Friday, 26 August 2022

ஆஸ்திரேலியப் பயணம் - (பகுதி 1)

April 17 - 27, 2018

Malaysian Airlines /Jet star Airlines

எங்கள் சர்வதேச பயண வரிசையில் ஆறாவது பயணமாக நாங்கள் சென்ற நாடு /கண்டம் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா ஒரு பாலைவனம்; மக்கள் அங்கே அதிகம் வசிப்பதில்லை; ஆறாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்த Great Dividing Range, Great barrier reef, Murray - Darling நதிகள், Canberra, Downs போன்ற சில விவரங்கள் தவிர வேறெதுவும் தெரியாத நிலையில் அந்தக் கண்டத்தை நேரில் காணும் ஆவலில் எங்கள் பெயரையும் பயணப் பட்டியலில் சேர்த்தோம்.

ஐரோப்பாவிற்கு சென்ற அதே நண்பர்கள் குழுவுடன் தான் இந்தப் பயணமும் என்பதால் அதிக சிரமம் இல்லை. வழக்கம் போல கூடிப் பேசி விசா ஏற்பாடு செய்யப் பட்டது. Australian Embassy புது டில்லியில் உள்ளதால் சென்னையில் Biometrics, பாஸ்போர்ட் மற்றும் தேவையான documentsஐ Tata Consultancyயில் தந்தோம். 15 நாட்களில் பாஸ்போர்ட் கையில் கிடைத்தது. விசா என்பது ஒரு தாளில் தனியாக தரப்பட்டது. அமெரிக்க விசாவைப் போல பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படவில்லை.

விமானத்தில் ஒருவருக்கு ஒரு கைப்பெட்டி (7 kg), ஒரு Check in பெட்டி(27 kg) எடுத்து செல்ல அனுமதி உண்டு. எல்லா வெளி நாட்டுப் பயணங்களை போல இதிலும் இலை, தழை, காய், கனி, விதைகள், வெள்ளை நிற பொருட்கள் போன்றவைகளை எடுத்து செல்லக் கூடாது.

ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என கிளம்பும் முன்பே பல முறை எச்சரித்தார்கள்.

ஆஸ்திரேலியா southern hemisphere ல் அமைந்துள்ளதால் பருவ காலங்கள் நமக்கு நேரெதிர்.நவம்பர் - ஜனவரி மாதங்கள் அங்கே வெயிற் காலமாகவும் ஜூன்- ஆகஸ்ட் மாதங்கள் குளிர் காலமாகவும் இருக்கும். [கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட திருமதி. ராஜம்மாள் தேவதாஸ் அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவிற்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் தம் மகனது இல்லத்திற்கு சென்று வருவார். https://en.wikipedia.org/wiki/Rajammal_P._Devadas]

அதிக பட்ச குளிர் என்பது ஒரு டிகிரி(10 பாரன்ஹீட் தான் என ஒரு புத்தகத்தில் படித்தேன். ஏப்ரல் மாதத்தில் பொதுவாக வெப்பநிலை மிதமாக இருக்கும் என்பதால் சுற்றுலா செல்ல சிறந்த மாதம்.

ஆஸ்திரேலியாவிலும் பனி படர்ந்த மலை சிகரங்கள் உண்டென்றாலும் நாங்கள் அங்கே செல்லப் போவதில்லை என்பதால் குளிர் உடைகளுக்கான தேவை இல்லை. சகோதரி கலா தம்பதி மற்றும் என் கணவரின் நண்பர், அவர் மனைவி என மனதுக்கு நெருக்கமானவர்களுடனான பயணம்.

கோலாலம்பூர் வழியாக மெல்போர்ன் நகருக்கு செல்வதாக பயணத் திட்டம்.

ஏப்ரல் 17ஆம் தேதி காலை ஆறரை மணிக்கே சென்னை விமான நிலையத்தில் 50 பேரும் கூடினோம்.

ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் எங்கள் குழு அமைப்பாளர்கள் எங்களுக்கு பயணத்திற்கு உதவும் வகையில் ஏதாவது ஒரு பரிசளிப்பார்கள். இம்முறை விமான நிலையம் சென்ற பிறகே Hooded flannel T shirt மற்றும் வெயில் தொப்பி தரப்பட்டது.

கையில் எடுத்து சென்றிருந்த காலை உணவை உண்டு முடித்து விட்டு 11.30 மணி விமானத்திற்கு Check in செய்ய உள்ளே சென்றோம். 2,630 கிலோமீட்டர் தூர பயணம். (4 மணி நேரங்கள்)

ஒரே குழுவாக சென்றதால் அனைவரும் அருகருகில் அமர்ந்து சென்றோம். பொதுவாக இது போல பயணிப்பவர்கள் அநேகமாக ஊர் சுற்றி பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள். Travel freaks. இருக்கை மாறி அமர்ந்து பேசிக் கொண்டே சென்றோம். எந்தெந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள், இந்தியாவில் எந்தெந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள் அங்கே என்ன சிறப்பு என கூறிக் கொண்டே வந்தார்கள்.

கோலாலம்பூர் செல்லும் வரை எங்களுடன் பயணித்த அங்கே வசிக்கும் இந்திய பெண்மணியுடன் பேசி அந்த ஊரைப் பற்றிய பல செய்திகளை அறிந்தோம். ஜன்னல் ஓர இருக்கையை அவரிடமிருந்து பெற்று மலேசியாவின் ரப்பர் தோட்டங்களை வேடிக்கை பார்த்தேன். பூமத்திய ரேகை அருகில் அமைந்த நாடு என்பதால் மழைப் பொழிவு இங்கே அதிகம். விமானம் தரையிறங்கும் போது மிக அருகில் தெரிந்த கரும்பச்சை நிற ரப்பர்தோட்டங்களும், மரங்களும் கண்ணுக்கு அரிதான காட்சி.

ஒவ்வொரு ஊரிலும் மேகங்களின் அமைப்பு வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதால் நான் ஜன்னல் இருக்கையை தான் எப்போதும் விரும்புவேன் என்று கூறினார் கோலாலம்பூர் பெண்மணி. அது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியாவிட்டாலும் ஜன்னல் இருக்கையிலிருந்து கண்ட மேகங்கள் வித்தியாசமாக இருந்தன. என் Google photos account மதியம் 3.40 மணியளவில் தரையிறங்கியதாக கூறுகிறது.

அடுத்த விமானத்திற்கு இரண்டு மணி நேரங்களே இருந்தன என்பதால் கோலாலம்பூர் விமான நிலையத்தை சுற்றி பார்க்க/சாப்பிட நேரமில்லை. விமானத்தில் உணவு தருவார்கள் என்பதால் ஒரு cone ice cream வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்த விமானத்தில் ஏறினோம். 5.40 மணியளவில் boarding செய்ய சென்றோம்.

Malaysian Airlines விமானத்தில் Kuala Lumpur - Melbourne மார்க்கத்தில் ஒவ்வொரு பயணிக்கும் நாம் முன் கூட்டியே பதிவு செய்தபடி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற உணவு வழங்கப் படுவதில்லை. ஒரு விமானத்திற்கு 25 சைவ உணவு பொட்டலங்கள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.

முன் வரிசைகளில் அமர்ந்திருந்த, அசைவம் என பதிவு செய்த நம் அன்பர்கள் பலரும் இன்று செவ்வா கெளம, கிருத்திகை என ஏதோ காரணம் சொல்லி சைவ உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு விட பின்னால் அமர்ந்திருந்த சைவ உணவு மட்டுமே உண்ணும் பலருக்கும் உணவில்லாமல் போனது. Tour operator ஒரு பெண்மணி. அவரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அவருக்கே 25 சைவ உணவு மட்டும் தான் என்ற செய்தி தெரியாது என நினைக்கிறேன். திருதிருவென விழித்தார்.

காலை விமானத்தில் சாப்பிட்டதோடு வேறு உணவு இல்லை. பசியான பசி, நாகரிகம் அற்ற நம் மனிதர்கள் மேல் கோபம் என பயணமே பிடிக்காமல் போனது.
விமான பணிப்பெண் எங்கள் மீது பரிதாபப் பட்டு Bun, Fruits, Juice என இரண்டிரண்டாக தந்து சாப்பிட சொன்னார். மீண்டும் வேண்டுமென்றாலும் கேட்டு வாங்கி கொள்ள சொன்னார்.

ஏறக்குறைய 8 மணி நேரப் பயணம். வயிற்றுக்குள் உணவு சென்றதும், பயணத்தை அனுபவிக்க தொடங்கினேன்.

இரவு நேரம் என்பதால் அதிக பாதிப்பு இல்லை. வெளியே இருட்டு , வேடிக்கை பார்க்க அவ்வளவாக எதுவும் இல்லை.

விமானத்தில் செல்லும் போது வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது என யோசிப்பவர்களுக்கான என் பதில்: பகலில் சூரியனின் கிரணங்கள் வானில் ஏற்படுத்தும் வர்ணஜாலம், வெள்ளை வெளேரென்ற பஞ்சுப் பொதி மேகங்கள், சூரிய உதயம், கீ.....ழே தெரியும் சிறு கிராமங்கள் பெருநகரங்கள், மலைகள், பாலைவனங்கள், நீண்டு நெளிந்து செல்லும் நதிகள், சூரிய ஒளி பட்டு Pink, Aquamarine, நீலம், பச்சை என வெவ்வேறு வண்ணத் தோற்றம் தரும் நீர் நிலைகள், பனி படர்ந்த மலைகள், சில ஊர்களில் தெரியும் Traffic Signal சிவப்பு பச்சை நிற விளக்குகள் மற்றும் வாகனங்கள், தரையிறங்கும் சமயம் தெரியும் இறக்கையின் மேல் நோக்கிய Flap (Landing gear நன்றாக வேலை செய்கிறது பத்திரமாக தரை இறங்கி விடுவோம்), Runways, பெரிய விமான நிலையங்களில் அருகருகே இடிப்பது போல் வந்து இறங்கும் விமானங்கள், இவை தவிர விமானத்தின் முன், கீழ், வால் பகுதிகளில் பொருத்தப் பட்டிருக்கும் காமெராக்களில் தெரியும் காட்சிகள் என ... என்ன இல்லை?

கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பூமத்திய ரேகையைக் கடந்தோம். (இந்திய நேரப்படி இரவு 9.12) இதுவும் ஒரு புது அனுபவமே. இருக்கையின் முன் உள்ள Inflight entertainment TVயில் பார்த்து தெரிந்து கொண்டேன். விமானம் பூமியின் எந்தப் பகுதியில் பறந்து கொண்டிருக்கிறது, சென்று சேர எவ்வளவு நேரம் ஆகும், என்ன வெப்பநிலை போன்ற தகவல்கள் இதில் தெரியும்.

விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் முன்பாக அந்த நாட்டினைப் பற்றிய சில செய்திகளை அறிந்து கொள்வோம்.

பள்ளி நாட்களில் படித்த ஆஸ்திரேலியா பற்றிய விவரங்களுடன் கூகிள் ஐயனாரின் உதவியையும் பெற்றுக் கொண்டு உங்களுடன் பகிர்கிறேன்.

கண்டம் என்பது மிகப் பெரிய நிலப்பரப்பு. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சில தீவுகளை உள்ளடக்கிய இந்த சிறிய கண்டம் பூமிப் பந்தின் தெற்குக் கோளத்தில் அமைந்துள்ளது.

இதில் ஆறு மாநிலங்கள் உள்ளன. Canberra இதன் தலைநகரம். Australian Dollar உபயோகிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து மீண்ட கண்டம். ஆங்கிலம் பரவலாக பேசப் பட்டாலும் Australian English (Hey Mate! அமெரிக்காவில் Hey Dude!) தான் அதிகம் பேசப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசாங்கம் குற்றவாளிகளை சிறை வைக்க 1700களில் தன்னுடைய காலனிகளில் ஒன்றான வட அமெரிக்காவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. 1770ல் அந்த காலனிகள் United States ஆக மாறியதும் குற்றவாளிகள் கயிறால் கட்டப்பட்டு ஓடாத பழைய கப்பல்களுக்குள் சிறை வைக்கப் பட்டார்கள். சிறு குற்றங்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப் பட்டது.
1788 ல் தாமஸ் குக் என்பார் கண்டு பிடித்த மக்கள் தொகை குறைவான நிலப்பகுதிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் கைதிகளை அடைத்து வைக்கத் தேர்ந்தெடுத்தது.

இன்றளவும் பிரிட்டிஷ் காலனியின் அடையாளங்கள் கொண்ட சென்னை, கொல்கத்தா, மும்பை நகர அமைப்புக்களை போலத் தான் ஆஸ்திரேலிய நகரங்களும் உள்ளன. (Tram, கட்டிடங்கள், பழக்க வழக்கங்கள், சட்டங்கள், கூட்டு ரோடுகளில் ரவுண்டானா, இடது பக்க driving)

இப்படி குற்றவாளிகளாக வந்து சேர்ந்த பல நாட்டவர்களும் அவர்களின் வாரிசுகளுமாக ஆஸ்திரேலியா குடியேறிகளின் நாடாக இருந்தாலும் அங்கேயும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் உள்ளனர். அவர்களின் ஆயுதம் நமக்கெல்லாம் நன்கு தெரிந்த Boomerang. இன்றளவும் பழங்குடியினரின் மொழியில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி ஊர்களின் / சாலைகளின் பெயர்கள் உள்ளதை கண்டோம்.

கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள கண்டம் இது. நடுவில் பாலைவனம், கிழக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் Tropical rain forests,தென் மேற்கில் மலைத் தொடர்கள்(Great dividing range), குளிர் மிகுந்த பகுதிகள், புல்வெளிகள், வட கிழக்கு கடற்கரையில் Great barrier reef எனப்படும் உலகின் மிகப் பெரிய பவழப் பாறைகள் எனப் பலவிதமான நிலை பரப்புக்களை கொண்ட கண்டம் இது.

மழையளவு மிகக் குறைவு, நீர் நிலைகளும் குறைவு என்பதால் தண்ணீருக்கான தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகிறது இங்கே. அரசாங்கமே குறைவான அளவு தண்ணீரை உபயோகிக்க கோரி அறிக்கை விடுகிறது.

இது பற்றிக் குறிப்பிடுகையில் முன்பு ஒரு முறை வெளிநாட்டு சேனல் ஒன்றில் காண நேர்ந்த documentary படத்தை பற்றி பகிர விரும்புகிறேன்.
ஒரு Recreation Vanல் பயணித்துக் கொண்டே தங்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் நாடோடிகள் போல பாலைவன ஊர்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு தம்பதியினரை ஒரு பேட்டியாளர் பேட்டி எடுப்பது போல அமைந்த குறும்படம் அது.

ஆஸ்திரேலியாவில் தண்ணீர் கிடைப்பது அரிது. சிறு Tubல் நீரை நிரப்பி அதிலேயே குழந்தைகளை குளிக்க வைத்து தாங்களும் குளித்து விடுவார்களாம். இது கூட அரிதான நிகழ்வு தான். அந்த நீரை என்ன செய்வீர்கள் என்று பேட்டியாளர் கேட்கிறார். அதற்கு அவர்களின் பதில்: இங்கிருந்து சற்று தொலைவில் ஒரு குடியிருப்பு உள்ளது; இந்த நீரை அங்கே தந்து விடுவோம்; அவர்கள் அதை குடிநீராகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இங்கே தண்ணீர் கிடைப்பதே அரிது. அவர்களுக்கு இது என்ன தண்ணீர் என்று தெரியாது" என்றார்கள் அந்த தம்பதி.

பேட்டியாளர் அதிர்ந்து போய் "What?" என்பதுடன் அந்த படம் முடியும்.

தூக்கமும் விழிப்புமாக (பசி) காலை 7 மணியளவில் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான Melbourne நகரை சென்றடைந்தோம்.

ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் அதிகமாக இருந்தன. ஆங்காங்கே காவலர்கள் துப்பறியும் நாய்களுடன் நடமாடிக் கொண்டே இருந்தார்கள்.

ஆஸ்திரேலிய விசா இரண்டு வருடங்களுக்குள் சென்றால் பல முறை சென்று திரும்பும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. (Multiple entry visa for two years) Paper Visa என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் காகிதத்தை அதிகாரி வாங்கி பரிசோதிக்கவில்லை. Onlineல் ஏற்கனவே இந்தியாவிலிருந்து எங்கள் விசா பற்றிய விவரங்கள் பதிவேற்றப் பட்டிருந்தன.
குடியுரிமை சோதனை(Immigration) முடிந்து ஒவ்வொருவராக குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர்ந்தோம். இருக்கையில் அமர்ந்த படி கண்ணாடி வழியே தெரிந்த சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறக்குறைய ஒரு மணி நேரமாகி விட்டது. எதற்காக காத்திருக்கிறோம் என பொறுமையிழந்து விசாரிக்க ஆரம்பித்தோம்.

ஒரே ஒரு நபர் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை என்றார்கள். மேலும் 30 நிமிடங்கள் கழிந்த பிறகு அவர் வந்து சேர்ந்தார். தாமதம் ஏன் என விசாரித்தோம். என் மனைவி திருஷ்டிக்காக வைத்திருந்த வேப்பிலையை துப்பறியும் நாய் கண்டு பிடித்து பெட்டி மேல் உட்கார்ந்து விட்டது. பெட்டியை சோதனை செய்து என்னை வெளியில் அனுப்ப இவ்வளவு நேரமாகி விட்டது என்றார்.

தடை செய்யப் பட்ட பொருட்களை பெட்டியில் வைத்துக் கொண்டு வராதீர்கள் என பல முறை எச்சரிக்கப் போட்டிருந்தோம்.

அனாவசியமாக தாமதம் ஆனதால் மற்றவர்கள் கடுப்பாகி அவரை திட்ட, ஒரு வழியாக நாங்கள் ஊர் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறி விமான நிலையத்தை விட்டு வெளியேறினோம்.

விமான நிலையத்திலிருந்து நேராக இந்திய உணவகத்திற்கு சென்று மதிய உணவை உண்டு முடித்து நகரை சுற்றி பார்த்து விட்டு மாலை மூன்று மணியளவில் Albert park என்னும் பிரசித்தி பெற்ற பூங்காவின் எதிரில் அமைந்துள்ள Bay View Eden விடுதிக்கு செல்வதாகத் திட்டம்.

ஊர் சுற்றிய பிறகே விடுதிக்கு செல்வோம் என்பதால் விமானத்திலேயே முகம் கழுவி அலங்கரித்துக் கொண்டு தயாராக இருக்க பணிக்கப் பட்டிருந்தோம்.

நகருக்குள் செல்வதற்குள் இந்த நகரினை பற்றிய சில விவரங்களை அறிந்து கொண்டு செல்வோமா ?
1837 ஆம் ஆண்டில் நகரின் 1 * 0.5 கிலோமீட்டர் அளவுள்ள ஒரு பகுதியே தெருக்களாகப் பிரிக்கப் பட்டு Melbourne நகரமாக விளங்கியது. பின்னாளில் மக்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வந்து குடியேற தொடங்கியதும் நகரம் விரிவடைய தொடங்கியது. இந்தப் பகுதியை Hoddle grid என அழைக்கிறார்கள்.

