இன்று காலை உடற்பயிற்சி சமயத்தில் ஏற்பட்ட ஏதேதோ சிந்தனைகளில் கத்திரிக்காய் பற்றிய நினைவுகளும் ஒன்று.
முதல் நினைவு சிறுவயதில் பாடிய இந்தப் பாடல் தான்:
கத்திரிக்காய் சொத்தை கடலூரு மெத்தை
ஏண்டி சரோஜா எப்போ கல்யாணம்
நேத்து மத்தியானம் போடு மத்தா(த)ளம்
கத்தரிக்காய்
எனத் தூய தமிழிலும் விக்கிபீடியாவிலும், கத்தாரிக்காய் என என் மாமியாராலும், குண்டுக்
கத்தீ..ரிக்கா எனக் காதலன் கன்னத்தை விவரித்துத் திரைப்படப் பாடலிலும், கத்….ரிகா என
தெருவில் கூவி விற்கும் வியாபாரிகளாலும், Eggplant, Aubergine மற்றும் Brinjal என ஆங்கிலத்திலும்
அழைக்கப்படும் இந்தக் கத்திரிக்காயின் பிறப்பிடம் தென்னிந்தியாவும் இலங்கையுமே என்பது
குறிப்பிடத்தக்கது. பூத்துக் காய்க்கும் செடிகொடியினம் என்னும் வகையிலான “solanaceae”
என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் உயிரியல் பெயர் “solanum melongena” (சொலானம்
மெலோஞ்சினா) தக்காளி, உருளை, வெள்ளரி ஆகியவையும் கத்திரிக்காயின் சகோதர சகோதரிகள்தான்.
(solanaceae family)
இந்தக் காயில்
கார்போஹைடிரேட், புரதச் சத்துக்கள், தாதுக்கள் உள்ளன என்பதால் உலகளவில் உணவுத் தயாரிப்பில்
இதற்குச் சிறப்பான இடம் உண்டு. இரும்புச் சத்து நிறைய உள்ள காய் எனக் கூறக் கேள்விப்
பட்டிருக்கிறேன். ஆனால் விக்கிமாமா இரும்புச் சத்து 1% எனக் கூறுகிறார்.
கத்திரிக்காய்
பொதுவாக ஊதா, இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது. குண்டுக் கத்திரி,
ஒல்லிக் கத்திரி,வேலூர் முள்ளுக் கத்திரி, நீளக் கத்திரி, வரிக் கத்திரி எனப் பல வகைகள்
உள்ளன என்பதை நாம் நன்றாகவே அறிவோம். தமிழகத்தில் ஒன்பது வகையான கத்திரிக்காய் வகைகள்
பயிரிடப் படுகின்றன. இதில் தேனி சின்னமனூர் “சிம்ரன்” கத்திரிக்காயும் உண்டு.
இப்படிப்பட்ட
சிறப்பியல்புகளைக் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் குண்டான இரண்டைத் தேர்ந்தெடுத்து என்
கணவர். 2014 வருடத்தில் ஒரு நாள் காலையில் வாங்கி வந்தார் சமையற்கலைக்கும் எனக்கும்
இடைவெளி அதிகம் “அன்றும் இன்றும் என்றும்”.
பச்சடியா துவையலா
என மிகவும் யோசித்து (எப்படியும் இரண்டுமே செய்யத் தெரியாது) என என் தாயாரின் செய்முறைப்
பக்குவத்தில் இவற்றைத் துவையலாக மாற்றுவது என முடிவு செய்தேன். கண்ணால் கண்டது தான்.
வேறெந்த விதமான குறிப்பும் கையில் இல்லை.
