Monday, 18 March 2019

இன்னும் மேலே ......


கடந்த 2018 ஆம் வருட அமெரிக்க பயணத்தில் Latitude 47.60 & longitude -122.33 coordinates ல் அமைந்த வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (Green Bay , WI ஐ விட இது வடக்கே  3 டிகிரி அதிகம் ) 

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பும், மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்புமாக அமைந்திருக்கும்  சியாட்டில் நகருக்கு San Jose நகரிலிருந்து Thanks Giving Day வாரத்தில் பயணம் செய்தோம். ( ஸ்பானிஷ் மொழியில் J என்ற எழுத்துக்கு உச்சரிப்பு இல்லை . Jalapino - alappino  Javi - avi  Jose -ose ) 

ரோம் நகரைப் போல ஏழு குன்றுகளின் நகரம் இது. நகரின் நடுவே மிகப் பெரிய வாஷிங்டன் ஏரி தொடங்கி எங்கெங்கும் ஏரிகள், அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகள், காடுகளின் நடுவே செல்லும் ஒற்றை சாலைகள், ஆங்காங்கே குடியிருப்புகள், அலுவலகங்கள்  என வித்தியாசமான ஊர்.  

நாங்கள் சென்ற நாட்களில் இரவில் -2 டிகிரி குளிர் இருந்தாலும் கூடவே மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. (மழை இல்லாமல் சியாட்டில் இல்லை என்று கூறினார்கள்) நகரைத் தாண்டி 2 மணி நேர பயணத்தில் பனிப்பொழிவு . தெருவோரம் தொடங்கி எங்கெங்கும் பனி . 

உறவினரது வீட்டின் மிக அருகிலேயே Sammamish ஏரி உள்ளது . 11 kms நீளமும் 2 kmச் அகலமும் உடையது . மழை, குளிர் காரணமாக ஏரிக்கு அருகில் நடந்து செல்ல முடியவில்லை . 

தினமும் காலை 11 மணிக்கு Bruch எனப்படும் உணவை முடித்துக் கொண்டு கையில் snacks, தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கார்களில் மூன்று குழந்தைகள் ஏழு பெரியவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புவோம். 

இரண்டு ஸ்வெட்டர்கள் அதன் மேல் ஒரு Heated Jacket, Thermal மற்றும் Jeans pants, குல்லாய் , gloves,  woolen socks, scarf அணிந்து குடை சகிதம் எங்கள் சியாட்டில் பயணம் snowqualme நீர்வீழ்ச்சியிலிருந்து ஆரம்பித்தது. அதே பெயரில் அமைந்த நதியிலிருந்து மழை மற்றும் பனி உருகுவதால் நீர்ப் பெருக்கு அதிகரித்திருந்த காலத்தில் அதைக் கண்டோம். உயரத்திலிருந்து கொட்டுவதால் சாரல் மேலே தெறிக்கிறது . அருமையான அனுபவம். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். 

மறுநாள் ஸ்டீவன்ஸ் பாஸ் (Stevens pass) என்னும் இடத்திற்கு சென்று பனியில் விளையாடி விட்டு திரும்பினோம் . அன்று பனிப்பொழிவு இல்லை. முதல் நாள் பெய்த பனியே சாலையோரம் இருந்தது. 

மறுநாள் Leavenworth என்னும் ஜெர்மனியின் Bavarian styleல் அமைந்த கிராமத்தைக் காண சென்றோம் . இந்த இடத்தை அடைய ஸ்டீவன்ஸ் பாஸ்(Stevens pass)வழியாகத் தான் செல்ல வேண்டும் (https://leavenworth.org/). சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற விதவிதமான பொழுது போக்குகள் அமைந்த இடம். வெயிற் காலத்தில் திரைப்பட விழா, பனிக்காலத்தில் ஊரெங்கும் விளக்கு அலங்காரங்கள் என வெவ்வேறு விதமான நிகழ்வுகள் அங்கே நடைபெறுகின்றன.

சியாட்டில் நகரிலிருந்து  Leavenworth செல்லும் போது பாதி வழியில் Stevens pass லிருந்து பனிப்பொழிவு தொடங்கியது. கடும் பனிப் பொழிவுக்கு நடுவில் காரில் பயணித்தது வித்தியாசமான அனுபவம் . ஊசியிலை மரங்களின் மேல் பனி விழுந்து குச்சி குச்சியாக நீட்டிக் கொண்டும், கீழே உதிர்ந்து கொண்டும் இருந்ததை கண்டோம். வித்தியாசமான அனுபவம். 

Leavenworth கிராமத்திற்குள் நுழைந்தவுடன் தெருவெங்கும் பனி. சுற்றிலும் cascade மலை தொடரின் பனி மூடிய சிகரங்கள். மாலை நான்கு மணிக்கே இருட்டு . ஊருக்குள் நடந்து சென்று விளக்கு அலங்காரங்களை கண்டோம். (0 டிகிரி குளிரில் நானும் பேரக்குழந்தைகளும்  ice cream சாப்பிட்டோம்.)

திரும்பும் வழியில் பனி கெட்டியாகி வாகனங்கள் break பிடிக்காமல் வழுக்கி வழுக்கி ... திக் திக் நிமிடங்கள். 

பனிப் பொழிவுள்ள ஊர்களில் வாகனங்களின் நான்கு சக்கரங்களும் ஒரே சமயத்தில் பிரேக் பிடித்தால் நிற்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும் அல்லது அதற்கென அமைந்த சங்கிலியால் சக்கரங்களைப் பிணைத்து விட்டு ஓட்ட வேண்டும்.

எங்களுக்கு பின்னால் வந்த காரில் உள்ளவர்கள் கூறியதை கேட்ட பிறகு தான் உண்மை புரிந்தது . நாங்கள் சென்ற காரின் நிலையை கண்டு "திக் திக்" அவர்களுக்கு தான் என்று. காரணம் நாங்கள் சென்ற கார் முன் இரண்டு சக்கரங்கள் மட்டுமே பிரேக்கை அழுத்தினால் நிற்கும் வாகனம் . பனிப்பொழிவை எதிர்பார்க்காத காரணத்தால் சக்கரங்களை பிணைக்கும்  சங்கிலி கொண்டு வரவில்லை.
  
ஒரு வழியாக ஊறி ஊறி மலையை விட்டு கீழிறங்கி வீடு வந்தோம்.

எங்கள் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியான Mount Rainier செல்ல முடியவில்லை பனிப்புயல் காரணமாக சாலைகள் மூடப்பட்டு விட்டன. (விமானத்தில் செல்லும் போது அந்த மலை மேலே தான் போகும் பார்த்துக் கொள்ளுங்கள் _ உறவினர் )

மற்றொரு நாள் ....

நகரின் மையத்தில் பறந்து விரிந்த வாஷிங்டன் ஏரி . கடலும் மிக அருகில் உள்ளது. கடல் வழியாகவோ அல்லது வான் வழியாகவோ அலாஸ்கா செல்ல மக்கள் கூடும் ஊர் இது. ஏரியைக் கடந்து சென்றால் Downtown.மழை நின்ற ஒரு நாளில் மிகப் பிரபலமான Seattle Tower மீது ஏறி நகரின் இரவு நேர அழகினைக் கண்டோம். (அதோ பாருங்கள் அந்த தீவு தான் பிரபல Microsoft நிறுவனரின் வீடு இருக்கும் தீவு. மொத்த தீவுமே அவருக்கு தான் சொந்தம். இதோ பாருங்க Amazon அலுவலகம்)

சியாட்டில் நகரம் மிகப் பிரபலமான Microsoft மற்றும் Amazon என்ற இரண்டு நிறுவனங்களின்  தலைமையிடம்  . இவை தவிர Facebook போன்ற பிரபல நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும் , இந்நிறுவனங்கள் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கும் இந்நகரம் பிரசித்தம். (Microsoft நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை நேரத்தில் பல சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் இருப்பதால் அங்கே வேலையில் சேர்ந்தவர்கள் நீடித்து இருப்பதாக கூறினார்கள்)

பழமையான தொழில்களான Lumbering, மீன் பிடித்தல் போன்றவைகளை இந்நிறுவனங்கள் ஓரம்   கட்டிவிட்டது போல தோன்றுகிறது. 

இந்திய உணவகங்களில் விதம் விதமான உணவு வகைகள் கிடைக்கின்றன . கோவில்கள், திருவிழாக்கள், பாட்டு, நடனம், கலை விழாக்கள் என மற்றொரு கலிபோர்னியா.

