Saturday, 11 December 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-10B] [Italy –>Florence->Rome->Vatican

April 17, 2016

மறுநாள் காலை உணவுக்கு பின் Florence வழியாக ரோம் நகரை நோக்கிப் பயணம் ஆரம்பம்.

தினமும் காலை உணவு முடிந்து பேருந்தில் ஏறும் சமயம் உடன் பயணிக்கும் சகோதரிகளை நலம் விசாரிப்பது என் வழக்கம்.

அவர்களும் என்னிடம் விசாரிப்பார்கள். ஒரு சகோதரி நலம் விசாரித்த பொழுது ஏற்கனவே 12 நாட்கள் பயணம் செய்து முடித்து விட்டதில் மிகுந்த களைப்பாக இருக்கிறது என்று கூறினேன். அப்படி சொல்லாதே மஞ்சுளா ...தினமும் காலையில் சுறுசுறுப்பா நீ தயாராகி வருவதை பார்த்து தான் நாங்கள் எங்களை உற்சாகப் படுத்தி கொள்கிறோம் என்றார்கள்.

அன்றைய தினம் பேருந்தில் இரண்டு மணி நேரங்கள் நன்றாக உறங்கி விட்டேன் என எங்கள் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த சகோதரர்கள் கிண்டல் செய்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். போகும் வழியில் இத்தாலியின் மற்றொரு முக்கிய நகரமான Florence (Firenze) நகரைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

ஐரோப்பிய நகரங்கள் அனைத்துமே கட்டடக் கலைக்கும் அருங்காட்சியகங்களுக்கும் தேவாலயங்களுக்கும் புகழ் பெற்றவை என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இத்தாலிய நகரங்கள் ரோம பேரரசின் பகுதியாக விளங்கியவை என்பதால் வரலாற்று சிறப்புடன் கூடியவையும் கூட. ஜூலியஸ் சீசரால் 59 BC ல் தோற்றுவிக்கப்பட்ட பிளாரன்ஸ் நகரமானது (Firenze) இத்தாலியின் Tuscany பகுதியில் அமைந்துள்ள ஊராகும். இது ஒரு சமயம் இத்தாலிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த நகரம் “மறுமலர்ச்சி (Renaissance) நகரம்” என அழைக்கப் படுகிறது.
கலை, கலாச்சாரம், வியாபாரம், பொருளாதாரம் எனப் பல துறைகளிலும் மறுமலர்ச்சியை தோற்றுவித்த நகரம் இது. இதன் சிறப்பு மிக்க கட்டிடக் கலையால் உலகிலேயே மிக அழகான நகரம் என Forbes நிறுவனத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தாலியின் Fashion Capital இந்த நகரம்.

இத்தனை சிறப்புக்களை பெற்ற இந்த நகரினை பறவைப் பார்வையில் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டோம். மதிய உணவிற்கு சற்று முன்னால் ஒரு உயரமான குன்றின் மேலே அமைந்த “மைக்கலேஞ்சலோ பாயிண்ட்” என்னும் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். இது தான் மைக்கலேஞ்சலோ பாயிண்ட்(Michelangelo point) இறங்கி பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறி விட்டு வழிக்காட்டி எங்களை விட்டு தொலைவில் நின்று கொண்டு பேருந்து ஓட்டுனருடன், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் வம்பளந்து கொண்டிருந்தார்.
யார் அந்த மைக்கலேஞ்சலோ என்று சொல்லவில்லை அந்த ஊரின் சிறப்புகளும் எங்களுக்கு சொல்லப் படவில்லை. முன்பே கூகிளைப் பார்த்து அறிந்து வைத்திருந்தேன் என்பதால் என் வரையில் பிரச்சினை இல்லை. கேட்டவர்களுக்கும் விவரம் கூற முடிந்தது.

முதலில் மைக்கலேஞ்சலோ என்பவர் யார் என தெரிந்து கொள்ளலாமா? 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் இத்தாலியின் பிரசித்தி பெற்ற ஓவியர், கவிஞர், சிற்பி மற்றும் கட்டிடக் கலை நிபுணர் ஆவார். புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி இவருக்கு வயதில் சற்றே மூத்தவர். சம காலத்தவர். [Contemporary] பிளாரன்ஸ் நகரின் கதீட்ரலில் வைப்பதற்காக டேவிட்டின் சிலையை செய்யுமாறு மைக்கலேஞ்சலோ பணிக்கப் பட்டார். இந்த திட்டம் 40 வருடங்கள் ஆகியும் முடியாமல் இருந்த நிலையில் இவரிடம் வழங்கப் பட்டது. இந்த டேவிட் யார் என்பதும் நமக்கு தெரியும், இருந்தாலும் சற்றே நினைவு கூர்வோம்.

