Thursday, 28 March 2024

LTC பயணங்கள் – பத்ரிநாத், கேதார்நாத் [பகுதி -3]

சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி

பத்ரிநாதனை ஆசை தீர தரிசித்து விட்டு ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு காலை உணவிற்குப் பிறகு ஏறக்குறைய 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

கேதார்நாத்

இந்த ஊர் சைவப் பெரியோர்களான நாயன்மார்களால் பாடல் பெற்ற 275 சிவன் கோவில்களில் ஒன்று. (திருஞானசம்பந்தர்) இந்தப் பயணத்திலும் குறுகலான சாலைகள், பாதாளத்தில் நதி, பின்னணியில் உச்சியில் பனி படர்ந்த மலைத் தொடர்கள், பனி உருகி சிறு நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகளை உடைய மரங்கள், வழியில் சிற்றூர்கள், சிறு உணவகங்கள், சக பயணியர் என முன்பு கண்ட அதே காட்சிகள் தான்.

ராம்பூரைக் கடந்து பயணித்து சீதாபூர் என்னும் மிகச் சிறிய ஊரை மாலையில் சென்றடைந்தோம். சில தங்கும் விடுதிகளும் சிறு உணவகங்களும் பத்து பதினைந்து குடியிருப்புக்களும் உள்ள ஊர் அது. (ஜூன் 2013ல் பெய்த பெருமழையில் இந்தக் கிராமமே அழிந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன்) மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்படக் கூடிய சாலைகள் என்பதால் ராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் பெட்டிகளை வைத்து விட்டு ஓய்வெடுத்தோம். உணவு சமைக்க எங்களுடனே இரண்டு சமையல்கார்களும் வந்திருந்ததால் உணவுக்குப் பஞ்சமில்லை. சூடான பூரியும் உருளைக் கிழங்கும் செய்து தந்தார்கள். விடுதியினைச் சுற்றிலும் மிக உயரமான மலைத் தொடர்கள். (பனி இல்லை) விடுதியின் இடப்புறத்தில் மலையிலிருந்து ஓ…வென சத்தமிட்டபடி விழும் மந்தாகினி நதி. அதில் அலையுடன் சுழித்துக் கொண்டு நீர் வரும் சமயம் விடுதியின் குழாயில் நீர் ஏறும் படி அமைத்திருந்தார்கள். மோட்டார் கிடையாது. இயற்கையே துணை. குழாயின் அடியில் வாளியை வைத்து விடுவோம். அலை வேகமாக வரும் சமயம் குழாயில் நீர் வந்து வாளி நிரம்பும். (அவசரத்திற்கு ஆகாது 😊)

மறுநாள் காலை உணவிற்குப் பிறகு அனைவரும் கேதார்நாத் செல்ல மலையேற வேண்டிய இடமான “கௌரி குண்ட்” செல்லத் தயாரானோம். குறுகிய சாலையாதலால் ஜீப்கள் மட்டுமே செல்ல முடியும். அதில் ஏறி கௌரி குண்டை அடைந்தோம். இந்த இடத்திலும் வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. (நாங்கள் யாரும் அங்கே குளிக்கவில்லை) அங்கே குளித்து விட்டு கௌரி அம்மனை தரிசித்து விட்டு 16 கிலோமீட்டர் பனி படர்ந்த மலைகளின் மேல் நடந்தோ, டோலியிலோ (தொட்டில் போல இருக்கும் நம்மை அதில் உட்கார வைத்து இருவர் சுமந்து செல்வார்கள்) அல்லது குதிரையிலோ செல்லலாம். (தற்சமயம் ஹெலிகாப்டர் சேவை உண்டு) கௌரி குண்டில் பார்வதி சிவனை அடையத் தவம் இருந்தார் எனவும் பிள்ளையாருக்கு யானை முகம் இங்கே தான் சிவனால் தரப்பட்டது எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன.


11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் கேதார்நாத் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாகை மாவட்டத்தில் உள்ள  நகரப் பஞ்சாயத்து ஆகும். மந்தாகினி நதியின் பிறப்பிடமான Chorabari Glacier அருகில் அமைந்துள்ளது இந்த ஊர். மிக அருகிலுள்ள சாலை என்றால் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கௌரிகுண்ட் தான்.

