Wednesday, 10 August 2022

நான்காவது வட அமெரிக்கப் பயணம்

May 7,2017 - January 17,2018

SINGAPORE AIRLINES [Chennai-Singapore-San Franscisco]

இம்முறை மகளது குடும்பம் ஏப்ரலில் இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்து திரும்பி செல்லும் போது நானும் உடன் செல்வதாக திட்டம்.

அமெரிக்காவில் அவர்களுக்கான பயணச் சீட்டுக்களை வாங்கி விடுவார்கள்.

எனக்கான பயணசீட்டை இந்தியாவில் நான் வாங்கி கொண்டேன்.

மகளின் குடும்பம் இந்தியா வரும் நாளும் வந்தது. விமான நிலையத்தில் பல மணி காத்திருப்புக்கு பிறகு அவர்கள் விமானம் கோளாறு காரணமாக ரத்தாகி விட்டது என கூறப்பட்டதால் மறு நாள் கிளம்பும் வகையில் Cathay Pacific Airlinesல் பயணச் சீட்டுக்களை வாங்கி கொண்டு கிளம்பி வந்தார்கள்.

அனைவரும் ஒன்றாக கிளம்பி செல்வதாக தானே ஏற்பாடு? நான் அவர்களுடன் பயணிக்கப் போவதையே அவசரத்தில் மறந்து விட்டு என் பயண நாளான May 6 க்கு அடுத்த நாள் வேறு Airlines ல் பயணிக்க அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் பயணச் சீட்டுக்கள் வைத்திருந்தார்கள்.

அவர்கள் சென்னையில் வந்திறங்கியதும் தான் மற்ற விவரங்கள் தெரிந்தது.   புரிந்தது.

ஏர்லைன்ஸ் மாற்றினால் பண விரயம் என்பதால் உன் பயணத் திட்டப்படி முதல் நாளே கிளம்பி சென்று எங்கள் நண்பரின் வீட்டில் இருந்து கொள்24 மணி நேரங்கள் கழித்து வந்து அழைத்து செல்கிறோம் என்று கூறி  விட்டார்கள்.

தனியாக அதுவும் ஒரு நாள் முன்னதாக போவது பற்றி நான் தயங்கிய போது மகளது கருத்து: அம்மா நீ பல முறை தனியாக பயணித்திருக்கிறாய்; நன்றாக படித்திருக்கிறாய்; ஆங்கிலம்

பேசத் தெரியும் என்ன தயக்கம்?

உண்மை தான்.

இது பற்றி கூறுகையில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் அலுவலக நாட்களில் மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த எங்கள் நிறுவன projectல் வேலை செய்ய சென்னையிலிருந்து என்ஜினீர்களை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டியிருந்தது. அதில் ஒருவர் M.Tech., Gold medalist. [இவரை Mr. B எனக் குறிப்பிடுகிறேன்] ஆறு பேர் கொண்ட குழுவாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். பயண நாளன்று Mr. B மேடம் நீங்களும் விமான நிலையத்திற்கு எங்களை வழியனுப்ப வருவீர்களா? அங்கே எந்த ஊருக்கு செல்ல வேண்டும்? [Employment letter படிக்கவே இல்லை போலும்] யார் வந்து அழைத்து செல்வார்கள்? எப்படி அடையாளம் காண்பது என பல சந்தேகங்கள் கேட்டு துளைத்து விட்டார். அவர்களை இரவு 10 மணிக்கு விமான நிலையம் சென்று வழியனுப்பி விட்டு வந்தேன்.   

சிறிது கால இடைவெளியில் அதே இடத்திற்கு சமையற்காரர் ஒருவரையும் அனுப்பினோம். பயண தினத்தன்று அலுவலகம் வந்த அவர் என்னை சந்தித்து, மேடம் என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை (தனிக் காகிதத்தில் இருக்கும்) கொடுங்கள் என்கிறார்.

என் முன் அனுபவங்களின் அடிப்படையில் அவர் வேறென்ன சொல்ல போகிறாரோ என காத்திருந்தேன்.

பேருந்தில் ஏறி மலேசிய சிங்கப்பூர் எல்லையில் இருக்கும் அந்த இடத்திற்கு சென்று விடுகிறேன் மலேசியா அலுவலக தொலைபேசி எண் மற்றும் விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதி கொடுங்கள். உதவி தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்கிறேன் என்றார். [உங்களுக்கு படிக்க தெரியுமா அண்ணே? தெரியாது மேடம், என் கையெழுத்து மட்டும் போடுவேன் என்றார்]

பயணத்திற்கு படிப்பு அவசியமில்லை சமாளிக்கும் திறமை போதும் என்று எனக்கு புரிய வைத்த சம்பவம் இது.