பைபிளில் வரும் ஒரு கதையில் டேவிட் மற்றும் கோலியாத் இருவரும் போரிடுகிறார்கள். கோலியாத் பல ஆயுதங்களுடனும் டேவிட் ஐந்து கற்கள் மற்றும் உண்டி வில்லுடனும் கடவுளின் கிருபையால் கோலியாத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுகிறார். [சுப்பாத்தா டீச்சரின் வர்ணனையில் ஏழாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியின் ஒரு பகுதியாக இந்தக் கதையை படித்துள்ளேன்] மைக்கலேஞ்சலோ செதுக்கிய சிற்பம் இன்றளவும் பிளாரென்ஸ் கதீட்ரலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு முக்கோணமாக மூலையில் உயரமான இடத்தில் வைக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி அமைக்கப் பட்ட சிலை இது.
டேவிட்டின் தலை பெரியதாகவும் கால் பகுதிக்கு வரும் போது குறுகலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தலையை மேலே தூக்கி அண்ணாந்து பார்க்கையில் மொத்த சிலையும் ஒரே அளவில் தான் தெரியும் என்பது இதன் சிறப்பு.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், டேவிட் போருக்கு செல்லும் முன் வீரத்துடன் கை நரம்புகள் புடைக்க நிற்பது போல மைக்கலேஞ்சலோ கற்பனை செய்து வடிவமைத்திருக்கிறார். டேவிட்டை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து சிலை வடித்திருக்கலாம் ஆனால் இது போல அற்புதமாக வித்தியாசமாக யோசித்தார் என உலகம் இன்றளவும் வியக்கிறது. இந்த சிலையானது பிரதியெடுக்கப் பட்டு குன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். குன்றின் நாற்புறமும் தடுப்பு சுவர் அமைக்கப் பட்டு பாதுகாப்பாக உள்ளது. அதனருகே நின்று கொண்டு கீழே தெரிந்த ஊரினை, நதியினை நாங்கள் கொண்டு சென்ற பைனாகுலர் மூலம் கண்டு களித்தோம். நகரின் கடைசி வரை காண முடிந்தது. அதற்கு முன்னால் சென்ற ஊர்களில் பைனாகுலரை எடுத்து செல்ல சோம்பல் பட்டுப் பல அரிய காட்சிகளை காணும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
டேவிட் நிர்வாணமாக நிற்பது போன்ற சிலை என்பதால் நம் மக்கள் அந்த சிலையுடன் அதிகம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அதன் சிறப்பு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பதும் சந்தேகமே. சுற்றுலாப் பயணிகளைக் கவர அந்த ஸ்கொயரில் ஒரு Ferrari காரை நிறுத்தி வைத்திருந்தார்கள். International Driving License வைத்திருந்தால் குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி விட்டு நாம் சிறிது தொலைவு ஒட்டி வரலாம்.
அங்கும் Souvenir கடைகள் இருந்தன. Fridge magnets வாங்கினோம்.

ஒரு மணி நேரத்தை அங்கே கழித்த பிறகு குன்றின் மீதிருந்து கீழிறங்கி ஊரின் மையத்தில் அமைந்திருந்த உணவகத்திற்கு சென்று உணவருந்தினோம். இத்தாலிய உணவு விடுதிகளில் குடிநீருக்கு கூட wine குடிக்கப் பயன்படும் கோப்பை போன்ற கோப்பைகளையே தான் தந்தார்கள். குடிநீரும் கண்ணாடி பாட்டிலில் தான் தந்தார்கள். அதையடுத்து ஊரின் கடைசியில் Arno என்னும் பெயருடைய நதிக்கு அருகில் இறக்கி விடப்பட்டோம். அங்கே சிறு நீர்வீழ்ச்சி இருக்கிறது என்றார் வழிகாட்டி. ஆற்றின் போக்கிலேயே ஒரு அடி உயரமான ஒரு சுவர் போன்ற அமைப்பிலிருந்து நீர் பாய்கிறது அதை நீர்வீழ்ச்சி என கூறினார் வழிகாட்டி :)
அங்கே இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். இந்தப் பகுதியில் குறைந்த விலையில் பெண்களுக்கான கைப்பைகளை தெருவில் விற்பனை செய்கிறார்கள். பாரிஸ் நகரைப் போல இத்தாலிய நகரங்களிலும் தெருவோர வியாபாரம் செய்யும் ஆப்பிரிக்க மக்கள் நிறைய தென் பட்டார்கள்.
அது நாள் வரை ஷாப்பிங் செய்யாதவர்கள் கூட கோணி கோணியாய் கைப்பைகள் வாங்கினார்கள். பேருந்தில் பெட்டிகள் வைக்கும் இடம் நிரம்பி, காலுக்கருகில் பக்கவாட்டில் என mofussil பேருந்துகளில் செல்வது போல கோணிகளை அடுக்க…ஓட்டுநர் please stop shopping என மைக்கில் அலற அலற ... எங்கள் பயணம் தொடர்ந்தது. ROME [April 18,2016] ரோமா என இத்தாலிய மொழி உச்சரிப்பில் அழைக்கப்படும் ரோம் நகரானது இந்த ஊரை ஆண்ட முதல் மன்னனது பெயரான Romulus என்னும் பெயரைப் பின்பற்றி அழைக்கப் படுகிறது. [Romulus & Remus என்னும் இரட்டையர்களால் ஆளப்பட்டது] "ஏழு குன்றுகளின் நகரம்" என்னும் சிறப்புப் பெற்ற இந்த நகரம் 28 நூற்றாண்டு கால வரலாற்றினைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இத்தாலிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய இந்த நகரில் Tiber நதி பாய்கிறது. இந்த நகரம் நிர்வாக வசதிக்காக 15 Municipi க்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
https://en.wikipedia.org/wiki/Rome
நான் கண்ட ரோம் நகரைப் பற்றி கூறவே விரும்புகிறேன்.

