Saturday, 19 August 2017

நீலச்சாயம் வெளுத்து போச்சு .....


அமெரிக்கா  போன்ற குளிர்ப்பிரதேசங்களில் துணி துவைப்பதென்பதே ஒரு அனுபவம் .

ஆய கலைகள் 64 க்கு பிறகு 65 ஆவது கலையாக துணி துவைப்பதை  சேர்த்துக் கொள்ளலாம்.

அட்டை கட்டை வீடுகளை நினைவிருக்கிறதா? குளியலறையில் மரத்தாலான தரைப் பகுதி.  எங்கும் தண்ணீர் வெளியேற வசதி இல்லை. எல்லார் வீட்டிலும் bathtub  இருக்கும்.

இங்கே துணிகளைத் துவைக்க 4 options உண்டு.

(1)துணிகளைத் துவைக்க இயந்திரங்களைத் தான் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடவசதிக்கு ஏற்ப வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ துணி துவைக்கும் இயந்திரத்தை வைத்திருப்பார்கள்.(கார் கராஜ், நடைபாதை, அறை)
(2)சில வீடுகளில் 3-4 வீடுகளுக்கு சேர்த்து  ஒரு பொது இடத்தில் வைத்திருப்பார்கள். யாருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
(3)பெரிய்ய bedsheet,comforter போன்றவைகளை துவைக்க அருகிலிருக்கும் laundromat செல்ல வேண்டும். மிகப் பெரிய அளவிலான இயந்திரங்களை பொதுவான ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள்.
(4) பாத் டப் உள்ளே கையால் துவைப்பது.


இந்தியாவில் dry cleaning கடைகளில் இருப்பது போல பெரிய்ய washer (washer ஒரு முறை துவைத்து முடிக்க 20 நிமிடங்கள் ), பக்கத்தில் dryer . துவைத்து முடித்த துணிகளை dryer ல் போட்டால் ஒரு மணி நேரத்திற்குள் காய வைத்து தரும். சுடச் சுட அப்பளம் போல ...  அப்படியே மடித்து வைத்துக் கொள்ளலாம்.... ஹார்லிக்ஸ் போல .
முக்கியமான விஷயம் ,பணம் செலுத்தினால் மட்டுமே 4 வீடுகளுக்குப் பொதுவான இயந்திரங்களோ Laundromat இயந்திரங்களோ வேலைசெய்யும்.(machine உடன்  இணைந்தே coin slot இருக்கும் . குவார்ட்டர் நாணயங்களை அதனுள்ளே சொருகி அழுத்தி விட வேண்டும், $1 1/2  per load - 6 quarter நாணயங்களை சொருகி அழுத்தினால் இயந்திரம் இயங்க ஆரம்பிக்கும்) Mr .Bean பூனைக்குட்டியையும் சேர்த்துப்  போட்டுத் துவைப்பாரே , நினைவிருக்கிறதா ?

ஓரளவு ஐடியா வந்திருச்சா ? இப்போ துவைக்கலாம் வாங்க ....

பெரிய அளவிலான washer என்பதால் வாரம் ஒரு முறை தான் துவைப்பது வழக்கம். பிரதி செவ்வாய் மகளது laundry day . (Option 2 இங்கே)
முதல் நாள் இரவே அம்பாரமாய் குவிந்து  இருக்கும் துணிகளை முதலில் வகைப்படுத்தித் தருவார்கள். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடைகள் தனித் தனியாக.
Rule no 1: சாக்ஸ்  பெரியவர்கள் load உடன் சேரணும்
கடந்த 2 மாதங்களாக laundry வேலை என் scope  என்பதால் காலை எழுந்தவுடன் laundry. Liquid soap , laundry room சாவி, அழுக்குத் துணிகள், quarter நாணயங்கள்   சகிதம் கிளம்பி முதல் load ஆரம்பம்.(Rule No 2:  கதவை திறந்ததும் சாவியை கையில எடுத்து வெச்சுக்கோ, கதவுக்கு authomatic பூட்டு) ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு washer load முடியும். உடனே dryer க்கு மாற்ற வேண்டும், quarter சகிதம் தான். (Rule no 3:  fabric  softner  காகிதங்கள் 4/5 ஐ மறக்காமல்  போடவேண்டும்). இல்லையென்றால் துணிகள் வறட்டி போல காய்ந்து விடும்.
(laundry room வீட்டிற்கு நேரெதிரில்).
கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் 2 மணி நேரங்கள் கடக்கும். (இடையில் மகள் /மருமகனின் குரல் : அம்மா...எதிர் வீட்டு பாட்டிம்மா laundry room பக்கம் போறாங்க )

ஸ்ஸ்ஸ் ..........ஸப்பா .... இந்த வார laundry வேலை முடிஞ்சுது .........

பொறுமை பொறுமை... இனி தான் ஆரம்பமே ....

Laundry basketகள் நிரம்பி வழியும் . (7 நாட்கள் பயன்படுத்திய துணிகள்.) சூடாக இருக்கும் போதே மடிக்க சுலபம் .(அதை விட எனக்கு வேறென்ன வேலை ??)

பெரியவர்களின் துணிகளை மடிக்கும் போது வரும் சந்தேகம். சின்னப்பைய்யா ..இந்த பனியன் அம்மாவுடையதா அப்பாவுடையதா?

பேரன்களின் துணிகள் பலவகை. ஒரு நாளில் 3 set உடைகள். பள்ளிக்கு/வெளியிடங்களுக்கு , வீட்டிற்கு , இரவு உடை என விதம் விதமாக அணிவார்கள்.
பருத்தி, synthetic ,fleece .
அரைக்கை சட்டை, முழுக்கை சட்டை, கையில்லாத சட்டை  
Full  pants , half pants (சின்ன பேரன் : It's so  weird to go in half pants to school)
underwears (vests & briefs),socks
அண்ணண்(8 வயது) ,தம்பி (4 வயது)

மேற்கண்ட வகைகளில் பிரிக்க வேண்டும். இருவரது சட்டையும் ஒரே அளவு போல தோன்றும், சமயத்தில் . (இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பேரன்கள் இருவருக்கும் இதில் வரும் எல்லா category யும் அத்துப்படி.)

பெரியவன் உபயோகித்து கழித்து, தற்சமயம் சின்னவன் உபயோகிப்பது என்ற category இது .
ஒரு சுமாராக வகைப்படுத்தி மடித்து முடிப்பேன். அடுத்து , யார் laundry baskets ஐ மாடிக்கு கொண்டு செல்வது என்பது .