பயண நாளும் வந்தது. சான் பிரான்சிஸ்கோவில் நம்பர் ஒருவர் வந்து அழைத்து செல்வார் என்று கூறப் பட்டது. முன்பே அறிமுகமான குடும்பம் தான் என்பதால் சிரமம் இல்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்சில் முன்பே பயணித்த அனுபவம் உண்டென்பதால் இரவு 11 மணிக்கு கிளம்பிய விமானத்தில் ஏறி அமைதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் .

இருவர் மட்டும் அமரும் இருக்கையில் ஜன்னல் அருகில் நான். என் அருகில் ஒரு ஆண் பயணி வந்தமர்ந்தார். எந்த சலனமும் இல்லாமல் நான் இருந்ததை பார்த்து, தன்னை ஒரு மருத்துவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். கடலூர் பாண்டிச்சேரி எல்லையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதாக கூறினார்.

Dr:  மேடம் நீங்கள் வேலைக்கு செல்பவரா?

நான்: சில வருடங்கள் முன்பு வரை. ஆனால் தற்போது இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?

Dr: பொதுவாக தனியாக பயணம் செய்யும் பெண்கள் பயப்படுவார்கள், ஆண்களின் உதவியை நாடுவார்கள், ஆண்களின் அருகில் அமர்ந்து பயணிக்க தயங்குவார்கள்.

நீங்கள் எதற்கும் அசராமல் மிக இயல்பாக இருப்பதால் தான் கேட்டேன்.

நான்: எனக்கு தனியாக பயணம் செய்து பழக்கம் உண்டு. மேலும் பயப்படவோ தயங்கவோ எதுவும் இல்லை.

இப்படி ஆரம்பித்த எங்கள் பேச்சு சிங்கப்பூரை சென்றைடையும் வரை நீடித்தது. அவருக்கு அது முதல் வெளிநாட்டு பயணம். Thoracic medicine conference ஒன்றிற்காக ஷாங்காய் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

திரும்பி வரும் போது அவரது விமானம் பகலில் சிங்கப்பூரை அடைவது போல இருந்தது என்பதால் சிங்கப்பூரின் இரவு நேரக் காட்சியை கண்டு களியுங்கள் அடுத்த விமானத்தில் தூங்குங்கள் என்று கூறி நான் அவரை தூங்கவும் விடவில்லை. :)

சிங்கப்பூர் ஒரு தீவு என்பதால் விமானத்திலிருந்து தெரியும் விளக்குகளுடன் கூடிய சிறு படகுகளும், ஊரின் கட்டிடங்களும் ஜொலித்தன. பகலிலும் அழகாக தெரியும் நகரம் இது.

சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியது. Roll on பெட்டியை இழுத்துக் கொண்டு சான் பிரான்ஸிஸ்கோ விமானம் எங்கே நிற்கிறது என்று தேட ஆரம்பித்தேன். அடுத்த விமானத்திற்கு 3.30 மணி நேரங்கள் இருந்தன.

சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் வீட்டிற்கு தகவல் தர வேண்டுமே என நினைத்து WiFi password எங்கே கிடைக்கும் என தேடினேன். மற்ற விமான நிலையங்களை போல தொலைபேசியை on செய்தாலே WiFi தொடர்பு கிடைக்காது. நம்முடைய பாஸ்போர்ட்டை அதற்கான இயந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்தால் தான் password கிடைக்கும். எட்டு மணி நேரங்கள் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் எந்த Gate எந்த விமானம் எந்த ஊர் என விவரங்கள் அடங்கிய Display board அருகில் ஆங்காங்கே ஊழியர்கள் வழிகாட்டுவதற்காகவே நின்று கொண்டிருப்பார்கள். நாங்கள் இறங்கிய டெர்மினலின் கடைசியில் உள்ள Gateல் தான் விமானம் நிற்கிறது என்றார் வழிகாட்டி. கடைசி gate செல்ல சில கிலோமீட்டர்கள் Sky trainல் பயணிக்க வேண்டும்.

அதே விமானத்தில் San Francisco செல்லும் பெண்மணி ஒருவரும் உடன் வந்தார். மருத்துவருக்கும் நான் செல்ல வேண்டிய Gate க்கு அருகில் தான் செல்ல வேண்டியிருந்தது என்பதால் மூவருமாக Sky trainல் ஏறினோம்.அதில் செல்வது முதன்முறை என்பதால் துணையுடன் சென்று விட எண்ணி WIFI password எடுக்காமல் சென்று விட்டேன்.

மருத்துவருடன் தொலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டு பிரியா விடை பெற்றுக் கொண்டு பிரிந்தோம்.[ இன்றளவும் அவருடன் தொடர்பில் உள்ளேன்.]

கடை........சி gate. விமானம் நின்று கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு சிறிது தொலைவில் restrooms மற்றும் குடிதண்ணீர் மட்டுமே இருந்தது. மற்றபடி கடைகளோ, WIFI boothகளோ இல்லை. சுற்றி சுற்றி நடந்து தேடினேன். இருந்த ஒரு boothம் வேலை செய்யவில்லை. குடும்பத்தினரின் தொடர்பு எல்லைக்கு வெளியே 24 மணி நேரங்கள் இருந்தேன் அந்த பயணத்தில்.