மற்றொரு நாள் , Ferry எனப்படும் வாகனங்களையும் ஏற்றி செல்லும் படகின் மூலம் அருகிலுள்ள BainBridge தீவிற்கு சென்று இருட்டிய பிறகு மீண்டும் நகருக்குள் வந்தோம்.  Ferry மூலம் திரும்பும் சமயம் கண்ட நகரின் இரவு நேரக் காட்சிகள் கண்ணுக்கும் மனதுக்கும்  அருமை. பல திரைப்படங்களில் இந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்கள்.

என் நீண்ட நாள் கனவு  சியாட்டில் சென்று tulip பூக்களின்  கண்காட்சி மற்றும் Boeing Factoryயைக் காணுதல் . துலிப் பூக்களின் கண்காட்சியை ஏப்ரல் மாதம் சென்றால்  தான் காண  முடியும்.(காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலேயே அது போன்ற கண்காட்சியை  கடந்த ஏப்ரல்  மாதத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது )

போயிங் தொழிற்சாலையை  என் கணவர், மகள் மற்றும் மகனுடன் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. (15- 17 வருடங்களுக்கு பிறகு நாங்கள் மட்டும்). 

பின்னணியில் சிகரங்களில் பனிபடர்ந்த மலைத் தொடர்கள் தென்பட Everette என்னும் இடத்தில் அமைந்த போயிங் தொழிற்சாலையைக் காண மிக்க ஆவலுடன் (நான் மட்டும் ஆவலுடன் மற்றவர்கள் மிகுந்த அசுவாரஸ்யத்துடன் சென்றோம் .பாட்டி அங்கே பார்க்க ஒன்றும் இல்லை tour சீக்கிரம் முடிஞ்சுடும் படு bore _ என் பேரன்)

விமானத்தின் பல்வேறு பகுதிகள் வேறு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கே ஒருங்கிணைக்கப்படுவதை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே  பேருந்து மூலம்  அழைத்து சென்று காட்டினார்கள். (90 நிமிடங்கள்)

மிகப்பெரிய விசாலமான பகுதி. நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒவ்வொரு விமானத்தின் அருகிலும் உயரமான இடத்திலிருந்து (observation deck) காணும் வண்ணம் அழைத்து சென்றார்கள். நாங்கள் சென்ற போது  (1)Boeing 747-8 [cargo], (2)Boeing 767[Cargo] , (3)Boeing 777X[Commercial], (4)787-9(Commercial- Dreamliner )என நான்கு விமானங்களின் ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

ஒரு விமானத்தின் விலை $340 மில்லியன் என்று சொன்னார்கள். Boeing 777  விமானம்  ஒரே வாரத்தில் தயாராகிறது என்று வியக்க வைக்கும் தகவலையும் கூறினார்கள். 35,000 தொழிலாளர்கள் மூன்று shift களில் வேலை செய்து வருகிறார்கள் என்று வழிகாட்டி கூறினார். (2.30 am ஷிப்ட்டில்  20,000 பேர், 10 am ஷிப்ட்டில் 10,000, பேர் இரவு ஷிப்ட்டில் 5,000 பேர் )
 
தயாராகிக் கொண்டிருந்த நான்கு விமானங்களில் இரண்டு  விமானங்கள் அடுத்த சில நாட்களிலேயே வானில் பறக்க ஆரம்பித்து விட்டதாக செய்தியில் படித்தேன். . Boeing 777X[Commercial]இரண்டு நாட்களுக்கு முன்பு வானில் பறக்க தொடங்கி விட்டது .

இவைகள் தவிர உலகின் பல விமான நிறுவனங்களுக்கும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து தருகிறார்கள். தொழிற்சாலையின் வெளிப்புறம்  தயாரான விமானங்கள் நின்று கொண்டிருந்தன. (கார் showroom போல )

பயணத்தின் இறுதிக் கட்டமாக மகள் முறையிலான உறவினருடன் Microsoft campusஐ சுற்றி வந்தோம். (Seattle வந்து விட்டு இதை பார்க்காமல் போனால் எப்படி ?)

நகரில் நான் கண்ட வித்தியாசமான ஒரு விஷயம் தெருக்களின் பெயர்கள். 123N , 342SW என திசைகளின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் தெரு பெயர்கள். முக்கியமான இரண்டு பகுதிகள் சேரும் தெருவுக்கு அந்த இரண்டு பகுதிகளின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார்கள். 

பனிப் பொழிவு ,மழை , குளிர், வெய்யில், மலை, ஆறு, ஏரி ,பெருங்கடல்  (North Pacific Ocean), நீர்வீழ்ச்சி , அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வனம் , அதற்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை போன்ற சாலை, வன விலங்குகள் நடமாடும் வனப்ப பகுதியில் அமைந்த பள்ளி , படகுகள் , மீனவர்கள், மரம் அறுத்தல் என இயற்கையும், வானளாவிய கட்டிடங்கள், அலுவலகங்கள், கடைகள், விமான கப்பல் போக்குவரத்துக்கள் என புதுமையும் நிறைந்த நகரம் Seattle.

உறவினர் தம்பதியின்  அருமையான உபசரிப்பில் பயணம் சிறப்பாக அமைந்ததில் வியப்பில்லை. கார்த்திகை பண்டிகையையும் அங்கே அப்பம், வடை, பாயசம் என சமைத்து -2 டிகிரி குளிரில் சிறப்பாகக் கொண்டாடினோம்.

அமைதியான அழகான ஊர். 












Thursday, 6 December 2018

வணக்கம் பல முறை சொல்வேன் !

असतोमा सद्गमय । 
तमसोमा ज्योतिर् गमय । 
मृत्योर्मामृतं गमय ॥ 
ॐ शान्ति शान्ति शान्तिः ।। 

From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !

ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்துக் கூறுவதாக  ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள பாடலின் ஒரு வரியை (தாமஸோமா ஜ்யோதிர்கமய) அடிப்படையாகக் கொண்டு , ஒரு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி எங்கள் சம்ஸ்கிருத வகுப்பில் நடைபெற்றது .  

அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....


अवन्दे वन्दे वन्दिष्ये

अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !

(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
   "अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
   अहं चिन्तयामि !

(2) मम आरम्भ अध्यापनस्य  कर्ता उत्तमा अध्यापका  कारणं वा ?
    गणितं सुलबं इति मधुरतया  पाठित: आचार्य: कारणं वा ?
    अहं चिन्तयामि !

(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
   मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
   अहं चिन्तयामि !

(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
     गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
     अहं चिन्तयामि !

(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
    पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा  पण्डितानां मेलनं वा ?
    अहं चिन्तयामि !  

                          इदानीं अहं अवगच्छामि ! (2)
                          मम चिन्तनम् इदानीं पूरणं भवति !

(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि  गुरु: एव  किल ? (2)

(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे !   (2)



வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன் 

நான் சிந்திக்கிறேன் 
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன் 

தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன  தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக்  கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன் 

   இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது 
   என் சிந்தனையும் முற்றுப் பெற்றது 
                
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?

அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.  




Thursday, 8 November 2018

44° 31' 9" N / 88° 1' 11" W


சிறிய ஊர்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தை பழக்க வழக்கங்களை நமக்கு தெரிவிக்கும் என்பதால், இது போன்ற ஊரில் தங்கி அனுபவம் பெரும் என் நீண்ட கால ஆசை என் மகன் வசித்த வட அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தில் உள்ள  Green Bay யில் நிறைவேறியது( ஒரு மாதம்) . இது விஸ்கான்சின் மாகாணத்தின்  மூன்றாவது  பெரிய நகரம் .

சிகாகோ நகரிலிருந்து கிரீன் பே முடிய   மிச்சிகன் ஏரியை ஒட்டிய வண்ணம்  நேர்கோடு போல  பல மைல்களுக்கு ,மிகச்  சில திருப்பங்களுடன் அமைந்த ஒரே சாலையில் (Continue for the next 106 miles ). தெளிவான வானிலை ,மழை , கடும் பனிமூட்டம் என  பலவிதமான பருவ நிலைகளை கடந்து சென்றோம் .(Amazing experience ஃfor 3:30 hrs)

வழியெங்கும் Santa Claus "jingle bells jingle bells " பாடிக் கொண்டே செல்வது  போல பிரமை .

விஸ்கான்சின் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான Milwakee ஐ கடந்த சமயம்  Home Alone 3 படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது . (We are going to Milwakee , on our way we can  drop you at Chicago ) 

கிரீன் பே  நகரம் பால் பண்ணைகள்  , கால்நடைகள் என கிராம சூழ்நிலையுடன்  தொடங்குகிறது .