இதனை ஒட்டி அமைந்துள்ள Flinders Street, Spring Street, La Trobe Street மற்றும் Spencer Street ஆகியவை இதன் எல்லைகளாக அமைந்து இந்தப் பகுதி இன்றைய Central Business District ஆக விளங்குகிறது.
இந்தப் பகுதியை தாண்டி சென்றால் அதை Suburbs என்று குறிப்பிடுகிறார்கள். ரயில், பேருந்து மற்றும் டிராம் ஆகியவற்றால் மிக நன்றாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது இந்த நகரம். CBDயில் ட்ராமில் பயணம் செய்ய கட்டணம் தேவை இல்லை என்று கூறப்பட்டது. Suburbs சென்றால் மட்டுமே கட்டணம். இந்நகரின் பரப்பளவு 9,993 சதுர கிலோமீட்டர்கள் என்று விக்கிபீடியா கூறுகிறது.

நகருக்கு நடுவில் யார்ரா (Yarra) நதி பாய்கிறது. நகரில் எங்கு திரும்பினாலும் பூங்கா தான். பச்சைப் பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

19ஆம் நூற்றாண்டில் பசிபிக் பெருங்கடல் பகுதியின் வணிக கட்டமைப்பு நகரங்களாக (Commercial network cities) ஆக அறியப்பட்டவை Melbourne, Sydney, Brisbane, Auckland, San Francisco, Seattle மற்றும் Vancouver ஆகிய நகரங்களே.

ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிப்பிற்குப் புகழ் பெற்ற இந்த நகரம் கட்டிடக் கலையிலும் சிறந்து விளங்குகிறது. கட்டிடக் கலை பற்றி கற்றுத் தரும் பல்கலைக் கழகமும் இங்குள்ளது. உலகின் பல நாட்டவரும் அங்கு சென்று பயில்கிறார்கள். Fashion capital of Australia என இந்த நகரம் அழைக்கப் படுகிறது.

இந்த கண்டத்தின் இயற்கை அமைப்பு காரணமாக pink diamonds மற்றும் opal அபரிமிதமாகக் கிடைக்கிறது. Pink diamonds தற்போது சுரங்கங்களில் மிக அரிதாகத் தான் கிடைக்கிறது.

சரி , நகரை சுற்றி பார்க்கலாமா?

எப்போது குளிரும் எப்போது வெயிலடிக்கும் எப்போது மழை வரும் என இந்நகரத்தின் தட்பவெப்ப நிலை ஊகிக்க முடியாதது எனக் கூறி இருந்தார்கள். நாங்கள் சென்ற தினம் லேசான குளிருடன் மிதமான வெயிலுடன் இருந்தது. ஊர் சுற்றுவதில் சிரமம் இருக்கவில்லை.

விமான நிலையத்திற்கு மிக அருகில் பிரம்மாண்டமான Hotel ParkRoyal உள்ளது. அங்கிருந்து விமான நிலையத்திற்கு நடந்தே செல்லும் வகையில் aerobridge இருப்பது இதன் சிறப்பு. இந்த நகரில் அதிக நேரம் Layover இருந்தால் விமான நிலையத்தில் தங்காமல் இந்த விடுதியில் தங்கி செல்கிறார்கள்.

ஆஸ்திரேலியப் பயணத்தில் குறிப்பிட்டுக் கூறும்படியாக உணவு அமையவில்லை. பாதி நேரம் பசியும் பட்டினியும் தான். ஆயினும் ஆங்காங்கே என்ன உணவு வழங்கப்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.

நகரை சுற்றி பார்ப்பதற்கு முன்பு Toddy என்னும் பெயரில் அமைந்துள்ள இந்திய உணவு விடுதிக்கு சென்று மதிய உணவினை உண்டோம். சாம்பார், ரசம், பொரியல், தயிர் என தென்னிந்திய உணவு கிடைத்தது. Toddy என்றால் கள் என பொருள். விடுதியின் ஒரு பகுதியில் உணவுச் சாலை, மறு பகுதியில் Bar என அமைந்திருந்தது. ஐரோப்பிய பயணத்தில் எங்கள் வழிகாட்டி ஒரு பஞ்சாபி, அதனால் பஞ்சாபி உணவகங்கள். ஆஸ்திரேலியாவில் வழிகாட்டி கேரள மாநிலத்தவர் என்பதால் கேரள உணவகங்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மீண்டும் பேருந்தில் நகர சுற்றுலாப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஆஸ்திரேலியாவின் தலைநகரம் Canberra என்றாலும் அதன் Parliament இந்த நகரின் . Spring வீதியில் தான் அமைந்துள்ளது. அதனருகே இறக்கி விடப்பட்டு வேடிக்கை பார்த்தோம். உள்ளே அழைத்து செல்லவில்லை. அதே Spring வீதியில் Treasury, அதை ஒட்டிய பூங்கா, Parliament பூங்கா என உள்ளன. சிறிது தொலைவு நடந்து வேடிக்கை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். நகரின் முக்கிய தெருக்களில் இதுவும் ஒன்று என்பதால் போக்குவரத்து அதிகம் இருந்தது. சுற்றுலாப் பயணிகளும் நிறைய தென்பட்டனர்.

வழியில் Immigration Museum, The Princess Theatre (Flinders street) போன்ற பிரபல கட்டிடங்களையும் கண்டோம். (இது Panoramic City Tour தான், வழிகாட்டியின் மொழியில். பேருந்தை விட்டு கீழே இறங்கி பார்க்காமல் இருக்கையில் இருந்த படியே வலது பக்கம் பாருங்கள் உயரமான கட்டிடம் தெரிகிறது, மேலே பாருங்கள் விமானம் பறக்கிறது, இடது பக்கத்தில் பூங்கா தெரிகிறது, அடிவானத்தில் வானவில் தெரிகிறது என்ற ரீதியில் வழி காட்டி மைக்கில் கூற நாம் அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாமல், அப்படியே புரிந்தாலும் எதை பார்ப்பது என தெரியாமல் டென்னிஸ் போட்டி umpire போல் கழுத்தை திருப்பி அப்படியும் இப்படியும் பார்ப்பது தான் Panoramic City tour)

வழியெங்கும் விதம் விதமான வித்தியாசமான, புதுமையான வடிவங்களில், நிறங்களில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தென் பட்டன. ஒரு இளம் யுவதி அல்லது யுவனைப் பார்ப்பது போன்ற எண்ணமே ஏற்பட்டது. Melbourne நகரம் கட்டிடக் கலைக்கு பெயர் பெற்றது என்று முன்பே குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

18ஆம் நூற்றாண்டில் தான் இந்த கண்டம் கண்டுபிடிக்கப் பட்டு மக்கள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள் என்பதால் பழமையான கட்டடங்கள் அதிகம் இல்லை. புதுமை தான் எங்கெங்கும்.
வழியில் Yarra நதியின் மேல் அமைந்த பாலங்களும் மிக புதுமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன. இதன் தென் கிழக்கு கரையோரத்தில் Flinders street அமைந்துள்ளது. இந்நதியின் தெற்கு கரையோரம் Melbourne Arts Precinct எனப்படுகிறது. Centre Melbourne – a performing arts complex – and the National Gallery of Victoria போன்ற கலை தொடர்புடைய கட்டிடங்கள் உள்ளன.

இந்த நகரம் பரப்பளவில் சிறியது என்பதால் எங்கள் விடுதியிலிருந்து கிளம்பிய மிக சில நிமிடங்களிலேயே CBD பகுதியை நெருங்கி விட்டோம்.(3 kms) Central Business District என்பது அமெரிக்க நகரின் Downtown போல. நகரின் மையத்தில் அமைந்து முக்கியமான அலுவலகங்கள், கடைகளை கொண்டது. [plazas, bars, and restaurants etc.]

Hoddle Grid ஐ சுற்றிலும் எல்லை போல அமைந்த Flinders Street, Spring Street, La Trobe Street and Spencer Street ஆகியவற்றை சுற்றி வந்தோம். Hoddle Grid இப்போது Melbourne City Centre என அழைக்கப் படுகிறது.

Flinders streetஐ சுற்றி சுற்றி வந்தோம் அங்கிருந்த மூன்று நாட்களும் :). முக்கியமான கட்டிடங்களும் கடைகளும் நிறைந்த வீதி இது. நகரின் முக்கியமான பகுதியில் இது அமைந்திருப்பதால் மூன்று நாட்களும் அந்தப் பகுதியினை கடந்தே தான் செல்ல வேண்டியிருந்தது.

இந்த தெருவில் தான் நகரின் முக்கியமான ரயில் நிலையம் உள்ளது. Dome வடிவ கூரை அமைப்பில் உள்ள இந்த கட்டிடம் நகரின் முக்கியமான சின்னமாக விளங்குகிறது. மெட்ரோ மற்றும் சாதாரண ரயில்கள் கூடும் இடமாக இது உள்ளது.

இது Flinders St & Swanston St ஆகியவை கூடும் இடத்தில் அமைந்துள்ளது. 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிலையம் விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளையும் இணைக்கிறது.

என் தோழியின் மகள் அந்த தெருவிலிருந்து ஐந்து நிமிட பயணத்தில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அது பற்றி அவரும் குறிப்பிடவில்லை எனக்கும் எங்கே எப்போது அழைத்து செல்லப் படுவோம் என்று தெரியவில்லை. தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாத காரணத்தால் அவ்வளவு தொலைவு சென்றும் அவரை சந்திக்க இயலவில்லை. (தொலைவான போது பக்கம் வந்தவள் பக்கம் வந்த போது தொலைவானவள் என்ற திரைப்படப் பாடல் வரிகள் இங்கே சரியாகப் பொருந்தும்)

ஈமெயில், தொலைபேசியில் மிக நேசமுடன் பழகிய மற்றொரு தோழி(?!), உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று தொலை பேசிய போது நான் மூன்று நாட்களும் பிசி என்று கூறினார்.

Flinders தெருவிற்கு சற்றுத் தொலைவில் தான் St.Paul’s Anglican Cathedral அமைந்துள்ளது. Swanson Streetல் அமைந்துள்ள இந்த தேவாலயம் Neo-Gothic முறையில் கட்டப்பட்டது. 1891ம் வருடம் புனித தேவாலயமாக அறிவிக்கப்பட்டது.