உடன் வந்த பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தால் yes, no தவிர எதுவும் பேசவில்லை. யாரும் இல்லாத அந்த gateல் அமைதியாக 3 மணி நேரங்களை கழித்து விட்டு அடுத்த விமானத்தில் ஏறினேன்.

குறிப்பிடும் படியான சம்பவங்கள் எதுவும் இல்லாமல் SFO சென்றிறங்கினேன்.

வரவேற்க வந்த நண்பரது குடும்பத்தினரை எனக்கு முன்பே அறிமுகம் என்பதால் எந்த சங்கடமும் இல்லை. உங்கள் மகன் வீட்டிற்கு வர அனுமதி கேட்பீர்களா அம்மா என்று அன்பாகக் கடிந்து கொண்டார் நண்பர். அருமையாக உபசரித்தார்கள். விமானத்தில் சாப்பிடாமல்?! வந்திருப்பீர்கள் என்று கூறி 5 பேருக்கான உணவை எனக்கு மட்டும் சமைத்து வைத்திருந்தார் அவரது மனைவி. :)

இரவு நன்றாக உறங்கினேன். சென்றிறங்கிய முதல் நாள் பயண அசதியில் தூக்கம் வரும். அதன் பிறகு தான் jetlag ஆரம்பம் ஆகும்.

மகள் அச்சமயம் Cupertino நகரில் Apple நிறுவன அலுவலகங்கள் அமைந்த தெருவுக்கு மிக அருகில் வசித்து வந்தார்.

மகள் குடும்பத்தினரே இல்லாமல் நான் அங்கே ஒரு நாள் முன்பாக சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அந்த பயணத்தின் முக்கிய நோக்கம் கோடை விடுமுறை சமயத்தில் பேரன்களுடன் பொழுது போக்குவது. அவர்களை பகல் முழுவதும் engage செய்வது எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கு சமம். [Intellectual entertainment என சொல்லலாம்] Babysitting இல்லை. சின்ன பேரனுக்கே அந்த சமயம் நான்கு வயதாகி இருந்தது.

அங்கே சென்றிறங்கிய மறுநாளே நண்பரின் மகளது தமிழ் மொழிப் பள்ளியின் ஆண்டு விழா, மதர்ஸ் டே, சம்ஸ்க்ருத பாரதியின் சம்ஸ்க்ருத பள்ளியின் ஆண்டு விழா, திருப்பதி சின்ன ஜீயர் அவர்களால் நடத்தப்படும் JET USA எனப்படும் அமைப்பின் கீழ் நடைபெறும் ஆன்மீக வகுப்பு பள்ளியின் ஆண்டு விழா, ராமானுஜரின் 1000 ஆவது பிறந்த நாள் விழா[ஸ்ரீ ராமானுஜர் ஷ்ரீ ழாமானுஜாவானார்] எனப் பல விழாக்களில் பார்வையாளராககலந்து கொண்டேன்.

கலை நிகழ்ச்சிகளில் பேரன்கள் பங்கு பெற்றனர். அது தவிர சின்ன பேரனின் Graduation dayவில் கலந்து கொண்டு, குட்டீஸ்களின் Montessori Montessori where we go everyday ... ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்தோம்.

மகளுக்கு சற்று உடல் நல குறைவு ஏற்பட்ட சமயத்தில் பெரிய பேரனை பக்கத்தில் இருந்த Robotics வகுப்பிற்கு அழைத்து சென்று வந்தேன்.ஐந்து நாட்கள் 9-3 pm வகுப்புக்கள். 300$ கட்டணம். பேரன் கேஷவ் அந்த வகுப்பிற்கு துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்புவார்.

கடுமையான வெயில் அந்த சமயத்தில். நம் நாட்டை போல அல்லாமல் அங்கே வெயிலின் தன்மை வேறு மாதிரி உள்ளது. அவர்களின் வார்த்தையில் weird. தாகம் அதிகமாக உள்ளது. அந்த ஊரில் வெயில் 100F க்கு போனாலே அரசாங்கம் Heatwave alert அறிவிக்கிறார்கள். நூலகத்தில் A/C உள்ளது அனைவரும் அங்கே வந்து இருங்கள் என ஜீப்பில் அறிவித்து கொண்டே செல்கிறார்கள். [மழைக்கும் இதே போல தான். பத்து துளி சேர்ந்தாற்போல் மழை பெய்தால் Flood alert தரப்படும்]

வீட்டிற்கு பின்புறம் மிகப் பெரிய பூங்கா. ஒரு முறை சுற்றி வர 15-20 நிமிடங்கள் ஆகும். அந்த பகுதியின் அனைத்து வீடுகளும் பூங்காவிற்கு செல்லும் வகையில் அமைந்திருக்கும்.