சிகாகோவிலிருந்து  வாங்கிய காய்கறிகள் , மளிகை சாமான்களுடன் (கிரீன் பே Indian storeல் சில வகை காய்களே கிடைக்கும்) கிரீன் பேயில் மாலை  ஆறு மணியளவில் சென்று இறங்கிய  சில நிமிடங்களிலேயே அந்த சிறிய ஊரின் சிறிய விமான நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் 10 விமானங்கள் வந்து செல்கின்றன. 

மறுநாள் காலையில் வீட்டின் ஜன்னல்கள் வழியே தெரிந்த குட்டை ஊசியிலை மரங்களும் பச்சைப் பசேலென்ற புல்வெளியுடன் அமைந்த வீடுகளும் மனத்தைக் கவர்ந்தன. 

நான் : Northern lights இங்கே தெரியுமா ? (Arora Borealis )
மகன்: அதற்கு நீ Alaska தான் போகணும் . 
நான் : இந்த ஊர் என்ன Latitude ?
மகன் : 44 degree
நான்  : 35 degrees North Latitudeல் உள்ள இடங்களில் தான் தெரியும்  என Wikipedia சொல்கிறது. 

(https://wikitravel.org/en/Northern_Lights)

அங்கிருந்த நாட்களில் பிரதி தினமும் மிகப்பெரிய கண்ணாடி ஜன்னலின் வழியே (சுவருக்கு பதில் கண்ணாடி) பின் பக்க தெருவில் தெரிந்த ஒரு maple மரத்தினை  பார்ப்பதும் எத்தனை  இலைகள் இன்று நிறம் மாறியிருக்கின்றன  என்று கவனிப்பதும்  நான் செய்த எனக்கு பிடித்த வேலை. (O Henry எழுதிய The Last Leaf  தினமும்  என் நினைவுக்கு வரும் )

வார நாட்களில் காலையில்  8:30 மணிக்கும் மாலை 3-4 மணியளவிலும்  2,3 சிறுவர்கள் தென்படுவார்கள். இது தவிர சிறுவர்களின் நடமாட்டமே இருக்காது.(கண்ணாடி ஜன்னல் உபயம்தான்)

அங்கு சென்ற இரண்டாவது நாளில் மகளின் கேள்வி: அம்மா bachelor குடியிருப்பில் உங்கள் புதுக்குடித்தனம் எப்படி ஆரம்பித்தது?
என் பதில் :  குளிக்கும் Soap  கூட Men's  After Shave Lotion மணத்துடன் இருக்கிறது .  No girls things .
Whistle வராத சீனா குக்கரில் சாதம் , Nonstick pan ல் சாம்பார், மரக்கரண்டியில் வதக்கி செய்த பொரியல், இட்லி , blender ல் ஒரு விதமான கோணத்தில் வைத்து அரைத்த சட்னி  என தட்டு தடுமாறி சமையல். Apartment வகை குடியிருப்பு என்பதால் exhaust fan புகையை வீட்டுக்குள்ளேயே இழுத்து விடும் அமைப்பில் உள்ளது. குக்கர் இரண்டு whistle கொடுத்தால் fire alarm , இட்லி இரண்டாவது முறையாக வேக வைத்தால்  fire alarm, சப்பாத்தி சுட்டால் fire alarm. .. எப்போது அலாரம் அலறுமோ என்ற திக் திக் நிமிடங்கள் .

தினமும்  காலை நேரத்தில் நானும் என் கணவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டோம் . 
காலை 9 மணியளவில் தெருவில் சென்றால் மட்டுமே  மக்கள் நடமாட்டம் தென்படும். வழியெங்கும் தனிவீடுகள் (Single / double family homes ). ஒவ்வொரு வீட்டு புல்வெளியும்  சிறுபிள்ளைகள் விளையாடும்  குட்டி பூங்கா போல இருந்தது. கொள்ளை அழகு.

அருகிலேயே ஒரு Golf Course . தெருவெங்கும் சீராக நடப்பட்ட மரங்கள் . ஒரே ஒரு வீட்டில் மட்டுமே ரோஜாப்பூ செடியைக்  கண்டேன்.

கட்டில், மெத்தை, கார்பெட், தொலைக்காட்சி பெட்டி, தக்காளி பழங்களுடனேயே வேருடன் பிடுங்கிய செடிகள்  என உபயோகப்படுத்திய பொருட்களை தெருவில் வைத்திருந்தார்கள். நாங்கள் சென்றது இலையுதிர் காலத்தில். குளிர் மாதங்களை எதிர் நோக்கி வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சி.

செப்டம்பர் மாதத்திலேயே பல வீடுகளில் Halloween பண்டிகைக்கான அலங்காரங்களை செய்து விட்டார்கள்.

மழை நீரை தடுத்து ஆங்காங்கே சுத்திகரித்து மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

இந்த ஊரில் முக்கிய வீதிகளின்  ஒரு பக்கம் மட்டும் ஆங்காங்கே விட்டு விட்டு நடைபாதை காணப்பட்டது. வருடத்தில் 6 மாதங்கள் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் நடமாட்டமே இருக்காதே !
 
இங்குள்ள மக்கள் அனேகமாக வெளிர்  மற்றும்  கருப்பு நிற ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள்.  என்னுடைய orange நிற உடையை கண்டதும் நாய்கள் குறைத்தன. :) Google map போட்டு கொண்டு மாற்றுப் பாதையில் செல்வோம்.   

வாரத்தின் மூன்று மாலை நேரங்கள் மகனுடன் தங்கி இருந்த சிகாகோ நகரிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் மருத்துவ நண்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்போம் . தமிழ் பேசும் நான்காவது நபர் ,இனிய நண்பர்.   

Downtown Fox நதிக்கரையை ஒட்டி அமைத்துள்ளது. நகரின் பல இடங்களிலும் நீர்நிலைகள் உள்ளன. சாலையிலேயே சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மற்ற நதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய, Fox நதி மட்டும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது சிறப்பு.

இந்த நதியின் கரையில் அமைந்த ஊர்கள் Fox cities என்று அழைக்கப் படுகின்றன. சில ஊர்களை காணும் வாய்ப்பும் கிடைத்தது. [இந்த பதிவில் நான் குறிப்பிடும் ஊர்கள் Fox cities ல் சிலவைகளே ]

கிரீன் பேயிலிருந்து எங்கு சென்றாலும் வழியெங்கும் சிறிய பால் பண்ணைகள் , கால்நடைகள் .ஆங்காங்கே சிறிய,பெரிய  தொழிற்சாலைகள். 
நான்: அருகில் போய் அங்குள்ளவர்களிடம் கேட்கலாமா ?
மகன்: நான் காரை நிறுத்த மாட்டேன் இங்கே எல்லாரும் துப்பாக்கி வைத்திருப்பார்கள் பாதுகாப்புக்காக . புது மனிதர்களை கண்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள். தேவையான தகவல்களை Google தரும். 

பால் மற்றும் பால் பொருட்கள் , சீஸ் , Toilet Paper (உற்பத்தியில் அமெரிக்காவில் முதலிடம்), lumbering மற்றும் இவை சார்ந்த உபதொழில்கள்(உ.ம் - காகிதம் செய்ய பயன்படும் பொருள்களின் கழிவிலிருந்து பூச்சி கொல்லி மருந்து தயாரித்தல் ) ஆகியவை இந்த ஊரின் பிரதான தொழில்கள். 

ஊரில் எங்கெங்கும் மிகப்பெரிய டிரக்குகள். Packing செய்யப்படும் என்ற போர்டுகள் . 

கிரீன் பே ஒரு சிறந்த துறைமுகம். மிச்சிகன் ஏரியின் அருகில் அமைந்துள்ள காரணத்தினால் இந்த ஊரின் சுற்று புறங்களில் கிடைக்கும் தாதுக்கள், Lumbering  தொடர்பான பொருட்கள் என பலவற்றையும் பெரிய டிரக்குகள் மூலம் துறைமுகத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  [Schineider National முக்கியமான truck company ]

நதியாக , ஏரியாக இருந்தாலும் Port , Dock , Sea , Beach என கடல் சார்ந்த வார்த்தைகளே பயன்படுத்த படுகின்றன. (அம்மா பக்கத்தில் Bay beach இருக்கு இன்னிக்கு போலாம்....)

மிச்சிகன் ஏரியின் வழியாக சரக்கு கப்பல்கள் மூலம் பல்வேறு ஊர்களுக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.

 நான் : ஐரோப்பிய , பிரெஞ்சு பெயர்கள் அதிகம் தென்படுகிறதே இங்கே (Ashwaubenon, De Pere, Brussles ,Lake Geneva, Belgium ,Luxemburg, Lake Zurich  , Lexington)
மகன் : No idea அம்மா.  நீதான் ஐரோப்பா ஆஸ்திரேலியான்னு பல இடங்களுக்கும் போயிருக்காய். 