நாங்கள் அங்கே சென்ற சமயம் காலை பதினோரு மணி இருக்கும். வெயில் கடுமையாக இருந்தது. சுற்றுலா ஏற்பாட்டாளரான என் பெரியப்பா அவரவர் விருப்பப்படி மலையேறி வந்து சேருங்கள் என்று கூறி விட்டு தன்னுடைய உதவியாளர்கள் இருவருடன் எங்களுக்கு முன்னால் நடந்தே கிளம்பி விட்டார். குதிரையா டோலியா நடையா என முதலில் விவாதம், பிறகு கட்டணம் முடிவு செய்தல் என அங்கேயே ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களாகி விட அதற்குள் என் உடல்நிலை சரியாகாமல் இருந்தால் மிகுந்த களைப்பு ஏற்பட்டது. எட்டு வயதான என் மகனுக்கு வியர்க்கிறது, பசிக்கிறது, தாகம் எனப் பல பிரச்சினைகள். கொண்டு சென்ற தண்ணீர், பிஸ்கட், பழங்கள் அனைத்தும் காலி. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி அவரை அழைத்து செல்வது என்னால் இயலாத காரியமாகத் தோன்றியதால் மீண்டும் தங்குமித்திற்கே எங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல என் கணவரிடம் வேண்டினேன்.


மீண்டும் திரும்பி வருவதற்குள் அனைவரும் சென்று விடுவார்கள் என்பதால் என் கணவர் மிகவும் தயங்கினார். வற்புறுத்தி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து (குறுகலான சாலையில் வரிசையாக ஜீப்கள் நின்று கொண்டிருந்தன) எதிர் திசையில் செல்லும் ஜீப்பில் ஏறி சீதாபூர் சென்றோம். (உடல் நிலை சரியில்லாததால்  என் பெற்றோர் அங்கேயே தான் தங்கி இருந்தார்கள்) எங்களை விட்டு விட்டு மீண்டும் கணவரும் மகளும் கிளம்பிச் சென்றார்கள்.(மகள் பிடிவாதமாக உடன் சென்றார்) கடும் பனியில் மலையில் செல்லப் போகிறார்கள் என்ற போதும் லேசான ஸ்வெட்டர், அரைகால் அளவுள்ள ஸ்கர்ட் என இருந்த மகளுக்குப் போதுமான குளிராடைகளை அணிவித்து அனுப்ப எனக்குத் தெரியவில்லை. வழியெங்கும் இவ்வளவு பனி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. தலை முதல் கால் வரை கனத்த ஆடைகள், கைகளுக்கு gloves, கால்களுக்கு boots என அணியாவிட்டால் Frost bite ஏற்படும், பிறகு உடல் உறுப்புக்களை வெட்டி எடுப்பது தான் ஒரே வைத்தியம் என்பதெல்லாம் தெரியாது.


இருவரும் குதிரையில் ஏறி பாதித் தொலைவும் சென்று வழியில் நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்து குச்சியைப் பிடித்துக் கொண்டு நடந்து மீதித் தொலைவுமாகக் கேதர்நாத் சென்றடைந்து அன்றிரவும் மறுநாள் காலையும் கேதார்நாதரைத் தரிசித்து விட்டு குழுக் குழுவாக மறுநாள் மாலைக்குள் சீதாபூர் வந்து சேர்ந்தார்கள். உணவும், தங்குமிடமும் கேதர்நாத்திலேயே பெரியப்பாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகள் திரும்பி இறங்கி வருகையில் முழுப் பயணமும் குதிரையில் தான். ஆங்காங்கே குதிரையை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு அத்தனை பனிக்கிடையில் பெட்டிக்கடையில் லிம்கா குடித்து, அதை புகைபடம் எடுத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றுத் திரும்பினார். கடவுளின் பரிபூரண அருள் இருந்ததால் அனைவரும் நலமுடன் திரும்பினார்கள். அருமையான அந்த அனுபவத்தை இழந்து விட்டேன்.  

