Thursday, 9 December 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-9] Rhine falls – Wattens, Innsbruck - Austria

April 15, 2016 

ஸ்விட்சர்லாந்து ஜெர்மனி நாடுகளின் எல்லையில் அமைந்த ரைன் நீர்வீழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு அங்கிருந்து கிளம்பி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Wattens என்னும் ஆஸ்திரிய நகரை நோக்கி சென்றோம்.

அந்த நகரை சென்றடையும் நேரத்தில் ஆஸ்திரிய நாட்டைப் பற்றி சில செய்திகளை அறிந்து கொள்வோமா?

வியன்னா இதன் தலை நகரம்.Alpine நாடுகளில் ஒன்றான இந்த நாடு முழுவதுமாக ஆல்ப்ஸ் மலை மீதே அமைந்துள்ளது. 32% நிலப்பகுதி மட்டுமே கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மற்ற பகுதிகள் உயரமான மலைப் பகுதிகளே. [கடல் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ஊர் எத்தனை உயரம் என்று சொல்வது கடல்மட்டம் எனப்படுகிறது. உதாரணமாக சென்னை கடல் மட்டத்திலேயே அமைந்த ஊர். உயரம் கூடக் கூட குன்று, பீடபூமி, மலைப்பகுதி என வகைப்படுத்தப் படுகிறது.] அந்த வகையில் 500 அடி என்பதே சமவெளியை விட உயரமான பகுதி தான் இல்லையா?

நமக்கு ஏற்கனவே தெரிந்த பிரான்சு நாட்டின் பதினாறாம் லூயி மன்னனை மணந்து பிரஞ்சுப் புரட்சியின் போது கில்லட்டினுக்கு தன் உயிரைத் தந்த அரசி மேரி அன்டாய்னெட் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர்தான்.

Sigmund Freud, Alfred Adler(மனோதத்துவம்), Chrisitian Doppler(அறிவியலாளர்), Mozart (இசை மேதை), Arnold Schwarzenegger (ஹாலிவுட் நடிகர்), Peter Drucker (பொருளாதார நிபுணர்), Adolf Hitler (அரசியல்) என பல புகழ் பெற்ற பிரபலங்களை இந்த நாடு உலகுக்குத் தந்துள்ளது. Interpol ஆரம்பிக்கப்பட்டதும் இந்த நாட்டில் தான்.

யூத மக்கள் சம்மந்தப்பட்ட Aryanization, Holocaust concentration camps போன்றவைகளும் இந்த நாட்டின் வரலாற்றில் இடம் பெறுகின்றன.

Alpine நாடுகளில் ஒன்றான இந்த நாட்டில் பனி சார்ந்த விளையாட்டுக்களுக்கும் பஞ்சமில்லை. 1964 & 1976ல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் Innsbruck நகரில் நடைபெற்றன.

அளவில் சிறிய நாடாக இருந்தாலும் ஐரோப்பாவின் மத்தியப் பகுதியில் அமைந்திருப்பதால் இந்த நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு [infrastructure] மிகச் சிறப்பாக உள்ளது. முற்றிலும் ஆல்ப்ஸ் மலை மேல் அமைந்த நாடு என்பதால் மலையைக் குடைந்து சுரங்கப் பாதைகள்[tunnel] கட்டப்பட்டு சாலைகளும் ரயில் பாதைகளும் அமைக்கப் பட்டுள்ளன, அந்த நாட்டின் மொத்த சாலை நீளத்தில் 16% சுரங்கப் பாதைகளே.  

சாலை போக்குவரத்துக்கு என தனி சுரங்கப் பாதைகள் (இதில் one-way, two-way என தனித் தனியாக உள்ளன), ரயில் போக்குவரத்துக்கு என தனி சுரங்கப் பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆஸ்திரியப் பயணத்தின் சிறப்பம்சம் (highlight) சுரங்கப் பாதைப் பயணங்கள் தான்.

