April 18&19, 2016
மீண்டும் ரோம் ...Tiber நதி பாலத்தைக் கடந்தால் ரோம் தானே?
இந்த மைதானம் நகரின் மையத்தில் உள்ளது. அங்கே செல்லும் வழியெங்கும் சாலைகள் பழைய கால கோட்டை கொத்தள மதில் சுவர்களை இடித்து அமைக்கப் பட்டுள்ளன.
இந்த மைதானம் ஓவல் வடிவில் சுண்ணாம்புக் கற்கள், எரிமலைக் கற்கள் மற்றும் கான்க்ரீட் கொண்டு வடிவமைக்கப் பட்ட மிகப் பெரிய மைதானம் ஆகும். இன்றளவும் இது தான் அந்த சிறப்பைப் பெறுகிறது.
முற்காலத்தில் Gladiatorகள் எனப்படும் வாள் வீரர்களை சிங்கங்களுடன் / அல்லது சகவீரர்களுடன் மோத விட்டு போட்டிகள் நடத்தி வேடிக்கை பார்ப்பார்களாம் கொடுங்கோல் ரோமப் பேரரசர்கள் பிற்காலத்தில் கடைகள், பிரார்த்தனைக் கூடம், தங்கும் விடுதிகள், கோட்டை, Quarry எனப் பல விதமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதி சுவற்றில் பல விதமான செடி வகைகளும் இன்றளவும் உள்ளன. பல அழிவுகளைக் கடந்தும் அவைகளில் பெரும்பாலான செடிகள் இன்றளவும் உள்ளன என அறிகிறோம்.
இந்த மைதானத்தில் 50-80 ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம். உலகின் புதிய ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இது உள்ளது.
இந்த பகுதிக்கு மிக அருகில் இருக்கும் Vesuvius எரிமலை வெடித்து சிதறியதால் இந்த மைதானம் இடிபாடுகளை அடைந்ததாக அறிகிறோம்.
இது புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்பதால் கூட்டமாக இருந்தது.
கொலோசியம் அருகிலும் cobblestone தளங்களே உள்ளன. வரிசையில் நிற்கையில் எங்கெங்கும் மக்கள் உபயோகித்து போட்ட cigarette butts கிடந்தன. அந்த பகுதி சுத்தம் செய்யப் பட்டு எவ்வளவு நாளாகி இருந்ததோ?
நான் அந்த நாட்டின் மேலாண்மையைக் குறை கூறிக் கொண்டு இருந்தேன் ஆனால் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் கொரோனா வந்த பிறகு எங்கள் நாடுகள் தூய்மையாக உள்ளன. சுற்றுலா பயணிகளால் தான் குப்பை சேர்கிறது. யாரும் வராமல் இருப்பதால் நகரங்கள் தூய்மையாக உள்ளன என கூறி இருந்தார்கள்.
எங்கள் வழிகாட்டி அனுமதி சீட்டை கையில் தந்து விட்டு நீங்களே உள்ளே சென்று பாருங்கள் என்று கூறி சென்று விட்டார். தரைத் தளத்தில் உயரமான தூண்கள், ஆங்காங்கே மன்னர்களின் இடுப்பளவு சிலைகள், கல்வெட்டுக்கள், நினைவுக் கற்கள் போன்றவைகள் காணப்படுகின்றன.
படிக்கட்டுகளில் ஏறி உயரமான பகுதிக்கு சென்றால் அந்த மைதானத்தின் வடிவமைப்பு துல்லியமாக தெரிகிறது. மேல் தளத்தில் நடந்து முழுவதும் சுற்றி பார்க்கலாம். கீழேயும் இறங்கி சென்று பார்க்கலாம். [Gladiator, Pompeii போன்ற திரைப்படங்களில் இந்த மைதானம் எப்படி உபயோகப் பட்டது என விவரமாக கூறி இருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்]
கீழ்த்தளத்தில் சிறு அறைகளில் சிங்கங்களையும் அடிமைகளையும் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். கொடுங்கோல் மன்னராட்சிகளில் இது போல பல நிகழ்வுகள்.