பிளாரென்ஸ் நகரிலிருந்து ரோமாவிற்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் பனி உறைந்து காணப்பட்டது. பனி உருகியதால் ஏற்படும் ஆறுகளும், ஏரிகளும், சிற்றோடைகளும் தென்பட்டன.
வெனிஸ் மற்றும் பிளாரென்ஸ் நகரங்களில் நாங்கள் சென்ற தினங்களில் வெயிலாக இருந்தது. ஆனால் வழியெங்கும் உறைபனி.

ரோமில் மீண்டும் சென்னை நகரைப் போல வெய்யில். லேசாக வியர்த்தது.
இத்தாலிதான் ஐரோப்பாவில் அதிக மழைப் பொழிவுள்ள இடம் என்று கூறப்பட்டாலும் அங்கிருந்த நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகமாக இருக்கவில்லை .
இத்தாலி நாட்டின் பொருளாதாரம் அதன் automobile, இயந்திரங்கள், மருந்துகள், கப்பல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் டிசைனர் ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலாவை நம்பி இருந்தாலும் இத்தாலிய Wineகள் உலகப் பிரசித்தி பெற்றவை. வழியெங்கும் திராட்சை தோட்டங்கள் தென்பட்டன. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை போல இங்கும் புல்வெளிகளே அதிகம் உள்ளன என்றாலும் வித்தியாசமான குடை போன்ற மரங்களும் சிவப்பு வண்ண மலர்களும் அதிகம் காணப்பட்டன.
வழியெங்கும் தனித்தனி farm houseகளில் மரத்தால் பொருட்களை (Lumbering) செய்து கொண்டிருந்தார்கள் மேலும் உலோக தாதுக்களும் ஆங்காங்கே (mineral ore) குவித்து வைக்கப் பட்டிருந்தன. [வெள்ளை நிறத்தில் இருந்தது எந்த தனிமத்தின் தாது என எனக்கு தெரியவில்லை]

இத்தாலி நாடு பழமையும் புதுமையும் கலந்து காணப்படுகின்றது. புற நகர்ப் பகுதிகளில் கட்டிடங்களின் சுவர்களில் ஆங்காங்கே அருமையான அழகான Graffiti கள் தென் பட்டன. ரோம் நகருக்குள் நுழையும் முன்பிருந்தே ஆங்காங்கே குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. நகருக்குள்ளும் மக்கள் ஆங்காங்கே குப்பைகளை வீசிக் கொண்டு இருந்தார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் துணிகளை துவைத்து நம் நாட்டைப் போல உலர்த்தி இருந்தார்கள். [பாரிஸில் உணவகத்துக்கு அருகில் இருந்த அடுக்கு மாடிக் கட்டிட பால்கனியில் யாரோ உலர்த்தியிருந்த புடவை காற்றுக்கு பறந்து கொண்டிருந்தது]
மக்கள் ஜீன்ஸ் அணிந்து நாகரிக தோற்றத்தில் தெருவோரங்களில் குப்பைகளை, சிகரெட் துண்டுகளை வீசிக் கொண்டு இருந்தார்கள்.
நிலையற்ற அரசாங்கங்களும் மாபியாக்களும் இத்தாலியின் இன்றைய நிலைக்கு காரணம் என்று பேசிக் கொண்டார்கள். ரோம் நகரின் உள்ளே சென்று சேர்ந்த போது மாலையாகி விட்டது. அங்கே city tour எனப்படும் பேருந்தில் அமர்ந்தவாறே வேடிக்கை பார்த்த வண்ணம் ஊரை சுற்றி பயணித்து இந்திய விடுதியில் உணவு உண்டு விட்டு ரோம் நகரின் ஒரு பகுதியான Pomezia வில் உள்ள Hotel Antonella வை அடைந்தோம். ரோம் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டவையே. அவைகளை நன்கு பராமரித்து அரசாங்க அலுவலகங்களாக, அருங்காட்சியகங்களாகப் பயன்படுத்துகிறார்கள். கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் மிகச் சிறந்து விளங்கிய நாடு ரோமாபுரி என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கட்டிடத்திலும் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே ரோமன் எண்களாலும் எழுத்துக்களாலும் அவைகளைப் பற்றிய விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கோட்டை கொத்தளங்கள் நிறைந்த ஊராகவும் இந்த நகரம் விளங்கியுள்ளது என்பதற்கு சான்றாக ஆங்காங்கே கோட்டை சுவர்களை சற்றே இடித்து சாலைகளை அமைத்துள்ளார்கள். வாகனங்கள் அதனுள்ளே நுழைந்து தான் செல்ல வேண்டும்.

விடுதியில் ஒரே இரவு தான் தங்கினோம் என்பதால் அங்கே குறிப்பிடும் படி எந்த நிகழ்வும் இல்லை.

