Saturday, 11 December 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-10A] Italy –>Venice

April 16, 2016

ஐரோப்பிய பயணத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம்.

ஆஸ்திரியாவின் Innsbruck நகரிலிருந்து கிளம்பி இத்தாலி நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான வெனிஸ் நகரை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆன்டனியையும், வெனிஸ் நகர வியாபாரியையும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் படித்த கதாபாத்திரங்களையும் நேரில் காண செல்வது போல பேரார்வத்துடன் பயணித்தேன்.

இத்தாலி மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலப்பகுதியாலும் சூழப்பட்ட தீபகற்பம். (நம் நாடும் ஒரு தீபகற்பம் தான்). எரிமலைக்கும் புகழ்பெற்றது இத்தாலி நாடு.

ஆல்ப்ஸ் மலைகள் இத்தாலியின் ஒரு பகுதியிலும் அமைந்து Italian Alps என்னும் பெயருடன் பனி விளையாட்டுக்களுக்கு சிறப்பு பெற்றுள்ளது.

ஐரோப்பாவிலேயே அதிக மழைப்பொழிவு இங்கே தான் என்றாலும் நாங்கள் சென்ற சமயத்தில் ஆறுகளில் நீரின் அளவு குறைந்தே காணப்பட்டது. இந்த நாடு பரந்து இருப்பதால் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளைக் கொண்டு, நம் நாட்டின் வடபகுதி போல பனிக்காலத்தில் கடும் குளிரும் பனிப்பொழிவும், வெயிற்காலத்தில் கடும் வெப்பமுமாகவும் இருக்கும் நாடு இது.

இத்தாலி நாட்டில் நாங்கள் முதலில் சென்ற ஊர் வெனிஸ். [இத்தாலிய மொழியில் Venezia]

பல திரைப்படங்கள் (Casino Royale, The Tourist, மன்மதன் அம்பு) மற்றும் புத்தகங்கள் மூலமாக நான் அறிந்த வெனிஸ் நகரை நேரில் பார்க்க பல வருடங்கள் காத்திருந்தேன்.

திரைப்படங்களில் பார்த்து அறிந்த வெனிஸ் நகரின் குறுகிய வாய்க்கால்களில் படகில் மக்கள் செல்வதும், ஊருக்குள் சாலைகள் இல்லாததும் சற்றே வித்தியாசமாக தோன்றியதில் நேரில் பார்க்கும் ஆர்வம் கூடியது.

வெனிஸ் நகரம் வரை (Mainland Venice) ரயில்களும், பேருந்துகளும், விமானங்களும் செல்கின்றன சுற்றுலாத் தலமான வெனிஸ் தீவிற்கு செல்ல மின்சார படகுகளைத் தான் நம்ப வேண்டும். எங்கள் பேருந்திலிருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்து படகினை அடைந்தோம். படகுப் பயணமும் முன்பதிவு செய்யப்பட்ட ஒன்று தான் என்பதால் அதிகக் காத்திருப்பு இல்லை. வெனிஸ் தீவுகளுக்கு செல்லும் தனியார் படகுக்கு Vaporetto எனப் பெயர்.

இந்த இடத்தில் மட்டும் தான் நாங்கள் பொதுக் கழிப்பறையை உபயோகிக்க நேர்ந்தது. மூன்று யூரோக்கள் கட்டணம். தொலைபேசி பூத்தில் உள்ளது போல ஒரே அளவுள்ள நாணயங்களை போட்டால் தான் கதவு திறக்கும். அதற்கும் ஒரு இயந்திரம் உள்ளது. ஒரே அளவுள்ள டோக்கன்களை தருகிறது. அதை உபயோகித்து உள்ளே சென்று வந்தோம். அதுவும் வித்தியாசமான அனுபவம் தான்.

படகில் ஏறுவதற்கு முன் கையில் மதிய உணவுப் பை அனைவருக்கும் தரப்பட்டது. அப்போது பகல் 10.30 மணி இருக்கும். மின்சாரப் படகில் ஏறியதும் முதல் வேலையாக அந்த உணவை உண்டு விட்டோம். அப்போது தானே சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்?