சீதாபூர்


சீதாபூர்வாசிகளான நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதையும் பகிர்கிறேன். முதல் நாள் சிறு மலைக் கிராமங்களைக் கடந்து சென்ற போது நாமும் இது போன்ற ஒரு ஊரில் சில நாட்களாவது தங்க வேண்டும் என மனதில் நினைத்தேன். அது அடுத்த நாளே நிறைவேறும் என நினைக்கவில்லை. சுற்றுலா ஏற்பட்டாளர் என் பெரியப்பா என்று முன்பே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அவர் காலையில் செய்த பூரிகளும் தயிரும் இருக்கிறது சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றிருந்தார். மதிய உணவும் பூரி தான். குளியலறையில் மந்தாகினி நீரில் குளித்து துவைத்து ஓய்வெடுத்தோம். கடுமையான வெயில் பகல் முழுவதும். என் மகனும் தந்தையும் வியர்க்கிறது என shorts மட்டும் அணிந்தே பகல் பொழுதைக் கழித்தார்கள். விடுதியின் வாசலிலேயே கௌரி குண்ட் செல்லும் சாலை என்பதால் சாலையின் ஓரமாய் கல்லின் மேல் அமர்ந்து நாள் முழுவதும் ஜீப்கள், கார்களை வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள், அவற்றில் பச்சைப் பசேலென்ற அடர்த்தியான மரங்கள், ஓ…வென்ற சத்தத்துடன் விழும் மந்தாகினி, கோதுமை வயல்களில் அறுவடை முடிந்து மீதம் உள்ள வைக்கோல் (வெயில் பட்டு பளபளப்புடன் இருந்தன), கம்பளிப் புழுக்கள், நாய்கள் என சகலமும் தெரிந்தன. மிக அருமையான இடம்.

விடுதிக் காப்பளாரின் மனைவியுடன் நட்பு செய்து கொண்டு மறுநாள் என் மகனுக்கு எருமைத் தயிர் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். என் தாயாருக்கு ஹிந்தி மொழியில் பேசத் தெரியும். முதல் நாள் சுட்டு வைத்திருந்த அப்பளம் போன்ற பூரிக்கு பயந்து அருகில் இருந்த சிறு உணவு விடுதியில் சப்பாத்தி சாப்பிட விரும்பினோம். ஒரு சப்பாத்தி என ஆர்டர் செய்த பிறகு தான் அந்த தம்பி மாவே கலக்கினார். பிறகு ஏற்கனவே வேகவைத்த உருளைக் கிழங்கை தாளித்தார். அது தான் இரவு உணவு. பகல் முழுதும் தங்கியிருந்த அறையில் பெரிய ஈக்கள் சுற்றிக் கொண்டிருந்தன. விரட்ட விரட்ட சுற்றிக் கொண்டே இருந்தன. இரவில் பாதியில் மின்சாரம் இல்லை. நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் தூங்கவே முடியவில்லை. மறுநாள் காலையும் குளியல், சப்பாத்தி, நடைப்பயிற்சி, சாலையில் வேடிக்கை என அமைதியாக மந்தாகினியைப் பார்த்த வண்ணம் பொழுதைக் கழித்தோம். அவர்கள் கொண்டு வந்த தயிர் மலைப் பிரதேசம் என்பதால் சரியாக தயிராகவில்லை என்பதால் மகன் சாப்பிட மறுத்து விட்டார். சிறுவனுக்கு சாதம் வேண்டும் என்று சொல்லியிருந்தால் செய்து கொடுத்திருப்பேனே என உணவு விடுதி நடத்துபவர் வருந்தினார்.

விடுதிக் காப்பாளரின் உதவியுடன் கோதுமை வயலில் இருந்து காய்ந்த வைக்கோலை (கைவேலை செய்யப் பயன்படும்) வாங்கி வந்து சென்னையில் சில straw work சித்திரங்களைச் செய்தேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கும் மேலாக வைக்கோலைப் பத்திரமாக வைத்திருந்தேன். பளபளப்பு சற்றும் குறையாமல் இருந்தது. மற்றவர்கள் கேதார்நாத்திலிருந்து வந்ததும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அன்றிரவும் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலை ஹரித்வாரை நோக்கிய எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். இன்றளவும் மறக்க முடியாத மூன்று நாட்கள் அவை.

வழியில் ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவினை முடித்துக் கொண்டு கிளம்பிய சில மணித் துளிகளில் மலைச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல். எங்கள் பேருந்துக்கு சில பேருந்துகளுக்கு முன்பாக மலையிலிருந்து சாலையை முழுதாக அடைத்த வண்ணம் ஒரு பெரிய பாறாங்கல் விழுந்திருந்தது. ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு ராணுவத்தினர் வந்து அந்தக் கல்லை JCB வைத்து 300 அடி ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கைப் பகுதியில் தள்ளி விட்ட பிறகு பயணத்தைத் தொடர்ந்து அன்றைய தினமே ஹரித்வாரைச் சென்றடைந்தோம்.  ஹரித்வார் பகுதி சமவெளியில் அமைந்துள்ளதால் சீக்கிரம் செல்ல முடிந்தது.