ரைன் நீர்வீழ்ச்சி தொடங்கி வாட்டன்ஸ் நகரை அடையும் வரை எங்கெங்கும் சுரங்கப் பாதைகளே. மலையை முழுவதுமாகக் குடைய வேண்டிய இடங்களில் அரை வட்ட வடிவிலும் [semicircle] ஒரு பக்கம் மலை ஒரு பக்கம் சம தளம் என இருக்கும் இடங்களில் காங்க்ரீட் தூண்களை கட்டியும் பாதை அமைக்கப் பட்டுள்ளது. [இந்தியாவிலும் தற்சமயம் இமயமலைத் தொடரைக் குடைந்து மணாலி – லடாக் பாதைகள் வடிவமைக்கப் பட்டு கடும் பனியிலும் எந்த தடையும் இல்லாமல் பயணிக்க வகை செய்யப் பட்டுள்ளது. எங்கள் மணாலி பயண சமயத்தில் இது தொடர்பான வேலைகள் நடைபெற்றதைக் கண்டோம்.] 

இந்த சுரங்கப் பாதைகள் மிக நேர்த்தியான பராமரிப்புடன் உள்ளன. இதனுள்ளே செல்லும் போதும் முக்கிய சாலைகளில் செல்வது போல மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சுரங்கத்தின் உள்ளே தேவைக்கேற்ப விளக்குகள் உள்ளன. சரியான ventilation system, ஆங்காங்கே அவசர உதவி தொலைபேசிகள் மற்றும் அவசர காலத்தில் வெளியேற கதவுகள் அமைக்கப் பட்டுள்ளன.

சுரங்கப்பாதைகள் 1,000 மீட்டர் முதல் 15,000+ மீட்டர் நீளத்தில் உள்ளன. [1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்]

வழியில் Arlberg என்னும் ஊரில் அமையப் பெற்ற 15,000+ மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைக் கடந்து சென்றோம்.  இந்த சுரங்கத்தில் பயணித்தது அற்புதமான, வித்தியாசமான பயணமாக இருந்தது.

ஏறக்குறைய15 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை முடிவே இல்லாதது போல சென்று கொண்டிருந்தது.  8 நிமிடங்கள் அந்த சுரங்கத்தைக் கடக்கத் தேவைப் படுகிறது.


Arlberg நகரம் ski tourism ற்கு புகழ் பெற்றது. இந்த சுரங்கப்பாதையை தவிர்த்து 10 கிலோமீட்டர் நீள சுரங்க ரயில் பாதையும் இந்த பகுதியில் உள்ளது.

செல்லும் வழியெங்கும் அருகிலேயே ரயில்களும் சென்று கொண்டிருந்தன.

மலைகளை இணைக்கும் வண்ணம் ஆங்காங்கே உயரமான பாலங்கள் தென்பட்டன.

அடிவாரத்தில் பச்சை புல்வெளியும் சிகரங்களில் வெண்பனியுமாய் தெரிந்த ஆல்ப்ஸ் மலைகளின் சுரங்கப் பாதைகளினூடே பயணித்தது கண்ணாமூச்சி விளையாடுவது போல இருந்தது.

வழியில் Arlberg நகரின் வெளிப்புறத்தில் சிறிது ஓய்வு/மதிய உணவுக்குப் பிறகு வாட்டன்ஸ் நகரின் Swarovski Kristallwelten (Crystal Worlds) சென்றடைந்தோம்.

ஐரோப்பியப் பயணத்தில் நான் பார்க்க வேண்டும் என மிகவும் விரும்பிய இடங்களில் இதுவும் ஒன்று.

Swarovski நிறுவனம் Daniel Swarovski என்பவரால் 1895 ஆம் வருடம் நிறுவப் பட்டது.  இந்த நிறுவனம் பைனாகுலர்கள், டெலஸ்கோப்புகள் போன்றவற்றில் உபயோகப் படுத்தப்படும் கண்ணாடிகள், நகைகள், drilling cutting போன்றவைகளுக்கான ஆயுதங்கள் என பலவற்றையும் தயாரித்து உலகளவில் விற்பனை செய்கிறது. Swarovski நகைகள் உலகெங்கும் விரும்பி அணியப் படுகின்றன.

நகைகளில் பயன்படுத்தப் படும் கற்கள் வைரம் போல பளபளப்புடன் ஜொலிப்பது மட்டுமல்லாமல் என்றென்றும் மங்காமல் அதே ஜொலிப்புடன் காணப்படுகின்றன.

Daniel Swarovski யின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் கிறிஸ்டல் கற்களாலேயே அமையப் பெற்ற அருங்காட்சியகம் 1995 ஆம் ஆண்டு Wattens நகரில் நிறுவப்பட்டது. நுழைவாயிலில் ஒரு அரக்கனின் முகம் போன்ற தோற்றத்தில் ஒரு நீரூற்று அமைக்கப் பட்டுள்ளது. அதனருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆரம்பமே அசத்தல்.

