Thursday, 4 February 2016

விழிமின், எழுமின்…..

சுவாமி விவேகானந்தரின் இந்த வாக்கு , கண்டம் தாண்டி கடல் தாண்டி வானூர்தியில் பயணம் செய்து இடையில் மற்றொரு கண்டத்தில், வேறு ஒரு வானூர்தியில் மாறி ஏறித்  தாய் நாடு வந்தடைவோருக்கு மிகப் பொருத்தம்.

அண்டை அயலாரும் நட்பு வட்டங்களும் பரிசுப் பொருட்கள் தந்து வாழ்த்த , குடும்பத்தார் கண்ணீர் சிந்தி வழியனுப்ப வானம் பொழிய... வித்தியாசமான அனுபவம்.

சான்பிரான்சிஸ்கோ--ஹாங்காங்-சிங்கப்பூர்-சென்னை 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம். 

Today we expect a "little" rough weather என்ற தலைமை விமானியின் அறிவிப்புடன் Boeing 777 - 300er வகை விமானத்தில், கடந்த ஜனவரி 18ஆம் தேதி 12:05 க்கு பயணம் ஆரம்பம். "little" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அடுத்த 3/4 மணி நேரம் வானூர்தி குலுங்கிய குலுங்கலில் bay area வையே தாண்ட மாட்டோம் என்று நினைத்தேன். மண்டைக்குள் உள்ள பாகங்கள் இடம்பெயர்வது போன்ற உணர்வு. பயப்பட்டால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி விடக் கூடும் என்பதால் அமைதியாக இருந்தேன். இரவு 1.30 மணிக்கு கிச்சடி, சப்பாத்தி, புலவு, dessert (கேக்? இனிப்பு?? ஐஸ்க்ரீம்?? ) காபி, தயிர், ஜுஸ், உலர்ந்த திராட்சை வழங்கினார்கள். 

விழிமின் : 15 -19 மணி நேரங்கள் உள்ள பயண நேரத்தில் தலைமை விமானி எப்போது என்ன அறிக்கை விடுவார் என்று தெரியாது. உறக்கத்தில் இருக்கும் போது டிங்க்...டிங்க்.. எனவே ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் விழிமின்


3.30 - 5.30 தூக்கம். பின் அமெரிக்க நேரப்படி விழிப்பு. காபி வாங்கி குடித்து விட்டு வந்து அமர்ந்தேன். பசியோ பசி. விமான பணிப்பெண்ணிடம் எப்போது அடுத்த உணவு நேரம் என விசாரித்தேன். என் கைக்கடிகாரத்தை பார்த்து சொல்ல சொன்னேன். 1 hr 30 minutes என்றார். காத்திருந்தேன் காத்திருந்தேன் (தோம்) மதியம் 1.30 க்கு உணவு கொடுத்தார்கள். அடக் கடவுளே !! வெளி நாட்டில் இட்டலியும் உப்புமாவும் தருகிறார்களே என்று மகிழவா, காய்ந்து போன இட்டலி கசந்து போன உப்புமா என்று ஜூஸ், தயிர் என்று அரைப்பட்டினி கிடந்ததை எண்ணி சோகப்படவா?

இடைப்பட்ட நேரத்தில் ஜூஸ் மற்றும் சேமித்து வைத்திருந்த உலர் திராட்சை உதவியது. (எறும்பும் வெட்டுக்கிளியும் கதை தெரியுமா உங்களுக்கு??)

முக்கியமான விஷயம் சான்பிரான்சிஸ்கோ - ஹாங்காங் பயண நேரம் முழுவதும் இருட்டு. விமானத்தின் உள்ளேயும் மிக சிறிய விளக்குகள் மட்டுமே. The Intern, The martian , Travel destination (continent wise) in Read and Learn section என இருக்கையின் முன்னால் இருந்த விமானத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்துப் பொழுதைக் கழித்தேன். [திட்டமிட்டபடி தான்]

எழுமின் : ரத்த ஓட்டம் இல்லாமல் கால்களில் வலி வீக்கம் வந்து விடாமல் இருக்க எழுந்து அடிக்கடி நடமின்