நாங்கள் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
புகைப்படம் எடுக்கையில் அருகில் கேட்ட வசனம்: ஏங்க ...இது பழைய காலத்து ராஜாக்களின் அரண்மனைங்களா? எனக்கு தெரியாது வா நாம் புகைப்படம் எடுத்துக்கலாம்.
[எங்கள் வழிகாட்டி எதுவும் விளக்கம் கூறாமல் அனுப்பி வைத்ததன் விளைவு மேற்கண்ட வசனங்கள்]
எனக்கு தெரிந்த வகையில் விளக்கி விட்டு நகர்ந்தேன்.
நாங்கள் சென்ற போது சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. முன்பு எப்படி இருந்ததோ அதே போன்ற நிறத்தில் வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள். இன்று நம்மிடம் இருக்கும் தொழில் நுட்பத்திற்கு (Technology) இடிபாடுகளை முழுக்கவே சரி செய்து விட முடியும் அப்படி செய்தால் அது உலக அதிசயமாக இருக்காதே?
கட்டிடக் கலை வளர்ச்சி பெறாத காலத்திலேயே ரோமானிய பேரரசர்கள் கான்க்ரீடைக் கொண்டு அமைத்திருக்கும் இந்த மைதானம் நிச்சயம் உலக அதிசயம் தான். [Jeans திரைப் படத்தில் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்" என ஆரம்பிக்கும் பாடலின் காட்சிகளில் உலகின் ஏழு அதிசயங்களையும் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்]
கொலோசியத்தின் வெளிப்பகுதியில் / அருகில் பல இடிபாடுகள் உள்ளன. ரோமாபுரி கட்டிடக் கலைக்கு சிறப்புப் பெற்றது என்பதை நாம் அறிவோம். பண்டைய நாட்களின் சிறப்பியல்புகளை அந்த இடிபாடுகளில் காண முடிகிறது.
அந்த பகுதியில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து கிளம்பவே இல்லை.
கொலோசியம் அருகில் பேருந்தில் ஏறியதும் முதலில் நான் கண்டது தெருவோர ஓவியர் ஒருவரை. நடைபாதையில் அமர்ந்து Spray paint களால் கொலோசியம் நிலவொளியில், பகலில் எப்படி இருக்கும் என ஓவியமாக வரைந்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மேலும் பல இயற்கைக்கு காட்சிகளையும் சில நிமிடங்களில் அற்புதமாக வரைந்தார்.
நேரமாகிக் கொண்டே இருந்தது. பேருந்து கிளம்பவில்லை.
மீண்டும் பிரச்சினை. என்னவென்று எட்டி பார்த்து விசாரித்ததில் எங்களுடன் வந்த அன்பர் ஒருவர் பாஸ்போர்டைத் தொலைத்து விட்டார் என அறிந்தோம்.
யார் பாஸ்போர்ட்டை தொலைத்தாலும் அவர்களை அதே இடத்திலேயே விட்டு விட்டு மற்றவர்களுடன் பயணம் தொடரும். தொலைத்தவர் தற்காலிக பாஸ்போர்ட் பெற்று மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என அமைப்பாளர்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தார்கள் என இந்தப் பயணக் கட்டுரையின் முதல் பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
அதன்படி அமைப்பாளர்களில் ஒருவரை தொலைத்தவருக்கு உதவியாய் உடன் அனுப்பி, மறுநாள் மாலை மிலன் நகர விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறப் பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பி Trevi என்னும் பகுதியில் அமைந்த 26.3 மீட்டர் உயரமும் 49.15 மீட்டர் அகலமும் உடைய உலக பிரசித்தி பெற்ற நீரூற்றை காண சென்றோம்.
குடிநீரை ரோம் நகருக்குள் எடுத்து வரும் நீர்வழி(aqueduct) ஒன்று இந்த நீரூற்றுக்கு 10 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நீரை கொண்டு வருகிறது.
இதன் பின்னணியில் Palazzo Poli அமைந்துள்ளது. மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் இதனருகில் அமைக்கப் பட்டுள்ளன.
