Friday, 20 December 2024

அயோத்தி(யா) சென்றோம்...(பகுதி-1)

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் “கிஞ்சித்காரம்” ட்ரஸ்டின் கீழ் பல வருடங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெறும் வைணவத் திருத்தலத் தீர்த்த யாத்திரையில் இம்முறை நானும் என் கணவரும் பங்கெடுக்க விரும்பினோம்.

மே 2024 முதலே விளம்பரப்படுத்தப்பட்ட இந்த தீர்த்த யாத்திரையானது 12 அக்டோபர் தொடங்கி ஏழு நாட்கள் பஞ்ச துவாரகைகளையும் பின்னர் அக்டோபர் 23-27 பிரயாக்ராஜ், நைமிசாரண்யம் மற்றும் அயோத்யாவையும் சுற்றிப் பார்க்கும்வண்ணம் இருந்தது. விரும்பியவர்கள் இரண்டுக்கும் செல்லலாம் அல்லது ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்லலாம். பொதுவாக ஐந்தாயிரம் பேராவது செல்வார்கள் எனக் கேள்விப் பட்டிருந்ததால் எனக்கும் என் கணவருக்கும் யாத்திரை செல்வது பற்றிப் பலவித யோசனைகள். கடைசியாக உறவினர்கள் சிலர் நாங்கள் செல்லப் போகிறோம் முன்பதிவு செய்து விட்டோம் எனக் கூறவே நாங்களும் கிளம்ப முடிவு செய்து பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ்ஸில் பிரயாக்ராஜ் (முன்னாள் பெயர் அலஹாபாத்) செல்ல முன்பதிவு செய்தோம்.திரும்பி வர லக்னோவிலிருந்து இரண்டாம் வகுப்பு AC யில் முன்பதிவு செய்திருந்தோம்.

யாத்திரை எப்படி ஏற்பாடு செய்யப் படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த யாத்திரை எங்கு என்று தொடங்கும் எனக் கூறப்படுகிறதோ அந்த இடத்திற்கு அவரவர் வசதிக்கேற்ப ரயிலிலோ விமானத்திலோ சென்று சேர வேண்டும். (பிரயாக்ராஜ்/லக்னோ) சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் யாத்திரிகர்களை பேருந்துகளில் ஏற்றி நாம் தங்குமிடத்திற்கு அருகில் கொண்டு விடுவார்கள். தங்குமிடம், மூன்று வேளை உணவு, ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் பயணம் அவர்கள் பொறுப்பு. யாத்திரை முடியும் தினத்தன்று விமான நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இறக்கி விடுவார்கள். வீடு வந்து சேர்வது நம் பொறுப்பு.

யாத்திரை தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு திரு வேளுக்குடி சுவாமிகள் ஒரு கூட்டத்தை சென்னையில் ஏற்பாடு செய்து விவரங்களை அனைவருக்கும் கூறினார். பல வருடங்களாக அவர் இது போல தொடர்ந்து பல யாத்திரைகளை வழி நடத்தியவர் என்பதால் சரளமாகப் பல தகவல்களைக் கூறினார். துவாரகைக்கு 1800, அயோத்யாவிற்கு 1800 யாத்திரிகர்கள் வருகிறார்கள் எனவும் volunteers மற்றும் சமையல்கார்களுடன் சேர்த்து 2000 பேர் எனவும் கூறினார். (500 பேர் இரண்டு யாத்திரைகளுக்கும் வந்தார்கள்)

45 பேருந்துகளில் (40 persons each) என யாத்திரிகர்கள் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு volunteer, ஒரு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு ஒரே தங்குமிடம், ஒவ்வொரு பயணிக்கும் நீலநிற ஜோல்னா பை மற்றும் கழுத்தில் அணிந்து கொள்ள நம் பெயர், பேருந்து எண், வாலன்டியர் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களுடன் ஒரு ID card தரப்படும். காணாமல் போனாலும் கண்டு பிடிக்க சுலபம் எனக் கூறப்பட்டது. யாத்திரைக்குப் பத்து நாட்களுக்கு முன்பாக எங்கள் வாலன்டியர் திருமதி அருணா எங்களை whatsapp மூலம் தொடர்பு கொண்டார்.

ரயில் பிரயாணத்திற்கான எங்கள் இருக்கைகள் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு வரை waiting listலேயே இருந்தபடியால் விமானத்தில் எங்கள் இருக்கைகளைப் பதிவு செய்து விவரங்களை வாலன்டியருக்கு அனுப்பி வைத்தோம். இடையில் சென்னையில் மழை, திருவள்ளூர் அருகில் ரயில் தடம் புரண்டு துவாரகா செல்லும் ரயில் பல மணி நேரங்கள் தாமதமாக சென்றது, புயல் எச்சரிக்கை எனப் பல குழப்பங்கள் ஏற்படவே திரும்பி வரும் பயணத்தையும் விமானத்திலேயே உறுதி செய்தோம். தெரிந்தவர்கள், உறவினர்கள் ஒன்றாகப் பயணிக்கவும் தங்கவும் விரும்பினால் முன் கூட்டியே யாத்திரை ஏற்பாட்டாளார்களுக்குத் தகவல் தெரிவித்தால் தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டதால் எங்கள் ஒன்பது பேரின் வருகைத் தகவல்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தோம்.

22/10/2024

எங்கள் communityல் வசிக்கும் எதிர் வீட்டுத் தம்பதியினர் துவாரகா பயணம் முடிந்து ரயிலில் வீடு வந்து சேர்ந்த மறுநாள் காலை எங்கள் பயணம் ஆரம்பம். (அவர்களின் அனுபவங்களை அளவாகக் கேட்டுக் கொண்டோம்) காலை சீக்கிரம் எழுந்து குளித்து கடவுளை வணங்கி விட்டு யாத்திரா தானம் வழங்கி விட்டு 11.30 மணி லக்னோ விமானத்தைப் பிடிக்க எங்கள் வீட்டிலிருந்து எட்டு மணிக்கே கிளம்பத் தயாரானோம். காலை உணவை உண்டு விட்டு டாக்சி வரக் காத்திருந்த நிமிடங்களில் என் கணவர் என்னிடம் வயிற்றுப் போக்கிற்கான (diarreah) மருந்தை எடுத்துக் கொடு என்றார். கிளம்பும் நேரம் என்ன சோதனை இது எனக் கடவுளை வேண்டியபடி மருந்தைக் கொடுத்தேன். பேருந்துப் பயணத்தில் வாந்தி வராமல் இருக்க கைப்பையோடு எடுத்து வைக்கும் கிராம்பை மறந்து விட்டேன். வழியில் கடைகள் அந்த நேரத்தில் திறக்கப் படவில்லை.

நாங்கள் பயணித்த அதே விமானத்தில் எங்கள் மருமகளின் பெற்றோர் மற்றும் அவர்களது தோழியும் பயணித்தனர். நாங்கள் சீக்கிரமாக விமான நிலையம் கிளம்ப வேண்டுமென்பதால் மருமகளின் தாயாரே எங்களுக்கான உணவினைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். (Indigo விமானங்களில் தண்ணீர் கூட நாம் கேட்டால் தான் தருகிறார்கள்.) லக்னோ விமான நிலையத்தை மதியம் 2.15 மணியளவில் சென்றடைந்தோம். நாங்கள் வந்த விமானத்தில் 90%கும் அதிகமானவர்கள் எங்களுடன் யாத்திரைக்கு வந்தவர்களே. லக்னோ விமான நிலையத்திற்கு வெளியே அனைவரும் வந்து கூடியதும் அங்கிருந்த volunteers கையில் பயணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்துக் கொண்டு பெயர்களை அழைத்து ஒவ்வொரு பேருந்தாக வெளியேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த இடத்தில் பேருந்துகளுக்கு எண்கள் கிடையாது. விமானம் வர வர பயணிகள் பேருந்துகளில் ஏற்றி விடப்பட்டு பிரயாக்ராஜ் அனுப்பப் பட்டார்கள். எங்கள் பெயர்கள் பட்டியலில் இல்லை. (நிறைய நேரம் செலவழித்து நான் கணினியில் கற்ற, பெற்ற வித்தைகளையெல்லாம் கொட்டி Excel file ஒன்றை மிக நேர்த்தியாகத் தயாரித்து அனுப்பி இருந்தேன்)

எங்கள் வாலன்டியர் transport teamக்கு தகவல் அனுப்பி விட்டேன் என்றார். எங்களைப் போலப் பலரும் ரயில் -> விமானம் என மாறியதில் குழப்பம். எப்படியும் உங்கள் யாரையும் இங்கே விட்டு செல்ல மாட்டோம். காத்திருங்கள் என வாலன்டியர் கூறவே அங்கேயே காத்திருந்தோம்.அன்றைய தினம் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் AIR INDIA விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து எங்களுடன் பயணம் செய்த சிலர் 3.50க்கு கிளம்பும் விமானத்தில் பிரயாக்ராஜ் செல்கிறோம் என்றார்கள். ஓ…பிரயாக்ராஜில் விமான நிலையம் இருக்கிறதா? லக்னோ, பிரயாக்ராஜ் ரயில் நிலையம் போன்ற இடங்களை pickup points எனக் கூறி இருந்ததால் மற்ற விவரங்களை நாங்கள் யோசிக்கவே இல்லை. அதே போல அயோத்தியிலும் சர்வதேச விமான நிலயம் உள்ளது. Onward and return இரண்டுமே தனித் தனியாகத் தான் ரிசர்வ் செய்தோம். வேறு மாதிரி யோசித்துப் பயண ஏற்பாட்டைச் செய்திருந்தால் பல விதங்களில் துன்பப்பட்டிருக்க மாட்டோம். பயணம் இன்னும் சுலபமாக இருந்திருக்கக் கூடும். எல்லாம் அவன் செயல்!

மூன்று மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாலை ஐந்து மணியளவில் வந்த பேருந்தில் பயணிகள் குறைவாக இருக்கவே எங்கள் 20 பேரையும் அந்தப் பேருந்தில் ஏற்றி அனுப்பினார்கள். AC பேருந்து. அப்பாடா…

லக்னோ விமான நிலையத்தை விட்டுக் கிளம்பி பிரயாக்ராஜ் நோக்கி எங்கள் பயணம் ஆரம்பம் ஆனது. வழியெங்கும் அகன்ற சாலைகளும் மேம்பாலங்களும் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதால் முக்கிய சாலைகள் single lane சாலைகளாகச் செயல் படுகின்றன. டெல்டா பிரதேசம் என்பதால் மிக மிக நைசான வண்டல் மண் எங்கெங்கும் தென்படுகின்றது. சாலை வேலைகளால் எங்கெங்கும் புழுதி. AC பேருந்து என்பதால் தப்பித்தோம். சாலை குண்டும் குழியுமாக… பேருந்து மிக மெதுவாகச் சென்றது. வழியில் இறங்கி டீ குடித்து விட்டு மேலும் பயணத்தைத் தொடர்ந்தோம். லக்னோவிலிருந்து பல கிலோமீட்டர்களுக்குச் சாலைகளின் இருபுறம் உள்ள தெரு விளக்குகள், பாலங்களில் காவி, வெள்ளை, பச்சை நிறங்களில் கூடுதலாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. (காங்கிரஸ் கொடி நிறம்??)

இரவு உண்ணலாம் என சேமித்து வைத்திருந்த எலுமிச்சை சாதம் ஊசிப் போயிருந்தது. இரவு 11.30 மணிக்குள் வந்தால் சாப்படு எடுத்து வைக்கப் படும் எனக் கூறப்பட்டாலும் அதற்குள் சென்று சேர முடியாது என்பதால் வழியில் கிடைத்ததை அனைவரும் உண்டு சமாளித்தோம். நாங்கள் கையில் இருந்த பிஸ்கட்டுகளை உண்டு விட்டுத் தூங்கத் தொடங்கினோம். நள்ளிரவு 12.30க்கு பிரயாக்ராஜை அடைந்தோம். Parade parking என்னும் பெயருடைய மைதானத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேட்டரியில் இயங்கும் 50 ஆட்டோக்கள் வரிசையாக வந்து நின்றன. ஆட்டோ பிடித்து Fab Hotel Santhosh Palace என்னும் இடத்திற்குக் கிளம்பினோம்.. ஊரும் தெரியாது மொழியும் தெரியாது, ஆட்டோ ஓட்டுநர் எனக்கு வழி தெரியும் எனக் கூறி விட்டு சந்து பொந்துகளிலெல்லாம் அழைத்துச் சென்றார். என் கணவர் கூகிள் மேப் போட்டு வழி கூறினார். விடுதி முகப்பில் எங்கள் வாலன்டியர் எங்களுக்காகக் காத்திருந்து அறை எண்களைக் கூறினார். இங்கும் சாலைகள் படு மட்டமாக குண்டும் குழியுமாக உள்ளன. காற்று மாசுக்கு அளவே இல்லை.

