Tuesday, 31 May 2016

M.A [ENGLISH LITERATURE]



புத்தகங்கள் வீடு வந்து சேர்ந்து 8 மாதங்கள் முடிந்த நிலை....

அமெரிக்காவில் 5 1/2 மாதங்கள் பேரன்களுடன் குலாவல், வந்து 1 1/2 மாதம் இருமல், மீதி சோம்பல்.. கணக்கு சரியா?

மே மாதத்தில் பரீட்சைகள் நடைபெறும்.(2015-2016) மார்ச் மாதத்தில் ஒரு நாள்  எங்கள்  மூத்த சகோதரி யோகா முதுகலை படிப்பிற்கான நேர்முக வகுப்பிற்கு சென்றுள்ளார் என்பதை கேள்விப்பட்டு நம்மை விட மூத்தவர் துணை தலைமை ஆசிரியர் பதவி வகிப்பவர், அவரே ஆர்வமாக படிக்கும் போது, நம்மால் முடியாதா? உத்வேகத்துடன் நானும் Personal Contact வகுப்பிற்கு கிளம்பி சென்றேன். இதை epiphany என்பார்கள். [a sudden manifestation of insight]

மிக அருமையான பாட நேரங்கள். English literature is European literature and Christian literature என்று ஆரம்பித்து பேராசிரியர்கள் மணிக்கணக்கில் விரிவுரையாற்றினார்கள். Wonderful and memorable moments of my life. பாடத்தின் வழியே நம்மை church, chapel, basilica, Constantinople, London, Paris என அழைத்துச் சென்றார்கள். அது தனி உலகம். 

Shelly, Byron, Milton, T.S. Elliot என மிக அருமையான பாடங்கள் .

ஏப்ரல் மாதத்தில் பாடங்களில் படித்த ஐரோப்பாவை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது... கல்விச் சுற்றுலா நம் சொந்த செலவில். [ஐரோப்பிய பயணம் பற்றி தனியாக விரிவான பதிவுகளை எழுதியுள்ளேன்]

வகுப்புகள் முடிந்த சூட்டோடு, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அ, ஒ, ஆ, அவ், எய், இய, ஊ...

Phonetics என்னும் வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சி தான், வடிவேலு வசனம் இல்லை. மொத்தம் 12 vowels அதில் 7 Short, 5 Long, 8 Diphthongs, 24 Consonants என ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. பாட்டீ...If you put a hyphen after a letter it is a Long vowel என்று பேரன் 6 மாதங்கள் முன்பே சொல்லி இருந்தார்.

You Tube பார்த்து பயிற்சி,படிக்க, எழுத என நான் முயற்சிக்க (அறை கதவை மூடிக் கொண்டு தான்)  ... விதம் விதமான உச்சரிப்பு சத்தம் கேட்டு கண்ணில் கேள்விக் குறியுடன் எட்டிப் பார்த்த என் கணவரின் முகம் கண் முன்னால் நிற்கிறது இன்றும். :)

இதே ரீதியில் Accent, Stress, Intonation, Transcription எனப் பல பயிற்சிகள். 8 மார்க் கட்டாயக் கேள்வியாயிற்றே.. வேறு வழி இல்லை. உலகம் முழுவதுக்கும் பொதுவான phonetics குறியீடுகள் பற்றி படிக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கும் போது அதை விடலாமா? என் பல வருடக் கனவும் கூட. Thames என்பதை /temz/, houses என்பதை ஹவுசிஸ் எனவும் தான் உச்சரிக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆரம்பத்தில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை...படிக்கப் படிக்க... அவைகளின் கட்டமைப்பு, காட்சிகள், கதாபாத்திரங்கள் என அசத்தல். [பார்த்தால் பிடிக்காது படிக்க படிக்கத் தான் பிடிக்கும்,_தனுஷ் பட வசனம்]

நேற்று முன் தினம் பார்த்த ஒரு புதுப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு மொத்தமுமே anti climax தான். climax இல்லை. அப்போது என் நினைவுக்கு வந்த ஷேக்ஸ்பியரின் கதை Winter's tale. (Sparknotes.com இல் போய் படிக்கலாம்.) புரியும்படியான ஆங்கிலத்தில் உள்ளது. சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறு விஷயத்திற்கு செல்வது தான் digression .

மீண்டும் ஷேக்ஸ்பியர். எல்லா மாதிரி வினாத் தாள்களிலும் Antonio பற்றிக் குறிப்பு வரைய சொல்லி இருந்தது. யார் இவர் எனத் தேடினேன். பல கதைகளில் இந்த பெயரில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறார். யாரைப் பற்றி எழுதுவது என்ற குழப்பம் ...  சாய்ஸ் இருக்கவே இருக்கிறது என்று முடிவெடுத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினேன்.

மேக்பெத் என்னும் கதையில் Madcuff என்று ஒரு கதாபாத்திரம். பெயரே ஒரு மாதிரி இருக்கவே ..சரி ஆங்கிலேயர்கள் விதம் விதமாக பெயர் வைத்துக் கொள்வது சகஜம் என்று நினைத்து, அந்தப் பெயரை மனதில் வாங்கி படித்து, தேர்வில் முதல் கேள்விக்கான விடையும் இதே பெயரை வைத்து எழுதி விட்டேன். கேள்வித் தாளின் கடைசி கேள்வியில் Macduff என்று குறிப்பிட்டிருந்தது. அடக்கடவுளே... மீண்டும் முதல் கேள்வி. [ Dyslexia விற்கு என்ன அறிகுறி , பரீட்சை முடிந்ததும் கூகிள்  செய்ய வேண்டும்]

மற்றொரு பாடத்தில் ஆசிரியர் symbols பற்றி சொல்லி இருப்பார். எல்லா செய்யுள்களும் நிறைய symbols வைத்தே இயற்றப்பட்டுள்ளன. symbols என்பது குறியீடுகள். சில குறியீடுகள், water என்பது - degenerated soul என்பது போல சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும் என்பார் ஆசிரியர். நமக்கு சொன்னாலே எந்தக் குறியீடும் புரியாது புரியவில்லை என்பதே உண்மை. பெருங்கடல், மீன் போன்றவை வாழ்க்கை பயணத்தினைக் குறிக்கும். பிறவிப் பெருங்கடல்....நினைவுக்கு வருகிறதா?? இதெல்லாம் கொஞ்சம் தாமதமாக (அதாவது தேர்வு முடிந்த பிறகு)  புரிந்து கொண்டது.

பாடங்களின் மொழி க(கொ)டுமையான நடை.  ஒரு பாடம் கூட...பாடம் என்ன பாடம் ஒரு வாக்கியம் கூட அகராதி இல்லாமல் படிக்க முடியவில்லை.

மீண்டும்  Annotation அக்கப்போர். 20 ஆம் நூற்றாண்டு இலக்கியங்களின் பொதுக் கரு "Death and Salvation" எல்லா பாடங்களும் செய்யுள்களும் இதே கருவின் அடிப்படையில் அமையப் பெற்றுள்ளது. எல்லாமே ஒரே போல இருக்கே .. எந்த பாடம்னே கண்டு பிடிக்க முடியலையே _ என் தோழி .

ஷேக்ஸ்பியரில் அவர் காலத்து ஆங்கில வசனங்களை இந்த காலத்து ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கிறோம். அவரது ஒரிஜினல் வசனங்கள் தான் இன்றைய annotation கேள்விகள். இந்த காலத்து இங்கிலீஷே புரியலைன்னு சொல்றேன் அவர் காலத்து வசனம் எங்கே புரியுது. [இதற்கிடையில் ஆங்கில இலக்கியம் படித்த என் அக்காவின் உபதேசம்.. நீ எல்லாத்தையும் ஒரு முறை நல்லா படி, எப்படியும் அங்கே போனதும் இந்த கதையா அந்தக் கதையா இல்லை இவன் சொன்னானா அவன் சொன்னானான்னு குழப்பம் வரத்தான் செய்யும், சமாளிக்கலாம் ]

அடுத்தடுத்து விதம் விதமான குழப்பங்கள் தொடர்ந்தன.

ஒரு வாக்கியம் : He stoops to slander Valentine

He = அவன்  Valentine- ஒரு ஆண் கதாபாத்திரம் மீதிக்கு என்ன அர்த்தம்??  அவன் வாலண்டைனைப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தான் என்பது அதன் பொருள்.

மொழிபெயர்ப்பு பற்றிய பாடத்தில் கீழே உள்ளது போல(வும்) ஒரு வாக்கியம்: 

A text in  SL is decoded, after which it is transferred to the deep structure of the TL, where it is encoded at the semantic syntactic level in order to be expressed at the surface level of the TL.

முதல் முறை படிக்கையில் இந்த SL, TL போன்றவை என்னவென்றே  தெரியவில்லை . ஒரு வழியாக நான் புரிந்து கொண்டது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது இரண்டாவது மொழியின் அமைப்பு மற்றும் உட்பொருளைப் புரிந்து அதன் மொழி இலக்கணத்துக்கு உட்பட்டு ,மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்பதே. SL(source language) TL(target language).

சில வாக்கியங்களுக்கு கடைசி வரை பொருள் புரியவே இல்லை .

