Saturday, 31 October 2020

முதல் வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 1]


 

என் இனிய வாசகர்களே |

முதலில் என் வெளிநாட்டு பயண மற்றும் காத்திருப்பு நேர அனுபவங்களை எழுத ஆரம்பித்ததும்  இவ்வளவா? என நானே ஆச்சரியப்படும் விதத்தில் நிறைய அனுபவங்கள் உள்ளன. எனவே பல பகுதிகளாகப் பிரித்து பதிவிட எண்ணி  உள்ளேன் .

அந்தந்த கண்டத்தில் /தேசத்தில் / ஊர்களில் பெற்ற அனுபவங்களை அவ்வப்போதே எழுதி வந்திருக்கிறேன்.

அவைகளுக்கான links ஐயும் இந்த பதிவுகளில் தரத் திட்டமிட்டுள்ளேன். 

என் உள் நாட்டுப் பயண விவரங்கள் பற்றிய பதிவை படித்த நண்பர்களின் கேள்வி: எப்படி எல்லா நிகழ்வுகளையும் தேதிகளையும் தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்? டைரியில் குறித்து வைத்துக் கொள்வீர்களா ?

என் பதில்: இல்லை. அனுபவங்களை நான் மறப்பதில்லை. என் நினைவிலிருந்தே எழுதுகிறேன். சந்தேகங்கள் தோன்றினால் என் கணவர் மற்றும் பிள்ளைகளை கேட்டு உறுதி செய்து கொள்வேன். (ஓரிரு முறைகளே கேட்டிருக்கிறேன்.)

உங்களின் ஆதரவிற்கு நன்றி.

இனி கட்டுரைக்கு செல்வோம் .......

 

வெளிநாட்டுப் பயணங்கள் பலவிதம் – 1 [பகுதி - 1]

Aug 25, 2010-Sep 22, 2010

CHENNAI – BRUSSELS- NEW YORK- SAN FRANCISCO [Jet Airways – American Airlines]

முதல் வெளிநாட்டு பயணம். வழியனுப்பும் குழுவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மகன், என் நண்பர் மற்றும் சகோதரர் இடம் பெற்றிருந்தனர். என் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிளம்பி சென்று விட்டார் தனியாக செல்வதால் துணை தேவை (Guidance needed) என்ற option கேட்டிருந்தோம். சென்னை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளி சென்றார்கள். நடந்து வந்து guidance கொடுக்க மாட்டார்கள் போல ...எனக்கு தேவைப்படவில்லை.  

(உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கான சேவை அது.)

வழியனுப்பு குழுவினர் சக்கர நாற்காலி தள்ளியவருக்கு 100 ரூபாய்களை கொடுத்து பார்த்து ஏற்றி விடுங்கள் (??) என்று சொல்லி சென்றார்கள். Immigration வரை ஒருவர் அதற்கு பிறகு மற்றொருவர் என அழைத்து சென்று Gate அருகில் விட்டு விட்டு காணாமல் போய் விட்டார்கள்.

அதிகாலை 1.30 க்கு சென்னையிலிருந்து மழைக்கு இடையில் கிளம்பியது. அழகான தமிழில் வரவேற்பு,பாதுகாப்பு விதிகள் என துவங்கியது பயணம் . கிளம்பிய சிறிது நேரத்தில் சாப்பிட கொடுத்தார்கள். (உப்புமா என்று பின்னர் அறிந்து கொண்டேன்).

நான் அலுவலகத்தில் உதவி மேலாளராகப் பணி புரிந்து கொண்டிருந்த காலம். கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு இடது கை சுட்டு விரலில் நகசுற்று வந்திருந்தது. மருத்துவமனைக்கு செல்ல நேரமில்லை. வலியுடன் கிளம்பி விட்டேன். விமானம் கிளம்பியதும் நகசுற்று தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. விடிய விடிய கடுமையான வலி...கையில் எந்த மருந்தும் இல்லை.

அரை குறையாக தூங்கி, விடியற்காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டேன். பல்துலக்கி (நீண்ட பயணங்களில் யாரும் பல் துலக்குவதே இல்லை என பின்னாளில் அறிந்து கொண்டேன்.) காபி வாங்கி குடித்தேன்.