கிரீன் பேயில் பிரெஞ்சு கனடியர்களின் குடியேற்றத்திற்குப்  பின்பு  பிரான்சு , ஹாலந்து போன்ற  பல ஐரோப்பிய நாட்டு மக்கள் இப்பகுதியில் நிலம் மலிவாக கிடைக்கிறது விவசாயம் செய்ய முடியும் என்று கேள்விப் பட்டுக் குடியேறியதாக சரித்திரம் சொல்கிறது. சீனர்களின் Silk route போல இது Fur route ல் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க இடம்.  மேற்கண்ட ஐரோப்பிய பெயர்களுக்கான காரணம் இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு.

1800 களில் railroad நிறுவப்பட்டு அண்டை மாநிலங்களிடையே சரக்கு பரிமாற்றம் நடைபெற்றது  [Railroad museum ல் பல அரிய தகவல்கள் கிடைத்தன].  

அங்கு காட்சிப் படுத்தப் பட்டிருந்த ரயில்களின் உள்ளே மிக அருமையான சொகுசு இருக்கைகள் , வசதிகள். 1800 களிலேயே .... இன்றளவும் இந்திய ரயில்களில் அது போன்ற வசதிகள் இல்லை .

இங்கிருந்து 4 மணி நேர பயணத்தில் Danielle Steel எழுதிய கதையில் மூலம் அறிந்த Amish  மக்களின் குடியிருப்புகளை காண விரும்பினேன் https://en.wikipedia.org/wiki/Amish

நான் : Amish County பாக்கலாமா ? Minneapolis போலாமா?
மகன்: வெளியில் சாப்பிடுவதானால் எங்கு வேண்டுமானாலும் கூடி போகிறேன். புளிசாதம், தயிர்சாதம் என வீட்டு சாப்பாடை மட்டுமே சாப்பிடுகிறீர்கள். காலையில் கிளம்பி சென்று இரவு வீடு திரும்பும் தொலைவில் உள்ள இடங்களுக்கு மட்டுமே போகிறோம் .

Walmart is a life saver . எல்லா விதமான பொருட்களும் கிடைக்கின்றன .  மற்ற நகரங்களை போல எல்லா விதமான கடைகளும் இங்கும் உள்ளன. ஊர் மொத்தமும் 10 மைல்களுக்குள்ளே தான் இருக்கிறது .

Green bay packers பிரசித்தி பெற்ற அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர்களை கொண்ட குழு. இந்த ஊரின் Lambeau stadiumல் முக்கியமான போட்டிகள் நடைபெறுகின்றன.  அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக போட்டிகளை காண வருகிறார்கள்.  
வேறு பல விளையாட்டுக்களும் இந்த ஊரில் பிரசித்தம் .

Downtown நூலகம் , Farmers market (பனி விழாத 6 மாதங்கள் மட்டுமே பிரதி சனியன்று செயல்படும் ),Kaukauna வில் கோவில் , Oshkosh நகரில்  EAA  aircraft museum , Appleton,ல் Fox city mall ,Two cities beach , Manitowac, Lake Michigan என பக்கத்து ஊர்களுக்கும் சென்று வந்தோம். தவிர தெலுங்கு மற்றும் ஆங்கில  திரைப்படங்கள் , Bowling என நீர்நிலைகள் தவிர்த்த activities சிலவும் செய்தோம் . 

சிறிய ஊர் என்பதை உணர்த்த High raised water tank , அங்கங்கே சில உணவகங்கள், saloon , சிறிய ஏரி , 15 நிமிட நடைதூரத்தில் பூங்கா என அருமையான அமைதியான ஊர் . நம் ஊர் பெட்டிக்கடைகளுக்கு பதிலாக பெட்ரோல் பங்குகளில் சிறிய கடைகளில் தண்ணீர், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மற்றும் பிஸ்கட்டுகள், உணவுப்பொருட்கள் ஆகிய அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். நடைப் பயிற்சி செய்கையில் வாழைப்பழம் வாங்கி செல்வோம்.

ஒருபுறம்  fox நதியும் மறுபுறம் மிச்சிகன் ஏரியும் அமைந்த  இந்த ஊரில்  சூரியன் மறைவதைக்  காணும் வகையில் பூங்காக்களும் ,  நதியில் படகில் செல்ல Pierம் உள்ளன.  அங்கே கண்ட  விதம் விதமான பறவைகளும் (migratory birds) வித்தியாசமான செடி கொடிகளும், தெரு ஓரங்களில் விழும் நீர்வீழ்ச்சிகளும் மனதிற்கு ரம்மியமாக இருந்தன. இந்த ஊரின் மக்கள் தொகை ஒரு லட்சம். சிறு ஊர்களில் அந்தந்த ஊரின் மக்கள் தொகை எவ்வளவு என board வைத்திருக்கிறார்கள்.   நாங்கள் அங்கிருந்த நாட்களில் அவ்வப்போது லேசான மழையும், மிதமான குளிருமாக அருமையான பருவநிலை.

Great Lakeன் பெயர்களை மட்டுமே  பள்ளிப் பாடத்தில் படித்திருந்த எனக்கு அவைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை . 

Prairies , Lakes , Rivers , Cheese , Beaches and Memories ...........Green Bay !!

பின் குறிப்பு : சிறிய ஊருக்கு செல்கிறீர்கள்.பொழுது போகவில்லை என நான்கு நாட்களில் கலிபோர்னியாவுக்கு திரும்பி வரப்போகிறீர்கள் என்றார் கலிபோர்னியாவில் வசிக்கும் மகள்.  September கடைசியிலே  இரவு நேரங்களில் 3 டிகிரி செல்சியஸ். -20 டிகிரி வரை செல்லும் ஊர் அது. வெயிற்காலமாக  இருந்தால் பயணத்தை நீட்டித்திருப்பேன். 

நாங்கள் சென்ற வருடத்திற்கு அடுத்த வருடம் Polar Vortex காரணமாக -47 டிகிரி குளிரடித்தது. (அன்டார்டிகாவின் வெப்ப நிலைக்கு சமம் இது.) 

Thursday, 27 September 2018

சின்னச் சின்ன .....


கதைகள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயது முதலே தன் பங்களிப்பை தொடங்கி விடுகிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது சிறுகதைகளுக்கு சால பொருந்தும்.

சிறுவயதில் என் சித்தி சொல்லிய Cinderella  மற்றும் Snow White, பாட்டி கூறிய புராணக் கதைகள் தொடங்கி புத்தகங்களில் படித்த பல சிறுகதைகள் பலவும் என் நினைவில் நிற்கின்றன . 

என் வாழ்க்கையை வழிநடத்திய இரு சிறு கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதை தொடர்ந்து சில சிறந்த சிறுகதைகளை அறிமுகப்படுத்துகிறேன் .

முதலாவதாக , திரு இறையன்பு IAS அவர்கள் கூறிய(எழுதிய ) கதை .

பட்டுப்பூச்சி (butterfly)  தட்டான்பூச்சியும்(Dragonfly)  தான் கதாபாத்திரங்கள். தட்டான் பூச்சிக்கு பட்டு
பூச்சியின் அழகையும் பொலிவையும் பார்த்து பொறாமை. 

தட்டான் பூச்சி : பட்டாம்பூச்சியே நீ மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய்?

பட்டாம்பூச்சி :  நான் அழகற்ற  கம்பளிப்புழுவாய்த் தான்  இருந்தேன். பிறகு ஒரு கூட்டுக்குள் 14 நாட்கள் உணவு தூக்கம் இன்றி சிரமத்துடன் அடைந்து கிடந்தேன். வெளியுலகை காண வரவே இல்லை. 15 ஆவது நாள் நான் வெளியில் வந்த போது இது போன்ற அழகிய தோற்றத்துடன் இருந்தேன் .

நீதி : தவம் இருந்தால் வரம் கிடைக்கும். உழைப்பே உயர்வு .

இரண்டாவது கதை ஒரு இளம் பெண்ணின் கனவு பற்றியது .

 ஒரு சிறிய ஊரில் ஒரு இளம்பெண் வசித்து வந்தாள் . இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த பெண்ணிற்கு   பியானோ இசைக்க வேண்டும் என்று ஆசை. யாரேனும் தம்முடைய பியானோவை கொடுத்தால் சில மாதங்களாவது தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று வசித்து விட்டு, திருப்பி  தந்து விடலாம் என்று நினைப்பாள்.