AIR INDIA விமானத்தில் பெங்களூருவிலிருந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டிய மைத்துனர் மகனின் குடும்பம் ஒரு வழியாக எட்டு மணிக்குக் கிளம்பி லக்னோ வந்து விடிய விடியப் பயணித்து அதிகாலையில் நாங்கள் தங்கியிருந்த அதே விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். என் கணவர் ஹோட்டல் பிரகாஷ் என மகனுக்குத் தகவல் அனுப்ப நாங்கள் வேறு இடத்தில் தங்கி இருக்கிறோம் என அவர் நினைக்க…அதிகாலையில் நான் ரிசப்ஷன் பகுதியில் இருக்கிறோம் இறங்கி வா எனக் கூற…அங்கே நடந்தது எங்கள் சந்திப்பு.

உறவினர் அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டி தகவல்கள் தந்தும் organisers யார் யார் யாத்திரைக்கு எந்த வரிசையில் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த வரிசையிலேயே பேருந்துகளை allot செய்திருந்தார்கள். எனவே 5,9,15 என வெவ்வேறு பேருந்துகளில் பயணித்து, பொது இடங்களில் சந்தித்துக் கொண்டோம்.

நிற்க.

யாத்திரை நாட்கள் எப்படி organize செய்யப் பட்டன என்பதை முதலில் விவரமாகக் கூறி விட்டால் மீண்டும் மீண்டும் எப்படி பயணித்தோம் எப்படி சாப்பிட்டோம் என்ன சாப்பிட்டோம் எனக் கூறத் தேவை இருக்காது. 45 பேருந்துகளை ஓரிடத்தில் நிறுத்த வேண்டும் என்பதால் ஊருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தில் பேருந்துகள் நிறுத்தப் பட்டன. நம் பேருந்துகள் அங்கு நின்றவுடன் எந்த நேரமாக இருந்தாலும் சாரி சாரியாக batteryயில் இயங்கும் ஆட்டோக்கள் வந்து நிற்கின்றன. ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டு தனித் தனி WhatsApp group ஏற்படுத்தப்பட்டு, தங்குமிடம் மறுநாளுக்கான நிகழ்ச்சி நிரல், எங்கே உணவு வழங்கப்படும் என அனைத்துத் தகவல்களும் பறிமாறப்பட்டன. ஆட்டோவில் ஏறி அவரவர் தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அனுப்பப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி ஆட்டோ பிடித்து அவரவர் சிறு குழுக்களாக நதியில் நீராடி விட்டு காலை உணவிற்கு குறிப்பிட்ட இடத்தில் கூட வேண்டும்.

காலை காபி அனேகமாக நாம் தங்குமிடத்திலேயே தரப்பட்டது. ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, பொங்கல் + சாம்பார் போன்றவை காலை/இரவு உணவுக்கும், சாம்பார் சாதம் ரசம் சாதம் வற்றல் குழம்பு சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம் என ஏதாவது ஒரு சாதம் தயிர் சாதத்துடன் தரப்பட்டது.  பாகற்காய் பொரியல், பரங்கிக்காய் பொரியல், வாழைக்காய் பொரியல் சில நாட்களில், ராமர் பட்டாபிஷேக தினத்தன்று மோர்குழம்பு, சர்க்கரைப் பொங்கல், வடை. இப்படி வயிற்றுக்குக் கேடு செய்யாத வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. ஒரு போதும் வயிறு வாடவில்லை. இரவு உணவிற்கு நேரமாகும் என இருந்தால் மாலையில் காப்பியுடன் சுண்டலும் வழங்கப் பட்டது. இரவு உணவு வேளையில் பயணம் இருந்தால் அவரவர் பேருந்திலேயே உணவு ஏற்றப்பட்டு வழியில் தரப்பட்டது. தண்ணீர் பாட்டில்களை நாம் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடும் இடங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது  ஆயினும் என்ன தண்ணீரோ? [ஜோல்னா பையில் எப்போதும் தட்டும் டம்ளரும் வைத்திருக்க வேண்டும்]

எப்போது விடுதியைக் காலி செய்து விட்டு பேருந்தில் பெட்டிகளை வைக்க வேண்டும் எனவும் முன்கூட்டியே தகவல் வரும். அதைப் பின்பற்றி விட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கலாம், சுவாமிகளின் பிரவசனம் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றது. ராமனின் பிறப்பிலிருந்து பட்டாபிஷேகம் அவர் வைகுண்டம் சென்றது முடிய அனைத்தும் கூறப்பட்டது. (நாங்கள் சென்ற இடத்திற்கு ஏற்ப கதை போகும். நந்தி கிராமம் – பரதன் ஆண்ட இடம், சிருங்கிவேரபுரம் – குகனும் ராமனும் சந்தித்த இடம்)

23/10/2024

மீண்டும் பிரயாக்ராஜ்…

முதல் நாளிரவே whatsappல் மறுநாள் காலை என்ன செய்ய வேண்டும் என நிகழ்ச்சி நிரல் வந்து விட்டது. காலை தங்குமிடத்திலேயே காப்பி, அடுத்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற்றி விட்டு, கையில் மாற்றுத் துணிகளை எடுத்துக் கொண்டு VIP ghat எனப்படும் இடத்திற்குச் சென்று திரிவேணி சங்கமம் சென்று நீராடி விட்டு வேணி மாதவரை தரிசித்து விட்டு Sardar patel sansthan சென்று brunchஐ முடித்துக் கொண்டு பெருந்தில் ஏறி சிருங்கிவேரபுரம் செல்ல வேண்டும். காலை 11 மணிக்குள் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற வேண்டும்.

விடுதி அறையைக் காலி செய்த பிறகு ரிசப்ஷனில் மைத்துனர் மகனைச் சந்தித்து விட்டு, பேருந்தில் பெட்டிகளை ஏற்றி விட்டு VIP ghat செல்ல ஆட்டோ பிடித்தோம். யாத்திரிகர்கள் அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி நிரல் என்பதால் ஆற்றின் கரைக்குச் சென்றால் நம் மக்களைச் சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கை. மருமகளின் பெற்றோர் ஏற்கனவே படகில் கிளம்பி விட்டதாகக் கூற மைத்துனர் மகன் வந்து சேரவே இல்லை. எங்கள் ஆட்டோ ஓட்டுனர் முன்னாலேயே ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு இது தான் VIP ghat எனக் கூறிச் சென்று விட்டார். (ஏமாற்றுகாரர்கள் எங்கும் உண்டு) தெரிந்த முகங்கள் யாருமே இல்லை.

என் கணவர் சாதாரணமாகவே எல்லாவற்றிற்கும் டென்ஷன் ஆவார். வழி கேட்டுக் கொண்டே யமுனை நதிக் கரையில் காலை நடைப் பயிற்சி போல இரண்டு கிலோமீட்டர்கள் நடந்தோம். தெரிந்த முகங்களே இல்லை. டென்ஷன் மேலும் டென்ஷன். இதற்கிடையில் மைத்துனர் மகனிடம் பேசி,வழிப்போக்கர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசி, குட்டி ஆட்டோ பயணம் செய்து, படகுத் துறையின் அருகில் அவரைக் கண்டு பிடித்தோம். (All roads lead to Rome என்பது போல VIP ghatற்கு பல சாலைகள்) வழி, மொழி தெரியாமல் சிரமம். ஹிந்தி மொழி தெரியாமல் நம் நாட்டுக்குள்ளேயே பயணிக்க முடியவில்லை. (இதே கருத்தை எங்களுடன் வந்த பலரும் கூறியதைக் கேட்க முடிந்தது)

மைத்துனர் மகன் திரிவேணி சங்கமம் செல்ல ஒரு படகை வாடகைக்குப் பிடிக்க, அதில் உறவினர்களும் சில நண்பர்களும் ஏறிக் கிளம்பினோம். ஆதி நாட்களில் பிரயாக் என அழைக்கப்பட்டு, பின்னர் அலஹாபாத் ஆக மாறி மீண்டும் பிரயாக்ராஜ் எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ள இந்த ஊரின் சிறப்புக்களை திரிவேணி சங்கமம் சென்று சேர்வதற்குள் தெரிந்து கொள்வோமா?

அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்நகரத்தில் இந்து சமய புனித ஆறுகளான யமுனை, கங்கை மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே திரிவேணி சங்கமம் என அழைக்கப் படுகிறது. இந்த மூன்று ஆறுகளும் மகாலட்சுமியின் பின்னலாகக் கருதப் படுகின்றன. இங்கே நீராடினால் சகல பாவங்களும் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் பல்கலைக் கழகம் ஆகியவை மிகப் பிரசித்தி பெற்றவை. ஜவகர்லால் நேருவின் வீடான ஆனந்த பவன் என்னும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.

திரிவேணி சங்கமத்தை ஒட்டி முகலாயப் பேரரசர் அக்பர் நிறுவிய அலகாபாத் கோட்டை உள்ளது. சங்கமத்திற்குச் செல்லப் படகு ஏறும் துறையை ஒட்டியே உள்ளது. இந்நகரத்தில் மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா நடைபெறும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாகும்பமேளா நடைபெறும்.

பிரயாக் என்பதற்கு வடமொழியில் முதன் முதலாக யாகம் செய்த இடம் எனப் பொருள் உண்டு. ப்ர+யாக் = முதன் முதலில் பிரம்மனால் யாகம் செய்யப் பட்டு தன் படைப்புத் தொழிலை ஆரம்பித்த ஊர் இது. மேலும் பிரயாக் என்பதற்கு confluence (of two equally forceful rivers) என்ற பொருளும் உண்டு. பாரத தேசத்தில் பல பிரயாகைகள் உண்டென்றாலும் அவற்றில் தலை சிறந்தது மூன்று நதிகள் சேரும் இந்தப் பிரயாக் தான் அனைத்திற்கும் ராஜா என்ற பொருளில் பிரயாக்ராஜ் எனப் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.மேலும் இங்குள்ள ஒரு ஆல மரத்தின் கீழ் தான் பிரளயகாலம் முடிந்ததும் இறைவன் ஆலிலையில் தோன்றி இவ்வுலகை மீண்டும் படைத்தார் எனவும் கூறப்படுகிறது. 

ஆலமா மரத்தின் இலை மேல்* ஒரு பாலகனாய்

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.

—அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்)

நாங்கள் எட்டு பேர் சேர்ந்து தலைக்கு 200 ரூபாய்கள் எனப் பேசி சங்கமத்தை நோக்கிப் பயணித்தோம். வழியெங்கும் படகுகளைச் சுற்றிலும் பலவிதமான பறவைகள். அருகிலேயே தின்பண்டம் விற்கும் படகும் வர மக்கள் முறுக்கை உடைத்தது போல இருந்த ஒரு பண்டத்தை வாங்கி ஆற்றில் வீச சுற்றிலும் இருந்த பறவைகள்(வாத்துக்கள் குறிப்பாக) பெருத்த சத்தத்துடன் பறந்து வந்து அவற்றை உண்டன. யமுனை தான் பிரயாக்ராஜ் அருகில் உள்ளது என்பதால் சற்றே நீல நிறத்தில் உள்ள யமுனையில் படகு சென்றது.

