Saturday, 16 September 2017

கடைக்கு போலாம் கைவீசு .....

பல வருடங்களுக்கு முன்பு .....

வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் , ஊருக்கு வரும் போது பரிசுப் பொருட்கள் வாங்கி வருவார்கள். வெளிநாடு என்பது அரேபிய நாடுகள், இலங்கை, பர்மா ,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து என கோபால் பல்பொடி range தான் அதிகம் இருக்கும். அமெரிக்காவெல்லாம் மிக அரிது . அமெரிக்காவென்றால் அதிக பட்ச அன்பின் வெளிப்பாடாக ஒரு picture postcard அனுப்புவார்கள்.

அரேபிய நண்பர்கள் perfumes (ஒரு விதமான மணத்துடன் இருக்கும்) மற்றும் சேலைகள் வாங்கி வந்து பரிசளிப்பார்கள். மற்ற கிழக்காசிய நாடுகளில் இருந்து chocolates , ரொட்டி மிட்டாய் என்றழைக்கப்படும் wafers , சிறு  பிள்ளைகளுக்கு ஆடைகள்.   Kit kat chocalate bar  முதன் முதலில் சிங்கப்பூரில் விற்கப்பட்ட போது நிறைய வாங்கி வந்து தந்தார்கள். ஆசையுடன் அக்கம் பக்கத்தாருக்கு கொடுத்தது இன்னும் மறக்கவில்லை.

சரி ...flash back போதும்........

இப்போதெல்லாம் அமெரிக்கா வந்து செல்வது என்பது வாசலுக்கும் கொல்லைக்கும் நடப்பது போல ஆகிவிட்டது. (அனைத்து கண்டங்களுக்கும் இது பொருந்தும் )

ஊரின் அமைப்பு பற்றிய ஒரு சிறு அறிமுகம் முதலில் ....

அமெரிக்காவில் வீடுகள் ஒரு பகுதியிலும் கடைகள் பல மைல்கள் தள்ளி வேறு பகுதியிலும் இருக்கும். இந்தியா போல பெட்டிகடை, முக்கு கடை, நாடார் அண்ணாச்சி கடை, நாயர் டீக்கடை ,கையேந்தி பவன் எதுவும் இல்லை. கடைகளும் சிறிய அளவில் இல்லை. பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் தான்.

Wholesale - Cotsco , உணவு பொருட்கள் - Safeway , சாப்பாடு - subway , McDonald , General goods -Target , Walmart , Stationery - Staples , Art and Crafts - Michaels   உதாரணத்திற்கு சில .
அவை தவிர இந்தியன் ஸ்டோர்ஸ், Saravana bhavan,aappa kadai, anjappar ஆங்காங்கே உண்டு. இந்தியர்கள் உண்ணும்  காய்கறிகள் ,பழங்கள், கீரைகள், மளிகைப் பொருட்கள் , உணவுப் பொருட்கள், சாட் உணவுகள் என கிடைக்கும். இதே போல சீனர்கள் ஜப்பானியர்கள் என அவரவருக்கு ஏற்ற கடைகளும் உண்டு.

கடை எல்லாம் சரிதான். ஏதேனும் பொருள் வாங்கணும்னா எப்படி போவது ?  போக்குவரத்துக்கு அவரவரே கார் ஓட்டி செல்ல வேண்டும். மகளா மருமகனா?  சஸ்பென்ஸ் !! (patti, don't you know driving? press the accelator with one leg, brake with another leg, hold the steering wheel with one hand ..._ Niece's 3 year old son)

வாரம் முழுவதும் தேவையான பொருட்களின் லிஸ்ட் தயாராகும். வார இறுதியில் பால் ,தயிர் என லிஸ்டில் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பொருள் ஒவ்வொரு கடையில் கிடைக்கும். அநேகமாக standard size . Deal வரும் சமயம் பலரும் ஒரே நிற ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஜூலை 4th  அன்று ஒரு பூங்காவில் பல  பல ஆண் குழந்தைகள் என் பேரன்கள் அணிந்திருந்த சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையில் இருந்தார்கள். அநேகமாக online purchase தான். (உபயம் google express, amazon)

ஒரு பொருள் வாங்க பல நாட்கள் ஆகும் சமயத்தில் .
கடந்த முறை கூபர்டினோ வந்தபோது , என் மகனுக்கு ஒரு bike  (நம்ம bicycle தாங்க) வாங்க வேண்டி இருந்தது. Walmart  சென்று பார்த்த போது ஸ்டாக் இல்லை. ஆர்டர் போட்டு விட்டு வந்து விட்டார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு , கடைக்கு பொருட்கள்  வந்த  பிறகு அதை assemble செய்து விட்டு , ஈமெயில் அனுப்பினார்கள். மருமகனும் மகனும் SUV யில் சென்று அந்த bike ஐ வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். (கடைகள் பல மைல் தொலைவில் என்பதை நினைவில் கொள்க )

ஒரு உபரி தகவல் இங்கே.

