• எங்கே/ என்ன வேலை செய்கிறார்?
• H1B விசா உள்ளதா?
• என்ன சம்பளம்?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைத்த பின் வட அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து கடந்த சில வருடங்களாக அங்கேயே வேலை செய்யும் எங்கள் மகனுக்கு திருமணம் செய்ய தகுந்த வரனைத் தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.
ஏப்ரல் 14, 2019.
சித்திரை முதல் நாள்.
முதலில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு whatsapp குழுவை எங்களுக்குள் ஆரம்பித்தோம்.
அடுத்ததாக
• ஜாதகம்
• சமீபத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்(பல கோணங்களில் பல விதமான உடைகளில்)
• குடும்ப விவரங்கள்(Family Profile)
• மகனது விவரங்கள் (Personal Profile)
ஆகியவற்றிற்கான soft copy களை தயார் செய்து கொண்டு Matrimony Site களில் அன்றே பதிவு செய்தோம். தெரிந்தவர்கள் அனைவருக்கும் வாய் வழியாகவும் WhatsApp மூலமாகவும் தகவலை அறிவித்தோம்.
எங்கள் மகனின் ஆரம்ப கால எதிர்பார்ப்புகளான தன் மனைவியாக போகிறவர் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும், அதற்கேற்ற விசா வைத்திருக்க வேண்டும், கல்லூரி மாணவியாக இருந்தாலும் சம்மதம்(Amendment), இரண்டு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை கருத்தில் கொண்டு Matrimony siteகளில் பதிவு செய்தோம்.
மேட்ரிமோனி நிறுவனத்தார் நான்கு மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் , ஆயுட்காலம் (திருமணம் முடியும் வரை) என பல விதமான packageகளை வழங்குகிறார்கள். Silver, Gold, Premium என மாவிற்கேற்ற பணியாரமாய் (மன்னிக்கவும் பணத்திற்கேற்ற பணியாரமாய்) தொலைபேசி எண் மட்டும், விரிவான தொடர்பு தகவல் , ஜாதகம் என தகவல்கள் வழங்கப் படுகின்றன.
நாங்கள் பார்த்த 1000 profileகளில் ஏறக்குறைய 700 பேரை தொடர்பு கொண்டோம். தற்சமயம் பெண்களின் திருமண வயது 27+.
நின்ற படி , நடந்த படி, குதித்த படி, மலையேறியபடி , ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போல ஒய்யாரமாய் படுத்த படி, புடவையில், குட்டை கவுனில், தோள்பட்டையில் ஓட்டையுடன்(cold shoulder), நாய்க் குட்டியை கட்டிப் பிடித்தபடி, விளக்கேற்றுவது போல், கோவில் முன்னால், விழாக்களில், அலுவலகத்தில் என விதம் விதமான pose களில் மணப்பெண்களின் புகைப்படங்கள் காணப்படுகின்றன.
Hobbies பகுதியில் வெவ்வேறு விதமான விவரங்கள். வெகு சிலரை தவிர சமைப்பதில் எந்தப் பெண்ணுக்கும் ஆர்வம் இல்லை,. ஊர் சுற்றி பார்ப்பது, ட்ரெக்கிங் செல்வது என பல விதமான ஆர்வங்கள்.
Requirements பகுதியில் வருங்காலக் கணவன் தாடி வைத்திருக்க வேண்டும், நாய் வளர்க்க சம்மதிக்க வேண்டும், சமைக்க தெரிந்திருக்க வேண்டும் என விதம் விதமான எதிர்பார்ப்புக்கள்.
நாங்கள் தகுதியாக தோன்றும் மணப்பெண்ணின் profileஐ Matrimony siteல் தேர்ந்தெடுத்து மகனிடம் கூறுவோம். அவரோ அல்லது நாங்களோ Interested என்ற பட்டனை அழுத்த வேண்டும். இது போல் பல முறை பலருக்கும் அழுத்தியும் மாதக் கணக்கில் பதிலே வரவில்லை.
சில மாதங்களுக்கு பிறகு சந்தேகம் தோன்றி என் கணவர் குறிப்பிட்ட மேட்ரிமோனி பக்கத்தை ஆராய்ந்ததில் மணப்பெண்கள் பதிலை நேரடியாகப் பெறும் வண்ணம் தங்களின் ஈமெயில் ஐடியை தந்திருக்கிறார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்கள் பெற்றோர்களுக்கே தெரியாது எனப் புரிந்து கொண்டோம்.
அதை தொடர்ந்து பெற்றோர்களின் தொலைபேசி எண் இருக்கும் ப்ரொபைல்களை பார்த்து தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.