சரி ....ஒரு வழியாக மேலே கொண்டு சென்றாகி விட்டது. மகள் மீண்டும் நான் மடித்து வைத்த  துணிகளை வகைப்படுத்துவார் .(அம்மா ... இது சின்னப் பயனுடையது , இது வீட்டுக்கு போடறது ...)
அடுக்கி வைக்க நேரமில்லாத நாட்களில் கூடையிலிருந்தே எடுத்தாள ஆரம்பிப்பார்கள் சின்னப் பயல்கள்.(மொத்தத்தையும்  கலைத்து விடுவார்கள் )

இடையிடையே என் துணிகளுக்கான option , as you guess , option 4. நம் ஊர் துணிகள் இங்குள்ள இயந்திரங்களுக்கு ஏற்றவை அல்ல , மிக சிலவை தவிர. சோம்பல் பட்டால் .... கமல் ஹாசன் போல நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ...பாட வேண்டியது தான் . (என் விருப்ப நிறம் நீலம்)

திரும்பி பார்த்தால் திங்கள் கிழமை .

மீண்டும் laundry day ..............



Sunday, 16 April 2017

*சம்யக் ஆசீத் !!


கடந்த மார்ச் மாதம் 21-31 சம்ஸ்க்ருத பாரதி என்னும் NGO வின் பழைய மாணவிகள் இருவர் நடத்திய சம்ஸ்க்ருத மொழி அறிமுக வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் வீட்டிற்கு மிக அருகில். (கூடுவாஞ்சேரி கிட்டே இல்லை). சம்ஸ்க்ருத மொழியை சம்ஸ்க்ருதம் வாயிலாகக் கற்பிக்கும் , மேன்மேலும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு முயற்சி மற்றும் வழக்கொழிந்து போன மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சியும் கூட.


பல வருடங்களுக்கு முன் , கொஞ்சம் படித்தேன். எழுத படிக்கத் தெரியும் ஆனால் தெரியாது. இது என் சம்ஸ்க்ருத அறிவு பற்றிய முன் கதைச் சுருக்கம். இந்த வகுப்புக்களை தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் Zabaahn sambaal ke என்று ஒரு நாடகம் (ஹிந்தி, பின்பு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது) மற்றும் சமீப கால உதாரணமாக உதாரணமாக “English Vinglish” திரைப்பட ஆங்கில வகுப்புகளை/மாணவர்களை ஒப்பிடலாம்.


2 ஆசிரியைகள்.(Adroit Angels) ;மாணவமணிகள் :25 7 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடங்கிப் எல்லா வயதினரும் இருந்தார்கள். சமஸ்க்ருதம் (1). கொஞ்சம் எழுத, படிக்க, பேச (2).எதுவுமே தெரியாமல் (3). இரண்டாவது மூன்றாவது மொழியாக பள்ளியில் (எப்போதோ) படித்தவர்கள் (4).இது போன்ற அறிமுக வகுப்புகளுக்குப் சில,பலமுறை சென்றவர்கள்( 5). எங்கெங்கு சென்னையில் சம்ஸ்குத வகுப்புகள் நடக்கிறதோ அங்கெல்லாம் யாத்திரை போல சென்று வருபவர்கள் (6) என்னை மாதிரி ரெண்டும் கெட்டான்(இது முக்கியம் இல்லையா?) என்ற ரீதியில் மாணவர்கள்.


பள்ளி மாணவர்கள், Home managers, திரைத்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், கணக்காளர் எனப் பலதுறைகளையும் சார்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்(என்னோட தமிழ் கண்ராவியா இருக்கும் மொத்தத்துல எனக்கு ஒரு பாஷையும் சரியாத் தெரியாது என்பார் ஒரு சகோதரி, தன்னடக்கம் தான்) எனப் பல மொழி பேசுபவர்கள், பல மாநிலங்களிலும் வசித்தவர்கள் என கலந்து கட்டிய உற்சாகமோ உற்சாகம் மிகுந்த மாணவமணிகள். மொத்தத்தில் Heretogenous group.


இதில் முக்கியமான விஷயம் ஆசிரியைகள் சம்ஸ்க்ருதத்தில் மட்டுமே பேசுவார்கள். பாடமும் சமஸ்க்ருத்தில் தான். ஆரம்ப நாட்களில் வார்த்தைகள் மற்றும் அபிநயம் . சாதாரண வினைச் சொற்கள் வா, போ, நில், உட்கார். கதைகளும் அப்படியே. Thirsty crow... சிறப்பு அம்சமாக இன்றைய கால கட்டத்தில் என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்கிறோமோ(contemporary usage) அந்த வகையில் பாடங்களைக் கற்றுத் தந்தார்கள். வாய் வழிக் கல்வி. எழுதி/எழுதக் கற்றுத் தருவதில்லை.(கரதூரவாணி- Handphone, Vyajanam - Fan) சம்ஸ்க்ருத வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. ஆசிரியைகள் பேசுவது புரிந்தது. இது என்ன? இது யார்? அங்கே என்ன இருக்கிறது? அவள் யார்? இப்படி சின்ன சின்னப் பாடங்கள். முதல் நாள் வகுப்பு முடிந்ததும் , நாளைக்கும் போகணுமா என்று பயந்தேன். என்னுடைய இயல்பான குணம் முன் வைத்த காலைப் பின் வைக்காதது. மீண்டும் தைரியமாகக் கிளம்பிச் சென்றேன். போகாமல் இருந்திருந்தால்?? மிகச் சிறந்த அனுபவங்களை இழந்திருப்பேன்.


வகுப்பறை அனுபவங்களில் சில:


இரண்டு ஆசிரியைகளும் ஆகச்சந்து சுப்ரபாதம்(வாங்க காலை வணக்கம்) என்று அன்பா...க ஆசையாக அழைப்பார்கள். இன்று என்ன கற்றுத் தருவார்கள் , என்ன கதை சொல்வார்கள் என்ன நாடகம் நடத்துவார்கள் என்ற ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்க, அவர்கள் இருவரும் மாறி மாறி கற்றுத் தருவார்கள்.


ஒரு concept கற்றுத் தந்தவுடன், கின்சித் யோஜனீயம் கூர்வந்தஹ வயம் ஏக ஏக வாக்யம் வதாமஹ என்பார் ஆசிரியை (கொஞ்சம் யோசித்து ஆளுக்கு ஒரு வாக்கியம் சொல்லலாம் என்பது இதன் பொருள்.) வகுப்பில் முக்கிய கட்டம் இது.(செத்தாண்டா சேகரு..) சிரிப்பு அலை போலப் பொங்கும் நேரமிது.


1.எப்போது , அப்போது.. எப்போது மாதா வருவாரோ அப்போது பாயசம் வரும். (முதல் நாள் வயதில் மூத்த ஒரு பெண்மணி பாயசம் செய்து கொண்டு வந்து தந்தார்) மாதா தினமெல்லாம் பாயசம் கொண்டு வரமாட்டார்_ சக மாணவர்கள்


2.உடன் மகன் அப்பாவுடன் பள்ளிக்குச் செல்கிறான். இது உதாரணம். சுவரில் ஒட்டி இருக்கும் சார்ட் பார்த்து சொல்லுங்க.....(ஆண்பால் வார்த்தைகள் கொண்டது) குட்டிப் பையன் : ஆசிரியர் திருடனுடன் பள்ளிக்குச் செல்கிறார்.