சென்னையிலிருந்து இயங்கும் கருட வேகா கூரியர் சேவையில் வேலை செய்யும் ஒரு பெண்மணி அமெரிக்காவின் பல ஊர்களுக்கும் இந்தியாவிலிருந்து மாதாந்திர மளிகை சாமான்கள் அனுப்பப் படுவதாகக் கூறினார். ஒவ்வொரு பொருளும் 2  கிலோ அனுப்பலாம். காரணம் கேட்டபோது அவர் சொன்னது, பல ஊர்களில் கடைகள் 2  மணி நேரப்பயணத்தில் உள்ளதால் , நேரம் பணம் அலைச்சல் எல்லாம் இதனால் மிச்சப்படுவதாக கூறினார். குறிப்பாக East Coast . Silicon valley மாம்பலம் , மைலாப்பூர் போல. கடைகள் மிக அருகில் ,  மைல் தொலைவிற்குள் உள்ளன .

ஊருக்கு வேண்டிய பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவது இன்னும் சிரமமான வேலை. பள்ளி அலுவலகம் செல்லும் போது உடன் செல்ல  முடியாது , திரும்பி வரும் நேரம் (ஒவ்வொரு பேரனுக்கும் ஒவ்வொரு dispersal time .) பயல்களுக்கு பசி வந்துடும். ஷாப்பிங் போனால் அதகளம் தான்.  இரவு 8 மணி வரை ஏதேதோ வகுப்புகள். ஏற்றி இறக்கி ....
இடையில் கிடைக்கும் 10  நிமிடத்தில் நம்மை உடன் அழைத்து சென்று , சீக்கிரமா வாங்குங்க என்பார் மகள். அவ்வளவு பெரிய கடையில் நமக்கு வேண்டிய பொருள் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கவே 10 நிமிடம் போதாது , எங்கே வாங்கறது? எதற்கு போனோம் என்பதே மறந்து போகும் அநேகமாய் .

தற்சமயம் இங்கே uber இல் செல்ல முடியும் என்றாலும் தொலைபேசி இல்லாத காரணத்தால் தனியாக அனுப்ப மாட்டார்கள். (whatsapp  wifi  புண்ணியத்தில் )     நம்  கைப்பணத்தை செலவு செய்ய விடமாட்டார்கள். அவர்கள் card தான். எந்த கடையில் என்ன discount , deal , எந்த கூப்பன்(கூப்பன் இல்லே அது கூப்பான் ) எதற்கு செல்லும் , யாமறியோம் பராபரமே ! (பண்டிகை கால விற்பனை சமயத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அம்மா , வாங்கி வைக்கிறேன்)

துணிகள் நன்றாக இருப்பதாக எண்ணி எடுத்து பார்த்தால் Made in India .

எந்தக் கடையும் நடந்து செல்லும் தூரத்தில் இல்லை .....

 மிக சில இடங்களுக்கு எப்போதாவது ஒரு பேருந்து அல்லது ரயில் செல்லும். நமக்கு தேவையான கடைகள் அந்த பகுதியில் இருக்காதே ...

(இங்கு வந்து செல்லும் அனைத்து பெற்றோருக்கும் இவைகள்  பொருந்தும்.)

4 மாதங்கள் இருக்க போகிறோம் என்றால்  எப்போதெல்லாம் கடைகளுக்கு அழைத்து செல்கிறார்களோ அப்போதே ஒவ்வொன்றாக வாங்கி வைக்கணும். ஒரு கடை இல்லைன்னா மறறொரு கடை என்ற பேச்சே இல்லை.

கடைசி நிமிட ஷாப்பிங் என்பது சொல்லில் அடங்காத சிரமத்திற்கு உரியது. பச்சை நிறத்தில் கோடு  போட்ட வெள்ளை சட்டை, 7  ஆம் number செருப்பு .... என்பதெல்லாம் வேலைக்கே ஆகாது. (ஹ்ம்ம்ம் ....ஒரு செருப்பு , அதை கூட வாங்கி வர முடியலை) 10 மைல் பயணித்து கடைக்கு போனாலும் கடையில் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். வேறொரு branch க்கு பயணித்துக் கொண்டிருந்தால் விமானம் நாம் இல்லாமலே கிளம்பி விடும் .

பல பிரச்சினைகளுக்கு இடையில் நாங்கள் வாங்கி வைத்து தரும் chocalate க்கு கிடைக்கும் கமெண்ட் : இதெல்லாம் இங்கே தெரு முனை கடைலையே கிடைக்குது எதுக்கு சிரமப்பட்டு தூக்கிட்டு வந்தீங்க
Food preserving / freezer  boxes : கல் உப்பு போட்டு சமையல் மேடையில் அடுப்புக்கு அருகில் வீற்றிருக்கும் நாம் அடுத்த முறை பார்க்கும்  போது
முத்து பவழம் etc : நீ குடுத்த strand ஐ எங்கே வெச்சேன்னே நினைவில்லை ( எங்கு எப்போது bead show நடைபெறுகிறது என்று பார்த்து ,போக வர 120 மைல்கள் பயணம் செய்து வாங்கி வந்தது யாருக்கும் தெரியாது)

வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கிறேன் ....
Shopping செய்ய அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ...வார இறுதி நாட்களும் பிஸியான நாட்களே ... கோவில், பாட்டு வகுப்பு, சமஸ்க்ருத வகுப்பு, குமான் வகுப்பு, தமிழ் வகுப்பு, ஸ்லோக வகுப்பு,பிறந்த நாள் பார்ட்டிகள் , பள்ளி விழாக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகள் ........

ராமரும் கிருஷ்ணரும் விநாயகரும் தம் பிறந்த நாளைக் கொண்டாட வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம் ??

அமெரிக்கவாழ் உறவினர்களே நண்பர்களே ....

Tulsi  brand  California Prunes எங்கே கிடைக்கும் ?

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...