April 7-8 , 2016
லண்டன் நேரம் இரவு ஏழுக்கு நாங்கள் ஹீத்ரூ விமானநிலையத்தில் தரையிறங்கினோம். (IST 11.30 pm)
நாங்கள் என்பது அபுதாபி வழியாக பயணித்த 17 பயணிகள் மட்டுமே. அமைப்பாளர்கள் யாரும் எங்களுடன் பயணிக்கவில்லை. எங்கள் விமானம் இரண்டாவது டெர்மினலில் வந்திறங்க மற்றவர்கள் மூன்றாவது டெர்மினலில் வந்திறங்குவார்கள் எனக் கூறப்பட்டது .
ஹீத்ரூ விமான நிலையம் ஐந்து நிமிடங்களுக்கொரு
விமானம் மேலேறி, கீழிறங்கும் பரபரப்பான விமான நிலையம்.
நாங்கள் அங்கே பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை கண்டது போல பெட்டிகளுடன் நின்று கொண்டிருக்க, 30 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞர் ஒருவர் எங்களை நோக்கி வந்து வாழ்த்துக் கூறி விட்டு டில்லியிலிருந்து எங்களுடைய வழிகாட்டியாக வந்திருப்பதாக கூறினார். வழிகாட்டியின் பெயர் அனுஜ்.
மூன்றாவது டெர்மினலுக்கு பயணிக்க வேண்டுமே... லண்டன் விமான நிலையத்தின் ஒரு டெர்மினலில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல underground trainல் தான் செல்ல வேண்டும். அனுஜ் சுமாரான ஆங்கிலத்தில் பேசியபடி எங்களை வழி நடத்தி சென்றார். லண்டனின் underground ரயில்கள், abandoned ரயில் நிலையங்கள், அதன் அமைப்புக்கள் உலக போர்களின் போது ஏற்பட்ட கொடுமையான பல நிகழ்வுகள் என திரைப்படங்களில், வரலாற்று புத்தகங்களில் பார்த்து படித்து, அந்த ரயிலில் செல்லவே எனக்கு பயமாக இருந்தது. லண்டனின் தரைக்கு கீழே மற்றொரு உலகமே உண்டு என்பார்கள். எந்த அளவிற்கு இது உண்மை என்று எனக்கு தெரியாது. விருப்பமானவர்கள் The Bone Collector [Denzel
Washington, Angelina Jolie] திரைப்படம் பாருங்கள். நம் நாட்டு மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்கள் போல தான் இருக்கின்றன. ஐந்து நிமிட நேர பயணம் அதுவும் வழிகாட்டியின் துணையுடன். அதற்கே அவ்வளவு பயம்.
கிரீன்விச் நேரப்படி லண்டனில் இரவு எட்டு மணி தான் என்றாலும்
நமக்கு நடு இரவு 12 மணி. மூன்றாவது டெர்மினலில் காத்திருப்பு நேரம் சிறிது நேரமே என்றாலும்
பசி மயக்கம், தூக்கம். உட்கார ஒழுங்கான ஆசனங்கள் இல்லாததால் பெட்டிகளின் மேல் அமர்ந்திருந்தோம். இடையிடையில் காவலர்கள் எங்களை எதற்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என கேட்டு சீக்கிரம் கிளம்ப சொல்லி கொண்டு இருந்தார்கள். [Mofussil பஸ் நிலையம் போல பெட்டிகளின் மேல் உட்கார்ந்திருந்தால் விரட்டாமல் என்ன செய்வார்கள் :) ?]
சிறிது நேர காத்திருப்பிற்குப் பின் மற்றவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
எங்களுக்காக விமான நிலைய வாசலில் இரண்டடுக்கு பேருந்து காத்திருந்தது. பேருந்து மினி ரயில் பேட்டி போல உள்ளே air conditioner, restroom (மிக மிக அவசர தேவைக்கு மட்டுமே உபயோகிக்க அனுமதிப்பார் ஓட்டுநர், எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்), பெரிய்ய்யய ஜன்னல்கள், பெல்ட்டுடன் கூடிய வசதியான இருக்கைகள், CCTV கேமரா, மைக் என அமைப்பாக இருந்தது. ஓட்டுனரின் இருக்கைக்கு முன்பு CCTV monitor, mike, அவருக்கு அருகில் வழிகாட்டி அமர இருக்கை நடுவில் தடுப்பு என விமான cockpit போல தனிப் பகுதி. லண்டனில் left hand drive என்பதால் ஓட்டுனரது இடப்பக்கத்தில் கதவு, பின்னால் ஒரு கதவு. மேலே செல்ல படிக்கட்டுகள் அதனருகிலேயே இருந்தன.
பேருந்தின் அடிப்பாகத்தில் பெட்டிகளை வைக்கும் பகுதி. அதில் பெட்டிகளை வைத்து
விட்டு வைத்து விட்டு நாம் மட்டும் கைப்பையுடன் இருக்கைக்கு சென்று அமர வேண்டும். பேருந்தில் எந்த இருக்கையில் அமர வேண்டும்,
விடுதியில் ஒரு அறையில் எந்த இருவர் தங்க வேண்டும்
என்பதற்கான பட்டியல் கையேட்டிலேயே (handbook) இருந்தது. (ஒரே பட்டியல் தான்)
அநேகர் தம்பதிகள். சிலர் மட்டுமே தனியாக வந்திருந்தார்கள். [இந்தியாவிலும் சுற்றுலா பேருந்துகளில்
இது போல பேருந்தின் பக்கவாட்டிலும் பின் பகுதியிலும் பொருட்களை வைத்து கொள்ளும் வசதி உண்டு. எங்கள் பத்ரிநாத் பயணத்தில் பயண அமைப்பாளர்கள் உணவு பொருட்கள், அடுப்பு என உடன் எடுத்து வந்து ஆங்காங்கே சமைத்து சாப்பாடு போட்டார்கள்.]
பேருந்தில் ஏற வசதியாக பெட்டிகளுடன் வரிசையில் நிற்க சொன்னார்கள். நின்றபடியே அனைவரும் அருகிலிருந்தவருடன் பேசி கொண்டு இருக்க, திடீரென்று ஒரே குழப்பம். கசமுசா என பேச்சுக் குரல்கள். தனியாக வந்திருந்த ஒரு ஆணும்(70+), ஒரு பெண்ணும்(50+) தங்கள் பைகளை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தனி ஆளாக வந்ததால் பெட்டி கொண்டு வராமல் தோளில் சுமக்கும் பை எடுத்து வந்திருந்தார்கள். அனைவரும் அங்கேயே நின்று கொண்டிருக்க, பைகள் எப்படி மாயமாயின என்றே தெரியவில்லை. அவர்களை பெட்டிகளை தேட சொல்லி விட்டு மற்றவர்கள் Crowne Plaza, Heathrowவை நோக்கி சென்றோம்.
தங்கிய இடங்கள் அனைத்தும் 4/5 ஸ்டார் விடுதிகளே. வசதியான அறைகள். நல்ல உணவு.
எங்கே இரவு தங்கினாலும் அவரவரது அறை சாவியை பட்டியலின்படி அழைத்து தருவார்கள். உடன் Wifi password எழுதப்பட்ட துண்டு சீட்டையும் தருவார்கள். அறையில் பெட்டிகளை வைத்து விட்டு கீழிறங்கி வந்து இந்திய உணவினை உண்டு விட்டு உறங்க சென்றோம். [ஒரு சில ஊர்களில் Loungeல் மட்டும் தான் Wifi வேலை செய்தது. பெரும்பாலான ஊர்களில் அறையிலும் Wifi வசதி இருந்தது.]
எந்த விடுதியில் தங்குகிறோமோ அங்கேயே complimentary continental breakfast வழங்குவார்கள். ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படும் உணவுகள் கான்டினென்டல் உணவுகள் என்று அழைக்கப் படுகின்றன. ஐரோப்பாவில் மட்டுமில்லை உலகெங்கும் பொதுவாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் continental breakfast காலை உணவாக வழங்கப்படுகிறது.
https://food.ndtv.com/food-drinks/world-cuisine-know-the-difference-between-continental-food-and-oriental-food-1713165
தினசரி
காலை உணவு முடிந்ததும் பேருந்தில் ஏறி திட்டமிட்ட படி
சுற்றி பார்த்தல், மதியம் இந்திய உணவகங்களில் உணவு, மீண்டும் ஊர் சுற்றி பார்த்தல், இரவு உணவிற்கு செல்லும் வழியில் அமைந்த வேறொரு இந்திய உணவகம் செல்லுதல், பின்னர் விடுதியை அடைதல் அல்லது அடுத்த நாட்டை நோக்கி பயணித்தல் என
தொடர்ந்து 14 நாட்கள் பகல் நேர பேருந்து பயணம். ஒரு நாள் மட்டும் இரவு பயணம். காரணம் ஐரோப்பாவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வது என்பதை நம் நாட்டில் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலம் செல்வது போல என சொல்லலாம். பரப்பளவில் சிறிய நாடுகள் என முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
ஐரோப்பிய பயண நாட்களில் தினமும் விடியற்காலை 4.30க்கே நானும் என் கணவரும் கண்விழித்து தயாராகி விடுவோம். (4.30க்கு எழுந்தாலுமே இந்திய நேரப்படி காலை 9 மணி) ஜெட்லாக் காரணமாக காலையில் சீக்கிரம் கண் விழித்து மாலையில் ஐந்து மணிக்கே மப்பும் மந்தாரமுமாகி, பசி என்ற உணர்வே இல்லாமல், இரவு உணவை சாப்பிட வேண்டுமே என்பதற்காக சாப்பிட்டு பயணித்தோம்.
வெளிநாடுகளில் இது போல தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யும் போது ஓட்டுனருக்கு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை 15 நிமிடங்கள் கட்டாய ஓய்வு உண்டு. நான்கு மணி நேரம் ஓட்டி விட்டு 30 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதும் உண்டு. அது போன்ற நேரங்களில் restroom, coffee போன்றவற்றை முடித்து கொள்ள வேண்டும். எங்களுக்கு அளிக்கபட்ட உணவே போதுமானதாக இருந்ததால் இடையில் எதுவும் தேவைப்படவே இல்லை. மதியம் மூன்று மணி coffee snack break என தனியாக கிடையாது.
அனுமதி சீட்டு தேவைப்பட்ட இடங்களில் நம்முடைய பணத்தை செலவு செய்யவோ காத்திருக்கவோ தேவை இல்லை. பயண கட்டணத்தில் அதுவும் சேர்ந்தே இருந்ததால் அமைப்பாளர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
சென்னையை விட்டு கிளம்பும்
முன்பு பல முறை எங்களுக்கு சொல்லப்பட்ட குறிப்புகள் :
1. பயண நேரத்தில் அனைவரும் அவரவரின் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொலைத்தவரை அங்கேயே விட்டு விட்டு மற்றவர்களுடன் பயணம் தொடரும் என அமைப்பாளர்கள் கூறி இருந்தார்கள். [என் கணவர் புதிதாக பரிசாக வந்த தோள்பையிலும் நான் என் லைட் ஜாக்கெட் உள்பையிலும் பாஸ்போர்ட்டை வைத்து இருந்தோம்.].
2 வெளிநாடுகளில் பயணிக்கும் போது பொது இடங்களில் ஜோடிகள் நெருக்கமாக இருக்கும்
காட்சிகளை காண நேர்ந்தால்
(என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க கூடாது.
3. யாராவது வம்பு சண்டைக்கு வந்தால் கூட ஒதுங்கி வந்து விட வேண்டும். போலீசார் தலையிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும்.
மேற்சொன்னவைகள் உங்களின் புரிதலுக்காக. இனிமேல் பயணத்தை தொடரலாம். வாருங்கள்.
மறுநாள் காலை ஏழு மணிக்கே breakfast. (மேலை நாடுகளில் ஆறு மணியிலிருந்தே breakfast சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்). நாங்கள் தங்கியிருந்த Crowne Plazaவில் அளிக்க பட்ட காலை உணவினை போல இது வரை நான் வேறெங்கும் உண்டதில்லை.
Cerealsகளில் 15 வகைகள், Cerealகளுடன் சேர்த்து உண்ண பலவிதமான உலர்ந்த பழங்கள், ஆரஞ்சு, தர்பூசணி , ஆப்பிள் ஜூஸ்கள், காபியில் பல வகைகள், ஜாம் ஜெல்லிகளில் முப்பதுக்கும் அதிகமான flavours, தேன், பால் (சூடாக, மிதமான, குளிர்ந்த நிலைகளில்), தயிர் (plain yoghurt), flavoured yoghurtல் 10 வகைகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள்,காய்கறிகள் (சாலட் நாமே
செய்து கொள்ளலாம்), Bread , bun , bagel என விதம் விதமான ரொட்டி வகைகள் (பிரெட் toasterல்
பிரட்டை மட்டுமே வைக்க வேண்டும் மாமிசம் அல்லது காய்கறிகளை சேர்த்து sandwich போல டோஸ்ட் செய்ய கூடாது என்பது பொது விதி), இவை தவிர sandwich செய்து உண்ணும் வகையில் Bacon என நூறுக்கும் மேலான வகைகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். சமீபத்தில் பறித்ததன் அடையாளமாக பச்சை நிற ஆப்பிளில் இலைகளும் இருந்தன. கடித்து உண்ணும் போது முழங்கை வரை அதன் சாறு வழிந்தது, (மூட நெய் பெய்து முழங்கை வழிவார என ஆண்டாள் திருப்பாவையில் பாடியது போல) .
சென்னை தியாகராய நகரில் உள்ள
5 ஸ்டார் விடுதியில் ஆரம்பித்து அண்டார்டிகா அருகிலுள்ள விடுதி முடிய பழங்கள் என்றாலே
Cantaloupe, Honey Dew, அன்னாசி தான். பழச் சாறுகளில் தர்ப்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள்
சாறுகள் வருடம் முழுவதும் காலை உணவில் இருக்கும்.
இவைகள் தவிர seasonal பழங்களும், சாறுகளும் உண்டு. [எங்கிருந்து வாங்குகிறார்கள்
என்று வியப்பதுண்டு]
உணவு ஒவ்வாமை (food allergy) உள்ளவர்களுக்கு உபயோகமான ஒரு செய்தியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஐரோப்பாவில் உணவின் மூலப்பொருட்கள் எவை என தெரிவிக்கப்
படுவதில்லை. அமெரிக்கா போல விற்கப்படும் பொருட்களின் மேல் அச்சிட்டு ஒட்டப் படுவதில்லை. விடுதிகளிலும் தனித் தனியாக வைக்கப்படுவதில்லை. எனவே ரொட்டி வகைகளாக இருந்தால் கூட அவைகளின் மூலப் பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி அறிந்திருந்தால்
மட்டுமே உண்ண வேண்டும். [இந்த அறிவுரை என் மகளால் கூறப்பட்டது.]
இந்த வகையில் சைவ உணவுகளையும் அடையாளம் காண முடியும்.
தினமும் என்ன breakfast சாப்பிட்டோம் என்று மகள் குடும்பத்தாரிடம் சொல்வது வழக்கம். நீங்கள் சென்று பார்த்த இடங்களை விட உங்கள் breakfast சுவாரசியமாக உள்ளது என்பார் மகள்.
முதல் நாள் பைகளை தொலைத்தவர்களை விமான நிலையத்திலேயே விட்டோமே! என்ன ஆனார்கள் என்று பார்ப்போம்.
அவர்கள் இருவரும் விடியற்காலையில் மீண்டும் விமான நிலையம் சென்று செக்யூரிட்டி அலுவலர்களை சந்தித்து முதல் நாள் கைப்பற்றிய பொருட்களை வைக்கும் அறைக்கு சென்று தங்கள் பைகளை கண்டு பிடித்து மீட்டு வந்திருந்தார்கள். [மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதையை விட பெரிய கதை அது.]
மூன்றாவது டெர்மினலில் காத்திருந்த போது போலீசார் எங்களை சீக்கிரம் கிளம்ப சொன்னார்கள் (விரட்டினார்கள்
என்பதே சரியான சொல்லாக இருக்கும்) என்று குறிப்பிட்டேன் இல்லையா? அன்று ஹீத்ரூ விமான நிலையத்தில் bomb scare. அதனால் ஆளில்லாமல் தனியாக இருந்த பொருட்களை பரிசோதனைக்காக எடுத்து சென்றோம் என்று கூறினார்களாம். தோளில் மாட்டும் பைகள் என்பதாலேயே அவைகள் போலீசாரின் கவனத்தை கவர்ந்திருக்கலாம் என தோன்றுகிறது.
(மார்ச் 22 ஆம் தேதி ப்ரஸ்ஸஸ் வெடிகுண்டு நிகழ்வின் தொடர்ச்சியே இந்த நிகழ்வு.
மக்களை பீதிக்குள்ளாக்காமல் போலீசார் நிலைமையை நிதானமாக கையாண்டிருக்கிறார்கள்.
காலை உணவு முடிந்ததும் லண்டன் நகர சுற்றுலாவின் முதல் இடமாக ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்ல கிளம்பினோம். [பயணக் கையேட்டில் அச்சிட்ட படியே எல்லா நேரமும் பயணம் அமையாது, நேரம், போக்குவரத்து நெரிசல், பருவ நிலை போன்றவைகளை பின்பற்றியே செல்ல வேண்டி இருக்கும்]
எங்கள் வழிகாட்டி அனுஜ் நவீன ராமானுஜர். தினமும் காலையில் பேருந்து கிளம்புவதற்கு முன்பு காயத்ரி மந்திரத்தை தான் உச்சரித்து அனைவரையும் திரும்ப சொல்ல சொல்வார். மூன்று முறை சொல்லிய பிறகே பேருந்து கிளம்பும். [ராமானுஜர் யாருக்கும் சொல்லி தரக்கூடாது என்று தன்னுடைய குருவால் சொல்லப்பட்ட போதும் இந்த உலக மக்களின் நன்மைக்காக திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலே ஏறி நின்று எட்டெழுத்து மந்திரத்தை மக்களுக்கு எடுத்து சொன்னதாக ஒரு நிகழ்வு உண்டு]
https://www.mynation.com/india-news/swaminarayan-akshardham-a-tale-of-twin-hindu-temples-qeu8k9
ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் பளிங்கால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில். இதே போன்ற கோவில் டில்லியில் உள்ளது. இது மிகப்பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட பாரம்பரியம் மிக்க கோவில்.
ஒவ்வொரு தூணிலும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் காணப்பட்டன. பல்கேரியா, Tuscany ஆகிய இடங்களிலிருந்து பளிங்கு கற்கள், சுண்ணாம்பு கற்கள் போன்றவைகள் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கே பகுதி பகுதியாக செதுக்கப்பட்டு லண்டனுக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லண்டன் நகரில் அநேக இந்துக்கள் வசிக்கிறார்கள். அவர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இந்த கோவில் உள்ளது. சாதாரணமாக மற்றவர்கள் கட்டடம் கட்டுவதற்கு உபயோகிக்கும் பொருட்களை உபயோகிக்காமல் கட்டப்பட்ட கோவில் இது என்று கூறினார்கள்.
ISKCON கோவில்களை போன்ற அமைப்பில் இருப்பதாக எனக்கு தோன்றியது. எங்கெங்கும் பணத்தின் பலன் தெரிந்தது. தெரு முக்கு பிள்ளையாரை தரிசனம் செய்யும் போது ஏற்படும் அந்த தெய்வீக உணர்வு கோவிலில் இருந்த போது ஏனோ எனக்கு ஏற்படவில்லை. [கடவுள் மன்னிப்பாராக] எங்கெங்கும் பணச்செழிப்பு தான் தென்பட்டது. அகலமான சதுரமான ஹாலில் நடுவில் கிருஷ்ணரின் சன்னிதி. சுற்றிலும் மற்ற சன்னிதிகள். நடுவில் அமர்ந்து பஜனை செய்வார்கள். அங்கேயே பிரசாதம், நினைவுப் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.
இச்சமயத்தில் லண்டன் நகரை சேர்ந்த ஒரு வழிகாட்டி எங்களுடன் சேர்ந்து கொண்டு நகரைப் பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தார்.
அடுத்து நாங்கள் சென்ற இடம் The City of Westminster என்னும் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் அரச குடும்பம் வசிக்கும் Buckingham அரண்மனையின்
வாசல்.
இந்த அரண்மனையில் Royal Postal Service என்னும் பெயரில் தனி தபால் நிலையம் இயங்குகிறது. என் கணவர் Postal Accounts (Postal Audit வேறு department) அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பதால் எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்கு சென்றாலும் தபால் துறை எப்படி இயங்குகிறது என விசாரித்து தெரிந்து கொள்வார்.
அங்கே Change of Guards எனப்படும் அரண்மனை காவலர்களின் shift மாறும் நிகழ்வு பிரசித்தம். தினமும் காலை 10.45-11.40க்குள் இந்த நிகழ்வு இருக்கும். காவலர்கள் விசேஷமான உடையில் நடந்து (Parade) சென்று மீண்டும் திரும்பி வருவார்கள். அதை தொடர்ந்து குதிரையில் வந்து செல்வார்கள். இவர்கள் சென்ற பிறகு புதிய காவலர்கள் வருவார்கள். மேள தாளத்துடன் தினமும் நடக்கும் இந்த நிகழ்வினை காண மக்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். இன்னமும் மன்னராட்சியே அங்கு நடப்பது போல உள்ளது.
நாங்கள் அங்கே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் லண்டன் வழிகாட்டி அதோ ஒரு தங்கச் சிலை அரண்மனை வாசலில் தெரிகிறதே அவர் தான் விக்டோரியா மஹாராணி. தற்சயம் உள்ள மகாராணியின் பாட்டியாரின் பாட்டியார் அவர். இந்தியாவை ஆண்டவர் அவர் தான் என்று அவரது பெருமைகளை அடுக்கி கொண்டே போக நம் மக்கள் அவர் பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை.
அச்சமயத்தில் என் பின்னால் ஒரு தமிழ் குரல் கேட்கவே திரும்பி பார்த்து புன்னகைத்தேன். தன்னுடைய இரட்டை ஆண் குழந்தைகளுடன் லண்டனில் வசிக்கும் அவர் எங்களுடன் வந்திருந்த ஒருவரின் சகோதரி என்று அறிந்து அனைவரும் அவருடன் பேசி மகிழ்ந்தோம். அன்று முழுவதும் அவர் எங்களுடன் பயணித்தார். லண்டனிலிருந்து
இரண்டு மணி நேர தொலைவிலுள்ள ஒரு சிறிய ஊரில் வசிக்கும் அவரிடம் லண்டனின் புறநகர அழகினையும்
ஏற்கனவே daffodil பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டதையும் தெரிந்து கொண்டேன். (எங்கள் குழுவில் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான், ஒரு பெண் மட்டும் 30 வயதிற்குட்பட்டவர்.)
அரண்மனைக்கு முன்னால் குளத்துடன் கூடிய அழகிய பூந்தோட்டம். (பூங்கா?) அரண்மனை இருந்த அதே தெருவில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் தான் அரச குடும்பத்தாரது திருமணம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறினார்கள்.
இந்த பகுதியில் காவலர்கள் மக்களை ஒழுங்கு படுத்த குதிரையில் தான் வலம் வருகிறார்கள்.
அடுத்து சென்ற இடம் Parliament house. United Kingdomன் பாராளுமன்றம் பக்கிங்காம் அரண்மனையில் தான் கூடுகிறது. [Change of guard நிகழ்ச்சியை
அந்த அரண்மனையின் முன் பகுதியில் கண்டோம். இது மற்றொரு பகுதி] இந்த அரண்மனையின் வடக்கு முனையில் Victoria tower என்றழைக்கப்படும் Big ben clock tower உள்ளது.
ஒரு மணி என்றால் ஒரு முறை இரண்டு மணி என்றால் இரண்டு முறை ...என இந்த கடிகாரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை மணி அடிக்கும். கால் மணி நேரத்திற்கொரு முறை வேறு விதமான ஓசையில் அடிக்கும். இந்த வகை கடிகாரத்திற்கு Striking Clock என்பது பெயர்.
தற்சமயம் புனர் நிர்மாண பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தை பற்றிய தகவல்களை அறிய விரும்புவோருக்கு:
https://en.wikipedia.org/wiki/Big_Ben
அங்கிருந்த நம் தேச தந்தையின்
சிலையருகே புகைப்படம் எடுத்து கொண்டோம்.
சென்னையிலிருந்து குளிர்பிரதேசமான லண்டனுக்கு சென்றதால் முதல் நாள் சற்றே குளிராக இருந்தது. பிக் பென் அருகில் வரும் நேரம் வெய்யிலின் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. Layer dressing முறையை பயன்படுத்த ஆரம்பித்தோம். குளிர் நாடுகளில் ஏப்ரல் மாதத்தில் பனிக்காலம் முடிந்து வசந்தகால தொடக்கம் என்பதால் மிதமான குளிருடன் மரம் செடி கொடிகளில் இலைகள் துளிர்த்து பூக்கள் பூத்திருக்கும் காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை ஏப்ரல் மாதத்தில் அதிகம் இருக்கும்.
உலகிற்கே பொதுவான Global warming, மக்கள் தொகை, வாகன நெரிசல் போன்ற காரணங்களால் எங்கு சென்றாலும், குறிப்பாக நகரங்களில் வெப்ப நிலையில் அதிக மாற்றம் இல்லை, லண்டனில் நாங்கள் இருந்த தினங்களில் 8 -10 டிகிரி செல்சியஸ் தான். இருப்பினும் குளிரே தெரியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் பெரிய ஊர்களின் மைய பகுதிகளில் உள்ள வீடுகள் 1+4 அடுக்குகளை கொண்டதாக மட்டுமே அமைந்துள்ளன. வெளிப்புற தோற்றம் ஒரே மாதிரியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளன. மிக பிரபலமான Harrodsன் வெளிப்புற தோற்றம் கூட சாதாரணமாக இருந்தது. உள் அலங்காரங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம். ஊரின் மற்ற பகுதிகளில் தனி வீடுகள், 1+4 அடுக்குகளுக்குள் கட்டடங்கள் என அமைந்துள்ளன. ஊருக்கு மிக தொலைவில் தான் பல அடுக்கு மாடி கட்டடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கு அனுமதி. விதி விலக்காக லண்டன் நகரின் மையத்திலும் பல அடுக்கு மாடிக்கட்டிடங்கள் காணப்பட்டன. Victorian houses புறநகர் பகுதிகளில் காணப்பட்டன. https://en.wikipedia.org/wiki/Victorian_house
மதிய உணவு நேரம் வந்ததும் இந்திய உணவு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம். தில்லியிலுள்ள அமைப்பாளர்களுக்கும் ஐரோப்பிய உணவகங்களுக்கும் இடையிலான ஏற்பாட்டின்படி சென்றவிடமெல்லாம் சரியான நேரத்திற்கு உணவு கிடைத்தது. [ அநேக நேரங்களில் உணவு தங்குமிடம் காணப்போகும் தலங்களின் அமைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை என எப்போதும் பிஸியாக இருப்பார்.]
லண்டனில் ஒரு முக்கிய தெருவை கடந்து ஆங்கில L போல சென்றால் உணவகம் வரும். தெருவை கடக்க ஒரு குழுவாக சிக்னல் கிடைக்க காத்திருந்தோம். சிக்னல் கிடைத்ததும் என் கணவர் தோளில் மாட்டியிருந்த பாஸ்போர்ட் வைத்திருந்த பை கீழே விழுந்ததை கூட கவனிக்காமல் வேகமாக சாலையை கடக்க ஆரம்பித்தார். சற்று பின்னால் நின்று கொண்டிருந்த நானும் அதை கவனிக்கவில்லை. தெருவை கடக்கும் தருணத்தில் என் முன்பாக விழுந்து கிடந்த பையை அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டேன். பாஸ்போர்ட் இல்லையென்றால் மேற்கொண்டு பயணம் இல்லை. கடவுளின் அருள் தான் அது என்றே சொல்ல வேண்டும். அவருடைய பாஸ்ப்போர்ட்டும் என் ஜாக்கெட்டை சரணடைந்தது. இதில் மேலும் ஒரு வசதி/சிரமம் (எனக்கில்லை அவருக்குத்தான்) என்னுடனேயே தான் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நிலை.
எங்களுக்கு முன்பாக சென்ற குழுவில் புடவை அணிந்து இருந்த பெண்மணி உணவகத்திற்கு நேரெதிரில் ஒரு படியில் கால் வைக்க எண்ணி தடுக்கி விழுந்து உதடு, தாடை கிழிந்து மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டு... லண்டனில் அந்த தம்பதியால் எங்கும் சுற்றி பார்க்க வர முடியவில்லை. [பயண நேரங்களில் வசதியான காலணிகள், ஆடைகளை அணிவது முக்கியம். வெளியூர்களில் நம்மை யாருக்கும் தெரியாது, கூச்சப்படாமல் pants, churidar, jeans போன்ற ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. எங்கும் தடுக்கி விழாமல் பயணம் செய்வது முக்கியம்.]
மதிய இரவு உணவுகள் பஞ்சாபி உணவகங்களில் தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவான மெனு தான். உருளைக்கிழங்கு பொரியல் / மசாலா அல்லது வெண்டைக்காய் பொரியல் /மசாலா, தாளித்த துவரம்பருப்பு /பாசிப்பருப்பு /பச்சை பயறு, ரசம் போல சாம்பார் என்ற ஒரு திரவம், ஊறுகாய் ,சாலட்,
சாதம், தயிர்,
12/14 நாட்கள் இரண்டு நேரமும் dessert குலாப் ஜாமூன் , மீதி நேரங்களில் popsicle எனப்படும் குச்சி ஐஸ் /கப் ஐஸ். அசைவத்தில் ஒரு item மட்டும் தனியாக வைத்திருப்பார்கள்.
சைவ உணவு உண்பவர்கள் அவர்களை பார்த்து பொருமிக் கொண்டு இருப்பார்கள். எல்லாரிடமும் ஒரே அளவு தான் பணம் பெற்றார்கள் அவர்கள் மட்டும் மூன்று நேரமும் அசைவ உணவினை அனுபவிக்கிறார்கள் நமக்கு ஒரே மாதிரியான மெனு என்று. ஒரு dish தவிர அவர்களுக்கும் எங்கள் மெனுவே தான்.
மதியம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்றார்கள்.
வாயிலில் தயாராக நுழைவு சீட்டை கையில் தந்து அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வர சொல்லி விட்டு tour guide பேருந்து ஓட்டியுடன் கதை பேச அமர்ந்து விட்டார். உள்ளே நுழைந்ததும் அரங்கத்தின் map கொடுத்தார்கள். அந்த வரைபடத்தை பார்த்து நாம் எந்த பகுதியை பார்க்க நினைக்கிறோமோ அங்கே சென்று காணலாம். இந்த அருங்காட்சியகம் பிரிட்டனின் காலனி நாடுகளிலிருந்து எடுத்து வரப்பட்ட பொருட்களால் ஆனது. இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா , தெற்காசியா, தென் அமெரிக்கா
என பல பகுதிகளில் பிரித்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளன .
குறுகலான நடைபாதைகள். அரங்கில் கூட்டமான கூட்டம்.
இந்தியா என்ற அரங்கத்திற்குள் நுழைந்தோம். அதிர்ச்சியடைந்தோம். நம் கோவில்களின் சிலைகள் , மண்டபங்கள் , நகைகள் என எவற்றையெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ கொண்டு சென்றிருக்கிறார்கள். ரோம், எகிப்து நாடுகளுக்கான பகுதியில் அரசர்களின் கல்லறை சுவர்கள், கிரீடங்கள், எகிப்து நாட்டு மம்மிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. பலவற்றையும் கண்டோம்.
https://en.wikipedia.org/wiki/British_Museum
என் கணவரின் அலுவலக நண்பரும் எங்களுடன் வந்திருந்தார். அவரது மகள் என் கணவரிடம் அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூறினார் என்ற காரணத்தால் என் கணவர் அவரையே தொடர, நான் என் கணவரை தேடி அலைய (பாஸ்போர்ட் என்னிடம் இருக்கிறதே), கூட்டத்தில் நண்பர் சுதந்திரமாக எங்கெங்கோ காமிராவும் கையுமாக அலைய ... அருங்காட்சியகங்கள் என் மனதுக்கினிய இடங்கள். பொறுமையாக காண வேண்டியவை. ஒரு மணி நேரத்தில் நான் என்னென்ன பார்த்திருப்பேன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். நண்பர் அதற்கு முன்பே பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
வடஅமெரிக்காவில் இலவச கழிப்பறைகள் எல்லா இடங்களிலும் உண்டு. மிக சுத்தமாக பராமரிக்க படுபவை. Disposable toilet seat ஒவ்வொரு இடத்திலும் இருக்கும். ஐரோப்பாவில் கட்டண கழிப்பறைகள் தான். 2-3 யூரோ ஒவ்வொரு முறையும் செலவு செய்ய வேண்டும் என்பதால் வழிகாட்டி எங்கெங்கே இலவசமாக கழிப்பறைகளை உபயோகப் படுத்தலாம் என கூறுவார். அருங்காட்சியகமும் அதில் ஒன்று.
லண்டன் நகரின் அழகினை காண இரண்டு வழிகள் உண்டு.
1. 1. தேம்ஸ் நதியில் சுற்றுலா படகில் சென்று காண்பது
2. 2.தேம்ஸ் நதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள London Eye எனப்படும் Observation Ferris Wheelல் ஏறி நகரின் அழகினை உயரத்திலிருந்து காண்பது.
சிறுவயதில் (பெரிய வயதிலும் தான்) பெர்ரிஸ் வீல்ல்ல்லில் ஏறி சுற்றிய அனுபவங்களால் “லண்டன் ஐ”யில் ஏற உள்ளூர பயம். சற்று தொலைவிலிருந்து கவனித்ததில் அது மிக மிக நிதானமாக சுற்றுவது புரிந்தது. என்னை போல பயந்த வயதில் மூத்த பெண்மணிகளுக்கு தைரியம் சொல்லி உடன் அழைத்து கொண்டு ஏறினேன். [இறங்கியதும் நீ எங்களை தைரியப்படுத்தி அழைத்து செல்லவில்லை என்றால் இந்த அருமையான அனுபவத்தை இழந்திருப்போம் என்கிறார்கள்.]
2000 ஆவது ஆண்டில் பொது மக்களின் உபயோகத்திற்காக
திறந்து விடப்பட்டது இந்த ராட்டினம். 25 பேர் செல்லக் கூடிய 32 பெட்டிகள் (airconditioned capsules) அடங்கிய இந்த ராட்டினமானது ஒரு முறை சுற்றி வர 30 நிமிடங்கள் ஆகும். உள்ளே சிலர் மட்டும் அமரும் வகையில் பெஞ்ச் இருந்தது. மற்றவர்கள் நின்று கொண்டே காண வேண்டும். நிதானமாக நகரின் அழகினை உயரமான இடத்திலிருந்து கண்டு களிக்கலாம். நாங்கள் அதனுள்ளே இருந்த சமயத்தில் மழை பெய்ததால் நகரின் அழகினை மாலை நேரத்தில் வித்தியாசமான கோணத்தில் காண முடிந்தது. பக்கிங்காம் அரண்மனை, பிக் பென் டவர் என அழகான காட்சிகள்.
https://en.wikipedia.org/wiki/London_Eye
இரவு உணவினை இந்திய உணவகத்தில் உண்டு விட்டு விடுதிக்கு சென்றோம். என்னென்ன உணவு வகைகள் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். சில இடங்களில் மாற்றங்கள் இருந்தது. அவைகளை அந்தந்த சமயங்களில் குறிப்பிடுகிறேன்.
முன்பே நான் குறிப்பிட்டபடி தினமும் காலை தொடங்கி இரவு முடிய வழியில் சுற்றி பார்த்தபடி பயணித்து கொண்டே அடுத்த ஊருக்கு (நாட்டுக்கு) முன்னேற வேண்டும் என்பதால் மறுநாள் காலையில் விடுதியை காலி செய்து விட்டு பெட்டிகளுடன் கிளம்பி நேராக Madam Tussaud Wax Museum சென்றோம். லண்டன் நகரின் சாலைகள் சென்னை, கொல்கத்தா போல குறுகலான சாலைகள். ஒரே வித்தியாசம் தெருவின் குறுக்கே கோடுகள் இடப்பட்டு போக்குவரத்து விதிகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றன. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. (Traffic jam) ஒரு வழியாக ஊறி ஊறி போய் சேர்ந்தோம். [ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சாலை விதிமுறைகளை தான் நாம் இந்தியாவில் கடைபிடிக்கிறோம். UK வில் left hand drive. நான் கொல்கத்தா, சென்னையில் என் சிறு வயதுகளில் கண்டது போன்ற பேருந்துகளை அங்கே கண்டேன். டிராம்கள் இல்லை.]
எல்லா சுற்றுலா தலங்களிலும் முன்பே அனுமதி சீட்டுகள் வாங்கி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். மக்கள் வெளியில் வர வர அடுத்த குழு அனுமதிக்கப்படும். மேடம் டுசாட் மெழுகு அருங்காட்சியகத்தில் பிரபலமான அரசியல்வாதிகள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட துறை சார்ந்த பிரபலங்கள் போன்றோரின் சிலைகளை மெழுகில் செய்து காட்சிப்படுத்தி இருப்பார்கள். லண்டனில் கொலை கொள்ளை செய்தவர்களின் சிலைகளையும் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கான பகுதியில் lighting வித்தியாசமாக செய்யப்பட்டு, குறுகலான வழிகள், குகை போன்ற அமைப்புகள், மண்டை ஓடுகள், கடல் கொள்ளை காரர்களின் கப்பல்கள் என தத்ரூபமாக சற்றே பயமுறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. மற்ற இடங்கள் வெளிச்சமாக இருந்தன.
இந்த அருங்காட்சியகம் Baker street underground ரயில் நிலையத்திலிருந்து ஒரு நிமிட நடை தூரத்தில் உள்ளது. காத்திருந்த நேரத்தில் தெருவில் செல்லும் வாகனங்களை, மக்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். மக்கள் பொதுவாக ஜீன்ஸ் அணிவதில்லை. தலை முடியின் நிறம் வெள்ளையும் பொன்னிறமும் கலந்தாற்போல (blonde) இருந்தது. Formal ஆக உடை அணிந்து செல்கிறார்கள். முகத்தில் சற்றே மிடுக்கு. சிநேகமற்ற முகபாவம். லண்டன் நகரில் ஒருவர் கூட எங்கள் குழுவினரை நெருங்கி பேசியதை நான் காணவில்லை. [ஹோட்டல் லிப்ட்டில் எங்கள் குழுவினர் இருந்தால் அந்த ஊர் மக்கள் யாரேனும் இருந்தால் எங்களுடன் வராமல் அடுத்த லிப்ட்டில் வந்தார்கள்.]
221 B, Baker street என்ற கற்பனையான விலாசம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை படித்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தி. அருங்காட்சியகத்திற்கு முன்னால் உள்ள தெரு தான் Baker street. திரும்பி செல்லும் போது பேருந்தில் அந்த தெரு வழியாக சென்றோம். [என் சகோதரி: பேக்கர் ஸ்ட்ரீட் போனியா?] தெருவை கடக்கும் போது ஷெர்லாக் ஹோம்ஸ் அவரது நண்பர் டாக்டர் வாட்சனோடு செல்வது போல பிரமை. [Sherlock homes serial has 4 Seasons so far in Netflix. ஐந்தாவது season எப்போது வெளிவரும் என என் போன்ற ரசிகர்கள் காத்திருக்கிறோம்]
நேர நெருக்கடி காரணமாக Oxford Street என்னும் மிகப் பிரபலமான வணிக தெருவில் நடந்து சென்று ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை இழந்தோம். என்னுடைய அதிக பட்ச purchase என்பது அந்தந்த ஊரின் சிறப்பம்சங்கள் அமைந்த பிரிட்ஜ் magnets மட்டுமே. லண்டன் magnet என் வீட்டு பிரிட்ஜில் இல்லை :( மேற்சொன்ன காரணத்தால் எடுத்து சென்ற பவுண்ட் ஸ்டெர்லிங் நோட்டுக்களை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
https://en.wikipedia.org/wiki/Oxford_Street
வரும் வழியில் Trafalgar square junctionஐ கடந்து வந்தோம்.
https://en.wikipedia.org/wiki/Trafalgar_Square புத்தகங்களில் படித்த கேள்விப்பட்ட பல இடங்களையும் பெயர் பலகைகளை படித்த போது படித்து நினைவு படுத்தி கொண்டேன்.
பேருந்தில் ஓட்டுனருக்கு அருகில் CCTV மானிட்டர், மைக் இருக்கும். வழிகாட்டியின் இருக்கை அங்கே தான் என்று குறிப்பிட்டது நினைவிருக்கலாம். அவருக்கு விவரம் தெரிந்தால், நல்ல மூடில் இருந்தால் மைக்கை எடுத்து....நண்பர்களே உங்களுக்கு வலப்புறமாக சீக்கிரம் திரும்பி பாருங்கள் ஒரு வெள்ளை காக்கா மல்லாக்க பறக்கிறது என்பார்....எங்கே எங்கே என திரும்பி பார்ப்பதற்குள் இப்போது இடது புறமாக பாருங்கள் ...இது ஒரு ஏர்போர்ட் . சில நிமிடங்களில் நாம் ஒரு பாலத்தின் அடியில் செல்ல போகிறோம் அதன் மேலே விமானம் கடந்து சென்று தரையிறங்கும் வாய்ப்பு உண்டு .ஏரோபிளேன் வருகிறதா பாருங்கள் என abstract ஆக எதையாவது சொல்வார். ஒழுங்காக சொல்லுங்கள் என நான் கேட்டபொழுது கூகுளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். (பயிற்சி பெறாத வழிகாட்டி??). அதற்கு நீங்கள் எதற்கு வழிகாட்டியாக வந்தீர்கள் என சண்டையிட்டேன். நீங்கள் தினமும் இரவு கூகிளில் படித்து தெரிந்து கொண்டு வந்து மறுநாள் சொல்லுங்கள் என்றேன். (மற்றவர்களுக்கு இது பற்றிய கவலையெல்லாம் இல்லை) வெள்ளை காக்கா போல trafalgar square, St Paul 's
cathedral, Lords cricket stadium போன்ற இடங்கள் அவரால் வழிகாட்டப்பட்டன. எங்கெங்கே செல்ல போகிறோம் என்பது பற்றிய குறிப்புக்களை எடுத்து சென்றேன் என முன்பே குறிப்பிட்டேன் இல்லையா? அதனால் வழிகாட்டியை பற்றி கவலை படாமல் என் குறிப்புக்களை படித்து கொண்டேன். தெரியாதவைகள் இருந்தால் குறித்து வைத்திருந்து இரவில் கூகுளை பார்த்து அறிந்து கொண்டேன்.
St Paul's cathedral என்பது கிறிஸ்தவர்களின் மூன்று சிறந்த புனித தலங்களுள் ஒன்று. (Notre-dame basilica-Paris, St Peter
's Basilica-Vatican). 1981 ஆம் ஆண்டில் இளவரசர் சார்லஸ் டயனாவின் திருமணம் இங்கே தான் நடைபெற்றது. T.S Elliot என்னும் 21 ஆம் நூற்றாண்டு கவிஞரின் The Wasteland என்னும் நோபல் பரிசு பெற்ற கவிதையில் குறிப்பிடப்பட்ட ஒரு தேவாலயம். லண்டன் பிரிட்ஜ் மேலே நின்று பார்த்தால் தெரியும். மக்கள் தேவாலய மணியோசை கேட்ட பிறகும் பிரார்த்தனைக்கு வருவதில்லை அந்த பாலத்தில் மீது செல்பவர்கள் மணியோசை கேட்காதது போல செல்கிறார்கள் என்பார் கவிஞர் ஓரிடத்தில். இப்படி பல சிறப்புக்களை கொண்ட அந்த தேவாலயம் வெள்ளை காக்காவுடன் கலந்து விட்டது.
தேம்ஸ் (temz என உச்சரிக்க வேண்டும்) நதியின் குறுக்காக டவர்
பிரிட்ஜ் என அழைக்கப்படும்
Bascule தொங்கு பாலத்தை (Bascule bridge-படகுகள் கடந்து செல்ல வசதியாக மேலே ஏறி வழிவிடும் பால வகை) கண்டு அதன் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, அதன் அருகில் அமைந்துள்ள லண்டன் பிரிட்ஜ் எனப்படும் பாலத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம்.
https://en.wikipedia.org/wiki/Tower_Bridge
நாம் இது நாள் வரை லண்டன் நகரின் சின்னமாக அமைந்திருக்கும் காரணத்தினால் லண்டன் பிரிட்ஜ் என்று அழைத்து வந்திருக்கிறோம். ஆனால் அதன் பெயர் Tower bridge. லண்டன் பிரிட்ஜ் என்றழைக்கப்பட்ட சிறிய பாலத்தின் மீது நின்று டவர் பிரிட்ஜின் அழகினைக் கண்டோம். தேம்ஸ் நதியின் மீது செல்லும் படகுகளும் நதியின் பின்னணியில் அமைந்த கட்டடங்களும் நகரின் அழகினை மேலும் மெருகூட்டி காட்டின.
அந்த பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. அதில் இரண்டு கோபுரங்கள் (டவர்கள்) உள்ளன. அதன் மேலேறி சென்று உயரத்தில் உள்ள பாலத்தில் நடக்க முன் அனுமதி சீட்டு தேவை.
நாங்கள் செல்லவில்லை.
https://en.wikipedia.org/wiki/Tower_Bridge
[என் அத்தையார் பின்னொரு நாளில் கூறியது: என் மகனது இல்லம் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி சற்றே ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்துள்ளது. நாங்கள் அங்கே செல்லும் நாட்களில் தினமும் காலை 10 மணியளவில் நதிக்கரையோரமாக நடந்து சென்று இசைக்கலைஞர்கள் தெருக்களில் பாடும் / இசைக்கருவிகளை வாசிக்கும் இசையை ரசித்து விட்டு வருவோம். அமைதியும் அழகும் கூடிய ஒரு ஊர் லண்டன் என்றார். அது கேட்டு எனக்கும் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை பிறந்தது.]
லண்டன் பயணம் நிறைவுறும் நேரம் நெருங்கியது. அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஹாலந்து நாட்டின் Hook of Holland என்னும் துறைமுகம். லண்டன் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் Harwich என்னும் ஊரின் International portஐ மாலை 6 மணிக்குள் சென்று சேர வேண்டிய காரணத்தால் மாலை நான்கு மணியளவில் பேருந்தில் ஏறினோம்.
எல்லா நாடுகளிலும் பெரிய ஊர்களில் மக்கள் தொகை அதிகம் என்பதால் வாகன போக்குவரத்தும் அதிகம். போக்குவரத்து நெரிசல் (Traffic jam) என்பது சகஜம் என்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டிய கட்டாயம்.
லண்டன் (மன்னிக்கவும்) டவர் பிரிட்ஜின் மேலே பயணம் செய்ய வேண்டும் என்ற எங்களது ஆசையை நிறைவேற்ற முடியாது என்று ஓட்டுநர் கூறியிருந்தார். ஆனால் டிராபிக் diversion காரணமாக அந்த பாலத்தை கடந்து செல்ல போகிறோம் என்று அவர் கூறியதும் சிறு பிள்ளைகளை போல அனைவரும் ஓ.... என்று குரலெழுப்பி மகிழ்ச்சியை தெரிவித்தோம். பாலத்தின் மேலே பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கான பாதைகள் உள்ளன. பாலத்தினை கடக்கும் போது அதனருகில் ஒரு அரண்மனையை (கோட்டை?) காட்டி அங்கே தான் கோஹினூர் வைரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் வழிகாட்டி.
லண்டன் நகரின் போக்குவரத்து நெரிசலை தாண்டி பயணித்த போது பல அடுக்கு மாடி கட்டிடங்களை காண முடிந்தது. புராதனமான கட்டிடங்கள் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன.
ஊரை தாண்டியதும் அகலமான சாலைகள் உள்ளன. வழியெங்கும் தொழிற்சாலைகள்,விவசாய நிலங்கள், அவைகளுக்கான ட்ராக்டர்கள் ட்ரக்குகள் போன்ற வாகனங்கள் , புல்வெளிகள், மஞ்சள் பட்டை விரித்தாற்போல daffodil பூக்கள் என வித்தியாசமான காட்சிகள்.
எந்த வயதினராக இருந்தாலும் நட்பு பாராட்ட என்னால் முடியும் என்றாலும், இரண்டு நாட்களும் ஊர் சுற்றி பார்ப்பதிலும் ஜெட் லாகை (Jetlag) வெற்றி கொள்வதிலும் கவனம் செலுத்தியதில் மற்றவர்களுடன் அதிகம் அறிமுகம் ஏற்படவில்லை.
மாலை ஆறு மணியளவில் Port Harwich ஐ சென்று சேர்ந்தோம். [ஹாரிச் என உச்சரிக்க வேண்டும்.]
அனுபவங்கள் தொடரும் ...
![]() |
This is where Kohinoor diamond is stored |
![]() |
Over the Tower bridge |
![]() |
St.Paul Cathedral |
![]() |
Garden opposite to Buckingham palace |
![]() |
British museum layout map |
Swami narayan temple |
this is nice narration and also very interesting to read as we ourselves visit and experience and write
ReplyDeleteThanks
DeleteA simple journey narrated in a beautiful way...using simple words and choosing Wikipedia, historical and mythological reference she has presented a nice article.
ReplyDeleteThanks for taking me to so nany places without spending a rupee.
Enjoyed reading it and I was so immersed that I emptied a bowl of dry fruits and a bowl of peanuts.ha ha ha...let me refill it before wife notice...ha ha...well,had a nice journey
Lol ! Hope you'll patronize my writings in future too, of course without dry fruits bowl. Thanks Mr.Ananymous.
Delete