Tuesday, 5 November 2024

செல்லப் பிள்ளை



கர்நாடக மாநிலத்தின் மண்டயா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை (அ) திரு நாராயணபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் செல்லப் பிள்ளை என்று அழைக்கப்படும் செல்வ நாராயணப் பெருமாளைக் காண சில பல வருடங்களாக விரும்பியதில் கடந்த ஜூன் 8-10, 2024 அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த ஊருக்குச் செல்ல மைசூருக்குச் சென்று அங்கிருந்து ஸ்ரீரங்கப் பட்டினம் என்னும் ஊரைக் கடந்து மலை மேல் அமைந்துள்ள இந்தச் சிற்றூருக்குச் செல்ல வேண்டும். சுற்றிலும் காவிரி நதி பாயும் சமவெளியாக இருந்தாலும் இந்த ஊர் மட்டும் கடல் மட்டத்திலிருந்து உயரே அமைந்துள்ளது. (மைசூரிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த ஊரில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த என் தாய் வழிப் பாட்டியாரின் மூலம் இந்த ஊரின் அருமை பெருமைகளை அறிய முடிந்தது. வருடம் முழுவதும் இதமான பருவநிலை கொண்ட இவ்வூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மாசி-பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வைர முடி உற்சவ சமயத்தில் நான்கு லட்சங்களை எட்டும் எனக் கூறுகிறது விக்கிபீடியா. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு இவ்வூரே சாட்சி. சுற்றிலும் குளங்களால் சூழப்பட்டு ஆங்காங்கே சிறு கோவில்கள், மண்டபங்கள், சந்நிதிகளைக் கொண்டது இந்த ஊர். சிறு குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லலாம். (தற்போது பாதி தூரம் வரை ஆட்டோ/கார்கள் செல்ல வகை செய்யப் பட்டுள்ளது)
இம்முறை சத்தியமங்கலத்திலிருந்து செல்லும் பேருந்தில் மைசூருக்கு முதலில் சென்றோம். 30 நிமிடங்களுக்கொருமுறை சென்றாலும் எல்லாப் பேருந்திலும் கூட்டம். ஓட்டமாக ஓடி இடம் பிடித்து அமர வேண்டிய நிலை. எங்கள் பெட்டியை வைக்க இடம் கண்டு பிடிப்பதே பெரிய வித்தையாக இருந்தது. கூட்டத்திற்குக் காரணம் எங்கள் ஊர் business hub. கர்நாடக கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ளது என்பதால் காலையில் மைசூர் சென்று வேலைகளை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்புபவர்கள் அநேகம்.சுற்றுப் புற ஊர்களிலிருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், மிளகாய் வற்றல் போன்ற பொருட்கள் தினமும் மைசூருக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப் படுகின்றன.

மைசூரிலிருந்து ஸ்ரீரங்கபட்டினம் வழியாக மேல்கோட்டை செல்ல ஒரு டேக்ஸியை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினோம். 51 கிலோமீட்டர் பயணம். மிகவும் பரிச்சயமான மைசூரின் தெருக்களைக் கடந்து வாகனம் விரைந்தது.

வழியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஸ்ரீரங்கப் பட்டினத்திற்கு சற்று முன்பாக ஒரு கிளைச் சாலையில் பயணித்து அனந்தாழ்வார் என்பார் பிறந்த ஊரான “கிரங்கூரில்” உள்ள கோவிலை அடைந்தோம். இவர் வைணவப் பெரியார் ராமனுஜரின் சீடர். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை ராமானுஜர் திருப்பதி சென்று ஒரு பூந்தோட்டம் அமைந்து திருவேங்கடவனின் பூஜைக்கு மலர்கள் வளர்க்கப் பணித்தார். கர்ப்பிணியான தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்று தோட்டம் அமைக்கும் வேலைகளைச் செய்தார். அவரது மனைவியால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதைப் பார்த்து கடவுளே ஒரு சிறுவனின் உருவில் வந்து அவளுக்கு உதவுகிறார். அது எப்படியோ அனந்தாழ்வார் கண்ணில் பட கோபமாக தோட்டவேலை செய்யும் சிறுவனின் தாடையில் கடப்பாரையால் அடிக்கிறார். சிறுவன் உடனே மறைந்து விடுகிறான். சிறிது நேரத்தில் கோவிலுக்குச் செல்கையில் வேங்கடவனின் தாடையிலிருந்து ரத்தம் ஒழுகுவதைக் கண்டு வந்தது கடவுளே என உணர்ந்து காயத்திற்கு கற்பூரத்தை வைக்கிறார். மன்னிப்புக் கேட்கிறார். அவரின் பக்தியை உணர்ந்து கடவுள் எப்போதும் தாடையில் கற்பூரத்துடன் காட்சியளிப்பேன் எனக் கூறுகிறார். இன்றளவும் வேங்கடவனின் தாடையில் கற்பூரம் வைப்பதைக் காணலாம். இப்போதும் திருப்பதியில் அவர் அமைத்த பூந்தோட்டம் உள்ளது. இவரது வழித் தோன்றல்கள் திருமலை அனந்தான்பிள்ளை வம்சம் என அறியப் படுகிறார்கள்.


லேசான மழைத் தூறலுக்கிடையில் அந்தக் கோவிலின் அர்ச்சகர் வந்து கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றார். அனந்தாழ்வார் பூஜை செய்த கடவுளர்களின் திருவுருவச் சிலைகள் இங்கே பூஜை செய்யப் படுகின்றன. மேலும் திருமலை அனந்தான்பிள்ளை வம்சத்தைச் சேர்ந்த சிறப்பாய் வாழ்ந்தவர்களின் உருவப் படங்களும் இங்கே வைக்கப் பட்டுள்ளன. (என் தாய்வழிப் பாட்டியாரின் தகப்பனாரின் திருவுருவப் படத்தை அங்கே கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் கொள்ளுத் தாத்தா சிறந்த சம்ஸ்க்ருத மொழி வல்லுனர். ஆசிரியர்) கோவிலின் முன்னே ஒரு திருக்குளமும் உள்ளது.

அடுத்ததாக ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோவிலை நோக்கிப் பயணித்தோம். அந்த இடத்தை அடைவதற்குள் இந்த ஊரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாமா?

காவிரி நதியானது ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று ஊர்களில் மட்டும் ஊரை சுற்றிக் கொண்டு தீவு போன்ற அமைப்பை ஏற்படுத்திச் செல்கிறது. இந்த மூன்று ஊர்களிலுமே முக்கிய தெய்வமாக ஸ்ரீ ரங்கநாதர் விளங்குவதால் ஆதி ரங்கம், மத்திய ரங்கம், அந்திய ரங்கம் என இவ்வூர்கள் அழைக்கப் படுகின்றன.

மைசூர் அரசர்கள், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் ஹைதர் அலி திப்பு சுல்தான் போன்றோரால் ஆளப் பட்டு, ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட ஊர் இது. மைசூர் அரசர்கள் வெற்றி பெற்று பத்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடினார்கள். 1799ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் திப்புவுக்கும் நடைபெற்ற நான்காம் ஆங்கில மைசூர் போர் பிரசித்தி பெற்றது. இப்படி கலை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதால் இந்த ஊர் UNESCO World Heritage Site ஆகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஹொய்சால விஜய நகர கட்டிடக் கலை அமைப்பைக் கொண்ட ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கி.மு.984ல் கட்டப்பட்டது. மிக அழகான சிற்பங்களைக் கொண்ட இக்கோவிலை நாங்கள் சென்றடைந்த போது லேசான மழை. சேற்றில் நடந்து சென்று 50 ரூபாய்கள் கொடுத்து அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு இறைவனை வணங்கி வந்தோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் வரிசையாக உள்ள கடைகளில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த சென்னப் பட்டினா(னம்) என்னும் ஊரில் செய்யப்படும் மரத்தாலான பொம்மைகளை வாங்கினோம்.