ஹரித்வார்

இமயமலையில் Shivalik மலைத் தொடர்களுக்கிடையே கங்கையின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றொரு தலம் ஹரித்வார். (Haridwar or Hardwar) ஹரி என்பது விஷ்ணுவையும் ஹரன் என்பது சிவனையும் குறிக்கும் சொற்கள் என்பதை நாம் அறிவோம். ஹரி / ஹரனை அடையும் வழி என்னும் பொருளில் உள்ளது இந்த ஊரின் பெயர். வைணவர்களின் புனிதத் தலமான பத்ரிநாத் செல்லவும் சைவர்களின் புனிதத் தலமான கேதார்நாத், அமர்நாத் போன்ற இடங்களுக்குச் செல்லவும் இந்த ஊரிலிருந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ஹரி/ஹரத்வார் என்னும் பெயர்க் காரணம். கருட புராணத்தில் மோட்சம் தரும் நகரங்களாகக் கூறப்பட்டுள்ள ஏழு நகரங்களில் மாயா என்கிற ஹரித்வாரும் ஒன்று.  

புராணக் கதைகளின் படி பகீரதன் என்னும் அரசன் தன் மூதாதையர்களின் சாபத்திற்கு விமோசனம் வேண்டி கடும் தவம் இருந்து கங்கையை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். கங்கை அதிவேகமாக பூமியில் விழுந்தால் பூமி தாங்காது என்பதால் சிவன் தன் சடாமுடியில் தாங்கிக் கொண்டு பூமிக்கு அனுப்பியதாகவும், கங்கை பூமியில் விழுந்த இடம் தான் ஹரித்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தார்கள். அந்த அமுதத்தை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு கருடன் பறந்து சென்ற போது அதிலிருந்து ஒரு துளி Hari ki Pauri என அழைக்கப்படும் இடத்தில் விழுந்ததாகவும் அந்தப் பகுதியே ஹரித்வார் எனவும் கூறப்படுகிறது. 

இந்த நகரத்தின் முக்கியமான இடமாக இந்தப் பகுதி உள்ளது. யாத்திரிகர்கள் குளிக்கவும் நீத்தார் நினைவுக் கடன்களைச் செய்யவும் இந்தப் பகுதியில் உள்ள கங்கையைத் தான் பயன்படுத்துகிறார்கள். மலைத் தொடர்களின் மேலிருந்து பாயும் நதியானது இந்த ஊரில் சமவெளியில் பாய்கிறது என்பதால் வேகம் சற்றே குறைந்து காணப் படுகிறது. (ஏமாந்தால் இழுத்துச் சென்று விடும் வேகம் தான்) இந்த ஊரில் கங்கைக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. BHEL போன்ற நிறுவனங்களும் இங்கே உள்ளதால் தொழில் நகரமாகவும் இந்த ஊர் விளங்குகிறது.

நிற்க.

இன்னும் பல சிறப்புக்களையும் உடைய இந்த நகரத்தை நாங்கள் சென்றடைந்து கங்கா ஆரத்தி நடைபெறும் பகுதிக்குச் அருகில் Dormitory போல் இருந்த ஒரு விடுதியில் தங்கினோம். மக்கள் தொகை சற்றே அதிகமாக உள்ள நகரம் இது. சற்று நேர ஓய்வுக்குப் பிறகு அனைவரும் சிறிது தொலைவு நெரிசலாக வீடுகள் நிறந்த சாலைகளில் நடந்து சென்று கங்கையில் துவைத்துக் குளித்து ஓய்வு எடுத்தோம். பிறகு அங்கிருந்த கோவிலில் சிவனை தரிசித்தோம். நிதானமாக கங்கையின் கரையில் வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது. ஆங்காங்கே சிவனின் இடுப்புயர சிலைகள் தென்பட்டன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் வெளிப்புறம் மாலை ஆறு மணியளவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ளும் கங்கா ஆரத்தி என்னும் நிகழ்வு மிகப் பிரசித்தம்.