எங்கள் ஜோதிடர் ஜாதகங்கள் பொருந்தி இருக்கின்றன என்றால் பெண் வீட்டார் பொருந்தவில்லை என்பார்கள். [ஜோதிடர்கள் அனைவரும் ஒரே syllabus ஐ பின்பற்ற மாட்டார்களா அம்மா? _ என் மகனது சந்தேகம்]
தொடர விருப்பமில்லை என்றால் ஜாதகம் சேரவில்லை/எங்கள் வீட்டுப் பெரியவர்களை கலந்து பேசி விட்டு சொல்கிறோம் என கூறுவது திருமண நேரங்களில் சகஜம் என பின்னர் புரிந்து கொண்டோம்.
ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு பிறகு ஒரு பெண்ணின் ஜாதகம் சேர்ந்து, பெற்றோர்கள் பேசி முடித்து, அடுத்த கட்டமான பையனும் பெண்ணும் பேசும் படலம் ஆரம்பமாகியது.
பல முறைகள் தொலைபேசிய பிறகு உங்களுக்கு விரைவில் திருமணம் நிகழ வாழ்த்துக்கள் என விலகி கொண்டார் அந்த பெண். அதற்குள் சில மாதங்கள் கடந்திருந்தன.
டிசம்பர் மாதம், 2019.
வடபழனியில் வசிக்கும் பெற்றோர் எங்கள் வீட்டிற்கே வந்து எங்களுடன் பேசி, மகள் அமெரிக்காவில் படிக்கிறார் அவருடன் உங்கள் மகனை பேச சொல்லுங்கள் என்றார்கள். [எங்கள் இல்லம் சாலிகிராமத்தில் நடந்தே வரும் தூரத்தில் தான்]
மகன் அந்த பெண்ணை எப்போது தொடர்பு கொண்டாலும், அவரோ எனக்கு ப்ராஜெக்ட் submit செய்ய வேண்டும், செமஸ்டர் நடக்கிறது என கதை சொல்ல, 2019 கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள் அவரின் தாயார் எங்களை தொடர்பு கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் மகள் எங்களுக்கு surprise தரும் எண்ணத்தில் இன்று சென்னை வந்து விட்டார் நீங்கள் பெண் பார்க்க என்று வரலாம் என்று கூறுகிறோம் என்கிறார்.
மகன் முதலில் பேசட்டும் என்று தோன்றியதில் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேச சொன்னோம்.
மீண்டும் நொண்டி சாக்குகளை தொடர்ந்தார், இன்று கோவிலுக்கு போகிறோம், பாட்டி வீட்டுக்கு போகிறோம், கண்ணில் லேசர் surgery செய்து கொண்டு இருக்கிறேன் மருத்துவமனைக்கு போக வேண்டும் இப்படி தினம் ஒரு சாக்கு.
எங்கள் மகன் மிக பொறுமையுடன் இருந்தார். நொந்து போய் மேலும் காத்திருக்க விரும்பாமல் அவர்களுடனான தொடர்பை நிறுத்தினோம்.
என் மகனை வேலையை விட்டு விட்டு அவர்கள் இருக்கும் ஊருக்கு வர சொன்ன பெண்களே அதிகம்.
எங்கள் மகனும் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் வேறு ஊருக்கு, வேலை மாறி செல்லும் எண்ணத்தில் தான் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது; ஆனால் பெண்களின் முதல் கண்டிஷனே வேலையை விடு அல்லது மாற்றல் வாங்கு என்பது தான்.
சரி மாற்றல் வாங்கி கொண்டு வருகிறோம் என்று சொன்ன பெண்கள் சிலர் மகனை விட ஒரு அடி உயரமாகவோ, 10-15 கிலோ எடை அதிகமாகவோ (உபயம்: கொரோனா காரணமாக ஏற்பட்ட Work from home கலாச்சாரம்) இருந்தார்கள்.
[என் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள்; நாம் எதுவும் இப்போது பேச வேண்டாம்; திருமணம் செய்து கொள்வோம்; பிறகு என்ன செய்வது என யோசிப்போம் என கூறியதாக எங்களை போல திருமணத்திற்கு பெண் தேடி நொந்த ஒரு அன்பர் YouTube வீடியோவில் பதிவு செய்திருந்தார்.]
Bay area எனப்படும் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி, கொரோனா காரணமாக ஜாதகத்தை இந்தியாவில் இருக்கும் எங்கள் ஜோசியரிடம் காண்பிக்க முடியவில்லை அடுத்த வாரம் எங்கள் உறவினர் அங்கு செல்வார் என ஒரு வருட காலம் கூறிக் கொண்டே இருந்தார்.