3.இதி (இப்படி/என்று ) "கனவு காணுங்கள்" என்று திரு அப்துல் கலாம் சொன்னார். பலரும் இப்படி சம்ஸ்க்ருதத்தில் Quotation லாம் சொன்னாங்க. என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, கா கா கா என்று காக்கா சொன்னது என்றார். நானும் அதே போல யோசித்து வைத்திருந்தேன். டண் டண் டண் என்று கடிகாரம் ..... (என்ன வினைச் சொல் சேர்ப்பது என்று தெரியவில்லை)


தினமும் படிக்கணும் என்று என் அம்மா சொன்னாங்க வகைல சொன்னால் கூட போதுமாம். மறு நாள் ஆசிரியை விளக்கினார். :)


எல்லாரும் ஒவ்வொரு வாக்கியம் சொல்லணும் இல்லையா? ஆசிரியை அருகில் வந்து LKG குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல் உற்சாகமூட்டி, தைரியமூட்டி, பயப்படாதீங்க தெரியலைன்னா நான் உதவறேன் என்று கூறி முயற்சிக்க வைப்பார். (எல்லோராலும் எல்லா நேரத்திலும் சரியாகச் சொல்ல முடியாது, புது மொழி இல்லையா?). வாக்கியம் சொல்லும் நேரங்களில் புத்தகத்தைப் பாக்காதீங்க காகிதத்தைப் பார்க்காதீங்க , நீங்களே யோசிச்சு சொல்லுங்க என்பார் ஆசிரியை. படிக்கத் தெரியாது பகினி - இது அவரிடம் சொன்னது (பகினி- தோழி) Its already Greek and Latin. Mind voice : It is Samskrutham (samyak + krutham , good language )


மற்றொரு நாள் வகுப்பு. சம வயதினரை பெயரிட்டு அழைக்கலாம் . ராதா என்பதை ராதே... ராகவேந்திரன் என்பதை ராகவேந்த்ரஹ....வயதில் மூத்த ஆண் என்றால் மஹோதயா,வயதில் மூத்த பெண் மாதா,ஆண் என்றால் பவான் ,பெண் என்றால் பவதி,குட்டி பையன் பாலகஹ குட்டிப் பெண் பாலிகா,யூத்லாம் யுவன் யுவதி.


இப்படி 10 நிமிடங்கள் விளக்கினார் ஆசிரியை. பிறகு Brain storming session …. ............. , ............. (தன் அருகில் அமர்ந்திருந்த பெரியவரை சுட்டிக் காட்டி) மாமா இன்னும் சொல்லலை என்று ஆசிரியை பெயரைச் சொல்லி அழைத்தார் ஒரு பெண்மணி. (அலறல் தான் அழைத்தல் எல்லாம் கிடையாது ) போட்டுக் கொடுக்கும் அவசரத்தில் சமவயதினரை எப்படி அழைக்கலாம் என்பதை மறந்துட்டாப்ல :) பின்னணியில் ஒரு குரல் : மாமான்னு சொல்லாதீங்க.. “மாதுலஹ"ன்னு சொல்லுங்க


மற்றொரு நாள் உறவுகள் பற்றிய பாடம். நம்ம வீட்டு உறவுகள் மாதா(அம்மா), பிதா(அப்பா) போல உச்சரிக்க சுலபமாக உள்ளன. In laws வீட்டு உறவுகள் shwastroo (மாமியார்),swashtraha (மாமனார்), நனந்தி- நாத்தனார் தேவரஹ : மச்சினர். இந்தப் பகுதியே சிரமமாக இருக்கே....( சிலரது முணுமுணுப்பு) பின்னணியில் ஒரு குரல்: இந்தப் பகுதி மொத்தத்துக்கும் சேர்த்து ஒரு வார்த்தை இருக்கு. "சத்ரு"


ஆரம்பம், நடுவில் கடைசியில் என தினமும் மூன்று பாடல்கள் (புத்தகத்தைப் பார்த்துப் பாட அனுமதி உண்டு).


ஒரு ஆசிரியை கிஞ்சித்(கொஞ்சம்) சீரியஸ் ஆகப் பாடம் சொல்லித் தருவார். இவரது குரல் வீட்டிற்கு வந்த பிறகும் ஒலிக்கும். (உச்சைஹி வதந்து- சத்தமா வாய் விட்டு சொல்லுங்க, பயப்படாதீங்க வெட்கப்படாதீங்க)


மற்றொருவர் நகைச்சுவையாகப் பாடம் சொல்லித் தருவார். கதைகள், நாடகங்கள் அனைத்திலும் பாடத்தில் வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்வார்கள்/செய்வார்கள். அருமையான நேரங்கள். அவரது முக பாவனைகள் இந்த நிமிடமும் சிரிப்பை வரவழைக்கிறது. அந்தக் கதைகளை மற்றொரு சமயம் பகிர்கிறேன்.[ சிரிக்காமல் நாம் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பது, கதை சொல்வது என்பதெல்லாம் தனித் திறமை.] கசப்பு மருந்தை இனிப்பில் தோய்த்துக் கொடுக்கும் உத்தி இது.


என்று எப்போது எப்படி இவர்கள் அபிநயம் மூலம் பாடம் சொல்லித் தருவதை நிறுத்தினார்கள் என்றே தெரியவில்லை. சாதாரணமாகப் பேசி interact செய்தோம் . சம்ஸ்கிருதம் மிகச் சுலபமான மொழி. நாம் நினைப்பது போலக் கடினம் இல்லை. பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழியும் அழிந்து போகும் என்ற நியதிப்படி அம்மொழி தற்காலத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. இலக்கணமும் மிகச் சுலபமாக உள்ளது. நான்(ம்) நினைத்திருந்தது போல இல்லை.


தினமும் வீட்டிற்கு வந்த பிறகு அன்றைய பாடங்கள் என்னவென்று பார்ப்பேன். சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் போல நிறைய சொல்லித் தந்திருப்பார்கள். (அனைத்தும் ஸம்ஸ்க்ருதத்திலேயே) Cryptology போல அதை decode செய்வேன். குறைந்தது 2 மணி நேரங்கள் ஆகும். ஒரு நாள் 24 மணி நேரங்கள் ஆனது என்னவென்று புரிய. கற்றுத் தந்த பாடங்களின் அடிப்படையில் நானே லகு(எளிமையான) கட்டுரை, வாக்கியங்கள் என்று அமைத்து எழுதிச் சென்று காட்டுவேன். சம்யக் அஸ்தி (நம்ம good தான்) என்று எழுதித் தருவார் ஆசிரியை. LKG குழந்தைக்கு தப்பிருந்தாலும் ஊக்கம் தர Star போட்டுக் தருவது போல.