எட்டு மணிக்கு அனைவரையும் எழுப்பி முகம் துடைக்க சூடான நாப்கின்(இடுக்கியால் எடுத்து) தந்து , ஜூஸ் மற்றும் உப்பு நிலக்கடலை தந்தார்கள். (விமானத்தில் சுப்ரபாதம் எல்லாம் பாட மாட்டார்கள். எல்லா விளக்குகளையும் போட்டு விடுவார்கள். வெள்ளை விளக்குகள் எரிந்தால் தூங்கியது போதும் எழுந்திருங்கள் சாப்பாடு கொடுக்க போகிறோம், நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் மங்கலான விளக்குகள் எரிந்தால் அனைவரும் தூங்குங்கள். மக்கள் விடிய விடிய இருக்கைக்கு முன்னால் இருக்கும் சிறிய டிவியில் - INFLIGHT ENTERTAINMENT திரைப்படம் பார்த்துக் கொண்டோ பாட்டு கேட்டு கொண்டோ வருவார்கள். வெளிச்சம் கண்ணை உறுத்தும். போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு தூங்க வேண்டியது தான். நீண்ட பயண நேரங்களில் socks, கண்ணை மூடிக் கொள்ளும் திரை, காதுக்கு வைத்து கொள்ள அடைப்பான்கள் தருவார்கள்.) சற்று நேரத்தில் சுடச்சுட பொங்கல், வடை என காலை உணவு தந்தார்கள்.

3,4,3 என இருக்கைகள் நான் சென்ற விமானத்தில். சென்னையிலிருந்தே BOEING 747.

எனது இடப்புற நான்கு இருக்கைகளில் ஒரு பிரஞ்சு குடும்பம். இந்தியாவிற்கு சுற்றி பார்க்க வந்துவிட்டு France திரும்பிக்கொண்டு இருந்தார்கள். 8 வயதில் ஒரு பெண் 4 வயதில் ஒரு ஆண் என இரு குழந்தைகள். குழந்தைகளின் தகப்பனார் தனக்கும் மற்றவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் வெள்ளெழுத்து கண்ணாடி அணிந்து புத்தகம் படித்து கொண்டே வந்தார். தாயார் பிள்ளைகளின் சண்டைகளை பஞ்சாயத்து செய்வது, தூங்க வைப்பது, சாப்பிட வைப்பது என போராடி கொண்டே வந்தார். இரவு தரையில் படுத்து உறங்கினார். [பின்னாளில் ஒரு முறை என் மகள் தன்னுடைய குட்டி பையனை அழைத்துக் கொண்டு இந்தியா வந்த போது பையன் இவருடைய இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டு இடம் தர மாட்டேன் என்று அடம் பிடிக்க தான் தரையில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறினார். இனி மேல் பயணம் செய்யும் போது விமானத்தில் தரை டிக்கெட் என ஒரு பிரிவு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் அம்மா.]

பொங்கலை ஊட்ட ஆரம்பித்ததும் சிறுவன் எழுந்து ஓட ஆரம்பிக்க விமான பணிப்பெண் துரத்த .....

200 gm alpenleibe மிட்டாய் பாக்கெட்டை லஞ்சமாக கொடுத்து பொங்கலை சாப்பிட வைத்தார். அவரது அக்கா தனக்கும் வேண்டும் என கேட்க தர மாட்டேன் என்று இவர் சொல்ல அம்மா சொம்பும் துண்டும்  இல்லாத நாட்டாமையானார். அதற்குள் நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.

குட்டி பெண் பேசிக்கொண்டே வந்தார் என்னுடன். அன்புக்கு மொழி தேவையில்லையே.குட்டி பெண் French மொழியில் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்தார்.(அவரது தாயார் மொழி பெயர்த்து கொண்டே வந்தார்) குட்டி பையன் என் மடியில் அமர்ந்து ஜன்னல் வழியே அருகில் பறந்த JET விமானங்களை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தார். ஜன்னல் இருக்கைக்கான சண்டை வேறு நடந்தது.