மிகப் பொறுமையாக எங்கள் மகன் தன்னுடன் தொடர்பு கொள்ளுவார் என்று சில பெண்கள் மற்றும் குடும்பத்தார் எதிர்பார்த்து காத்திருக்க, இவர் சில காரணங்களுக்காக மறுத்த சம்பவங்களும் நடந்தன. [கொரோனா முதல் அலை காலகட்டம்]
அடுத்த கட்டமாக இந்தியாவிலும் தகுதியான பெண்களை தேடுவது, அதே சமயம் வெளிநாட்டு வரன்கள் வந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து மேட்ரிமோனி சைட்டில் எங்கள் தேவைகளை மாற்றினோம்.
எந்த பெண்ணும் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட விரும்புவதில்லை; பெற்றோரை விட்டு வர தயாரில்லை; திருமணத்திற்கு முன்பு வாழ்க்கை முறை எப்படி உள்ளதோ அதில் எந்த மாற்றத்தையும் அங்கீகரிப்பதில்லை .
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டியது: மேட்ரிமோனி சைட்டுகள் பணம் பார்ப்பதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர நமக்கு தேவையான தகவல்களை தருவதே இல்லை. மீண்டும் renewal செய்து கொள்ளுங்கள் என்று தொடர்ந்து தொலைபேசி தொல்லை தந்தார்கள். உருப்படியாக தகவல்கள் எதுவும் தரவில்லை.
இடையில் facebookல் ஒரு குழுவினர் திருமண வயதில் பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் அதன் மூலம் பல திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன எனக் கேள்விப்பட்டு அதிலும் பதிவு செய்தேன். அந்த குழுவின் மூலம் மேலும் பல குழுக்களின் அறிமுகம் கிடைத்ததில் தேடுதல் வேட்டை தீவிரமானது.
எல்லா குழுக்களிலும் matrimony site களிலும் மீண்டும் மீண்டும் அதே profileகள் தான் உள்ளன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான துணையை தேடுவதில் தீவிரமாக இருப்பதால் அனைத்திலும் பதிவு செய்துள்ளார்கள். சில குழுக்கள் நமக்கு தெரியாமலே நம்முடைய விவரங்களை பகிரவும் செய்கிறார்கள். [மும்பை, டெல்லி, அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்தெல்லாம் என் எண்ணிற்கு தொலைபேசினார்கள்]
அமெரிக்காவில் படித்து வேலை செய்து கொண்டிருந்தாலும் அரியப்பம் பாளையத்தில் இருந்தாலும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் தான் பெண்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தார்கள்.
மகனுடன் தொலைபேசிய பெண்கள் சிலரின் நிபந்தனைகளை இங்கே குறிப்பிடுகிறேன்
• நான் இந்தியாவில் General Electric, American Bank, JP Morgan போன்ற நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன், அமெரிக்கா சென்றதும் அங்கே உடனே அதே நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும்.
• நான் ஒரு வேளை தான் சமையல் செய்வேன். இரவு அலுவலகம் விட்டு வந்து நீ தான் சமைக்க வேண்டும்.
• வீட்டு வேலைகள் செய்வதில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்பதால் 50% வேலைகளை நீ தான் செய்ய வேண்டும்.
• நான் புடவை அணிய மாட்டேன்.
• எனக்கு புகைப்படம் எடுத்து கொள்ள பிடிக்காது (இவர் 5-8 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை அனுப்பி இருந்தார். நேரில் பார்க்கையில் சம்மந்தமே இல்லாமல் இருந்தார்)
• எனக்கு பண்டிகைகள் கொண்டாடுவதில் நம்பிக்கை இல்லை.
• நான் பூஜை செய்ய மாட்டேன்.
• நீ என்னை விளக்கேற்ற சொன்னால் செய்ய மாட்டேன் எனக்கே எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஏற்றுவேன்.
(இவர் அமெரிக்காவில் வேலை செய்பவர்; பட்டு புடவை உடுத்தி பெரிய குத்து விளக்கை ஏற்றுவது போல புகைப்படம் அனுப்பி இருந்தார்)
• எனக்கு basic cooking தான் தெரியும்.
• எனக்கு dessert மட்டுமே செய்ய தெரியும்.
• அந்த பையன் (எங்கள் மகன்) நடு ராத்திரியில் தொலைபேசியில் பேசலாமா என்று கேட்டார் (இந்திய அமெரிக்க நேரங்கள், குறிப்பாக Day light saving மாதங்களில் 13.5 மணி நேர இரவு பகல் வித்தியாசத்தில் இருக்கும் என்பதை அறியாதவர் போல)
• நான் MBA படித்திருக்கிறேன். UK போய் Ph.D. படிக்க வேண்டும். என் தகப்பனார் பண உதவி செய்வார். (ஆனால் நான் USல் இருக்கிறேன், உங்கள் தகப்பனிடம் அது பற்றி பேசுங்கள் _ எங்கள் மகன்)
• லண்டனுக்கு குடிபெயர்ந்து வரவேண்டும். நான் இங்கே நல்ல வேலையில் இருக்கிறேன்.