வாட்சப்பில் சந்தேகங்கள் கேட்கலாம். பதில்கள்?? இரவு 8 மணிக்கு அனுப்பப் பட்ட பதில்கள் நடுராத்திரி புரியும். அச்சச்சோ .. டீச்சர் இப்படி எழுதி இருக்காங்க நாம் பதில் போடலையே.. மரியாதைக் குறைவாச்சே என்று அந்த நேரமே பதில் அனுப்பி விட்டு மீண்டும் தூங்கச் செல்வேன். (என்ன பெரிய பதில் , நமக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தையான தன்யவாதஹ தான்- Thank you)


நிறைவு நாளன்று நாம் கற்ற வித்தைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கவிதை(அடியேன்), ஓரங்க நாடகம்(அடியேன் எழுதி வேறிரண்டு தோழிகள் படித்தார்கள்), பக்தி நாடகம், ஓரங்க நாடகம், பாடல், கட்டுரை, நகைச்சுவை நாடகம், கதை, செய்யுள் வடிவில் விடுகதை எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள். அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில், திக்காமல் தயங்காமல், சொதப்பாமல். வெளியிலிருந்து வந்திருந்த Evaluator உங்கள் மாணவர்கள் 10 நாட்களில் இப்படி அசத்திட்டாங்களே என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் இருந்தன. ஆசிரியைகளின் திறமைக்கு, உழைப்புக்கான பலன்.


சம்ஸ்க்ருதம் கற்க இனம் , மதம் , மொழி, வயது, பால் எதுவும் தடையில்லை என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று வேறில்லை.


4 நாட்களுக்கு முன்பு எளிமையான வாக்கியங்கள் அமைத்து ஒரு கதை எழுத/சொல்ல சொன்னார் ஆசிரியை. நேற்றுக் காலையில் தான் அந்தக் கதைக்கான முதல் வாக்கியம் (lead) கிடைத்தது. மஹாகாவியம் எழுத lead கிடைச்சாப்ல புல்லரித்து போயிட்டேன். அதுவும் பூர்வ காலே .. என முற்காலத்தில் என்ற வார்த்தை கிடைத்ததும்... ஆஹா..காளிதாசர் போல ஒரு feel... அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.


பூர்வ காலே ஏகம் வனம் ஆசீத்....(Long ago there was a forest)


பின் குறிப்பு : கடந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்த சமயம் , பேரனை சம்ஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் போது உடன் சென்றிருக்கிறேன். நானும் சங்கி காஷ் போறேன் என்று 3 வயதுப் பேரன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அழுவார்.


*சம்யக் ஆசீத் - நன்றாக இருந்தது

காரே கருணை இராமானுசா!!

காந்தியன்னை பெற்றெடுத்த சாந்தமூர்த்தி நீர்தானே!
கற்பகமாய் வந்துதித்த இளையாழ்வார் நீர்தானே!
கல்வியிலே சிறந்துநின்ற சிகரம் நீர்தானே!
கற்பித்தோனை மிஞ்சிநின்ற  சீடர் நீர்தானே!

பெருங்குணங்கள் நிரம்பிநின்ற பேராளன்  நீர்தானே!
பெற்றவர்தாம் பெருமைப்பட்ட பேரானந்தம் நீர்தானே!
வரதனுக்கு வாஞ்சையான இராமனுசன் நீர்தானே!
வரமாய் வந்துதித்த இலக்குமணன் நீர்தானே!

முனிவர்க்கு முனிவனான யதிராசன் நீர்தானே!
மூத்தோரின் குறிப்புணர்ந்த கூர்மதியாளன் நீர்தானே!
அரங்கனே தகுதிசொன்ன உடையவர் நீர்தானே!
அவன்கோவில் சீர்மிகு மேலாளன் நீர்தானே!

எட்டாச்செய்தி  எமக்களித்த பாஷ்யக்காரர் நீர்தானே!
எட்டெழுத்து  ரகசியம்சொன்ன எம்பெருமானார் நீர்தானே!
கீழ்ப்படிதல் குணம்கொண்ட கோமான் நீர்தானே!
கீழிருந்து மேல்செல்லும் வழிசொன்னவர் நீர்தானே!

வேதத்தின் சாரம்சொன்ன வேதாந்தி நீர்தானே!
வாதம்புரிந்து வாகைசூடிய வேதவித்து நீர்தானே!
அடியாரின் அன்புக்காகத் தமருகந்தவர் நீர்தானே!
ஆண்டாளின் சொல்காத்த கோதாக்ரஜன் நீர்தானே!

சரணாகதி தத்துவத்தை சொன்னவர் நீர்தானே!
சமத்துவத்தின் மகிமைதனை உணர்த்தியது நீர்தானே!
பூதூரில்  தானுகந்த  பூதபுரீசர் நீர்தானே!
புண்ணியத்தில் பங்களித்த புருஷோத்தமன் நீர்தானே!

பார்த்தன்போல் எட்டாவதாய்ப் பிறந்தது நீர்தானே!
பரமனின் படுக்கையான ஆதிசேஷன் நீர்தானே!
நவரத்தினங்களை உலகுக்களித்த மாமேதை நீர்தானே!
நாநிலம் நலம்வாழத் தானானவர் நீர்தானே!

வாழி நின்புகழ்! வாழிய வாழியவே!!

Tuesday, 7 February 2017

யார் இவன்???


ஆலிலைப் படுக்கை
அசத்தல் புன்னகை
இடுப்பில் அரசிலை
கண்ணன் கைக்குழந்தை


தயிர்ப் பானை
வாயில் வெண்ணை
கண்ணில் குறும்பு
கண்ணன் பாலகன்


யமுனை காளிங்க நர்த்தனம்
ஆநிரை மானிடர் சூழ
விரல் நுனியில் கோவத்தனகிரி
கண்ணன் காவலன்


பட்டாடை, கையில் குழல்
மேனியில் சந்தனம்
ஆயர்களுடன் கூடல்
கண்ணன் காதலன்


குருக்ஷேத்ர போர்க்களம்
தேரில் அர்ஜுனன்
எதிரியாய் உறவினர்
கண்ணன் சாரதி


துவாரகை அரியாசனம்
மன்னனாய் புடைசூழ
அவலுடன் சுதாமன்
கண்ணன் நண்பன்


பலப்பல உருவங்கள்
பலப்பல உவப்புகள்
பக்தர்கள் மயக்கம்
கண்ணன் மாயாவி


பிரளய காலம்
மீனின் வடிவம்
வேதங்கள் மீட்பு
கண்ணன் வேதசாரம்


பிருந்தாவன நர்த்தனம்
கோபியருடன் ஆடல்
ஜீவாத்மாவுடன் கூடல்
கண்ணன் பரமாத்மா.


அவனா இவன்?
இல்லை
இவனா அவன்??

LIMERIKRISHNA, Huh??


Who shines like a diamond in the sky
Whose presence we need to identify
Where to get the deem of HIM
Why to think than MAYOORAM
When HE awaits for us to dignify!!


P.S: This verse is in Limerick form

அவனும் நானும்!!


நானும் நீயும்
ஜீவாத்மா
நானும் அவனும்
பரமாத்மா!


ராதையும் நானும்
ஜீவாத்மா
ராதையும் கண்ணனும்
பரமாத்மா!