வெளிப்புறத்தில் கிரிஸ்டல் மேகங்களால் ஆன பெரிய தோட்டம் உள்ளது. மரங்களின் மேலே பனி படர்ந்திருப்பது போல உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தினை சுற்றிலும் சிகரங்களில் பனியுடன் கூடிய மலைத் தொடர்களே தென்பட்டன. வெயிற்கால பகல் நேரம் என்பதால் குளிரில்லை.

நுழைவாயில் வழியே உள்ளே செல்ல அனுமதி சீட்டு வாங்க வேண்டும். அங்கே சென்றதும் எங்கள் கைகளில் அனுமதி சீட்டுக்கள் தரப்பட்டன. Brochureஐ எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

உலகப் புகழ்பெற்ற இந்த கிரிஸ்டல் அருங்காட்சியகம் 17 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. தற்காலம் மற்றும் முற்காலத்தை குறிக்கும் வண்ணம் பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.


உள்ளே நுழைந்ததும் வண்ணக் கற்கள் பதிக்கப் பட்ட சுவர்களுடன் கூடிய பகுதி. விளக்குகளின் உதவியினால் வானவில்லையும் விஞ்சும் வர்ண ஜாலத்தை அங்கே அனுபவித்தோம்.

ஸ்வரோவ்ஸ்கி நிறுவனத்தின் அடையாளச் சின்னமான (logo) அன்னப்பட்சி (swan), உலகின் மிகச் சிறிய மற்றும் பெரிய கிரிஸ்டல் கற்கள், பல்வேறு சிலைகள், உலகப் பிரசித்தி பெற்ற Salvador Dali போன்றோரின் கைவண்ணங்கள், உலகப் புகழ் பெற்ற கட்டிடங்கள் (தாஜ்மஹால், லண்டன் பக்கிங்காம் அரண்மனை) என எங்கெங்கும் கண்ணைக் கவரும் கிரிஸ்டல் வடிவமைப்புகள் உள்ளன.

17 underground Chamber of wonders (Winter sceneries), Play tower and Open-air playground, Chambers of Arts and Curiosities, Carousel (made of 15 million crystals), Swarovski Store, Crystal cloud, Restaurant என பல பகுதிகளை கொண்ட இந்த அருங்காட்சியகத்தை நிதானமாகக் கண்டு களித்தோம்.

ஆங்காங்கே மிதமான விளக்குகளுடன் ஒலி ஒளிக் காட்சிகளும் அமைக்கப் பட்டுள்ளன. கிரிஸ்டல் நுழைவாயில்களின் உள்ளே புகுந்து புகுந்து சென்றது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. திரைப்படங்களில் கனவுக் காட்சிகளில் காட்டுவார்களே அது போன்ற வடிவமைப்புகள்.

உலகின் மிகப் பெரிய ஸ்வரோவ்ஸ்கி ஷோரூம் இங்கே உள்ளது. அந்த நிறுவனத்தின் எல்லாத் தயாரிப்புக்களும் (டெலெஸ்கோப், மைக்ரோஸ்கோப் கண்ணாடிகள்), நகைகள் என அனைத்தும் விற்பனைக்கு உள்ளன. பார்க்கப் பார்க்க பரவசம் தரும் பகுதி இது. 

இந்த நிறுவனம் Wattens நகரைத் தலை நகரமாகக் கொண்டுள்ளதால் விலையும் நமக்கு சாதகமாகவே உள்ளது. [அச்சமயம் விலை அதிகம் என்றே தோன்றியது. சென்னை phoenix mallல் ஒரு தோடு வாங்கிய போது தான் Wattens கடையில் விலை எவ்வளவு குறைவு என்பது புரிந்தது.]


16 கேரட்டில் க்ரிஸ்டல் கல் பதிக்கப் பெற்ற செயின் மற்றும் தோடுகளை அங்கே வாங்கினேன். மற்றவர்களுக்குப் பரிசளிக்கும் வகையில் கற்களையும் விற்பனை செய்கிறார்கள். அவற்றையும் வாங்கி வந்து உறவினருக்கு பரிசாக அளித்தேன்.

Innsbruck நகரிலிருந்து தினமும் shuttle பேருந்துகள் நான்கு முறை இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து செல்கின்றன.

அருங்காட்சியகத்தின் வாசலில் பேருந்து நிற்கும் பகுதியில் Daffodil பூக்கள் காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.

