கடந்த மாதத்தில் ஒரு நாள் என் மகன் என்னிடம் கேட்ட கேள்வி : அம்மா எனக்கு (எங்களுக்கு ) எந்த வயதில் Good touch bad touch பற்றி கற்றுத் தந்தாய் ? (நான் கற்றுத் தந்தது No Touch)
நான் : சுமார் 5 வயது இருக்கும் போது
மகன்: நன்றி அம்மா . மிகவும் பயனுள்ள ஒரு விஷயம் அது.
சிந்தனை சூழலில் சிக்கி மீண்ட போது, அந்நாட்களில் என் பெற்றோர் கற்றுத் தந்த "No Touch " பற்றிய நினைவுகள் மேலோங்கின . சிறு வயது முதலே இது பற்றி சொல்லித் தந்து விடுவார்கள். குறிப்பாக யாருடைய வீட்டிற்குள்ளும் செல்லக் கூடாது என்று சொல்லித் தந்தார்கள். ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது நீயும் யாரையும் தொட்டு பேசக் கூடாது என்பதையும் கற்றுத் தந்தார்கள். எவ்வளவு அன்புக்குரியவராக இருந்தாலும் யார் அழைத்தாலும் அவர்கள் வீட்டிற்குள் பெற்றோருடன் மட்டுமே செல்லலாம் என்பது முக்கியம்.
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றியதால் நன்மையே .
மேலை நாடுகளில் பெற்றோர் விவாகரத்து செய்தலும் மறறொருவரை திருமணம் செய்வதும் , திருமணமாகாமலே கூடி வாழ்வதும் சகஜம். அங்கே பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறையாக "Good touch bad touch" ஐ மிகச் சிறிய வயதிலேயே கருத தந்து விடுவார்கள்.
No Touch மறைந்து Good touch bad touch கலாச்சாரம் எப்போது ஆரம்பித்தது என்பது புரியவில்லை .
இந்நாளில் மேலை நாடு நாகரிகத்தை பின்பற்றி வயது வந்த பிள்ளைகளை கூட கட்டியணைத்து கொஞ்சுதல் சகஜமான ஒன்றாகி விட்டது. இது தொடுதல் பற்றிய புரிந்துணர்வைக் குறைக்கிறது என்றே நான் நினைக்கிறன்.
அந்நாளில் 4-5 வயதானவுடனேயே பெற்றோர் பிள்ளைகளை தேவை இல்லாமல் தொட்டு பேசுதலை தவிர்த்தார்கள்.
ஆணோ பெண்ணோ ,எந்த குழந்தையாக இருந்தாலும் , உடலளவில் ஒதுங்கியும் உள்ளத்தளவில் மிக நெருங்கியும் வளர்த்தல் மிக அவசியம்.
பதின்பருவத்தினை எட்டிய குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றிய அடிப்படை செய்திகளை அவசியம் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை. (மேலை நாடுகளில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது பற்றி 13 வயதில் கற்றுத் தந்து விடுவார்கள் என்று கேள்வி )
பெண் குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் நெருக்கமாக இருப்பது இயல்பு.(Oedipus complex & Electra complex_ Sigmund Freud ). குழந்தைகள் வளர வளர , அவர்கள் மனம் நோகாத வகையில் புரிய வைத்து "No Touch " பற்றிக் கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்றே கருதுகிறேன் . தம்மை தற்காத்துக் கொள்ளக் கற்றுத் தர வேண்டியது முக்கியமானது. (செல்லம்.. இப்போ நீ வளர்ந்துட்டே ..அப்பாவால் /அம்மாவால் உன்னை மடியில் வெச்சுக்க முடியலை கீழே உட்கார்ந்துக்கோ தங்கம்... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் etc etc )
பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் ஒரு விளம்பரம். பெண்களை துன்புறுத்தக் கூடாது ,
அவர்களை மதிக்கவேண்டும் என உங்கள் மகனுக்கு சிறுவயது முதலே கற்றுக் கொடுங்கள் என்று ஒரு பிரபல பெண்மணி கூறுவார். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான மேற்கண்ட விளம்பரமும் மிக முக்கியமானதே .
சமீபத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு you tube குறும்படம் "MAA".
ஒரு பதின்பருவ (Teenage ) மாணவி தன்னுடைய தாயாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்வார். முதலில் அதிர்ச்சியடையும் அந்த தாய், சக மாணவன் தான் காரணம் என்பதை அறிந்து கொள்கிறார். தந்தையாருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்து விடுகிறார். புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்புகிறார். (காலம் கடந்த புத்திமதி ?)
பலவருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு ஆங்கில படம்(பெயர் நினைவில்லை. கதாநாயகி ,பதின்பருவ பெண்,பெயர் ஜூன் ) சக மாணவனால் கர்ப்பமாகி , தந்தையார் எதிர்க்க மாற்றாந்தாய் மகளுக்கு ஆதரவாய் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று குழந்தை பிறக்கும் வரை உடனிருந்து , அக்குழந்தையை தத்து கொடுக்க ஏற்பாடு செயகிறாள். குழந்தையின் தந்தைக்கு எதுவுமே புரிபடாமல் திருதிருவென விழித்தபடி நிற்பார். (தன்னுடைய செயலுக்கான பின்விளைவினை அறிய நேரும் போது ஏற்படும் குழப்பமான மனநிலை)
சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் அதே பையனுடன் மைதானத்தில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருப்பாள் .
இது மேலை நாட்டு கதை என்றாலும் அங்கும் Teenage pregnancy ஏற்றுக் கொள்ளப் படாத ஒன்று. இந்த கதையிலும் "தொடல் " பற்றிய புரிதல் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கு காரணம்.
ஆண் பெண் சுதந்திரம் என்பது அவசியமான ஒன்றே. அதன் அளவுகோல் என்ன என்பதை பொறுத்தே சுதந்திரம் அமைகிறது என்பதில் ஐயமில்லை .
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் யாரோ ஒரு இளம் பெண் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. மனதில் பதிந்த சில கருத்துக்கள் சில.
நாம் நம் விருப்பபடி ஆடை அணியலாம் . ஆண்கள் சிலகாலம் (?!) முறைத்து பார்ப்பார்கள். பிறகு கண்டு கொள்ள மாட்டார்கள். நாம் யாருடன் வேண்டுமானாலும் நட்பு வைத்து கொள்ளலாம். Live in முறையில் வாழலாம். தேவையான கர்ப்ப தடை சாதனங்களை உபயோகித்தால் போதுமானது. பெண்கள் மது அருந்தலாம். தப்பே இல்லை ... இப்படியே பல கருத்துக்கள் .
இவைகள் அவருடைய சொந்த கருத்துக்கள் . இதை படிக்கும் இளம்பெண்களில் ஒரு சிலருக்காவது இவைகளை நடைமுறை படுத்திப் பார்க்க தோன்றினால் ?? என்ன செய்யலாம் என்று சொல்லி தந்தவர் அதற்கான பின் விளைவுகளையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமோ?
கடந்த சில வாரங்களாக செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை காண்பதை அறவே தவிர்த்து வருகிறேன் . 6 மாத குழந்தை பாலியல் பலாத்காரம், 80 வயது பெண்மணி பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டார் , ஐடி நிறுவன பெண் ஊழியருக்கு டாக்சி ஓட்டுனரால் பாலியல் தொல்லை என்பது போன்ற செய்திகளை தலைப்பு செய்திகளாக காண நேர்வது கொடுமையிலும் கொடுமை.
6 மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உட்படும் இக்காலகட்டத்தில் , தொடுதல் பற்றிய புரிதல் மிக முக்கியம்.
4 வயது ஆன ஆண் பெண் இருபாலருக்கும் "தொடுதல்" பற்றிய விவரங்களை கற்றுத் தாருங்கள். (No Touch தான் சிறந்தது , Good Touch Bad Touch என்று அவசர , ஆபத்து காலங்களில் பாகுபடுத்தி பார்க்க இயலாது.)
ஆடை அணியும் விதம் பற்றியும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே எடுத்துக் கூறுவது முக்கியம். சிறுவயதில் பெற்றோர்கள் கற்றுத் தராத பட்சத்தில் , அரைகுறையாக ஆடை அணிவது தப்பில்லை என்ற கருத்துக்கு சிறுவர்கள் ஆளாகி விடுவார்கள். 4 கண்டங்களை (continents) கண்டு வந்தவள் என்ற முறையில் சொல்கிறேன், எந்த நாட்டிலும் எந்த கண்டத்திலும் திரைப்படங்களில் காட்டுவது போல யாரும் ஆடை அணிந்திருக்கவில்லை பொது இடங்களில் நெருங்கி பழகவில்லை .
பதின்பருவ குழந்தைகளுக்கு இன்னும் நன்றாக புரியும் வகையில் கற்றுத் தாருங்கள். சுதந்திரம் என்பது உடுத்தும் உடையிலோ தொடுதலிலோ இல்லை என்பதை உணர்த்துங்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பிள்ளைகளுக்கு புரியும் படி விளக்குங்கள்.
பாலியல் வன்முறைக்கான தீர்வு வீட்டிலிருந்து , பெற்றோரிடமிருந்தே தொடங்க வேண்டும்.
வருமுன் காப்போம் .
Good touch or bad touch??
"NO TOUCH"
No comments:
Post a Comment