ராதை நானும்
கண்ணன் அவனும்
ஒன்றாகக் கூடினால்
வருவது அத்வைதம்!


நாதம் அவன்
காற்று அவள்
அவனும் அவளும் கீதமாய்
ஆவது பேரின்பம்!


நாயகனே ஈசன்
நாயகியே மனிதன்
நாயகி ஈசனுடன்
இணைவது சொர்க்கம்!


பேரின்பம் கண்ணனே
கண்ணனை நாடி
கானங்கள் பாடிக்
கலப்பது முக்தி!

எட்டி எட்டாய்...

எட்டாவது வசுதேவ மைந்தனானவன்
எட்டாவது அவதாரமாய் வந்துதித்தான்
எட்டாவது திதியில் அவதரித்தவன்
எட்டெழுத்தானது அவன் நாமம்
எட்டு ராணியரும் அவனுக்குண்டாம்
எட்டுத் திசைமுட்டும் அவன் புகழை
எட்டு அடிகளில் நாமும் பாடி
எட்டி அவன் பாதம் பற்றிடுவோம்!!

Tuesday, 20 December 2016

மின்சாரம் என் மீது பாய்கின்றது.....

ரமணன் அறிவிக்காத முதல் புயல்
ராப்பகல் கழிந்தது எதிர்பார்ப்புடனே
ஆழிப் பேரலையும் நினைவில் வந்தது - உடன்
ஆண்டுகள் முந்தைய ஊழிக் காற்றுடன்

பால் இல்லை தயிர் இல்லை
காய் இல்லை கறி இல்லை
அன்னம் செய்திட அரிசியும் இல்லையே
அவரவர் கவலை அவரவர்க்கு

மிதமாய் வீசும் காற்றின் வேகம்
மிகையாய் ஆகிப் போகும் முன்பே
வானம் இருண்டு மேகம் திரண்டு
இயற்கையின்  ஊழித் தாண்டவம்

மழை வலுக்க, மரங்கள் சரிய
உலகத் தொடர்பு அடியோடறுந்திட
நடப்பறிய செய்தித் தாள் படித்து
மரங்கள் விழுந்து இலைகள் குவிந்து
ஜுராசிக் பார்க்கான தெருக்களில் நடந்து

தண்ணீருக்காய் தவித்து, மற்றவர்க்கு உதவி,
கூடிப் பேசி, வார்த்தைகளால் விளையாடி
சிறு விளக்கொளியில்  உண்டு களித்து
இரைச்சலின்றிஅமைதியைக் கொண்டாடி
ஒருவருக்கொருவர் உதவி, ஊருக்கும் உதவி..

மின்சாரம் இல்லா மகிழ்ச்சி நாட்கள்
மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

ஆயிரம் யோசனைகள் இதற்கிடையில்......

அம்மா சின்னம்மா என்னவாகியிருக்கும்?
அய்யாவுக்கு நெஞ்சு சளி சரியானதோ?
இனியாவது புரியும்படி ட்வீட் செய்வாரா?
ஊருக்கு கிளம்பிய உறவினர் என்ன ஆனார்?

டிரம்ப் ஐயா என்ன புதுச் சட்டம் போட்டாரோ?
மும்பை நண்பர் எப்படி ஊருக்குத் திரும்புவார்?
நாளை பால் வருமா செய்தித் தாள் வருமா?
நாட்டின் பணத் தட்டுப்பாடு எப்போது சரியாகும்?

இதோ....மின்சாரம் வந்து விட்டது
எங்கும் ஒளிமயம் எங்கும் சத்தம்
தொலைத் தொடர்பு சாதனங்கள்

சிறிது நேரத்தில்....
நேற்று வரை நேரில் பேசிய நேரெதிர் வீட்டிலிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல்

Good evening ! Got cold?
Yes,Cold
Get well soon ( smileys)

ஸ்ஸ்ஸ்....ஆஆஆ..........வர்தா புயல் கடுமையாகத் தாக்கியது இம்முறை!!





































































Tuesday, 27 September 2016

தீபாவளி போனஸ் வந்தாச்சா??

சில தினங்களுக்கு முன்பு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த என் சகோதரரின் மகள், அத்தே.. எனக்கு சாந்து பொட்டு வேணும் வெச்சிருக்கீங்களா என்றார். பல நிறங்களில் சிறு குப்பிகளில் 12,16, 18 நிறங்களில் கிடைக்கும் வகை அவர் கேட்ட பொருள். அது தொடர்பான எங்கள் பேச்சுக்கள் என்னையும் ஒரு சுழலுக்குள் இழுத்துச் சென்று ஒரு பேன்சி பொருட்கள் விற்கும் கடைக்கு முன் கொண்டு நிறுத்தியது.

5-10 வயதிற்குட்பட்ட தீபாவளிப் பண்டிகை நாட்கள் . தீபாவளிக்கு முந்தைய அமாவாசை அன்று வீடு வீடாக மூட்டையில் துணிகளை எடுத்து வந்து விற்பவரிடம் , எனக்கும் என் இளைய சகோதரிகளுக்கும் புதுத் துணிகள் வாங்கி, எங்கள் தாயார் தானே தைத்து வைப்பார். அதற்கு மேட்சி மேட்சியாக வளையல் , தோடு, ரிப்பன், சாந்துப் பொட்டு எல்லாம் வாங்க வேண்டாமா? அப்படி அணியாமல் இருந்தால் எங்கள் தோழிகள் முன்னிலையில் தலைகுனிவு ஆகிடாதா??. அம்மாவை (நச்சரித்து) அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள மிகச் சில பேன்சி ஸ்டோர்களில் ஏறி இறங்கி எப்படியும் எங்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கி விடுவோம்.
பண்டிகை தினத்திற்குப் பல நாட்கள் முன்பே பலகாரங்கள் செய்யும் முயற்சியில் பெண்கள் ஈடுபட்டிருக்க, ஆண்கள் பட்டாசு வாங்குதல், காய வைத்துப் பாதுகாத்தல்(மழை , ஈரம் மட்டுமில்லைங்க..இந்த வரிசையில் நாங்களும் உண்டு). கோவாப்பரேட்டிவ் சொசைட்டியில் அப்பா 500 ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார். தாத்தா, மாமாக்கள் தனி.. 
தீபாவளியன்று அதிகாலை 2-3 மணியளவில் மாமாக்கள் ஆட்டம் பாம் எனப்படும் (சத்தம் அதிகம் வரக்கூடியது) வெடிச் சத்தத்தைக் கேட்டு எழுந்து, எண்ணை குளியல் ,பட்டாசு வெடித்தல் (மத்தாப்பூ தான், பட்டாசுன்னு கொஞ்சம் கௌரவமா சொல்லியிருக்கேன்). ஒவ்வொரு தீபாவளியன்றும் தவறாமல் தாத்தாவின் சில நண்பர்கள் வந்து செல்வார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் இரவு வரை. வேம்பு மாமாவும் அவர் பெண் ஜானகியும் காலை 6 மணிக்கே இட்டலி மற்றும் பல பலகாரங்களை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். (நாங்கள் 4 மணிக்கே பல காரம் இனிப்பு வகைகளை உண்டது தனிக்கதை.. கண்ணு பட்டுடும்ல முழுக்கதையும் சொல்ல மாட்டேன்பா)