• நான் நாய் வளர்ப்பேன்.
• பையன் கிராமத்தில் வேலை செய்கிறார் நான் நகரத்தில் வேலை செய்கிறேன் அதனால் பையன் நகரத்திற்கு குடிபெயர வேண்டும். [Phoenix, Arizona State, USA எப்போது கிராமமானது?]
• என்னிடம் ஐரோப்பா செல்ல விசா இருக்கிறது, ஆளுக்கு பாதி தூரம் பயணம் செய்து ,சந்தித்து, பிறகு திருமணம் பற்றி யோசிப்போம்.
• மற்றொரு பெண் வீட்டார் (நாங்கள் வீடியோ conference மூலம் தொடர்பு கொண்ட ஒரே குடும்பத்தினர்) என் மகனிடம் கேட்ட கேள்வி:
வருடத்திற்கு எவ்வளவு முறை உன் சகோதரி வீட்டிற்கு செல்வாய்? [ஆரம்பமே பிரிவினை வாதம்]
இது போல பல நிபந்தனைகளுடன் பெண்கள் வர எங்கள் மகனும் மனம் தளராமல் அவர்களுடன் தொலைபேசினார்.[ கடைசி வரை மனம் தளராத அவருக்கு என் பாராட்டுக்கள்]
சில பெண்கள் மேற்கொண்டு இன்ன காரணத்தால் தொடர முடியவில்லை. உங்கள் சிறப்பான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் பெற்றோருக்கும் என் வணக்கங்கள் என்று தகவல் எங்கள் மகனுக்கு சொல்லி பிரிந்தார்கள்.
திருமண வயதில் உள்ள பெண்களின் பெற்றோர் பெண்களின் அனுமதியுடன் Matrimony siteகளில் பதிவு செய்தாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் பெற்றோர் பார்த்து கூறும் ஆணுடன் பேசுகையில் மேற்கண்டது போல பேசி , ஆணே எனக்கு இந்த பெண் வேண்டாம் என விலகி செல்லுமாறு செய்கிறார்கள். பெண்களின் பெற்றோர்கள் மகள் என்ன பேசினாள் ஏன் வேண்டாம் என்று ஆண் கூறுகிறான் என்று விசாரிப்பதில்லை. மீண்டும் பெற்றோர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை.
அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் பெண்கள் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை நேரடியாக கூறாமல் வார நாட்களில் நாங்கள் வேலையில் பிசியாக இருக்கிறோம் என்றார்கள் விடுமுறை நாட்களில் வெளியூர்களுக்கு ஊர் சுற்றி பார்க்க சென்று விட்டார்கள்.
இந்த வாரக் கடைசியில் பேசலாமா என்ற என் மகனின் குறுஞ்செய்திக்கு 10-15 மணி நேரங்கள் கழித்து பதிலளித்தார் ஒரு பெண். இதே ரீதியில் ஒரு மாதம் சென்றது. ஒரே ஒரு முறை மட்டுமே பேசினார் மீண்டும் வேலையில் பிசி, வார இறுதியில் ஊர் சுற்றல் கதை…
Work Life Balance செய்ய சிரமப்படும் உங்களுக்காக இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. இது வரை பேசியதற்கு நன்றி என எங்கள் மகன் (எங்களிடம் கூறிய பிறகு) அனுப்பிய குறுஞ்செய்திக்கு “ஐந்தாவது நிமிடத்தில்” என் மகனுக்கு மனதில் Empathy (பச்சாதாபம்/கருணை) இல்லை என பதிலளித்து விட்டு இவர் எண்ணை block செய்தார் அந்த பெண்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே எங்கள் மகன் தான் வேலையை விட்டு விட்டு வர வேண்டும் என்று கூறியதால் நின்று போன சம்மந்தம் இது.
அதை அறியாத அவரது உறவினர் ஒருவர் எங்களை தொடர்பு கொண்டதில் மீண்டும் கசப்பான அனுபவம். மேற்கண்ட சம்பவத்திற்கு பிறகு உறவினரிடம் என்ன கூறினாரோ தெரியவில்லை, மீண்டும் அவர் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை.
பலரும் பல மாதங்கள் இழுத்தடித்து கடைசியில் எங்கள் மகனை குறை கூறி விலகிக் கொண்டார்கள்.