மக்களால் வணங்கப்படும் காவிரியை மழை காரணமாக அருகில் சென்று வணங்க முடியவில்லை. (நீத்தார் நினைவுக் கடன்களை இந்த ஊரில் காவிரிக் கரையில் அதற்கென உள்ள இடத்தில் செய்வது வழக்கம்). மாலை ஐந்து மணியளவில் அங்கிருந்து கிளம்பி மேல்கோட்டையை நோக்கிப் பயணித்தோம். ஆறு மணிக்கு நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்குச் சென்று பெட்டியை வைக்கவும் ஸ்ரீ ராமானுஜர் திருவாதிரையை (அவரது பிறந்த நட்சத்திரம்) முன்னிட்டு வீதியில் ஊர்வலம் வரவும் நாங்களும் வீதிக்கு வர… ஆரம்பித்தது எங்கள் மேல்கோட்டை புண்ணிய யாத்திரை.

ராமானுச நூற்றந்தாதிப் பாடல்களைக் (108) கூறிய படியே அந்த ஊர்வலம் கோவிலை அடைந்த நேரம் அங்கே பக்தர்களின் கூட்டம் காத்திருந்தது. உள்ளே சென்ற பிறகும் மீதி இருந்த பாடல்களையும் கூறி முடிக்க ஏறக்குறைய 1.30 மணி நேரங்களானது. கடைசியாக, மிக மிக ருசியான மாங்காய் சாதமும் தயிர் சாதமும் பிரசாதமாக அனைவருக்கும் தரப்பட்டது. மேல்கோட்டை கோவிலில் தரப்படும் பிரசாதங்களை உண்டாலே வயிறு நிறைந்து விடும். உறவினர் வீட்டிலும் அதே உணவுகளைத் தந்தார்கள். [சரியான சாப்பாட்டு ராமனாக(ராமியாக) இருக்கிறாளே என எண்ண வேண்டாம். இந்தக் கோவிலில் பிரசாதங்கள் அவ்வளவு ருசியானவை. புகழ் பெற்றவை.]

பொதுவாக எந்த ஊர் கோவிலுக்குச் சென்றாலும் அங்கு வாழும் மக்களில் ஒருவரை நட்பு செய்து கொண்டால் அவர் எந்தப் பூஜை எப்போது நடக்கும் மக்கள் கூட்டத்திற்கிடையில் எங்கே நின்றால் கடவுளை தரிசிக்கலாம் போன்ற தகவல்களைக் கூறி வழி நடத்துவார்கள். அப்படி ஒருவர் எனக்கும் கிடைக்கவே வசதியாக தரிசனம் செய்ய முடிந்தது.

ராமானுஜரின் திருவுருவச் சிலைகள். தானுகந்த திருமேனி(திருப்பெரும்புதூர்), தமருகந்த திருமேனி(மேல்கோட்டை) தானான திருமேனி ( திருவரங்கம்) என மூன்று உள்ளன. தமர்= மக்கள். மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ராமானுஜரின் சிலையானது இந்தக் கோவிலில் உள்ளது.

மறுநாள் காலை எழுந்து வெளியே வந்ததும் முதலில் கண்ணில் பட்டது நரசிம்மர் மலை. அன்றைய தினம் அருகில் இருக்கும் தொண்டனூர் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரைக் காண எண்ணி இருந்தோம்.
காலை நடைப்பயிற்சி போல கோவில் திறப்பதற்கு முன்பாக எங்கள் பாட்டியார் அடிக்கடி குறிப்பிட்ட “அக்கா தங்கை குளங்கள்”, மற்றும் அதனைச் ஒட்டியுள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். இன்றளவும் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டுக் குடிநீருக்கான ஆதரமாக விளங்குகிறது. அருகருகில் அமைந்துள்ளதால் இந்தப் பெயர். இங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சிக் கூடத்தை வார இறுதி என்பதால் காண முடியவில்லை. பழங்கால ஓலைச் சுவடிகள் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் என எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை கணினியில் மொழிபெயர்த்துப் பாதுகாக்கிறார்கள். பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து நூலகம் அமைத்துள்ளார்கள். [1992ஆம் வருடம் அங்கு சென்ற போது கணினி பற்றிப் பல தகவல்களை கூறக் கேட்டதில் எதுவுமே புரியவில்லை. என் அறியாமை குறித்து அவமானமாக இருந்தது. சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலையாகக் கணினி வகுப்பில் சேர்ந்து Email simulation Coding எழுதுவது வரை கற்றுக் கொண்டேன்]