அடுத்த கட்டத்தில், புளியம்பட்டி என்னும் சிற்றூரில் , வரிசையாக அமைந்த வீடுகள் , முன்னும் பின்னுமாய் பல இளம் பெண்கள். எங்கள் வீட்டில் 3, வலது இடது வீடுகளில் தலா 1 , அதற்கடுத்த வீட்டில் 3 என ... தீபாவளியன்று எப்படியும் 2,3 பெண்கள் வெளியே..மற்றவர்கள் உள்ளே..ஏறக்குறைய சமவயதினர்.
வெளியே இருக்கும் பெண்கள் ஓ..வென்று அழுது ஓய்ந்து ஒரு வீட்டில் ஒன்று கூடி விடுவார்கள் . தீபாவளி தினத்தன்று காலையில் பட்டாசு வெடித்து முடித்த கையோடு உள்ளே உள்ள பெண்கள் இட்டலிக்கு சட்னி, வடைக்கு மாவு, சாம்பாருக்கு மசால் என்று அம்மிக்கல், ஆட்டுகல் என மாற்றி மாற்றி ஆட்டியும், பட்டாசுக் குப்பைகளை பெருக்கியும் வீடு துடைத்தும் என அம்மாக்களுக்கு உதவிக் கொண்டிருக்க... (துணி துவைக்கும் படலம் அன்று இல்லை, ராக்கெட் வந்து விழுந்து துணி எரிந்து விபத்து நேரும், அந்த நாட்களில் இந்த வகை விபத்தெல்லாம்  ஜகஜமப்பா) வெளியே உள்ள பெண்களுக்கு பாவம் என்று இட்டலி பலகாரங்கள் என எல்லா அம்மாக்களும் உபசரிக்க, நன்றாக உண்டு விட்டு , பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பார்கள். (உள்ளே பெண்கள் வெளியே பெண்களைப் பார்த்து பொரும.. அவர்கள் இவர்களைப் பார்த்துப் பொரும..)
தீபாவளி அதிகாலையில் (6 மணிக்கே)  நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த தோழி சீதா வீட்டிற்குப் படையெடுத்து , அவளது தாயார் சூடாக செய்து தரும் இட்டலி, வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், அதிரசம் , சீப்பு சீடை, உக்காரை என ஒரு கட்டு கட்டுவோம். 

திருமணமாகி சென்னை வந்த சில வருடங்கள் (நினைவில் கொள்க.. அப்போது எனக்கு வயது 17) தீபாவளி காலையில் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் விஜயம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என முடிந்து வீடு வரும் போது மதியமாகி இருக்கும். அதற்கு பிறகு என்னத்த.... சமைக்கிறது என்று சாம்பார், ஒரு காய், ஒரு பாயசம் என முடியும் தீபாவளி விருந்து.
மகள் பிறந்த பிறகும் ஓரிரண்டு வருடங்கள் இதே கதை. பிறகு சுதாரித்துக் கொண்டு, காலை 10 மணியளவில் பூஜை முடித்து வடை பாயசம் என விருந்து சாப்பாடு. பிறகு தான் வீட்டை விட வேண்டும் என்று மாற்றிக் கொண்டோம்.
பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து செய்த வடை, பாயசம் ஆவி பறக்க 5.30 க்கு எங்கள் இல்லம் வந்து சேரும். 10 மணியளவில் நண்பர்கள் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவோம். [ ரத்னாம்மா வீட்டில் பாயசம் கண்டிப்பாக சாப்பிடுவோம். அவரது மகள் கேதார கௌரி விரதம் இருப்பார் அதிரசம் செய்வார். சில தினங்கள் முன்பு தான், அவர் ஒரு முறை கூட எங்களுக்கு அதிரசம்  தரவில்லை என்று தோன்றியது. ஏன் என்று சில தினங்கள் முன்பு அவரை தொலைபேசியில் அழைத்து சண்டையிட்டேன். அக்கா நாங்கள் மதியம் தான் விரதம் முடிப்போம் நீங்கள் காலை நேரம் இங்கே வருவீர்கள் , இந்த முறை தவறாமல் தரேன் என்றார்.]
சாலிக்கிராமம் அடுக்குமாடிக் குடியிருப்பில் பல குழந்தைகள் இருந்ததால் கொண்டாட்டம் தான்.[என் குழந்தைகளுக்கு எங்கும் எப்போதும் கொண்டாட்டம் தான்] நவராத்திரி நாட்களில் போனஸ் வரும் பிள்ளைகளுக்கும் அப்போது தான் விடுமுறை என்பதால் , தீபாவளிக்கு அந்த நாட்களிலேயே புதுத் துணிகள் வாங்கி விடுவோம்.  எங்கள் பிள்ளைகள் மிகவும் எதிர்பார்த்து செய்த ஒரு நிகழ்வு அது. 

கடந்த தீபாவளி அமெரிக்காவின் சான் ஹொசே நகரில். பார்க் லேன் என்னும் தெருவில் வாழும் இந்தியக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,சாப்பாடு, மத்தாப்பூ , குளிரோ குளிர் .
பேரன் படிக்கும் பள்ளியில் அனைவரும் இந்திய உடை அணிந்து வர, ஒரு ஆசிரியை அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகை பற்றி விளக்க அங்கும் கோலாகலம் தான்
தீபாவளி முடிந்த பின்னரும் பல வீடுகளில் விருந்துகள், கொண்டாட்டங்கள். [ டேய் .......பாட்டி வந்திருக்காங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு, ஏங்க ..அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம் இங்க வாங்க, பாப்பா விழுந்து கும்பிடு... ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கிட்டோம்ல]

வாட்ஸ் ஆப், ஸ்கைப்பில் வாழ்த்துச் சொல்லி, கூரியரில் பலகாரம் செய்து(வாங்கி) அனுப்பி,ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தாடையில் ஒன்றை அணிந்து, தொலைக் காட்சியைப் பார்த்தால்....ஸ்ஸ்ஸஸஸப்பாடா... தீபாவளி முடிந்தது. அடுத்தது ஆங்கிலப் புத்தாண்டு தினம் தான். 

தீபாவளிக்கென்றே புதுத் துணி வாங்கி, பண்டிகை கொண்டாடிய கடைசித் தலைமுறை நாம் தானோ??

Friday, 16 September 2016

எங்கெங்கு காணினும் சக்தியடா....