வெளியில் வந்து சிறிது நேரம் அந்த இடத்தின் சுற்றுப் புறத்தை ரசித்து விட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Innsbruck நகரை நோக்கி புறப்பட்டோம்.

Innsbruck என்னும் பெயருக்கு “Bridge over the Inn” என்பது பொருள்.


இந்த நகரம் Tyrol என்னும் மாநிலத்தின் தலை நகரம் மற்றும் ஆஸ்திரியாவின் ஐந்தாவது பெரிய நகரமும் ஆகும். Inn என்னும் நதி பாயும் Wipp பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த ஊர். (பள்ளத்தாக்கு என்பது இரண்டு மலைகளுக்கிடையிலான சமவெளி என சொல்லலாம்).

இந்த நகரம் பனி விளையாட்டுக்கு உலகளவில் பிரசித்தி பெற்றது. 1964,1976 Winter Olympics, 1984,1988 Paralympics மற்றும் 2012 Winter Youth Olympics போன்றவைகள் இந்த ஊரில் நடைபெற்றன.

இரண்டாம் உலகப் போரில் குண்டு வீச்சுக்கு ஆளாகி மீண்ட இந்த ஊர் ஹிட்லர் காலத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் சிறப்பு பெற்றது.

ஆஸ்திரியா ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் Maria Theresa 1740-1780 முடிய ரோமப் பேரரசை ஆண்ட அரசி ஆவார். இவர் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் இன்றளவும் சிறந்த அரசியாகக் கருதப் படுகிறார்.

அவரது பெயரில் அமைந்துள்ள வீதியான Maria-Theresien-Straße என்பது 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரின் New Town ஆக இருந்தள்ளது. தற்காலத்தில் இந்த தெருவானது முக்கியமான கடைவீதியாக செயல்படுகிறது. Baroque கட்டிடக் கலையுடன் கூடிய கட்டிடங்களை இங்கே கண்டோம். [மிக்க அலங்காரத்துடன் கூடிய வகை கட்டிடங்கள் – highly decorative and theatrical style]

இந்த சாலையில் நடந்து சென்றால் வரும் Old town பகுதியில் அமைந்துள்ள, இந்த நகரின் முக்கிய அடையாளமாக உள்ள Golden Roof எனப்படும் Gothic architecture முறைப்படி கட்டப்பட்ட தங்கக் கூரையுடன் கூடிய வரலாற்றுச் சின்னமான கட்டிடத்தைக் காணலாம்.

Emperor Macmilian 1 என்பவர் Bianca Maria Sforzaவை மணந்ததன் அடையாளமாகக் கட்டப் பட்டது இந்தக் கட்டிடம். 2,657 தாமிரத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டு Gilding முறையில் இந்தக் கூரை அமைக்கப் பட்டுள்ளது. [Gilding என்பது உலோகத் தகட்டினை மிக லேசாக தட்டி அதன் மேல் தங்க முலாம் பூசுதல். பொதுவாக வெள்ளித் தகட்டின் மேல் தங்க முலாம் பூசப்படுகிறது.  கில்ட் (gild) நகை எனக் குறிப்பிடும் வழக்கம் நம்மிடையே உண்டே!]

இந்த அரண்மனையின் உட்பகுதியும் சிறந்த வேலைப்படுகளுடன் அமைக்கப் பட்டுள்ளதாக அறிந்தோம். உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

அரசரும் அரசியாரும் இந்த உப்பரிக்கையில் நின்று கொண்டு கீழே உள்ள சதுரமான பகுதியில் [Town square] நடைபெறும் விழாக்கள், போட்டிகள், மற்ற நிகழ்வுகளைக் கண்டு களிப்பார்களாம்.

ஐரோப்பிய சரித்திரத்தை ஆராய்ச்சி செய்தவர்கள் இது போன்ற உப்பரிக்கைகளுடன் கூடிய கட்டிடங்கள் கி.பி பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப் பட்டதாகக் கூறுகிறார்கள்.

உப்பரிக்கை கலாச்சாரம் நமக்கு புதிதல்ல எனத் தோன்றியது.

ஆதி காவியம் எனப்படும் ராமாயணத்தில் ராமனும் இலக்குவனும் மிதிலை நகரின் வீதிகளில் நடந்து சென்ற போது, ஜனகரின் அரண்மனை உப்பரிக்கையில் நின்றிருந்த சீதை கண்டதாகவும் அதே தருணத்தில் ராமனும் சீதையை நோக்கியதாகவும் ஒரு சம்பவம் உப்பரிக்கையைக் களமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. [அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்].