மறுநாள் காலை உணவுக்குப் பின் நாங்கள் முதலில் சென்றது கத்தோலிக்கர்களின் முக்கிய தலமான வாடிகன் நகரம்.

VATICAN

வாடிகன் ரோம் நகருக்குள் 121 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஏறக்குறைய 1000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட மிகச் சிறிய நாடு. 1929 ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து தனியாகப் பிரிந்தது. இந்த குட்டி நாட்டை ஆள்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படும் போப் ஆவார். இந்த நாடு மற்ற நாடுகளை போல எல்லா உரிமைகளையும் பெற்றது. நாடு என்று சொல்வதை விட நகரம் என்று அழைக்கலாமா?
இந்த நகரில் தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புகழ்பெற்ற திருத்தலமான St Peters Basilica, Sistine Chapel மற்றும் Vatican museums உள்ளன. [கிறிஸ்தவர்கள் இந்த பூமியின் ஒவ்வொரு நிலப்பகுதியையும் பல மாவட்டங்களாகப் பிரித்து அதற்கு ஒரு தலை நகரை நியமித்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரிலும் அமைந்த பெரிய தேவாலயத்திற்கு Basilica என்று பெயர். Chapel என்பது சிறிய Private பிரார்த்தனைக் கூடம்]
இந்த தேவாலயத்தின் பின் பகுதியில் உள்ள The Apostolic Palaceல் தான் போப் வசிக்கிறார் என்பதால் அவர் மற்றும் அங்கு பணியாற்றும் அனைவருக்குமான பிரார்த்தனை கூடமாக Sistine Chapel உள்ளது.

Basilica, Chapel மற்றும் Museums, Pope’s residence (The Apostolic Palace) ஆகிய அனைத்தும் இணைந்தே உள்ளன. நகரின் மொத்த பரப்பளவே 121 ஏக்கர் தானே? ரோமையும் வாடிகனையும் பிரிப்பது Tiber நதி தான். பாலத்தைக் கடந்தால் வாடிகன் தான். தூய்மையான குடிநீரை கொண்ட இந்த நதியின் நீரானது பாசி படிந்த நீரின் பச்சை வண்ணத்தில் இருந்தது. பாலத்தின் இரு புறமும் மிகுந்த காலை நயத்துடன் கூடிய சிற்பங்களை செதுக்கி வைத்துள்ளார்கள். வாடிகன் நகரம் மிக சிறியது என்பதால் உள்ளே நுழைந்ததுமே பாசிலிக்காவின் Tomb தெரிந்தது.
வாடிகன் நகரின் பல அலுவலகங்கள் இத்தாலிய பகுதியிலும் அமைந்துள்ளன. பிற நாடுகளின் Embassyகள் போல சிறப்பு சலுகைகள் Political [immunity] இவர்களுக்கும் உண்டு.
Vatican museum வாசலில் இறக்கி விடப்பட்டோம். நாங்கள் சென்ற தினத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் 15 நிமிடங்கள் தெருவில் வரிசையில் காத்திருந்தே உள்ளே செல்ல முடிந்தது.
உள்ளே நுழைந்ததும் நீல நிற விளக்குகளுடன் இருந்த பெரிய காத்திருப்பு அறையில். எங்கள் பயண அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு headphone ஐ கொடுத்து கூடவே அதை இணைக்கும் வயர்லெஸ் பெட்டி ஒன்றையும், அனுமதி சீட்டையும் தந்தார்கள். [பழைய காலத்து கையடக்க transistor போல கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வண்ணம் இருந்தது]
முக்கியமான செய்தியாக அந்த headphoneஐ யாரும் எக்காரணம் கொண்டும் காதை விட்டு எடுக்க வேண்டாம், கூட்டத்தில் தொலைந்து போக வாய்ப்புக்கள் அதிகம். மேலும் அமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள அது ஒன்று தான் வழி என தமிழில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டது.
அருங்காட்சியகம் உள்ளே நுழைந்து, Sistine chapel வழியாக St Peters Basilicaவைப் பார்த்து விட்டு வெளியில் வந்தால் St Peter’s Square வரும். Basilica வாசலில் வரிசையாக வைக்கப் பட்டுள்ள தொட்டிகளில் headphoneஐ போட வேண்டும் என்று கூறப்பட்டது. வாடிகன் அருங்காட்சியகத்தில் எங்களுடன் இத்தாலிய வழிகாட்டியும் இணைந்து கொண்டார். இத்தாலிய சிற்பங்களில் நாம் காண்பது போல பெரிய மண்டை,சுருண்ட கூந்தல், கூர்மையான நாசி என ஆறடி உயரத்தில் போர் வீரனைப் போன்ற தோற்றத்தில் ஆங்கிலத்தில் சுவாரசியமாக சிரிக்க சிரிக்க பேசி விளக்கினார். சரி. அருங்காட்சியகத்துக்குள்ளே நுழைவோம். இந்த பகுதியில் வரிசைகள் எதுவும் இல்லை. குறுகலான பகுதி வழியாக உள்ளே செல்ல வேண்டும். இந்த complex இன் நிர்மாணப் பணிகள் போப்பாண்டவரால் மைக்கலேஞ்சலோவிடம் ஒப்படைக்கப் பட்டது. போப் ஜூலியஸ் II என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட வாடிகன் அருங்காட்சியகங்களில் உள்ள 70 ஆயிரம் கலைப்பொருட்களில் 20 ஆயிரம் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி கால (Renaissance) ஓவியங்கள், ரோமானிய சிற்பங்கள், Frescoes ஆகியவைகள் இங்கே உள்ளன.[Frescoes: a piece of thick textile fabric with pictures or designs formed by weaving colored weft threads or by embroidering on canvas, used as a wall hanging or soft furnishing]
உலகிலேயே அதிக மக்களால் கண்டு களிக்கப்படும் அருங்காட்சியகம் இது தான். எங்கள் வழிகாட்டி அது நாள் வரை கூறி வந்தது போல கூறியது போல அற்புதமான அருங்காட்சியகம் இது. கூரையிலும் பக்கவாட்டு சுவர்களிலும் மைக்கலேஞ்சலோ மற்றும் ரபேல் போன்றோரின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
மைக்கலேஞ்சலோவை நமக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா? ஓவியர், சிற்பி, கவிஞர், கட்டிடக் கலைஞர்.
வழியெங்கும் இவரது ஓவியங்களும் சிற்பங்களும் தான். New Testamentலிருந்து கதைகளையும் சம்பவங்களையும் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக பக்கவாட்டு சுவர்களிலும் கூரையிலும் வரைந்துள்ளார். அனைத்தும் தத்ரூபமாக உள்ளன. வராண்டா போன்ற பகுதியின் இறுதி ஓவியமாக Last Supper ஐ வரைந்துள்ளார். [இதன் அசல் ஓவியம் லியானார்டோ டா வின்சி யால் வரையப் பட்டது] இந்த ஓவியம் வராண்டாவில் உட்புறமிருந்து பார்க்கையில் அவர்கள் நம்மை நேருக்கு நேர் பார்த்தபடி உண்பது போல உள்ளது. வராண்டாவில் கதவை தாண்டி நின்று பார்த்தால் அந்தக் கோணத்தில் நம்மைப் பார்ப்பது போல வரைய பட்டுள்ளது. [அற்புதமான படைப்பு]
https://m.museivaticani.va/content/museivaticani-mobile/en/collezioni/musei/stanze-di-raffaello/tour-virtuale.html