படகுப் பயணம் 40 நிமிடங்கள் என்பதால் முதல் பத்து நிமிடங்களிலேயே எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவைகளை உண்டு விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

வெனிஸ் நகரம் Veneto என்னும் பகுதியின் தலைநகரம். இது நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளையும், அவற்றை இணைக்கும் 400 சிறு பாலங்களையும் தன்னுள்ளே கொண்டது. "Queen of the Adriatic", "City of Water", "City of Masks", "City of Bridges", "The Floating City", and "City of Canals" எனப் பல பெயர்களாலும் கொண்டாடப்படும்
வெனிஸ் தீவினை அடையும் முன்பாக அது எப்படி ஏன் நிர்மாணிக்கப் பட்டது என்பதை தெரிந்து கொள்வோமா?

வெனிஸ் தீவானது இத்தாலி நாட்டின் வடக்குப் பகுதியில் Adriatic கடலின் முகப்பில் உப்பங்கழிகளில் 118 தீவுகளுக்கிடையில் கட்டப்பட்டுள்ளது.

சதுப்பு நிலமும், நாணல் புதர்களும், காயல் எனப்படும் உப்பங்கழிகளும் அமைந்த பகுதியில் எப்படி ஒரு நகரத்தையே நிர்மாணம் செய்துள்ளார்கள் என்பது ஆச்சரியமான ஒரு செய்தி.

ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளின் (Barbarians) தாக்குதலுக்குப் பயந்து வெனிஸ் நகர மக்கள் (Mainland) கடலுக்கருகில் அமைந்த தீவுகளுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள்.

சதுப்பு நிலத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணை போல மரப் பலகைகளைக் கொண்டு நெருக்கமாக கரையோரங்களில் தடுப்பு அமைத்துள்ளார்கள். பின்னாட்களில் அதே வகையான மரங்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து அதன் மேல் இன்று நாம் காணும் கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்.

நீருக்கு அடியில் மரங்கள் இருப்பதால் அவைகள் ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாகியும் உளுத்துப் போகாமல் உள்ளன.

சேற்றின் மேல் இந்தக் கட்டடங்கள் உள்ளதால் அவற்றின் எடையால் இது நாள் வரை ஒன்பது இஞ்சுகள் (Inches) பூமிக்குள்ளே இந்த தீவு நகரம் மூழ்கி விட்டதாக கூறப் படுகிறது.

இந்த நகரை “மிதக்கும் நகரம்” என்று அழைப்பதை விட “மூழ்கும் நகரம்” என்றழைப்பதே சரியாக இருக்கும்.
நீரைக் கிழித்துக் கொண்டு சென்ற படகிலிருந்து தூரே தெரிந்த மார்க்ஸ் ஸ்கொயரும் (Mark’s Square) சுற்றிலும் தென்பட்ட புராதனமான கட்டிடங்களும் நீல வானமும் நீர்ப்பரப்பும் ... அடடா …வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் அது.

வெனிஸ் தீவின் கரையில் இறக்கி விடப்பட்டோம். நாங்கள் சென்ற தினத்தில் வெயில். 22 டிகிரி செல்ஸியஸ் என கூகிள் கூறியது.

காலை 11 மணியளவில் அங்கே சென்று இறங்கியதும் எங்கள் வழிகாட்டி சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை பற்றிக் கூறி விட்டு, மாலை ஐந்து மணிக்கு கிளம்பும் படகில் செல்ல வேண்டும் அந்த நேரத்திற்கு அனைவரும் படகுத் துறைக்கு வந்து விடுங்கள் என்று கூறி விட்டு எங்கோ சென்று விட்டார்.

சிறு சிறு தீவுகளை இணைக்கும் வாய்க்கால்களும் அவற்றில் மேலமைந்த பாலங்களும் Jigsaw puzzle போல உள்ளன. வாகன சத்தங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதே மனதுக்கு அமைதியாக இருந்தது.

ஸ்வெட்டரை தவிர்த்து விட்டு குறுகிய மரப் பாலங்களைக் கடந்து மரப்பலகைகளால் ஆன தெருக்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந் து Mark’s Square ஐ அடைந்தோம்.


