Friday, 6 May 2016

வானவில்லின் ஓவியம்……


வானவில்லின் ஓவியம்……

ஒரு மொழியால் பிளவுபட்டிருக்கும் இரு நாடுகள் என்று திரு பெர்னாட் ஷா அவர்களால் கூறப்பட்ட நாடுகளில் ஒன்றான ஐரோப்பிய பயணம் கடந்த மாதம் 6 ஆம் தேதி பலத்த ஏற்பாடுகளுடன் தொடங்கியது.

இண்டர்னேஷனல் அடாப்டர், நன்றி, எசூஸ் மீ போன்ற வார்த்தைகளுக்கு ஐரோப்பிய மொழி வார்த்தைகள், அவசர உதவி எண் சகிதம் (போன் இல்லாமல் நான் இல்லை) எதிஹாட் விமானம் விமானி (அராபிக் ?? உருது ??) பிரார்த்தனை சொல்லிய பிறகு கிளம்பியது. அனேகமாக பயணம் நல்ல விதமாக அமையப் பிரார்த்தனை செய்திருப்பார்கள் (அ) உலக மக்களின் நன்மைக்காகவும் இருக்கலாம்.

லண்டன் நகரின் உள்ளே நம்முடைய சென்டிரல் ரயில் நிலையம், ரிப்பன் கட்டிடம் போன்ற அமைப்பில் கட்டிடங்கள். ஐரோப்பாவின் எல்லா நகர கட்டிடங்களும் இதே போன்ற வெளித்தோற்றத்துடன் காணப்பட்டது. ஊருக்கு வெளியே பல மாடி, மற்றும் தனி வீடுகள். ஹராட்ஸ் எனப்படும் மிகப் புகழ் வாய்ந்த கடை கூட இது போன்ற அமைப்பில் தான் இருந்தது. நம் சிறு வயதில் கண்ட டிராம், எதிரெதிரே அமர்ந்து செல்லும் டாக்சி, பழைய அமைப்பில் மாடி பேருந்துகள் என நாம் மறந்துவிட்ட பலவும் அங்கே கண்டேன்.
நெடுஞ்சாலைகளில் (அமெரிக்காவில் Free way இங்கே Auto route) செல்லும் போது குக்கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது . ஒழுங்கான சாலை அமைப்புடன் காணப்பட்டன.
எல்லா ஊர்களிலும் (நாடுகளிலும்) கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப்பட்டன. மணிக் கூண்டு ஒன்று அதன் அருகில் உள்ளது. நம் ஊர்களில் தேவாலயத்தின் மணி அதன் கோபுரத்துடனேயே சேர்ந்திருக்கும்.

ஐரோப்பா புல்வெளிகள் நிறைந்ததாக உள்ளது. ஐரோப்பியக் கவிஞர்கள் புல்வெளிகளை கால் நடைகளை மையப்படுத்தி பல கவிதைகள் (Pastoral elegy) எழுத இதுவும் ஒரு காரணாமாய் இருக்கும் எனத் தோன்றியது
குளிர் மற்றும் குறைந்த நீர்வளம் காரணமாக , டஃபோடில் (Daffodils) மலர்களை ஏக்கரா கணக்கில் உழுது பயிரிட்டிருக்கிறார்கள், எங்கும் எங்கெங்கும்.[அல்சைமர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரிக்க உதவும். பச்சைப் பட்டுடுத்திய நிலமகளின் மஞ்சள் மேலாடை மெல்லக் காற்றில் அசைந்தாட... கண்கொள்ளாக் காட்சி. சில நாடுகளில் நெல், திராட்சை.. (பிரான்ஸ், இத்தாலி)
ஒவ்வொரு நாட்டிலும் டஃபோடிலின் மஞ்சள் நிறம் தவிர்த்து குறிப்பிட்ட நிறங்களில் பூக்கள் அதிகம் பூத்திருந்தன. பிரான்ஸ் - மஞ்சள், வெள்ளை இத்தாலி - மஞ்சள், கத்திரிப்பூ நிறம் (பர்பிள்)
சுவிட்சர்லாந்தில் எங்கும் வங்கிகள் தென்பட்டன. யார் யாருக்கு இங்கே கணக்கு இருக்கிறதோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. தாமரை (லோடஸ்) என்ற கணக்கின் பெயரும் மனதில் வந்தது (இது யாருடைய கணக்கு என்று பேசிக் கொண்டார்கள் நினைவிருக்கிறதா மக்களே ??) வங்கிகள் மிக சாதாரண சிறிய கட்டிடங்கள். ஆளில்லாத அமைதியான அலுவலகங்கள். அடுத்தடுத்து வரிசையாகப் பல வங்கிகள் இருப்பதைக் கண்டேன். பெயர் எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. (மொழி பிரச்சினை.)
எங்கெங்கும் global warming. சுவிட்சர்லாந்தில் பனிமலைகளுக்கு பத்தடி தொலைவில் இருந்த போதும் குளிர் தெரியவில்லை. இரவில் ஊருக்குள் நடந்து சென்று பார்த்து வந்தோம்.
எங்கெங்கும் யூரயில், யூரோ ஸ்டார் போன்ற ரயில்கள் சென்ற வண்ணம் இருந்தன. எங்களுக்கு ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. பேருந்துப் பாதைக்கு அருகிலேயே தான் ரயில் பாதையும் செல்கிறது அதனால் பேருந்தில் காணும் காட்சிகள் தான் ரயிலில் சென்றாலும் காண முடியும் என்ற அல்ப மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்து, ஆஸ்டிரியா, இத்தாலியின் பல பகுதிகளில். மலையைக் குடைந்து சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். பல கிலோமீட்டர்களுக்கு செல்கின்றன. அதனுள்ளே ஆபத்து காலப் பாதைகள் வழியெங்கும்.