அங்கே மதியம் 12 மணியளவில் கூட கடும் வெயிலில் sunny sunny என்று மகிழ்ச்சியாக football விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பகுதியில் மாதக் கணக்கில் கட்டி முடிக்கப் படாத நிலையில்  பல வீடுகள் இருந்தன.

நம் நாட்டை போலவே அங்கேயும் கொத்தனார்கள் வீடுகளில் அஸ்திவாரத்திற்கான பள்ளம் தோண்டி விட்டோ அல்லது வேறு வேலைகளையோ பாதியில் நிறுத்தி விட்டு ஆப்பிள் நிறுவன ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்டமான அலுவலகக் கட்டிட வேலைக்கு சென்று விடுவார்கள்.

மாலை பூங்காவிற்கு வரும் நம் நாட்டவர்கள் இது பற்றி கூடிக் கூடிப் பேசுவார்கள்.வீட்டின் பின் பக்க கதவு திறந்தவுடன் பூங்கா ஆரம்பம் என்பதால் நேரம் காலம் இல்லாமல் அந்த பூங்காவிலேயே இருப்போம்

காலையில் ஓரிருவர் மட்டுமே வருவார்கள். மாலையில் தான் 20-30 பேர் வந்து செல்வார்கள். மற்ற நேரங்களில் நம்முடைய சொந்த பூங்கா தான் அது.

கோடைகாலம் என்பதால் இரவு 9 மணி முடிய வெளிச்சம் இருக்கும். மாலை 5 மணியளவில் மக்கள் வர ஆரம்பிப்பார்கள்.

ஆங்கிலம் பிரதானமாக இருந்தாலும் தமிழில் பேசி தெலுங்கில் மாட்லாடி கன்னடத்தில் சொல்பா மாத்தாடி இந்தியில் நை மாலும் சொல்லி அனைவரிடமும் நட்பு பாராட்டினேன்.

பூங்காவின் நடுப்பகுதியில் பிரதி வெள்ளிக்கு கிழமை காலை 8 - 2 மணி உழவர் சந்தை நடைபெறும். காலை 8.30 மணிக்கே சென்று விடுவேன். அச்சமயத்தில் தான் சென்றால் தான் கீரைகள் கிடைக்கும். அங்கு வசிக்கும் சீன மக்கள் கீரைப் பிரியர்கள். ஒவ்வொருவரும் 10 கட்டு வாங்கி செல்வார்கள்.

விதம் விதமான காய்கறிகள், பழங்கள், உணவு பண்டங்கள், ஐஸை சீவி சாயம் சேர்த்து குச்சி ஐஸ் கப் ஐஸாக்கி தருதல், பாப்கார்ன், hotdog என விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக விற்பனை செய்வார்கள்.

வீட்டு வாசலில் ஐந்து வீடுகளுக்கு பொதுவான washer dryer அறை இருக்கும். எங்களது முறை செவ்வாயன்று வரும். காலை 5.30 க்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு தான் முடியும். அது பற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.

பூங்காவுக்கு சென்று சம வயதினருடன் பேசி விட்டு வா அம்மா, மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பார் என் மகள். அநேக நாட்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு மண்டை குடைச்சல் ஏற்பட்டது தான் மிச்சம்.

பகல் முழுவதும் இரண்டு பேரக் குழந்தைகளை கவனித்து விட்டு, மாலையில் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இரவு உணவையும் சமைத்து விட்டு ஓய்ந்து போய் ஒரு தம்பதி பூங்காவிற்கு வருவார்கள். [மருமகள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவார் அவருக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள பச்சடி தான் வேண்டும்]

பார்க் என்று ஒன்று இருக்கிறதோ பாயைப் பிரண்டாமல் இருக்கிறேன் என்பார்  அந்தப் பெண்மணி.

பூங்காவில் காலை வேளைகளில் வர விரும்பிய பெண்மணி ஒருவர், ஒரு வயது பேரக் குழந்தைக்கு காலை 8.30க்கு தான் வாளப் பளம் குடுக்க சொல்றாங்கோ என்பார்.[பெங்களூரை சேர்ந்தவர்]

சிலர் பெற்றோருக்கு Green card /Citizenship வாங்கி தந்துள்ளார்கள். இவர்களால் நினைத்த நேரத்திற்கு இந்தியா வந்து செல்ல முடிவதில்லை. வேரை விட்டு விலகிய விழுதுகளாக இவர்கள் அங்கே வாழ்கிறார்கள். பிள்ளைகள் யாரும் எங்கள் பேச்சை கேட்பதில்லை, நம் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை, பூஜைகள் செய்வதில்லை என பல குறைகள் அவர்களுக்கு.

இப்படி பல கதைகளை கேட்க நேர்ந்தது.

அக்டோபர் ஆரம்பித்தால் ஒவ்வொருவராக இந்தியா கிளம்பி விடுவார்கள். குளிர்காலத்தில் அங்கே இருக்க பெரியவர்கள் விரும்புவதில்லை.