ஐரோப்பிய நகரம் ஒவ்வொன்றிலும் ஒரு Square உண்டு என்பதை நாம் முன்பே அறிவோம். மார்க்ஸ் ஸ்கொயரும் அது போன்ற ஒன்றே. இது பல கட்டிடங்கள் சேர்ந்த மிகப் பெரிய Complex .

மார்க்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள 323 அடி உயரமுள்ள மணிக் கூண்டின் பெயர் St Mark's Campanile ஆகும். St Mark’s Cathedralன் மணிக் கூண்டான இது வெனிஸ் நகரின் முக்கியமான ஒரு சின்னம். Grand Canalன் முகப்பில் அமைந்திருக்கும் இந்த மார்க்ஸ் ஸ்கொயரானது ஆரம்பத்தில் Adriatic கடலில் சென்ற கப்பல்களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கமாக இருந்து பின்னாளில் மணிக் கூண்டாக பயன்படுகிறது என தெரிகிறது.

இந்தப் பகுதி பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஸ்கொயரில் நாம் முக்கியமாக காணப் போவது புறாக்களைத் தான். இங்கே புறாக்கள் சுதந்திரமாக வந்து அமர்ந்து சுற்றுலாப் பயணிகள் தரும் உணவுகளை உண்டு செல்கின்றன.

மிக நுண்ணிய காலை வேலைப்பாடுகளுடன் இங்குள்ள கட்டிடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதனுள்ளே
a. St Mark's Basilica
b. Doge's Palace
c. Bell tower
d. Clock tower என பல பகுதிகள் உள்ளன.

தீவு என்றாலே நீருக்குள் அமைந்த நிலப் பகுதி என்பது தான் பொருள் இல்லையா? இங்கே நீருக்குள் மொத்த நகரமும் அமைக்கப் பட்டுள்ளது. நீருக்கு மேலே தான் சாலைகள், பாலங்கள் உள்ளன. தெருவைக் கடப்பது போல் பாலத்தைக் கடக்க வேண்டும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் படகுகள் தான்.
அவரவர் வசதிக்கேற்ப மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் கால்வாயில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள். நமக்கு கார், பைக் எப்படியோ அப்படி அவர்களுக்குப் படகுகள்.


சிறிது நேரம் மார்க்ஸ் ஸ்கொயரை வேடிக்கை பார்த்து விட்டு, வெனிஸ் நகரின் பிரசித்தி பெற்ற Gondola என்னும் படகில் குறுகிய வாய்க்கால்கள் ஊடே பயணித்து ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். இந்த படகுப் பயணம் என் கனவு பயணம் என்றே செல்லலாம்.
சில பாலங்களைக் கடந்து படகுத் துறைக்கு சென்றோம்.

ஒரு படகில் ஆறு பேர் அமர்ந்து செல்ல, படகோட்டி படகை செலுத்தும் வகையிலான படகை தேர்ந்தெடுத்தோம். [திரைப் படங்களில் இது போன்ற படகில் படகோட்டி படகினைச் செலுத்த கதாநாயகனும் நாயகியும் டூயட் பாடிக் கொண்டே பாலங்களுக்கு அடியில் பயணிப்பார்கள்.]

பயண நேரம் 40 நிமிடங்கள். பகல் நேரக் கட்டணம் 80 யூரோக்கள், இரவு நேரக் கட்டணம் 100 யூரோக்கள். 40 நிமிடங்களுக்கு கூடுதலாக பயணிக்க விரும்பினால் ஒவ்வொரு கூடுதல் 20 நிமிடங்களுக்கு ஒரு தொகை தர வேண்டும்.

இன்றளவும் 80, 100 யூரோக்கள் தான். ஆனால் எங்கள் வழிகாட்டி குழுவாக செல்வதால் குறைந்த விலைக்கு அழைத்து செல்கிறார்கள் என்று கூறி படகில் ஏற்றி விட்டார். [நல்ல கமிஷன் கிடைத்திருக்கும்]

எப்படி பார்த்தாலும் நமக்கு லாபம் தான். ஒருவருக்கு 16 யூரோக்கள் தானே?