பல முறை எங்கள் மகன் வில்லனாக பார்க்கப் பட்டார்.
[என் மகனின் நண்பனுக்கும் இது போல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெண்ணின் ஜாதகம் சேரவே பெற்றோர் அப்பெண்ணின் விவரங்களை மகனுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த பெண்ணை ஒரு தோழியின் திருமணத்தில் ஏற்கனவே சந்தித்து இருந்தார் என்பதால் மேற்கொண்டு தொடர விரும்பி அந்த பெண்ணிடம் பேசினார். அந்த பெண்ணோ நான் வேறொருவரை காதலிக்கிறேன் அதனால் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிக் கொள்ளுங்கள். நான் என் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் விடாமல் என் திருமணத்திற்கு முயற்சி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இன்னும் அந்த பெண்ணின் profile matrimony site களில் இருப்பதாக அறிகிறோம்.]
இடைப்பட்ட காலத்தில் WhatsApp ஜாதக பரிவர்த்தனை குழு ஒன்றில் சுயம்வரம் என்னும் virtual match making நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.
அதிலும் பங்கு கொண்டோம்.
வருடங்கள் கடந்தன.
மே மாதம், 2021.
கொரோனா காரணமாக மேலும் பல தடங்கல்கள். அமெரிக்கன் Consulate அலுவலகங்கள் மாத/வருடக்கணக்கில் மூடப்பட்டு H1B க்கான விசா நேர்முகத் தேர்வுகள் நடைபெறவே இல்லை. எட்டு வருடங்களுக்கு முன்பு படிக்க சென்ற மகன் தாய் நாடு திரும்ப மூன்று வருடங்களாக முயன்று கொண்டிருந்தார்.
பன்னாட்டு விமானங்களும் (International flights) செல்லவில்லை.
எப்போது மீண்டும் பயணத் தடை விலகி, Consulate திறக்கும், எப்போது மகனுக்கு இன்டெர்வியூவிற்கான Appointment கிடைக்கும் என எதுவுமே தெரியாத பல மாதங்கள் மிகக் கொடுமையான கால கட்டம் என்றால் மிகையாகாது .
திருமணம் முடிந்ததும் மணமகளுக்கான விசா எடுக்க வேண்டும் அதற்கு எவ்வளவு நாட்கள் காத்திருப்பு என்பதும் அப்போது தெரியாத நிலை. சாதாரண காலங்களில் 45 நாட்கள்.
இந்தியாவில் தேர்ந்தெடுத்த பெண்களில் சிலர் அமெரிக்கா செல்வதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் அப்படியே சென்றாலும் அங்கே உடனே வேலை கிடைக்காது என்று தெரிந்தும் சரி என்று ஒத்து மகனுடன் பேசினார்கள்.
ஒரு பெண்ணின் பெற்றோர் அமெரிக்காவில் வசிக்கும் உறவினரை அனுப்பி என் மகனை நேரில் சந்தித்து பேசி விசாரித்த பிறகும், நேரில் பார்த்த பிறகே நிச்சயம் செய்ய முடியும் அதற்கு முன் எந்த விதமான written commitmentம் தரமாட்டோம் என்று கடைசி வரை வந்து கை விரித்தார்கள். அதற்கு காரணமாக அவர்கள் கூறியது கண் தெரியாத, காது கேட்காத அவரது வயதான தகப்பனார் பையனுக்கு எப்போது visa interview தேதி என்று கேட்கிறார் என்பதே.
நீ சாப்பிட்டாயா என்று உன்னை விசாரித்தாரா என சில சமயம் என் மகனிடம் விசாரிப்பேன். ஒருவருடைய caring natureஐ புரிந்து கொள்ள இந்த கேள்வி எப்போதும் உதவும் என்பது என் கருத்து.
மகனுடன் பேசிய பெண்களில் யாருமே தனியாக இருக்கும் என் மகனிடம் சாப்பிட்டாயா என்று ஒரு முறை கூட கேட்டதில்லை என்று கூறினார். [இவர் நிறைய விசாரிக்கிறார் அம்மா என மகனால் கூறப்பட்ட இவரது மனைவியானவர் தவிர]
பல தாய்மார்கள் தங்களின் தொலைபேசி எண்ணை தொடர்புக்காக பதிவு செய்திருந்தார்கள். என் கணவர் அழைத்தால் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் /பிசி/வெளியில் இருக்கிறேன் என கூறி அரை மணி நேரம் கழித்து கூப்பிடுங்கள் என்று தொடர்பை துண்டித்தார்கள்.