இதையெல்லாம் தாண்டி பங்கஜா என்ற மூத்த பெண்மணி அனைவரையும் அரவணைத்து வழி நடத்துவார். தனி வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு எலுமிச்சம் பழங்களை கொண்டு வந்து தருவார்கள்

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அநேகமாக ஹிந்தி மொழி தெரியவில்லை என்பதால் தங்களுக்குள்ளேயே குழுவாக அமர்ந்து பேசிக் கொள்வார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாருடனும் பேசுவார்கள்.

சீன நாட்டை சேர்ந்த முதியவர்கள் காலை பத்து மணியளவில் இசையுடன் மெல்லிய அசைவுகளுடன் கூடிய நடன உடற்பயிற்சி செய்வார்கள்.

தங்களை தாங்களே கைகளால் உடலின் குறிப்பிட்ட பாகங்களில் அடித்துக் கொள்வார்கள். இது ஒரு வகை மருத்துவம். Self-cure medication methods எனக் கொள்ளலாம்.

https://rationalwiki.org/wiki/Paida_lajin

50க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் கூடி ஒரு நாள் மாலை potluck விருந்துண்டோம். [அம்மா எங்கு சென்றாலும் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்கிறார்_ என் மருமகனது விமர்சனம்]

ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினம். பின்னால் உள்ள பூங்காவில் இரவு ஒன்பது மணி fireworks காண காலை 7 மணியிலிருந்தே மக்கள் கூட தொடங்கி விட்டார்கள். Temporary toilets அமைக்கப் பட்டன. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு முன்பே traffic மாற்றங்களை அறிவித்தார்கள். பல மைல்களுக்கு முன்னால் பார்க்கிங். நடந்து தான் வர வேண்டும். மக்கள் டென்டுகளை அமைத்துக் கொண்டு அங்கேயே உண்டு உறங்கி விளையாடி இரவுக்காகக் காத்திருந்தார்கள். [Fireworks பல மைல்களுக்கு அப்பால் ஓரிடத்தில் என்பது தான் இங்கே செய்தி. பூங்காவில் பாதுகாப்பாக அமர்ந்து காணலாம். ஆங்காங்கே Fire engines நின்று கொண்டிருக்கும்]

8.59க்கு பின் கதவை திறந்து கொண்டு சென்று மிதமான குளிரில் புல்வெளியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து முதல் நாள் 3000 பேர் கூடினார்களே பூங்கா எப்படி இருக்கிறது என்று பார்த்தேன் .

பளிங்கு போல் சுத்தமாக ஒரு சிறு குப்பை கூட இல்லாமல் இருந்தது. 3000 பேர் கூடிய இடமா என வியப்பாக இருந்தது.

வழக்கம் போல் பூங்காவில் irrigation முறையில் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

May தொடங்கி நண்பரின் MS convocation (San Jose State University), சகோதரி மகளின் பாரத நாட்டிய அரங்கேற்றம் , பள்ளி விழாக்கள், கராத்தே பள்ளியில் பேரனின் Belt வாங்கும் நிகழ்ச்சி, சான் பிரான்ஸஸிஸ்கோ நகரின் அறிவியல் அருங்காட்சியகம் , கணினி அருங்காட்சியகம் என அவ்வப்போது சென்று வந்தோம்.

மகளின் குடும்பம் புது வீடு வாங்க விரும்பிய சமயம். Second hand வீடு தான் என்றாலும் அங்கே வீடு வாங்குவது என்பது நம் நாட்டினை போல இல்லை.

நம் நாட்டில் ஒரே தரகரே வீட்டை விற்க ஏற்பாடு செய்து விட்டு வாங்குபவர் விற்பவர் இருவரிடமும் கமிஷன் பெற்றுக் கொள்வார். அங்கே Buying agent, Selling agent என தனித் தனியாக License பெற்று செயல்படுகிறார்கள்.

எங்களுடைய Buying agent ஒரு தென்னிந்தியர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

வீட்டை விற்க விரும்புபவர் வாங்க விரும்புபவர்கள் வீட்டை சுற்றி பார்க்க வகை செய்யும் Open House எனப்படும் நிகழ்வு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில நடைபெறும் என தங்கள் Agent மூலம் தகவல் அறிவிப்பார்கள். அவர் மற்ற Buying agentகளுக்கு விளம்பரப்படுத்துவார். வாங்க விரும்புபவர்கள் தங்கள் ஏஜென்ட்டுடன் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். நாம் வீட்டின் உள்ளே சென்று பார்க்கலாம்.

விலை விபரங்களை முன்பே கூறி விடுவார்கள் என்பதால் அமைதியாக பார்த்து விட்டு வரலாம். வீட்டு சொந்தக் காரர்கள் இருக்க மாட்டார்கள். நம் ஏஜென்ட் அவருடைய business card அங்கே வைத்து விட்டு வருவார்.

எங்கள் அனுபவத்தையும் பகிர்கிறேன்.