கடைசித் தேர்வு Journalism. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும் என்று பள்ளியில் படித்த போது சொல்லிக் கொடுத்ததை இன்றளவும் பின்பற்றும் சமர்த்துப் பிள்ளை நான்.

Commerce சார்ந்த பாடம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க, அதன் முதல் பாடத்தில் ஒரு வாக்கியம்.

There are revolutionary developments in picture transmission. There are also still cameras on the market, which can capture 50 images on a 2 inch floppy disk.

அடேங்கப்பா.... என்னா revolution .... என்னா டெவலப்மெண்ட்டு !! ஹலோ..யாருப்பா அது? எப்பப்பா கடைசியா update பண்ணீங்க?

தேர்வு நடந்த பள்ளியில் ஒரு பெண்மணி ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தார் நாம் படிப்பது மிகப் பழைய syllabus என்று. இலக்கியப் பாடங்கள் மாற்றம் இல்லாதவை என்பதால் பரவாயில்லை. பின்னே வந்த  revolutionary development தான் சற்றே டென்ஷன் ஏற்படுத்தியது.

சிரமமாக இருக்கும் என்று எண்ணிய ஷேக்ஸ்பியரோ சுலபமாகிட, சிரமம் இன்றி முடிக்கலாம் என்றெண்ணிய language and literature 80 இலக்கணக் குறிப்புக்களுடன், வெய்யிலோடு சேர்த்துப் போட்டு புரட்டி எடுத்து விட்டது.

ஆங்கில இலக்கியம் படிப்பது  இவ்வளவு கஷ்டமா என்று நினைக்காதீர்கள் மக்களே! நான் இது வரை படித்த 3 மாஸ்டர் டிகிரிகளும் காமர்ஸ் தொடர்புடையவை. ஆர்வக் கோளாறில் இலக்கியம் படிக்க வந்ததன் விளைவுதான் இது

பின் குறிப்பு: ஆங்கில இலக்கியம் படிக்கும் முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உற்சாகமூட்டி ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

[இப்படி public ஆக நன்றியெல்லாம் சொன்னாலாவது 5 பேப்பரும் தேறும் என்ற எண்ணம் தான்]

எது எப்படி இருந்தாலும்....படிச்சா பிடிச்சர்லாம்.


பின் குறிப்பு :
[கடைசி வாக்கியம் திரைப்பட இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள் எழுதிய ஒரு தொடரின் தலைப்பை சுட்டு எழுதியது தான். நன்றி அய்யா]






Friday, 6 May 2016

வானவில்லின் ஓவியம்……


வானவில்லின் ஓவியம்……

ஒரு மொழியால் பிளவுபட்டிருக்கும் இரு நாடுகள் என்று திரு பெர்னாட் ஷா அவர்களால் கூறப்பட்ட நாடுகளில் ஒன்றான ஐரோப்பிய பயணம் கடந்த மாதம் 6 ஆம் தேதி பலத்த ஏற்பாடுகளுடன் தொடங்கியது.

இண்டர்னேஷனல் அடாப்டர், நன்றி, எசூஸ் மீ போன்ற வார்த்தைகளுக்கு ஐரோப்பிய மொழி வார்த்தைகள், அவசர உதவி எண் சகிதம் (போன் இல்லாமல் நான் இல்லை) எதிஹாட் விமானம் விமானி (அராபிக் ?? உருது ??) பிரார்த்தனை சொல்லிய பிறகு கிளம்பியது. அனேகமாக பயணம் நல்ல விதமாக அமையப் பிரார்த்தனை செய்திருப்பார்கள் (அ) உலக மக்களின் நன்மைக்காகவும் இருக்கலாம்.

லண்டன் நகரின் உள்ளே நம்முடைய சென்டிரல் ரயில் நிலையம், ரிப்பன் கட்டிடம் போன்ற அமைப்பில் கட்டிடங்கள். ஐரோப்பாவின் எல்லா நகர கட்டிடங்களும் இதே போன்ற வெளித்தோற்றத்துடன் காணப்பட்டது. ஊருக்கு வெளியே பல மாடி, மற்றும் தனி வீடுகள். ஹராட்ஸ் எனப்படும் மிகப் புகழ் வாய்ந்த கடை கூட இது போன்ற அமைப்பில் தான் இருந்தது. நம் சிறு வயதில் கண்ட டிராம், எதிரெதிரே அமர்ந்து செல்லும் டாக்சி, பழைய அமைப்பில் மாடி பேருந்துகள் என நாம் மறந்துவிட்ட பலவும் அங்கே கண்டேன்.
நெடுஞ்சாலைகளில் (அமெரிக்காவில் Free way இங்கே Auto route) செல்லும் போது குக்கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது . ஒழுங்கான சாலை அமைப்புடன் காணப்பட்டன.
எல்லா ஊர்களிலும் (நாடுகளிலும்) கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப்பட்டன. மணிக் கூண்டு ஒன்று அதன் அருகில் உள்ளது. நம் ஊர்களில் தேவாலயத்தின் மணி அதன் கோபுரத்துடனேயே சேர்ந்திருக்கும்.

ஐரோப்பா புல்வெளிகள் நிறைந்ததாக உள்ளது. ஐரோப்பியக் கவிஞர்கள் புல்வெளிகளை கால் நடைகளை மையப்படுத்தி பல கவிதைகள் (Pastoral elegy) எழுத இதுவும் ஒரு காரணாமாய் இருக்கும் எனத் தோன்றியது
குளிர் மற்றும் குறைந்த நீர்வளம் காரணமாக , டஃபோடில் (Daffodils) மலர்களை ஏக்கரா கணக்கில் உழுது பயிரிட்டிருக்கிறார்கள், எங்கும் எங்கெங்கும்.[அல்சைமர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரிக்க உதவும். பச்சைப் பட்டுடுத்திய நிலமகளின் மஞ்சள் மேலாடை மெல்லக் காற்றில் அசைந்தாட... கண்கொள்ளாக் காட்சி. சில நாடுகளில் நெல், திராட்சை.. (பிரான்ஸ், இத்தாலி)
ஒவ்வொரு நாட்டிலும் டஃபோடிலின் மஞ்சள் நிறம் தவிர்த்து குறிப்பிட்ட நிறங்களில் பூக்கள் அதிகம் பூத்திருந்தன. பிரான்ஸ் - மஞ்சள், வெள்ளை இத்தாலி - மஞ்சள், கத்திரிப்பூ நிறம் (பர்பிள்)
சுவிட்சர்லாந்தில் எங்கும் வங்கிகள் தென்பட்டன. யார் யாருக்கு இங்கே கணக்கு இருக்கிறதோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. தாமரை (லோடஸ்) என்ற கணக்கின் பெயரும் மனதில் வந்தது (இது யாருடைய கணக்கு என்று பேசிக் கொண்டார்கள் நினைவிருக்கிறதா மக்களே ??) வங்கிகள் மிக சாதாரண சிறிய கட்டிடங்கள். ஆளில்லாத அமைதியான அலுவலகங்கள். அடுத்தடுத்து வரிசையாகப் பல வங்கிகள் இருப்பதைக் கண்டேன். பெயர் எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. (மொழி பிரச்சினை.)
எங்கெங்கும் global warming. சுவிட்சர்லாந்தில் பனிமலைகளுக்கு பத்தடி தொலைவில் இருந்த போதும் குளிர் தெரியவில்லை. இரவில் ஊருக்குள் நடந்து சென்று பார்த்து வந்தோம்.
எங்கெங்கும் யூரயில், யூரோ ஸ்டார் போன்ற ரயில்கள் சென்ற வண்ணம் இருந்தன. எங்களுக்கு ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. பேருந்துப் பாதைக்கு அருகிலேயே தான் ரயில் பாதையும் செல்கிறது அதனால் பேருந்தில் காணும் காட்சிகள் தான் ரயிலில் சென்றாலும் காண முடியும் என்ற அல்ப மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்து, ஆஸ்டிரியா, இத்தாலியின் பல பகுதிகளில். மலையைக் குடைந்து சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். பல கிலோமீட்டர்களுக்கு செல்கின்றன. அதனுள்ளே ஆபத்து காலப் பாதைகள் வழியெங்கும்.