கணவனால் கைவிடப்பட்ட தாய்மார்களின் பெண்களை பலரும் ஒதுக்கும் நிலையில் நாங்கள் அது போன்ற சம்மந்தங்களையும் வரவேற்றோம்.எங்களின் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ள முடியாத அவர்கள் பயந்து ஒதுக்கினார்கள்.
செப்டம்பர் மாதம், 2021.
இடையில் மீண்டும் மீண்டும் மேட்ரிமோனி பக்கங்களை புதுப்பித்துக் கொண்டிருந்தோம், எந்தப் பலனும் இல்லாமல். என்று எப்போது மகனுக்கு தகுதியான பெண் கிடைப்பாள் என்று தேடித் தேடி ...செவ்வாய் வெள்ளி ராகு காலத்தில் அம்மனுக்கு வீட்டிலேயே விளக்கேற்றி, வியாழன்களில் ஆஞ்சநேயருக்கு தயிர் சாதம் படைத்து அன்னதானம் செய்து, சுந்தரகாண்டம் 41 ஆவது சர்க்கத்தை பல மண்டலங்கள் படித்து, நரசிம்மர் ஸ்லோகத்தை 27 முறை தினமும் சொல்லி, எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் செய்து … என வருடங்கள் தான் கடந்தன.
காலை எழுந்தவுடன் படிப்பு ... என்னும் பாரதியாரின் வாக்கிற்கிணங்க காலை எழுந்து பல் துலக்கியவுடன் மேட்ரிமோனி பக்கத்தை திறந்து இன்று எந்த பெண் வீட்டார் பதிலளித்திருக்கிறார்கள் என பார்த்து, படித்த பின்னரே மற்ற வேலைகள்.
புது profile என நான் என் கணவரிடம் காட்டினால் தன் கைபேசியில் போட்டு பார்ப்பார். ஏற்கனவே நாம் பேசி விட்டோம், இன்ன காரணத்தால் மேற்கொண்டு நகரவில்லை என்பதோடு அந்த பெண்ணின் பெயர் அவரது பெற்றோர் மற்றும் குடும்ப விவரங்கள் என அனைத்தையும் சொல்வார். [700+ profile களின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்]
வயதில் மூத்த பெண்களின் ஜாதகங்களும் வந்தன. 30+ ஆன திருமணமாகாத பெண்கள் அதிகம் அமெரிக்காவில் உள்ளார்கள். உங்கள் மகனை விட 20 நாட்கள்/4 மாதங்கள்/12 மாதங்கள் தான் பெரியவர், உங்கள் மகனை consider செய்ய சொல்லுங்கள் என்றார்கள் சில பெற்றோர்.
2000 ஆண்களின் profile களுக்கு 400 பெண்களின் profile கள் மட்டுமே matrimony site களில் பதிவு செய்யப் படுகின்றன. வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமே பதிவு செய்கிறார்கள்.
ஆகஸ்டு முதல் அக்டோபர் முடிய எந்த பெண்ணின் profileம் கையில் கிடைக்கவில்லை. Matrimony siteகள் பணத்தை வாங்கி கொள்வதுடன் கடமை முடிந்தது என பொருத்தமில்லாத profile களை பதிவிட்டு கொண்டிருந்தார்கள்.
செப்டம்பர் 10 தேதி முதல் நவம்பர் 10 தேதி முடிவதற்குள் வீட்டில் மூன்று துக்க சம்பவங்கள்.
குடும்ப நண்பர் ஒருவர் எங்கள் மகனின் ஜாதகத்தை பார்த்து (நாங்கள் கேட்காமலே) குரு பலன் 2022 அக்டோபர் மாதம் முடிய தான் உள்ளது அதற்குள் திருமணம் நடக்க வேண்டும், குரு பகவான் இவரது ராசிக்கு மீண்டும் வர பல வருடங்கள் ஆகும் என கூறினார். ஓரளவிற்கு ஜோசியத்தை நம்பினாலும் இது போன்ற செய்திகள் மனநிலையை பாதிக்கவே செய்தன.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு எந்த ஒரு புது சம்மந்தமும் கண்ணில் தென்படவில்லை. அப்போது நவம்பர் 2021.
பெண் கிடைத்து, விமானங்கள் பறக்க ஆரம்பித்து,மகனது விசா இண்டர்வியூவிற்கு நாள் கிடைத்து , திருமண தேதி குறித்து, மகன் இந்தியா வந்து திருமணம் நடந்து , அவரது மனைவிக்கு விசா இண்டர்வியூவிற்கு நாள் கிடைத்து , அனுமதி கிடைத்து, 2022ன் பிற்பகுதியில் மகனது விசா புதுப்பிக்க வேண்டிய சமயம் என்பதால் அதற்குள் அவரது மனைவியும் குறிப்பிட்ட காலத்திற்குள் அமெரிக்கா சென்று விட வேண்டும்.