பேருந்தை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு எங்களை நடத்தி அழைத்து சென்றார்கள்.

இரட்டைக் கோபுரங்களுடன் விளங்கும் இந்த தேவாலயம் நகரின் குறிப்பிடத் தக்க கட்டடமாக இதன் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது. Neo-Gothic முறையில் கட்டப்பட்டதால் இதன் உட்பகுதி உயரமாக தோற்றமளிக்கிறது.
[Neo Gothic - The Gothic architectural style is most memorably known for its use of strong vertical lines and ability to create a powerful sense of height. Pointed arches were commonly used to embellish windows and entryways].

1858ல் ஆரம்பிக்கப் பட்டு 1939ல் முடிக்கப் பட்டது ஆஸ்திரேலியாவின் "மிகப் பழமையான தேவாலயம்".
இதன் உள்ளமைப்பு வண்ணக் கண்ணாடிகளைக் கொண்டு அமைந்துள்ளது. உள்பக்க நிறம் சற்றே அழுத்தமாக இருந்தது போல தோன்றியது. Brownish ஆக இருந்தது.

[200-300 ஆண்டுகள் தான் இந்தக் கண்டத்தை பொறுத்தவரை பழமை. ஆசியாக் கண்டத்தை பொறுத்த வரை 5,000 ஆண்டுகள் தான் குறைந்த பட்ச பழமையே]

தேவாலயத்தின் உள்ளே மிகப் பெரிய Organ இசைக்கருவி உள்ளது. 1890 ஆம் ஆண்டு T.C. Lewis, Brixton, London என்பவரால் வடிவமைக்கப் பட்டது.

என் கணவர் சென்னை சாந்தோம் சர்ச்சுக்கு சென்றிருக்கிறாயா? அதை விடவா இது பழமையானது,பெரியது,அது, இது என கேள்விகள் கேட்டு நான் உள்ளே வர விரும்பவில்லை என்று கூறிவிட்டார். நான் என் தோழியுடன் உள்ளே சென்று பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன்.

வெளிப்புறத்தில் பச்சை பசேலென்ற தோட்டம், வீதியை அடைய படிக்கட்டுக்கள் என தேவாலயம் அமைந்துள்ளது.

Melbourne விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்க பூமி என்று சொல்லலாம்.

டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்களுக்கு பிரசித்தி பெற்றது இந்த ஊர்.

Australian Open, French Open, Wimbledon (UK) மற்றும் US Open என நான்கு போட்டிகளையும் ஒற்றையர் / இரட்டையர் ஆட்டத்தில் ஒரே வருடத்திற்குள் வென்றால் அவர்/அவர்கள் Grand Slam பட்டம் பெற்றதாக அறிவிக்கப் படுகிறார்/கள். இந்த போட்டிகளைக் நேரில் கண்டு களிக்க உலகெங்கிலிருந்தும் ரசிகர்கள் வருகிறார்கள். [எங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து தாய் நாட்டிற்கு கூட வராமல் போட்டி சமயத்தில் விடுப்பு எடுத்து கொண்டு டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகளை ஐரோப்பா, ஆஸ்திரேலியா என சென்று கண்டு களிப்பார்]

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் Melbourne Park / Olympic Parkல் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. ஒற்றையர், இரட்டையர் என ஆடவருக்கும் பெண்டிருக்கும் தனித் தனிப் போட்டிகள் நடைபெறுகின்றன. பல தரப்பினருக்கும் ஏற்றவகையில் வகையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

Yarra Parkற்கும் "The G" என செல்லமாக ஆஸ்திரேலியர்களால் அழைக்கப்படும் Melbourne Cricket Groundற்கும் இடையில் அமைந்துள்ளது Melbourne park.
Yarra Parkல் எங்களை இறங்கி சென்று Melbourne Parkஐ பார்த்து வர சொன்னார்கள். வெளியிலிருந்து பார்த்தோம். அங்கிருந்து கிளம்பி Swan St பாலத்தைக் கடந்து MCG சென்றோம். எங்களுடன் வந்திருந்த ஆண்கள் திருப்பதி கோவிலை தரிசித்தது போல பரவசப் பட்டார்கள் என்றால் மிகையாகாது .

அதன் வாயிலில் Dennis Lily அவர்களின் உருவ சிலை அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். [யார் இவர் ?!_ பெண்களின் நிலை]

இதன் உள்ளே ஒரு Sports Museum உள்ளது. வழக்கம் போல Museum பக்கம் அழைத்து செல்லவில்லை அமைப்பாளர்கள்.

வழியில் China town தென்பட்டது. Gold Rush எனப்படும் தங்க வேட்டை 1850 களில் விக்டோரியாவில் நடைபெற்றது. அது பற்றி கேள்வி பட்ட சீனர்கள் பெருமளவில் இங்கு வந்து குடியேறியதாக சரித்திரம் கூறுகிறது.

இத்தாலி, பிரான்சு, கொரியா, வியட்நாம் ,இந்தியா உட்பட 200 நாடுகளிலிருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்கள். ஒவ்வொரு ஆஸ்திரேலிய நகரத்திலும் ஒரு Chinatown உள்ளது. வெவ்வேறு நாட்டு உணவு விடுதிகளும், உடைகளுக்கான கடைகளும் உள்ளன.

நாங்கள் தங்கிய விடுதி Hotel Bay View Eden மெல்போர்ன் நகரின் பிரசித்தி பெற்ற Albert parkன் நேரெதிரில் அமைந்துள்ளது. [அவர்களுக்கு இது suburb என்பதால் Free tram கிடையாது]

மெல்போர்ன் நகரை பூங்கா நகரம் என்று அழைக்கிறார்கள். எங்கெங்கு காணினும் பூங்காக்கள் தான். குறிப்பாக இந்த பூங்கா Albert Lakeஐ சுற்றி அமைந்துள்ளது. Rowing, Sailing, Diving என பல activities இங்கே நடை பெறுகின்றன. விரும்புபவர்களுக்கு வகுப்புக்களும் எடுக்கப் படுகின்றன.

ஏரியை சுற்றிலும் மக்கள் நடந்து செல்லும் வகையில் நடை பாதை உள்ளது. Cycling events, செல்லப் பிராணிகளுடனான கூட்டம் போன்ற நிகழ்வுகளும் இங்கே நடைபெறுகின்றன. ஆங்காங்கே மக்கள் ஓய்வாக picnic செய்ய ஏற்ற வகையில் ஒன்பது பகுதிகள் உள்ளன.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த ஏரியை சுற்றிய சாலையில் தான் Australian Grand Prix என்னும் Formula One Car Race நடைபெறுகிறது.


காதல் தேசம் என்ற திரைப்படத்தில் மெல்போர்ன் நகரின் பூங்காக்களை மிக அழகாகப் படம் பிடித்து காட்டி இருப்பார்கள். நான் அவைகளை நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் எண்ணியதில்லை.
விடுதிக்கு செல்வதற்கு முன்பாக பல சிறப்புக்களை கொண்ட இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று Tour Managerஐ நான் வேண்டிக் கொண்டதன் பேரில் அதன் வாயிலில் எங்கள் பேருந்தை நிறுத்தினார்கள்.

அச்சமயம் மதியம் நான்கு மணி இருக்கும். முதல் நாள் முழுவதும் பயணம் ,காலையிலிருந்து உட்காராமல் சுற்றிய அசதி என அனைவருக்கும் அலுப்பான நேரம்.
என்னை தவிர மற்ற அனைவரும் ஹூம் ... இந்த lakeஐ பார்க்கவா இங்கே அழைத்து வந்தீர்கள்; இது போல பல ஏரிகளை பார்த்து விட்டோம்; போதும் விடுதிக்கு போய் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்று கூக்குரலிட்டதும் நேராக விடுதியில் வாசலில் இறக்கி விடப்பட்டோம். இரவு உணவிற்கு மீண்டும் Toddy சென்று திரும்பினோம்.

நாங்கள் சென்ற ஆஸ்திரேலிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் மிகப் உயரமான கட்டிடம் Sky view deck உடன் அமைக்கப் பட்டு மேலடுக்கிலிருந்து ஊரை காணும் வண்ணம் அமைந்திருந்தது. இரவில் வண்ண விளக்குடன் அந்த sky deck தெரிந்தது.

Southern hemisphereலேயே மிக உயரமான கட்டிடம்/அகலமான பூங்கா /அதிசயமான மிருகம் என ஆங்காங்கே விளம்பரம் செய்திருந்தார்கள். Southern hemisphereல் இருப்பதே ஒரு கண்டம் தான். ;) இதை விட்டால் அண்டார்டிகா தான்.

மறுநாள் காலை 11 மணியளவில் தான் ஊர் சுற்றி பார்க்க கிளம்புவோம். 6 - 7 மணிக்குள் காலை உணவு. சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு தயாராக இருங்கள் என்று கூறி சென்றார் எங்கள் வழிகாட்டி. இம்முறை Tour Manager ஒரு பெண்மணி அவருக்கு உதவியாக ஒரு இளைஞர்.

இளைஞர் ஆஸ்திரேலியாவிற்கு வருவது முதல் முறை என்பதால் எங்களை கண்டு கொள்ளவுமில்லை வழி நடத்தவுமில்லை; வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்; மற்றவர்களிடம் தன்னை வைத்து புகைப்படம் எடுத்து தர சொன்னார். இவருக்கு ஊரைப் பற்றியோ நாங்கள் சென்ற இடங்களை பற்றியோ எதுவும் தெரியவில்லை. மேனேஜர் பெண்மணி யாருக்கோ என்னவோ நடக்கிறது என்பது போல உடன் பயணித்தார்.

எங்களுக்கு எப்போதும் போல கூகிள் ஐயனாரே துணை.