இப்பகுதிகளில் எங்கெங்கு காணினும் பனிமலைகள் தொடர்ச்சியாய். பனி உருகி கால்வாய்களும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும் ஐரோப்பா முழுவதும் கண்டோம். இத்தாலியில் மட்டும்  ஆறுகளில் தண்ணீரின் வரத்து மிக மிகக் குறைவாக இருந்தது. [ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் அதிக மழைப் பொழிவு என்று படித்தேன்]
பழமை எங்கும் பாதுகாக்கப் பட்டு வருகிறது. புதுப்பிக்கும் போதும் முன்பிருந்தாற்போலவே புதுப்பிக்கிறார்கள். லண்டன், பாரிஸ் மற்றும் இத்தாலிய நகரங்களின் பழமை மனதுக்கு இதம்.
அடுக்குமாடி வீடுகளின் பால்கனியில் சிறிய வீடாக இருப்பினும் பூந்தொட்டிகளில் பூச்செடிகளை வளர்க்கிறார்கள். இத்தாலியில் மட்டுமே நம்மைப் போல கொடி கட்டி துணி உலர்த்தியிருந்தார்கள். [சற்றே வெப்பமான நாடு மற்றும் வெயிற்காலம் என்பதால் இருக்கலாம்)
ஆம்ஸ்டர்டேமில் வீடுகளின் முன்வாசல் சிறியதாக உள்ளதால் ஒரு கொக்கி போல ஒவ்வொரு கட்டிடத்திலும் பதித்துள்ளார்கள். கனமான பொருட்களை ஏணியின் மூலம் 3 ஆம் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே எடுத்து செல்லுகிறார்கள். ஆற்றின் ஒரு கரையில் ஒற்றைப் படை எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றொரு கரையில் இரட்டைப் படை எண்கள் (டில்லிவாலாக்களே.. )
இத்தாலியில் வீடுகளின் ஜன்னல்கள் வேறு அமைப்பில் இருந்தன. நம் ஊர்களைப் போல கிரில்களுடன்.
புருஸ்ஸல்ஸ் நகரில் பலதரப்பட்ட மக்களைக் காண நேர்ந்தது. இஸ்லாமியர்கள், பிரஞ்சு , டச்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என கலந்து இருந்தார்கள்.
பிரான்சு நாட்டில் கல்வி இலவசம். யார் வேண்டுமானாலும் படிக்கலாமாம். பிரஞ்சு மொழி தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக. வாடிகன் நகர் மக்களுக்கு கல்வி, குடி நீர், மின்சாரம் என எல்லாமே இலவசமாம். வரி எதுவும் செலுத்தத் தேவை இல்லையாம். [ என்ன இந்த ஊர் இப்படி சாதாரணமா எல்லா ஊரையும் போல இருக்கு, வாடிகன் அப்படீன்னா நான் போப்பாண்டவரை சேர்ந்தவர்களும் தேவாலய ஊழியர்களும் பாதிரியார்களும் மட்டும் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் _ என் கணவர்]
வெனிஸ் நகரம் அருமை. திரைப்படங்களில் பார்த்தது போல அழகாக இருந்தது. படகுகளில் மட்டுமே பயணிக்க முடியும்.
Strasse(German), Via (Italiano), Avenue(French), Street (English), Straat (Dutch) என தெருக்களின் பெயர்கள்.
எங்கெங்கும் கட்டண கழிப்பிடங்கள் உண்டு.  [அமெரிக்காவில் இலவசம்] Rest room, WC என விதம் விதமான பெயர்கள் பெண்கள் என்பதற்கு விதம் விதமான வார்த்தைகள். படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. பெண் என்பதைக் குறிக்க ஒரே மாதிரியான பொம்மையே எல்லா இடத்திலும் வரையப் பட்டிருந்தது.
அதே போல EXIT .. அதற்கான வார்த்தையை அந்தந்த மொழியில் படித்து மனதில் கொள்வோம். அப்பத் தானே எங்கே சென்றாலும் வெளியில் வர முடியும்??
எல்லா நாடுகளிலும் தெருவோரங்களில் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. முதல் 1/2 மணி இலவசம். பின்பு கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகள் 1/2 மணி ஓட்டி விட்டு திரும்ப கொண்டு விட்டு விடுவார்களாம். ஆயினும் அரசு கண்டு கொள்வதில்லை, அவர்களுக்கு முக்கியம் காற்று மாசுபடுவதை தடுப்பதே.

கடுமையான பனி மூட்டம், 4 மணி நேரங்கள் இடை விடாத பெருமழை (ஆலங்கட்டி மழையாய் ஆரம்பித்து சாதாரண மழையாய் மாறியது), பனி மழை, கடும் குளிர், வெய்யில், மிதமான மழை எனப் பல தரப்பட்ட வெப்ப நிலைகளை அனுபவித்தோம்.
அனைத்து 4 ஸ்டார் விடுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் குழுவாக செல்பவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்றே அறைகள் உள்ளன. WIFI வசதி உண்டு. சில விடுதிகளில் லாபியில் மட்டும், சில விடுதிகளில் ஒரு போனுக்கு மட்டும் என சில ஊழல்களும் உண்டு.
சென்ற இடங்களிலெல்லாம் காண்டினெண்டல் காலை உணவு அளிக்கப் பட்டது. பச்சை , சிவப்பு நிற ஆப்பிள்கள், அன்னாசிப் பழங்கள் எல்லா நாடுகளிலும் கிடைத்தன. ஆப்பிள் பழத்தில் சமீப நாட்களில் பறித்ததற்கான அடையாளமாய் பச்சை இலை இருக்கும். கடித்தவுடன் அதன் சாறு முழங்கை வரை வழிந்தது. அன்னாசியும் அவ்வண்ணமே. அருமை. மதிய இரவு உணவுகள் பஞ்சாபி உணவகங்களில். அரிசி சாதமும் உண்டு.
லண்டன் அருங்காட்சியகத்தில் வைத்திருந்த நம் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைப் பொருட்கள், ஈபில் கோபுரம், கொலோசியம், பைசா கோபுரத்தின் மணி, வெனிஸ் நகரின் கால்வாய் நீர் என ஒவ்வொன்றையும் தொட்டு உணர்ந்து மகிழ்ந்தேன். [எனக்கு உன்னை இப்போ தொட்டு பாக்கணும் போல இருக்கு _ என் போலவே ரசனை கொண்ட என் மூத்த சகோதரி. சரியான லூசுக் குடும்பம்னு நீங்க நினைக்கிறதும் கேட்குது ]

அத்தனை எழிலும் ஒன்றாய்
அழகாய் அமைந்த கண்டம்.

பின் குறிப்பு : நான் கண்டு ரசித்த நாடுகளைப் பற்றி அனைவருக்கும் என் எழுத்தின் மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்று விரும்பி என்னை ஊக்கப் படுத்திய சகோதரர் திரு. முரளி ராஜகோபால் மற்றும் சகோதரி அனுராதாவிற்கு நன்றிகள்.


















Wednesday, 27 April 2016

லண்டன் முதல் பைசா வரை....


கடந்த ஏப்ரல் 6 - 20 ஐரோப்பிய விடுமுறைப் பயணம் . (வருடம் முழுவதும் உனக்கு விடுமுறை தான் அப்படீன்னு நீங்க சொல்றது கேக்குதே).

சென்னை - அபுதாபி - லண்டன் ஹீத்ரூ 

லண்டன் நகரை அந்த ஊரில் வசிக்கும் வழிகாட்டியின் ஆங்கில விளக்கத்துடன் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிஸ்டரி மியூசியத்தில் பிரிட்டிஷ் காலனிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட விலைமதிப்பில்லாத பொருட்கள் உள்ளன. டூசாட் மியூசியத்தில் கொலை , சதித் திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கும் சிலைகள் வைத்திருக்கிறார்கள். லண்டன் பிரிட்ஜ் என நாம் சொல்வதை அங்கே டவர் பிரிட்ஜ் என்கிறார்கள். அதற்கு அருகில் உள்ள பாலம்தான் லண்டன் பிரிட்ஜ். டெம்ஸ் நதிக் கரையோரம் அமையப்பெற்றிருக்கும் லண்டன் ஐ எனப்படும் ஜெயண்ட் வீல் வேகமாக சுத்தாமல் நிதானமாக 35 நிமிடங்களில் ஒரு சுற்று நகர்கிறது. நகரின், நதியின் அழகினைக் கண்டு களித்தோம். குறுகலான சாலைகள். அரசியாரின் ஆட்சியே இன்னும் இருப்பது போன்ற தோற்றம் [குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்] லண்டன் என்றாலே நினைவுக்கு வருவது 221 பீ, பேகர் தெருதான். [ஷெர்லாக் ஹோம்ஸ் வீடு] டூசாட் மியூசியத்திற்கு பக்கத்துத் தெரு.
ஊரை விட்டு வெளியே வந்ததும் அகலமான சாலைகள் வழியெங்கும் டஃப்போடில் மலர்கள், தொழிற்சாலைகள்.

ஆங்கிலக் கால்வாயை கடக்க ஹார்விக் துறைமுகத்திலிருந்து ஸ்டீனா லைன் கப்பலில் பயணம். பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல். 11 தளங்கள். கப்பலின் 7 ஆம் தளத்திற்கு நடந்து பயணியர் செல்லக் கூடிய பாலம் (ஏரோ பிரிட்ஜ் போல) பழுதாகி இருந்ததால் பேருந்தில் ஏற்றி எங்களை 4 ம் தளத்தில் கப்பலின் உள்ளேயே இறக்கி விட்டார்கள். மின் தூக்கி மூலம் மேலே சென்றோம். ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்தது. சாப்பாட்டுக் கூடம், தங்கும் அறைகள், லௌஞ்ச், பொழுது போக்கு பகுதி, மேல் தளத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பகுதி , வைஃபை என அருமை. கப்பல் நகர்ந்ததே தெரியவில்லை. இரவு 12 - காலை 7 பயண நேரம். வித்தியாசமான அனுபவம். [ நான் : சத்தமே இல்லை, அமைதியா இருக்கு மகள்: டைடானிக் போல ஆனால் மட்டும் தான் அம்மா சத்தம்]