ஒவ்வொரு வார இறுதி நாளிலும் மதிய உணவுக்கு பின் அனைவரும் கிளம்பி செல்வோம். ஒரே நாளிலே யே 3,4 வீடுகளுக்கு  கூட open house சென்றோம்.

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருந்தது.

ரகசியமாக(?!) வீடு தேடும் படலத்தில் இருந்த சிலரையும் இந்த Open House நிகழ்வுகளில் சந்தித்தோம்.

மாடிப்படியுடன் கூடிய வீடுதான் வாங்க வேண்டும் என்பது பேரன்களின் வாதம். என்ன காரணம் என நான் கேட்டேன். அம்மா அடிக்க வந்தால் மாடிக்கு ஓடி ஒளிய வசதியாக இருக்கும் என்றார்கள். :)

வீடு பிடித்திருந்தால் வீட்டு சொந்தக்காரருக்கு நாம் ஈமெயில் செய்ய வேண்டும். நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, விலை கூடுதலாக இருக்கிறது இத்தனை டாலர்கள் குறைத்துக் கொள்ளுங்கள் என பேரமும் செய்து மெயில் அனுப்பலாம்.

வீட்டு சொந்தக்காரர் நம்முடைய financial credibility சரிபார்த்து விட்டு திருப்தியாக இருந்தால் விற்பனை செய்வார். இல்லையென்றால் முடியாது என பதில் வரும். அவர் கூறிய விலைக்கு குறைவாக நாம் கேட்டாலும் கைமேல் பணம் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவும்  தயங்க மாட்டார்கள்.

இது ஒரு விற்பனை முறை. மற்றது ஏலத்துக்கு விற்பது. Online bidding. தேதி, நேரம் சொல்லி விடுவார்கள். யார் நமக்கு போட்டியாளர் என தெரியாமல் ஏலம் எடுக்கலாம். Highest bidder யாரோ அவருக்கு வீடு சொந்தம்.

சரி , வீட்டை விற்பனை முடிந்தது.

Documentation, பண பரிமாற்றம் எப்படி என பார்ப்போமா?

Bank Paperwork, Registrar office Paperwork அனைத்தும் ஈமெயில் மூலமாகவே நடைபெறுகிறது. நாம் Digital Signature இணைத்து அனுப்ப வேண்டும். 10 நாட்கள் கழித்து தபாலில் அந்த டாக்குமெண்ட் வந்து சேரும்.

கணவனும் மனைவியும் சேர்ந்து தான் வீட்டை வாங்க முடியும். இருவரும் guarantee தர வேண்டும். [அவர்கள் கலாச்சாரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிதல் சகஜம் என்பதால் இந்த ஏற்பாடு]

வங்கிக்கடன் sanction ஆனதும் escrow account ல் அந்த பணம் இருக்கும். [temporary account என வைத்துக் கொள்வோம்]. எல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் Registrar அலுவலக ஊழியர்கள் நம் வீட்டிற்கே நேரில் வந்து நம்மை சந்தித்து, interview செய்து விட்டு, கையெழுத்து வாங்கி செல்வார்கள். Escrow account ல் உள்ள பணம் விற்றவருக்கு மாற்றப்படும்.

வீட்டு பத்திரம் சில நாட்களில் சாதாரண தபாலில் வந்து சேரும். [ஈமெயிலில் முதலில்]

தேடி தேடி பார்த்த வீடுகளில் எதையும் தேர்ந்தெடுக்காமல், திடீரென்று ஒரு நாள் காலை மகளும் மருமகனும் மட்டும் சென்று ஒரு வீட்டை பார்த்து விட்டு அன்று மாலையே நடைபெற்ற online biddingல் பங்கு பெற்று வென்று அந்த வீட்டையே  வாங்கினார்கள்.

நானும் பேரன்களும் பின்னொரு நாளில் அந்த வீட்டிற்கு அழைத்து செல்லப் பட்டோம். அந்த வீட்டின் சொந்தக்காரப் பெண்மணி டிஸ்னி லேண்டில் வேலை செய்தவர் என்பதால் மொத்த வீட்டையும் டிஸ்னி தீமில் அமைத்திருந்தார்.

பொதுவாக வெளி நாட்டவர்கள் use and throw முறையில் தான் பொருட்களை வாங்கி வாழ்வார்கள் என நினைத்திருந்தேன். அந்த வீட்டு ஐயாவும் அம்மாவும் 32 வருடங்களாக நாங்கள் எதையும் தூக்கி எறியவில்லை பழுது பார்த்து உபயோகிக்கிறோம் என்கிறார்கள். வீடு முழுவதும் சாமான்கள், ஜன்னல் வழியாக வெளிச்சமே வராத அளவுக்கு எங்கெங்கு காணினும் சாமான்கள். ஒற்றையடி நடை பாதை மட்டுமே வீடு முழுவதும். [நாம் வருவதாக சொன்னதால் இன்று வீட்டை சுத்தப் படுத்தி இருக்கிறார்கள் அம்மா என்றார் என் மகள்]

வீட்டை சுற்றிலும் பூச்செடிகள். எதிரில் மலைத் தொடர் என அழகான சுற்று சூழலுடன் கூடிய வீடு.