Brussels விமான நிலையத்தின் அருகிலேயே மற்றொரு JET விமான தளம் உள்ளது பக்கத்தில் டவுன் பஸ் போல விமானங்கள் பறந்து சென்றன. (பின்னாளில் ஐரோப்பிய பயணத்தில் இந்த ஊரை சுற்றி பார்க்க நேர்ந்தது, அதுவும் குறிப்பாக 2016ல் அங்கே நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கான எதிர்ப்பு தினத்தன்று)

அங்கே விமானத்தை நிலையத்திற்கு வெகு தொலைவில் தள்ளி நிறுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். தண்ணீர் tanker போல பெரிய டேங்கரிலிருந்து மிகப்பெரிய குழாயின் மூலம் எரிபொருளை நிரப்பினார்கள். விமானத்திலிருந்து இறங்கி பேருந்தில் டெர்மினல் செல்லும் வரையில் அருகில் ஏறி இறங்கிய ஜெட் விமானங்களில் புகையின் டிசைன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். (எப்பவும் பராக்கு பார்ப்பதே உன் வேலை _ என் குடும்பம்)

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் ப்ரஸ்ஸல் வரும் பயணிகளை இறங்க சொல்லி, யார் எந்த ஊருக்கு செல்கிறார்களோ அவர்களை சீட்டு குலுக்குவது போல தனி தனி குழுக்களாக்கி மீண்டும் பயணத்தை தொடர வைப்பார்கள்.

இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் செக்யூரிட்டி பரிசோதனை. அதற்கென தனி அறை கிடையாது. வரிசையில் செல்ல செல்ல சோதனை. எனக்கு முன்னால் நம் ஊர் பெண்மணி ஒருவர் ஜரிகை பார்டர் வைத்த புடவை ரவிக்கை அணிந்து வந்திருந்தார்.

Security officer ஆகிருதியான பெண். மெட்டல் டிடெக்டர் கத்தியது. (தங்க நகைகள் அணிந்திருந்தால் இந்தியா தவிர மற்ற  நாடுகளில் சத்தம் கொடுக்கும்.)

S.O: Remove your blouse.

நம் பெண்மணி: why?

S.O: Metal detector beeps, it is gold

நம் பெண்மணி: No gold, it is matching blouse

S.O: No no, gold remove

நம் பெண்மணி: (புடவை பார்டரையும் ரவிக்கை பார்டரையும் காண்பித்து) No no matching matching saree blouse

பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்த பெண்மணியை உள்ளே விட்டார்கள்.

(Security checking சமயத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் எனக்கு. அதற்கு தனிப் பதிவே போடுகிறேன்.)

ப்ரஸ்ஸஸ் விமான நிலையத்தில் உடன் பயணித்த சென்னை தம்பதியினருடன் நட்பானேன். அவர்கள் நியூயார்க் சென்று கொலம்பஸ் என்ற ஊருக்கு செல்ல வேண்டியவர்கள். பேசிக்கொண்டே வந்ததில் சரத்குமார் படம் போல, எங்கள் சென்னை வீட்டிற்கு மிக அருகாமையில் வசிப்பவர்கள் என்பது தெரிந்தது. அவரது பெயர் திருமதி ராதா. இன்றளவும் அவரது முகவரி என்னிடம் உள்ளது. ஏனோ தொடர்பு கொள்ளவில்லை.

நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினேன்.

 

(அனுபவங்கள் தொடரும் .....)

 

 

Sunday, 16 August 2020

உள் நாட்டு விமானப் பயண அனுபவங்கள்...[சென்னை முதல் இமயம் முடிய]

ஜனவரி 1, 2006  

[புதுடில்லி - ஹைதராபாத்சென்னை]

குர்காவ்னில் பேஷன் டிசைனர் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்த மகளைக் காண கணவர் மகனுடன் சென்ற பயணம் அது .போகும்போது ரயில் வரும் போது விமானம். (Spice jet)   முதல் விமானப் பயணம் கூட.

மாலை 6.30 மணிக்கு விமானம் கிளம்பும் நேரம் 

அங்கு கடும் பனி மூட்டம்.விமானி  50 மீட்டருக்கும் குறைவான visibility தான் இருக்கிறது, இறங்கி வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

இறங்கி டெர்மினல் உள்ளே செல்வதற்குள் குளிரில் விறைத்து போனோம். சென்னைக்கு தானே செல்லப்போகிறோம் என்று ஒரே ஒரு ஸ்வெட்டர் தவிர மீதியை மகளிடமே கொடுத்து விட்டோம்.