ஹூக் ஆஃப் ஹாலண்ட் துறைமுகம். ஷெங்கென் விசா இங்கு மட்டும் குடியுரிமை அலுவலர்களால் சரி பார்க்கப்பட்டது. தி ஹேக் நகரின் பழமையான கடற்கரை, பின் ஆம்ஸ்டர்டேம் நகர். வழியெங்கும் காற்றாலைகள். டூலிப் தோட்டங்கள். வசந்தம் தொடங்கி சில நாட்களே ஆகி இருப்பதால் க்ரீன் ஹவுசின் உள்ளே மறந்து இருந்தன பூக்கள். [சங்கர் படத்தில் பார்த்திருப்பீர்கள்]. எதிர்பார்ப்பு இல்லை என்பதால் ஏமாற்றம் இல்லை. ஆயினும் எங்கும் உள்ள கால்வாய்களின் ஓரத்தில் தெருக்களின் ஓரத்தில் என எங்கெங்கும் டூலிப் பூக்கள். யாராலும் மறைக்க முடியவில்லை. 
அடுத்தது பிரஸ்ஸல்ஸ் நகர். இந்த நகரின் வழியாக அமெரிக்காவிற்கு முன்பே சென்றிருந்தாலும் ஊருக்குள் சென்றது இதுவே முதன் முறை. நகரின் அருகில் ஜெட் விமான நிலையம் ஒன்று உள்ளதால் வானில் வெண்புகை எங்கெங்கும். முன்பும் கண்டு மகிந்த காட்சிதான் அது. குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணமாக கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க சொன்னார்கள். ஊரின் மத்தியில் ஒரு மண்டபத்தில் இறந்தவர்களுக்காக பூங்கொத்து வைத்து சென்றார்கள். சில பேனர்கள் வேறு மொழியில் இருந்தன. மிக சிலர் அமர்ந்து இருந்தனர். வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று சொன்னார்கள். அங்கேயே தான் நின்று கொண்டிருந்தோம். ஒன்றுமே தெரியவில்லை. ஆச்சரியம். [நம்ம ஊரில் ஆர்ப்பாட்டம்னா எப்படி இருக்கும், கத்தி கலக்கிட மாட்டோம்?] குறுகலான கடைத்தெருக்களின் இடையில் பிரசித்தி பெற்ற குட்டிப் பையனின் சிலை. [மன்னெகின் பிஸ்]. ஊருக்கு வெளியில் அமைந்த ஒரு பொழுது போக்கு பூங்காவில் மினி யூரோப் என்ற பகுதியில் ஐரோப்பிய யூனியனின் தொன்மையான, முக்கியமான கட்டிடங்கள் மற்றும் தொழில்கள் பற்றிய மாடல்கள் 1:25 என்ற அளவில் செய்து காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். நுணுக்கமான வேலைப்பாடு. கண்ணைக் கவரும் வண்ணம் தக்க விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
பாரிஸ் நகரம். முதல் நாள் ஈபில் டவரின் மேலேறி நகரின் அழகினைக் கண்டோம். ஊரின் அழகினை அவ்வூரின் வழிகாட்டியின் விளக்கங்களுடன் கண்டோம். ஒவ்வொரு தெருவும் ஏதேனும் ஒரு அரண்மனை அல்லது ஒரு மியூசியத்தின் பெயரிலேயே அமைந்துள்ளது. எங்கெங்கு காணினும் நினைவுச் சின்னங்கள். நெப்போலியன் நினைவிடம், பதினாறாம் லூயி மன்னனும் அவன் துணவி மேரி அண்டாய்னெட்டும் கில்லடினால் கொல்லப்பட்ட இடம் என பாடத்தில் படித்தவைகள் பலவற்றையும் நேரில் கண்டோம். லூவர் மியூசியம் செல்ல நேரம் இல்லை. மோனாலிஸா .. ஐ மிஸ்ட் யூ....
மறு நாள் டிஸ்னி லேண்ட். வரைபடம் மற்றும் சாப்பாட்டினை கையில் கொடுத்து சுற்றிப் பார்க்க அனுப்பி விட்டார்கள். இடைவிடாத மழையில், குடையுடன், ஈரமான காகித சாப்பாட்டுப் பையுடன் குதிரை, குட்டி ரயில், பெரிய ரயில் , லேசர் ஷோ என..அல்ப சொல்ப ரைடுகளில் ஏறி இறங்கினோம்.  காகித பை நனைந்து பிய்ந்து... ஜில்லென்ற சாப்பாட்டை இளம்தூறலில் வெட்ட வெளியில் உண்டு முடித்து...
மழை சற்றே நின்றதும்... வெளியில் வரும் நேரம் வந்து விட்டது.
இரவு நேரம் ( 8.30 -9.30 ) சீன் நதியில் மேல் தளத்தில் முதல் வரிசையில் குளிரில் படகுப் பயணம். 9 மணிக்கு ஈபில் டவரில் மற்றும் பாலங்களில் விளக்குகள் போடப்பட்டன. பேருந்தில் சென்று காண முடியாத பல கட்டிடங்களைக் காண முடிந்தது. அலெக்ஸண்டர் பாலம், நாடிர்டாம் தேவலயம் என... அருமையோ அருமை. 
பாரிஸ் நகரின் ஆர்க் டீ ட்ரையாம்பையும் சாம்ப்ஸ் எலிசீ யையும் ஈபில் டவரையும் இரவிலும் பகலிலும் சுற்றி சுற்றி வந்தது மகிழ்ச்சியான எதிர்பார்க்காத அனுபவம். பிரான்சின் கிராமப் புறங்களில் நம் ஊரில் தெருக்குத்தில் பிள்ளையாருக்கு கோவில் அமைப்பது போல் ஊருக்குள் நுழையும் தெருவின் முடிவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைத்துள்ளதைக் கண்டேன். வேறெங்கும் அவ்விதம் இல்லை.

பிராங்க்பர்ட் நகரம். ஜெர்மனியில் விதம் விதமான தட்பவெப்ப நிலைகளை எதிர்பார்க்கலாம் என என் மகள் மூலம் பலகட்ட தகவல்கள் கிடைத்தன. எல்லா ஐரோப்பிய ஊர்களிலும் மையப் பகுதியில் ஒரு மார்க்கெட் ஸ்கொயர். அக்காலத்தில் பொது மக்கள் கூடும் இடம்.  கலை நிகழ்ச்சிகள் விழாக்கள் பிரார்த்தனைகளை மக்கள் நடத்த அரசர்கள் கண்டு களிப்பார்களாம். ஒரு தேவாலயம், ஒரு அரண்மனை, அரச குடும்பத்தினரின் வீடுகள் கண்டிப்பாக உண்டு. நடுவில் பெரிய சதுர மைதானம். இங்கும் அதுபோன்ற இடத்திற்கு சென்ற போது அழகான வானவில் தோன்றியது. 
கடும் பனிமூட்டத்துக்கிடையில் அங்கிருந்து கிளம்பி , நெக்கர் நதிக்கரையில் அமைந்த ஹைடல்பர்க் நகரம். ஜெர்மனி கோட்டை கொத்தளங்கள் நிறைந்த நாடு. மலை மேல் அமைந்த கோட்டையின் உள்ளே சென்று கண்டோம். ஹோமியோபதி மருந்துகள் பற்றிய மியூசியம் உள்ளே உள்ளது. ஒரு தேவாலயம், குடியிருப்புகள் என பல பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஊரின் அழகினையும் பழமையான கட்டிடங்களையும் கண்டோம். பிளேக் ஃபாரஸ்ட் எனப்படும் அடர்ந்த நிழலே விழாத காடுகளின் வழியே பயணம். வழியெங்கும் கடும் மழை 3-4 மணி நேரங்கள். போக்குவரத்து தடைகள். டிடிசி ஏரி, டிரூபா குக்கூ கிளாக் தொழிற்சாலை இரண்டையும் அடையும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஏரியை அதன் அருகில் சென்ற போது கண்டோம். ஒரு வழியாக சுவிட்சர்லாந்து நாட்டின் எங்கல்பர்க் நகருக்கு வந்து சேர்ந்தோம்.

ஹோட்டல் டெரஸ் என்னும் விடுதியுள் நுழைவதே ஒரு புதுமையான அனுபவம். மலைமேல் கட்டப்பட்டிருக்கும் அதன் உள்ளே செல்ல ஒரு குகை, ஒரு மின் தூக்கி, சில மீட்டர்கள் நடை மீண்டும் ஒரு குகை ஒரு மின் தூக்கி. அறையின் உள்ளிருந்து பார்த்தால் தெரிந்த டிட்லிஸ் மலை. பனி மூடிய ஆல்ப்ஸ் மலை சிகரங்கள். கேபிள் கார் (6 பேர் அமரக்கூடியது) ஏறி ஒரு சிகரம் சென்று மற்றொரு கேபிள் கார் மூலம் (80 பேர் நின்றபடி பயணம் செய்யலாம் 360 டிகிரி சுழன்று கொண்டே மேலேறும்) டிட்லிஸ் மலையின் உச்சியை அடைந்தோம் 10,000 அடி உயரம். பனி மழை பெய்தது. எங்கும் வெள்ளை. ஜில்லான அனுபவம். அங்கேயே அமைந்த ஐஸ் குகைக்குள் சென்று வந்தோம். மலை மேல் உள்ள உணவு விடுதியில் தென்னிந்திய உணவு வகைகளை உண்டோம். 
கீழிறங்கி லூசர்ன் நகரம் சென்று பார்த்து வந்த பிறகு சூரிச் நகரம் வழியாக ரைன் நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். படகில் பயணம் செய்து, ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அது அமைந்திருப்பதை கண்டோம். பச்சைப் பசேலென வெண் நுரையுடன் நீரின் வண்ணம். 