எனக்கு மகள் முறையிலான ஒரு இளம் பெண் கடந்த மாதத்தில் யூ டியூபில்( you tube) பல வருடங்களுக்கு முன்பு , ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றிநடை போட்ட ரமணி Vs ரமணி நாடகத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். (இரண்டாம் பாகம் என்னை மிகக் கவர்ந்தது :D, stress buster)

திரு ராம்ஜி மற்றும் திருமதி தேவதர்ஷினி முறையே கணவன் மனைவி பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பார்ட் 2இல் ஒரு எபிசோடில்,
கணவர் : ரமணீ.. உனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லவே இல்லையே.. மனைவி: நீங்க கேக்கவே இல்லையே, கல்யாணம் ஆன புதுசுல உங்களுக்குப் புடிச்சதெல்லாம் மட்டும் எனக்குத் தெரியுமான்னு கேட்டீங்க ஆனா எனக்கு என்ன தெரியும்னு நீங்க கேக்கவே இல்லையே

இது பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு. மிக மிக இயல்பான வசனங்களின் மூலம் சொல்லப் பட்ட முக்கிய செய்தி.

கடந்த வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரை சந்தித்த போது , பேச்சுக் போக்கில் நான் ஒரு பிரபல பள்ளியில் வேலை பார்த்தேன் என்று சொன்னபோது அவர் தன் மகன்களை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சென்ற போது , அப்ளிகேஷனைப் படித்த நிறுவனர் ஆசிரியப் பணியில் சேர அழைத்ததாகக் கூறினார். இவர் முறையான ஆசிரியப் பணிக்கான பயிற்சி பெற்றவர் என்பது எனக்கு செய்தி.(ஓ!!) பல வெளிநாடுகளில் வசித்தவர். மேலும் என்னென்ன திறமைகளுக்கு சொந்தக்காரர் என்று தெரியவில்லை.

மற்றொரு இளம் பெண்மணி நான் PHP யில் பயிற்சி பெற்று, அங்கேயே வேலையும் செய்து வருகிறேன் தற்சமயம் என்றார். இவர் படித்த துறையே வேறு. [php ன்னா என்ன?] சாலிக்கிராமம் பகுதியில் வீட்டு வேலைகளில் உதவும் மூத்த பெண்மணி ஒருவர் என்னுடைய நடுவயதிற்கான பிரச்சினைக்கு சுலபமான தீர்வு கூறினார்.

படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்மணிகள் மற்றும் சீனியர் சிடிசன்களுக்கு கம்பியூட்டர் , இண்டர்நெட் , ஆங்கிலம் எனப் பயிற்சி அளித்துள்ளேன். (ஆண்களுக்கும்) இந்த அம்மாக்கள் அந்த நாளிலேயே பல கலைகள் கற்றவர்கள். லவடேல் (Lovedele,Ooty) கான்வெண்டில் படித்து மிக அருமையான பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசி , கற்றுத் தந்தவர்கள். சர்ச் பார்க் கான்வெண்ட், பிரசண்டேஷன் கான்வெண்ட்,பத்மா சேஷாத்ரி போன்ற பிரபல பள்ளிகளில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். ஒரு மாணவி (83 வயது) ஹிந்தி மற்றும் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 81 வயது வரை தானே கார் ஓட்டினாராம். மற்றொரு மாணவி (65 வயது) தான் அந்தமான் தீவிலிருந்து சென்னை வந்தது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியது , (5 அடி உயரம் உள்ளவர்களை அப்போது பணியில் அமர்த்த மாட்டார்கள், உயரம் ஒரு தடை இல்லை என்று போராடி சேர்ந்தாராம்), மத்திய சென்னை தொகுதியில் 19_ _ ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது, பி ஹெச் டி (உருது) பட்டம் பெற்றது என தினம் ஒரு தகவல் தந்து திகைக்க வைப்பார். என்னை அசர வைத்த Profile.

வார இறுதியில் சந்தித்த என் தாயாரின் தோழி திருமதி ஸ்ரீதேவி அரசரத்தினம் அவர்கள் இலங்கையிலிருந்து கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அங்கே இன்றளவும் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுத் தருகிறார். (கனடா எம் பி ஆக இருந்த ராதிகா சிற்சபையீசன் இவரின் மாணவி)

ஒரு தோழி, முறையாக தையற்கலை பயின்றவர். ஆசிரியப் பணியில் இருந்தவர். மற்றொரு சகோதரி பத்திரிக்கைகளுக்கு துண்டு செய்திகள், குறிப்புகள் என எழுதுவார். காஞ்சிபுரத்தை சேர்ந்த சகோதரி நேற்று பச்சைப் பயறு மற்றும் ஆளி விதையில் லட்டு செய்து , எனக்கு படம் எடுத்து, செய்முறைக் குறிப்புடன் அனுப்பி இருந்தார். புதுப் புது உணவுப் பதார்த்தங்களை செய்து அசத்துவார்.

மேற்சொன்னவைகள் என்னிடம் அந்த அம்மாக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களே. (என் கற்பனை இல்லை)

இந்த அம்மாக்கள் மட்டுமில்லை... இது போல பலப்பல அம்மாக்கள்...

சில வருடங்களுக்கு முன்பு, என் மகள் தன் மகனிடம் பாட்டியிடம் கூட்டல் கணக்கு கற்றுக் கொள் என்றாள். உடனே குட்டிப் பையன் பாட்டிகள் ஆசிரியைகள் ஆக முடியாது(grandmothers cannot be teachers) என்றார். அதற்கு என் மகள், என் அம்மா தான் எனக்கும் என் தம்பிக்கும் பாடங்களைக் கற்றுத் தந்தார். அதைத் தான் நான் உனக்கு இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். குட்டிப் பையனிடம் நான் கேட்ட கேள்வி , Can a grandmother be a manager atleast?? No, Grandmothers can NEVER be managers .[ I was working as a General Manager then]. யார் இவருக்கு இப்படி சிந்திக்கக் கற்றுத் தந்தது?? யாரும் இல்லை. பிள்ளைகளின் மன அமைப்பு பொதுவாக இப்படித் தான் இருக்கிறது.

அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது, என்னம்மா மொக்கை போட்றே, இவ்வளவு நேரம் இதைத் தான் யோசிச்சியா, உன் மண்டைல மூளை இருக்க வேண்டிய இடத்துல வேற என்னவோ இருக்கு..... இதெல்லாம் இளைஞர்கள், வாலிப வயதினர் தன் அன்னையைப் பார்த்துக் கூறி.. நான் கேட்டவைகள். [எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு]

குடும்ப நலனுக்காக, பிள்ளைகளுக்காக அம்மாக்கள் தங்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்கிறார்கள். Low profileலில் இருக்கிறார்கள். அநாவசிய ஈகோ, வாக்குவாதங்கள் என சிலபல விஷயங்களைத் தவிர்த்து குடும்ப ஒற்றுமைக்காக இந்த low profile வேடம்.

படிக்காத அம்மாக்களாயினும் அவர்கள் அனுபவங்கள் உங்களை விட அதிகம் இளைஞர்களே! யாருக்கு என்ன தெரியும் என்றே நமக்குத் தெரியாது.

அம்மாக்களே.. பிள்ளைகள் நம்மைத் தாழ்த்தி உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் என்பதை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வப்போது. தப்பில்லை.