அவள் தன்னுடைய அலுவலகத்திற்கு தினமும் பேருந்தில் செல்வாள். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய தோழியிடம் , நான் 6 மாதங்கள் வெளியூருக்கு செல்லப் போகிறேன் என்னிடம் உள்ள பியானோவை வாசிக்காமல் விட்டு வைக்க எனக்கு விருப்பமில்லை யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் நான் வரும் வரை அவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட இளம்பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தான் பாதுகாப்பாக வைத்திருந்து திருப்பி தருவதாக சொல்லி பியானோவை தன் வீட்டிற்கு எடுத்து சென்று , 6 மாதங்களுக்கு பிறகு திருப்பித் தருகிறாள்.

நீதி : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் . கனவுகளை முழுமையாகக் காண வேண்டும். சொந்தமாக பியானோ வாங்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ??

மனதில் நின்ற சிறுகதைகளில் சிலவை மட்டும் ......

(1)God sees the truth , but waits  - Leo Tolstoy 

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம். இன்றும் நினைவில் நிற்க என் ஆசிரியை திருமதி.விமலாவும் ஒரு காரணம். 

ஒரு வழிப்போக்கன் வெளியூருக்கு பயணம் மேற்கொள்கின்றான் .       
வழியில் , ஒரு ஊரில் தங்குமிடத்தில் ஒரு கொலை நடக்கிறது. தவறான சந்தர்ப்ப சாட்சிகளின்படி  வழிப்போக்கன் சிறையில் அடைக்கப் படுகிறான். 26 வருடங்கள் சிறையில்  செய்யாத குற்றத்திற்காக கழிக்கிறான். கொலை செய்தவன் ஒரு திருடன் தன்னுடைய தவறை ஒத்துக் கொள்கிறான். மறுநாள் வழிப்போக்கனை விடுதலை செய்ய அதிகாரி  வரும்போது ,அவன் ஏற்கனவே இறந்திருப்பான்.

(2)ஏறக்குறைய சொர்க்கம் - திரு சுஜாதா 

மிகச் சிறந்த எழுத்தாளர். பல துறைகள் பற்றியும் எழுதியுள்ளார்.  Electronic Voting Machine இல் இவரது முக்கியமானது. 1965 ஆம் ஆண்டு எழுதியவைகள் கூட இன்றைக்கும் புதுமையாகவே உள்ளன. 
இரண்டு நாட்கள் முன்பு, நூலகத்திலேயே அமர்ந்து அவரது "கணையாழியின் கடைசி பக்கங்கள் " புத்தகத்தின் சில கட்டுரைகள் படித்தேன். அவரது நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

நடுத்தர வர்க்க குடும்பம். ஒரு தம்பதி . அழகான மனைவிக்கு திரைப்படத்தில் நடிக்க ஆசை. கணவனின் விருப்பத்திற்கு மாறாக நடிக்க செல்கிறாள். மனைவியைப் பிரிய விரும்பாத கணவனும் உடன் செல்கிறான் . உதவியாளர் போல செயல்படுகிறான். மனதை தேற்றிக் கொண்டு பணம் தரும் சுகங்களை அனுபவிக்க பழகிக் கொள்கிறான்.
நண்பர் ஒருவர் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு இவரின் பதில் ....

 "ஏறக்குறைய சொர்க்கம்"

(3)Gift of Magi - O.Henry 

இதுவும் பள்ளிப் பாடம்தான் . இது உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று .

O.Henry மிகச் சிறந்த ஆங்கில சிறுகதை எழுத்தாளர். இவரது கதைகள் குதூகலமாக ஆரம்பித்து மெல்லிய சோகத்துடன் முடியும்.

ஒரு தம்பதியின் அன்பை உணர்த்தும் கதை. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஒருவருக்கொருவர் பரிசு வழங்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. 
நீண்ட கூந்தலுடைய தன் மனைவி விரும்பிய மர  சீப்பினை தன்னுடைய கடிகாரத்தை விற்று பரிசாக வாங்கி வருவான் கணவன். 
அவன் மனைவியோ , கணவன் நீண்ட நாட்களாக அணிய விரும்பிய கடிகாரத்திற்கு தன்  நீண்ட கூந்தலை விற்று strap வாங்கி வருவான்.


எண்ணங்களே வண்ணங்களாக ......

Tuesday, 25 September 2018

பனிக்காட்டிலே……………


கியூபா விமான விபத்து ,டெக்சாஸ் பள்ளி துப்பாக்கி சூடு ,கர்நாடகா தேர்தல் முடிவுகள் என கலந்து கட்டி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த கடந்த வெள்ளியன்று இரவு , நான் பார்க்க நேர்ந்த ஒரு டாகுமெண்டரி 48 மணி நேரங்கள் கடந்தும்  என் மனதை பாதிப்பதால் , உங்களுடன் பகிர முடிவு செய்து இதோ ஆரம்பிக்க போகிறேன். 

TV 5 Monde (Asie) என்னும் தொலைக்காட்சி சானலில் “Faux Pas Rever” (unimaginable / you can never dream of என்பது இதன் சுமாரான மொழிபெயர்ப்பு)   என்ற நிகழ்ச்சியில் “Grand Nord Canadien” என்ற தலைப்பில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனி படர்ந்த மலைச்சிகரங்களுடன், மிகக்குறைந்த மக்கள் தொகையுடன் கூடிய Yukon பகுதியை சுற்றிக் காட்டி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையினை பற்றி விளக்கினார்கள்.(ஆங்கில subtitles உடன் பார்த்தேன்)

Google Map ல்   எந்த ஒரு இடத்தையோ ஊரையோ தேடினாலும் Yukon ,unorganized என்று தலைப்பிடுகிறது.

ஆர்டிக்(Arctic) பகுதியில் அமைந்திருக்கும் இந்த பகுதியை குளிர்காலத்தில் சுற்றிக் காட்டியுள்ளார்கள். ஏரிகள் ஆறுகள் என எங்கும் பனி உறைந்து .... மக்கள் ஏரியின் மேல் வீடு கட்டி வசிக்கிறார்கள். அங்கே வசித்தால் அரசுக்கு எந்த வரியும் கட்ட தேவை இல்லையாம். வீட்டிற்கு வாடகை தர தேவை இல்லையாம். 

பனி சிற்பங்கள் செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள். நாய்கள் ஓட்டும் sled வண்டி போட்டிகளும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு பரிசுகளும் உண்டு. வெளியூர்களிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து பனியால்  செய்த கோட்டைக்குள் கலை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்கள். Ticket உண்டு. உள்ளே ஒருவிதமான  கொண்டாட்டம் என்றால் வெளியே வானில் வர்ண ஜாலம் . ஆர்டிக் பகுதியில் குளிர் கால இரவுகளில் வானில் தெரியும் வர்ணஜாலங்களுக்கு Northern Lights என்று பெயர். yukon பகுதியின் இரவு நேர வானம் வண்ணக்கோலம் . கொள்ளை அழகு.  
(Aurora borealis- https://www.youtube.com/watch?v=fVsONlc3OUY)

குடிநீருக்கு பனிப்பாறைகளை உடைத்து அடியில் தேங்கி உள்ள நீரை வழிகளில் எடுத்து வந்து உபயோகிக்கிறார்கள். கோடையில் பனி உருக ஆரம்பித்த  பிறகு அந்த வீடுகள் நகர தொடங்கி விடுகின்றன. எப்படியும் நம் ஊர் ஏரிகள் பல தண்ணீர் இருக்கப்போவதில்லை என்பதால்  மக்கள் அங்கேயே வசிக்கிறார்கள். மின்சாரத்திற்கு ஜெனெரேட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

பனிப்பாறைகளை உடைத்து மீன் பிடிக்கிறார்கள். Beaver என்னும் மிருகத்தை பொறி வைத்துப் பிடிக்கிறார்கள் அதன் Fur க்காக. ஆழ்கடல் Divers பனிப்பாறைகளை குடைந்து, ஓட்டையினுள்ளே சென்று ஒரு வகையான கடல் உயிரினத்தை பிடித்து மேலே எடுத்து வருகிறார்கள். Bison என்னும் காட்டெருமையை வேட்டையாடுகிறார்கள். அரசே அதன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க குளிர் காலத்தில் மட்டும் ஒருவர் 3 Bison காலை வேட்டையாடலாம் என்று அனுமதி அளித்துள்ளதாம். சிறப்பான high tech காமராக்களுடன் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். பொறியில் விலங்கு மாட்டினால் எங்கிருந்தாலும் ஒரு கருவியின் மூலம் கண்டு கொண்டு , விலங்கை பிடிக்கிறார்கள். Wolverine கள் மனிதர்களின் வழித்தடத்தை பார்த்து தாமும் Bison களை வேட்டையாடுகின்றன என்று வருந்தினார் பேட்டியாளர்.