அடுத்து சென்றது ஆஸ்டிரியாவின் இன்ஸ்ப்ருக் நகரம் வரும் வழியில் வாட்டன்ஸ் நகரம். உலகப் புகழ் பெற்ற ஸ்வரொவ்ஸ்கி க்ரிஸ்டல் தொழிற்சாலையை கண்டோம். வழியெங்கும் பனி படர்ந்து ஆல்ப்ஸ் மலைத் தொடர். வெயிலுக்கு பனி உருகி சிற்றருவியாக, நதியாக , ஏரியாக எங்கெங்கும் நீர்...பசுமை.
இத்தாலியின் வெனிஸ் நகரம். என் நீண்ட காலக் கனவு. விசைப்படகில் வெனிஸ் தீவு. அங்கே கொண்டோலா எனப்படும் சிறுபடகில் அதன் குறுகிய தெருக்களில் பயணம். செயிண்ட் மார்க்ஸ் ஸ்கொயரில் நடந்து புறக்களைக் கண்டது, பாலங்களின் மீது நடந்து சென்றது , ஜெலாடோ எனப்படும் ஐஸ்க்ரீம் வாங்கி உண்டது, முரனோ கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பது எப்படி என்று கண்டது, கடலின் கரையில் அமர்ந்து இருந்தது என 4 மணி நேரங்கள் .. மீண்டும் படகில் வந்த பிறகு ஒரு குட்டி தெருவில் ஷாப்பிங். பொருட்கள் சகாய விலையில் உள்ளன இங்கே. படுவா என்னும் ஊரில் இரவு தங்கினோம். இந்த ஊரின் பல்கலைக் கழகத்தில் தான் கலிலியோ தலைவராகப் பணியாற்றினாராம்.

படுவாவிலிருந்து ரோம் நகரம். வழியில் பிளாரன்ஸ் நகரம். மைக்கேலேஞ்ஜலோ பாயிண்ட் என்ற பெயர் பெற்ற மலை உச்சியிலிருந்து நகரின் அழகைக் கண்டோம். மைக்கேலேஞ்ஜலோவின் மிகப் புகழ்பெற்ற சிற்பமான டேவிட்டின் நகலை செய்து வைத்துள்ளார்கள். அவர் ஒரு போர்க்காட்சியை அதுவும் ஒரு புராணக் கதையை இவ்விதம் கற்பனை செய்தார் என்பது புதுமை. கை நரம்புகள் கூட துல்லியமாகத் தெரிகிறது.  (டேவிட் கோலியாத் கதை பள்ளியில் படித்தது நினைவிருக்கிறதா? பைபிள் கதை. டேவிட் ஆயுதம் எதுவும் இல்லாமல் ஒரு கவணும் 5 கற்களும் கொண்டு கோலியாத்தை வெற்றி பெறுவார்) பைனாகுலர் உதவியால் அனைத்துக் கட்டிடங்களும் கண்முன்னால் வந்து நின்றன.

ரோம் நகரின் ஒரு பகுதியான, தனி நாடான வாடிகன் நகரின் மியூசியம், சிஸ்டைன் சேபல், செயிண்ட் பீடெர்ஸ் பேசிலிக்கா ஆகியவற்றைக் கண்டு களித்தேன். மைக்கேலேஞ்ஜலோ வடிவமைத்த தேவாலயம். உள்ளே பக்கவாட்டு சுவர்கள் மற்றும் கூரையில் அவரது ஓவியங்கள் நேற்று வரைந்தது போல உள்ளன. அருமையோ அருமை. [செயிண்ட் பீடெர்ஸ் பேசிலிக்கா வாசலில் தான் போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வாழ்த்து சொல்வார், பார்த்திருப்பீர்கள்]. ரோமானிய வழிகாட்டியின் வர்ணனைகள் சுவாரசியமாய் இருந்தது.

ரோம் முழுவதும் புராதனமான கட்டிடங்கள்.  எங்கெங்கும் குப்பை கூளங்கள். எங்கெங்கும் புகைபிடித்தல். பால்கனிகளில் கொடிகட்டி துணி உலர்த்தல், பகலில் வெப்பம் இரவில் லேசான குளிர் என நம் நாட்டின் சாயல் இத்தாலியில் நான் கண்ட பகுதிகளில். கொலோசியம் எனப்படும் மிகப் பெரிய மைதானத்தின் இடிபாடுகளை உள்ளே சென்று கண்டோம். ஜூலியஸ் சீசர் போன்ற பேரரசர்கள் வாழ்ந்த நாடு. நாங்கள் சென்ற அன்று வொர்ல்ட் ஹெரிடேஜ் டே. அதற்கான எந்த முனைப்பும் காணப்படவில்லை. வருத்தமாக இருந்தது. 

கடைசியாக , பைசா நகரம். பணம் கொடுத்து சென்று மிகவும் ஏமாந்து போகக் கூடிய இடம் எது என்று வலைத்தளங்களில் ஆராய்வார்கள். அதில் குறிப்பாக பைசா நகர சாய்ந்த கோபுரம். அப்படி என்ன தான் இருக்கிறது என்று நானும் வலைத்தளத்தை ஆராய்ந்ததில் அது பற்றிய அருமையான தகவல்கள் கிடைத்தன. நேரில் சென்று கண்ட போது அதன் தொன்மை புலப்பட்டது. தேவாலயத்தின் மணிக்கூண்டு அது. ஆரம்பத்திலிருந்தே சாய்ந்த ஒரு அமைப்பு அது. தேவாலயம் மற்றும் மணிக்கூண்டு முழுவதும் சலவைக் கற்களால் ஆனது. உச்சி வரை படிக்கட்டுகளில் சென்று பார்த்தோம். தேவாலயத்தின் உள்ளே இருந்த விளக்கின் அசைவை வைத்துத் தான் கலிலியோ பெண்டுலம் பற்றிய விதியைக் கண்டு பிடித்ததாகக் கூறுகிறார்கள். அதன் அருகில் ஏறக்குறைய 2 மணி நேரங்கள் அமர்ந்திருந்தேன். 

மிலன் - அபுதாபி - சென்னை 20 ஆம் தேதி இரவு 7.20.

பின் குறிப்பு : ஆங்கில இலக்கியம் படிப்பதாலும், பள்ளியில் படித்த வரலாறு புவியியல் பாடங்கள் நினைவில் இருப்பதாலும், கிளம்பும் முன்பாக இணையத்தில் பார்க்கப் போகும் இடங்கள் பற்றிப் படித்து குறிப்புகள் எடுத்து சென்றதாலும், ஆசிரியர்களாக இருக்கும் என் சகோதரர் திரு. முரளி ராஜகோபால் அவர்கள் மற்றும் சகோதரி திருமதி கல்யாணி அவர்களது ஊக்கத்தாலும், இந்த சுற்றுலாவை என்னால் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. உடன் வந்து கேட்டவர்களுக்கும் விளக்க முடிந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கு மிக்க நன்றி.

**எழுத்தாளார் ராஹுல் சாங்க்ருத்யாயன் ஸ்டைல் தலைப்பு இது. உன் மனத்தின் அங்கீகரமே எனக்கு சகலமும் என்று சொன்னவர் (வோல்கா முதல் கங்கை வரை)













Saturday, 27 February 2016

Learning, for life!!

Learning is an art that enlightens a person with knowledge and skill combined  with facts and figures. This process should take place throughout our lifetime, which can be explained with the help of a proverb used in the southern part of India, which can roughly be translated as “the knowledge we have gained so far is equal to a handful of sand particles and the balance to learn is the size of the world”.
Try to learn something each  day, which is loaded with umpteen new things. Listen to your surroundings, people, books, children and every source possible to equip yourself with knowledge and skill. While listening, you learn new things than speaking out what you already know.
Learn in-depth whatever you learn and without doubt. After you have done that, know to apply and live according to what you have learnt, explains the couplet written by the great poet “Thiruvalluvar”. Getting educated about electrical gadgets in depth and not knowing to fix a fuse is not  any use in real-time.
Few examples to support my point of view are explained here. Reduce the flame of the stove when the water or soup starts boiling and see what happens to the liquid. Even with the reduced flame, the water or soup continues to boil. Here comes the thermostat principle.  Never try to hit an object harder, as you are sure to be hit back with the equal force you had exerted. Oh my God!! Isn’t it Newton’s third law of motion we learned in high school??
Every child grows up with many short stories with a moral in it. A child must be taught and guided to associate what had been acquired from the stories to the real life situations. Develop the child to learn in-depth and make sure the child adopts  the principle of learning is for life and not for grades.
With the advent of technology and science, upgrading ourselves has become a must to keep pace with the world and be knowledgeable about the day-to-day happenings in every field and become competitive. Learning is a must for all ages. Applying our learning may not be immediate in every case.
There is a classical example of Steve Jobs who took up calligraphy course during his graduation and used his knowledge about fonts later, while developing the personal computer, thereby passing on his knowledge to the world. Wait for the requisite situation to apply your knowledge and skill.
Erudition makes a man inventive, imaginative, resourceful, matured, cultured, creative with innumerable ideas and projects him as a confident personality. The art of learning makes a man perfect and induces him to think big. It is an excellent wealth that cannot be destroyed, neither by fire, nor by men. In a nutshell, never stop learning and cease to think what you learn is for life. Let us love to learn and live as learned.