மேல்கோட்டையில் மற்ற ஊர்க் கோவில்களைப் போல விஸ்வரூப தரிசனம் அதிகாலையில் நடைபெறுவதில்லை. குளிர் காரணமாக மக்களின் வாழ்க்கை தாமதமாகவே தொடங்குவதால் கோவில் நிகழ்வுகள் 8.30 மணிக்குத் தான் ஆரம்பம் ஆகின்றன. நிதானமாக நாங்கள் கோவிலுக்குச் சென்று முதலில் ராமானுஜர் பிறகு செல்வ நாராயணப் பெருமாள் ஆகியோரின் விஸ்வரூப தரிசனத்தை கண்டோம். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சந்நிதியிலும் தினசரி பூஜை நடைபெற்று இறுதியாக 10.30 மணிக்குக் காலை பூஜைகள் நிறைவு பெற்றன. [இங்குள்ள உத்சவ மூர்த்தி சம்பத்குமாரன் என அழைக்கப் படுகிறார்.]

இடையிடையே கோவில் மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களைக் கண்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். தூண்கள் கருங்கல்லால் செய்யப் படாமல் சற்றே சிவப்பு நிறமான மாக்கல்லால் செய்யப் பட்டுள்ளன. கோவிலில் கிடைத்த பிரசாதமான பொங்கல் தயிர் சாதத்தை உறவினர் பாக்குத் தட்டில் போட்டுக் கொடுத்து ஆட்டோவையும் ஏற்பாடு செய்து கொடுத்து போகும் வழியில் சாப்பிடுங்கள் எனக் கூறி அருகிலிருக்கும் “தொண்டனூர்” என்னும் ஊரைச் சுற்றிப் பார்த்து வர வழியனுப்பினார்.அங்கே செல்வதற்குள் அந்த ஊரைப் பற்றிய சிறப்புக்களைக் காணலாமா?

மேல்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிற்றூர் UNESCO heritage Site ஆக அறிவிக்கப்பட்ட இடமாகும். சோழ மன்னன் குலோதுங்கனிடமிருந்து தப்பிக்க காவிரிக் கரையோரமாக நடந்து ராமானுஜர் இந்த ஊரில் தங்கி இருந்ததாக் கூறப்படுகிறது. இந்த ஊரின் மேற்கே உள்ள ஏரியும் இவரால் ஏற்படுத்தப் பட்டது. அருகிலிருக்கும் சிறு ஆறு மற்றும் குளங்களிலிருந்து பெறப்படும் நீரால் இந்த ஏரி 1000 ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது சிறப்பு.

ஊருக்குள்ளே நுழையும் போதே ஒரு சிறு குளம் அதில் ராமனுஜரின் மிகப் பெரிய திருவுருவச் சிலை என ஒரு வித தெய்வீகத் தன்மையுடன் அமைதியாக உள்ளது இந்த ஊர். மிகச் சிறிய கிராமமாகத் தற்போது காணப் பட்டாலும் ஹொய்சால மன்னர்களின் இரண்டாவது தலைநகரமாக இருந்தது இந்த ஊர். செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புக்களும் நெல் வயல்களும் தென்பட்டன. முதலில் நாங்கள் சென்றது “நம்பி நாராயணர்” திருக்கோவில். முன்புறம் பசுமையான தோட்டம். உள்ளே சென்றதும் பழமையான கோவிலைக் காணலாம். இங்கே நாராயணர் வழக்கமாக உள்ளது போல் அல்லாமல் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார். இங்கிருந்த தூண்களில் சிற்பங்கள் மிக மிக நுணுக்கமாகச் செதுக்கப் பட்டுள்ளன.