ஆஸ்திரேலிய பயணத்தின் முதல் நாளை முடித்த அசதியில் விடுதி அறைக்கு சென்று, WIFI தொடர்பு ஏற்படுத்தி, (யாரும் எங்கள் தகவலுக்காக காத்திருக்கவில்லை என்றாலும்) தகவல்களை பகிர்ந்து கொண்டு, மறுநாள் செல்லப் போகும் இடங்களை பற்றிய தகவல்களை கூகிளில் தேடி படித்து விட்டு, மீண்டும் காலை சீக்கிரம் கண் விழிக்க வேண்டுமே என்ற கவலையுடன் உறங்கினோம்.

அனுபவங்கள் தொடரும்...

























































Wednesday, 10 August 2022

நான்காவது வட அமெரிக்கப் பயணம்

May 7,2017 - January 17,2018

SINGAPORE AIRLINES [Chennai-Singapore-San Franscisco]

இம்முறை மகளது குடும்பம் ஏப்ரலில் இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்து திரும்பி செல்லும் போது நானும் உடன் செல்வதாக திட்டம்.

அமெரிக்காவில் அவர்களுக்கான பயணச் சீட்டுக்களை வாங்கி விடுவார்கள்.

எனக்கான பயணசீட்டை இந்தியாவில் நான் வாங்கி கொண்டேன்.

மகளின் குடும்பம் இந்தியா வரும் நாளும் வந்தது. விமான நிலையத்தில் பல மணி காத்திருப்புக்கு பிறகு அவர்கள் விமானம் கோளாறு காரணமாக ரத்தாகி விட்டது என கூறப்பட்டதால் மறு நாள் கிளம்பும் வகையில் Cathay Pacific Airlinesல் பயணச் சீட்டுக்களை வாங்கி கொண்டு கிளம்பி வந்தார்கள்.

அனைவரும் ஒன்றாக கிளம்பி செல்வதாக தானே ஏற்பாடு? நான் அவர்களுடன் பயணிக்கப் போவதையே அவசரத்தில் மறந்து விட்டு என் பயண நாளான May 6 க்கு அடுத்த நாள் வேறு Airlines ல் பயணிக்க அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் பயணச் சீட்டுக்கள் வைத்திருந்தார்கள்.

அவர்கள் சென்னையில் வந்திறங்கியதும் தான் மற்ற விவரங்கள் தெரிந்தது.   புரிந்தது.

ஏர்லைன்ஸ் மாற்றினால் பண விரயம் என்பதால் உன் பயணத் திட்டப்படி முதல் நாளே கிளம்பி சென்று எங்கள் நண்பரின் வீட்டில் இருந்து கொள்24 மணி நேரங்கள் கழித்து வந்து அழைத்து செல்கிறோம் என்று கூறி  விட்டார்கள்.

தனியாக அதுவும் ஒரு நாள் முன்னதாக போவது பற்றி நான் தயங்கிய போது மகளது கருத்து: அம்மா நீ பல முறை தனியாக பயணித்திருக்கிறாய்; நன்றாக படித்திருக்கிறாய்; ஆங்கிலம்

பேசத் தெரியும் என்ன தயக்கம்?

உண்மை தான்.

இது பற்றி கூறுகையில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் அலுவலக நாட்களில் மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த எங்கள் நிறுவன projectல் வேலை செய்ய சென்னையிலிருந்து என்ஜினீர்களை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டியிருந்தது. அதில் ஒருவர் M.Tech., Gold medalist. [இவரை Mr. B எனக் குறிப்பிடுகிறேன்] ஆறு பேர் கொண்ட குழுவாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். பயண நாளன்று Mr. B மேடம் நீங்களும் விமான நிலையத்திற்கு எங்களை வழியனுப்ப வருவீர்களா? அங்கே எந்த ஊருக்கு செல்ல வேண்டும்? [Employment letter படிக்கவே இல்லை போலும்] யார் வந்து அழைத்து செல்வார்கள்? எப்படி அடையாளம் காண்பது என பல சந்தேகங்கள் கேட்டு துளைத்து விட்டார். அவர்களை இரவு 10 மணிக்கு விமான நிலையம் சென்று வழியனுப்பி விட்டு வந்தேன்.   

சிறிது கால இடைவெளியில் அதே இடத்திற்கு சமையற்காரர் ஒருவரையும் அனுப்பினோம். பயண தினத்தன்று அலுவலகம் வந்த அவர் என்னை சந்தித்து, மேடம் என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை (தனிக் காகிதத்தில் இருக்கும்) கொடுங்கள் என்கிறார்.

என் முன் அனுபவங்களின் அடிப்படையில் அவர் வேறென்ன சொல்ல போகிறாரோ என காத்திருந்தேன்.

பேருந்தில் ஏறி மலேசிய சிங்கப்பூர் எல்லையில் இருக்கும் அந்த இடத்திற்கு சென்று விடுகிறேன் மலேசியா அலுவலக தொலைபேசி எண் மற்றும் விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதி கொடுங்கள். உதவி தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்கிறேன் என்றார். [உங்களுக்கு படிக்க தெரியுமா அண்ணே? தெரியாது மேடம், என் கையெழுத்து மட்டும் போடுவேன் என்றார்]

பயணத்திற்கு படிப்பு அவசியமில்லை சமாளிக்கும் திறமை போதும் என்று எனக்கு புரிய வைத்த சம்பவம் இது.

பயண நாளும் வந்தது. சான் பிரான்சிஸ்கோவில் நம்பர் ஒருவர் வந்து அழைத்து செல்வார் என்று கூறப் பட்டது. முன்பே அறிமுகமான குடும்பம் தான் என்பதால் சிரமம் இல்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்சில் முன்பே பயணித்த அனுபவம் உண்டென்பதால் இரவு 11 மணிக்கு கிளம்பிய விமானத்தில் ஏறி அமைதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் .

இருவர் மட்டும் அமரும் இருக்கையில் ஜன்னல் அருகில் நான். என் அருகில் ஒரு ஆண் பயணி வந்தமர்ந்தார். எந்த சலனமும் இல்லாமல் நான் இருந்ததை பார்த்து, தன்னை ஒரு மருத்துவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். கடலூர் பாண்டிச்சேரி எல்லையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதாக கூறினார்.

Dr:  மேடம் நீங்கள் வேலைக்கு செல்பவரா?

நான்: சில வருடங்கள் முன்பு வரை. ஆனால் தற்போது இல்லை. ஏன் கேட்கிறீர்கள்?

Dr: பொதுவாக தனியாக பயணம் செய்யும் பெண்கள் பயப்படுவார்கள், ஆண்களின் உதவியை நாடுவார்கள், ஆண்களின் அருகில் அமர்ந்து பயணிக்க தயங்குவார்கள்.

நீங்கள் எதற்கும் அசராமல் மிக இயல்பாக இருப்பதால் தான் கேட்டேன்.

நான்: எனக்கு தனியாக பயணம் செய்து பழக்கம் உண்டு. மேலும் பயப்படவோ தயங்கவோ எதுவும் இல்லை.

இப்படி ஆரம்பித்த எங்கள் பேச்சு சிங்கப்பூரை சென்றைடையும் வரை நீடித்தது. அவருக்கு அது முதல் வெளிநாட்டு பயணம். Thoracic medicine conference ஒன்றிற்காக ஷாங்காய் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

திரும்பி வரும் போது அவரது விமானம் பகலில் சிங்கப்பூரை அடைவது போல இருந்தது என்பதால் சிங்கப்பூரின் இரவு நேரக் காட்சியை கண்டு களியுங்கள் அடுத்த விமானத்தில் தூங்குங்கள் என்று கூறி நான் அவரை தூங்கவும் விடவில்லை. :)

சிங்கப்பூர் ஒரு தீவு என்பதால் விமானத்திலிருந்து தெரியும் விளக்குகளுடன் கூடிய சிறு படகுகளும், ஊரின் கட்டிடங்களும் ஜொலித்தன. பகலிலும் அழகாக தெரியும் நகரம் இது.

சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியது. Roll on பெட்டியை இழுத்துக் கொண்டு சான் பிரான்ஸிஸ்கோ விமானம் எங்கே நிற்கிறது என்று தேட ஆரம்பித்தேன். அடுத்த விமானத்திற்கு 3.30 மணி நேரங்கள் இருந்தன.

சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் வீட்டிற்கு தகவல் தர வேண்டுமே என நினைத்து WiFi password எங்கே கிடைக்கும் என தேடினேன். மற்ற விமான நிலையங்களை போல தொலைபேசியை on செய்தாலே WiFi தொடர்பு கிடைக்காது. நம்முடைய பாஸ்போர்ட்டை அதற்கான இயந்திரத்தில் வைத்து ஸ்கேன் செய்தால் தான் password கிடைக்கும். எட்டு மணி நேரங்கள் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் எந்த Gate எந்த விமானம் எந்த ஊர் என விவரங்கள் அடங்கிய Display board அருகில் ஆங்காங்கே ஊழியர்கள் வழிகாட்டுவதற்காகவே நின்று கொண்டிருப்பார்கள். நாங்கள் இறங்கிய டெர்மினலின் கடைசியில் உள்ள Gateல் தான் விமானம் நிற்கிறது என்றார் வழிகாட்டி. கடைசி gate செல்ல சில கிலோமீட்டர்கள் Sky trainல் பயணிக்க வேண்டும்.

அதே விமானத்தில் San Francisco செல்லும் பெண்மணி ஒருவரும் உடன் வந்தார். மருத்துவருக்கும் நான் செல்ல வேண்டிய Gate க்கு அருகில் தான் செல்ல வேண்டியிருந்தது என்பதால் மூவருமாக Sky trainல் ஏறினோம்.அதில் செல்வது முதன்முறை என்பதால் துணையுடன் சென்று விட எண்ணி WIFI password எடுக்காமல் சென்று விட்டேன்.

மருத்துவருடன் தொலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டு பிரியா விடை பெற்றுக் கொண்டு பிரிந்தோம்.[ இன்றளவும் அவருடன் தொடர்பில் உள்ளேன்.]