Thursday, 4 February 2016

விழிமின், எழுமின்…..

சுவாமி விவேகானந்தரின் இந்த வாக்கு , கண்டம் தாண்டி கடல் தாண்டி வானூர்தியில் பயணம் செய்து இடையில் மற்றொரு கண்டத்தில், வேறு ஒரு வானூர்தியில் மாறி ஏறித்  தாய் நாடு வந்தடைவோருக்கு மிகப் பொருத்தம்.

அண்டை அயலாரும் நட்பு வட்டங்களும் பரிசுப் பொருட்கள் தந்து வாழ்த்த , குடும்பத்தார் கண்ணீர் சிந்தி வழியனுப்ப வானம் பொழிய... வித்தியாசமான அனுபவம்.

சான்பிரான்சிஸ்கோ--ஹாங்காங்-சிங்கப்பூர்-சென்னை 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம். 

Today we expect a "little" rough weather என்ற தலைமை விமானியின் அறிவிப்புடன் Boeing 777 - 300er வகை விமானத்தில், கடந்த ஜனவரி 18ஆம் தேதி 12:05 க்கு பயணம் ஆரம்பம். "little" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அடுத்த 3/4 மணி நேரம் வானூர்தி குலுங்கிய குலுங்கலில் bay area வையே தாண்ட மாட்டோம் என்று நினைத்தேன். மண்டைக்குள் உள்ள பாகங்கள் இடம்பெயர்வது போன்ற உணர்வு. பயப்பட்டால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி விடக் கூடும் என்பதால் அமைதியாக இருந்தேன். இரவு 1.30 மணிக்கு கிச்சடி, சப்பாத்தி, புலவு, dessert (கேக்? இனிப்பு?? ஐஸ்க்ரீம்?? ) காபி, தயிர், ஜுஸ், உலர்ந்த திராட்சை வழங்கினார்கள். 

விழிமின் : 15 -19 மணி நேரங்கள் உள்ள பயண நேரத்தில் தலைமை விமானி எப்போது என்ன அறிக்கை விடுவார் என்று தெரியாது. உறக்கத்தில் இருக்கும் போது டிங்க்...டிங்க்.. எனவே ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் விழிமின்


3.30 - 5.30 தூக்கம். பின் அமெரிக்க நேரப்படி விழிப்பு. காபி வாங்கி குடித்து விட்டு வந்து அமர்ந்தேன். பசியோ பசி. விமான பணிப்பெண்ணிடம் எப்போது அடுத்த உணவு நேரம் என விசாரித்தேன். என் கைக்கடிகாரத்தை பார்த்து சொல்ல சொன்னேன். 1 hr 30 minutes என்றார். காத்திருந்தேன் காத்திருந்தேன் (தோம்) மதியம் 1.30 க்கு உணவு கொடுத்தார்கள். அடக் கடவுளே !! வெளி நாட்டில் இட்டலியும் உப்புமாவும் தருகிறார்களே என்று மகிழவா, காய்ந்து போன இட்டலி கசந்து போன உப்புமா என்று ஜூஸ், தயிர் என்று அரைப்பட்டினி கிடந்ததை எண்ணி சோகப்படவா?

இடைப்பட்ட நேரத்தில் ஜூஸ் மற்றும் சேமித்து வைத்திருந்த உலர் திராட்சை உதவியது. (எறும்பும் வெட்டுக்கிளியும் கதை தெரியுமா உங்களுக்கு??)

முக்கியமான விஷயம் சான்பிரான்சிஸ்கோ - ஹாங்காங் பயண நேரம் முழுவதும் இருட்டு. விமானத்தின் உள்ளேயும் மிக சிறிய விளக்குகள் மட்டுமே. The Intern, The martian , Travel destination (continent wise) in Read and Learn section என இருக்கையின் முன்னால் இருந்த விமானத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்துப் பொழுதைக் கழித்தேன். [திட்டமிட்டபடி தான்]

எழுமின் : ரத்த ஓட்டம் இல்லாமல் கால்களில் வலி வீக்கம் வந்து விடாமல் இருக்க எழுந்து அடிக்கடி நடமின்

தூக்கமும் விழிப்புமான இடைப்பட்ட பயண நேரத்தில், இரண்டு எஞ்சின்களும் சீரான ஓசையுடன் உள்ளனவா (இடையிடையில் நம்ம குக்கிராம சாலைகளில் செல்லும் பேருந்து போல , எங்கள் ஊர் மொழியில் இஞ்சின் மொரைஞ்சுதுங்கோ...(thrust கொடுக்கப்பட்டு சத்தம் அதிகமாக கேட்டது) முன்னால் உள்ள மானிட்டரில் வெளி வெப்பம் -65 டிகிரி என்று பார்க்கையில் விமானத்தின் இறக்கைகளுக்கான ஹீட்டரை ஆன் செய்திருப்பார்களா என்ற கேள்வி (இறக்கையில் பனி படர்ந்தால் விமானத்தின் எடை கூடி பறக்க முடியாமல் போகும் _ தகவல் உபயம் மகனுடன் அமர்ந்து பார்த்த airplane accidents விடியோ), இறக்கையில் உள்ள flaps ஏறி இறங்கினால் landing gear நல்லா வேலை செய்யறதா அர்த்தம் safe landing அமையும். Quora.com உபயத்தில் இன்னும் பலப்பல கவலைகள். [aeronautical engineering படித்து scientist ஆக ஆசைப்பட்டேனே... ] இது போல இன்னும் பலவித சிந்தனைகளுக்கிடையே ....கடைசி இரண்டு மணி நேரங்கள் மூக்கின் உள்ளே ஒரு விதமான எரிச்சல் dryness ரத்தம் வரும்போல ஆனால் வரவில்லை (Cabin Pressure) ஒரு வழியாக 15 மணி நேர தொடர்பயணத்தின் முடிவில் ஹாங்காங்கில் விமானம் தரையிறங்கியது.

15 மணி நேரப் பயண முடிவில் சிங்கப்பூரில் இருப்போம் என்று நினைத்திருந்தேன். நேரக் குழப்பம் தான். வேறென்ன?? கடுமையான அசதி.


ஒரே ஆறுதல்....விமானம் கடலை ஒட்டிய பாதையில் தரையிறங்கியதுதான். அலைகளே இல்லாத அமைதியான ஆழ்ந்த நீலக் கடல், ஆங்காங்கே நங்கூரமிடப்பட்ட கப்பல்கள் என காலை 7 மணி (அந்த ஊர் நேரம்) விமானத்தின் இறக்கை கடலை ஒட்டி.... அற்புதம். 3 முறை இந்த நகரைக் கடந்து சென்றிருந்தும் ஒரு முறையும் நகரின் உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. [நகரின் அமைப்பைப் பற்றியும் , விமானம் எந்த ரன்வேயில் செல்கிறது என்பது பற்றியும் அறிந்தவர்கள் தரை இறங்கும் போதும் ஏறும் போதும் நகரின் முக்கியப் பகுதிகளை வானிலிருந்தே பறவைப் பார்வையாகக் காண முடியும் _  Quora.com ] 

விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காகத் தரையிறக்கப்பட்ட ஒரு மணி நேர இடைவெளியில் , ஓட்டமாக ஓடி security check முடித்து, இறக்கி விடப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து விமானத்தில் ஏறி... ஸ்ஸ்ஸ்ஸப்பா.... பயணிகளில் பெரும்பாலோர் தெற்காசியர்கள். எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்ற தோற்றம். மிக கவனமாக செயல்பட வேண்டிய தருணம்.  

இதற்கிடையில் free wifi பிடித்து குடும்பத்திற்கு வாட்ஸ் அப், வாட்ஸ் அப் கால் , வலது கையில் பாஸ்போர்ட், roll on பெட்டி (முன்பு கேபின் பெட்டி இப்போது சக்கரம் வந்ததால் இந்தப் பெயர்), இடது கை யால் documentation of the trip (போட்டோ புடிக்கறதுங்க...)

அடுத்த 3 மணி நேரத்தில் சிங்கப்பூர்.  சிங்கப்பூர் நேரம் பகல் 12 : 15.