தங்கத்தை உபயோகித்து highlight செய்திருப்பது தான் இவரது ஓவியங்களின் சிறப்பு அம்சம். இந்தப் பகுதியைக் கடந்தால் பெரிய பெரிய கூடங்களுடன் (Halls) எங்கெங்கும் உயிரோட்டமான ஓவியங்களே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தை கண்டு களித்து விட்டு வெளியில் வந்தால் அங்கே திறந்த வெளி.

இந்த பகுதியில் Sistine Chapel உள்ளே செல்வதற்கு முன்பாக அதன் சிறப்புக்களை பற்றி இத்தாலிய வழிகாட்டி விளக்கி கூறினார். அது பிரார்த்தனைக்கு கூடம் என்பதால் உள்ளே பேசி விளக்க முடியாது. திறந்த வெளியில் நிற்க வைத்து அங்கே வைக்கப் பட்டிருந்த ஓவியங்களின் பிரதிகள் அடங்கிய போர்டுகளை காண்பித்து விளக்கினார்.

எங்களுடன் வந்திருந்த ஒரு வயதான தம்பதிகளை பார்த்து உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகின்றன எனக் கேட்டார். கணவர் 40 எனக் கூற, நீங்கள் உங்கள் நாட்டு மதர் தெரசாவை விட சிறந்தவர் அடுத்த சிலை உங்களுக்கு தான் என்றார். [எங்களுக்கு அச்சமயம் 32. நீங்கள் இன்னும் எட்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று என் கணவரைப் பார்த்து கிண்டல் செய்தார்]
St Peter 's Square ல் தான் எல்லா Saint களின் சிலைகளும் உள்ளன எனக் கூறிய போது விளையாட்டாக மேற்கண்ட சம்பவம் நடந்தது. The Apostolic Palace என்பது போப்பாண்டவர் வசிக்கும் பகுதி. கத்தோலிக்க மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் வாடிகன் தேசத்தின் நிர்வாகப் பொறுப்பு போப்பாண்டவரை சார்ந்தது என்பதால் அவரும் அவரது உதவியாளர்களும் தங்கும் பகுதியாக இந்த அரண்மனை உள்ளது. அவர்களின் பிரார்த்தனைக்கான இடம் தான் இந்த Sistine Chapel. என முன்பே குறிப்பிட்டேன். [சிறிய அளவிலான தேவாலயம்] இந்த சேப்பல் 1473 - 1481 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப் பட்டது. இங்கேயும் கூரையிலும் பக்கவாட்டு சுவர்களிலும் பின் சுவரிலும் Frescoes மற்றும் ஈரமான சுண்ணாம்பு சுவற்றில் வரையப்படும் Mural கள் உள்ளன.