பகலில் Aqua marine நிற பின்னணியில் காட்சியளிக்கும் இந்த பகுதி இரவில் LED விளக்குகளின் உதவியால் ஒளிர்கிறது.
உலகின் மிகப்பெரிய நீரூற்றுகளில் இதுவும் ஒன்று என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகம். இந்த நீரூற்றின் முன்பு திரும்பி நின்று கொண்டு சில்லறை காசுகளை அதனுள் எறிந்தால் மீண்டும் நாம் ரோம் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மக்கள் இது போல நீரூற்றுக்குள் தினமும் சராசரியாக 3000 யூரோக்களை வீசுவதாக கூறப் படுகிறது.
இந்த சில்லரைக் காசுகளை திருடும் முயற்சிகளும் நடைபெறுவதால் கட்டுக் காவலும் உண்டு. இந்த பணமானது ஏழை மக்களுக்கு உதவப் பயன்படுகிறது.
ரோம் நகரை நாங்கள் சுற்றி பார்க்கவே இல்லையே மீண்டும் அங்கே செல்லும் விருப்பம் எனக்கு இருப்பதால் நானும் சில்லரைக் காசை நீரூற்றில் போட விரும்பினேன். என் கணவர் மீண்டும் இங்கே உனக்கு என்ன வேலை, காசு போட வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
நீரூற்று இருக்கும் பகுதி குறுகலானது என்பதால் சுற்றுலா பயணிகளின் வரவால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அருகில் சென்று சிற்பங்களை கண்டு ரசிக்க முடியவில்லை.
சில அடி தொலைவிலிருந்தே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
அங்கிருந்து கிளம்பி இரவு உணவை முடித்துக் கொண்டு Pomezia என்னும் பகுதியில் அமைந்த தங்கும் விடுதிக்கு சென்றோம்.
மறுநாள் பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தைக் கண்டு விட்டு மிலன் நகரின் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மறுநாளுக்கு தேவையான பொருட்களை மட்டும் Roll on பெட்டியில் வைத்து கொள்ளுமாறு கூறப்பட்டது. அதனால் இரவே பெட்டியை ஒழுங்கு செய்து வைத்து விட்டு உறங்கினோம்.
PISA [ April 19,2016]
ஐரோப்பிய பயணத்தின் கடைசி நாள்.
காலை உணவிற்கு பிறகு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை காணப் பயணப் பட்டோம்.
Arno நதி பாயும் இந்த ஊரானது Tuscany பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள University of Pisa பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம்.
8.87 ஏக்கராவில் அமைந்து, சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப் பட்டு, புல்வெளி மற்றும் நடைபாதையுடன் கூடிய Piazza dei Miracoli (Square of miracles) என அழைக்கப்படும் பகுதியில் Pisa Cathedral,Pisa Baptistry ,The Campanile மற்றும் Camposanto monumentale என நான்கு பகுதிகள் உள்ளன.
முதலில் Pisa Baptistry உள்ளது அதற்கு பின்னால் Cathedral, அதன் பக்கவாட்டில் The Campanile, சற்று இடைவெளி விட்டு Camposanto monumentale யும் உள்ளன.
Baptistry என்பது கிருஸ்துவ மதத்தினரால் பின்பற்றப்படும் ஞான ஸ்நானம் என்னும் சடங்கினை செய்யும் இடம். 107.25 மீட்டர் விட்டம் கொண்ட இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய Baptistry ஆகக் கருதப் படுகிறது.
நான் முன்பே குறிப்பிட்டிருந்தபடி ஐரோப்பிய தேவாலயங்களில் மணிக் கூண்டு தனியாக அமைக்கப் படுகிறது நம் நாட்டைப் போல தேவாலயத்தின் Altar எனப்படும் ஊசி முனை கோபுரத்திலோ அல்லது தேவாலய கட்டிடத்தின் முன் பகுதியிலோ அமைக்கப் படுவதில்லை.