தூக்கமும் விழிப்புமான இடைப்பட்ட பயண நேரத்தில், இரண்டு எஞ்சின்களும் சீரான ஓசையுடன் உள்ளனவா (இடையிடையில் நம்ம குக்கிராம சாலைகளில் செல்லும் பேருந்து போல , எங்கள் ஊர் மொழியில் இஞ்சின் மொரைஞ்சுதுங்கோ...(thrust கொடுக்கப்பட்டு சத்தம் அதிகமாக கேட்டது) முன்னால் உள்ள மானிட்டரில் வெளி வெப்பம் -65 டிகிரி என்று பார்க்கையில் விமானத்தின் இறக்கைகளுக்கான ஹீட்டரை ஆன் செய்திருப்பார்களா என்ற கேள்வி (இறக்கையில் பனி படர்ந்தால் விமானத்தின் எடை கூடி பறக்க முடியாமல் போகும் _ தகவல் உபயம் மகனுடன் அமர்ந்து பார்த்த airplane accidents விடியோ), இறக்கையில் உள்ள flaps ஏறி இறங்கினால் landing gear நல்லா வேலை செய்யறதா அர்த்தம் safe landing அமையும். Quora.com உபயத்தில் இன்னும் பலப்பல கவலைகள். [aeronautical engineering படித்து scientist ஆக ஆசைப்பட்டேனே... ] இது போல இன்னும் பலவித சிந்தனைகளுக்கிடையே ....கடைசி இரண்டு மணி நேரங்கள் மூக்கின் உள்ளே ஒரு விதமான எரிச்சல் dryness ரத்தம் வரும்போல ஆனால் வரவில்லை (Cabin Pressure) ஒரு வழியாக 15 மணி நேர தொடர்பயணத்தின் முடிவில் ஹாங்காங்கில் விமானம் தரையிறங்கியது.

15 மணி நேரப் பயண முடிவில் சிங்கப்பூரில் இருப்போம் என்று நினைத்திருந்தேன். நேரக் குழப்பம் தான். வேறென்ன?? கடுமையான அசதி.


ஒரே ஆறுதல்....விமானம் கடலை ஒட்டிய பாதையில் தரையிறங்கியதுதான். அலைகளே இல்லாத அமைதியான ஆழ்ந்த நீலக் கடல், ஆங்காங்கே நங்கூரமிடப்பட்ட கப்பல்கள் என காலை 7 மணி (அந்த ஊர் நேரம்) விமானத்தின் இறக்கை கடலை ஒட்டி.... அற்புதம். 3 முறை இந்த நகரைக் கடந்து சென்றிருந்தும் ஒரு முறையும் நகரின் உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. [நகரின் அமைப்பைப் பற்றியும் , விமானம் எந்த ரன்வேயில் செல்கிறது என்பது பற்றியும் அறிந்தவர்கள் தரை இறங்கும் போதும் ஏறும் போதும் நகரின் முக்கியப் பகுதிகளை வானிலிருந்தே பறவைப் பார்வையாகக் காண முடியும் _  Quora.com ] 

விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காகத் தரையிறக்கப்பட்ட ஒரு மணி நேர இடைவெளியில் , ஓட்டமாக ஓடி security check முடித்து, இறக்கி விடப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து விமானத்தில் ஏறி... ஸ்ஸ்ஸ்ஸப்பா.... பயணிகளில் பெரும்பாலோர் தெற்காசியர்கள். எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்ற தோற்றம். மிக கவனமாக செயல்பட வேண்டிய தருணம்.  

இதற்கிடையில் free wifi பிடித்து குடும்பத்திற்கு வாட்ஸ் அப், வாட்ஸ் அப் கால் , வலது கையில் பாஸ்போர்ட், roll on பெட்டி (முன்பு கேபின் பெட்டி இப்போது சக்கரம் வந்ததால் இந்தப் பெயர்), இடது கை யால் documentation of the trip (போட்டோ புடிக்கறதுங்க...)

அடுத்த 3 மணி நேரத்தில் சிங்கப்பூர்.  சிங்கப்பூர் நேரம் பகல் 12 : 15.