பல Frescoes பிரபல ஓவியர் Rafael என்பவராலும் மற்றவைகள் மைக்கலேஞ்சலோவாலும் வரையப்பட்டுள்ளன. மொத்த கூடமும் 3:2 என பிரிக்கப் பட்டு 6 ஜன்னல்கள் பொருத்தப்பட்டு அவற்றை சுற்றிலும் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றின் (Old & New Testament) அடிப்படை சம்பவங்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பிரார்த்தனைக் கூடம் அளவில் சிறியது. அங்கே ஒரு மேடை. சிலை எதுவும் இல்லை. அந்த பகுதி சுவற்றில் “Last Judgement” என்னும் புகழ்பெற்ற ஓவியம் வரையப் பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் ஏசுவால் ரட்சிக்கப் பட்ட புண்ணிய ஆத்மாக்கள் மேலே எழும்பி சொர்க்கத்திற்கு சென்று ஏற்கனவே அங்குள்ளவர்களோடு சேர்வது போலவும், பாவிகள் மேலிருந்து கீழ் நோக்கி மீண்டும் பூமியில் வந்து விழுவது போலவும் வரைய பட்டுள்ளது.
https://en.wikipedia.org/wiki/The_Last_Judgment_(Michelangelo)

St Peter 's Basilica மற்றும் St Peter 's Square ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என அங்கேயே கூறினார். நாம் அந்த இடங்களைக் காணும் போது அது பற்றி தெரிந்து கொள்ளலாமா?

சரி சேப்பலுக்குள் செல்வோம் வாருங்கள்.

சிறிய கூடம். அறையிருட்டு. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமோ கூட்டம். இந்த பகுதியில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதால் வழிகாட்டி கூறியவைகள் எங்கெங்கே இருக்கின்றன என வேடிக்கை பார்த்து விட்டு திரும்பும் சமயம் எனக்கு மிக அருகில் சுவரில் பளபளவென எதுவோ மின்னுவது போல தோன்றியது. கூர்ந்து கவனித்ததில் அது சுவரில் curtain போல தொங்க விடப்பட்டுள்ள purple வண்ண பின்னணியில் அமைய பெற்ற மிகப் பெரிய fresco என்பது புரிந்தது. பளபளப்பு தங்கப் பூச்சின் காரணமாக ஏற்பட்டுள்ளது. மைக்கலேஞ்சலோ தங்கத்தை உருக்கி ஓவியங்களில் உபயோகப் படுத்தினார் என்று முன்பே குறிப்பிட்டேன் இல்லையா?
மிகமிகமிக அருகில் அந்த வேலைப்பாட்டைக் காண நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொட்டுப் பார்த்து வியந்து விட்டு வெளியில் வந்தேன்.
Last Judgement ஓவியம் ஒரு அற்புதப் படைப்பு. அரசியல் காரணங்களால் ஊரை விட்டு சென்ற மைக்கலேஞ்சலோ மீண்டும் 1935-1941 முடிய இந்த ஓவியத்தை வரைந்து முடித்தாராம்.

ஒவ்வொரு ஓவியமும் உயிரோட்டமாக இருந்தது. வெளியில் செல்லவே மனம் வரவில்லை.

கூரையிலும் ஓவியங்கள் தான். அரை வட்ட வடிவத்தை கூரையிலிருந்து கவிழ்த்து வைத்தது போன்ற கட்டிட அமைப்பில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன (இத்தாலிய கட்டிடக் கலையின் ஒரு முக்கிய அம்சமான இந்த அரை வட்ட கூரை வாடிகன் அருங்காட்சியகத்திலும் பயன் படுத்தப்பட்டுள்ளது)

இந்த சேப்பலில் தான் அடுத்த போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெறும். இதன் கூரையில் ஒரு புகை போக்கி அமைக்கப் படும். புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார் என்பதை அறிவிக்க வோட்டு போட்ட காகிதங்களை (Ballot papers) ஐ எரிப்பார்கள். இந்த காகிதங்களை எரித்தால் வெள்ளை நிறப் புகை வரும். தேர்ந்தெடுப்பு நடைபெறவில்லை யாருக்கும் majority ஓட்டு கிடைக்கவில்லை (2/3) என்றால் வோட்டு போட்ட காகிதங்களுடன் பச்சை புல் மற்றும் சில ரசாயனங்களை போட்டு எரித்து கருப்பு புகையை வெளியிடுவார்கள். உலகமே புகை எந்த நிறத்தில் வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.
என் பள்ளி நாட்களில் ஒரு முறை வானொலியில் என்ன நிற புகை வெளியிடப்பட்டது எனக் கூறுவார்கள் என்பது பற்றிய செய்திக்காக காத்திருந்தது நினைவில் இருக்கிறது.