ஆண்கள் மட்டுமன்றி பெண்டிரும் இது போன்ற வேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். 
மேலே சொன்னவைகள் அம்மக்களின் உணவு மற்றும் உடைகளுக்கான வாழ்வாதார செயல்கள். 

அடுத்தது, அவர்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்று பார்ப்போமா .... நாய்கள் இழுக்கக்கூடிய Sled வண்டிகள், Jeep , Car , jet skii , Skii plane எனப் பல விதமான பனியில் செல்ல கூடிய வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். 
ஒரு கட்டத்தில், நாம் தற்சமயம் ஆர்டிக் கடலின் மேலே பயணம் செய்து கொண்டிருக்கிறோம் 1-1.5 அடி கீழே கடல் உள்ளது என்பார் காரில் நம் பேட்டியாளரை அழைத்து செல்பவர்.

சுற்றிலும் மனிதர்களே இல்லாத ஓரிடத்தில் தம்முடைய நாய்களுடன் தன்னந்தனியாக ஒரு வீட்டில் வசிக்கிறார் ஐரோப்பாவிலிருந்து அங்கு வந்து தங்கியிருப்பவர். 
தனக்கு வேண்டிய சாமான்களுக்கு “Email” அனுப்புவாராம்  skii plane ல் வந்து supply செய்கிறார்கள், Cheeros , Coke , kitchen towel என எது கேட்டாலும். 

 பருவ நிலை நன்றாக இருந்தால் மட்டுமே அந்த பகுதிக்கு விமானத்தில் செல்ல முடியும் என்கிறார் விமானி .சுற்றிலும் பனி . அவர் ஒருவரே 23 வருடங்களாக அங்கு வசிப்பதாக கூறுகிறார். 

தனியாக இருப்பது அவருக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். 6-7 மணி நேரங்கள் மட்டுமே வெளிச்சம் இருக்கும் நாட்களில் மட்டும் கொஞ்சம் boring ஆக இருக்கும் என்றார். சுற்றிலும் பணியும் அங்கே வசிக்கும் விலங்குகளும் மட்டுமே. இவரது வீட்டின் உள்ளே இருக்கும் வசதிகள் நகரத்திலுள்ள வீட்டை விட சிறப்பாக உள்ளது குறிப்பிடத்த்தக்கது. (எப்படி அத்தனை பொருட்களை அந்த பனிசிகரத்துக்கு எடுத்து சென்று வீட்டை கட்டி இத்தனை வசதிகளையும் செய்து கொண்டார்?)

Mt Logan இங்கே உள்ள உயரமான சிகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர் Dawson . 1860-1890 களில் தங்கம் தேடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாரிசுகள் இன்று இந்த ஊரில் தங்கியுள்ளார்கள். 
Dawson ல் அமைந்துள்ள வீடுகள் permafrost வகையை சார்ந்தவை. (a thick subsurface layer of soil that remains frozen throughout the year, occurring chiefly in polar regions.)
பனி படர்ந்த மலைகளின் ஊடே அமைந்த Golden Stairs எனப்படும் பாதையின் வழியே மக்கள் பயணித்து, வழியில் பலரும் செத்து மடிந்து, தங்கம் புதைந்துள்ள சுரங்கங்களை அடைந்து தங்கத்தை வெட்டி எடுத்தார்களாம். தற்சமய 1800 பேர் வசிக்கிறார்கள். -30  யிலிருந்து -50 வரை வெப்ப நிலை மாறும் இடம் இது.

தங்க சுரங்கங்களுக்கு செல்லும் வழியில் அந்நாளில் மக்கள் கட்டிய சர்ச் (Bennett  Church) இன்றளவும் உள்ளது. அம்மக்களின் வீடுகள் எதுவும் இல்லை.  
வருடத்தின் 6 மாதங்கள் மட்டுமே இன்றளவும் தங்க சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். மீதி 6 மாதங்கள் கடும் குளிர். 

 பேட்டியாளர் :  -10 டிகிரி குளிராக இருக்கிறதே நீங்கள் எப்போது gloves அணிவீர்கள் ?
அந்த ஊரில வசிப்பவர்:  -30 போகும் போது போட்டுக்கொள்வேன். எப்படியும் -50 டிகிரி போகும் போது உடலை நன்றாக மூடி ஆடை அணிய வேண்டும். இப்போது தேவை இல்லை  
மீன்களை பிடித்து விற்கிறார்கள். குளிர்காலத்தில் மீன்கள் தூண்டிலில் சிக்க 1-2 மணி நேரங்கள் கூட காத்திருக்க வேண்டுமாம்.  பேட்டியாளருக்கு ஆச்சரியம் , எதுக்கு இங்கே சிரமப்படறீங்க ஊருக்குள்ளே வந்துடுங்க என்கிறார் . 

ஊருக்குள்ளே ஒரே மக்கள் கூட்டம், இங்கே இருக்கும் அமைதியும் சுத்தமும் அங்கே இல்லை எனக்கு இது பிடித்திருக்கு 1 மணி நேரம் காத்திருப்பது பெரிய விஷயமே இல்லை என்கிறார் ஒருவர். 

வித்தியாசமான நில அமைப்பு. வித்தியாசமான வாழ்க்கை முறை. இயற்கையின் அற்புதம் . 

இப்படி கூட இந்த பூமியில் ஒரு இடம் உள்ளதா என வியக்க வைத்த நிகழ்ச்சி.

பின் குறிப்பு :  இந்த வீடியோவின் link : 

https://www.youtube.com/watch?v=P5M8lBTuF84

நிகழ்ச்சி பிரஞ்சு மொழியில் இருந்தாலும், அதை புரிந்து கொள்ள மொழி தேவை இல்லை. இந்த பதிவை படித்து விட்டு பார்த்தாலே புரியும்.

Monday, 24 September 2018

19 May 2018

பிரிட்டிஷ் இளவரசர் Harry & Megan திருமணத்தைப்  பற்றிய முன்னோட்டங்கள்  , Transcontinental love , Transatlantic love , மணமகளின் தந்தை திரு Markle திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பது  போன்ற  தலைப்பு செய்திகள், Countdown .... மணி நேரங்கள் என கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பி BBC மற்றும் CNN சானல்கள்   என் ஆர்வத்தை சற்றே தூண்டியதென்னவோ உண்மை.

வழக்கமாக தெரியாத செய்திகளுக்கு கூகுளை துணை தேடும் நான் இம்முறை , அது பற்றி யோசிக்காமல் முகூர்த்த நேரம் (?!) என்ன என்பதை மட்டும் தெரிந்து  கொண்டு தயாரானேன்.(தொலைக்காட்சியில் வேடிக்கை பார்க்கத்தான்).

சரியாக இந்திய நேரப்படி 4.30 க்கு ஆரம்பித்தது திருமண சடங்குகள். (பிரிட்டிஷ் நேரம் 12.00) 

என் கணவரையும் கல்யாணம் பார்க்கலாம் வாங்க என்று தொல்லைப்படுத்தி அருகில் அமர செய்ததும் ஆரம்பித்தது வினாடி வினா.   இந்த வினாடி வினா நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்தது

என் கணவரின் முதல் கேள்வி : (பின்னணியில் ஒலித்து கொண்டிருந்த சங்கீதத்தை கேட்டு ) 
ஏன் அழுவது போல பாடறாங்க ?
நான் : கல்யாண பாடல் பாடிட்டு இருக்காங்க, அழுவது போலவா இருக்கு ?

மணமகன் மற்றும் அவரது சகோதரர் வருகை. (அவர் தான் மாப்பிள்ளை தோழர் Best Man )
இவர்கள் டயானாவின் மகன்கள் தானே
 ஆமாம்
ஏன் இவர்கள் இருவரும் military uniform போட்ருக்காங்க ? கல்யாணத்துக்கு வேற துணி போட்டுக்க மாட்டாங்களா ?
ராஜா வீட்டு திருமணத்தில் military uniform தான் போடுவாங்க .
கல்யாண பையனுக்கு என்ன வயசிருக்கும்? தலையில் முடி குறைவா இருக்கே ?
33 வயசு (15 september 1984)
ஏன் இன்னும் அவங்க வீட்டில் இதனை வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம விட்டு வெச்சிருக்காங்க ?
ஏன் என்று எனக்கு எப்படி தெரியும். 