அதற்கிடையில் என் கணவர் டிக்கெட்டுகளை 3 ஆம் தேதிக்கு மாற்றி வாங்கி வந்தார். [ குளிரில் நடுங்கி கொண்டு எதிரில் யார் வருகிறார்கள் என்றே தெரியாத நிலையில் நான் டிக்கெட்டை மாற்றிக்  கொண்டு வந்தேனே அது பற்றி எழுதவே இல்லை என்று கோவித்துக் கொள்ளக் கூடாது இல்லையா என் கணவர்?]

அந்த பகுதியில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த என் மகளின் வகுப்பு தோழர் எங்களை அழைத்துச் சென்றார்.  வெடவெடப்பு அடங்க 2 மணி நேரங்கள் ஆனது.

3 ஆம் தேதி விமானப் பயணத்தைப் பற்றி சொல்லவே இல்லையே .... ஹைராபாத் வரை சுகமான நிம்மதியான  பயணம். அங்கிருந்து கிளம்பும் சமயம் பாதுகாப்பு விதிகள் பற்றி விளக்கும் போது உங்கள் இருக்கையில் இருக்கும் cushion ஐயே floatation ஆக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வங்காள விரிகுடா கடல் மேலே பறக்கும் போது பிரச்சினை வந்தால் cushion கட்டிகொண்டு கடலில் குதியுங்கள் என்பதே அதன் பொருள் . கேட்டதும் ஒரே படபடப்பு எனக்கு. எங்கே எப்படி அந்த cushion எடுக்க வேண்டும்  என்று என் மகனைக் கேட்டால் யாருக்கு தெரியும் என்று பதில் வந்தது. பயந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம்.

 

பிப்ரவரி, 2008

[பூனேசென்னை]

அலுவல் நிமித்தம் பூனேவிற்கு சில நாட்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. (தனியாக). திரும்பி வரும் நாளில் சகோதரிக்கு   பூனே அலுவலகத்தில் [நாங்களிருவரும் ஒரே அலுவலகத்தில் இருந்தோம்]  வேலை இருந்ததால் வழக்கமாக வரும் டாக்ஸி ஓட்டுநர் வந்து உன்னை அழைத்து செல்வார் என்று சொல்லி விட்டு சென்று விட்டார். மதியம் 1.30  விமானம் கிளம்பும் நேரம். 12 மணி . ஓட்டுநர்  வரவேயில்லை . வழக்கமான  ஓட்டுநர் வராமல் அவரது மகனை  (20 + வயதுகள்) அனுப்பி இருந்தார். மகன் நான் receptionல் பெட்டியுடன் காத்திருந்ததை கவனிக்காமல், reception பகுதியில் கேட்காமல் .மாடியில் நான் தங்கி இருந்த அறைக்கு சென்று தேடி விட்டு காணவில்லை என்று receptionல் சொல்ல ...அவர்கள்  என்னை அடையாளம் காட்ட ...

12.15 pm

காரில் ஏறி புறப்பட்டோம்.  அவருக்கு  ஏர்போர்ட் போக வழியே தெரியவில்லை . 10 அடிக்கு ஒரு முறை நிறுத்தி "ஏரோடோ" எப்படி செல்வது என்று மராத்தியில் கேட்டார். மேடு, பள்ளம், சாக்கடைகள்,  குடிசைகள் என அமைந்திருந்த குறுகலான பகுதிக்குள்ளெல்லாம் புகுந்து பூனே நகரை  சுற்றி காண்பித்தார். நான் ஆங்கிலத்தில் அலற அவர் மராத்தியில் பேச.... உதவிக்கு சகோதரியை தொலைபேசியில் கூப்பிட்டேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை . மீண்டும் ஏரோடோ  ஏரோடோ மட்டுமே ..வாக்கியமாக கூட கேட்கவில்லை. அவரின் நடவடிக்கைகளை கண்டு எனக்கு விமானத்தை பிடிக்க முடியுமா என்ற கவலையை மீறி சிரிப்பை அடக்க முடியவில்லை. 