ஜூலை இறுதியில் வீட்டு பதிவு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் மாத மத்தியில் பள்ளிகள் திறக்கும் முன்பாக புது வீட்டிற்கு அருகில் பேரன்களை சேர்க்க  வேண்டிய வேலை அடுத்ததாக வந்தது.

இடையில் ஒரு வாரம் இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்லக் கிளம்பினோம். வழியில் விபத்து காரணமாக கிராம சாலைகளின் வழியே செல்ல நேர்ந்தது  ஆடு, கோழி,குதிரை, பன்றி, மாடு என சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. வழியெங்கும் ஜீன்ஸ் அணிந்த விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு lakeல் நாமே காலால் பெடல் செய்யும் வகையிலான அன்னப்பட்சி வடிவ படகில் ஏறி கிளம்பினோம். நடுப்பகுதி வரை சென்று விட்டோம். பெடல் செய்து மீண்டும் கரைக்கு திரும்பி வருவதற்குள் என் pulse மிக அதிகமாகி நடக்க சில நிமிடங்கள் ஆனது. சிரமங்களுக்கிடையில் சென்றதால் எந்த ஊருக்கு சென்றோம் என்பது கூட என் நினைவில் இல்லை.

நம் நாட்டை போல Electric connection வீட்டை வாங்கியவர் பெயரில் தான் இருக்க வேண்டும். வீட்டை விற்றவர் காலி செய்ய ஒரு மாத அவகாசம் கேட்டிருந்தார். EB யில் மருமகனின் பெயர் இருந்தால் தான் address proof ஆகப் பள்ளியில் தர முடியும். ஒரு மாதம் ஆனதும் ஒரு நாள் காலை மருமகன் EB அலுவலகத்திற்கு தொலைபேசி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். காலை 10 மணிக்கு websiteல் பார்த்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இங்கே வீடு வாங்கிய போது என்ன செய்தோம் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. இன்றளவும் இதே நிலை தான்.

10 மணிக்கு பள்ளிக்கு சென்று application பதிவு செய்தோம்.

புது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் சின்ன பேரனுக்கு சற்று தொலைவில் பெரிய பேரனுக்கும் சேர்க்கை நடந்தது.

ஒரு section க்கு 24 மாணவர்கள் மட்டுமே.



பள்ளி வகுப்புக்கள் பருவ காலங்களுக்கு ஏற்ப air conditioner உடன் அமைந்துள்ளன. தற்போது கொரோனா காரணமாக sanitizerஆல் கையை சுத்தம் செய்வதும் மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியும் எப்போதுமே அங்கே பின்பற்றப் படும் பழக்கம் தான்.

அரச பள்ளிகளில் சேர்ந்து படிப்பது அங்கே கௌரவத்திற்குரிய ஒரு செயலாகக் கருதப்படுகிறது.

வகுப்பறைகளை எண்களைக் கொண்டு வகைப்படுத்துகிறார்கள். சின்ன பேரன் அரை எண் 3, பெரியவன் 12

மதிய உணவு உண்ணவும் தனியாக பெரிய இடம். அங்கே அறை எங்களுடன் கூடிய பெஞ்சுகள்.

வருட ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் voluntary service செய்யும் எண்ணம் உடையவர்களாக இருந்தால் பதிவு செய்ய கோருகிறார்கள்.

பள்ளி நேரத்தில் அவரவர் குழந்தை படிக்கும் வகுப்பில் ஆசிரியைக்கு உதவலாம், மதிய உணவு நேரத்தில் மேற்பார்வை செய்யலாம், Field trip செல்லும் போது உதவலாம் இப்படி பலவும் உண்டு.

ஆகஸ்டு மாத மத்தியில் பள்ளிகள் தொடங்கி விட்டன. பேரன்கள் இருவருக்கும் வெவ்வேறு பள்ளிகளில் இடம் கிடைக்க, ஆரம்பித்தது அடுத்த ஊர்வலம்.

செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே அக்டோபர் இறுதி நாளில் வரும் ஹாலோவீன் பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விடும். ஆங்காங்கே ஊருக்குள் Pumpkin patch அமைத்து பரங்கிக்காய்களை விற்பனை செய்வார்கள்.

பள்ளிகளில் பரங்கிக்காயை கொண்டு உருவங்களை வடிவமைக்கும் போட்டி வைத்து பரிசளிப்பார்கள்.

நம் ஊரில் கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றுவது அங்கே அக்டோபரில் பரங்கிக்காயைக் குடைந்து அதனுள்ளே மெழுகுவர்த்தியை ஏற்றுவார்கள்.