இந்தப் பகுதியில் சிறிது நேரத்தை செலவழித்து விட்டு மீண்டும் நடந்து சென்று Imperial Palaceஐ அடைந்தோம். மாலை மங்கும் நேரத்தில் சூரியனின் கிரணங்கள் பட்டு பனிச் சிகரங்கள் தங்க நிறத்தில் மின்னின.


கடைவீதியில் ஆங்காங்கே வாசலில் நாற்காலி/மேசைகள் போடப்பட்டு உணவு விடுதிகள், souvenir கடைகள், விதம் விதமான டிசைன்களில் மெழுகுவர்த்தி விற்கும் கடைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தோம். பல தரப்பட்ட மக்கள் இருந்தாலும் கூட்டமில்லை. வாகனங்களும் அதிகமில்லை.  

பேரரசர் முதலாம் மேக்மிலியனால் (Emperor Macmilian 1) கட்டப் பட்ட இந்த அரண்மனை பிற்காலத்தில் மரியா தெரசாவால் புதுப்பிக்கப் பட்டது. தற்சமயம் ஐந்து நட்சத்திர விடுதியாக செயல்படுவதாக எங்கள் வழிகாட்டி கூறினார். உள்ளே சில பகுதிகளை மட்டும் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டென்றாலும் எங்கள் வழிகாட்டி அழைத்துச் செல்லவில்லை.

மிகப் பெரிய அந்த அரண்மனையின் முன்பகுதியில் டூலிப் மலர் செடிகளால் ஆன தோட்டம் உள்ளது. பல வண்ணங்களில் டூலிப் மலர்கள் பூத்திருந்தன. மாலை மங்கும் நேரத்தில் விளக்கொளியில் காட்சியளித்த அந்த அரண்மனையின் முன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.


இந்த நாடே ஆல்ப்ஸ் மலை மேலே அமைந்துள்ளது என்று முன்பே அறிவோம். பனி மலைகள் இருந்தால் நிச்சயமாக அங்கே பனி விளையாட்டுக்களும் உண்டு என அறிவோம்.

Innsbruck ski resorts என்பது பனி விளையாட்டான ஸ்கீயிங் செல்பவர்களுக்கானது. பனிமலை சிகரங்களுக்கு சென்று பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபடலாம்.

இந்த நகருக்கு வருகை தரும் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபடுவதற்காகவே உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். ski resorts களுக்கு செல்ல விரும்புபவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து அனுமதி சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்பது தான் விதி.

Wattens நகர கிரிஸ்டல் மியூசியம் மற்றும் நகரின் மையத்திலிருந்தும் பல பேருந்துகள்(Shuttle bus) செல்கின்றன. மலைச் சிகரங்களுக்கு செல்லும் கேபிள் கார் நிலையங்களுக்கு செல்ல வசதியாக பாதாள ரயில்களும் செல்கின்றன.

Ski resorts அழைத்து செல்வதாக எங்கள் பயணத் திட்டத்தில் இருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக செல்ல முடியவில்லை. நேரமிருந்தால் மட்டும் பனி சறுக்கு விளையாடி இருப்போமா என்ன😊

இரவு உணவை இந்திய உணவகத்தின் முடித்துக் கொண்டு Bon Alpina என்னும் நட்சத்திர விடுதியை இரவு பத்து மணியளவில் சென்றடைந்தோம்.


இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்பு நாங்கள் தங்கப் போகும் விடுதிளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பி கூகிள் ஐயனாரைத் தேடிய போது Bon Alpina விடுதி மிகப் பெரியதாகத் தோன்றியது. ஆனால் நேரில் அப்படி தோன்றவில்லை. நாங்கள் தங்கி இருந்த அறையின் கூரை சரிவாக தலையை முட்டும் வண்ணம் இருந்தது. ஜன்னலில் தெரிந்த தேவாலயமும் பனி படர்ந்த ஆல்ப்ஸ் சிகரங்களும் மனதிற்கு இனிமையாக இருந்தன.


விடுதியின் வரவேற்பு அறையில் பனி விளையாட்டுக்களுக்கான விவரங்கள், Brochures இருந்தன.

மறுநாள் காலை உணவிற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.

வெனிஸ்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...