போப்பாண்டவர் வசிக்கும் பகுதிக்கும், அவருக்கும் பாதுகாவல் அளிப்பது Swiss Army Guards எனப்படும் ஸ்விட்சர்லாந்து நாட்டு சிறப்புக் காவலர்கள் தான். [இவர்களை பற்றி ஸ்விட்சர்லாந்து பயணப் பகுதியில் கூறியுள்ளேன்]
அடுத்தது நாங்கள் கண்டது St Peter’s Basilica. மறுமலர்ச்சி கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைந்த இந்த தேவாலயம் (Renaissance architecture: Symmetry, Proportion, Geometry) 1626 ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. இது படுக்க வைக்கப்பட்ட சிலுவை போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது. (cruciform)
ஏசுநாதரின் சீடரான செயின்ட் பீட்டர் அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் அமையப் பெற்றது இந்த தேவாலயம். இங்கே அவரது சமாதியும் உள்ளது. இந்த சமாதியானது தேவாலயத்தின் முக்கிய கோபுரத்தின்(Tomb) நேர் கீழே உள்ளதாக அறிகிறோம். மைக்கலேஞ்சலோவால் வடிவமைக்கப் பட்ட கோபுரம் இது. அவரது காலத்தில் வரையப் பட்ட blueprint அவர் இறந்த பிறகு கண்டுபிடிக்கப் பட்டு அதன் அடிப்படையில் கட்டி முடிக்கப் பட்டதாக வரலாறு கூறுகிறது.
தேவாலயத்தின் முக்கிய கூடத்தின் ஒரு பகுதி வழிபாடு நடத்தும் இடமாக உள்ளது. நாங்கள் சென்ற போது ஒரு பாதிரியார் சொற்பொழிவு (Sermon) செய்து கொண்டிருந்தார். மற்றொரு பகுதியில் இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களின் சமாதிகள் உள்ளன.

தேவாலயத்தில் நடுநாயகமாக புனித பீட்டர் அவர்கள் உபயோகித்த நாற்காலி, மைக்கலேஞ்சலோவின் புகழ்பெற்ற Madonna சிற்பம் (ஏசுநாதரை அவரது தாயார் மடியில் கிடத்திக் கொண்டிருப்பது போன்ற சிற்பம்) மற்றும் பல சிற்பங்களையும் கண்டோம். புனித பீட்டர் அவர்கள் உபயோகித்த நாற்காலி உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் பாப் அலெக்சாண்டர் III என்பவர் வெண்கல பீடம் ஒன்றை அமைத்து அதன் நான்கு புறமும் நான்கு சிலைகள் தங்கி நிற்பது போன்ற வடிவில் ஒரு சிம்மாசனத்தை வடிவமைத்து அதில் நாற்காலியை பொருத்தி இருக்கிறார்.
இந்த தேவாலயம் கத்தோலிக்கர்களின் புனிதத் தலமாகவும் பொது மக்கள் கூடி வழிபாடு செய்து கொண்டாடும் இடமாகவும் புகழ் பெற்றது. [கத்தோலிக்கர்களின் மூன்று முக்கிய தேவாலயங்கள் St Paul’s Cathedral – London, Cathedral Notre dame – Paris & St. Peter’s Basilica – Vatican]
20 -80 ஆயிரம் மக்கள் கூடும் வண்ணம் அமைய பெற்ற இந்த தேவாலயத்தின் முன் பகுதி தான் பிரசித்தி பெற்ற St. Peter's Square. போப்பாண்டவர் கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற நாட்களில் இங்கு வந்து மக்களுக்கு நற்செய்திகளும் வாழ்த்துக்களும் கூறுவார். (தொலைக்காட்சியில் கண்டிருப்பீர்கள்) அனைவரும் அமர்ந்து போப்பாண்டவரின் செய்திகளைக் கேட்கும் வண்ணம் நாற்காலிகள் உள்ளன.
https://en.wikipedia.org/wiki/St._Peter%27s_Basilica

இந்த பகுதியில் இரண்டு நீரூற்றுக்கள் மற்றும் 40 மீட்டர் உயரமுள்ள obeliskம் உள்ளன. (ஒரு பீடத்தில் செவ்வக வடிவ தூண் அதன் மேற்புறத்தில் பிரமிட் வடிவம் என இருக்கும் Obelisk ஐ முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற இடத்தில் நினைவு சின்னமாக நட்டு வைப்பார்கள். பாரிஸ் நகரிலும் இது போல ஒரு Obelisk பதினாறாம் லூயி மன்னனும் அவரது மனைவி மேரி அன்டாய்னட்டும் கில்லட்டினுக்கு பலியான இடத்தில் நடப்பட்டுள்ளது என பாரிஸ் பயணப் பகுதியில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்)

எகிப்திலிருந்து ரோமானிய பேரரசன் Caligula எடுத்து வந்த இந்த தூணானது புனித பீட்டர் அவர்கள் சிலுவையில் அறையப் பட்ட இடத்திற்கருகில் நிறுவப்பட்டு, தற்போது வாடிகன் தேவாலயத்தில் உள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து பார்த்தால் Tiber நதி தெரியும். (என் கண்ணுக்கு தெரியவில்லை, நிறையக் கட்டிடங்கள் இடையில் உள்ளன.)
இந்த தேவாலயத்தின் வெளிப்பகுதியில் இரண்டு பக்கமும் வால் போல தூண்களுடன் கூடிய மண்டபம் அமைந்துள்ளது. அந்த மண்டபத்தின் மேலே வெளிப்பகுதியில் புனித பீட்டர் மற்றும் ஏசுநாதரின் மற்ற சீடர்களின் சிலைகள் நிறுவப் பட்டுள்ளன.