12.45 pm

ஒரு வழியாக ஆங்கிலத்திற்கு மாறி "airport" என்று கேட்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில்  அகலமான சாலைப்பகுதிக்கு வந்திருந்தார். சாலைகளில் பலகைகளில் ஆங்காங்கே ஏர்போர்ட் போகும் வழி  என்று எழுதி அம்புக் குறி  இருக்கே அதை பார்த்து ஓட்டுங்கள் என்று நான் சொல்ல... அவருக்கு புரிந்தால் தானே ? மீண்டும் airport  விசாரணை... பொறுமை மீறி go straight என்று நான் வழி காட்ட ஆரம்பித்தேன்.

1.15. pm

விமான நிலையத்திற்கு மிக அருகில் ஒரு திருப்பம் . இடது புறத்தில் மிலிட்டரி பகுதி வலது புறத்தில் விமான நிலையம் . நம்மவருக்கு   இடதா வலதா என்று பலத்த சந்தேகம். நன்கு யோசித்து இடது புறம் திரும்ப ஆரம்பிக்க நான் right right என்று அலற....

 

1.20 pm 

விமான நிலையம் .

 

 பூனே விமான நிலையம் மிக சிறியது. Terminal என்பது சிறிய hall தான். கதவை தாண்டியவுடன் 100 மீட்டர் நடந்தால் விமானம் நின்று கொண்டிருக்கும்.   

கடைசியாக, தாமதமாக, ஓட்டமாக ஓடி வேறு சென்றதால் கடுமையான security check. வெளியில் விடவே இல்லை. விட்டதும் ஓட்டமாக விமானத்தை நோக்கி ஓடி படிக்கட்டுகளில் ஏறினேன்.

Mofussil பஸ் நிலையங்களில் கண்டக்டர் பின் கதவிலிருந்து எட்டி பார்த்து பயணிகள் ஏறியதும்  ரை... ரை ....என்று கூவுவதற்காக காத்திருப்பது போல air hostess எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஏறி விமானத்தின் கதவுக்கு அருகில் கடைசி இருக்கையில் (அது ஒன்று தான் காலி ) சரியாக கூட அமரவில்லை ... ரை...  ரை...  இல்லாமலே விமானம் கிளம்பி விட்டது .

 

டிசம்பர் 2015 / ஜனவரி 2016

[சென்னை - மும்பை -மஹாபலேஷ்வர்]

ஜனவரி 1 ஆம் தேதி  காலை மும்பையில் விமானம் ஏறினோம் . 1.50 மணி நேர பயணம் . மார்கழி மாதம் . சென்னையில் கடும் பனிமூட்டம் . திருப்பதி அருகே இருந்தபோது காலை 9 மணி ஆகியும் சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

விமானம் திருப்பதி விமான நிலையத்தின் மேலே சுற்றி சுற்றி சுற்றி (3 முறை) ஒரு மணி நேரம் பறந்து கொண்டே இருந்தது.

எப்போது தரையிறங்குவோம், விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விடாதா இப்படி பல யோசனைகள்.

இருக்கைக்கு முன்பாக இருந்த டிவியில்  ஒரு திரைப்படம் பார்த்து முடித்த சமயம்  சென்னையில் தரையிறங்கினோம் .

 

நவம்பர், 2017

[சிம்லா, குலு, மணாலி]

டெல்லி வரை விமானம் அங்கிருந்து innova காரில் மற்ற இடங்களுக்கு பயணம்.

திரும்பி வரும் சமயம் டில்லியில் smog. மாலை 5.30 மணி விமானத்திற்கு 1.30 க்கே விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார் இன்னோவா ஓட்டுநர்.

விமானத்தில் ஏறியதும் விமானத்தின் உட்புறம் வித்தியாசமாக காட்சியளித்தது . சிகாகோ O 'Hare விமான நிலையத்திலிருந்து சென்னை வரும் விமானம் அது.புத்தம் புதிய விமானம் . ஜன்னலின் வடிவமைப்பு, இருக்கைகள், உள்ளமைப்பு எல்லாமே வித்தியாசம். இருக்கையில் அமர்ந்ததும் அங்கே இருந்த விமானம் பற்றிய குறிப்புகள் இருந்த அட்டையை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  காரணம் நான் பயணம் செய்ய மிகவும் விரும்பிய Boeing 787-8 மாடல் விமானம் அது. ஜன்னலில் ஒரு பட்டனை அழுத்தினால் எவ்வளவு tint வேண்டுமோ அந்தளவுக்கு மாறும்.