நாங்கள் ஆறு படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சென்றோம். குறுகலான லேன்களில் பல பாலங்களுக்கிடையில் நுழைந்து சென்றது படகு. வழியெங்கும் வீடுகளும் கடைகளும் உணவு விடுதிகளும் தென்பட்டன.

விதம் விதமான Designer ஆடைக் கடைகள் ஆங்காங்கே தென்பட்டன. மக்கள் படகினை நிறுத்தி வியாபாரம் செய்யலாம். (இது போல நம் நாட்டின் காஷ்மீர் மாநிலத்தின் தலை நகரான தல்(Dal Lake) ஏரியில் வியாபாரம் செய்கிறார்கள். இறங்கி பொருட்களை வாங்கினோம். )

ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரம் “குட்டி வெனிஸ்” எனக் கூறப்பட்டாலும் அங்கே கால்வாய்கள்களும் பாலங்களும் அகலமாக இருந்தன.

தண்ணீர் கருப்பு நிறமாக சற்றே அசுத்தமாக இருக்கிறது. பாசி நாற்றம் அடித்தது. எங்கே சென்றாலும் பொருட்களை தொட்டுப் பார்க்கும் வழக்கம் எனக்குண்டு. அப்படி செய்தால் தான் நானே அதை உணர்ந்து பார்த்த திருப்தி கிடைக்கும். தண்ணீரை தொட்டு பார்த்த போது படகோட்டி No எனக் கூறினார். பல ஆயிரம் வருட தண்ணீர், கிருமிகள் இருக்கும் என தடுத்து விட்டார்.

எப்படி தண்ணீருக்குள் நிற்கும்படி பெரிய கட்டிடங்களை கட்டினார்களோ என மிக வியப்பாக இருந்தது.

அந்தத் தீவில் வசித்த மக்கள் பலரும் Mainlandற்குக் குடிபெயர்ந்து சென்று விட்டதால் பல வீடுகளும் காலியாக உள்ளன. சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து செய்யப்படும் தொழில்களே நடைபெறுகின்றன .

உலக வெப்பமயமாதலின் விளைவாக சில வருடங்களுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்து மார்க்ஸ் ஸ்கொயரில் நீர் உள்ளே புகுந்து விட்டது என அறிவோம். இந்த பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி வருவதாகக் கூறப் படுகிறது.

குறுகிய லேன்களை விட்டு அகலமான பகுதிகளுக்கும் படகு சென்றது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே சென்றதில் 40 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை.


நானும் வெனிஸ் நகரில் படகில் பயணித்தேன் என்பதை இன்று நினைத்தாலும் கனவு போல உள்ளது.

படகுத் துறையிலிருந்து மார்க்ஸ் ஸ்கொயருக்கு வரும் வழியில் அருகில் அமைந்துள்ள venetian market (நம் தி நகர் ரங்கநாதன் தெரு போல தெருவோராக கடைகள்) வழியாக நடந்து வந்தோம். கண்ணாடிப் பொருட்கள், வளையல், பிரேஸ்லெட், ஹேர் பேண்ட், மாலைகள் போன்ற பொருட்களை யானை, குதிரை விலைக்கு விற்றுக் கொண்டு இருந்தார்கள்.

மீண்டும் மார்க்ஸ் ஸ்கொயருக்கு வந்து வந்து தரையில் அமர்ந்து கொண்டு புறாக்களையும், அங்குள்ள கட்டிடங்களின் அழகினை நிதானமாகக் கண்டு களித்தோம்.

வெனிஸ் வண்ணக் கண்ணாடிப் பொருட்களுக்குப் பிரசித்தி பெற்றது. இந்நகருக்கு அருகில் உள்ள Murano என்னும் ஊரில் இந்த வகைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. கண்ணாடிப் பொருட்கள் விற்கும் கடைகள் சிலவும் Mark’s Squareல் உள்ளன.

எங்கள் பயணத் திட்டத்தில் [வழக்கம் போல] நேரமிருந்தால் Murano கண்ணாடித் தொழிற்சாலைக்கு செல்வோம் என்று இருந்தது. நேரம் இருந்தது ஆனால் எங்களுடன் வந்த மக்களுக்கு அதை காண சுவாரசியம் இல்லை. சிலர் மட்டுமே பார்க்க விரும்பினோம்.