பஞ்சுப் பொதிகளைப் போன்ற மேகங்களுக்கிடையே வந்து கொண்டிருந்த விமானம் ஒரு கட்டத்தில் கருமேகங்களுக்கிடையில் பயணித்ததும் வித்தியாசமான அனுபவமே. டெர்மினல் 3ல் தரையிறக்கப் பட்ட நான் உடன் பயணித்த தம்பதியினருடன், டெர்மினல் 2 ற்கு விமான நிலையப் பேருந்தில் வந்து சேர்ந்தேன்(தோம்). அடுத்த விமானம் இரவு 8.20க்கு தான்.  8 மணி நேர இடைவெளி. 
சிங்கப்பூர் அரசு இது போல நிறைய பயண  இடைவெளி (6 1/2 - 8 மணி நேரங்கள்) உள்ளவர்களை சுற்றுலா அழைத்து செல்கிறது. கட்டணம் எதுவும் இல்லை. 2.30 மணி நேரங்கள். 
இமிகிரேஷன் பூத் டெர்மினல் 2 மற்றும் 3 ல் உள்ளன. நம்முடைய பாஸ்போர்ட் , விசா, போர்டிங் பாஸ் (முக்கியம்) காட்டினால் on arrival visa ஏற்பாடு செய்து வெளியில் அழைத்து சென்று ஊரை சுற்றிக் காமிக்கிறார்கள். நம்முடைய roll on பெட்டியை விமான நிலையத்தில் உள்ள லெஃப்ட் லக்கேஜ் கௌண்டரில் வைத்து விட்டே செல்ல வேண்டும்.   இமிகிரேஷன் தொடர்பான முன்வேலைகள் முடிய 2 மணி நேரங்களாகி விட்டன. 

இடையில் மீண்டும் free wifi பிடித்து குடும்பத்திற்கு வாட்ஸ் அப், (இத்தனை நேரமாச்சு உங்க அம்மாவை காணலையே இன்னும் தொடர்பு கொள்ளலையே), 
இது முடிய முடிய… please sit near the orchid garden and get ready for immigration. Sort of multi tasking.. 
சிங்கப்பூரின் அனேக முக்கிய இடங்களை பேருந்தில் சுற்றிக் காண்பித்தார்கள். (இடையில் 2 நிறுத்தங்களுடன்)

6 மணிக்கு மீண்டும் விமான நிலையம். gate E12 . விமானம் கிளம்பும் நேரம் மாறும் என்ற அறிவிப்பு. அப்படி மாறினால் gate மாறும். ஜெட் லேக் புண்ணியத்தில் அது வரை இல்லாத பசி, தூக்கம் இன்ன பிற தேவைகள் தோன்ற ஆரம்பித்தன கூடவே இந்த gate டென்சன். [மாறினால் தலை தெறிக்க வாக்கலேட்டர் மேலேயும் ஓட வேண்டுமே] இந்த நிகழ்வுகளால் சிங்கப்பூர் விமான நிலையத்தை சுற்றிப் பார்க்கும் மற்றும் duty free கடைகளில் shopping செய்யும் என் ஆசைகளை செயல்படுத்த முடியவில்லை.

குறிக்கோளை...  : இடையில் ஏதேனும் ஒரு நாட்டில், விமான நிலையத்திற்குள்ளேயே , சரியான நேரத்தில் வேறு விமானம் மாறி வந்தால்தான் தாய் மண்ணே வணக்கம் பாடலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள், ஓடோடி சென்று உங்கள் குறிக்கோளை பிடிக்காவிட்டால் உங்கள் பெட்டி முதலிலும் நீங்கள் பிறகு வேறு விமானத்திலும் அல்லாடி திண்டாடி...

20 நிமிட தாமதத்தில் அறிவிக்கப் பட்ட கேட்டிலிருந்தே கிளம்பியது விமானம். ஏறியவுடன் தூக்கத்துடனேயே சாப்பாடு, ஐஸ் க்ரீம்.. விழிக்கும் போது சென்னை அருகில். 

இம்முறை சென்னை கடற்கரையை ஒட்டி வராமல் ஊருக்குள் குடியிருப்புகளுக்கு மேலாகப் பறந்து வந்து தரையிறங்கியது விமானம்.

குடியுரிமை,கஸ்டம்ஸ்,பெட்டிகளை எடுத்தல்..... அப்பாடா..பாஸ்போர்டை கையிலேயே தூக்கித் திரிய வேண்டாம்.

ஸ்ஸ்ஸ்.... சூடான காற்று ... சொர்க்கமே என்றாலும் .....

பின் குறிப்பு : Airlines website போனால் இந்த மாதம் என்னென்ன படங்கள் பயணத்தில் காணலாம், Google ஐய்யனார் உதவியுடன் டெர்மினல்கள் பற்றிய தகவல்கள் , டூர் பற்றிய தகவல்கள் என்று சேகரித்தேன். அம்மா கொஞ்சம் ignorant ஆகவும் இரேன்_மகள் . [ சுவாமி விவேகானந்தரின் வாக்கின் கடைசிப் பகுதியை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவும்]



Saturday, 28 November 2015

VEGAS with FAMILY :D

 எதிர்பாராத ஒரு நாளில் எதிர்பார்த்திருந்த பயணம் ,  பேருந்தில், மகனுடன், அமெரிக்காவில். 

Fresno விலிருந்து லாஸ் வேகாஸ் நகர் செல்லும் வழி கலிபோர்னியாவின்  பச்சை பசேலென்ற திராட்சைத் தோட்டங்களும் almond மரங்களும் பல நிறங்களில் மரம் செடிகளும் , ஊரை விட்டு தள்ளி தொழிற்சாலைகளும், Sierra niveda மலைத் தொடர் ஆரம்பித்ததும் ஆங்காங்கே பனிப் பொழிவும் , வழியெங்கும் காற்றாலைகளும்,  Niveda   பாலைவனம் தொடங்கியதும் கள்ளி செடிகளும் சற்று நேரத்தில் மணல் மட்டுமே என 7 ஆம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்தது போலவே இருந்தது.




வேகாஸ் நகர எல்லை வந்ததுமே  கார்கள்  மற்றும் விமானங்களின் அதிக பட்ச பயன்பாடு கண்ணில்பட்டது. 

 வேகாஸ் நகர எல்லையில், லாஸ் வேகஸ் boulevardல் அமைந்திருந்த ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் தங்கினோம். [King  Arthur castle theme]


லாஸ் வேகாஸ் boulevardல் அமைந்த ஹோட்டல்கள் அனைத்திலும் காசினோக்கள் உண்டு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு theme ல் வடிவமைக்கப் பட்டு, ஒவ்வொன்றிலும் காசினோக்கள் தவிர வேறு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பது போல வடிவமைக்கப் பட்டுள்ளன.  
ஹோட்டல் உள்ளே நுழைந்தவுடன் தரைத் தளத்தில் காசினோ .[எல்லா ஹோட்டல்களும் இப்படித்தான் ] வண்ண விளக்குகளுடன் தோற்ற, ஜெயித்த சத்தங்களுடன், மேக மூட்டம் போன்ற புகை மண்டலமாக தீர்த்தம் பெருகி ஓட ஒரு வித கெட்ட வாடையுடன்..... Poker விளையாட தனி பகுதி அங்கேயே.

இரவு பகல் பாராமல் மக்கள் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கேயே star bucks ,  உணவுக் கடைகள் , அங்கங்கே ரெஸ்ட் ரூம்கள். [பொது இடங்களில் புகை பிடித்தல், மது அருந்துதல் , விதம் விதமான shows , gambling இங்கே மட்டும் சட்டப்படி செல்லும். ஆனால் smoking pipe or cigar is prohibited while standing in queue for reservation etc என்ன சட்டமோ??]



James Bond படம் பார்ப்பவரா நீங்கள் ? அப்படியானால் என் விளக்கம் உங்களுக்கு அவசியமில்லை .

17 ஆவது தளத்தில் எங்கள் அறை . ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகள் அருமையிலும் அருமை. நொடிக்கு ஒரு விமானம் தரையிறங்க ஒரு விமானம் மேலேற , இரவு நேரத்தில்  விளக்குகளின் ஜொலிப்பும் விமானங்களின் ஓட்டமும் ....அருமை. மற்றொரு கோணத்தில் எகிப்து theme ஹோட்டல். பிரமிட் , sphinx என search லைட் ஜொலிப்புடன் .


 அனைத்து ஹோட்டல்களும் பாலங்கள், எஸ்கலேட்டர்கள், மோனோ ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சூதாடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடலாம். உள்ளே நுழையும் போது அலுங்காமல் செல்லும் வண்ணம் வாக்கலேட்டர்கள் .காசினோவிற்குள் நுழையாமல் செல்ல முடியாத  வண்ணம் மோனோரயில் நிலையம். அங்கங்கே விதம் விதமான show க்களுக்கு discount விலையில் நிழைவு சீட்டு விற்பனை வேறு . [ஹோட்டல் முதலாளிகள் எல்லாரும் சேர்ந்து மோனோரயில் விட்டிருக்கிறார்களாம்.ரயில் நிலையம் இலவசமாக ஒவ்வொரு காசினோவிற்குள்ளும் அழைத்து செல்லும் ]

4 இந்தியக் குடும்பங்கள் (இரண்டு teenage boys )  எங்களுடன் பயணித்தார்கள். முதல் நாள் லோக்கல் tour சென்றோம். அந்தப் பகுதியின் அமைப்பு பிடிபட்டது எங்களுக்கு. இரண்டாம் நாள் நாங்களே  ஒவ்வொரு ஹோட்டல் ஆக சென்று வேடிக்கை பார்த்தோம். இரவில் மக்கள் கூட்டம் நடைபாதைகளில். சிக்னல்களில் 20 பேர் சேர்ந்தாற்போல் சாலையைக் கடந்தார்கள்.[நம்ம ஊர்களை இவங்க பார்த்ததில்லை அதனால தான் கூட்டம், traffic னெல்லாம் சொல்றாங்க சக பயணி ஒருவர்] 

வழியில் பல பிச்சைகாரர்கள். பாட்டு, தண்ணீர் canல்   drums , magic show என விதம் விதமாய்.Las Vegas Boulevard ல் நடந்து சென்று shopping செய்தோம். இந்திய உணவகத்தில் உண்டோம். 