[Boeing நிறுவனத்தின் விமானங்கள் Boeing 737, Boeing 747, Boeing 777.... என ஒவ்வொரு model க்கும் ஒவ்வொரு  எண்ணைக் கொண்டிருக்கும் . ஏர்பஸ்  நிறுவனத்தின் விமானங்கள் A 318, A 320 , A 321 , A 380 என்பது போல இருக்கும்.

Boeing 787 என்பது latest model விமானம். "Dreamliner" என்பது அதன் செல்லப் பெயர். ஆரம்பத்தில் இந்த model விமானத்தில் மின்சாரக் கோளாறுகள் ஏற்பட்டமையால் சில காலம் பறக்காமல் நிறுத்தி வைக்கப் பட்டு, அந்த பிரச்சினை சரி செய்யப்பட்ட  பிறகு மீண்டும் வானில் பறக்க விடப்பட்டது.

Boeing 747 மற்றும் A380 ஆகியவை double decker வகைகள் .

Boeing விமானங்களின் மூக்கு பகுதி சற்றே அகலமாகவும் Airbus கூர்மையாகவும் இருக்கும்.

Boeing 747க்கு நான்கு என்ஜின்கள், Boeing 777க்கு இரண்டு என்ஜின்கள். இந்த வகை விமானத்தில் விபத்துக்கள் மிகக் குறைவு. 

விமானங்கள் , விமான விபத்துக்கள் பற்றிய தகவல்கள் படிப்பது , பார்ப்பது என் மகனிடமிருந்து கற்றுக் கொண்ட பொழுது போக்கு. விமானப் பயணத்திற்கு சில நாட்கள் முன்பு இந்த பொழுது போக்கை தற்காலிகமாக நிறுத்தி விடுவோம்.


டிசம்பர் 25-27, 2017

[சென்னை – கோவை]

விமான பயண நேரம் 50 நிமிடங்களே.  ஆயினும்  காலை 10.30 க்கு வீட்டை விட்டு கிளம்பிஆட்டோ, , மெட்ரோ ரயில் , விமானம், வாடகைக்கார்,பேருந்து எனஎ அன்பே சிவம் படத்தில் வரும் கமலஹாசன் மாதவன் போல இரவு 7 மணிக்கு சத்தியமங்கலம் போய் சேர்ந்தோம். 

[அச்சமயத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் , ஆலந்தூர் - விமான நிலையம் என இரண்டு ரயில்களில் பயணிக்க வேண்டும். ஆலந்தூரில் இறங்கி இரண்டு தளங்கள் மேலேறி ...விமான நிலையம் வந்தடைந்தோம்.

விமான நிலையத்தில் escalator, travelator , lift , connecting bridge எதுவுமே இல்லை. படிக்கட்டுகளில் பெட்டியை சுமந்து கொண்டு இறங்கி உள்நாட்டு விமான நிலையம் சென்றோம்.]

அடுத்த நாளே மீண்டும் கோவை - சென்னை வந்து சேர்ந்தோம்.

 

மார்ச்/ ஏப்ரல், 2018

[சென்னை - டில்லி- ஸ்ரீநகர்]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் / பஹல்காம் / குல்மார்க் பயணம். Air India விமானப் பயணம் .

போகும்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவ்வளவாக சோதனைகள் இல்லை

அங்கே நாங்கள் தங்கியிருந்த 4 நாட்களில் ஒருநாள் குல்மார்க், மீதி நாட்கள் ஸ்ரீநகர் என்றே சுற்றி பார்க்க முடிந்தது. பகல்காமில் துப்பாக்கி சூடு, குல்மார்க் ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு 3 நாட்களுக்கு. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் ஊரை சுற்றி பார்த்தோம்.