கடை........சி gate. விமானம் நின்று கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு சிறிது தொலைவில் restrooms மற்றும் குடிதண்ணீர் மட்டுமே இருந்தது. மற்றபடி கடைகளோ, WIFI boothகளோ இல்லை. சுற்றி சுற்றி நடந்து தேடினேன். இருந்த ஒரு boothம் வேலை செய்யவில்லை. குடும்பத்தினரின் தொடர்பு எல்லைக்கு வெளியே 24 மணி நேரங்கள் இருந்தேன் அந்த பயணத்தில்.

உடன் வந்த பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தால் yes, no தவிர எதுவும் பேசவில்லை. யாரும் இல்லாத அந்த gateல் அமைதியாக 3 மணி நேரங்களை கழித்து விட்டு அடுத்த விமானத்தில் ஏறினேன்.

குறிப்பிடும் படியான சம்பவங்கள் எதுவும் இல்லாமல் SFO சென்றிறங்கினேன்.

வரவேற்க வந்த நண்பரது குடும்பத்தினரை எனக்கு முன்பே அறிமுகம் என்பதால் எந்த சங்கடமும் இல்லை. உங்கள் மகன் வீட்டிற்கு வர அனுமதி கேட்பீர்களா அம்மா என்று அன்பாகக் கடிந்து கொண்டார் நண்பர். அருமையாக உபசரித்தார்கள். விமானத்தில் சாப்பிடாமல்?! வந்திருப்பீர்கள் என்று கூறி 5 பேருக்கான உணவை எனக்கு மட்டும் சமைத்து வைத்திருந்தார் அவரது மனைவி. :)

இரவு நன்றாக உறங்கினேன். சென்றிறங்கிய முதல் நாள் பயண அசதியில் தூக்கம் வரும். அதன் பிறகு தான் jetlag ஆரம்பம் ஆகும்.

மகள் அச்சமயம் Cupertino நகரில் Apple நிறுவன அலுவலகங்கள் அமைந்த தெருவுக்கு மிக அருகில் வசித்து வந்தார்.

மகள் குடும்பத்தினரே இல்லாமல் நான் அங்கே ஒரு நாள் முன்பாக சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அந்த பயணத்தின் முக்கிய நோக்கம் கோடை விடுமுறை சமயத்தில் பேரன்களுடன் பொழுது போக்குவது. அவர்களை பகல் முழுவதும் engage செய்வது எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கு சமம். [Intellectual entertainment என சொல்லலாம்] Babysitting இல்லை. சின்ன பேரனுக்கே அந்த சமயம் நான்கு வயதாகி இருந்தது.

அங்கே சென்றிறங்கிய மறுநாளே நண்பரின் மகளது தமிழ் மொழிப் பள்ளியின் ஆண்டு விழா, மதர்ஸ் டே, சம்ஸ்க்ருத பாரதியின் சம்ஸ்க்ருத பள்ளியின் ஆண்டு விழா, திருப்பதி சின்ன ஜீயர் அவர்களால் நடத்தப்படும் JET USA எனப்படும் அமைப்பின் கீழ் நடைபெறும் ஆன்மீக வகுப்பு பள்ளியின் ஆண்டு விழா, ராமானுஜரின் 1000 ஆவது பிறந்த நாள் விழா[ஸ்ரீ ராமானுஜர் ஷ்ரீ ழாமானுஜாவானார்] எனப் பல விழாக்களில் பார்வையாளராககலந்து கொண்டேன்.

கலை நிகழ்ச்சிகளில் பேரன்கள் பங்கு பெற்றனர். அது தவிர சின்ன பேரனின் Graduation dayவில் கலந்து கொண்டு, குட்டீஸ்களின் Montessori Montessori where we go everyday ... ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்தோம்.

மகளுக்கு சற்று உடல் நல குறைவு ஏற்பட்ட சமயத்தில் பெரிய பேரனை பக்கத்தில் இருந்த Robotics வகுப்பிற்கு அழைத்து சென்று வந்தேன்.ஐந்து நாட்கள் 9-3 pm வகுப்புக்கள். 300$ கட்டணம். பேரன் கேஷவ் அந்த வகுப்பிற்கு துள்ளிக் குதித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்புவார்.

கடுமையான வெயில் அந்த சமயத்தில். நம் நாட்டை போல அல்லாமல் அங்கே வெயிலின் தன்மை வேறு மாதிரி உள்ளது. அவர்களின் வார்த்தையில் weird. தாகம் அதிகமாக உள்ளது. அந்த ஊரில் வெயில் 100F க்கு போனாலே அரசாங்கம் Heatwave alert அறிவிக்கிறார்கள். நூலகத்தில் A/C உள்ளது அனைவரும் அங்கே வந்து இருங்கள் என ஜீப்பில் அறிவித்து கொண்டே செல்கிறார்கள். [மழைக்கும் இதே போல தான். பத்து துளி சேர்ந்தாற்போல் மழை பெய்தால் Flood alert தரப்படும்]

வீட்டிற்கு பின்புறம் மிகப் பெரிய பூங்கா. ஒரு முறை சுற்றி வர 15-20 நிமிடங்கள் ஆகும். அந்த பகுதியின் அனைத்து வீடுகளும் பூங்காவிற்கு செல்லும் வகையில் அமைந்திருக்கும்.

அங்கே மதியம் 12 மணியளவில் கூட கடும் வெயிலில் sunny sunny என்று மகிழ்ச்சியாக football விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பகுதியில் மாதக் கணக்கில் கட்டி முடிக்கப் படாத நிலையில்  பல வீடுகள் இருந்தன.

நம் நாட்டை போலவே அங்கேயும் கொத்தனார்கள் வீடுகளில் அஸ்திவாரத்திற்கான பள்ளம் தோண்டி விட்டோ அல்லது வேறு வேலைகளையோ பாதியில் நிறுத்தி விட்டு ஆப்பிள் நிறுவன ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்டமான அலுவலகக் கட்டிட வேலைக்கு சென்று விடுவார்கள்.

மாலை பூங்காவிற்கு வரும் நம் நாட்டவர்கள் இது பற்றி கூடிக் கூடிப் பேசுவார்கள்.வீட்டின் பின் பக்க கதவு திறந்தவுடன் பூங்கா ஆரம்பம் என்பதால் நேரம் காலம் இல்லாமல் அந்த பூங்காவிலேயே இருப்போம்

காலையில் ஓரிருவர் மட்டுமே வருவார்கள். மாலையில் தான் 20-30 பேர் வந்து செல்வார்கள். மற்ற நேரங்களில் நம்முடைய சொந்த பூங்கா தான் அது.

கோடைகாலம் என்பதால் இரவு 9 மணி முடிய வெளிச்சம் இருக்கும். மாலை 5 மணியளவில் மக்கள் வர ஆரம்பிப்பார்கள்.

ஆங்கிலம் பிரதானமாக இருந்தாலும் தமிழில் பேசி தெலுங்கில் மாட்லாடி கன்னடத்தில் சொல்பா மாத்தாடி இந்தியில் நை மாலும் சொல்லி அனைவரிடமும் நட்பு பாராட்டினேன்.

பூங்காவின் நடுப்பகுதியில் பிரதி வெள்ளிக்கு கிழமை காலை 8 - 2 மணி உழவர் சந்தை நடைபெறும். காலை 8.30 மணிக்கே சென்று விடுவேன். அச்சமயத்தில் தான் சென்றால் தான் கீரைகள் கிடைக்கும். அங்கு வசிக்கும் சீன மக்கள் கீரைப் பிரியர்கள். ஒவ்வொருவரும் 10 கட்டு வாங்கி செல்வார்கள்.

விதம் விதமான காய்கறிகள், பழங்கள், உணவு பண்டங்கள், ஐஸை சீவி சாயம் சேர்த்து குச்சி ஐஸ் கப் ஐஸாக்கி தருதல், பாப்கார்ன், hotdog என விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக விற்பனை செய்வார்கள்.

வீட்டு வாசலில் ஐந்து வீடுகளுக்கு பொதுவான washer dryer அறை இருக்கும். எங்களது முறை செவ்வாயன்று வரும். காலை 5.30 க்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு தான் முடியும். அது பற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.

பூங்காவுக்கு சென்று சம வயதினருடன் பேசி விட்டு வா அம்மா, மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பார் என் மகள். அநேக நாட்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு மண்டை குடைச்சல் ஏற்பட்டது தான் மிச்சம்.

பகல் முழுவதும் இரண்டு பேரக் குழந்தைகளை கவனித்து விட்டு, மாலையில் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இரவு உணவையும் சமைத்து விட்டு ஓய்ந்து போய் ஒரு தம்பதி பூங்காவிற்கு வருவார்கள். [மருமகள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவார் அவருக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள பச்சடி தான் வேண்டும்]

பார்க் என்று ஒன்று இருக்கிறதோ பாயைப் பிரண்டாமல் இருக்கிறேன் என்பார்  அந்தப் பெண்மணி.

பூங்காவில் காலை வேளைகளில் வர விரும்பிய பெண்மணி ஒருவர், ஒரு வயது பேரக் குழந்தைக்கு காலை 8.30க்கு தான் வாளப் பளம் குடுக்க சொல்றாங்கோ என்பார்.[பெங்களூரை சேர்ந்தவர்]

சிலர் பெற்றோருக்கு Green card /Citizenship வாங்கி தந்துள்ளார்கள். இவர்களால் நினைத்த நேரத்திற்கு இந்தியா வந்து செல்ல முடிவதில்லை. வேரை விட்டு விலகிய விழுதுகளாக இவர்கள் அங்கே வாழ்கிறார்கள். பிள்ளைகள் யாரும் எங்கள் பேச்சை கேட்பதில்லை, நம் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை, பூஜைகள் செய்வதில்லை என பல குறைகள் அவர்களுக்கு.

இப்படி பல கதைகளை கேட்க நேர்ந்தது.