சுவாமிகளின் சொற்களின்படி ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி துறைகள் இருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போலப் பாதுகாப்புக்கு இருக்கும் என நான் நினைத்திருக்க, படகு செல்லச் செல்ல குளிக்கும் துறை எதுவும் தென்படவில்லை. திடீரென்று இரண்டு ஆறுகளும் சேரும் இடத்தில் படகு நிறுத்தப் பட்டது. சுற்றிலும் பல படகுகள் நின்றிருக்க அவற்றினிடையே இறங்கி மக்கள் நீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்றே மண் நிறத்திலான கங்கையும், நீல நிற யமுனையும் பூமியின் அடியிலிருந்து பாய்வதாகக் கருதப்படும் சரஸ்வதியும் கூடும் பகுதியில் இரண்டிரண்டு படகுகளை அருகருகே நிற்க வைத்து அவை நகராமல் இருக்க மூங்கிலால் கட்டி வைத்திருக்கிறார்கள். இது போல ஒரு காட்சியை/சம்பவத்தை எதிர்பார்க்காததால் எனக்கு சற்றே வித்தியாசமாக ஏன் பயமாகக் கூட இருந்தது

நம் படகு அதற்கு அருகில் நிறுத்தப்பட்டு தம்பதிகள் முதலிலும், தனியாக வந்தவர்கள் பிறகும் இரண்டு படகுகளுக்கு இடையில் 4 x 4 அடி அகலமே உள்ள இடத்தில் இறங்கி (நெஞ்சளவு நீரில் குதித்து) மூங்கிலைப் பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கி எழுந்தோம். [பூஜை செய்பவர்களுக்கு தேங்காய் பால் பூ என அவர்களே விற்கிறார்கள். அதே தேங்காய் மீண்டும் மீண்டும் விற்பனைக்கு 😊] பேருந்தில் படிக்கட்டில் ஏறுவதற்கே சிரமப்படும் நான் நெஞ்சளவு உயரத்தில் உள்ள மற்றொரு மூங்கிலைப் பிடித்துக் கொண்டு எப்படி அவ்வளவு உயரத்தைக் கடந்து எங்கள் படகினை அடைந்தேன் என இப்போது நினைத்தாலும் வியப்பாக உள்ளது. அனைவரும் படகுக்கு வந்ததும் கரையை நோக்கிக் கிளம்பினோம். படகோட்டிகளின் உதவியுடனேயே நீராடவும் படகுக்குப் படகு தாண்டவும் முடிந்தது. வரும் வழியில் பறவைகளுக்கு முறுக்கு தந்தோம்.

கங்கைப் பகுதியில் தனியாகவும் யமுனைப் பகுதியில் தனியாகவும் சங்கமத்தில் தனியாகவும் ஒவ்வொரு நாள் தங்கி இருந்து குளிப்பது சிறப்பு என்றாலும் நேரமின்மை காரணமாக சங்கமத்தில் மட்டுமே குளிக்கிறோம். காலை 7.30 மணியளவில் சூரியன் உதிக்காத (காற்று மாசு காரணமாக hazy ஆக இருந்த நிலையில் ஆறுகளின் வண்ணங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை. மனம் அந்த இடத்தினைக் கண்ட பிரமிப்பிலிருந்து விடுபடாமல் பேரமைதியாக இருந்தது. எந்த எண்ணமும் மனதில் இல்லை. குளிக்கும் முன்பாகக் கடவுளை/நதிகளை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் தோன்றவில்லை. இடது கையால் முன்னால் இருந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டு வலது கையால் மூக்கை அழுத்தியவண்ணம் நீரில் மூழ்கி எழுந்து கைகூப்பி தொழுது விட்டு மேலேறினேன். நீரை கொண்டு சென்ற பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். [திருப்பதிக்கு வியாழக்கிழமை சென்றால் பாலாஜியின் கண்களை தரிசிக்க முடியும் என்பது தெரிந்தாலும் அருகில் சென்றதும் அனைத்தும் மறந்த நிலைக்கு செல்வது போன்ற அதே நிலைதான் இங்கும் எனக்கு ஏற்பட்டது)

சென்னையை விட்டுக் கிளம்பும் முன்பே நீர் நிலைகளில் குளித்து விட்டு உடை மாற்றவும், நனைத்த துணிகளை எப்படி உலர்த்துவது எனவும் தோழியிடம் பேசிய படி விடுதி அறையிலிருந்து கிளம்பும்போதே synthetic churidhar அணிந்து சென்று விடுவோம் நானும் உறவினரும். படகில் வரும்போதே அனேகமாக உலர்ந்திருக்கும். (உடுத்திய புடவைகள் எதையும் பயணத்தில் நனைக்கவில்லை. காய வைக்க இடமிருந்தாலும் நேரமில்லை. அடுத்தடுத்து பயணம்)

இம்முறை பெட்டிகள் ஏற்கனவே பேருந்துக்குச் சென்று விட்டதால் உடை மாற்ற இடமில்லாமல் ஈர உடையுடன் Daraganj என்னும் இடத்தில் திரிவேணி சங்கமத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேணி மாதவ பெருமாள் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றோம். குறுகலான சாலையில் நடந்து சிறிது தொலைவு சென்றதும் கோவில் உள்ளது. பிரயாக்ராஜின் முக்கியமான இந்தக் கோவிலில் கூட்டத்துக்கு குறைவில்ல. குறிப்பாக எங்களுடன் வந்தவர்களின் கூட்டம் தான் அதிகம். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதால் பக்தர்களின் வருகை அதிகம்.

திரேதா யுகத்தில் கஜகர்ணன் என்னும் அரக்கனைக் கொன்று இந்தத் திரிவேணி சங்கமத்தைக் காப்பாற்றி விட்டு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 12 மாதவனாக உருவம் எடுத்து பிரயாக்ராஜை சுற்றிலும் கோவில் கொண்டுள்ளார் மஹாவிஷ்ணு எனக் கூறுகிறார்கள். 12 கோவில்களையும் வலம் வந்தால் மிகவும் புண்ணியம் என்கிறார்கள். அதில் முக்கியமான கோவில் இந்த வேணி மாதவன் கோவில். சாளக்கிராம ரூபத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கிறார் மஹாவிஷ்ணு. சிறிய கோவில். மாடியிலும் சன்னிதி உள்ளது. கடவுளை தரிசித்து விட்டு அங்கேயே இருந்த ஒரு காலி அறையில் பெண்கள் நால்வரும் உடை மாற்றிக் கொண்டு மீண்டும் மாதவனைத் தரிசித்து விட்டு அங்கிருந்த சிறு கடையில் கிராம்பு 50 கிராம் வாங்கிக் கொண்டு உணவு உண்ணும் இடத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். கோவிலைச் சுற்றிலும் கடைகள். கடவுளுக்கு சாற்றிய ஆடைகளும் சில கடைகளில் விற்பனைக்கு உண்டு என விக்கி மாமா கூறுகிறார். ஊருக்குள் வேறு எந்த இடத்தையும் பார்க்கவில்லை.

சர்தார் படேல் சன்ஸ்தான் என்னும் இடத்தில் வழங்கப்பட்ட குழம்பு சாதம், பாகற்காய் பொரியல், தயிர்சாதம், ஊறுகாய் என சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் parade parking சென்று அங்கிருந்து சிருங்கிபேரபுரம் என்னும் சிற்றூரை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம்.

பிரயாக்ராஜிலிருந்து லக்னோ செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் இது. சிருங்கி என்னும் முனிவர் பெயரால் இந்த ஊர் சிருங்கிபேரபுரம் என அழைக்கப் படுகிறது. பாரத தேசத்தின் இதிகாசமான ராமாயணத்தின்படி ராம, சீதா லக்குமணர்கள் சித்திரகூடம் செல்வதற்கு வேடர்களின் மன்னன் குகன் இந்த ஊரிலிருந்து படகில் கங்கையைக் கடந்து அழைத்துச் சென்றதாக வரலாறு. கங்கையைக் கடந்து பிரயாகை இருக்கும் இடத்தை அடைந்தனர். பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் அவரைச் சந்தித்து வழி கேட்டுக் கொண்டு சித்திரகூடத்தை அடைந்தனர்.

पौरैरनुगतो दूरमं पित्रा दशरतेन च (pourairanugatho dhooram pithraa dhasarathena cha)

शृङ्गवेरपुरे सूतमं गङ्गाकूले व्यसर्जयत् (srungaverapure sootam gangakoole vyasarjayat)

गुहमासाद्य धर्मात्मा निशाधाधिपतिम् प्रियम् (guhamasaadya dharmatma nishaadhaadhipatim priyam)

மேற்கண்ட ராமாயண ஸ்லோகத்தில் ராமன் காட்டிற்குக் கிளம்பியதும் தசரதனும் நாட்டு மக்களும் சிறிது தொலைவு அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்றனராம். குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் இனிமேல் ராமனைத் தொடர்வது நடக்காது என உணர்ந்து ஊரை நோக்கித் திரும்புகிறார்கள். அது வரை தம்மை தேரில் ஓட்டி வந்த தேரோட்டியான சுமந்திரனைத் கங்கையின் கரையில் திருப்பி அனுப்பி விடுகிறார். ஸ்ருங்கிவேரபுரத்தில் வேடர்களின் மன்னனாகிய குகனைச் சந்தித்து அவன் உதவியுடன் கங்கையைக் கடந்து சித்திரக்கூடத்தை அடைகிறார்கள்.

பிரயாக்ராஜிலிருந்து செல்லும் வழியின் சிற்றூர்களின் காவல் தெய்வங்களாக ராமரும், ஆஞ்சனேயரும், சிவனும் கண்ணில் தென்பட்டனர்.(நம் ஊர் கருப்பசாமி போல) பல சிறு ஊர்களைக் கடந்து ஸ்ருங்கிபேரபுரத்தை அடைந்தோம். ஊருக்கு வெளியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு அனைவரும் நடந்து சென்று கங்கைக் கரையை அடைந்தோம். ராமர் கங்கையைக் கடந்த இடத்திற்கு அருகில் வேளுக்குடி சுவாமி தன்னுடைய பிரவசனத்தைத் தொடங்கி இருந்தார். இடப்புறம் ராமனும் குகனும் உள்ள கோவில், வலப்புறத்தில் சிறு குன்றின் மேல் ஒரு கோவில் (ருஷ்ய சிங்கர், சாந்தா தேவி) என இரண்டு கோவில்களையும் மக்கள் தரிசிக்க சென்றார்கள். கடுமையான வெயில் நேரம் என்பதால் படிக்கட்டில் அமர்ந்து பிரவசனத்தைக் கேட்க ஆரம்பித்தேன்.

வழியில் செய்யப்படும் சொற்பொழிவுகள் அனைவருக்கும் கேட்பதில்லை. ஸ்பீக்கர் வசதிகள் சரியாக இல்லாததால் அருகில் இருப்பவர்களுக்கே கேட்கும் நிலை. சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து சென்று வழியில் இருந்த மூன்றே மூன்று (950:3) ரெஸ்ட்ரூம்களில் வரிசையில் நின்று பயன்படுத்தி விட்டு நேராகப் பேருந்து இருக்குமிடத்திற்குச் சென்று விட்டேன். அருகில் இருந்த காவல் நிலையத்தில் அனுமதி பெற்று நம் மக்கள் ரெஸ்ட் ரூம் உபயோகப்படுத்தி விட்டு வந்தார்கள். சில நிமிடங்களில் பேருந்துகள் புறப்பட ஆரம்பித்தன. குறுகலான சாலையில் பயணித்து ஒரு குன்றின் மேல் ராமனும் குகனும் அணைத்திருப்பது போன்ற சிலையைக் கண்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

வழியில் Ram Shayya என்னும் இடத்தில் நின்றோம். (Shayya- படுக்கை) ராமர் காட்டுக்குச் செல்லும் போது ஓர் இரவு இந்த இடத்தில் தங்கிச் சென்றார் எனக் கூறப்படுகிறது. அக்ஷய வடம் எனப்படும் மரத்தின் கீழே ராமர் உறங்கியதாகக் கூறி இன்றளவும் அந்த மரம் பாதுகாக்கப் படுகிறது. அருகில் உள்ள சிறிய சன்னிதியில் ராமரின் கட்டில் மெத்தை போடப்பட்டு அவரது உருவச் சிலை பூஜிக்கப் படுகிறது.

மரத்தின் கீழே சுவாமியின் பிரவசனம் நடைபெற்றது. அதற்குச் செல்லும் முன்பாக அனைவருக்கும் காப்பியும் உப்புமாவும் தரப்பட்டது. வரிசையில் நின்று வாங்கி உண்பதை விட தட்டையும் டம்ளரையும் தண்ணீர் தேடி (அடி பம்ப், ட்ராக்டர் என கண்டிப்பாக கிடைக்கும்) வரிசையில் நின்று கழுவி விட்டு கோவிலுக்குச் செல்வதற்குள் பிரவசனம் முடியும் தறுவாய்க்கு வந்திருந்தது.

முன்பே பல முறை இது போல யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் எப்படி செய்தால் பிரவசனத்தை முன்வரிசையில் அமர்ந்து கேட்கலாம் எப்படி வயிறு வாடாமல் இருக்கலாம் என நன்றாகத் தெரிந்துள்ளது. பேருந்து நிற்குமிடத்திலிருந்து பேட்டரி ஆட்டோ பிடித்து உப்புமாவை உண்டு விட்டு முதல் வரிசைக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் நடந்தே சென்று வரிசையில் நின்று… கோவிலுக்கு சென்ற பிறகு தான் பிரவசனம் நடக்கிறது என்றே தெரிந்தது. கடைசி சில நிமிடங்களே கேட்க முடிந்தது என்றாலும் அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பினால் செருப்புகள் தொலைய வாய்ப்புண்டே என்ற கவலையில் பிரவசனம் என் மண்டையில் ஏறவேயில்லை.

திரும்பி வரும்போது பேட்டரி ஆட்டோ பிடித்து பேருந்திற்கு வந்து சேர்ந்தோம். மாலை நான்கு மணியளவில் லக்னோவிலிருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நைமிசாரண்யத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

மாலை 5.30 மணிக்கு விஷ்ணு சஹஸ்த்ரநாமம், (ஸஹஸ்த்ரம்= ஆயிரம்) சிறிய திருமடல், சிறு பஜன் பாடல்கள் ஆகியவற்றைத் தெரிந்தவர்கள் அனைவரும் கூறி இறைவனை வணங்கினோம். இரவு 8.30 மணியளவில் சுத்தமாகத் தென்பட்ட ஒரு petrol bunkல் இரவு உணவு வழங்கப்பட்டது. பிரயாக்ராஜ் லக்னோ சாலையின் அழகைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். அதே சாலையில் தான் இன்றும் பயணம். லக்னோ outerலிருந்து பாதை மாறி மேலும் கரடு முரடான பாதையில் பயணித்தோம். இரவு உணவு உள்ளே இறங்கியதுமே தூக்கம் வந்து விட்டது. நைமிசாரண்யத்தை அதிகாலை 1.30 மணிக்குச் சென்றடைந்தோம்.

அனுபவங்கள் தொடரும்…

 


Tuesday, 5 November 2024

செல்லப் பிள்ளை



கர்நாடக மாநிலத்தின் மண்டயா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை (அ) திரு நாராயணபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் செல்லப் பிள்ளை என்று அழைக்கப்படும் செல்வ நாராயணப் பெருமாளைக் காண சில பல வருடங்களாக விரும்பியதில் கடந்த ஜூன் 8-10, 2024 அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த ஊருக்குச் செல்ல மைசூருக்குச் சென்று அங்கிருந்து ஸ்ரீரங்கப் பட்டினம் என்னும் ஊரைக் கடந்து மலை மேல் அமைந்துள்ள இந்தச் சிற்றூருக்குச் செல்ல வேண்டும். சுற்றிலும் காவிரி நதி பாயும் சமவெளியாக இருந்தாலும் இந்த ஊர் மட்டும் கடல் மட்டத்திலிருந்து உயரே அமைந்துள்ளது. (மைசூரிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த ஊரில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த என் தாய் வழிப் பாட்டியாரின் மூலம் இந்த ஊரின் அருமை பெருமைகளை அறிய முடிந்தது. வருடம் முழுவதும் இதமான பருவநிலை கொண்ட இவ்வூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மாசி-பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வைர முடி உற்சவ சமயத்தில் நான்கு லட்சங்களை எட்டும் எனக் கூறுகிறது விக்கிபீடியா. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு இவ்வூரே சாட்சி. சுற்றிலும் குளங்களால் சூழப்பட்டு ஆங்காங்கே சிறு கோவில்கள், மண்டபங்கள், சந்நிதிகளைக் கொண்டது இந்த ஊர். சிறு குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லலாம். (தற்போது பாதி தூரம் வரை ஆட்டோ/கார்கள் செல்ல வகை செய்யப் பட்டுள்ளது)
இம்முறை சத்தியமங்கலத்திலிருந்து செல்லும் பேருந்தில் மைசூருக்கு முதலில் சென்றோம். 30 நிமிடங்களுக்கொருமுறை சென்றாலும் எல்லாப் பேருந்திலும் கூட்டம். ஓட்டமாக ஓடி இடம் பிடித்து அமர வேண்டிய நிலை. எங்கள் பெட்டியை வைக்க இடம் கண்டு பிடிப்பதே பெரிய வித்தையாக இருந்தது. கூட்டத்திற்குக் காரணம் எங்கள் ஊர் business hub. கர்நாடக கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ளது என்பதால் காலையில் மைசூர் சென்று வேலைகளை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்புபவர்கள் அநேகம்.சுற்றுப் புற ஊர்களிலிருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், மிளகாய் வற்றல் போன்ற பொருட்கள் தினமும் மைசூருக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப் படுகின்றன.

மைசூரிலிருந்து ஸ்ரீரங்கபட்டினம் வழியாக மேல்கோட்டை செல்ல ஒரு டேக்ஸியை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினோம். 51 கிலோமீட்டர் பயணம். மிகவும் பரிச்சயமான மைசூரின் தெருக்களைக் கடந்து வாகனம் விரைந்தது.

வழியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஸ்ரீரங்கப் பட்டினத்திற்கு சற்று முன்பாக ஒரு கிளைச் சாலையில் பயணித்து அனந்தாழ்வார் என்பார் பிறந்த ஊரான “கிரங்கூரில்” உள்ள கோவிலை அடைந்தோம். இவர் வைணவப் பெரியார் ராமனுஜரின் சீடர். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை ராமானுஜர் திருப்பதி சென்று ஒரு பூந்தோட்டம் அமைந்து திருவேங்கடவனின் பூஜைக்கு மலர்கள் வளர்க்கப் பணித்தார். கர்ப்பிணியான தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்று தோட்டம் அமைக்கும் வேலைகளைச் செய்தார். அவரது மனைவியால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதைப் பார்த்து கடவுளே ஒரு சிறுவனின் உருவில் வந்து அவளுக்கு உதவுகிறார். அது எப்படியோ அனந்தாழ்வார் கண்ணில் பட கோபமாக தோட்டவேலை செய்யும் சிறுவனின் தாடையில் கடப்பாரையால் அடிக்கிறார். சிறுவன் உடனே மறைந்து விடுகிறான். சிறிது நேரத்தில் கோவிலுக்குச் செல்கையில் வேங்கடவனின் தாடையிலிருந்து ரத்தம் ஒழுகுவதைக் கண்டு வந்தது கடவுளே என உணர்ந்து காயத்திற்கு கற்பூரத்தை வைக்கிறார். மன்னிப்புக் கேட்கிறார். அவரின் பக்தியை உணர்ந்து கடவுள் எப்போதும் தாடையில் கற்பூரத்துடன் காட்சியளிப்பேன் எனக் கூறுகிறார். இன்றளவும் வேங்கடவனின் தாடையில் கற்பூரம் வைப்பதைக் காணலாம். இப்போதும் திருப்பதியில் அவர் அமைத்த பூந்தோட்டம் உள்ளது. இவரது வழித் தோன்றல்கள் திருமலை அனந்தான்பிள்ளை வம்சம் என அறியப் படுகிறார்கள்.


லேசான மழைத் தூறலுக்கிடையில் அந்தக் கோவிலின் அர்ச்சகர் வந்து கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றார். அனந்தாழ்வார் பூஜை செய்த கடவுளர்களின் திருவுருவச் சிலைகள் இங்கே பூஜை செய்யப் படுகின்றன. மேலும் திருமலை அனந்தான்பிள்ளை வம்சத்தைச் சேர்ந்த சிறப்பாய் வாழ்ந்தவர்களின் உருவப் படங்களும் இங்கே வைக்கப் பட்டுள்ளன. (என் தாய்வழிப் பாட்டியாரின் தகப்பனாரின் திருவுருவப் படத்தை அங்கே கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் கொள்ளுத் தாத்தா சிறந்த சம்ஸ்க்ருத மொழி வல்லுனர். ஆசிரியர்) கோவிலின் முன்னே ஒரு திருக்குளமும் உள்ளது.

அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோவிலை நோக்கிப் பயணித்தோம். அந்த இடத்தை அடைவதற்குள் இந்த ஊரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாமா?

காவிரி நதியானது ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று ஊர்களில் மட்டும் ஊரை சுற்றிக் கொண்டு தீவு போன்ற அமைப்பை ஏற்படுத்திச் செல்கிறது. இந்த மூன்று ஊர்களிலுமே முக்கிய தெய்வமாக ஸ்ரீ ரங்கநாதர் விளங்குவதால் ஆதி ரங்கம், மத்திய ரங்கம், அந்திய ரங்கம் என இவ்வூர்கள் அழைக்கப் படுகின்றன.

மைசூர் அரசர்கள், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் ஹைதர் அலி திப்பு சுல்தான் போன்றோரால் ஆளப் பட்டு, ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட ஊர் இது. மைசூர் அரசர்கள் வெற்றி பெற்று பத்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடினார்கள். 1799ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் திப்புவுக்கும் நடைபெற்ற நான்காம் ஆங்கில மைசூர் போர் பிரசித்தி பெற்றது. இப்படி கலை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதால் இந்த ஊர் UNESCO World Heritage Site ஆகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஹொய்சால விஜய நகர கட்டிடக் கலை அமைப்பைக் கொண்ட ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கி.மு.984ல் கட்டப்பட்டது. மிக அழகான சிற்பங்களைக் கொண்ட இக்கோவிலை நாங்கள் சென்றடைந்த போது லேசான மழை. சேற்றில் நடந்து சென்று 50 ரூபாய்கள் கொடுத்து அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு இறைவனை வணங்கி வந்தோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் வரிசையாக உள்ள கடைகளில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த சென்னப் பட்டினா(னம்) என்னும் ஊரில் செய்யப்படும் மரத்தாலான பொம்மைகளை வாங்கினோம்.

மக்களால் வணங்கப்படும் காவிரியை மழை காரணமாக அருகில் சென்று வணங்க முடியவில்லை. (நீத்தார் நினைவுக் கடன்களை இந்த ஊரில் காவிரிக் கரையில் அதற்கென உள்ள இடத்தில் செய்வது வழக்கம்). மாலை ஐந்து மணியளவில் அங்கிருந்து கிளம்பி மேல்கோட்டையை நோக்கிப் பயணித்தோம். ஆறு மணிக்கு நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்குச் சென்று பெட்டியை வைக்கவும் ஸ்ரீ ராமானுஜர் திருவாதிரையை (அவரது பிறந்த நட்சத்திரம்) முன்னிட்டு வீதியில் ஊர்வலம் வரவும் நாங்களும் வீதிக்கு வர… ஆரம்பித்தது எங்கள் மேல்கோட்டை புண்ணிய யாத்திரை.

ராமானுச நூற்றந்தாதிப் பாடல்களைக் (108) கூறிய படியே அந்த ஊர்வலம் கோவிலை அடைந்த நேரம் அங்கே பக்தர்களின் கூட்டம் காத்திருந்தது. உள்ளே சென்ற பிறகும் மீதி இருந்த பாடல்களையும் கூறி முடிக்க ஏறக்குறைய 1.30 மணி நேரங்களானது. கடைசியாக, மிக மிக ருசியான மாங்காய் சாதமும் தயிர் சாதமும் பிரசாதமாக அனைவருக்கும் தரப்பட்டது. மேல்கோட்டை கோவிலில் தரப்படும் பிரசாதங்களை உண்டாலே வயிறு நிறைந்து விடும். உறவினர் வீட்டிலும் அதே உணவுகளைத் தந்தார்கள். [சரியான சாப்பாட்டு ராமனாக(ராமியாக) இருக்கிறாளே என எண்ண வேண்டாம். இந்தக் கோவிலில் பிரசாதங்கள் அவ்வளவு ருசியானவை. புகழ் பெற்றவை.]

பொதுவாக எந்த ஊர் கோவிலுக்குச் சென்றாலும் அங்கு வாழும் மக்களில் ஒருவரை நட்பு செய்து கொண்டால் அவர் எந்தப் பூஜை எப்போது நடக்கும் மக்கள் கூட்டத்திற்கிடையில் எங்கே நின்றால் கடவுளை தரிசிக்கலாம் போன்ற தகவல்களைக் கூறி வழி நடத்துவார்கள். அப்படி ஒருவர் எனக்கும் கிடைக்கவே வசதியாக தரிசனம் செய்ய முடிந்தது.

ராமானுஜரின் திருவுருவச் சிலைகள். தானுகந்த திருமேனி(திருப்பெரும்புதூர்), தமருகந்த திருமேனி(மேல்கோட்டை) தானான திருமேனி ( திருவரங்கம்) என மூன்று உள்ளன. தமர்= மக்கள். மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ராமானுஜரின் சிலையானது இந்தக் கோவிலில் உள்ளது.

மறுநாள் காலை எழுந்து வெளியே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது நரசிம்மர் மலை. அன்றைய தினம் அருகில் இருக்கும் தொண்டனூர் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரைக் காண எண்ணி இருந்தோம்.
காலை நடைப்பயிற்சி போல கோவில் திறப்பதற்கு முன்பாக எங்கள் பாட்டியார் அடிக்கடி குறிப்பிட்ட “அக்கா தங்கை குளங்கள்”, மற்றும் அதனைச் ஒட்டியுள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். இன்றளவும் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டுக் குடிநீருக்கான ஆதரமாக விளங்குகிறது. அருகருகில் அமைந்துள்ளதால் இந்தப் பெயர். இங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சிக் கூடத்தை வார இறுதி என்பதால் காண முடியவில்லை. பழங்கால ஓலைச் சுவடிகள் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் என எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை கணினியில் மொழிபெயர்த்துப் பாதுகாக்கிறார்கள். பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து நூலகம் அமைத்துள்ளார்கள். [1992ஆம் வருடம் அங்கு சென்ற போது கணினி பற்றிப் பல தகவல்களை கூறக் கேட்டதில் எதுவுமே புரியவில்லை. என் அறியாமை குறித்து அவமானமாக இருந்தது. சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலையாகக் கணினி வகுப்பில் சேர்ந்து Email simulation Coding எழுதுவது வரை கற்றுக் கொண்டேன்]

மேல்கோட்டையில் மற்ற ஊர்க் கோவில்களைப் போல விஸ்வரூப தரிசனம் அதிகாலையில் நடைபெறுவதில்லை. குளிர் காரணமாக மக்களின் வாழ்க்கை தாமதமாகவே தொடங்குவதால் கோவில் நிகழ்வுகள் 8.30 மணிக்குத் தான் ஆரம்பம் ஆகின்றன. நிதானமாக நாங்கள் கோவிலுக்குச் சென்று முதலில் ராமானுஜர் பிறகு செல்வ நாராயணப் பெருமாள் ஆகியோரின் விஸ்வரூப தரிசனத்தை கண்டோம். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சந்நிதியிலும் தினசரி பூஜை நடைபெற்று இறுதியாக 10.30 மணிக்குக் காலை பூஜைகள் நிறைவு பெற்றன. [இங்குள்ள உத்சவ மூர்த்தி சம்பத்குமாரன் என அழைக்கப் படுகிறார்.]

இடையிடையே கோவில் மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களைக் கண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். தூண்கள் கருங்கல்லால் செய்யப் படாமல் சற்றே சிவப்பு நிறமான மாக்கல்லால் செய்யப் பட்டுள்ளன. கோவிலில் கிடைத்த பிரசாதமான பொங்கல் தயிர் சாதத்தை உறவினர் பாக்குத் தட்டில் போட்டுக் கொடுத்து ஆட்டோவையும் ஏற்பாடு செய்து கொடுத்து போகும் வழியில் சாப்பிடுங்கள் எனக் கூறி அருகிலிருக்கும் “தொண்டனூர்” என்னும் ஊரைச் சுற்றிப் பார்த்து வர வழியனுப்பினார்.அங்கே செல்வதற்குள் அந்த ஊரைப் பற்றிய சிறப்புக்களைக் காணலாமா?

மேல்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிற்றூர் UNESCO heritage Site ஆக அறிவிக்கப்பட்ட இடமாகும். சோழ மன்னன் குலோதுங்கனிடமிருந்து தப்பிக்க காவிரிக் கரையோரமாக நடந்து ராமானுஜர் இந்த ஊரில் தங்கி இருந்ததாக் கூறப்படுகிறது. இந்த ஊரின் மேற்கே உள்ள ஏரியும் இவரால் ஏற்படுத்தப் பட்டது. அருகிலிருக்கும் சிறு ஆறு மற்றும் குளங்களிலிருந்து பெறப்படும் நீரால் இந்த ஏரி 1000 ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது சிறப்பு.

ஊருக்குள்ளே நுழையும் போதே ஒரு சிறு குளம் அதில் ராமனுஜரின் மிகப் பெரிய திருவுருவச் சிலை என ஒரு வித தெய்வீகத் தன்மையுடன் அமைதியாக உள்ளது இந்த ஊர். மிகச் சிறிய கிராமமாகத் தற்போது காணப் பட்டாலும் ஹொய்சால மன்னர்களின் இரண்டாவது தலைநகரமாக இருந்தது இந்த ஊர். செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புக்களும் நெல் வயல்களும் தென்பட்டன. முதலில் நாங்கள் சென்றது “நம்பி நாராயணர்” திருக்கோவில். முன்புறம் பசுமையான தோட்டம். உள்ளே சென்றதும் பழமையான கோவிலைக் காணலாம். இங்கே நாராயணர் வழக்கமாக உள்ளது போல் அல்லாமல் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார். இங்கிருந்த தூண்களில் சிற்பங்கள் மிக மிக நுணுக்கமாகச் செதுக்கப் பட்டுள்ளன.

இதற்கு நேரெதிரில் மிகப் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோவில் உள்ளது. மிக உயரமான மதில் சுவரும் பச்சைப் பசேலென்ற நந்தவனமும் சூழ்ந்த இந்தக் கோவிலின் முன்புறமாகச் சென்ற போது தான் அதன் பழமை புரிந்தது. ஒருவரே நம்பி நாராயணர், கிருஷ்ணர் மற்றும் அருகிலுள்ள நரசிம்மர் கோவில்களில் பூஜை செய்வதால் பொறுமையாகக் காத்திருந்தே கடவுளரை தரிசிக்க வேண்டி இருந்தது. ஒரு திருமணக் குழு அங்கே காத்திருந்தது.

கோவில் வாசலில் அருகிலிருந்த தோப்பிலிருந்து பறித்து வந்த இளநீரை விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிக் குடித்து விட்டு நரசிம்மரை தரிசிக்கச் சென்றோம். சிறு குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவிலும் மிகப் பழமை வாய்ந்ததே. இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பு இங்குள்ள ராமானுஜர் திருவுருவம் ஆதிசேஷனின் கீழ் அமர்ந்தபடி உள்ளது. மீண்டும் கிருஷ்ணர் கோவிலை அடைந்த போது கல்யாண குழு பூஜை செய்பவருக்காகக் காத்து சலித்து வெளிபிராகாரத்திலேயே திருமணம் முடித்து உணவினையும் உண்டு விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். (சாப்பிட்ட இலைகளை சுத்தம் செய்யாமலே)

கோவிலின் உட்புறம் ஒரே சந்நிதி மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மற்ற பகுதிகள் மிகப் பாழடைந்து உள்ளன. மேற்சொன்ன மூன்று கோவில்களுமே UNESCO World Heritage Sites என்னும் அங்கீகாரம் பெற்றவை. நாங்கள் இங்கே இருந்த நேரத்தில் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது.

நாங்கள் இங்கிருந்து கிளம்பி தொண்டனூர் ஏரியை கடுமையான மழை காரணமாகக் காண இயலாமல் வந்த ஆட்டோவிலேயே மேல்கோட்டையை நோக்கித் திரும்பினோம். வழியெங்கும் தென்னந்தோப்புக்களுக்குக் குறைவே இல்லை. காவிரி நீர்ப் பாசனத்தால் எங்கும் பசுமை. மேல்கோட்டை கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் ஒரு மலை மேல் இருந்தாலும் ஆங்காங்கே சிறிய பெரிய குளங்கள் உள்ள வித்தியாசமான ஊர்.

மதியம் சிறிது ஓய்வுக்குப் பிறகு குன்றின் மேலமைந்த ஸ்ரீ நரசிம்மரைத் தரிசிக்க விரும்பினோம். அடிவாரத்தில் அமைந்துள்ள “கல்யாணி” என்னும் பெயருடைய பெரிய குளத்தினை வணங்கி விட்டு ஆட்டோவில் பாதி தூரம் கடக்கக் கிளம்பினோம். இந்த கல்யாணி குளமானது ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அனைத்துப் படங்களிலும் நடித்துள்ளது?! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஊரின் அனைத்துப் பகுதிகளும் பல மொழித் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளவையே. குளத்தைச் சுற்றிலும் மிக அழகான கலைநயத்துடன் கூடிய மண்டபங்கள் உள்ளன.

நரசிம்மர் மலையின் பாதி தூரத்தில் ஆட்டோ நின்று விட மீதிப் படிக்கட்டுக்களை ஏறிக் கோவிலை அடைந்தோம். குரங்குகள் அதிகம் என்பதால் கவனமாகச் சென்றோம். [பாதி தூரத்தில் ஒரு குகை அதில் ஆரம்பத்தில் நடந்தும் பின் மண்டியிட்டும் பின் குனிந்து தவழ்ந்து படுத்துக் கடைசியில் நரசிம்மரின் சன்னிதி அருகே வெளியேற வேண்டும். கடவுளிடம் பணிவு தேவை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ள இந்தக் குகையில் சிறு வயதில் சென்றிருக்கிறோம். தற்சமயம் அனுமதி இல்லை.]

கடவுளை தரிசித்து விட்டு மலையில் மேலிருந்து தெரிந்த ஊரின் சுற்றுப் புறத்தைக் கண்டு களித்து விட்டு மீண்டும் படியிறங்கி ஆட்டோவில் ஊரை வந்தடைந்தோம். இந்த மலையின் மேலே நின்று ராமானுஜர் “ஓம் நமோ நாராயணா” என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஊர் மக்களுக்குக் கூறியதாக வரலாறு.
ராமானுஜரின் காலத்தில் அனைத்துக் குல மக்களும் கோவிலின் உள்ளே சென்று கடவுளைக் காண முடியாது என்பதால் இரவு ஏழு மணியளவில் கோவிலின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு தீவட்டி ஓளியில் தீபாராதனை நடைபெறும். “தீவட்டி சேவை” என்னும் அந்தச் சிறப்பு பூஜையைக் கண்டு களித்து விட்டு உள்ளே சென்றதும் மீண்டும் ஒவ்வொரு சந்நிதியாக நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு கடைசியாக பிரசாதமாகக் கிடைத்த தோசை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலை உண்டு முடித்து அறைக்குக் கிளம்புகையில் இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. என் ஸ்மார்ட் வாட்ச் 13,000 அடிகள் அன்றைய தினம் நான் நடந்ததாகக் காட்டியது. (ஏற்க்குறைய 9 கிலோமீட்டர்கள்)

மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு வாடகைக் காரில் கிளம்பி அருகிலிருக்கும் ஜக்கனஹள்ளி கிராஸ் பேருந்து நிலையத்தை அடைந்து மைசூருக்குச் செல்லக் காத்திருந்தோம். காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிர்த் திசையில் மாண்டியாவரை பயணித்து அங்கிருந்து மைசூருக்குச் செல்ல முடிவு செய்தோம். (வேறு வழி??)

ஜக்கனஹள்ளி – மாண்டியா பயணம் ஒரு தனிப் பதிவு எழுதும் அளவுகான அனுபவங்களை உடையது. பேருந்து சிறு கிராமங்களின் வழியாகச் சென்று பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. வழியெங்கும் ராமர்/ கிருஷ்ணர் கோவில்கள், திருவிழாக்கள், நன்செய் நிலங்கள் என அருமையான ஊர்கள். மாண்டியாவில் காலை உணவை உண்டு விட்டு மைசூர் செல்லும் பேருந்தில் ஏறினோம். இம்முறை பேருந்து ஜக்கனஹள்ளியில் நிற்காமல் ஹைவேயில் சென்றது. மைசூர் பேருந்து நிலையத்தில் எங்களைச் சந்தித்த என் கணவரின் சகோதரர் மகனின் உதவியுடன் சத்தியமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகே சற்று நிம்மதி அடைந்தோம். எங்கெங்கு காணினும் கூட்டமடா…

மலைப் சுற்றுக்களில் திரும்புவதற்கு வைக்கப் பட்டுள்ள கண்ணாடிகளில் பாதரசம் காணாமல் போய் எதுவுமே தெரியவில்லை. கடவுள் தயவால் தான் அனைவரும் மலையின் மேலும் கீழும் சென்று வருகிறார்கள் என்பதில் ஐயமேயில்லை.

மாலை ஐந்து மணியளவில் எங்கள் மேல்கோட்டைப் பயணம் நிறைவுக்கு வந்தது. நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

அனுபவங்கள் தொடரும்…

Monday, 12 August 2024

காதலென்ன கத்திரிக்காயா?

இன்று காலை உடற்பயிற்சி சமயத்தில் ஏற்பட்ட ஏதேதோ சிந்தனைகளில் கத்திரிக்காய் பற்றிய நினைவுகளும் ஒன்று.

முதல் நினைவு சிறுவயதில் பாடிய இந்தப் பாடல் தான்: 

கத்திரிக்காய் சொத்தை கடலூரு மெத்தை

ஏண்டி சரோஜா எப்போ கல்யாணம்

நேத்து மத்தியானம் போடு மத்தா(த)ளம்

கத்தரிக்காய் எனத் தூய தமிழிலும் விக்கிபீடியாவிலும், கத்தாரிக்காய் என என் மாமியாராலும், குண்டுக் கத்தீ..ரிக்கா எனக் காதலன் கன்னத்தை விவரித்துத் திரைப்படப் பாடலிலும், கத்….ரிகா என தெருவில் கூவி விற்கும் வியாபாரிகளாலும், Eggplant, Aubergine மற்றும் Brinjal என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இந்தக் கத்திரிக்காயின் பிறப்பிடம் தென்னிந்தியாவும் இலங்கையுமே என்பது குறிப்பிடத்தக்கது. பூத்துக் காய்க்கும் செடிகொடியினம் என்னும் வகையிலான “solanaceae” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் உயிரியல் பெயர் “solanum melongena” (சொலானம் மெலோஞ்சினா) தக்காளி, உருளை, வெள்ளரி ஆகியவையும் கத்திரிக்காயின் சகோதர சகோதரிகள்தான். (solanaceae family)     

இந்தக் காயில் கார்போஹைடிரேட், புரதச் சத்துக்கள், தாதுக்கள் உள்ளன என்பதால் உலகளவில் உணவுத் தயாரிப்பில் இதற்குச் சிறப்பான இடம் உண்டு. இரும்புச் சத்து நிறைய உள்ள காய் எனக் கூறக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் விக்கிமாமா இரும்புச் சத்து 1% எனக் கூறுகிறார்.

கத்திரிக்காய் பொதுவாக ஊதா, இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது. குண்டுக் கத்திரி, ஒல்லிக் கத்திரி,வேலூர் முள்ளுக் கத்திரி, நீளக் கத்திரி, வரிக் கத்திரி எனப் பல வகைகள் உள்ளன என்பதை நாம் நன்றாகவே அறிவோம். தமிழகத்தில் ஒன்பது வகையான கத்திரிக்காய் வகைகள் பயிரிடப் படுகின்றன. இதில் தேனி சின்னமனூர் “சிம்ரன்” கத்திரிக்காயும் உண்டு.

இப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் குண்டான இரண்டைத் தேர்ந்தெடுத்து என் கணவர். 2014 வருடத்தில் ஒரு நாள் காலையில் வாங்கி வந்தார் சமையற்கலைக்கும் எனக்கும் இடைவெளி அதிகம் “அன்றும் இன்றும் என்றும்”.

பச்சடியா துவையலா என மிகவும் யோசித்து (எப்படியும் இரண்டுமே செய்யத் தெரியாது) என என் தாயாரின் செய்முறைப் பக்குவத்தில் இவற்றைத் துவையலாக மாற்றுவது என முடிவு செய்தேன். கண்ணால் கண்டது தான். வேறெந்த விதமான குறிப்பும் கையில் இல்லை.

நான் ஆர்வத்துடன் கத்திரிக்காய்களைக் கழுவித் துடைத்து மேலே எண்ணை தடவி கத்தியால் சிறு சிறு ஓட்டைகளைப் போட்டு அடுப்பில் வைத்துச் சுட்டு எடுத்தேன். கேஸ் அடுப்பின் மேல் வைத்து அப்பளம், சப்பாத்தி போன்றவற்றைச் வாட்டி எடுக்கும் தகடு என்னிடம் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு நெருப்பில் கைபடாமல்  சுட்டெடுத்தேன். (அதையும் மீறிக் கையில் சூடு பட்டது தனிக் கதை)

அடுத்ததாக கத்திரிக்காயின் மேலுள்ள தோலை நீக்கும் படலம் ஆரம்பம். தோல் பிய்ந்து வருவேனா என அடம் பிடிக்க, நான் விடுவேனா என இழுத்துப் பிடித்துத் தோலை முதலில் கையால் பிய்த்தெடுக்க முயற்சித்தேன்.  அடுத்து கத்தியை வைத்து தோலைப் பிரிக்க முயற்சித்தேன். சதைப் பகுதியுடன் சேர்ந்து வந்தது. தொடர்ந்து ஸ்பூன் வைத்துப் பிரிக்க முயற்சித்துக் கடைசியில் கருகியும் கருகாமலும் இருந்த தோலை எடுத்து உள்ளிருந்த சதைப் பகுதியை விதைகளில்லாமல் பிரித்து வைத்தேன். ஸ்ஸப்ப்ப்ப்ப்பா…

அடுத்த கட்டமாக துவையலுக்குத் தேவையான பருப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றை வறுத்தெடுத்து கொண்டு மிக்ஸியில் அரைக்க ஆரம்பித்தேன். பருப்பு வகைகள் “அறைஞ்சுடுச்சா” எனப் பார்த்து விட்டு கடைசியாகக் கத்திரிக்காயையும் சேர்த்து அரைத்தேன். சுவையான சூடான( அவ்வைப் பாட்டியாரின் சுட்டபழம் போல இது சுட்ட காய் இல்லையா?) கத்திரிக்காய் துவையல் தயார்.

நிற்க.

YouTube போன்ற சமூக வலைத் தளங்களில் காட்டப்படும் சமையல் செய்முறை நேரங்களில் மிக்சியில் நன்றாக “அறைஞ்சுடுச்சா” எனப் பாருங்கள் எனக் கூறுகிறார்கள். அறைஞ்சுடுச்சா என்றால் மிளகாயா, பருப்பா உப்பா எது யாரை அறைந்தது யார் கன்னம் பழுத்தது எனக் கேட்கத் தோன்றவில்லை? நன்றாக அரைபட்டு விட்டதா, அரைக்கப்பட்டு விட்டதா போன்ற பதங்களை உபயோகிப்பதே சரி என ஒரு தமிழறிஞர் கூறியதாக என் தோழி சமீபத்தில் கூறினார்.

மேலே செல்வோமா? ரை..ரை…

சாப்பாட்டு மேசையில் என் கணவருக்குத் துவையலை ஆசையாகப் பரிமாற யத்தனித்த சமயத்தில் இது என்ன எனக் கேட்டார். நான் என்னவெனக் கூறவும் “உனக்கே உனக்காக”த் தான் கத்திரிக்காய் வாங்கி வந்தேன் எனக்கு வேண்டாம் என மறுத்தார். சிறிதளவு நான் உண்ட பிறகு மீதியை என் மாமியாரின் துணிகளுக்கு சோப்பு போட்டு ஊற வைத்து, நல்லா பிரஸ்(brush) போட்டு, கசக்கி, குமுக்கி, ரெண்டு பக்கெட் தண்ணீரில் நன்றாக அலசி ஒட்டப் பிழிந்து (அவரது வார்த்தைகள் 😊) பால்கனியில் (தண்ணீர் சொட்டச் சொட்ட) காய வைத்து விட்டு உள்ளே வந்த என் வீட்டு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினேன்.

அறைந்து விட்டதா?

. 

 

 

 

 

Thursday, 28 March 2024

LTC பயணங்கள் – பத்ரிநாத், கேதார்நாத் [பகுதி -3]

சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி

பத்ரிநாதனை ஆசை தீர தரிசித்து விட்டு ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு காலை உணவிற்குப் பிறகு ஏறக்குறைய 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

கேதார்நாத்

இந்த ஊர் சைவப் பெரியோர்களான நாயன்மார்களால் பாடல் பெற்ற 275 சிவன் கோவில்களில் ஒன்று. (திருஞானசம்பந்தர்) இந்தப் பயணத்திலும் குறுகலான சாலைகள், பாதாளத்தில் நதி, பின்னணியில் உச்சியில் பனி படர்ந்த மலைத் தொடர்கள், பனி உருகி சிறு நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகளை உடைய மரங்கள், வழியில் சிற்றூர்கள், சிறு உணவகங்கள், சக பயணியர் என முன்பு கண்ட அதே காட்சிகள் தான்.

ராம்பூரைக் கடந்து பயணித்து சீதாபூர் என்னும் மிகச் சிறிய ஊரை மாலையில் சென்றடைந்தோம். சில தங்கும் விடுதிகளும் சிறு உணவகங்களும் பத்து பதினைந்து குடியிருப்புக்களும் உள்ள ஊர் அது. (ஜூன் 2013ல் பெய்த பெருமழையில் இந்தக் கிராமமே அழிந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன்) மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய சாலைகள் என்பதால் ராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் பெட்டிகளை வைத்து விட்டு ஓய்வெடுத்தோம். உணவு சமைக்க எங்களுடனே இரண்டு சமையல்கார்களும் வந்திருந்ததால் உணவுக்குப் பஞ்சமில்லை. சூடான பூரியும் உருளைக் கிழங்கும் செய்து தந்தார்கள். விடுதியினைச் சுற்றிலும் மிக உயரமான மலைத் தொடர்கள். (பனி இல்லை) விடுதியின் இடப்புறத்தில் மலையிலிருந்து ஓ…வென சத்தமிட்டபடி விழும் மந்தாகினி நதி. அதில் அலையுடன் சுழித்துக் கொண்டு நீர் வரும் சமயம் விடுதியின் குழாயில் நீர் ஏறும் படி அமைத்திருந்தார்கள். மோட்டார் கிடையாது. இயற்கையே துணை. குழாயின் அடியில் வாளியை வைத்து விடுவோம். அலை வேகமாக வரும் சமயம் குழாயில் நீர் வந்து வாளி நிரம்பும். (அவசரத்திற்கு ஆகாது 😊)

மறுநாள் காலை உணவிற்குப் பிறகு அனைவரும் கேதார்நாத் செல்ல மலையேற வேண்டிய இடமான “கௌரி குண்ட்” செல்லத் தயாரானோம். குறுகிய சாலையாதலால் ஜீப்கள் மட்டுமே செல்ல முடியும். அதில் ஏறி கௌரி குண்டை அடைந்தோம். இந்த இடத்திலும் வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. (நாங்கள் யாரும் அங்கே குளிக்கவில்லை) அங்கே குளித்து விட்டு கௌரி அம்மனை தரிசித்து விட்டு 16 கிலோமீட்டர் பனி படர்ந்த மலைகளின் மேல் நடந்தோ, டோலியிலோ (தொட்டில் போல இருக்கும் நம்மை அதில் உட்கார வைத்து இருவர் சுமந்து செல்வார்கள்) அல்லது குதிரையிலோ செல்லலாம். (தற்சமயம் ஹெலிகாப்டர் சேவை உண்டு) கௌரி குண்டில் பார்வதி சிவனை அடையத் தவம் இருந்தார் எனவும் பிள்ளையாருக்கு யானை முகம் இங்கே தான் சிவனால் தரப்பட்டது எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன.


11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் கேதார்நாத் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாகை மாவட்டத்தில் உள்ள  நகரப் பஞ்சாயத்து ஆகும். மந்தாகினி நதியின் பிறப்பிடமான Chorabari Glacier அருகில் அமைந்துள்ளது இந்த ஊர். மிக அருகிலுள்ள சாலை என்றால் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கௌரிகுண்ட் தான்.

நாங்கள் அங்கே சென்ற சமயம் காலை பதினோரு மணி இருக்கும். வெயில் கடுமையாக இருந்தது. சுற்றுலா ஏற்பாட்டாளரான என் பெரியப்பா அவரவர் விருப்பப்படி மலையேறி வந்து சேருங்கள் என்று கூறி விட்டு தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் எங்களுக்கு முன்னால் நடந்தே கிளம்பி விட்டார். குதிரையா டோலியா நடையா என முதலில் விவாதம், பிறகு கட்டணம் முடிவு செய்தல் என அங்கேயே ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களாகி விட அதற்குள் என் உடல்நிலை சரியாகாமல் இருந்தால் மிகுந்த களைப்பு ஏற்பட்டது. எட்டு வயதான என் மகனுக்கு வியர்க்கிறது, பசிக்கிறது, தாகம் எனப் பல பிரச்சினைகள். கொண்டு சென்ற தண்ணீர், பிஸ்கட், பழங்கள் அனைத்தும் காலி. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி அவரை அழைத்து செல்வது என்னால் இயலாத காரியமாகத் தோன்றியதால் மீண்டும் தங்குமித்திற்கே எங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல என் கணவரிடம் வேண்டினேன்.


மீண்டும் திரும்பி வருவதற்குள் அனைவரும் சென்று விடுவார்கள் என்பதால் என் கணவர் மிகவும் தயங்கினார். வற்புறுத்தி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து (குறுகலான சாலையில் வரிசையாக ஜீப்கள் நின்று கொண்டிருந்தன) எதிர் திசையில் செல்லும் ஜீப்பில் ஏறி சீதாபூர் சென்றோம். (உடல் நிலை சரியில்லாததால்  என் பெற்றோர் அங்கேயே தான் தங்கி இருந்தார்கள்) எங்களை விட்டு விட்டு மீண்டும் கணவரும் மகளும் கிளம்பிச் சென்றார்கள்.(மகள் பிடிவாதமாக உடன் சென்றார்) கடும் பனியில் மலையில் செல்லப் போகிறார்கள் என்ற போதும் லேசான ஸ்வெட்டர், அரைகால் அளவுள்ள ஸ்கர்ட் என இருந்த மகளுக்குப் போதுமான குளிராடைகளை அணிவித்து அனுப்ப எனக்குத் தெரியவில்லை. வழியெங்கும் இவ்வளவு பனி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. தலை முதல் கால் வரை கனத்த ஆடைகள், கைகளுக்கு gloves, கால்களுக்கு boots என அணியாவிட்டால் Frost bite ஏற்படும், பிறகு உடல் உறுப்புக்களை வெட்டி எடுப்பது தான் ஒரே வைத்தியம் என்பதெல்லாம் தெரியாது.


இருவரும் குதிரையில் ஏறி பாதித் தொலைவும் சென்று வழியில் நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்து குச்சியைப் பிடித்துக் கொண்டு நடந்து மீதித் தொலைவுமாகக் கேதர்நாத் சென்றடைந்து அன்றிரவும் மறுநாள் காலையும் கேதார்நாதரைத் தரிசித்து விட்டு குழுக் குழுவாக மறுநாள் மாலைக்குள் சீதாபூர் வந்து சேர்ந்தார்கள். உணவும், தங்குமிடமும் கேதர்நாத்திலேயே பெரியப்பாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகள் திரும்பி இறங்கி வருகையில் முழுப் பயணமும் குதிரையில் தான். ஆங்காங்கே குதிரையை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு அத்தனை பனிக்கிடையில் பெட்டிக்கடையில் லிம்கா குடித்து, அதை புகைபடம் எடுத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றுத் திரும்பினார். கடவுளின் பரிபூரண அருள் இருந்ததால் அனைவரும் நலமுடன் திரும்பினார்கள். அருமையான அந்த அனுபவத்தை இழந்து விட்டேன்.  

சீதாபூர்


சீதாபூர்வாசிகளான நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதையும் பகிர்கிறேன். முதல் நாள் சிறு மலைக் கிராமங்களைக் கடந்து சென்ற போது நாமும் இது போன்ற ஒரு ஊரில் சில நாட்களாவது தங்க வேண்டும் என மனதில் நினைத்தேன். அது அடுத்த நாளே நிறைவேறும் என நினைக்கவில்லை. சுற்றுலா ஏற்பட்டாளர் என் பெரியப்பா என்று முன்பே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அவர் காலையில் செய்த பூரிகளும் தயிரும் இருக்கிறது சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றிருந்தார். மதிய உணவும் பூரி தான். குளியலறையில் மந்தாகினி நீரில் குளித்து துவைத்து ஓய்வெடுத்தோம். கடுமையான வெயில் பகல் முழுவதும். என் மகனும் தந்தையும் வியர்க்கிறது என shorts மட்டும் அணிந்தே பகல் பொழுதைக் கழித்தார்கள். விடுதியின் வாசலிலேயே கௌரி குண்ட் செல்லும் சாலை என்பதால் சாலையின் ஓரமாய் கல்லின் மேல் அமர்ந்து நாள் முழுவதும் ஜீப்கள், கார்களை வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள், அவற்றில் பச்சைப் பசேலென்ற அடர்த்தியான மரங்கள், ஓ…வென்ற சத்தத்துடன் விழும் மந்தாகினி, கோதுமை வயல்களில் அறுவடை முடிந்து மீதம் உள்ள வைக்கோல் (வெயில் பட்டு பளபளப்புடன் இருந்தன), கம்பளிப் புழுக்கள், நாய்கள் என சகலமும் தெரிந்தன. மிக அருமையான இடம்.

விடுதிக் காப்பளாரின் மனைவியுடன் நட்பு செய்து கொண்டு மறுநாள் என் மகனுக்கு எருமைத் தயிர் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். என் தாயாருக்கு ஹிந்தி மொழியில் பேசத் தெரியும். முதல் நாள் சுட்டு வைத்திருந்த அப்பளம் போன்ற பூரிக்கு பயந்து அருகில் இருந்த சிறு உணவு விடுதியில் சப்பாத்தி சாப்பிட விரும்பினோம். ஒரு சப்பாத்தி என ஆர்டர் செய்த பிறகு தான் அந்த தம்பி மாவே கலக்கினார். பிறகு ஏற்கனவே வேகவைத்த உருளைக் கிழங்கை தாளித்தார். அது தான் இரவு உணவு. பகல் முழுதும் தங்கியிருந்த அறையில் பெரிய ஈக்கள் சுற்றிக் கொண்டிருந்தன. விரட்ட விரட்ட சுற்றிக் கொண்டே இருந்தன. இரவில் பாதியில் மின்சாரம் இல்லை. நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் தூங்கவே முடியவில்லை. மறுநாள் காலையும் குளியல், சப்பாத்தி, நடைப்பயிற்சி, சாலையில் வேடிக்கை என அமைதியாக மந்தாகினியைப் பார்த்த வண்ணம் பொழுதைக் கழித்தோம். அவர்கள் கொண்டு வந்த தயிர் மலைப் பிரதேசம் என்பதால் சரியாக தயிராகவில்லை என்பதால் மகன் சாப்பிட மறுத்து விட்டார். சிறுவனுக்கு சாதம் வேண்டும் என்று சொல்லியிருந்தால் செய்து கொடுத்திருப்பேனே என உணவு விடுதி நடத்துபவர் வருந்தினார்.

விடுதிக் காப்பாளரின் உதவியுடன் கோதுமை வயலில் இருந்து காய்ந்த வைக்கோலை (கைவேலை செய்யப் பயன்படும்) வாங்கி வந்து சென்னையில் சில straw work சித்திரங்களைச் செய்தேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கும் மேலாக வைக்கோலைப் பத்திரமாக வைத்திருந்தேன். பளபளப்பு சற்றும் குறையாமல் இருந்தது. மற்றவர்கள் கேதார்நாத்திலிருந்து வந்ததும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அன்றிரவும் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலை ஹரித்வாரை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். இன்றளவும் மறக்க முடியாத மூன்று நாட்கள் அவை.

வழியில் ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவினை முடித்துக் கொண்டு கிளம்பிய சில மணித் துளிகளில் மலைச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல். எங்கள் பேருந்துக்கு சில பேருந்துகளுக்கு முன்பாக மலையிலிருந்து சாலையை முழுதாக அடைத்த வண்ணம் ஒரு பெரிய பாறாங்கல் விழுந்திருந்தது. ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு ராணுவத்தினர் வந்து அந்தக் கல்லை JCB வைத்து 300 அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கைப் பகுதியில் தள்ளி விட்ட பிறகு பயணத்தைத் தொடர்ந்து அன்றைய தினமே ஹரித்வாரைச் சென்றடைந்தோம்.  ஹரித்வார் பகுதி சமவெளியில் அமைந்துள்ளதால் சீக்கிரம் செல்ல முடிந்தது.

ஹரித்வார்

இமயமலையில் Shivalik மலைத் தொடர்களுக்கிடையே கங்கையின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றொரு தலம் ஹரித்வார். (Haridwar or Hardwar) ஹரி என்பது விஷ்ணுவையும் ஹரன் என்பது சிவனையும் குறிக்கும் சொற்கள் என்பதை நாம் அறிவோம். ஹரி / ஹரனை அடையும் வழி என்னும் பொருளில் உள்ளது இந்த ஊரின் பெயர். வைணவர்களின் புனிதத் தலமான பத்ரிநாத் செல்லவும் சைவர்களின் புனிதத் தலமான கேதார்நாத், அமர்நாத் போன்ற இடங்களுக்குச் செல்லவும் இந்த ஊரிலிருந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ஹரி/ஹரத்வார் என்னும் பெயர்க் காரணம். கருட புராணத்தில் மோட்சம் தரும் நகரங்களாகக் கூறப்பட்டுள்ள ஏழு நகரங்களில் மாயா என்கிற ஹரித்வாரும் ஒன்று.  

புராணக் கதைகளின் படி பகீரதன் என்னும் அரசன் தன் மூதாதையர்களின் சாபத்திற்கு விமோசனம் வேண்டி கடும் தவம் இருந்து கங்கையை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். கங்கை அதிவேகமாக பூமியில் விழுந்தால் பூமி தாங்காது என்பதால் சிவன் தன் சடாமுடியில் தாங்கிக் கொண்டு பூமிக்கு அனுப்பியதாகவும், கங்கை பூமியில் விழுந்த இடம் தான் ஹரித்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தார்கள். அந்த அமுதத்தை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு கருடன் பறந்து சென்ற போது அதிலிருந்து ஒரு துளி Hari ki Pauri என அழைக்கப்படும் இடத்தில் விழுந்ததாகவும் அந்தப் பகுதியே ஹரித்வார் எனவும் கூறப்படுகிறது. 

இந்த நகரத்தின் முக்கியமான இடமாக இந்தப் பகுதி உள்ளது. யாத்திரிகர்கள் குளிக்கவும் நீத்தார் நினைவுக் கடன்களைச் செய்யவும் இந்தப் பகுதியில் உள்ள கங்கையைத் தான் பயன்படுத்துகிறார்கள். மலைத் தொடர்களின் மேலிருந்து பாயும் நதியானது இந்த ஊரில் சமவெளியில் பாய்கிறது என்பதால் வேகம் சற்றே குறைந்து காணப் படுகிறது. (ஏமாந்தால் இழுத்துச் சென்று விடும் வேகம் தான்) இந்த ஊரில் கங்கைக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. BHEL போன்ற நிறுவனங்களும் இங்கே உள்ளதால் தொழில் நகரமாகவும் இந்த ஊர் விளங்குகிறது.

நிற்க.

இன்னும் பல சிறப்புக்களையும் உடைய இந்த நகரத்தை நாங்கள் சென்றடைந்து கங்கா ஆரத்தி நடைபெறும் பகுதிக்குச் அருகில் Dormitory போல் இருந்த ஒரு விடுதியில் தங்கினோம். மக்கள் தொகை சற்றே அதிகமாக உள்ள நகரம் இது. சற்று நேர ஓய்வுக்குப் பிறகு அனைவரும் சிறிது தொலைவு நெரிசலாக வீடுகள் நிறந்த சாலைகளில் நடந்து சென்று கங்கையில் துவைத்துக் குளித்து ஓய்வு எடுத்தோம். பிறகு அங்கிருந்த கோவிலில் சிவனை தரிசித்தோம். நிதானமாக கங்கையின் கரையில் வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது. ஆங்காங்கே சிவனின் இடுப்புயர சிலைகள் தென்பட்டன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் வெளிப்புறம் மாலை ஆறு மணியளவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ளும் கங்கா ஆரத்தி என்னும் நிகழ்வு மிகப் பிரசித்தம்.

நாங்களும் மாலை ஐந்தரை மணியளவில் குழந்தைகளை அழைத்துக் (இழுத்துக்) கொண்டு கங்கா ஆரத்தியைக் காண ஓடினோம். அங்கே மக்கள் வெள்ளம். கங்கையின் கரையில் பூசாரிகள் நாங்கள் சென்ற தினத்தின் 5.50க்கே ஆரத்தி காட்டி பூஜை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கூடியிருந்த பக்தர்கள் ஓம் ஜெய் கங்கே மாதா..என ஒருமித்துப் பாடினார்கள். பிறகு கங்கையில் பூக்களையும் விளக்குகளையும் விட்டுப் பூஜை செய்தார்கள். இரவு நேரத்தில் நதியில் விளக்குகள் மிதக்க இரு பக்கமும் உள்ள கட்டிடங்களிலிருந்து விழும் வெளிச்சமும் நதி நீரில் தெரிய… கொள்ளை அழகு. வித்தியாசமான அனுபவம்.

[நாங்கள் இந்தப் புனிதச் சுற்றுலாவை ஆரம்பித்த தினத்தன்றே சிவன், கங்கா மற்றும் பல தெய்வங்களுக்கான ஆரத்திப் பாட்டுக்களை அச்சடித்துப் புத்தக வடிவில் எங்களுக்குத் தந்திருந்தார்கள். ராகம் ஒன்றே தான் பாடல் வரிகள் தான் வெவ்வேறு என்பதால் அனைவரும் பயண நேரத்தில் அவ்வப்போது பாடிய படியே சென்றோம். [ஓம் ஜெய் கங்கே மாதா… ஓம் ஜெய் ஜெகதீச ஹரே…]

இங்கேயும் பல புகழ்பெற்ற கோவில்களும் ஆசிரமங்களும் உள்ளன. மலை மேலிருக்கும் மானசா தேவி கோவிலுக்கு செல்ல கேபிள் கார்கள் இருப்பதால் குறிப்பாக சுற்றுலாப் பயணியரால் பெரிதும் விரும்பப் படுகிறது. எங்களில் சில குடும்பத்தினர் மற்றும் சென்று வந்தார்கள். மற்றவர்கள் ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை இந்தியாவின் தலை நகரான புது தில்லியை நோக்கிப் பயணித்தோம். இயற்கையின் பிடியை விட்டு செயற்கையை நோக்கிய பயணம் எனக் கூறலாம்.

மீண்டும் புது தில்லி

“தேஹலி” என்ற வார்த்தைக்கு நுழைவாயில் எனப் பொருள். இந்தியாவின் நுழைவாயிலான தேஹலி என்பது மருவி தில்லி எனத் தற்போது வழங்கப் படுகிறது. இந்த நகருக்குள் நுழையும் சமயம் பாபரும், அக்பரும், முகம்மது கஜினியும், கோரியும் நினைவில் வந்து போனார்கள். (என்னடா… தில்லிக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லி விட்டு சமாதி சமாதியாக கூட்டிச் செல்கிறாய்_என் தாத்தா பெரியப்பாவிடம் கேட்டது) இங்கே காந்தி, நேரு என ஆரம்பித்துப் பல தலைவர்களுக்கும் சமாதிகள் உள்ளன.

தில்லியில் லோதி சாலையில் உள்ள ராமர் கோவிலை ஒட்டிய இடத்தில் தங்கினோம். போகும் போது தங்கிய அதே இடம் தான். பூஜைகளில் கலந்து கொண்டு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவினை உண்டு விட்டு ஊர் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். என் கணவரின் நெருங்கிய நண்பரின் சகோதரர்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்களது தாயார் அன்று காலையில் சென்னையில் இறைவனை சேர்ந்து விட்டார் என்பதால் சந்திக்க இயலவில்லை. என் கணவரும் அன்று முழுவதும் மிகுந்த மன வருத்தத்துடனேயே ஊர் சுற்றினார். (அன்று மாலை மற்றொரு உறவினர் எங்களைச் சந்தித்துச் சென்றார்)

மே மாதக் கத்திரி வெயிலில் சில பல தண்ணீர் கேன்களுடன் பேருந்தில் கிளம்பினோம். கடுமையான வெயில். India gate, பாராளுமன்றக் கட்டிடம், ஜனாதிபதி மாளிகை (அதோ பாருங்கள்…அது தான் ஜனாதிபதி மாளிகை), காந்தி சமாதி, Red fort (பிரதம மந்திரி சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவாரே…), பிர்லா மந்திர் எனச் சுற்றிப் பார்த்து விட்டு குதுப் மினார் அருகில் சென்றோம். என் தந்தையார் பேருந்திலிருந்து நான் கீழே இறங்கவே மாட்டேன் எனக் கூறி விட்டார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. பேருந்தை விட்டு இறங்கவே பயமாக இருந்தது. தண்ணீர் கேன்கள் தீர்ந்து கொண்டே இருந்தன. பேருந்தின் அருகில் குளிர்ச்சியான  மோர், இளநீர், லஸ்ஸி விற்றுக் கொண்டிருந்தார்கள். குதுப் மினாரைப் பார்ப்பதை விட இவற்றை வாங்கிக் குடிப்பதே முக்கியம் என்பது எங்கள் கருத்து.

நிதானமாக உள்ளே நடந்து சென்று குதுப் மினாரைக் கண்டோம். டில்லியை ஆண்ட முகலாய மன்னர் குத்புதீன் ஐபெக் என்பவரால் தொடங்கப் பட்டு அவரைத் தொடர்ந்து ஆண்ட மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்ட 72 மீட்டர் உயரமுடைய கோபுரம் இது. குதுப் வளாகத்தில் (complex) அமைந்துள்ள மசூதியைச் சேர்ந்த இது இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக் கலைக்குச் சான்றாக உள்ளது. UNESCO heritage site ஆக விளங்கும் இந்தக் கோபுரத்தின் உச்சியைச் சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். சிவப்பு வண்ணக் கற்களால் கட்டப் பெற்ற இந்தக் கோபுரம் வருடங்கள் பல கடந்தும் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதால் விவரங்கள் கூறி என் குழந்தைகளை கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று காட்டினேன். இந்த வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் காலத்தால் அழியாத இரும்புத் தூணையும் கண்டோம்.

முதலாம் சந்திரகுப்தரால் நிறுவப் பெற்ற இந்தத் தூண் பண்டைய பாரதத்தின் உலோகவியல் துறையின் சிறப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்தத் தூணை இரண்டு கைகளாலும் கட்டி அணைக்க முடிந்தவருக்கு அவர் நினைத்தது நடக்கும் என ஒரு மூட நம்பிக்கை. மனித வியர்வைக்கு இரும்பைத் துருப்பிடிக்க வைக்கும் தன்மை உண்டு என்பதால் தூணைச் சுற்றிலும் கனத்த வேலி அமைக்கப் பட்டுள்ளது.

மதிய உணவிற்குப் பிறகு மாலையில் ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் அமைந்துள்ள Opera house போன்ற வடிவில் (மலர்ந்த தாமரை வடிவம்) அமைந்துள்ள Bahai கோவிலைக் காணச் சென்றோம். Bahai faith என்பது 19 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தோன்றியது. அனைத்து மதங்களிலிருந்தும் நற்கருத்துக்களைத் தொகுத்து ஏற்றுக் கொண்டு உலக மக்களின் ஒற்றுமையை நாடும் மதம் இது. இவர்களுக்கான வழிபாட்டுத் தலம் தான் இது. (உருவ வழிபாடு இல்லை)

27 விரிந்த தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடன் ஏறக்குறைய 34 மீட்டர் உயரத்தில் 2500 பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யக் கூடிய கோவில் இது. இங்கே எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரது மத நூலில் உள்ளவற்றைப் படித்தோ பாடியோ வணங்கலாம். மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ள இந்தத் தாமரைக் கோவிலுக்குள் செல்ல நடை பாதையில் சிறிது தொலைவு நடந்து சென்று நம் காலணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு கால்களைக் கழுவிக் கொண்டு மீண்டும் படிக்கட்டுக்களில் ஏறி உள்ளே சென்றோம். காலணிகளை கோணிப் பைகளில் கட்டி பூமி மட்டத்திற்குக் கீழே வைத்திருந்து நாம் திரும்பி வந்ததும் எடுத்துத் தந்தார்கள். (வித்தியாசமான முறையாக இருந்ததால் இன்றளவும் நினைவில் உள்ளது)

கோவிலுக்குள் வரிசையாக இருக்கைகள் போடப்பட்டு மிகச் சிலர் அமைதியாக தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சுற்றிலும் சிறு குளங்கள் கட்டி அதில் நீரைத் தேக்கி வைத்திருந்ததால் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. (மின்விசிறி/AC இல்லாமலே) சுற்றிலும் நடந்து சென்று பார்த்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து விட்டுத் திரும்பினோம். தாஜ் மஹால் போல வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் காற்று மாசு காரணமாகச் சிறிது சிறிதாகத் தன் நிறத்தை இழந்து சற்றே நிறம் மாறிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

மாலை மங்கியதும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு உணவிற்குப் பிறகு சென்னையை நோக்கி Grand trunk expressல் கிளம்பினோம்.

முன் சென்ற பயண அனுபவங்களால் இம்முறை மிகுந்த விழிப்புணர்வுடன் என் மகனது கையை என் துப்பட்டாவின் ஒரு முனையில் கட்டி விட்டு மறு முனையை என் கழுத்தில் சுற்றிக் கொண்டேன். இரண்டு மீட்டர் மட்டுமே அவரால் நகர முடியும் என்பதால் கவலையின்றிப் பயணத்தை முடித்தேன்.

பின் குறிப்பு:

இந்த நாட்களைப் போல தங்குமிடம் என்பது தனி அறை இல்லை. அனைவரும் ஒன்றாகத் தங்கி நதியில் நீராடி அங்கேயே துணி துவைத்து ஒன்றாக அமர்ந்து உண்டு கடவுளை வணங்கி…என இந்தப் பயணம் ஒரு கூட்டு அனுபவம் என்று சொல்லலாம். தனி அறை வேண்டும் எனக் கேட்டு முரண்டு பிடித்தவர்களும் இருந்தாலும் கூடி இருக்க விரும்பியவர்களே அதிகம். அநேகமாகத் தினமும் நதியில் நீராடும் வாய்ப்புக் கிடைத்ததாலும் கோடைக்காலம் என்பதாலும் எடுத்துச் சென்ற பெட்டிகளில் ஒன்றைக் கடைசி வரை திறக்கவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வழியெங்கும் ஒரு பக்கம் அடுக்கடுக்காக இமயமலைத் தொடர்கள், மறு புறம் 300-400 அடி ஆழத்தில் கங்கை, எப்போது நிலச் சரிவு ஏற்படும் என… ஒரு விதத்தில் “திக் திக்” பயணம். எந்த மலைக்குப் பின்னால் சூரியன் உதிக்கிறது எங்கே மறைகிறது எனத் தெரியாதபடி அடுக்கடுக்காக மலைத் தொடர்கள். நாங்கள் கோடையில் சென்றதால் சூரிய வெளிச்சம் காலை நாலு முதல் இரவு எட்டு வரை இருந்தது. என் கணவர் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வர, என் பிள்ளைகள் என் தாயாருடன் இருக்க என் தந்தையாரும் நானும் அமைதியாக சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்தபடி பயணித்தோம். வரலாறு, புவியியல் பாடங்களில் படித்திருந்த இடங்களையும் புராணக் கதைகளில் கேட்டிருந்த ஊர்களையும் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெரியாழ்வாரின் “அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்“ என்னும் கூற்றுப் படி இப்போதே மீண்டும் ஒரு முறை திருவதரி சென்று பத்ரி நாராயணனை வணங்க ஆசைப்படுகிறேன். விக்கிபீடியாவும், கூகிளும், இன்டெர்நெட்டும், அக்கால கட்டத்தை விடச் சற்றே கூடுதலான பொருளாதார வசதியும் உள்ள இந்தக் கால கட்டத்தில் பயணம் இன்னும் இனிமையாக இருக்கும் என்பது என் கருத்து.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி“ என்னும் மாணிக்கவாசகரின் வாக்கின்படி அவன் அருள் பெற்று மீண்டும் அவனை வணங்குவேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் புனிதப் பயணக் கட்டுரையை முழுவதுமாய் எழுதி முடிக்கும் மன உறுதியைத் தந்த அவனுக்கும், தகவல்கள் தந்து உதவிய விக்கி மாமாவிற்கும் (விக்கிபீடியா), இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த மறைந்த திரு கோவிந்தராஜன் அவர்களுக்கும் பயணத்தை ஒருங்கிணைத்த என் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அவனருளாலே…

பயணங்கள் தொடரும்…