ஊருக்குள் எங்கெங்கும் CRPF வீரர்கள், காஷ்மீர் மாநில காவலர்கள் துப்பாக்கி இந்திய வண்ணம் நின்று கொண்டு இருந்தார்கள்.(100 அடிக்கு ஒருவர் )

திரும்பும் நாளில் 3 மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் 4 மணி நேரங்கள் முன்பே கிளம்பி விட்டோம். 2 கிலோமீட்டர்களுக்கு முன்பிருந்தே scanning/security check ஆரம்பம் . விமானத்தில்  ஏறும் முன்பு வரை 6 முறை நம் உடைமைகளையும் நம்மையும் சோதனை செய்தார்கள். உடைமைகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு அவரவரின் பெட்டி எது என்று அடையாளம் காட்டிய பின்பே விமானத்திற்குள் பெட்டிகளை அனுமதிக்கிறார்கள். [Boarding pass கூட வாங்கி சோதித்து பார்த்தார்கள்]

விமான நிலைய காத்திருப்பு பகுதியிலிருந்தே பனிமலைகள் தரிசனம் கண்கொள்ளாக் காட்சி. உள்ளே நடந்த கெடுபிடியால் எதுவும் ரசிக்கவில்லை.

விமானம் மேலேறியதும் தெரிந்த பனிமலைகள் இயற்கையின் அற்புதம். எங்கே ஆரம்பம் எங்கே முடிவு என்று தெரியாத மலைத்தொடர்கள்.]

உள்நாட்டு பயணங்கள் ஒரு வகை என்றால் வெளி நாட்டு பயணங்கள் வேறு வகை.

ஒவ்வொன்றும் ஒருவிதம்...

 

பின் குறிப்பு : மேற்கூறிய அனைத்து பயணங்கள் பற்றிய பதிவுகளும் என் facebook timeline மற்றும் manjooz .blogspot .com ல் உள்ளன .

 

 