நாங்களும் மாலை ஐந்தரை மணியளவில் குழந்தைகளை அழைத்துக் (இழுத்துக்) கொண்டு கங்கா ஆரத்தியைக் காண ஓடினோம். அங்கே மக்கள் வெள்ளம். கங்கையின் கரையில் பூசாரிகள் நாங்கள் சென்ற தினத்தின் 5.50க்கே ஆரத்தி காட்டி பூஜை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கூடியிருந்த பக்தர்கள் ஓம் ஜெய் கங்கே மாதா..என ஒருமித்துப் பாடினார்கள். பிறகு கங்கையில் பூக்களையும் விளக்குகளையும் விட்டுப் பூஜை செய்தார்கள். இரவு நேரத்தில் நதியில் விளக்குகள் மிதக்க இரு பக்கமும் உள்ள கட்டிடங்களிலிருந்து விழும் வெளிச்சமும் நதி நீரில் தெரிய… கொள்ளை அழகு. வித்தியாசமான அனுபவம்.

[நாங்கள் இந்தப் புனிதச் சுற்றுலாவை ஆரம்பித்த தினத்தன்றே சிவன், கங்கா மற்றும் பல தெய்வங்களுக்கான ஆரத்திப் பாட்டுக்களை அச்சடித்துப் புத்தக வடிவில் எங்களுக்குத் தந்திருந்தார்கள். ராகம் ஒன்றே தான் பாடல் வரிகள் தான் வெவ்வேறு என்பதால் அனைவரும் பயண நேரத்தில் அவ்வப்போது பாடிய படியே சென்றோம். [ஓம் ஜெய் கங்கே மாதா… ஓம் ஜெய் ஜெகதீச ஹரே…]

இங்கேயும் பல புகழ்பெற்ற கோவில்களும் ஆசிரமங்களும் உள்ளன. மலை மேலிருக்கும் மானசா தேவி கோவிலுக்கு செல்ல கேபிள் கார்கள் இருப்பதால் குறிப்பாக சுற்றுலாப் பயணியரால் பெரிதும் விரும்பப் படுகிறது. எங்களில் சில குடும்பத்தினர் மற்றும் சென்று வந்தார்கள். மற்றவர்கள் ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை இந்தியாவின் தலை நகரான புது தில்லியை நோக்கிப் பயணித்தோம். இயற்கையின் பிடியை விட்டு செயற்கையை நோக்கிய பயணம் எனக் கூறலாம்.

மீண்டும் புது தில்லி

“தேஹலி” என்ற வார்த்தைக்கு நுழைவாயில் எனப் பொருள். இந்தியாவின் நுழைவாயிலான தேஹலி என்பது மருவி தில்லி எனத் தற்போது வழங்கப் படுகிறது. இந்த நகருக்குள் நுழையும் சமயம் பாபரும், அக்பரும், முகம்மது கஜினியும், கோரியும் நினைவில் வந்து போனார்கள். (என்னடா… தில்லிக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லி விட்டு சமாதி சமாதியாக கூட்டிச் செல்கிறாய்_என் தாத்தா பெரியப்பாவிடம் கேட்டது) இங்கே காந்தி, நேரு என ஆரம்பித்துப் பல தலைவர்களுக்கும் சமாதிகள் உள்ளன.

தில்லியில் லோதி சாலையில் உள்ள ராமர் கோவிலை ஒட்டிய இடத்தில் தங்கினோம். போகும் போது தங்கிய அதே இடம் தான். பூஜைகளில் கலந்து கொண்டு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவினை உண்டு விட்டு ஊர் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். என் கணவரின் நெருங்கிய நண்பரின் சகோதரர்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர்களது தாயார் அன்று காலையில் சென்னையில் இறைவனை சேர்ந்து விட்டார் என்பதால் சந்திக்க இயலவில்லை. என் கணவரும் அன்று முழுவதும் மிகுந்த மன வருத்தத்துடனேயே ஊர் சுற்றினார். (அன்று மாலை மற்றொரு உறவினர் எங்களைச் சந்தித்துச் சென்றார்)