செப்டம்பரில் புது மனை புகுவிழா என்பதால் பத்து நாட்கள் முன்பே மகளின் மாமனார் மாமியாரும் வந்து சேர்ந்திருந்தார்கள்

Freeway யில் 40 நிமிட பயணம் என்பதால் காலை உணவை கையில் கொடுத்து தகப்பனுடன் காரில் 7.15 க்கே அனுப்பி விட வேண்டும். 11.30 கு சிறியவனுக்கு பள்ளி முடிந்து விடும்.தாயார் அழைத்து வருவார். Car-pooling lane ல் சென்றால் வேகமாக செல்லலாம் நெரிசல் இருக்காது என்பதால் மகளின் மாமனாரும் உடன் செல்வார். வந்து மதிய உணவு உண்டதும் மீண்டும் 2 மணிக்கு பெரியவனை அழைக்க செல்வார். அடுத்து 4 மணிக்கு கராத்தே வகுப்பு. வீட்டுக்கு வந்தால் வாரம் இரண்டு நாட்கள் online பாட்டு வகுப்பு. சிறியவனுக்கு அடுத்த வீட்டில் பியானோ வகுப்பு. [வகுப்பு நேரத்தில் மாஸ்டரின் குட்டி பாப்பாவை நாம் பார்த்து கொள்ள வேண்டும். அவரின் தாயார் பியானோ ஸ்கூல் நடத்துபவர்] இந்த பயணம் தினமும் இரவு 7க்கு முடியும்.

பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு மாறி செல்ல 45 நாட்கள் இருந்த நிலையில் பல அனுபவங்கள். புது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குதல், வீடு புதுப்பித்தல், பேக்கிங் என மகளின் மாமனார் மாமியாருடன் சேர்ந்து அலைந்து சோர்ந்த (கடும் வெயில்) நாட்கள்.

[மருமகன் அவரது தாயாரிடம்: அம்மா cold and hot water இரண்டும் ஒரே குழாயில் வருவது போல் உள்ளது பார்க்க நன்றாக இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வீட்டு பாத்ரூமில் பொருத்திக் கொள்ளுங்கள் வாங்கி தருகிறேன்

அவரது தாயார்: எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீரே வருவதில்லை]

இடையில் நவராத்திரி தினங்கள் வர நட்பூக்களின் வீடுகளுக்கும் அவ்வப்போது சென்று வந்தோம்.

புது மனைக்கு செல்ல வேண்டிய சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வெய்யில் 110F வரை சென்றது. கடும் வெயிலில் மின்சார அடுப்பில் சமையல். வீடே கொதிக்கும். [அட்டை வீடு]

அங்கே AC கிடையாது. Fan கிடையாது. தேவையென்றால் நாம் தான் சொந்தமாக வாங்கி வைத்து உபயோகிக்க வேண்டும்.

10 பேர் அந்த சிறிய அபார்ட்மெண்டில் உறங்கி விழா தினத்தின் காலையில் 3 மணிக்கே எழுந்து இட்லி, பொங்கல், சர்க்கரை பொங்கல், கொத்சு, சட்னி என ஆளுக்கு ஒன்றாக செய்து எடுத்துக் கொண்டு புது வீட்டிற்கு சென்று பூஜைகளை முடித்தோம்

மீண்டும் மாலை நேர பூஜையில் 50 பேர் பங்கெடுத்து கொண்டதால் அவர்களுக்கான உணவுகளையும் வீட்டிலேயே சமைத்தோம். டப்பாக்களில் அவைகளை (புளிசாதம் தயிர் சாதம் கேசரி, சுண்டல், மைசூர்பாகு) போட்டு தயார்
நிலையில்
வைக்க 5 பேர் கொண்ட குழுவாக வேலை செய்தோம். வித்தியாசமான அனுபவம்.

அடுத்த 20 நாட்களில் குடிபெயர்ந்தோம். சாமான்களை சுமாராக அடுக்கி வைத்து விட்டு மறுநாளே கேசவ் கண்ணீர் விட்டு வழியனுப்ப சென்னையை நோக்கிய என் பயணத்தை தொடங்கினேன்.

அனுபவங்கள் தொடரும் ...

பின் குறிப்பு :

நான்காவது வட அமெரிக்க பயண சமயத்தில் எழுதிய பதிவுகளின் link களை இங்கே பதிவு செய்துள்ளேன்

1.WASHING EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/08/blog-post.html?view=flipcard

2.SHOPPING EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/09/blog-post_16.html?view=flipcard

3.AMERICAN SUMMER EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/09/blog-post.html?view=flipcard

4.SOCIAL MEDIA EXPERIENCES

https://manjooz.blogspot.com/?view=flipcard

5.BLUE BLOOD – NETFLIX

https://manjooz.blogspot.com/2017/08/blue-blood.html?view=flipcard

6.PEOPLE OF CA

https://manjooz.blogspot.com/2017/08/blog-post_5.html?view=flipcard

7.HOUSE HUNTING

https://manjooz.blogspot.com/2017/08/blog-post_19.html?view=flipcard

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 















No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...