இப்பகுதிகளில் எங்கெங்கு காணினும் பனிமலைகள் தொடர்ச்சியாய். பனி உருகி கால்வாய்களும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும் ஐரோப்பா முழுவதும் கண்டோம். இத்தாலியில் மட்டும்  ஆறுகளில் தண்ணீரின் வரத்து மிக மிகக் குறைவாக இருந்தது. [ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் அதிக மழைப் பொழிவு என்று படித்தேன்]
பழமை எங்கும் பாதுகாக்கப் பட்டு வருகிறது. புதுப்பிக்கும் போதும் முன்பிருந்தாற்போலவே புதுப்பிக்கிறார்கள். லண்டன், பாரிஸ் மற்றும் இத்தாலிய நகரங்களின் பழமை மனதுக்கு இதம்.
அடுக்குமாடி வீடுகளின் பால்கனியில் சிறிய வீடாக இருப்பினும் பூந்தொட்டிகளில் பூச்செடிகளை வளர்க்கிறார்கள். இத்தாலியில் மட்டுமே நம்மைப் போல கொடி கட்டி துணி உலர்த்தியிருந்தார்கள். [சற்றே வெப்பமான நாடு மற்றும் வெயிற்காலம் என்பதால் இருக்கலாம்)
ஆம்ஸ்டர்டேமில் வீடுகளின் முன்வாசல் சிறியதாக உள்ளதால் ஒரு கொக்கி போல ஒவ்வொரு கட்டிடத்திலும் பதித்துள்ளார்கள். கனமான பொருட்களை ஏணியின் மூலம் 3 ஆம் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே எடுத்து செல்லுகிறார்கள். ஆற்றின் ஒரு கரையில் ஒற்றைப் படை எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றொரு கரையில் இரட்டைப் படை எண்கள் (டில்லிவாலாக்களே.. )
இத்தாலியில் வீடுகளின் ஜன்னல்கள் வேறு அமைப்பில் இருந்தன. நம் ஊர்களைப் போல கிரில்களுடன்.
புருஸ்ஸல்ஸ் நகரில் பலதரப்பட்ட மக்களைக் காண நேர்ந்தது. இஸ்லாமியர்கள், பிரஞ்சு , டச்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என கலந்து இருந்தார்கள்.
பிரான்சு நாட்டில் கல்வி இலவசம். யார் வேண்டுமானாலும் படிக்கலாமாம். பிரஞ்சு மொழி தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக. வாடிகன் நகர் மக்களுக்கு கல்வி, குடி நீர், மின்சாரம் என எல்லாமே இலவசமாம். வரி எதுவும் செலுத்தத் தேவை இல்லையாம். [ என்ன இந்த ஊர் இப்படி சாதாரணமா எல்லா ஊரையும் போல இருக்கு, வாடிகன் அப்படீன்னா நான் போப்பாண்டவரை சேர்ந்தவர்களும் தேவாலய ஊழியர்களும் பாதிரியார்களும் மட்டும் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் _ என் கணவர்]
வெனிஸ் நகரம் அருமை. திரைப்படங்களில் பார்த்தது போல அழகாக இருந்தது. படகுகளில் மட்டுமே பயணிக்க முடியும்.
Strasse(German), Via (Italiano), Avenue(French), Street (English), Straat (Dutch) என தெருக்களின் பெயர்கள்.
எங்கெங்கும் கட்டண கழிப்பிடங்கள் உண்டு.  [அமெரிக்காவில் இலவசம்] Rest room, WC என விதம் விதமான பெயர்கள் பெண்கள் என்பதற்கு விதம் விதமான வார்த்தைகள். படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. பெண் என்பதைக் குறிக்க ஒரே மாதிரியான பொம்மையே எல்லா இடத்திலும் வரையப் பட்டிருந்தது.
அதே போல EXIT .. அதற்கான வார்த்தையை அந்தந்த மொழியில் படித்து மனதில் கொள்வோம். அப்பத் தானே எங்கே சென்றாலும் வெளியில் வர முடியும்??
எல்லா நாடுகளிலும் தெருவோரங்களில் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. முதல் 1/2 மணி இலவசம். பின்பு கட்டணம் செலுத்த வேண்டும். பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகள் 1/2 மணி ஓட்டி விட்டு திரும்ப கொண்டு விட்டு விடுவார்களாம். ஆயினும் அரசு கண்டு கொள்வதில்லை, அவர்களுக்கு முக்கியம் காற்று மாசுபடுவதை தடுப்பதே.

