கணவரிடம் சொல்லி இருப்பார் போல. மிஸ்டர் மாங்க் பாருங்கள் என்று சிபாரிசு செய்தார். (பார்த்ததும் பிடிக்கலை.... பார்க்கப் பார்க்கத் தான் பிடித்தது.) அதே சமயத்தில் மருமகன் ஆப்பிள் டீவீ சாதனம் ஒன்றை வாங்கி தொலைக்காட்சிப் பெட்டியுடன் பொருத்தித் தந்தார்.(ஆங்கில வசனங்களுக்கே சப் டைட்டில் போல வரும்)
ஆரம்பித்தது எங்கள் மாங்க் மராத்தான்
நான் , மகள், மருமகன் கணினி, ஐபோன்,டீவி என மாறி மாறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் , அவரவர் தனித்தனியாக ,விடாமல் பார்த்தோம். (மொத்தம் 125 எபிசோடுகள் 8 சீசன்கள்) ஒரே மாதத்திற்குள்... (ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் மற்றவர்கள் பார்க்கும்போதும்....)
தினமும் நாங்கள் பார்த்த கதைகள் பற்றிய விமர்சனங்களும் உண்டு.....
சான் பிரான்சிஸ்கோ காவல் துறையின் சிறந்த துப்பறியும் நிபுணர் மிஸ்டர் மாங்க் தன்னுடைய மனைவி ட்ரூடி ஒரு கார் வெடிகுண்டில் இறந்த பிறகு, மிகுந்த மன நல பதிப்புக்கு உள்ளாகிறார். காவல் துறையிலிருந்து வெளியேற்றப் பட்டு மன நல சிகிச்சை பெறுகிறார். சற்றே குணமடைந்ததும் மீண்டும் காவல் துறை இவரை ஃப்ரீலான்ஸ் முறையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.பல வழக்குகளை தீர்க்கிறார் தன் மனைவியின் கொலையைத் தவிர. (கடைசி எபிசோடு எதுக்கு இருக்கு?)
இவருக்கு செவிலியாகப் பணிபுரியும் ஷரோனா மற்றும் சில வருடங்கள் கழித்து உதவியாளராக வரும் நடாலி, காவல் துறைத் தலைவர் ஸ்டாடில்மெயர், அவரது உதவியாளர் ரேண்டி என ஒரு கட்டத்தில் அனைவரும் எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் போல் உணர ஆரம்பித்தோம்.
மிஸ்டர் மாங்க் எப்போதும் எல்லாவற்றையும் சுத்தப் படுத்திக் கொண்டே இருப்பார். லைசால் போட்டு துடைத்தல், கிருமிகளைப் பற்றிய பயம் காரணமாக கையை துடைத்துக் கொண்டே இருத்தல் (தெனாலி கமல் போல எல்லாத்துக்கும் பயம்) , எதையும் ஒழுங்காக வைத்தல், எல்லாவற்றையும் இரட்டைப்படையாக வைத்தல், சதுரங்களில் மேலான ஈர்ப்பு என ..... அவரது கதாபாத்திரம் விரியும்.(Obsessive Compulsive Personality Disorder)
கொலைக் கதையாயினும் எங்கும் ரத்தம் துப்பாக்கி கிடையாது.......
பட்டீ....... மிஸ்டர் மாங்க் பாக்கறீங்களா ? _ மிகச் சரியாக கிளைமாக்ஸ் சமயத்தில் . டைட்டில் பாட்டிற்க்கு நடனம் ஆடுவார்.
(அவருக்கு ஒரு நாளுக்கு 1/2 மணி மட்டுமே)
ஒரு நாள் பீட்ரூட் காயை ஒரே சதுரமாக வெட்டி (எப்பவும் அப்படித்தான்) சமைத்துக் கொடுத்து விட்ட அன்று மருமகன் மகளிடன் அம்மா மாங்க் மாதிரி இன்னைக்கு காயை நறுக்கி இருந்தார் என்று ஒரே கிண்டல்.
சில கதைகள் உணர்வுபூர்வமாக இருக்கும் . மாங்க் அண்ட் தி கிட்..... பட்டீ இந்த கதை சொல்லுங்க என்று பல முறை கேட்டார்.....
2002ல் ஒளிபரப்பாகி , மறு ஒளிபரப்பு, மறு மறு ஒளிபரப்பு என்று அமெரிக்க தொலைக்காட்சிகளில் சக்கை போடு போடுகிறார் மிஸ்டர் மாங்க்.....
நடாலியாக நடித்த டெய்லர் க்ரோவர்டை இந்தியா வந்த சில நாட்களில் ஒரு திரைப்படத்தில் பார்த்தபோது நமது உறவினரைப் பார்த்த மகிழ்ச்சி .....
மாங்க் , ட்ரூடி ஆகியோரையும் திரையில் பார்க்கும் போது இன்றளவும் மனதிற்கு நெருக்கமான அதே உணர்வு...........
அனைத்து எபிசோடுகளும் மாங்க் என்ற பெயருடனேயே அமைந்திருப்பது இதன் சிறப்பு (ஒன்றோ இரண்டோ தவிர)
Here is what happened ….
No comments:
Post a Comment