வழிகாட்டியை நான் தொல்லை செய்ததில் மார்க்ஸ் ஸ்கொயரிலேயே ஒரு சிறு Demonstration / Showroom பகுதிக்கு அழைத்து சென்றார்.

வண்ண கண்ணாடியை உருக்கி ஷோகேஸில் வைக்கும் பொருள் ஒன்றை செய்து காண்பித்தார் ஒரு கலைஞர். [இதே போல வண்ணம் இல்லாத கண்ணாடியினால் பொருட்கள் செய்யம் முறையை சென்னையில் உள்ள Dakshinchitraவில் ஒரு கலைஞர் செய்து காண்பித்ததை அதற்கு சில வருடங்கள் முன்பே பார்த்திருக்கிறேன்]

அங்கேயே உள்ள கடையில் விற்பனைக்கான பொருட்களை பற்றிய விவரங்களை தந்தார்கள். திருமணத்தில் மணமக்கள் Wine குடிப்பதற்கென பிரத்யேகமாக சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் கோப்பைகள் வைத்திருந்தார்கள். ஒரு ஜோடி 110 யூரோக்கள் என விலை சொன்னார்கள்.

எங்களுடன் வந்தவர்களின் கமெண்ட், “நாங்களோ வயதானவர்கள் இந்த வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை அப்படி செய்தாலும் Wine குடித்து திருமணம் என்பது சாத்தியமில்லை அதனால் நாங்கள் வாங்க மாட்டோம்.”
இவர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் வகையை சேர்ந்தவர்கள். சீனாவிற்கு சென்ற போது இது போன்ற பொருட்களை வாங்கி வந்த போது, வீடு வந்து சேர்கையில் கண்ணாடி துகள்கள் தான் இருந்தனவாம்.

சலிக்க சலிக்க நடந்து இந்த தீவை சுற்றிப் பார்த்து விட்டு மாலை 4.30 மணியளவில் படகுத் துறையை அடைந்தோம். இத்தாலியின் பிரசித்தி பெற்ற Gelato (ஐஸ்க்ரீம்)வை வாங்கி சாப்பிட்டபடி கடற்கரையில் அமர்ந்து, எதிரில் தெரிந்த மிகப் பிரம்மாண்டமான Cruise கப்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டே எங்கள் படகுக்காக காத்திருந்தோம்.

6 X 6 பேர் மட்டுமே Gondola வில் சென்றோம். மற்றவர்கள் என்ன செய்தார்கள் என விசாரித்ததில் அவர்கள் மீண்டும் பெரிய மின்சார படகில் கடல் பகுதியில் சென்று வந்ததாகக் கூறினார்கள். குறுகிய கால்வாய் பயணம் தானே வெனிஸ் நகரின் சிறப்பு??

மீண்டும் mainland வெனிஸுக்கு மின்சாரப் படகில் சென்று அடைந்தோம்.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நம் தி.

நகர் ரங்கநாதன் தெரு போல ஒரு கடைவீதிக்கு வழிகாட்டி அழைத்து சென்றார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் Lucerne நகரில் வாங்கிய பொருட்கள் இங்கே 1/2 அல்லது 1/4 விலையில் கிடைத்தன. அங்கே 10 யூரோக்களுக்கு வாங்கிய குல்லாய் இங்கே 5 யூரோக்கள். நம் மக்கள் இந்த கடைத்தெருவில் அமோகமாக வியாபாரம் செய்தார்கள். நாங்கள் வழக்கம் போல Fridge magnets வாங்கினோம்.

பேருந்தில் ஏறி 30 நிமிடப் பயணத்தில் உள்ள Padua நகரை அடைந்து, அங்கிருந்த இந்திய உணவு விடுதியில் உண்டு முடித்து பின்னர் தங்கும் விடுதிக்கு சென்றோம். ஒரே இரவு மட்டுமே Hotel Radisson Blu வில் தங்கினோம் என்பதால் மறு நாளுக்கு வேண்டிய பொருட்களை தனிப் பையில் வைத்துக் கொள்ள சொல்லி இருந்தார்கள். பெட்டிகளை பேருந்தை விட்டு கீழே இறக்கவில்லை.

ரோம்…!

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...