ஏழு தளங்களும் 296 படிக்கட்டுகளும் உடைய இந்த கோபுரம் 1173 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பம் முதலே கோபுரம் சாயத் தொடங்கி விட்டது. 50 ஆண்டுகள் கட்டுமானம் நிறுத்தி வைக்கப் பட்டு மீண்டும் தொடங்கப் பட்டது. மீண்டும் நிறுத்தம் மீண்டும் தொடக்கம் என கி.பி 1372 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது.
55.86 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட போதே அஸ்திவார மண்ணின் மிருதுத் தன்மையால் சாயத் தொடங்கி விட்டது. 14ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப் பட்ட போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது .
1990 ஆம் ஆண்டு இந்த கோபுரம் 5.5 டிகிரி இருந்தது.1993-2001 முடிய கட்டிடக் காலை வல்லுநர்களால் சற்றே நிமிர்த்தி வைக்கப் பட்டு தற்சமயம் 3.97 டிகிரி சாய்கோணத்தில் உள்ளது. 90 டிகிரி நேர்கோணத்தில் நிமிர்த்தி வைத்தால் சாய்ந்த கோபுரம் என்ற சிறப்பு காணாமல் போய் விடும் என்பதால் சாய்வாகவே அந்த கோபுரம் பராமரிக்கப் படுகிறது.
சரி...கோபுரத்தின் மேலே ஏறலாமா?
மக்கள் அதிகம் பார்வையிடும் இடம் என்பதால் இந்த கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி சீட்டு வேண்டும். நாங்கள் செல்வதற்கு சில நாட்கள் முன்பு வரை அந்த தேவாலயத்தின் உள்ளே செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. அனுமதி சீட்டு கையில் இருந்தாலும் உள்ளே செல்ல முடியுமா என்ற சந்தேகத்துடனேயே தான் அழைத்துச் சென்றார் வழிகாட்டி. [பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பு நினைவுக்கு வருகிறதா?]
நாங்கள் சென்ற நாட்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டு இருந்ததால் உள்ளே செல்ல முடிந்தது.
அடிவாரத்தில் வரிசையில் நின்று 10 பேர் கொண்ட குழுவாக அனுமத்திக்கப் பட்டு உள்ளே சென்றோம். கோபுரத்தை பற்றிய விவரங்கள், அதன் blueprint, யார் கட்டினார்கள் போன்ற விவரங்கள் அனைத்தும் தரைத் தளத்தில் உள்ளன. அங்கிருந்து பார்த்தால் கோபுரத்தின் மையப்பகுதி தெரிந்தது.
இந்த கோபுரம் முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் (white marble) கட்டப்பட்டுள்ளது.
படிக்கட்டுக்கள் உட்பட சலவை கற்கள் தான். கோபுரம் கட்டி முடிக்கப் பட்டதும் அதன் மேல் தளத்தில் ஏழு (7) மணிகள் நிறுவப் பட்டன. குறுகலான படிக்கட்டுகளில் மேலேறி தேவாலய ஊழியர் ஒருவர் காலை மாலை இருவேளையும் அந்த மணிகளை அசைத்து ஓசை எழுப்புவாராம்.
சலவைக் கல்லால் ஆன படிக்கட்டுகள் (296). என்பதால் மக்கள் நடந்து நடந்து நடுப் பகுதி எப்படி அம்மிக் கல்லில் அரைத்து அரைத்து நடுப்பகுதி குழியாக இருக்குமோ அது போல பள்ளமாக இருந்தது.
பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு ஏற இரும்பு கம்பி பதிக்கப் பட்டு இருந்தாலும் ஒவ்வொரு படிக்கட்டில் காலை வைக்கும் போதும் வழுக்க்க்க்கியது. செருப்பு இல்லாமல் நடக்கவே முடியாது. மிக நிதானமாக மேலேறி ஒவ்வொரு தளத்தின் ஜன்னல் வழியாகவும் அந்த ஊரை வேடிக்கை பார்த்து விட்டு அடுத்த தளத்திற்கு ஏறினோம். [சிறிய ஊர் தான். பழமையான கட்டிடங்கள் தென் பட்டன]
இறங்கவும் இதே படிக்கட்டுக்கள் தான் என்பதால் வழுக்கலுக்கு இடையில் கீழிறங்குபவர்களுக்கும் வழி விட வேண்டிய கட்டாயம்.
ஏழாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்கள் கூடுதல் steep ஆக இருந்தன. ஒரு வழியாக ஏழாவது தளத்தை அடைந்தோம். அங்கே ஆறு மணிகள் ஒரு அளவிலும் ஒன்று மட்டும் பெரியதாகவும் இருந்தன. இந்த மணிகளின் நாதமானது ஆங்கில இசையின் ஏழு ஸ்வரங்களின் ஓசையின் அடிப்படையில் அமைய பெற்றுள்ளன.
தற்போது இந்த மணிகள் ஒலிக்கப் படுவதில்லை. அதன் நாக்குகளை கயிறால் கட்டி வைத்துள்ளார்கள்.
அந்த மணிகளின் அருகே நின்று தொட்ட்ட்டுப் பார்த்து, அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
கீழிறங்கி வந்து கோபுரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருந்தோம். குழு குழுவாக மற்றவர்கள் சென்று வரும் வரை காத்திருக்க வேண்டும் இல்லையா? இங்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தான்.
இதற்கிடையில் வழிகாட்டி என் கையில் அவரது கொடியை தந்து நம் குழுவினரை உன் அருகில் சேர்த்து வைத்துக் கொள் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூறி சென்று விட்டார். (அருகிலேயே இந்திய உணவகம் இருக்கிறது எங்களுக்கு உணவு தயாராக உள்ளதா என பார்க்க சென்றிருப்பார் என நினைக்கிறேன்)
நான் கொடியுடன் இருப்பதைக் கண்ட சக வழிகாட்டிகள் (நம் நாட்டை சேர்ந்தவர்கள்) என்னையும் வழிகாட்டி என்று நினைத்து பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்லி அனுப்பி விட்டு அந்த கோபுரத்தின் வெளிப்புற வேலைப்பாடுகளை கவனித்தேன்.
மூன்று கட்டங்களாக நிறுத்தி நிறுத்தி கட்டப்பட்டதால் சலவைக்கு கல்லின் நிறம் மாறி இருந்தது. ஒவ்வொரு அரசரின் எண்ணங்களும் வெவ்வேறு மாதிரி இருந்துள்ளது. ஒவ்வொரு தளத்தின் வேலைப்பாடுகளும் ஒவ்வொரு விதமாக இருந்தன. பல இடங்களில் பூ வேலைப்பாடுகள் போன்றவைகள் நிறைவு செய்யப்படவில்லை.
எங்கள் குழுவிலிருந்த வயதில் மூத்தவர்கள் மற்றும் மேலே ஏற பயப்படுபவர்களை அக்கா / அண்ணா தைரியமாக போய் விட்டு வாருங்கள், இவ்வளவு தொலைவு வந்து விட்டு மேலேறி பார்க்காமல் போகலாமா என்று ஊக்குவித்து அனுப்பினேன். திரும்பி வந்த பிறகு நீ ஊக்குவிக்காமல் இருந்தால் நாங்கள் இந்த அனுபவத்தை இழந்திருப்போம் என்று கூறினார்கள்.
இதற்குள் வழிகாட்டி வந்துவிடவே கொடியை அவரிடம் தந்து விட்டு விரும்பியவர்களுக்கு கோபுரத்தின் முன்பு நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்து தந்தேன்.
பலரும் Selfie எடுத்துக் கொள்ள விரும்பினார்கள் ஆனால் எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. என் அருகில் வந்து நிற்க வைத்து நான் கேமராவில் வராமல் அவர்கள் மட்டும் இருக்குமாறு selfie எடுத்து தந்தேன். அதை பார்த்து மேலும் சிலரும் வந்து அது போல selfie எடுத்துக் கொண்டார்கள்.
மேற்சொன்னவைகள் முடிய ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் ஆனது. பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை சுற்றி வந்து பாடாத குறை. திருப்தியாக பார்த்து அனுபவித்தேன்.