இதற்கிடையில் கொரோனா அலை மீண்டும் வராதிருக்க வேண்டும். இவ்வளவும் எப்படி சாத்தியம்?
கடவுளின் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் அவரையே சரணடைந்தேன் (தோம்)
இவைகள் எங்கள் மன/உடல் நிலையை மேலும் மோசமாக்கின.
இதற்கிடையில் கொரோனா மூன்றாம் அலை என அறியப்பட்ட Omicron தொற்று பரவ தொடங்கியது. பாதிப்பு அதிகம் இல்லாததால் சில விமானங்கள் மீண்டும் வானில் பறக்க தொடங்கின. Consulate அலுவலகம் திறந்து appointment கள் கிடைக்க ஆரம்பித்தன. [அப்போதும் குறைந்த பட்சம் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தான்]
நவம்பர்-டிசம்பர், 2021
முதல் வாரத்தில ஒரு மேட்ரிமோனி பக்கத்தில் கண்ட MS படித்த மாப்பிள்ளை தேவை, வெளி நாடு செல்ல விருப்பம் என இருந்த ஒரு பெண்ணின் profile என் கணவரின் கண்ணில் பட, ஜாதகங்கள் பொருந்த, பெண்ணின் தாயார் எங்களை நேரில் வந்து பெண்ணைப் பார்த்து, பிடித்திருந்தால் எங்கள் மகனுக்கு recommend செய்ய சொன்னார்.
கடும் மழை, வெள்ளம். அசோக் நகரில் (மாந்தோப்பு காலனி) அவர்கள் வசிக்கும் முதலாம் மாடி வீட்டிற்குள் செல்ல முடியாத வண்ணம் தெருவெங்கும் மழை நீர் தேக்கம்.
வழக்கம் போல் பெண்ணோ பையனோ நாங்கள் பேசி விட்டு சொல்கிறோம், ஒரு மாதம் கழித்து சொல்கிறோம் என ஏதாவது சொல்ல போகிறார்கள் நாம் dummy pieces தான் என்ற எண்ணத்துடன் சென்றோம்.
அவர்களின் மூத்த பெண்ணும் அவரது கணவரும் இரண்டு வயது குட்டிப் பாப்பாவும் எங்களை வரவேற்றார்கள். கலகலப்பாக சில நிமிடங்கள் பேசிய பிறகு பெண்ணை அழைத்து வர சொன்னோம்.
சுடிதாரில் அமைதியான முகத்துடன், அவரது சகோதரியின் சாயலில் அச்சு அசலாய் அதே உயரமாய் வந்து நின்றார். பார்த்ததும் மனதுள் சின்ன கணக்கு ஓடி இவர்கள் இரட்டையர்களாக இருக்க கூடும் என்று தோன்றியது.
அது வரை பெரிய பெண் சின்ன பெண் என்றே கூறி வந்த அவரது தாயார் இவர்கள் இரட்டையர்கள் என்று முதன் முதலாக சஸ்பென்சை உடைத்தார்.
மகனுக்கு வாட்ஸப்பில் இரட்டையரில் ஒருவர் என குறுஞ்செய்தி அனுப்பியதும் interesting என பதிலனுப்பினார்.
சில நிமிடங்கள் அந்தப் பெண் எங்கள் மகனுடன் video callல் பேசியதும், அனைவரும் என் மகள் குடும்பத்துடன் பேசினார்கள். எல்லாருக்கும் எல்லாரையும் பிடித்து போக, எங்களுக்கு தெரிய வேண்டிய பதில் எங்கள் மகனும் அந்த பெண்ணும் என்ன நினைக்கிறார்கள் என்பதே.
மகன் எனக்கு ஓகே, அந்த பெண்ணின் விருப்பம் தெரிந்து மேற்கொண்டு தொடருங்கள் என தகவல் அனுப்பினார். வீட்டிற்கு கிளம்பினால் சரியாக வராது பிள்ளைகளின் மனம் மாறக்கூடும் என்றெண்ணி அப்போதே அந்த பெண்ணிடம் பேசினேன்.