அக்டோபர் ஆரம்பித்தால் ஒவ்வொருவராக இந்தியா கிளம்பி விடுவார்கள். குளிர்காலத்தில் அங்கே இருக்க பெரியவர்கள் விரும்புவதில்லை.

இதையெல்லாம் தாண்டி பங்கஜா என்ற மூத்த பெண்மணி அனைவரையும் அரவணைத்து வழி நடத்துவார். தனி வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு எலுமிச்சம் பழங்களை கொண்டு வந்து தருவார்கள்

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அநேகமாக ஹிந்தி மொழி தெரியவில்லை என்பதால் தங்களுக்குள்ளேயே குழுவாக அமர்ந்து பேசிக் கொள்வார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாருடனும் பேசுவார்கள்.

சீன நாட்டை சேர்ந்த முதியவர்கள் காலை பத்து மணியளவில் இசையுடன் மெல்லிய அசைவுகளுடன் கூடிய நடன உடற்பயிற்சி செய்வார்கள்.

தங்களை தாங்களே கைகளால் உடலின் குறிப்பிட்ட பாகங்களில் அடித்துக் கொள்வார்கள். இது ஒரு வகை மருத்துவம். Self-cure medication methods எனக் கொள்ளலாம்.

https://rationalwiki.org/wiki/Paida_lajin

50க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் கூடி ஒரு நாள் மாலை potluck விருந்துண்டோம். [அம்மா எங்கு சென்றாலும் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்கிறார்_ என் மருமகனது விமர்சனம்]

ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினம். பின்னால் உள்ள பூங்காவில் இரவு ஒன்பது மணி fireworks காண காலை 7 மணியிலிருந்தே மக்கள் கூட தொடங்கி விட்டார்கள். Temporary toilets அமைக்கப் பட்டன. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு முன்பே traffic மாற்றங்களை அறிவித்தார்கள். பல மைல்களுக்கு முன்னால் பார்க்கிங். நடந்து தான் வர வேண்டும். மக்கள் டென்டுகளை அமைத்துக் கொண்டு அங்கேயே உண்டு உறங்கி விளையாடி இரவுக்காகக் காத்திருந்தார்கள். [Fireworks பல மைல்களுக்கு அப்பால் ஓரிடத்தில் என்பது தான் இங்கே செய்தி. பூங்காவில் பாதுகாப்பாக அமர்ந்து காணலாம். ஆங்காங்கே Fire engines நின்று கொண்டிருக்கும்]

8.59க்கு பின் கதவை திறந்து கொண்டு சென்று மிதமான குளிரில் புல்வெளியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்து முதல் நாள் 3000 பேர் கூடினார்களே பூங்கா எப்படி இருக்கிறது என்று பார்த்தேன் .

பளிங்கு போல் சுத்தமாக ஒரு சிறு குப்பை கூட இல்லாமல் இருந்தது. 3000 பேர் கூடிய இடமா என வியப்பாக இருந்தது.

வழக்கம் போல் பூங்காவில் irrigation முறையில் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

May தொடங்கி நண்பரின் MS convocation (San Jose State University), சகோதரி மகளின் பாரத நாட்டிய அரங்கேற்றம் , பள்ளி விழாக்கள், கராத்தே பள்ளியில் பேரனின் Belt வாங்கும் நிகழ்ச்சி, சான் பிரான்ஸஸிஸ்கோ நகரின் அறிவியல் அருங்காட்சியகம் , கணினி அருங்காட்சியகம் என அவ்வப்போது சென்று வந்தோம்.

மகளின் குடும்பம் புது வீடு வாங்க விரும்பிய சமயம். Second hand வீடு தான் என்றாலும் அங்கே வீடு வாங்குவது என்பது நம் நாட்டினை போல இல்லை.

நம் நாட்டில் ஒரே தரகரே வீட்டை விற்க ஏற்பாடு செய்து விட்டு வாங்குபவர் விற்பவர் இருவரிடமும் கமிஷன் பெற்றுக் கொள்வார். அங்கே Buying agent, Selling agent என தனித் தனியாக License பெற்று செயல்படுகிறார்கள்.

எங்களுடைய Buying agent ஒரு தென்னிந்தியர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

வீட்டை விற்க விரும்புபவர் வாங்க விரும்புபவர்கள் வீட்டை சுற்றி பார்க்க வகை செய்யும் Open House எனப்படும் நிகழ்வு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில நடைபெறும் என தங்கள் Agent மூலம் தகவல் அறிவிப்பார்கள். அவர் மற்ற Buying agentகளுக்கு விளம்பரப்படுத்துவார். வாங்க விரும்புபவர்கள் தங்கள் ஏஜென்ட்டுடன் அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். நாம் வீட்டின் உள்ளே சென்று பார்க்கலாம்.

விலை விபரங்களை முன்பே கூறி விடுவார்கள் என்பதால் அமைதியாக பார்த்து விட்டு வரலாம். வீட்டு சொந்தக் காரர்கள் இருக்க மாட்டார்கள். நம் ஏஜென்ட் அவருடைய business card அங்கே வைத்து விட்டு வருவார்.

எங்கள் அனுபவத்தையும் பகிர்கிறேன்.

ஒவ்வொரு வார இறுதி நாளிலும் மதிய உணவுக்கு பின் அனைவரும் கிளம்பி செல்வோம். ஒரே நாளிலே யே 3,4 வீடுகளுக்கு  கூட open house சென்றோம்.

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருந்தது.

ரகசியமாக(?!) வீடு தேடும் படலத்தில் இருந்த சிலரையும் இந்த Open House நிகழ்வுகளில் சந்தித்தோம்.

மாடிப்படியுடன் கூடிய வீடுதான் வாங்க வேண்டும் என்பது பேரன்களின் வாதம். என்ன காரணம் என நான் கேட்டேன். அம்மா அடிக்க வந்தால் மாடிக்கு ஓடி ஒளிய வசதியாக இருக்கும் என்றார்கள். :)

வீடு பிடித்திருந்தால் வீட்டு சொந்தக்காரருக்கு நாம் ஈமெயில் செய்ய வேண்டும். நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, விலை கூடுதலாக இருக்கிறது இத்தனை டாலர்கள் குறைத்துக் கொள்ளுங்கள் என பேரமும் செய்து மெயில் அனுப்பலாம்.

வீட்டு சொந்தக்காரர் நம்முடைய financial credibility சரிபார்த்து விட்டு திருப்தியாக இருந்தால் விற்பனை செய்வார். இல்லையென்றால் முடியாது என பதில் வரும். அவர் கூறிய விலைக்கு குறைவாக நாம் கேட்டாலும் கைமேல் பணம் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவும்  தயங்க மாட்டார்கள்.

இது ஒரு விற்பனை முறை. மற்றது ஏலத்துக்கு விற்பது. Online bidding. தேதி, நேரம் சொல்லி விடுவார்கள். யார் நமக்கு போட்டியாளர் என தெரியாமல் ஏலம் எடுக்கலாம். Highest bidder யாரோ அவருக்கு வீடு சொந்தம்.

சரி , வீட்டை விற்பனை முடிந்தது.

Documentation, பண பரிமாற்றம் எப்படி என பார்ப்போமா?

Bank Paperwork, Registrar office Paperwork அனைத்தும் ஈமெயில் மூலமாகவே நடைபெறுகிறது. நாம் Digital Signature இணைத்து அனுப்ப வேண்டும். 10 நாட்கள் கழித்து தபாலில் அந்த டாக்குமெண்ட் வந்து சேரும்.

கணவனும் மனைவியும் சேர்ந்து தான் வீட்டை வாங்க முடியும். இருவரும் guarantee தர வேண்டும். [அவர்கள் கலாச்சாரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிதல் சகஜம் என்பதால் இந்த ஏற்பாடு]

வங்கிக்கடன் sanction ஆனதும் escrow account ல் அந்த பணம் இருக்கும். [temporary account என வைத்துக் கொள்வோம்]. எல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் Registrar அலுவலக ஊழியர்கள் நம் வீட்டிற்கே நேரில் வந்து நம்மை சந்தித்து, interview செய்து விட்டு, கையெழுத்து வாங்கி செல்வார்கள். Escrow account ல் உள்ள பணம் விற்றவருக்கு மாற்றப்படும்.

வீட்டு பத்திரம் சில நாட்களில் சாதாரண தபாலில் வந்து சேரும். [ஈமெயிலில் முதலில்]

தேடி தேடி பார்த்த வீடுகளில் எதையும் தேர்ந்தெடுக்காமல், திடீரென்று ஒரு நாள் காலை மகளும் மருமகனும் மட்டும் சென்று ஒரு வீட்டை பார்த்து விட்டு அன்று மாலையே நடைபெற்ற online biddingல் பங்கு பெற்று வென்று அந்த வீட்டையே  வாங்கினார்கள்.

நானும் பேரன்களும் பின்னொரு நாளில் அந்த வீட்டிற்கு அழைத்து செல்லப் பட்டோம். அந்த வீட்டின் சொந்தக்காரப் பெண்மணி டிஸ்னி லேண்டில் வேலை செய்தவர் என்பதால் மொத்த வீட்டையும் டிஸ்னி தீமில் அமைத்திருந்தார்.

பொதுவாக வெளி நாட்டவர்கள் use and throw முறையில் தான் பொருட்களை வாங்கி வாழ்வார்கள் என நினைத்திருந்தேன். அந்த வீட்டு ஐயாவும் அம்மாவும் 32 வருடங்களாக நாங்கள் எதையும் தூக்கி எறியவில்லை பழுது பார்த்து உபயோகிக்கிறோம் என்கிறார்கள். வீடு முழுவதும் சாமான்கள், ஜன்னல் வழியாக வெளிச்சமே வராத அளவுக்கு எங்கெங்கு காணினும் சாமான்கள். ஒற்றையடி நடை பாதை மட்டுமே வீடு முழுவதும். [நாம் வருவதாக சொன்னதால் இன்று வீட்டை சுத்தப் படுத்தி இருக்கிறார்கள் அம்மா என்றார் என் மகள்]

வீட்டை சுற்றிலும் பூச்செடிகள். எதிரில் மலைத் தொடர் என அழகான சுற்று சூழலுடன் கூடிய வீடு.