என் மகனின் விருப்பப்படி Stratosphere என்ற ஹோட்டலுக்கு பேருந்தில் சென்றோம். 107 ஆவது மாடிக்கு 45 நொடிகள்  elevator பயணம் . அங்கிருந்து Las Vegas நகரின் அழகைக் கண்டோம்.அங்கே விதம் விதமான rides ,  ஜம்பிங் இருந்தது. 107 மாடி குதிக்கும் தைரியம் எங்களில் யாருக்கும் இல்லை. பேருந்தில் 8$ க்கு டிக்கட் வாங்கினால் 24 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம். [சூதாட விதம் விதமான  வசதிகள் ??!] 



இரவு ஹோட்டல் திரும்ப 11.30 ஆனது. 


செயற்கையாய் மனிதன் படைத்தவைகளும் ஒரு விதத்தில் அழகுதான். 


வேகாஸ் நகரை இப்படியும் explore பண்ணலாம் .....

வேற வழி??!! 

பின் குறிப்பு :

காசினோவில் தெரிந்த ஒரே ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க விரும்பினோம். பல்வேறு காரணங்களால் விளையாடவில்லை. முக்கிய காரணம் புகை மண்டலம். [ Mask போட்டுக்கலாமே அப்டீன்னு ஒரு சகோதரி கேட்டார் நேரில் அனுபவித்தால் தான் அதன் magnitude தெரியும்   ]

Tuesday, 15 September 2015

நா(ன்) பாக்கறேன்

இந்தியாவிலிருந்து 24 மணி நேரம் பயணித்து ஒரு வழியாக சான் ஜோஸ் நகருக்கு வந்து சேர்ந்தோம் மகள் மற்றும் குட்டி பேரன்களுடன்.

உலகின் மறு கோடிக்கு பயணம் செய்ததில் சந்திக்க வேண்டிய முதல் சவால் jet lag எனப்படும் நேர வித்தியாசத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள். 12 1/2 மணி நேர வித்தியாசம்  என்பது மிக பெரிய சவால் எப்போதுமே. (இந்தியாவின் திங்கள் கிழமை பகல் அமெரிக்காவின் ஞாயிறு இரவு )

வந்த முதல் நாள் பகல் முழுவதும் தூங்காமல் இருக்க முயற்சித்து இரவு தூங்க ஆரம்பித்தேன் (தோம் ) நள்ளிரவு 12.30 பசியோ பசி . இந்தியாவின் மதிய உணவு வேளை . நா(ன்பார்க்கிறேன், தெளிவாக.. வான் ஊர்திகள் மற்றும் அடி வானம் தான் கண்ணுக்கு தெரிந்தது, என் ஜன்னல் வழியே.

அதிகாலை 3.30 மணியிலிருந்து என் நாட்கள் தொடங்குகின்றன ( இது அவங்க மாமியாருக்கு காபி குடுக்கற நேரம்  _ உடன் பிறப்புக்களின் கிண்டல்)

பகல் நேரம் பசி தாகம் தூக்கம் இல்லை. சுற்றிலும் மலையும் மரங்களும் அகலமான தெருக்களுமாய் கண்கொள்ளாக் காட்சிகள்நா(ன்இப்போதும்  பாக்கறேன். தெளிவாய் எதுவும் தெரியலே...

பகல் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க சொல்வார் மகள். எழுந்ததும் குட்டி பேரன் நா(ன்) தூங்கணும் என்று அடுத்த 2 மணி நேரங்கள் ஒரே ஸ்ருதியில் நிறுத்தாமல் அழுவார் . (என்னால் அழ முடியவில்லை)

10 நாட்களாகியும் இன்னும் தெளியவில்லை பகல் இரவாக , இரவு பகலாக ....

நா(ன்) பாக்கறேன் .... இப்போதும் ...மப்பும் மந்தாரமுமாய்...


பின் குறிப்பு :குட்டி பேரனுக்கு எல்லாவற்றையும் தன்  கண்ணால் பார்த்து கையில் வெச்சுக்கணும் , அதிரசம், முறுக்கு வைக்கும் அடுக்கு தொடங்கி பாஸ்போர்ட் முடிய ( நா.. பாக்கறேன், நா..  கைல வெச்சுக்கறேன் )

Sunday, 2 August 2015

ஒரு மணி அடித்தால்.....

கிராமத்திலிருந்து நகரத்தில் உள்ள [எல் கே ஜி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒரே வளாகத்தில் தங்குமிடத்துடன் கூடிய பள்ளியில் [20 ஏக்கர் என்று சமீபத்தில் படித்தேன்] பதினொன்றாம் வகுப்பில் பதிவு செய்ய வந்த அன்று, நான் கண்ட முதல் காட்சி பேராசிரியைகள் அனைவரும் வாசலில் அமர்ந்து ட்ரிப்பிள் மேஜர் எனப்படும் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததைத் தான். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது

ஒரு வழியாக பள்ளி மற்றும் விடுதியில் இடம் பிடித்ததும் நாங்கள் சந்திக்க நேர்ந்த முதல் சவால் "ஒன் பெல்" என செல்லமாக அழைக்கப் பட்ட நேரம். காலை 8 மணி, இரவு 8 மணி, அவசர கூட்டத்திற்கு நேரம் காலம் கிடையாது என்பதே இதன் பொது விதி.

நான் அங்கு சேர்ந்த முதல் நாளே அனிதா என்ற பெண் வார்டன் உத்தரவு இல்லாமல் வளாகத்துக்கு வெளியே சென்று விட்டார். இரவு 8 மணி கூட்டத்தில் அவரை காணவில்லை என்பது தெரிந்து அல்லோலகல்லோலம். மறு நாள் காலை பள்ளி நேரத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு வார்டன்@தலைமை ஆசிரியை செல்வி ஹேமப்ரபா அவர்கள் நடத்திய மண்டகப் படியை இன்றும் மறக்க முடியவில்லை. 

ஒரே ஒரு முறை மணி அடித்ததும் பள்ளி விடுதி மாணவிகள் அனைவரும் அக்கா அவர்களின் அறைக்கு முன்பு கூட வேண்டும். ஒரு முறை அடிக்கப்பட்ட அந்த மணி அத்தனை மாணவிகளுக்கும் சிம்ம சொப்பனம். வளாகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ஐந்தாவது நிமிடம் கூட வேண்டும். இல்லை என்றால் செம பரேடு. யாரும் இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

வருகைப் பதிவு முடிந்ததும் அறிவுரை, கதை, பாட்டு, அன்றைய தலைப்பு செய்திகள், நாட்டு நடப்பு என பல நல்ல விஷயங்களை கூறுவார். [எந்தப் பிரச்சினையும் இல்லாத நாட்களில் என்பதை இத்துடன் சேர்த்து படிக்கவும்]
ஒரு நாள் இரவு 10 மணி போல இருக்கும். என் அறைத் தோழிகள் சீக்கிரம் தூங்கும் பழக்கம் உள்ள என்னை எழுப்பினார்கள். காரணம் ஒன் பெல் அடிக்கப் பட்டிருந்தது.

சில அடிகள் நடந்து சென்றால் வார்டன் அறை முன் போய் விடலாம். அனேகரும் தூங்கி வழிந்த வண்ணம் போய் நின்றோம் 
தினமும் அக்கா அவர்கள் இரவில் மைதானத்தில் நடைப் பயிற்சி செய்வார். மாணவிகளும் மைதானத்தில் அமர்ந்து தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டு இருப்பார்கள். குறிப்பாக ஹாஸ்டல் கதவு பூட்டப்படும் வரை. அக்கா நடந்து வருவதை பார்த்த சுட்டிப் பெண் ஒருத்தி "ஏய்.. அது வருதுடி" என்று கத்தியது இவரது காதில் விழுந்து விட்டது தான் பிரச்சினை.

யார் அது மரியாதை இல்லாமல் பேசியது, எனக்கு தெரிந்தே ஆகணும் என்று கிட்டத் தட்ட நடு நிசி வரை நிற்க வைத்தே விசாரணை நடத்தினார். யாரும் ஒத்துக் கொள்ள முன்வரவில்லை. கல்லூரி மாணவியாகக் கூட இருந்திருக்கலாம்.

நாளை காலை மீண்டும் சந்திப்போம் என்று நள்ளிரவு தாண்டிய பிறகு அனுப்பி வைத்தார். மறு நாள் காலையும் இந்தப் பிரச்சினை தொடர்ந்தது.. ஏகப்பட்ட திட்டுக்களுடன் அறிவுரைகளுடன்…ஸ்ஸ்ஸ்ஸப்பா.....
இப்போ  மணி அடித்த சத்தம் கேட்டுதே...ஐயய்யோ.. ஒன் பெல்லா??

பின் குறிப்பு :
அக்காவின் கட்டுப்பாடுகள் துள்ளித் திரிந்த மாணவிகளுக்கு அந்தப் பருவத்தில் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமே இல்லை.அப்போது புரியாத பல விஷயங்கள் இப்போது புரிகிறது.