மணமகள் வருகை .....
5 மீட்டர் நீளமான Head piece உடன் கூடிய அழகிய வெள்ளை நிறத்திலான திருமண உடை *** அணிந்து படியேறி chapal உள்ளே நுழைகிறார். உடன் குட்டி தேவதைகள் போல flower girls & boys .
ஏம்மா எதுக்கு  இவ்வளவு நீள துணி ? தரையை கூட்டிட்டே போகுதே ?
அவர்கள் திருமணங்களில் இதுபோல தான் அணிவார்கள்.
வெள்ளை சல்லா துணியில் தான் தைப்பார்கள் . இந்த துணியின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க சிறப்பு .
(53 Common wealth நாடுகளின் பூக்களுடன் மணப்பெண்ணின் விருப்பத்திற்கிணங்க Winter Sweet மற்றும் California Poppy பூக்களும் Silk Tulle யில் கையினால் எம்பிராய்டரி செய்யப்பட்டது அந்த Head piece என்பதை பிறகு அறிந்து கொண்டேன், நம் கண்ணுக்கு எல்லாமே சல்லா துணிதான்)
ஆமாம், பொண்ணு யாரு எந்த ஊர் ?
Transatlantic Love னு போட்டாங்க, அப்போ அமெரிக்கா. (English Literature பாடங்களில் அதிகம் பயன்படுத்த பட்டிருக்கும் இந்த transatlantic)
Harry marries TV Star Megan Markle is the news headline. (அப்பாடி , அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என கேட்கும் முன்பே சொல்லிவிட்டேன்)
நல்ல வேளையாக அவர்களின் காதல் கதையை கேட்கவில்லை (எனக்கு தெரியாது)
மணப்பெண்ணின் தாயாரை காண்பித்த போது Transcontinental Love என்பதன் பொருள் புரிந்தது .

விருந்தினர்களும் உறவினர்களும் கூடியிருந்த அந்த இடத்தில் எனக்கு எலிசபெத் ராணியம்மா(பாட்டி?!), சார்லஸ் இளவரசர் மற்றும் ஹாலிவுட் நடிகர் George Clooney மற்றும் Amal Clooney யை மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. 

எலிசபெத் ராணியார் Electric பச்சை உடையணிந்து அனைவரிடத்திருந்தும்  தனித்து தெரிந்தார். (ராணியார் மணப்பெண்ணை விட எப்படி பளிச்சென்ற உடை அணியலாம் என்ற விமர்சனத்துக்கு அவரது பதில்: எத்தனை தொலைவிலிருந்து மக்கள் பார்த்தாலும் நான் அவர்களுக்கு தனித்து தெரிய வேண்டும்  நான் ராணியை பார்த்தேன் என்று அவர்கள் அப்போது தான் சொல்ல முடியும் )

Windsor Castle உள்ளே அமைந்திருக்கும் Chapal ல் திருமணம். chapal என்பது சிறிய பிரார்த்தனை கூடம். (Google ல் தேடினால் Chappal - a pair of sandals என்று காட்டுகிறது )

600 பேர் அமரக்கூடிய சிறிய (?!) பிரார்த்தனை கூடத்தில் திருமண நிகழ்வுகள் ஆரம்பித்தன.

வழக்கமான  திருமண நிகழ்வுகள் போல நடைபெற்றது. Vows  சொன்னதும் ஒரு பாடல் , ஒரு speech , மீண்டும் ஒரு திருமண சடங்கு, ஒரு பாடல்  , ஒரு speech , என இதே வரிசையில் ....
எல்லாருக்கும் என்ன பாடல்கள் பாடப்  போகிறார்கள் என்று அச்சடித்து கொடுத்திருந்தார்கள். (இது வழக்கம்) அனைவரும் எழுந்து நின்று படுவார்கள் , பார்த்தோ பார்க்காமலோ.

மணமக்களுக்கு பார்க்காமலே பாட தெரியும் போல(வாயசைத்தார்கள் ?!).... 
புத்தகம் இல்லாமலே பாடறாங்க (என் கணவர்)
இடையில் ஒரு whatsapp பதிவு ....

நான் சார்லஸ் டயானா திருமணத்தை பார்த்தேன் என் மகள் ஹாரி திருமணத்தை பார்க்கிறாள். அதே ஹால் அதே பிரம்மாண்டம். அதே ராணிப்பாட்டி . பெண் வீட்டு "வாத்யார்" கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவி கொண்டிருப்பதாக என் மனைவி சொல்கிறாள்.மணப்பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம். இருந்தாலும் வெட்கப்படுகிறார். அவர்கள் நலமாக இருக்கட்டும் என ஒரு அன்பர் என் நண்பருக்கு அனுப்ப அவர் எனக்கு அனுப்பி இருந்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த இரண்டு குடும்ப பாதிரியார்களின் உபதேசம் கலந்த பேச்சுக்களின் சாரம் : பைபிளை மேற்கோள் காட்டி வாழ்க்கையை அன்புடன் விட்டு கொடுத்தலுடன் புது மணத்தம்பதியினர் வாழ வேண்டும்  மற்றும் இறைவனுக்கு நன்றி கூறுதலும்  ஆகும். (சென்னை மற்றும் திருச்சியில் நான் கலந்து கொண்ட திருமணங்களில் பகவத் கீதையையும் மேற்கோள் காட்டி பேசினார்கள். பகவத் கீதை மதம் சம்மந்தப்பட்ட புத்தகம்  அல்ல அது அனைவராலும் பின்பற்றக் கூடிய வாழ்க்கை நெறி பற்றிய புத்தகம்.)

திருமணம் இனிதே நிறைவுற்றது.  

மணமக்கள் chapal க்கு வெளியில் வந்து தரிசனம் தந்தார்கள் .
[இந்த கவுன் சரியான fitting லேயே இல்லையே கழுத்து சரியாவே தைக்கலையே ?
லண்டனில் உள்ள மிக சிறந்த டிசைனர் தைத்த கவுன் இது ,  அதனுடைய கழுத்து டிசைன் அப்படி]

பிறகு மணமக்கள் குதிரைகள் பூட்டிய  சாரட்டு வண்டியில் Windsor சாலைகளில்   ஊர்வலம் வர சாலையின் இரு ஓரங்களிலும் காலை 6 மணியிலிருந்து காத்திருந்த (உனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா ? பிபிசி காலை 6 மணிக்கே ஒளிபரப்பியதை பார்த்தேனே  ..) மக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். மக்கள் இன்றளவும் ராஜ விசுவாசிகளாக இருக்கிறார்கள்.
மோதிரம் மாற்றிக் கொண்டதும் , you may kiss the bride now தவிர்த்து அனைத்து சடங்குகளும் சாதாரணர்களைப் போல தான் நடைபெற்றது. (இல்லை நான் மிஸ் பண்ணி விட்டேனா ?)

விதம் விதமான உடைகள் அதற்கேற்ற வகையில் அலங்கரித்த தொப்பிகள் என விருந்தினர்கள் அணிந்து வந்ததை கண்டபோது, நாம் 1600-1700 களில் வசிக்கிறோமா இல்லை 2018 ல் வசிக்கிறோமா என சந்தேகம் வந்தது.

RICH AND ROYAL.

பின் குறிப்பு:

***சிலவருடங்கள் முன்பு web content writing பணியில் இருந்த சமயம் திருமண உடைகள் பற்றி எழுதும் assignment வந்த போது , நிறைய படிக்க வேண்டி இருந்தது. அதில் சில ... 

 மணப்பெண்ணின் உடை வகைகள் :A-line , Ballgown , Mermaid , Sheath etc  
Veil / Head piece- முகத்தை மூடும் சல்லா துணி மற்றும்
 உடைக்கு பின்புறம் நீண்டு தொங்கும் துணி 
Bridesmaid- மணப்பெண்ணின் தோழி - திருமணமாகாதவராக இருந்தால்  
Maid of  Honor  -மணப்பெண்ணின் தோழி ,திருமணமானவராக இருந்தால் ) 
Best man -மாப்பிள்ளை தோழர்

தொடாதே ....

கடந்த மாதத்தில் ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்ட கேள்வி : அம்மா எனக்கு (எங்களுக்கு ) எந்த வயதில் Good touch bad touch பற்றி கற்றுத் தந்தாய் ? (நான் கற்றுத் தந்தது No Touch) 
நான் : சுமார் 5 வயது இருக்கும் போது 
மகன்: நன்றி அம்மா . மிகவும் பயனுள்ள ஒரு விஷயம் அது.