ஜூலை இறுதியில் வீட்டு பதிவு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் மாத மத்தியில் பள்ளிகள் திறக்கும் முன்பாக புது வீட்டிற்கு அருகில் பேரன்களை சேர்க்க  வேண்டிய வேலை அடுத்ததாக வந்தது.

இடையில் ஒரு வாரம் இரண்டு மணி நேர பயணத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்லக் கிளம்பினோம். வழியில் விபத்து காரணமாக கிராம சாலைகளின் வழியே செல்ல நேர்ந்தது  ஆடு, கோழி,குதிரை, பன்றி, மாடு என சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. வழியெங்கும் ஜீன்ஸ் அணிந்த விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு lakeல் நாமே காலால் பெடல் செய்யும் வகையிலான அன்னப்பட்சி வடிவ படகில் ஏறி கிளம்பினோம். நடுப்பகுதி வரை சென்று விட்டோம். பெடல் செய்து மீண்டும் கரைக்கு திரும்பி வருவதற்குள் என் pulse மிக அதிகமாகி நடக்க சில நிமிடங்கள் ஆனது. சிரமங்களுக்கிடையில் சென்றதால் எந்த ஊருக்கு சென்றோம் என்பது கூட என் நினைவில் இல்லை.

நம் நாட்டை போல Electric connection வீட்டை வாங்கியவர் பெயரில் தான் இருக்க வேண்டும். வீட்டை விற்றவர் காலி செய்ய ஒரு மாத அவகாசம் கேட்டிருந்தார். EB யில் மருமகனின் பெயர் இருந்தால் தான் address proof ஆகப் பள்ளியில் தர முடியும். ஒரு மாதம் ஆனதும் ஒரு நாள் காலை மருமகன் EB அலுவலகத்திற்கு தொலைபேசி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். காலை 10 மணிக்கு websiteல் பார்த்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இங்கே வீடு வாங்கிய போது என்ன செய்தோம் என நினைக்காமல் இருக்க முடியவில்லை. இன்றளவும் இதே நிலை தான்.

10 மணிக்கு பள்ளிக்கு சென்று application பதிவு செய்தோம்.

புது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் சின்ன பேரனுக்கு சற்று தொலைவில் பெரிய பேரனுக்கும் சேர்க்கை நடந்தது.

ஒரு section க்கு 24 மாணவர்கள் மட்டுமே.



பள்ளி வகுப்புக்கள் பருவ காலங்களுக்கு ஏற்ப air conditioner உடன் அமைந்துள்ளன. தற்போது கொரோனா காரணமாக sanitizerஆல் கையை சுத்தம் செய்வதும் மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியும் எப்போதுமே அங்கே பின்பற்றப் படும் பழக்கம் தான்.

அரச பள்ளிகளில் சேர்ந்து படிப்பது அங்கே கௌரவத்திற்குரிய ஒரு செயலாகக் கருதப்படுகிறது.

வகுப்பறைகளை எண்களைக் கொண்டு வகைப்படுத்துகிறார்கள். சின்ன பேரன் அரை எண் 3, பெரியவன் 12

மதிய உணவு உண்ணவும் தனியாக பெரிய இடம். அங்கே அறை எங்களுடன் கூடிய பெஞ்சுகள்.

வருட ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் voluntary service செய்யும் எண்ணம் உடையவர்களாக இருந்தால் பதிவு செய்ய கோருகிறார்கள்.

பள்ளி நேரத்தில் அவரவர் குழந்தை படிக்கும் வகுப்பில் ஆசிரியைக்கு உதவலாம், மதிய உணவு நேரத்தில் மேற்பார்வை செய்யலாம், Field trip செல்லும் போது உதவலாம் இப்படி பலவும் உண்டு.

ஆகஸ்டு மாத மத்தியில் பள்ளிகள் தொடங்கி விட்டன. பேரன்கள் இருவருக்கும் வெவ்வேறு பள்ளிகளில் இடம் கிடைக்க, ஆரம்பித்தது அடுத்த ஊர்வலம்.

செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே அக்டோபர் இறுதி நாளில் வரும் ஹாலோவீன் பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விடும். ஆங்காங்கே ஊருக்குள் Pumpkin patch அமைத்து பரங்கிக்காய்களை விற்பனை செய்வார்கள்.

பள்ளிகளில் பரங்கிக்காயை கொண்டு உருவங்களை வடிவமைக்கும் போட்டி வைத்து பரிசளிப்பார்கள்.

நம் ஊரில் கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றுவது அங்கே அக்டோபரில் பரங்கிக்காயைக் குடைந்து அதனுள்ளே மெழுகுவர்த்தியை ஏற்றுவார்கள்.

செப்டம்பரில் புது மனை புகுவிழா என்பதால் பத்து நாட்கள் முன்பே மகளின் மாமனார் மாமியாரும் வந்து சேர்ந்திருந்தார்கள்

Freeway யில் 40 நிமிட பயணம் என்பதால் காலை உணவை கையில் கொடுத்து தகப்பனுடன் காரில் 7.15 க்கே அனுப்பி விட வேண்டும். 11.30 கு சிறியவனுக்கு பள்ளி முடிந்து விடும்.தாயார் அழைத்து வருவார். Car-pooling lane ல் சென்றால் வேகமாக செல்லலாம் நெரிசல் இருக்காது என்பதால் மகளின் மாமனாரும் உடன் செல்வார். வந்து மதிய உணவு உண்டதும் மீண்டும் 2 மணிக்கு பெரியவனை அழைக்க செல்வார். அடுத்து 4 மணிக்கு கராத்தே வகுப்பு. வீட்டுக்கு வந்தால் வாரம் இரண்டு நாட்கள் online பாட்டு வகுப்பு. சிறியவனுக்கு அடுத்த வீட்டில் பியானோ வகுப்பு. [வகுப்பு நேரத்தில் மாஸ்டரின் குட்டி பாப்பாவை நாம் பார்த்து கொள்ள வேண்டும். அவரின் தாயார் பியானோ ஸ்கூல் நடத்துபவர்] இந்த பயணம் தினமும் இரவு 7க்கு முடியும்.

பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு மாறி செல்ல 45 நாட்கள் இருந்த நிலையில் பல அனுபவங்கள். புது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குதல், வீடு புதுப்பித்தல், பேக்கிங் என மகளின் மாமனார் மாமியாருடன் சேர்ந்து அலைந்து சோர்ந்த (கடும் வெயில்) நாட்கள்.

[மருமகன் அவரது தாயாரிடம்: அம்மா cold and hot water இரண்டும் ஒரே குழாயில் வருவது போல் உள்ளது பார்க்க நன்றாக இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வீட்டு பாத்ரூமில் பொருத்திக் கொள்ளுங்கள் வாங்கி தருகிறேன்

அவரது தாயார்: எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீரே வருவதில்லை]

இடையில் நவராத்திரி தினங்கள் வர நட்பூக்களின் வீடுகளுக்கும் அவ்வப்போது சென்று வந்தோம்.

புது மனைக்கு செல்ல வேண்டிய சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வெய்யில் 110F வரை சென்றது. கடும் வெயிலில் மின்சார அடுப்பில் சமையல். வீடே கொதிக்கும். [அட்டை வீடு]

அங்கே AC கிடையாது. Fan கிடையாது. தேவையென்றால் நாம் தான் சொந்தமாக வாங்கி வைத்து உபயோகிக்க வேண்டும்.

10 பேர் அந்த சிறிய அபார்ட்மெண்டில் உறங்கி விழா தினத்தின் காலையில் 3 மணிக்கே எழுந்து இட்லி, பொங்கல், சர்க்கரை பொங்கல், கொத்சு, சட்னி என ஆளுக்கு ஒன்றாக செய்து எடுத்துக் கொண்டு புது வீட்டிற்கு சென்று பூஜைகளை முடித்தோம்

மீண்டும் மாலை நேர பூஜையில் 50 பேர் பங்கெடுத்து கொண்டதால் அவர்களுக்கான உணவுகளையும் வீட்டிலேயே சமைத்தோம். டப்பாக்களில் அவைகளை (புளிசாதம் தயிர் சாதம் கேசரி, சுண்டல், மைசூர்பாகு) போட்டு தயார்
நிலையில்
வைக்க 5 பேர் கொண்ட குழுவாக வேலை செய்தோம். வித்தியாசமான அனுபவம்.

அடுத்த 20 நாட்களில் குடிபெயர்ந்தோம். சாமான்களை சுமாராக அடுக்கி வைத்து விட்டு மறுநாளே கேசவ் கண்ணீர் விட்டு வழியனுப்ப சென்னையை நோக்கிய என் பயணத்தை தொடங்கினேன்.

அனுபவங்கள் தொடரும் ...

பின் குறிப்பு :

நான்காவது வட அமெரிக்க பயண சமயத்தில் எழுதிய பதிவுகளின் link களை இங்கே பதிவு செய்துள்ளேன்

1.WASHING EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/08/blog-post.html?view=flipcard

2.SHOPPING EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/09/blog-post_16.html?view=flipcard

3.AMERICAN SUMMER EXPERIENCE

https://manjooz.blogspot.com/2017/09/blog-post.html?view=flipcard

4.SOCIAL MEDIA EXPERIENCES

https://manjooz.blogspot.com/?view=flipcard

5.BLUE BLOOD – NETFLIX

https://manjooz.blogspot.com/2017/08/blue-blood.html?view=flipcard

6.PEOPLE OF CA

https://manjooz.blogspot.com/2017/08/blog-post_5.html?view=flipcard

7.HOUSE HUNTING

https://manjooz.blogspot.com/2017/08/blog-post_19.html?view=flipcard

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 















WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...