இந்த பகுதியில் தான் நம் அன்னை தெரசாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. Sainthood அடைந்தவர்களது சிலைகள் இந்த பகுதியில் தான் நிறுவப்படுகின்றன. (சமீபத்தில் ஒரு சாமானிய மனிதர் Saint ஆக போப்பாண்டவரால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று செய்தியில் கண்டேன்.) தேவாலயத்தின் வாயில் மிக மிக உயரமான கதவுடன் காணப்படுகிறது. இந்த இடத்தில் வழிகாட்டி கூறியபடி earphoneஐ கழற்றி அதற்கான தொட்டியில் போட்டு விட்டு, ஆயிரக்கணக்கான நாற்காலிகள் இருந்தாலும் தரையில் அமர்ந்து கொண்டோம்.
இத்தாலியில் நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நம் டிசம்பர் மாத வெயில் போல காய்ந்தது.
வியர்க்கவில்லை என்றாலும் வெயில் காரணமாக சற்றே அசதியாகவும் இருந்தது. தரையில் அமர்ந்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தோம். ஒவ்வொருவராக வெளியில் வந்து சேர ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆயின. வழிகாட்டி கிளம்பலாம் என்று கூறவேயில்லை. மேலும் 30 நிமிடங்கள் கழிந்தன. ஏன் தாமதம் என்று கேட்டபோது எங்களுடன் வந்த அன்பர் ஒருவர் இன்னும் வந்து சேரவில்லை என்கிறார்கள்.
வழிகாட்டி earphoneஐ காதை விட்டு எடுக்காதீர்கள் நீங்கள் தொலைந்து போனாலும் அதன் மூலம் கண்டு பிடிக்கலாம் என்று பல முறை கூறியும் அந்த அன்பர் கண்டு கொள்ளாமல் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததுமே கண்ணில் பட்ட முதல் தொட்டியிலேயே போட்டு விட்டு தன்னிச்சையாக சுற்றி பார்த்து கொண்டிருந்து விட்டு எல்லாருக்கும் முன்பாக வெளியில் வந்து விட்டார்.
எங்களைக் காணவில்லை என்று தெருக்களில் நடந்து எங்கள் பேருந்தை தேடி, அமைப்பாளர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து, தன்னுடன் வந்த சகோதரரை தேடி ...என மொத்தத்தில் வாடிகனை சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். (இவையெல்லாம் பின்னர் அவர் கூறியது)
எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று பேருந்தில் ஏறி வாடிகன் தேவாலயத்தை இரண்டு முறை சுற்றி முடித்த சமயத்தில் அந்த அன்பர் தான் எங்கு நிற்கிறேன் என்று தொலைபேசினார். அவரை கண்டு பிடிக்க மீண்டும் ஒரு ஒரு முறை பாசிலிகாவை சுற்றி வந்து, கண்டு பிடித்து அழைத்து சென்றதில் ரோம் நகரை சுற்றி பார்க்க ஒதுக்கிய நேரம் முடிந்து விட்டது.

ரோம் நகரம் புராதனமான நகரம். மாபெரும் வீரர்களும் கலைஞர்களும் வாழ்ந்த அங்கே செல்லப் போகிறோம் அவர்கள் வாழ்ந்த இடங்களை நேரில் காண போகிறோம் அவர்கள் நிறுவிய நினைவு சின்னங்களை கண்டு களிக்க போகிறோம் என்ற என் பேராவலில் கூடை கூடையாக மண் விழுந்தது. அழுகையே வந்து விட்டது எனக்கு. (எல்லாரும் அந்த அன்பரை கோவித்துக் கொண்டார்கள். தவறிய வாய்ப்பு தவறியது தானே?) வெளியூர்களுக்கு / வெளி நாடுகளுக்கு செல்கையில் கவனமாக வழிகாட்டி சொல்வதை கேட்டு பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் உடன் செல்பவர்களுக்கும் தொல்லை, இழப்பு.
என்னை போன்ற மத்திய தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு முறை வெளி நாட்டுப் பயணம் வாய்ப்பதே அரிது. இனி என்று நான் ரோம் நகரம் செல்வேன்? :( Temples of Saturn & Concord, Circus Maximus, The Arch of Augustus மற்றும் பல நினைவுச் சின்னங்களை என்று பார்ப்பேன்?? இன்றளவும் வருத்தமே.
வாடிகன் நகரம் சிறிய நகரம். போப்பாண்டவரை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள் என நாம் கேள்வி பட்டத்தை வைத்துக் கொண்டு என் கணவர் “இந்த ஊரில் பாதிரியார்களும் கன்னியா ஸ்திரீகளும் தான் தெருக்களில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஒருவரைக் கூட காணவில்லையே” என வியந்தார்.

வாடிகன் நகரில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு கல்வி உட்பட அனைத்தும் இலவசமாக அழைக்கப் படுகிறது என வழிகாட்டி கூறினார். இந்தியா என்றாலே யானையும் பாம்பாட்டிகளும் என மேலை நாட்டவர்கள் திரைப்படங்களை பார்த்து நினைப்பது போலத் தான் இதுவும்.
மீண்டும் ரோம் நகரத்துக்குள் நுழைந்தோம்.

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...