கடுமையான பனி மூட்டம், 4 மணி நேரங்கள் இடை விடாத பெருமழை (ஆலங்கட்டி மழையாய் ஆரம்பித்து சாதாரண மழையாய் மாறியது), பனி மழை, கடும் குளிர், வெய்யில், மிதமான மழை எனப் பல தரப்பட்ட வெப்ப நிலைகளை அனுபவித்தோம்.
அனைத்து 4 ஸ்டார் விடுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் குழுவாக செல்பவர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கென்றே அறைகள் உள்ளன. WIFI வசதி உண்டு. சில விடுதிகளில் லாபியில் மட்டும், சில விடுதிகளில் ஒரு போனுக்கு மட்டும் என சில ஊழல்களும் உண்டு.
சென்ற இடங்களிலெல்லாம் காண்டினெண்டல் காலை உணவு அளிக்கப் பட்டது. பச்சை , சிவப்பு நிற ஆப்பிள்கள், அன்னாசிப் பழங்கள் எல்லா நாடுகளிலும் கிடைத்தன. ஆப்பிள் பழத்தில் சமீப நாட்களில் பறித்ததற்கான அடையாளமாய் பச்சை இலை இருக்கும். கடித்தவுடன் அதன் சாறு முழங்கை வரை வழிந்தது. அன்னாசியும் அவ்வண்ணமே. அருமை. மதிய இரவு உணவுகள் பஞ்சாபி உணவகங்களில். அரிசி சாதமும் உண்டு.
லண்டன் அருங்காட்சியகத்தில் வைத்திருந்த நம் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைப் பொருட்கள், ஈபில் கோபுரம், கொலோசியம், பைசா கோபுரத்தின் மணி, வெனிஸ் நகரின் கால்வாய் நீர் என ஒவ்வொன்றையும் தொட்டு உணர்ந்து மகிழ்ந்தேன். [எனக்கு உன்னை இப்போ தொட்டு பாக்கணும் போல இருக்கு _ என் போலவே ரசனை கொண்ட என் மூத்த சகோதரி. சரியான லூசுக் குடும்பம்னு நீங்க நினைக்கிறதும் கேட்குது ]

அத்தனை எழிலும் ஒன்றாய்
அழகாய் அமைந்த கண்டம்.

பின் குறிப்பு : நான் கண்டு ரசித்த நாடுகளைப் பற்றி அனைவருக்கும் என் எழுத்தின் மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்று விரும்பி என்னை ஊக்கப் படுத்திய சகோதரர் திரு. முரளி ராஜகோபால் மற்றும் சகோதரி அனுராதாவிற்கு நன்றிகள்.


















No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...