சிந்தனை சூழலில் சிக்கி மீண்ட போது, அந்நாட்களில் என் பெற்றோர் கற்றுத்  தந்த "No Touch " பற்றிய நினைவுகள் மேலோங்கின . சிறு வயது முதலே இது பற்றி சொல்லித்  தந்து விடுவார்கள். குறிப்பாக யாருடைய வீட்டிற்குள்ளும் செல்லக் கூடாது என்று சொல்லித் தந்தார்கள். ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது நீயும் யாரையும் தொட்டு பேசக் கூடாது என்பதையும்  கற்றுத் தந்தார்கள். எவ்வளவு அன்புக்குரியவராக இருந்தாலும் யார் அழைத்தாலும் அவர்கள் வீட்டிற்குள் பெற்றோருடன் மட்டுமே செல்லலாம் என்பது முக்கியம்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றியதால் நன்மையே . 

மேலை நாடுகளில் பெற்றோர் விவாகரத்து செய்தலும் மறறொருவரை  திருமணம் செய்வதும் , திருமணமாகாமலே கூடி வாழ்வதும் சகஜம். அங்கே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறையாக "Good touch bad touch" ஐ மிகச் சிறிய வயதிலேயே கருத தந்து விடுவார்கள். 

No Touch மறைந்து Good touch bad touch கலாச்சாரம் எப்போது ஆரம்பித்தது என்பது புரியவில்லை .

இந்நாளில் மேலை நாடு நாகரிகத்தை பின்பற்றி வயது வந்த பிள்ளைகளை கூட  கட்டியணைத்து கொஞ்சுதல் சகஜமான ஒன்றாகி விட்டது. இது தொடுதல் பற்றிய புரிந்துணர்வைக் குறைக்கிறது என்றே நான் நினைக்கிறன்.

அந்நாளில் 4-5 வயதானவுடனேயே பெற்றோர் பிள்ளைகளை தேவை இல்லாமல் தொட்டு பேசுதலை தவிர்த்தார்கள். 

ஆணோ பெண்ணோ ,எந்த குழந்தையாக இருந்தாலும் , உடலளவில் ஒதுங்கியும்  உள்ளத்தளவில் மிக  நெருங்கியும்  வளர்த்தல் மிக அவசியம். 

பதின்பருவத்தினை எட்டிய  குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றிய அடிப்படை செய்திகளை அவசியம் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை. (மேலை நாடுகளில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது பற்றி 13 வயதில் கற்றுத் தந்து விடுவார்கள் என்று கேள்வி )

பெண் குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் நெருக்கமாக இருப்பது இயல்பு.(Oedipus complex & Electra complex_ Sigmund Freud ). குழந்தைகள் வளர வளர , அவர்கள் மனம் நோகாத வகையில் புரிய வைத்து "No Touch " பற்றிக் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்றே கருதுகிறேன் . தம்மை தற்காத்துக் கொள்ளக் கற்றுத் தர வேண்டியது முக்கியமானது. (செல்லம்.. இப்போ நீ  வளர்ந்துட்டே ..அப்பாவால் /அம்மாவால் உன்னை மடியில் வெச்சுக்க முடியலை கீழே உட்கார்ந்துக்கோ தங்கம்... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் etc etc )

பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் ஒரு விளம்பரம்.  பெண்களை துன்புறுத்தக் கூடாது , 
அவர்களை மதிக்கவேண்டும் என  உங்கள் மகனுக்கு சிறுவயது முதலே கற்றுக் கொடுங்கள் என்று ஒரு பிரபல பெண்மணி கூறுவார். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான மேற்கண்ட விளம்பரமும் மிக முக்கியமானதே . 

சமீபத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு you tube குறும்படம் "MAA". 

ஒரு பதின்பருவ (Teenage ) மாணவி தன்னுடைய தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்வார். முதலில் அதிர்ச்சியடையும் அந்த தாய், சக மாணவன் தான் காரணம் என்பதை அறிந்து கொள்கிறார். தந்தையாருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்து விடுகிறார். புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்புகிறார். (காலம் கடந்த புத்திமதி ?)

பலவருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு ஆங்கில படம்(பெயர் நினைவில்லை. கதாநாயகி ,பதின்பருவ பெண்,பெயர் ஜூன் ) சக மாணவனால் கர்ப்பமாகி , தந்தையார் எதிர்க்க மாற்றாந்தாய் மகளுக்கு ஆதரவாய் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று குழந்தை பிறக்கும் வரை உடனிருந்து , அக்குழந்தையை தத்து கொடுக்க ஏற்பாடு செயகிறாள். குழந்தையின் தந்தைக்கு எதுவுமே புரிபடாமல் திருதிருவென விழித்தபடி நிற்பார். (தன்னுடைய செயலுக்கான பின்விளைவினை அறிய நேரும் போது  ஏற்படும் குழப்பமான மனநிலை)    
சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் அதே பையனுடன் மைதானத்தில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருப்பாள் . 

இது மேலை நாட்டு கதை என்றாலும் அங்கும் Teenage pregnancy  ஏற்றுக் கொள்ளப்  படாத  ஒன்று. இந்த கதையிலும் "தொடல் " பற்றிய புரிதல் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கு காரணம். 

ஆண்  பெண் சுதந்திரம் என்பது அவசியமான ஒன்றே. அதன் அளவுகோல் என்ன என்பதை பொறுத்தே சுதந்திரம் அமைகிறது என்பதில் ஐயமில்லை .

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் யாரோ ஒரு இளம் பெண் எழுதிய  கட்டுரையை படிக்க நேர்ந்தது.  மனதில் பதிந்த சில கருத்துக்கள் சில. 

நாம் நம் விருப்பபடி ஆடை அணியலாம் . ஆண்கள் சிலகாலம் (?!) முறைத்து பார்ப்பார்கள். பிறகு கண்டு கொள்ள மாட்டார்கள். நாம் யாருடன் வேண்டுமானாலும் நட்பு வைத்து கொள்ளலாம். Live in முறையில் வாழலாம். தேவையான கர்ப்ப தடை சாதனங்களை உபயோகித்தால் போதுமானது. பெண்கள் மது அருந்தலாம். தப்பே இல்லை ... இப்படியே பல கருத்துக்கள் .

இவைகள் அவருடைய சொந்த கருத்துக்கள் . இதை படிக்கும் இளம்பெண்களில் ஒரு சிலருக்காவது இவைகளை நடைமுறை படுத்திப் பார்க்க தோன்றினால் ?? என்ன செய்யலாம் என்று சொல்லி தந்தவர் அதற்கான பின் விளைவுகளையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமோ?

கடந்த சில வாரங்களாக செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை காண்பதை அறவே தவிர்த்து வருகிறேன் .  6 மாத குழந்தை பாலியல் பலாத்காரம், 80 வயது பெண்மணி பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டார் , ஐடி நிறுவன பெண் ஊழியருக்கு டாக்சி ஓட்டுனரால் பாலியல் தொல்லை என்பது போன்ற செய்திகளை தலைப்பு செய்திகளாக காண நேர்வது கொடுமையிலும் கொடுமை. 

6 மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உட்படும் இக்காலகட்டத்தில் , தொடுதல் பற்றிய புரிதல் மிக முக்கியம்.

4 வயது ஆன ஆண் பெண் இருபாலருக்கும்  "தொடுதல்" பற்றிய விவரங்களை கற்றுத்  தாருங்கள். (No Touch தான் சிறந்தது , Good Touch Bad Touch என்று அவசர , ஆபத்து காலங்களில் பாகுபடுத்தி பார்க்க இயலாது.)

ஆடை அணியும் விதம் பற்றியும்  பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே எடுத்துக் கூறுவது முக்கியம். சிறுவயதில் பெற்றோர்கள் கற்றுத் தராத பட்சத்தில் , அரைகுறையாக ஆடை அணிவது தப்பில்லை என்ற கருத்துக்கு சிறுவர்கள் ஆளாகி விடுவார்கள். 4 கண்டங்களை (continents) கண்டு வந்தவள் என்ற முறையில் சொல்கிறேன், எந்த நாட்டிலும் எந்த கண்டத்திலும் திரைப்படங்களில் காட்டுவது போல யாரும் ஆடை அணிந்திருக்கவில்லை பொது இடங்களில் நெருங்கி பழகவில்லை .  

பதின்பருவ குழந்தைகளுக்கு இன்னும் நன்றாக புரியும் வகையில் கற்றுத் தாருங்கள். சுதந்திரம் என்பது உடுத்தும் உடையிலோ தொடுதலிலோ இல்லை என்பதை உணர்த்துங்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பிள்ளைகளுக்கு புரியும் படி விளக்குங்கள். 

பாலியல் வன்முறைக்கான தீர்வு வீட்டிலிருந்து , பெற்றோரிடமிருந்தே தொடங்க வேண்டும். 

வருமுன் காப்போம் .

Good touch or bad touch??

"NO TOUCH"