பஞ்சுப் பொதிகளைப் போன்ற மேகங்களுக்கிடையே வந்து கொண்டிருந்த விமானம் ஒரு கட்டத்தில் கருமேகங்களுக்கிடையில் பயணித்ததும் வித்தியாசமான அனுபவமே. டெர்மினல் 3ல் தரையிறக்கப் பட்ட நான் உடன் பயணித்த தம்பதியினருடன், டெர்மினல் 2 ற்கு விமான நிலையப் பேருந்தில் வந்து சேர்ந்தேன்(தோம்). அடுத்த விமானம் இரவு 8.20க்கு தான்.  8 மணி நேர இடைவெளி. 
சிங்கப்பூர் அரசு இது போல நிறைய பயண  இடைவெளி (6 1/2 - 8 மணி நேரங்கள்) உள்ளவர்களை சுற்றுலா அழைத்து செல்கிறது. கட்டணம் எதுவும் இல்லை. 2.30 மணி நேரங்கள். 
இமிகிரேஷன் பூத் டெர்மினல் 2 மற்றும் 3 ல் உள்ளன. நம்முடைய பாஸ்போர்ட் , விசா, போர்டிங் பாஸ் (முக்கியம்) காட்டினால் on arrival visa ஏற்பாடு செய்து வெளியில் அழைத்து சென்று ஊரை சுற்றிக் காமிக்கிறார்கள். நம்முடைய roll on பெட்டியை விமான நிலையத்தில் உள்ள லெஃப்ட் லக்கேஜ் கௌண்டரில் வைத்து விட்டே செல்ல வேண்டும்.   இமிகிரேஷன் தொடர்பான முன்வேலைகள் முடிய 2 மணி நேரங்களாகி விட்டன. 

இடையில் மீண்டும் free wifi பிடித்து குடும்பத்திற்கு வாட்ஸ் அப், (இத்தனை நேரமாச்சு உங்க அம்மாவை காணலையே இன்னும் தொடர்பு கொள்ளலையே), 
இது முடிய முடிய… please sit near the orchid garden and get ready for immigration. Sort of multi tasking.. 
சிங்கப்பூரின் அனேக முக்கிய இடங்களை பேருந்தில் சுற்றிக் காண்பித்தார்கள். (இடையில் 2 நிறுத்தங்களுடன்)

6 மணிக்கு மீண்டும் விமான நிலையம். gate E12 . விமானம் கிளம்பும் நேரம் மாறும் என்ற அறிவிப்பு. அப்படி மாறினால் gate மாறும். ஜெட் லேக் புண்ணியத்தில் அது வரை இல்லாத பசி, தூக்கம் இன்ன பிற தேவைகள் தோன்ற ஆரம்பித்தன கூடவே இந்த gate டென்சன். [மாறினால் தலை தெறிக்க வாக்கலேட்டர் மேலேயும் ஓட வேண்டுமே] இந்த நிகழ்வுகளால் சிங்கப்பூர் விமான நிலையத்தை சுற்றிப் பார்க்கும் மற்றும் duty free கடைகளில் shopping செய்யும் என் ஆசைகளை செயல்படுத்த முடியவில்லை.

குறிக்கோளை...  : இடையில் ஏதேனும் ஒரு நாட்டில், விமான நிலையத்திற்குள்ளேயே , சரியான நேரத்தில் வேறு விமானம் மாறி வந்தால்தான் தாய் மண்ணே வணக்கம் பாடலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள், ஓடோடி சென்று உங்கள் குறிக்கோளை பிடிக்காவிட்டால் உங்கள் பெட்டி முதலிலும் நீங்கள் பிறகு வேறு விமானத்திலும் அல்லாடி திண்டாடி...

20 நிமிட தாமதத்தில் அறிவிக்கப் பட்ட கேட்டிலிருந்தே கிளம்பியது விமானம். ஏறியவுடன் தூக்கத்துடனேயே சாப்பாடு, ஐஸ் க்ரீம்.. விழிக்கும் போது சென்னை அருகில். 

இம்முறை சென்னை கடற்கரையை ஒட்டி வராமல் ஊருக்குள் குடியிருப்புகளுக்கு மேலாகப் பறந்து வந்து தரையிறங்கியது விமானம்.

குடியுரிமை,கஸ்டம்ஸ்,பெட்டிகளை எடுத்தல்..... அப்பாடா..பாஸ்போர்டை கையிலேயே தூக்கித் திரிய வேண்டாம்.

ஸ்ஸ்ஸ்.... சூடான காற்று ... சொர்க்கமே என்றாலும் .....

பின் குறிப்பு : Airlines website போனால் இந்த மாதம் என்னென்ன படங்கள் பயணத்தில் காணலாம், Google ஐய்யனார் உதவியுடன் டெர்மினல்கள் பற்றிய தகவல்கள் , டூர் பற்றிய தகவல்கள் என்று சேகரித்தேன். அம்மா கொஞ்சம் ignorant ஆகவும் இரேன்_மகள் . [ சுவாமி விவேகானந்தரின் வாக்கின் கடைசிப் பகுதியை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவும்]



No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...