இதற்கு நேரெதிரில் மிகப் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோவில் உள்ளது. மிக உயரமான மதில் சுவரும் பச்சைப் பசேலென்ற நந்தவனமும் சூழ்ந்த இந்தக் கோவிலின் முன்புறமாகச் சென்ற போது தான் அதன் பழமை புரிந்தது. ஒருவரே நம்பி நாராயணர், கிருஷ்ணர் மற்றும் அருகிலுள்ள நரசிம்மர் கோவில்களில் பூஜை செய்வதால் பொறுமையாகக் காத்திருந்தே கடவுளரை தரிசிக்க வேண்டி இருந்தது. ஒரு திருமணக் குழு அங்கே காத்திருந்தது.

கோவில் வாசலில் அருகிலிருந்த தோப்பிலிருந்து பறித்து வந்த இளநீரை விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிக் குடித்து விட்டு நரசிம்மரை தரிசிக்கச் சென்றோம். சிறு குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவிலும் மிகப் பழமை வாய்ந்ததே. இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பு இங்குள்ள ராமானுஜர் திருவுருவம் ஆதிசேஷனின் கீழ் அமர்ந்தபடி உள்ளது. மீண்டும் கிருஷ்ணர் கோவிலை அடைந்த போது கல்யாண குழு பூஜை செய்பவருக்காகக் காத்து சலித்து வெளிபிராகாரத்திலேயே திருமணம் முடித்து உணவினையும் உண்டு விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். (சாப்பிட்ட இலைகளை சுத்தம் செய்யாமலே)

கோவிலின் உட்புறம் ஒரே சந்நிதி மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மற்ற பகுதிகள் மிகப் பாழடைந்து உள்ளன. மேற்சொன்ன மூன்று கோவில்களுமே UNESCO World Heritage Sites என்னும் அங்கீகாரம் பெற்றவை. நாங்கள் இங்கே இருந்த நேரத்தில் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது.

நாங்கள் இங்கிருந்து கிளம்பி தொண்டனூர் ஏரியை கடுமையான மழை காரணமாகக் காண இயலாமல் வந்த ஆட்டோவிலேயே மேல்கோட்டையை நோக்கித் திரும்பினோம். வழியெங்கும் தென்னந்தோப்புக்களுக்குக் குறைவே இல்லை. காவிரி நீர்ப் பாசனத்தால் எங்கும் பசுமை. மேல்கோட்டை கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் ஒரு மலை மேல் இருந்தாலும் ஆங்காங்கே சிறிய பெரிய குளங்கள் உள்ள வித்தியாசமான ஊர்.

மதியம் சிறிது ஓய்வுக்குப் பிறகு குன்றின் மேலமைந்த ஸ்ரீ நரசிம்மரைத் தரிசிக்க விரும்பினோம். அடிவாரத்தில் அமைந்துள்ள “கல்யாணி” என்னும் பெயருடைய பெரிய குளத்தினை வணங்கி விட்டு ஆட்டோவில் பாதி தூரம் கடக்கக் கிளம்பினோம். இந்த கல்யாணி குளமானது ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அனைத்துப் படங்களிலும் நடித்துள்ளது?! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஊரின் அனைத்துப் பகுதிகளும் பல மொழித் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளவையே. குளத்தைச் சுற்றிலும் மிக அழகான கலைநயத்துடன் கூடிய மண்டபங்கள் உள்ளன.

நரசிம்மர் மலையின் பாதி தூரத்தில் ஆட்டோ நின்று விட மீதிப் படிக்கட்டுக்களை ஏறிக் கோவிலை அடைந்தோம். குரங்குகள் அதிகம் என்பதால் கவனமாகச் சென்றோம். [பாதி தூரத்தில் ஒரு குகை அதில் ஆரம்பத்தில் நடந்தும் பின் மண்டியிட்டும் பின் குனிந்து தவழ்ந்து படுத்துக் கடைசியில் நரசிம்மரின் சன்னிதி அருகே வெளியேற வேண்டும். கடவுளிடம் பணிவு தேவை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ள இந்தக் குகையில் சிறு வயதில் சென்றிருக்கிறோம். தற்சமயம் அனுமதி இல்லை.]

கடவுளை தரிசித்து விட்டு மலையில் மேலிருந்து தெரிந்த ஊரின் சுற்றுப் புறத்தைக் கண்டு களித்து விட்டு மீண்டும் படியிறங்கி ஆட்டோவில் ஊரை வந்தடைந்தோம். இந்த மலையின் மேலே நின்று ராமானுஜர் “ஓம் நமோ நாராயணா” என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஊர் மக்களுக்குக் கூறியதாக வரலாறு.
ராமானுஜரின் காலத்தில் அனைத்துக் குல மக்களும் கோவிலின் உள்ளே சென்று கடவுளைக் காண முடியாது என்பதால் இரவு ஏழு மணியளவில் கோவிலின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு தீவட்டி ஓளியில் தீபாராதனை நடைபெறும். “தீவட்டி சேவை” என்னும் அந்தச் சிறப்பு பூஜையைக் கண்டு களித்து விட்டு உள்ளே சென்றதும் மீண்டும் ஒவ்வொரு சந்நிதியாக நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு கடைசியாக பிரசாதமாகக் கிடைத்த தோசை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலை உண்டு முடித்து அறைக்குக் கிளம்புகையில் இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. என் ஸ்மார்ட் வாட்ச் 13,000 அடிகள் அன்றைய தினம் நான் நடந்ததாகக் காட்டியது. (ஏற்க்குறைய 9 கிலோமீட்டர்கள்)

மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு வாடகைக் காரில் கிளம்பி அருகிலிருக்கும் ஜக்கனஹள்ளி கிராஸ் பேருந்து நிலையத்தை அடைந்து மைசூருக்குச் செல்லக் காத்திருந்தோம். காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிர்த் திசையில் மாண்டியாவரை பயணித்து அங்கிருந்து மைசூருக்குச் செல்ல முடிவு செய்தோம். (வேறு வழி??)

ஜக்கனஹள்ளி – மாண்டியா பயணம் ஒரு தனிப் பதிவு எழுதும் அளவுகான அனுபவங்களை உடையது. பேருந்து சிறு கிராமங்களின் வழியாகச் சென்று பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. வழியெங்கும் ராமர்/ கிருஷ்ணர் கோவில்கள், திருவிழாக்கள், நன்செய் நிலங்கள் என அருமையான ஊர்கள். மாண்டியாவில் காலை உணவை உண்டு விட்டு மைசூர் செல்லும் பேருந்தில் ஏறினோம். இம்முறை பேருந்து ஜக்கனஹள்ளியில் நிற்காமல் ஹைவேயில் சென்றது. மைசூர் பேருந்து நிலையத்தில் எங்களைச் சந்தித்த என் கணவரின் சகோதரர் மகனின் உதவியுடன் சத்தியமங்கலம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகே சற்று நிம்மதி அடைந்தோம். எங்கெங்கு காணினும் கூட்டமடா…

மலைப் சுற்றுக்களில் திரும்புவதற்கு வைக்கப் பட்டுள்ள கண்ணாடிகளில் பாதரசம் காணாமல் போய் எதுவுமே தெரியவில்லை. கடவுள் தயவால் தான் அனைவரும் மலையின் மேலும் கீழும் சென்று வருகிறார்கள் என்பதில் ஐயமேயில்லை.

மாலை ஐந்து மணியளவில் எங்கள் மேல்கோட்டைப் பயணம் நிறைவுக்கு வந்தது. நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

அனுபவங்கள் தொடரும்…

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...