நான் ஆர்வத்துடன்
கத்திரிக்காய்களைக் கழுவித் துடைத்து மேலே எண்ணை தடவி கத்தியால் சிறு சிறு ஓட்டைகளைப்
போட்டு அடுப்பில் வைத்துச் சுட்டு எடுத்தேன். கேஸ் அடுப்பின் மேல் வைத்து அப்பளம்,
சப்பாத்தி போன்றவற்றைச் வாட்டி எடுக்கும் தகடு என்னிடம் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு
நெருப்பில் கைபடாமல் சுட்டெடுத்தேன். (அதையும்
மீறிக் கையில் சூடு பட்டது தனிக் கதை)
அடுத்ததாக கத்திரிக்காயின்
மேலுள்ள தோலை நீக்கும் படலம் ஆரம்பம். தோல் பிய்ந்து வருவேனா என அடம் பிடிக்க, நான்
விடுவேனா என இழுத்துப் பிடித்துத் தோலை முதலில் கையால் பிய்த்தெடுக்க முயற்சித்தேன். அடுத்து கத்தியை வைத்து தோலைப் பிரிக்க முயற்சித்தேன்.
சதைப் பகுதியுடன் சேர்ந்து வந்தது. தொடர்ந்து ஸ்பூன் வைத்துப் பிரிக்க முயற்சித்துக்
கடைசியில் கருகியும் கருகாமலும் இருந்த தோலை எடுத்து உள்ளிருந்த சதைப் பகுதியை விதைகளில்லாமல்
பிரித்து வைத்தேன். ஸ்ஸப்ப்ப்ப்ப்பா…
அடுத்த கட்டமாக
துவையலுக்குத் தேவையான பருப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றை வறுத்தெடுத்து கொண்டு மிக்ஸியில்
அரைக்க ஆரம்பித்தேன். பருப்பு வகைகள் “அறைஞ்சுடுச்சா” எனப் பார்த்து விட்டு கடைசியாகக்
கத்திரிக்காயையும் சேர்த்து அரைத்தேன். சுவையான சூடான( அவ்வைப் பாட்டியாரின் சுட்டபழம்
போல இது சுட்ட காய் இல்லையா?) கத்திரிக்காய் துவையல் தயார்.
நிற்க.
YouTube போன்ற
சமூக வலைத் தளங்களில் காட்டப்படும் சமையல் செய்முறை நேரங்களில் மிக்சியில் நன்றாக
“அறைஞ்சுடுச்சா” எனப் பாருங்கள் எனக் கூறுகிறார்கள். அறைஞ்சுடுச்சா என்றால் மிளகாயா,
பருப்பா உப்பா எது யாரை அறைந்தது யார் கன்னம் பழுத்தது எனக் கேட்கத் தோன்றவில்லை? நன்றாக
அரைபட்டு விட்டதா, அரைக்கப்பட்டு விட்டதா போன்ற பதங்களை உபயோகிப்பதே சரி என ஒரு தமிழறிஞர்
கூறியதாக என் தோழி சமீபத்தில் கூறினார்.
மேலே செல்வோமா?
ரை..ரை…
சாப்பாட்டு மேசையில்
என் கணவருக்குத் துவையலை ஆசையாகப் பரிமாற யத்தனித்த சமயத்தில் இது என்ன எனக் கேட்டார்.
நான் என்னவெனக் கூறவும் “உனக்கே உனக்காக”த் தான் கத்திரிக்காய் வாங்கி வந்தேன் எனக்கு
வேண்டாம் என மறுத்தார். சிறிதளவு நான் உண்ட பிறகு மீதியை என் மாமியாரின் துணிகளுக்கு
சோப்பு போட்டு ஊற வைத்து, நல்லா பிரஸ்(brush) போட்டு, கசக்கி, குமுக்கி, ரெண்டு பக்கெட்
தண்ணீரில் நன்றாக அலசி ஒட்டப் பிழிந்து (அவரது வார்த்தைகள் 😊)
பால்கனியில் (தண்ணீர் சொட்டச் சொட்ட) காய வைத்து விட்டு உள்ளே வந்த என் வீட்டு உதவியாளரிடம்
கொடுத்து அனுப்பினேன்.
அறைந்து விட்டதா?
.
No comments:
Post a Comment