காந்தியன்னை பெற்றெடுத்த சாந்தமூர்த்தி நீர்தானே!
கற்பகமாய் வந்துதித்த இளையாழ்வார் நீர்தானே!
கல்வியிலே சிறந்துநின்ற சிகரம் நீர்தானே!
கற்பித்தோனை மிஞ்சிநின்ற சீடர் நீர்தானே!
பெருங்குணங்கள் நிரம்பிநின்ற பேராளன் நீர்தானே!
பெற்றவர்தாம் பெருமைப்பட்ட பேரானந்தம் நீர்தானே!
வரதனுக்கு வாஞ்சையான இராமனுசன் நீர்தானே!
வரமாய் வந்துதித்த இலக்குமணன் நீர்தானே!
முனிவர்க்கு முனிவனான யதிராசன் நீர்தானே!
மூத்தோரின் குறிப்புணர்ந்த கூர்மதியாளன் நீர்தானே!
அரங்கனே தகுதிசொன்ன உடையவர் நீர்தானே!
அவன்கோவில் சீர்மிகு மேலாளன் நீர்தானே!
எட்டாச்செய்தி எமக்களித்த பாஷ்யக்காரர் நீர்தானே!
எட்டெழுத்து ரகசியம்சொன்ன எம்பெருமானார் நீர்தானே!
கீழ்ப்படிதல் குணம்கொண்ட கோமான் நீர்தானே!
கீழிருந்து மேல்செல்லும் வழிசொன்னவர் நீர்தானே!
வேதத்தின் சாரம்சொன்ன வேதாந்தி நீர்தானே!
வாதம்புரிந்து வாகைசூடிய வேதவித்து நீர்தானே!
அடியாரின் அன்புக்காகத் தமருகந்தவர் நீர்தானே!
ஆண்டாளின் சொல்காத்த கோதாக்ரஜன் நீர்தானே!
சரணாகதி தத்துவத்தை சொன்னவர் நீர்தானே!
சமத்துவத்தின் மகிமைதனை உணர்த்தியது நீர்தானே!
பூதூரில் தானுகந்த பூதபுரீசர் நீர்தானே!
புண்ணியத்தில் பங்களித்த புருஷோத்தமன் நீர்தானே!
பார்த்தன்போல் எட்டாவதாய்ப் பிறந்தது நீர்தானே!
பரமனின் படுக்கையான ஆதிசேஷன் நீர்தானே!
நவரத்தினங்களை உலகுக்களித்த மாமேதை நீர்தானே!
நாநிலம் நலம்வாழத் தானானவர் நீர்தானே!
வாழி நின்புகழ்! வாழிய வாழியவே!!
No comments:
Post a Comment