இந்த Square ன் நான்காவது கட்டிடம் ஒரு Cemetery. அங்கே நமக்கு வேலையில்லை. சுற்றிலும் காம்பௌண்ட் சுவர் உள்ள இந்த பகுதியின் உள்ளேயே அங்கே வேலை செய்பவர்களுக்கான வீடுகள் உள்ளன. இவை தவிர இரண்டு அருங்காட்சியகங்களும் உள்ளன.
Cathedral உள்ளே செல்ல கிருஸ்துவ மதம் சாராதவர்களுக்கு அனுமதி இல்லை. [இந்த தேவாலயத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதைக் காண Google அய்யனாரின் உதவியை நாடவும்]. எங்களுடன் வந்த சில பெண்மணிகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லி உள்ளே சென்று பார்த்து வந்தார்கள். பொய் சொல்லி உள்ளே சென்றாலும் அவர்களின் வழிபாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியாது மேலும் பொய் சொல்ல மனம் வரவில்லை. அங்கிருந்த செக்யூரிட்டியைக் கேட்டோம் அவர் முடியாது என்றதும் அமைதியாக திரும்பி சென்று அமர்ந்து கொண்டோம்.
இந்த தேவாலயத்தின் மணிக் கூண்டு தான் The Campanile எனப்படும் Standing Bell Tower. உலகப் புகழ் பெற்ற பைசா நகரின் சாய்ந்த கோபுரம் என நாம் அறிந்த கோபுரம் தான் இது.
இடையில் ஆங்காங்கே புல்வெளிக்கு இடையே நடைபாதை. சற்று நடந்து பின் பக்க வாசல் வழியாக சென்றால் அருகிலேயே உணவு விடுதி. அங்கே உண்டு முடித்து விட்டு மீண்டும் உள்ளே புகுந்து வாசல் வழியாக வெளியேறி பேருந்தை அடைந்தோம்.
பின் பக்கமாக நடக்கையில் திரும்பி பைசா கோபுரத்தை அருகில் இருந்த மின் கம்பத்துடன் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் எடுத்தேன். கோபுரம் எவ்வளவு சாய்ந்து இருக்கிறது என அதை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
சிறிய ஊராக இருந்தாலும் கலிலியோ போன்ற மேதைகள் வாழ்ந்த ஊர் இது. இந்த baptistry யில் உள்ள விளக்கை பார்த்து தான் கடிகாரத்தின் பெண்டுலம் பற்றிய விவரத்தை கலிலியோ கண்டு பிடித்தார் என்று கூறுகிறார்கள்.
ஐரோப்பிய பயணத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம்.
Milan நகரின் Malpensa International Airportஐ நோக்கி கிளம்பினோம். வழியில் அமைப்பாளர்களில் ஒருவர் ஓட்டுநர் மற்றும் வழிகாட்டிக்கு Tips தர விரும்புபவர்கள் தரலாம் என வசூல் செய்தார் வழியில் ஒரு நிறுத்தத்தில் பயணி ஒருவரின் சிற்றுரையுடன் அவர்களிடம் தரப்பட்டது.
பைசாவிலிருந்து மிலன் நகருக்கு மூன்று மணி நேர பயணம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்தை அடைந்து விட்டோம். மிலன் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது அங்கே எங்கள் ஓட்டுநர் ஒரு sudden break போட்டார். 15 நாள் பயணத்தில் அது தான் முதன் முறை. மைக்கில் 10 முறை மன்னிப்பு கேட்டார்.
எங்களை இறக்கி விட்டு விட்டு பிரியா விடை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னந் தனியாக பேருந்தை ஒட்டிக் கொண்டு ஹாலந்து நாட்டின் The Hague நகரை நோக்கி சென்றார்.
ஐரோப்பாவில் அது நாள் வரை வாங்கிய பொருட்களுக்கான tax refund ஐ விமான நிலையத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி இருந்தார்கள். நாங்கள் ஸ்வரோவ்ஸ்கி நகைகள் வாங்கிய receiptஐ எவ்வளவு தேடியும் Check-in நேரம் வரும் வரை கிடைக்கவில்லை .
பாஸ்போர்ட்டை தொலைத்த அன்பர் தற்காலிக அனுமதி சீட்டுடன் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்.
மீண்டும் அபுதாபியை நோக்கிய பயணம் ஏப்ரல் 19, 2016 ஆம் நாள் ஆரம்பம். அங்கே எங்கள் குழுவிற்கு எட்டு மணி நேர Layover. Muscat வழியாக சென்றவர்கள் எங்களுக்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே சென்னை சென்று சேர்ந்து விட்டார்கள்.
எட்டு மணி நேரத்தில் பசி தான் பிரதானம். சாப்பிட ஒழுங்கான உணவு இல்லை. யார் யாரிடம் என்னென்ன snacks மீதி இருந்ததோ அதை பகிர்ந்து உண்டோம்.
பசியில் தூக்கமும் வரவில்லை. தூங்க சரியான இடமும் இல்லை.
விமான நிலைய நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் தொழுகை நேரங்களில் விமானங்கள் புறப்படுவதில்லை. யாரும் நடமாடுவதில்லை. அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும்.
பெண்களுக்கென தனி பிரார்த்தனைக் கூடங்கள் உண்டு. பிரார்த்தனைக்கு செல்லும் பெண்கள் ரெஸ்ட்ரூம்களில் hand shower உபயோகித்து கை கால் கழுவி கொள்கிறார்கள். வயதான பெண்மணிகள் washbasin குழாயில் காதுகள், மூக்கு, வாய், கண்களையும், கழுவிக் கொள்கிறார்கள். பின் கழுத்தில் சிறு பள்ளம் போன்ற ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தையும் சுத்தம் செய்து கொள்கிறார்கள்.
[இது போல ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் ஐந்து முறை கழுவ வேண்டும் என்று சமீபத்தில் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த ஒரு இஸ்லாமிய நண்பர் கூறினார். கழுத்திற்கு பின்னல் உள்ள பள்ளத்தை சுத்தம் செய்வதால் மூளையின் ஒரு பகுதியான Medulla Oblongata தூண்டப் படுவதாகவும் அவர் கூறினார்.
சைவ மதத்தவர்கள் அந்த பகுதியில் திருநீறும் வைணவ மதத்தவர்கள் திருமண்ணும் வைத்துக் கொள்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் காரணம் என்னவென்று அந்த அன்பர் கூறிய பிறகே தெரிந்தது]
ரெஸ்ட்ரூம்களின் International Standard படி தரையில் ஈரம் இருக்க கூடாது என்பதால் இரு பெண் ஊழியர்கள் ஒவ்வொருவர் உபயோகித்த பிறகும் mop உபயோகித்து துடைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்களுக்கான தொழுகை இடம் எங்கிருக்கிறது என்று வழி கட்டினார்கள். தொழுகை இடத்தின் வாசலில் செருப்புக்களை விட்டு விட்டு உள்ளே செல்ல வேண்டும்.
காவலர்களில் ஆண்கள் வெள்ளை மேலங்கியும் பெண்கள் கருப்பு மேலங்கியும் அணிந்து வித்தியாசமாக இருந்தார்கள்.
கடைகளில் chocolates குறைந்த விலையில் விற்கப் படுகின்றன. ஐரோப்பாவில் அதிக விலையில் விற்கப்படும் chocolates இங்கே சகாய விலையில் கிடைத்தன.
எங்கு சென்றாலும் விமான நிலையத்தில் நானும் என் கணவரும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். விமான நிலையத்தை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்து கொண்டோம்.குறிப்பிட்ட நேரத்தில் விமானம் சென்னையை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் Jain Vegetarian உணவு வழங்கப் பட்டது. அதே வேகவைத்த barley கொத்துமல்லி இலை தூவலுடன், ஒரு bun, fruit salad. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல வேக வைத்த பார்லியை நாங்கள் உண்ணவில்லை (உண்ண முடியவில்லை)
சென்னை வரும் வரை ஐரோப்பிய பயணத்தை ஆசை போட ஆரம்பித்தேன்.
பழமையும் புதுமையும் இணைந்த ஐரோப்பிய கண்டத்தில் பயணித்தது வித்தியாசமான அனுபவம்.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அனுபவத்தை தந்தது என்றால் மிகையாகாது. ஆம்ஸ்டெர்டாம் நகரின் வாய்க்கால்களில் சென்ற படகுப் பயணம் ஒரு விதம் என்றால் வெனிஸ் நகர கொண்டோலா படகு பயணம் மற்றொரு விதம். ஸீன் நதி இரவு படகுப் பயணம் Dreamy. ரைன் நதி படகுப் பயணம் ஆர்ப்பரிப்பு.வடக்கு கடல் கப்பல் பயணம் புதுமை என விதம் விதமான அனுபவங்கள்.
உலக அதிசயங்களை காண நேர்ந்தது அருமையான அனுபவம். தேவாலயங்களும் அருங்காட்சியகங்களும் சிற்பங்களும் ஓவியங்களும் அற்புதமான வேலைப்பாடுகளைக் கொண்ட கட்டிடங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.
நாம் புத்தகங்களில் திரைப்படங்களில் படித்து பார்த்து அறிந்த செய்திகளுக்கும் நேரில் கண்டவைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. பாரிஸில் சாமானியர்கள் கூட High-end fashionable ஆக இருப்பார்கள், வாடிகன் நகரில் பாதிரிமார்களும் கன்யாஸ்த்ரீகளும் தான் இருப்பார்கள் போன்ற myth கள் நேரில் கண்ட போது பொய்யாய் போயின.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார்கள்.
2016ல் நான் கண்ட ஐரோப்பா இன்று இல்லை. Brexit செயல்பாட்டுக்கு வந்து விட்டது. Notre dame எரிந்து விட்டது. பாரிசில் எங்கெங்கும் இலவச குடிநீர் கிடைக்கிறது. Corona என்னும் கொடிய கிருமியின் தாக்கத்தால் உலகமே முடங்கி விட்டது. இப்படி பலப்பல மாற்றங்கள்.
ஏப்ரல் 20, 2016 இரவு 10 மணிக்கு சென்னையில் தரையிறங்கினோம்.
இன்றளவும் நினைவில் நிற்கும் மனதுக்கு இனிய ஐரோப்பிய பயண நினைவுகளுடன் இல்லத்தை நோக்கி சென்றோம்.
முடிவுரை
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாங்கள் 80 பேர் கொண்ட குழுவாக சென்ற ஐரோப்பிய சுற்றுலா பற்றிய பதிவினை சுருக்கமாக அப்போதே முக நூல் மற்றும் என் வலைப்பதிவில் மிக சுருக்கமாகப் பதிவு செய்திருந்தாலும், 2020 ஆண்டில் நண்பர்களின் ஊக்குவிப்பால் என் வெளிநாட்டுப் பயண அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்து வெளியிட ஆரம்பித்தேன்.
ஐரோப்பிய பயணம் குறித்த பதிவுகளை ஒவ்வொரு நாடாக / நாளாக பிரித்து தக்க புகைப்படங்களுடன் விவரங்களுடன் பதிவிட்டுள்ளேன்.
Courtesy:
1. Boarding, Lodging & Transport - Kumaran Travels, Chennai
2. Information - Mr Anuj (Tour Guide), Google & Wikipedia
3. Photos - Self, Mr P.S. Muralidharan, Mr .Ekambaram & Mr .Vinayak
4. Photobook Printing - Mr. Vivek Muralidharan
5. References…………………Google & Wikipedia
Special thanks to my trip financier, my husband Mr. P.S.Muralidharan
காலக் கண்ணாடியை பிரதிபலிக்கும் சிறு துரும்பாக இருக்க என்னைத் தூண்டிய இறைவனுக்குப் பல கோடி நன்றிகள்.
பயணங்கள் மு டி வ தி ல் லை...
No comments:
Post a Comment