அம்மா என்பது இங்கே ஒரு குறியீடு மட்டுமே. அனைத்துப் பெண்களுக்கும் இது பொருந்தும்.

அம்மான்னா சும்மா இல்லை மக்களே....

Wednesday, 10 August 2016

நானும் வரேன்... நானும் வரேன்..

ஆகஸ்டு திங்கள் 2015 . அமெரிக்காவின் சான் ஹொசே நகரம்.

"அம்மா.. இரண்டு மாதங்களுக்கு பிரதி வெள்ளிக் கிழமை சின்னப் பையனை காலையில் ஒரு மணி நேரம் உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா?" மகளின் கேள்வி.

என்ன காரணம் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.

அங்கே பள்ளி ஆரம்பிக்கும் நாளில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு மின்னஞ்சல் (ஈமெயில்) பள்ளியிலிருந்து அனுப்பப் படுகிறது. அதில் வகுப்பு ஆசிரியைக்கு பெற்றோர்களின் உதவி எந்தெந்த வேலைகளில், வேளைகளில் தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு , பெற்றோர்களின் சம்மதம் கேட்கப் படுகிறது.

[ஆசிரியர்கள் மாணவர்களின் பென்சிலைக் கூட கூர்மைப் படுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியைக்கு நிறைய வேலைகள். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ முன்வருகிறார்கள். கணினி பயிற்சி, மதிய உணவு வேளை மேற்பார்வை, விளையாட்டு நேர மேற்பார்வை , பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் எனப் பல விதத்திலும் உதவலாம். மகள் கணினி பயிற்சி வகுப்புக்கு செல்வார்.]

அதிலிருந்து நமக்கு வசதியான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்து சம்மதம் அளிக்கலாம். ஒப்புக் கொண்ட நேரத்திற்குத் தவறாமல் பள்ளிக்குச் சென்று , அலுவலகத்தில் அனுமதி பெற்று , வகுப்பறைக்குள் சென்று ஆசிரியைக்கு உதவி செய்துவிட்டு வரவேண்டும். செல்ல முடியாத நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள் பள்ளியில்.முக்கியமான ஒரு விஷயம், உதவி செய்ய போகும் பெற்றோர் , தாமும் ஒரு ஆசிரியரைப் போலவே செயல்பட வேண்டும். வீண் பேச்சுக்களுக்கு இடமில்லை. பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகள் வகுப்பறையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் , சரியாக சாப்பிடுகிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கும் இது சரியான தீர்வு.

பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்கள் ஒருவருக்கொருவர் இந்த வாலண்டியர் சர்வீஸ் நேரத்தில் உதவிக் கொள்வார்கள். குட்டிப் பாப்பா இருந்தால் பார்த்துக் கொள்வது, பெரிய பாப்பா இருந்தால் வகுப்பு முடிந்ததும் அழைத்து வருவது, கடைக்கு சென்றால் ஒரு கேலன் பால் வாங்கி வருவது, சின்னப் பாப்பாவை கூட்டி செல்ல வரும்போது 4 பச்சை மிளகாய் கொண்டு வந்து தருவது என.....

ஒவ்வொரு வாலண்டியர் சேவைக்குப் பின்னும் , மகளின் முகத்தில் ஒரு வித நிறைவைக் கண்டேன். (அம்மா... இன்னிக்கு என் பிரண்ட் .. என அம்மாவும் பையனும் அன்றைய வகுப்பு நிகழ்வுகளைப் பேசிக் கொள்வார்கள்).பள்ளிகளில் பெற்றோர்களின் பங்களிப்பை வெகுவாக விரும்பி அனுமதிக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம். படித்த , வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து பயனுள்ள செய்திகளைப் பகிர முடிகிறது. (அலுவலகத்தில் பணி புரிபவர்களும் சேவை செய்ய வருவார்கள், அங்கே பணி நேர சலுகைகள் நிறைய)

நிற்க.

இந்தியா. சென்னை மாநகரம்.

சம்பவங்களின் பாதிப்பில் பல மாதங்களுக்கு முன்பு, நூலகரை சந்தித்து , என்னைப் பற்றிய தகவல்களை அச்சடித்துக் கொடுத்து, இங்கே வரும் பள்ளிப் பிள்ளைகள் யாருக்கேனும் படிப்பில் உதவி தேவைப் படுமா எனக் கேட்டு சொல்லுங்கள் நான் இங்கே வந்து கற்றுத் தருகிறேன் என்றேன். பதில் இல்லை.

அடுத்த கட்டமாக, அருகில் உள்ள பள்ளியில் என்னை அறிமுகப் படுத்தி வையுங்கள் என்னால் ஆன உதவிகளை செய்து தருகிறேன் என்றேன்.

நாட்கள் கடந்தன. ஒரு நாள் காலை நூலகர் தொலை பேசியில் அழைத்து தயாராக இருங்கள் அழைத்துப் போகிறேன் என்றார். சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்சமயம் ஆசிரியர்கள் சங்கத்தில் ஏதோ ஸ்டிரைக் பண்றாங்களாம் அதுக்கு போறாராம். 3 நாட்கள் ஆகுமாம் பள்ளி மீண்டும் இயல்புக்கு வர, அதன் பிறகு பார்ப்போம் என்றார்.

வாரங்கள் கடந்தன. நூலகரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. நான் நேரில் சென்று என்ன நடக்கிறது என்று விசாரித்ததில் இதோ நூலகரின் வார்த்தைகளில் :

நூலகர்: தலைமை ஆசிரியர் இருக்காரா?

பியூன்: (ஏற்கனவே அறிமுகமானவர்) என்ன காரணத்திற்காக அவரை பார்க்க போறீங்க?

நூலகர்: என் தோழி ஒருவர்......

பியூன்: அய்யய்யோ..அந்த ஆளு (என்ன மரியாதை பாருங்க) கொஞ்சமும் மரியாதை தெரியாதவன், யார் வந்தாலும் உட்கார சொல்லி கூட பேசுவதில்லை , குவார்டர்ஸ் ல குடியிருகறவங்கன்னா படிச்சவங்களா இருப்பாங்க, இங்கே அழைச்சுட்டு வந்தா ரொம்பவே மரியாதை குறைவா நினைப்பாங்க , தயவு செய்து அவங்களை இங்கே கூட்டிட்டு வராதீங்க

இந்த நிகழ்வை என் தோழி ஒருவரிடம் சொன்னேன். அவரின் வார்த்தைகளில் " நான் ஏற்கனவே ஒரு பள்ளியில் இது போல சேவை செய்ய விரும்பிச் சேர்ந்தேன். சும்மா தானே செய்யறே, இந்த வேலை செய் அந்த வேலை செய்ன்னு படுத்தி எடுத்துட்டாங்க.. பணம் வாங்காமல் வேலை செய்ய முன்வந்தால் இந்த கதி தான் இங்கே, அதன் பிறகு நான் அந்தப் பக்கம் செல்லவில்லை"

நான் இனிமேல் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா ...