7/8/2015 - 17/1/2016
SINGAPORE AIRLINES
சென்னை- சிங்கப்பூர் - இஞ்சியான் (தென் கொரியா) - சான் பிரான்ஸிஸ்கோ
சான் பிரான்ஸிஸ்கோ- ஹாங்காங்- சிங்கப்பூர்-சென்னை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் மகள் கோடை விடுமுறைக்கு இந்தியா வந்திருந்து விட்டு திரும்பி சென்ற சமயம் நானும் உடன் சென்றேன்.
பயண நோக்கம்: சின்ன பேரனுடன் பொழுது போக்குவது. Babysitting இல்லை. Intellectual sitting.
ஆகஸ்ட் இரண்டாவது வார இறுதியில் அங்கே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பிக்கும். (அமெரிக்காவின் கோடைக்காலம் ஜூன் ஜூலை மாதங்கள்)
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மகள் மற்றும் பேரன்களுடன் பயணம் ஆரம்பம். குறுகிய கால அறிவிப்பில் நான் கிளம்பிய பயணம் அது. (ஒரு வாரம்)
மகள் அமெரிக்காவிலும் நான் இந்தியாவிலும் பயண சீட்டுக்கள் வாங்கியதால் மகளுக்கும் எனக்கும் வெவ்வேறு வரிசையில் இருக்கைகள். ஒரே வரிசையில் எங்கள் இருக்கைகள் இருக்கும் வகையில் மாற்றும் முயற்சியில் ஒரு மணி நேரம் கழிந்து விட்டது, சிங்கப்பூர் - SFO விமானத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் அடைந்தோம் .
எங்கள் பிள்ளைகள் தூங்காமல் in-flight entertainmentல் சினிமா பார்த்துக் கொண்டே லூட்டி அடிக்க .... ஒரு வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம். [வீட்டிலிருந்தால் 30 நிமிடங்களுக்கு மேல் Screen time கிடையாது. அதுவும் அந்தந்த வயதிற்கேற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே காண முடியும்.]
சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் 1.30 மணி நேரங்களே என்பதால் சீக்கிரமாகவே அடுத்த விமானத்த்தில் ஏறிவிட்டோம். இடைப்பட்ட நேரத்தில் பால், காப்பி , தின்பண்டங்கள் , ஓட்டம் , சத்தம் ...
முதன் முறையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணம். அதுவும் சிங்கப்பூர் வழியாகவே.
சென்னை, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களைப் போல செக்யூரிட்டி செக்கிங் எல்லாருக்கும் பொதுவானதாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் இல்லை. ஒவ்வொரு gate (விமானத்தில் ஏற உதவும் நுழைவாயில்) முன்பும் தனித்தனியாக கண்ணாடி அறைகளுடன் உள்ளது.
இந்த ஏர்லைன்ஸ் குழந்தைகளுக்கான அதிகப்படி வசதிகளும் கவனிப்பும் அளிப்பதால் விடுமுறை முடிந்து செல்பவர்கள் இந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் வருவதையே விரும்புகிறார்கள். விமானத்தில் சிறுபிள்ளைகளின் சத்தம் பேச்சு அழுகை, சிரிப்பு…
சில மணி நேரங்கள் Incheon விமான நிலையத்தில் (தென் கொரியா) இறங்கி காத்திருந்து மீண்டும் சான் பிரான்ஸிஸ்கோ விமானத்தில் ஏறினோம்.
Incheon விமான நிலையம் சுத்தமாக அமைதியாக இருந்தது. விமானங்கள் ஏறி இறங்குவதை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்தோம்.
[Netflix ல் ஒரு தொடரில் இந்த விமான நிலையம் கதை களமாக வரும். அதை பார்த்த போது மனத்திற்கு நெருக்கமான உணர்வு ஏற்பட்டது.]
அதிகப்படியான பிரச்சினைகள் இல்லாத பயணமாக அமைந்தது.
MS படிக்க சென்ற மகன் அச்சமயம் அங்கே இருந்தார். 2 வருடங்கள் கழித்து பார்த்த உணர்வே இல்லை என்று கூறினார். (Technology, boon or bane?)
[2008ல் மகள் திருமணமாகி அங்கு சென்ற போது அவர்களை வரவேற்க, வழியனுப்ப 10 பேராவது செல்வோம்.
விடியற்காலை 3 மணிக்கு வந்திறங்கியதும் குட்டி பேரன் கேசவ் இது முரளி தாத்தா , இது அச்சு அத்தை , இது ... என பெயருடன் உறவுமுறையை சொல்லி அசத்துவார்.
10 என்பது படிப்படியாக குறைந்து கொரோனா காலத்தில் நீங்களே taxi பிடித்து வந்து விடுங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.]
அச்சமயம் Cupertino நகரில் மகளது குடும்பம் வசித்து வந்தார்கள். அருகிலேயே 85N என்னும் எண்ணுடைய Freeway (Freeway என்பது நம் நாட்டு Highway, Bi - pass சாலைகள் போல, ஆனால் ஊரின் உட்பகுதியில் பல்வேறு பகுதிகளையும் இவைகள் இணைக்கும், எந்த ஊருக்குள் செல்ல வேண்டுமோ அந்த எண்ணுடைய Exitல் freewayயிலிருந்து விலகி Local roadல் செல்லலாம். கிழக்கு மேற்காக செல்லும் சாலைகளுக்கு இரட்டைப் படை எண்கள், தெற்கு வடக்காக செல்லும் சாலைகளுக்கு ஒற்றைப்படை எண்கள் என பெயரிடப்பட்டுள்ளன. Exit களுக்கும் எண்கள் உண்டு. (முன்பு GPS) கூகிள் துல்லியமாக வழி காட்டுகிறது. எந்த Exit ல் எந்த ஊருக்கு செல்ல நுழைய வேண்டும் என்று பார்த்து செல்லலாம்.)
வண்ண மலர்களை , இலைகளை கொண்ட மரங்களுடன் கூடிய பகுதி. 10 நிமிட நடை தூரத்தில் பொதுநூலகம், பூங்கா. அக்கம்பக்கம் இந்தியர்களே அதிகம் வசிக்கிறார்கள். குறிப்பாக தமிழர்கள். (அம்மா ...சின்ன பேரனை அழைத்துக் கொண்டு நூலகத்தில் கதை நேரத்துக்கு போயிட்டு புத்தகங்களை மாத்தி எடுத்து கொண்டு வந்துவிடு ...பூங்காவில் விளையாட வைத்து அழைத்துக் கொண்டு வந்துவிடு...)
Biscuit, தண்ணீர், காலை உணவு என எடுத்துக் கொண்டு செல்வேன். ஒரு முறை ஒரு வடஇந்திய தம்பதிகள் நான் தனியாக பூங்காவை கடந்து நூலகம் சென்று வந்ததை பார்த்து விட்டு, மேடம் உங்கள் பேரன்கள் இந்தியா சென்று விட்டார்களா விடுமுறை முடிந்து விட்டதா என்று கேட்டார்கள். செல்ல வேண்டியவள் நான் தான் என்று கூறி விட்டு சென்றேன்.)
வீட்டிற்கு மிக அருகில் Indian Store. அங்கே நமக்கு தேவையான சகல மளிகைகளும் காய்கறிகளும் (மாங்காய் இஞ்சி, குஜராத்தி மக்களின் விரத பொருட்கள், கேரள மக்களின் புட்டு மாவு, சமோசா என சகலமும் கிடைக்கும் . எவ்வளவு அருகில் என்றால் சாப்பிட அமர்ந்து சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிப்பதற்குள் தயிர் வாங்கி வந்து விடும் அளவுக்கு மிக அருகில் இருந்தது.
பள்ளி நாட்கள் என்பதால் வெளியூர்களுக்கு அழைத்து செல்ல மகள் குடும்பத்தினருக்கு நேரமில்லை. (Shelter Coveவிற்கு மட்டும் அவர்கள் குடும்பத்துடன் சென்றேன்) மகன் படிப்பு முடிந்து ஒரு அலுவலகத்தில் intern ஆக வேலை செய்து கொண்டும் வேறு வேலை தேடிக்கொண்டும் இருந்த காலம் எனவே அவருடன் சான் பிரான்ஸிஸ்கோ Golden Gate Bridge, Mystery Spot, Muir Beach, Las Vegas, Grand Canyon, Golden Gate Bridge, Mountain view computer history museum, San Jose State University, Downtown San Jose, Martin Luther King (JR) public library ஆகிய இடங்களை காண நேர்ந்தது.
அச்சமயத்திலேயே அமெரிக்காவின் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் நடத்தப்படும் சம்ஸ்க்ருத வகுப்புக்களுக்கு என் பேரனும் மருமகனும் செல்ல தொடங்கி இருந்தார்கள். (நானும் சங்கீ காஷ் போவேன் என பிரதி சனியன்றும் சின்ன பேரன் அழுவார்.)
சின்ன பேரனின் playschool விழாக்கள், பெரிய பேரனின் பள்ளி விழாக்கள், நவராத்திரி, தீபாவளி, ஹாலோவீன், பொங்கல் முடிய கொண்டாடி விட்டு ஊர் திரும்பினேன்.
டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய திரும்ப முடியாமல் சென்னையின் பெருவெள்ளம். ஜனவரி 17ஆம் தேதி கிளம்பி ஹாங்காங் சிங்கப்பூர் வழியாக சென்னை பயணம்.
ஒவ்வொரு முறை பயணம் செய்யும் முன்பும் பயண நேரத்தில் in-flight entertainment ல் என்ன சினிமா பார்க்கலாம் என்ன படிக்கலாம் என தெரிந்து கொண்டு கிளம்புவது என் வழக்கம். (அந்தந்த airlines websiteல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.) இம்முறை சிங்கப்பூரில் 8 மணி நேரங்களை எப்படி கழிப்பது என்று பார்த்தேன். நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தை விமானத்தில் படிக்க கொடுத்தார். Tabletல் புத்தகம் டவுன்லோட் பண்ணிக்கோங்க அம்மா _ மகனும் மருமகனும் .
இரவு 12.30 மணிக்கு விமானம். 9 மணிக்கு கிளம்பும் சமயத்தில் பெருமழை. பெரிய பேரன் அழுது வழியனுப்பினார். (கடந்த முறை சென்ற போதும் அதே ...)
போகும் போது பேரன்களின் வசதிக்காக குறைந்த layover ல் பயணம். திரும்பும் சமயம் சிங்கப்பூரில் 8 மணி நேரங்கள் layover.
தொடர்பு விமானத்திற்கான போர்டிங் பாஸ், 6-8 மணி நேர அவகாசம் இருந்தால் சிங்கப்பூரை சுற்றி பார்த்து விட்டு வரலாம் . அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ள tour bus ல் அவர்களே விசாவிற்கு ஏற்பாடு செய்து அழைத்து சென்று சுற்றி காண்பித்து விட்டு விமான நிலையத்திற்கு அழித்து வந்து விடுகிறார்கள் என்பதை வெப்சைட் மூலம் தெரிந்து கொண்டேன்.
சான் பிரான்ஸஸிஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் ஒரு ஆந்திர மாநில தம்பதியினரும் மேற்கண்ட எண்ணத்தில் இருந்ததை அறிந்து ஒன்றாக செல்ல முடிவு செய்தோம்.
விமானத்தில் ஏறிய ஒரு மணி நேரத்தில் (இரவு 1.30), உணவு தந்தார்கள். கலிபோர்னியாவின் பிரசித்தமான ஐஸ்கிரீம் தந்தார்கள். பிஸ்கட், சாக்லேட் சுவைகளுடன் சற்றே கசப்பாக இருக்கும். Dessertக்கு Raisins ஒரு பொட்டலம். (Dried grapes). எதையும் சாப்பிட பிடிக்கவில்லை. Raisins பொட்டலத்தை கைப்பையில் வைத்துக் கொண்டேன். (எதற்கும் இருக்கட்டும் அவசரத்துக்கு உதவும்)
அமெரிக்க நேரப்படி காலை 8 மணி. பசி. ஜூஸ், காப்பி மட்டுமே. தேவைப்பட்டவர்கள் pantry சென்று வாங்கி கொள்ள வேண்டும். 9 மணி பசியோ பசி. ஆப்பிள் மற்றும் ஒரு bun கொடுத்தார்கள்.bunல் சைவ அசைவ பாகுபாடு வேறு. எப்போது உணவு கொடுப்பீர்கள் என்று கேட்டேன். 1.30 என்றார் விமான பணிப்பெண். (சீன நாட்டை சேர்ந்தவர்களே பணிப்பெண்களாக இருந்தார்கள்). நான் 1.30 மணி நேரத்தில் என நினைத்தேன். 10.30 மணி. பசி மயக்கம் எப்போது சாப்பாடு என்று மீண்டும் கேட்டு விட்டு என் கடிகாரத்தையும் காட்டினேன். மதியம் 1.30 என்று கைவைத்து காட்டினார். அடப்பாவிகளா! (12 மணி நேரங்களுக்கு உணவே தரவில்லை). மருந்து சாப்பிட வேண்டுமே என்றேன் ஆப்பிள் சாப்பிட்டு விட்டு மருந்து சாப்பிடு என்றார்.
நொந்து போய் இருக்கையில் அமர்ந்தேன். கைவசம் இருந்த raisin பாக்கெட் உதவியது. ஹாங்காங்கில் இறங்குவதற்கு முன் உணவு கொடுத்தார்கள். (கைவசம் அவசரத்திற்கு என எடுத்து வந்திருந்த சப்பாத்திகள் என் நினைவுக்கே வரவில்லை.) பசி மயக்கம் தூக்க கலக்கம். படிக்கும் எண்ணமே வரவில்லை.
மொத்த பயண நேரத்தில் Martian மற்றும் ஒரு மலையாள திரைப்படங்களைப் பார்த்தேன்.
15 மணி நேரங்கள் பயணம் செய்த பிறகு ஹாங்காங். அதற்குள் வாட்சப்பில் "அம்மாவை காணவில்லை. "
ஒரு மணி நேர layover.
சான் பிரான்ஸஸிஸ்கோ மற்றும் அதன் சுற்று புறங்களில் சீனர்கள், இந்தியர்கள், மெக்சிகர்கள், ஆங்கிலேயர்கள் என வசிக்கிறார்கள். சீனாவிற்கு செல்லும் மக்கள் நம்முடன் தான் வருவார்கள். ஒவ்வொரு முறை ஹாங்காங் வழியாக செல்லும் போதும் பயமே. (6 முறைகள் சென்றிருக்கிறேன், ஊருக்குள் சென்றதில்லை) பொதுவாக நம்முடன் பயணித்த முகங்களை அடையாளம் வைத்துக் கொண்டு அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று தொடர்பு விமானத்தில் ஏறலாம் என்ற எண்ணம் இங்கே பலிக்காது. எங்கெங்கும் ஒரே மாதிரியான முகச்சாயல் உள்ள மக்கள். நம்முடன் யார் வந்தார்கள் என்று கண்டுபிடிப்பதெல்லாம் அசாத்தியம். மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஓட்டமாக அங்கும் இங்குமாக வளைந்து நெளிந்து மீண்டும் இறங்கிய இடத்திற்கே வந்து விமானத்தில் ஏறி சிங்கப்பூரை அடைந்தோம்.
திட்டமிட்டபடி டெர்மினல் 3 - டெர்மினல் 2 விமான நிலைய பேருந்தில் ஏகப்பட்ட செக்யூரிட்டி செக்கப்பிற்கு பிறகு அழைத்து சென்றார்கள்.
டெர்மினல் 2 ல் மிக அருமையான வண்ணமயமான ORCHID தோட்டம். அதனருகில் இம்மிகிரேஷன் மற்றும் சிங்கப்பூர் tour counter. அங்கே காத்திருந்து அனுமதி பெற்று பேருந்தில் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினோம். 2.30 மணி நேரங்கள். பூமத்திய ரேகை பகுதி (Equatorial region) என்பதால் மழை அதிகம் உள்ள நாடுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா. எனவே இங்குள்ள இலைகளின் பச்சை நிறத்தை வேறெங்கும் நான் கண்டதில்லை. நகரெங்கும் பசுமை. வெப்சைட்டில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். (enhanced photos)
Jet lag காரணத்தால் பசி, தாகம் இன்னபிற தொல்லைகள் இல்லாமல் சுற்றி பார்த்து விட்டு விமான நிலையம் வந்து சேர்ந்து லாக்கரில் வைத்திருந்த கைப்பெட்டியை மீட்டுக் கொண்டு விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில் பசி, தாகம், தூக்கம் எல்லாம் தலை தூக்கின .
பல் துலக்கி, சப்பாத்தி சாப்பிட்டு விட்டு காத்திருந்து தாமதமாக கிளம்பிய விமானத்தில் தூங்கி வழிந்து கொண்டே ஏறி அமர்ந்தேன் அருகில் ஒரு ஆங்கிலேய இளைஞர். அறிமுகப்படுத்தி கொண்டு அமர்ந்த நேரம் ஒரு பெண்மணி நான் ஆண்களின் அருகில் அமர மாட்டேன் என்று அடம் பிடித்து என் அருகில் அமர்ந்தார். அந்த அன்பர் நான் சைவ உணவு சொல்லி இருக்கிறேன் விமான பணிப்பெண்ணிடம் கண்டிப்பாக சொல்லுங்கள் என்று 4 முறை சொல்லி விட்டே நகர்ந்தார். அந்த நட்பான சகபயணியிடம் பேசும் வாய்ப்பை இழந்தது வருத்தமே.
சிங்கப்பூரில் இருந்த உறவினர்கள் On-arrival visa வாங்கி கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி செல்லுங்கள் என்று கூறினார்கள். விசா 3 மணி நேரங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தேன். அடுத்த அமெரிக்க பயணத்திற்காக பாஸ்ப்போர்ட்டை பார்த்த போது தான் கவனித்தேன் விசா 5 நாட்களுக்கு கொடுத்திருந்தார்கள். சிங்கப்பூரில் தங்கும் வாய்ப்பை என் கவனமின்மையால் (தூக்க கலக்கம், மப்பும் மந்தாரமுமான உணர்வு, அனுபவித்தால் மட்டுமே புரியும்) இழந்தேன்.
விமானம் கிளம்பிய நேரம் நான் என் சுய நினைவிலேயே இல்லை. Jet lag தூக்கம். [Jet lag தூக்க சமயத்தில் நம் சுய நினைவே இருக்காது. அறுவை சிகிச்சைக்காக anesthesia மயக்க மருந்து கொடுத்தது போன்ற உணர்வுடன் இருக்கும். நம்மை சுற்றி என்ன நடந்தாலும் தெரியாது என்பதால் காத்திருப்பு நேரங்களில் தூங்கவே கூடாது.] அருகிலிருந்த பெண்மணி சாப்பாடு வந்ததும் எழுப்பி சாப்பிட சொன்னார். அப்படியே மீண்டும் தூக்கம். அவரே என் தட்டையும் எடுத்து விமானப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்ட, ஐஸ் கிரீம் வாங்கி வைத்திருந்தார் .(அன்றைய dessert )
வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல கேட்காமல் எழுந்து சாப்பிட்டு விட்டு தூங்குங்க என்று வற்புறுத்தி சாப்பிட வைத்தார். (யாரோ அவர், சாப்பிடாமல் தூங்க கூடாது என்று என் மேல் கருணை கொண்டவர்)
கண் விழித்த போது சென்னை கடற்கரை தெரிந்தது.
வீட்டிற்கு வந்திறங்கியதும் தாகமாக இருக்கவே கொதிக்க வைக்காத தண்ணீரை (water can) குடித்து விட்டேன். வெள்ளத்தின் பலனாக தண்ணீரின் தன்மை மோசமாக இருந்தது போல. அடுத்த 30 நாட்கள் எந்த மருந்துக்கும் ஊசிக்கும் கட்டு படாமல் இருமலோ இருமல். (முற்காலத்து கக்குவான் இருமல் போல) இது வரை முதலும் கடைசியுமாக ஏற்பட்ட மோசமான இருமல்.
மறுநாள் பெட்டியை திறந்து பொருட்களை எடுக்கும் போது நண்பர் பரிசளித்த புத்தகமும் கண்ணில் பட்டது .
அதன் பெயரும் "Martian". (அந்த புத்தகத்தை தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். Matt Damon கதாநாயகன்)
இனிமையானதொரு பயணம்.
அனுபவங்கள் தொடரும் ...
1. American Freeways
https://immigrationroad.com/life-in-us/travel/us-freeway-highway-name-number.php
2. Jet lag experience
https://manjooz.blogspot.com/2015/09/blog-post.html
3.Shelter cove trip
https://www.facebook.com/sundararajan.manjula/posts/1076474692370142
4. Vegas trip
https://manjooz.blogspot.com/2015/11/vegas-with-family-d.html
5.சான் பிரான்ஸிஸ்கோ மக்களின் வாழ்க்கை முறை
https://www.facebook.com/sundararajan.manjula/posts/1091355080882103
6. White collar (Netflix)
https://www.facebook.com/sundararajan.manjula/posts/1082671278417150
7. Treatment of old people
https://www.facebook.com/sundararajan.manjula/posts/1103185756365702
8. Black Thursday
https://www.facebook.com/sundararajan.manjula/posts/1129414467076164
9. Return trip via Singapore
https://manjooz.blogspot.com/2016/02/blog-post_4.html3.







No comments:
Post a Comment