மே மாதக் கத்திரி வெயிலில் சில பல தண்ணீர் கேன்களுடன் பேருந்தில் கிளம்பினோம். கடுமையான வெயில். India gate, பாராளுமன்றக் கட்டிடம், ஜனாதிபதி மாளிகை (அதோ பாருங்கள்…அது தான் ஜனாதிபதி மாளிகை), காந்தி சமாதி, Red fort (பிரதம மந்திரி சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவாரே…), பிர்லா மந்திர் எனச் சுற்றிப் பார்த்து விட்டு குதுப் மினார் அருகில் சென்றோம். என் தந்தையார் பேருந்திலிருந்து நான் கீழே இறங்கவே மாட்டேன் எனக் கூறி விட்டார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. பேருந்தை விட்டு இறங்கவே பயமாக இருந்தது. தண்ணீர் கேன்கள் தீர்ந்து கொண்டே இருந்தன. பேருந்தின் அருகில் குளிர்ச்சியான  மோர், இளநீர், லஸ்ஸி விற்றுக் கொண்டிருந்தார்கள். குதுப் மினாரைப் பார்ப்பதை விட இவற்றை வாங்கிக் குடிப்பதே முக்கியம் என்பது எங்கள் கருத்து.

நிதானமாக உள்ளே நடந்து சென்று குதுப் மினாரைக் கண்டோம். டில்லியை ஆண்ட முகலாய மன்னர் குத்புதீன் ஐபெக் என்பவரால் தொடங்கப் பட்டு அவரைத் தொடர்ந்து ஆண்ட மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்ட 72 மீட்டர் உயரமுடைய கோபுரம் இது. குதுப் வளாகத்தில் (complex) அமைந்துள்ள மசூதியைச் சேர்ந்த இது இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக் கலைக்குச் சான்றாக உள்ளது. UNESCO heritage site ஆக விளங்கும் இந்தக் கோபுரத்தின் உச்சியைச் சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். சிவப்பு வண்ணக் கற்களால் கட்டப் பெற்ற இந்தக் கோபுரம் வருடங்கள் பல கடந்தும் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதால் விவரங்கள் கூறி என் குழந்தைகளை கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று காட்டினேன். இந்த வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் காலத்தால் அழியாத இரும்புத் தூணையும் கண்டோம்.

முதலாம் சந்திரகுப்தரால் நிறுவப் பெற்ற இந்தத் தூண் பண்டைய பாரதத்தின் உலோகவியல் துறையின் சிறப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்தத் தூணை இரண்டு கைகளாலும் கட்டி அணைக்க முடிந்தவருக்கு அவர் நினைத்தது நடக்கும் என ஒரு மூட நம்பிக்கை. மனித வியர்வைக்கு இரும்பைத் துருப்பிடிக்க வைக்கும் தன்மை உண்டு என்பதால் தூணைச் சுற்றிலும் கனத்த வேலி அமைக்கப் பட்டுள்ளது.

மதிய உணவிற்குப் பிறகு மாலையில் ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் அமைந்துள்ள Opera house போன்ற வடிவில் (மலர்ந்த தாமரை வடிவம்) அமைந்துள்ள Bahai கோவிலைக் காணச் சென்றோம். Bahai faith என்பது 19 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தோன்றியது. அனைத்து மதங்களிலிருந்தும் நற்கருத்துக்களைத் தொகுத்து ஏற்றுக் கொண்டு உலக மக்களின் ஒற்றுமையை நாடும் மதம் இது. இவர்களுக்கான வழிபாட்டுத் தலம் தான் இது. (உருவ வழிபாடு இல்லை)

27 விரிந்த தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடன் ஏறக்குறைய 34 மீட்டர் உயரத்தில் 2500 பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யக் கூடிய கோவில் இது. இங்கே எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரது மத நூலில் உள்ளவற்றைப் படித்தோ பாடியோ வணங்கலாம். மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ள இந்தத் தாமரைக் கோவிலுக்குள் செல்ல நடை பாதையில் சிறிது தொலைவு நடந்து சென்று நம் காலணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு கால்களைக் கழுவிக் கொண்டு மீண்டும் படிக்கட்டுக்களில் ஏறி உள்ளே சென்றோம். காலணிகளை கோணிப் பைகளில் கட்டி பூமி மட்டத்திற்குக் கீழே வைத்திருந்து நாம் திரும்பி வந்ததும் எடுத்துத் தந்தார்கள். (வித்தியாசமான முறையாக இருந்ததால் இன்றளவும் நினைவில் உள்ளது)

கோவிலுக்குள் வரிசையாக இருக்கைகள் போடப்பட்டு மிகச் சிலர் அமைதியாக தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சுற்றிலும் சிறு குளங்கள் கட்டி அதில் நீரைத் தேக்கி வைத்திருந்ததால் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. (மின்விசிறி/AC இல்லாமலே) சுற்றிலும் நடந்து சென்று பார்த்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து விட்டுத் திரும்பினோம். தாஜ் மஹால் போல வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் காற்று மாசு காரணமாகச் சிறிது சிறிதாகத் தன் நிறத்தை இழந்து சற்றே நிறம் மாறிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

மாலை மங்கியதும் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு உணவிற்குப் பிறகு சென்னையை நோக்கி Grand trunk expressல் கிளம்பினோம்.

முன் சென்ற பயண அனுபவங்களால் இம்முறை மிகுந்த விழிப்புணர்வுடன் என் மகனது கையை என் துப்பட்டாவின் ஒரு முனையில் கட்டி விட்டு மறு முனையை என் கழுத்தில் சுற்றிக் கொண்டேன். இரண்டு மீட்டர் மட்டுமே அவரால் நகர முடியும் என்பதால் கவலையின்றிப் பயணத்தை முடித்தேன்.

பின் குறிப்பு:

இந்த நாட்களைப் போல தங்குமிடம் என்பது தனி அறை இல்லை. அனைவரும் ஒன்றாகத் தங்கி நதியில் நீராடி அங்கேயே துணி துவைத்து ஒன்றாக அமர்ந்து உண்டு கடவுளை வணங்கி…என இந்தப் பயணம் ஒரு கூட்டு அனுபவம் என்று சொல்லலாம். தனி அறை வேண்டும் எனக் கேட்டு முரண்டு பிடித்தவர்களும் இருந்தாலும் கூடி இருக்க விரும்பியவர்களே அதிகம். அநேகமாகத் தினமும் நதியில் நீராடும் வாய்ப்புக் கிடைத்ததாலும் கோடைக்காலம் என்பதாலும் எடுத்துச் சென்ற பெட்டிகளில் ஒன்றைக் கடைசி வரை திறக்கவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வழியெங்கும் ஒரு பக்கம் அடுக்கடுக்காக இமயமலைத் தொடர்கள், மறு புறம் 300-400 அடி ஆழத்தில் கங்கை, எப்போது நிலச் சரிவு ஏற்படும் என… ஒரு விதத்தில் “திக் திக்” பயணம். எந்த மலைக்குப் பின்னால் சூரியன் உதிக்கிறது எங்கே மறைகிறது எனத் தெரியாதபடி அடுக்கடுக்காக மலைத் தொடர்கள். நாங்கள் கோடையில் சென்றதால் சூரிய வெளிச்சம் காலை நாலு முதல் இரவு எட்டு வரை இருந்தது. என் கணவர் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வர, என் பிள்ளைகள் என் தாயாருடன் இருக்க என் தந்தையாரும் நானும் அமைதியாக சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்தபடி பயணித்தோம். வரலாறு, புவியியல் பாடங்களில் படித்திருந்த இடங்களையும் புராணக் கதைகளில் கேட்டிருந்த ஊர்களையும் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெரியாழ்வாரின் “அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்“ என்னும் கூற்றுப் படி இப்போதே மீண்டும் ஒரு முறை திருவதரி சென்று பத்ரி நாராயணனை வணங்க ஆசைப்படுகிறேன். விக்கிபீடியாவும், கூகிளும், இன்டெர்நெட்டும், அக்கால கட்டத்தை விடச் சற்றே கூடுதலான பொருளாதார வசதியும் உள்ள இந்தக் கால கட்டத்தில் பயணம் இன்னும் இனிமையாக இருக்கும் என்பது என் கருத்து.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி“ என்னும் மாணிக்கவாசகரின் வாக்கின்படி அவன் அருள் பெற்று மீண்டும் அவனை வணங்குவேன் என்ற நம்பிக்கையுடன் இந்தப் புனிதப் பயணக் கட்டுரையை முழுவதுமாய் எழுதி முடிக்கும் மன உறுதியைத் தந்த அவனுக்கும், தகவல்கள் தந்து உதவிய விக்கி மாமாவிற்கும் (விக்கிபீடியா), இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த மறைந்த திரு கோவிந்தராஜன் அவர்களுக்கும் பயணத்தை ஒருங்கிணைத்த என் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அவனருளாலே…

பயணங்கள் தொடரும்…



 

 

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...