Tangled திரைப்பட கதாநாயகி போல நீண்ட அடர்ந்த கூந்தலும் இடது பக்க ஒற்றைக் கல் மூக்குத்தியுமாக எளிதான அலங்காரத்துடன் காணப்பட்ட அவரோ நான் அவரை மருமகளாக ஏற்றுக் கொள்வேனா மாட்டேனா என்று தெரியாத போதே எனக்கு தலை பின்னி விடுவீர்களா? புடவை கட்ட தற்சமயம் என் சகோதரியின் உதவியை தான் ஏற்கிறேன் நீங்கள் உதவுவீர்களா? எனக்கு கொலு வைக்க மிகவும் பிடிக்கும் நிறைய பொம்மைகள் வாங்கி வைத்திருக்கிறேன் நீங்கள் கொலு வைப்பீர்களா? என ஏற்கனவே எங்கள் இல்லத்தில் இருப்பது போல கேள்விகள் கேட்டார்.
உன் விருப்பம் என்ன என்று கேட்டபோது நான் ஏற்கனவே உங்கள் மகனிடம் எனக்கு ஓகே என்று சொல்லி விட்டேனே அவர் உங்களிடம் கூறவில்லையா என கேட்டார்.
முதல் முறை பார்த்த போதே பல வருடங்கள் பழகியதை போல பேசிய அந்த பெண்ணை எனக்கும் (எங்களுக்கும்) பிடித்துப் போக மகனிடம் மீண்டும் பேசி உறுதி செய்தோம்.
எப்படி பேசிய சில நிமிடங்களுக்குள் சம்மதித்தாய் என்று எங்கள் மகனை கேட்டதற்கு அவரது பதில்: வாழ்க்கை முழுவதற்கும் தேவையான பதில்களை அவர் சில நிமிடங்களில் பேசி விட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அன்பாக பல நாட்கள் பழகியது போல பேசினார்கள்.
எங்கள் மகன் என்று இந்தியா வருவார் எப்போது அவருக்கு விசா appointment கிடைக்கும் என எந்த விதமான உறுதியான நிலைப்பாடும் இல்லாமல், காத்திருக்கிறேன் என்று சொன்ன அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தாரையும் மிகவும் பிடித்து போய் திருமண தேதி தெரியாமலே நிச்சயம் செய்தோம். [டிசம்பர் 06, 2021]
உறவினர்கள் நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை பிறகு தான் கூறினோம். எனக்கு ஏன் சொல்லவில்லை, மூடி மறைத்து நிச்சயம் செய்து விட்டீர்கள் என இதனால் பல கருத்து வேறுபாடுகள் வந்தது.
டிசம்பர் 16, 2021.
மகனது விசா appointment மார்ச் 13,14 என உறுதி செய்யப்பட்ட தகவல் வந்த நாள்.
அதன் பிறகு நடந்தவைகள் கனவு போல தோன்றுகின்றன.
திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பாக நெருங்கிய உறவினர்கள் இருவர் ICU வில் இருப்பதாக அறிந்து, தாலி கட்டும் வரை திக் திக் தான்.
அனைத்து தடைகளும் நீங்கி, திட்டமிட்ட படி மகனின் திருமணம் எங்கள் அமெரிக்க வாழ் மகள் வழிப் பேரன் கேசவனின் வேத மந்திர முழக்கத்துடன் மார்ச் மாதம் 21, 2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மகன் தாலி காட்டியதும் பெண்ணை பெற்றவர் கண்ணீர் விடவில்லை நான் தான் அழுதேன்.:)
நெஞ்சின் மேல் இருந்த கல்லை கீழே இறக்கியது போன்ற உணர்வு.
நடக்குமா என நினைத்து மருகிய அனைத்தும் கடவுளின் அருளால் குறித்த காலத்திற்குள் நிறைவேறி, மருமகளும் கணவருடன் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அமெரிக்கா கிளம்பி சென்று விட்டார்.
வீடியோவில் மட்டுமே பார்த்து, திருமணத்திற்கு ஒத்துக்க கொண்டு, நம்பிக்கையோடு காத்திருந்த மணமக்களுக்கு எங்கள் நல்லாசிகள்.
அடுத்தது என்ன ?
பேரனா? பேத்தியா? ஒற்றையா? இரட்டையா?
பின் குறிப்பு :
இந்த பகுதியை முக்கிய குறிப்பு எனவும் சொல்லலாம் . இலவச ஜாதக பரிவர்த்தனை WhatsApp குழுக்களும், ஒரே ஒரு முறை 100 - 500 ரூபாய்க்குள் பதிவு கட்டணம் பெற்றுக் கொண்டு எண்ணிலடங்கா profileகளை வழங்கிய matrimony site களுக்கும் மேற்படி வைபவத்தில் முக்கிய பங்குண்டு என்றால் மிகையாகாது.
2.5 வருடங்களாக மறக்காமல் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் கிடைக்கும் தொடர்புகளை எங்களுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டே இருந்த நண்பர்களும், நாங்கள் மனம் தளர்ந்த போது உற்சாகப் படுத்திய அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
.
No comments:
Post a Comment