Tuesday, 2 June 2020


அவளா நீ??
வலைத்தளங்களும் கூகுள் மேப்பும் அதிகம் பயன்படுத்தப்படாத 2010ல், மகள் வாழும் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் எங்கே இருக்கிறது என்று அட்லாஸ் பார்த்து தெரிந்து கொண்டு, என் முதல் அமெரிக்கப் பயணம் அமைந்தது.22 நாட்களே இருந்த அந்தப் பயணத்தில் சான்பிரான்ஸிஸ்கோ சென்ற மறுநாளே நயாகரா நீர்வீழ்ச்சியை காண மீண்டும் கிழக்கு கடற்கரை நோக்கி விமானத்தில் அட்லாண்டா வழியாக நியூயார்க் மாநிலத்தை சேர்ந்த Buffalo நகருக்கு சென்றோம்.
குடும்ப நண்பர் ஒருவரும் Buffaloவில் எங்களுடன் இணைந்து கொள்ள Niagara Falls City யை நோக்கி சுமார் 40 நிமிடங்கள் பேருந்தில் 27 km பயணம். Jetlagல் மப்பும் மந்தாரமுமான பயணம்.பேருந்தில் சென்ற போது பல மைல்களுக்கு அப்பாலிருந்தே மேகமூட்டம் தெரிகிறது. அந்த பகுதியில் செடி கொடிகளோ மரங்களோ தென்படவில்லை. Niagara Falls City சிறிய, எல்லா வித கடைகளும் உள்ள, Floating population அதிகம் உள்ள ஊர்.
[Horse shoe (கனடா), American மற்றும் Bridal veil (வடஅமெரிக்கா) என மூன்று பிரிவாக நீர் விழுகிறது. குதிரை லாட வடிவில் இருப்பதால் Horse shoe falls, மணப்பெண்ணின் தலையிலிருந்து நீ......ளமாக தொங்கும் சல்லாத்துணி போல இருப்பதால் Bridal veil என்ற காரணப் பெயர்கள். American falls உயரம் குறைவானது. (https://en.wikipedia.org/wiki/Niagara_Falls)]
வாருங்கள்..நீர்வீழ்ச்சியை காண செல்வோம்.
Niagara Falls State Park என்பது அரசாங்கம் நீர்வீழ்ச்சியை சுற்றி அமைத்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு நேரெதிரில் நாங்கள் தங்கியதால் பயண நேரம் மிச்சம்.
ஆகஸ்ட் மாதம் அங்கே வெயிற்காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம். குறிப்பாக இந்தியர்கள், மற்றும் கிழக்காசியர்களே அதிகம் தென்பட்டனர்.
[Lake Erie மற்றும் Lake Ontarioவை[Great Lakes என அழைக்கப் படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகள்] இணைக்கும் நீர்ப் பாதையே (drainage) நயாகரா நதி. Lake Erie யிலிருந்து நயாகரா நதி பிரிந்து அமைதியாக ஓடி வந்து 51 மீட்டர்(167 அடி ) உயர பள்ளத்தாக்கில் செங்குத்தாக பெரும் சப்தத்துடன் விழுகிறது. மீண்டும் அமைதியாக ஓடி Lake Ontario வில் கலக்கிறது.]
பூங்காவின் உள்ளே சிறிது தொலைவு நடந்தால் நீர்வீழ்ச்சி தென்பட தொடங்குகிறது. அருகில் நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைத்தது.
நயாகரா நீர்வீழ்ச்சி அதன் அழகுக்கு மட்டுமல்லாமல் மின்சார உற்பத்திக்கும் பெயர் பெற்றது.
பூங்காவிலிருந்து பார்க்கையில் கனடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் சுழலும் ரெஸ்டாரண்டுகள் observation tower, அங்கு உலாவும் மக்கள் எனப் பலவும் தெரிகிறது. வலப்புறம் தலையை திருப்பினால் ரெயின்போ பாலம், அமெரிக்க பகுதியின் Horse Shoe Falls, observation tower, அமெரிக்க பகுதி நீர்வீழ்ச்சிகள், கீழே குனிந்தால் படகுகள் எனப் பல காட்சிகளையும் காணமுடிகிறது.
[இரண்டு ஏரிகளும், நயாகரா நதியும் பாதி வடஅமெரிக்கப் பகுதியிலும் மீதி கனடா நாட்டுப் பகுதியிலும் அமைந்துள்ளன. Ontario நகரத்திலிருந்து 121 km தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நதிக்கு இருபுறமும் உள்ள ஊர்களின் பெயரும் Niagara Falls City தான்.]
காலை எழுந்ததும் electric cooker ல் சாதம் வடித்து பொடி தொக்கு தயிர் வகையறாக்களுடன் சாப்பிட்டு விட்டு கிளம்புவோம். மதியம் பூங்காவில் உள்ள விடுதியில் உண்போம். அங்கு தான் நம் நாட்டு மக்களுடனான சந்திப்பு பேச்சு வார்த்தைகள் எல்லாம். இரவில் கையில் கொண்டு சென்ற சப்பாத்திகள் உதவின. [1.5 வயது கேசவ் காய் இல்லாமல் சாப்பிட மாட்டார் அந்நாளில். எல்லா காய்க்கும் கக்கக்காய், கம்மக்காய் ,கொம்மக்காய் என்று ‘க’ வரிசையில் பெயர் வைத்து கூறுவார். கக்கக்காய் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்பார். [சாப்பாட்டுக்கே வழியில்லை காய்க்கு எங்கே செல்வேன் கொடுப்பதை சாப்பிடு _ அவரின் தாயார்]
நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்திற்கு மிக அருகில் செல்ல அமெரிக்க பகுதியில் செயல்படும் Maid of the Mist Cruises என்னும் பெயரில் செயல்படும் மின்சார படகில் சென்றோம்.(கனடா பகுதியில் Hornblower Cruises) அவர்களே வழுக்காத செருப்பு மற்றும் raincoat( நீல நிறம்) ஒவ்வொருவருக்கும் தருவார்கள்.(Disposable) மிக அருகில் சென்ற போது கீழே விழும் நீர்த்துளிகள் தெறித்து மழையில் நனைவது போன்ற நிலை. ஒரு புறம் நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டம் கண்டு பயம் மறுபுறம் மகிழ்ச்சி எனக் கலவையான உணர்வுகள்.
நதிக்கு மறுகரை கனடா என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? ஹெலிகாப்டர் நிலையத்தை தாண்டியவுடன் கனடா நாட்டுக்கு செல்ல check post. கனடா நாட்டு விசா உள்ளவர்கள் காரில் சென்று கனடா பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சியை கண்டு மகிழலாம். பாதசாரிகளுக்கு தனியாக Rainbow bridge என்னும் பாலம் உள்ளது. [நாமும் செல்லலாம் என்று கூறினேன். விசாவுக்கு application போட்டு விட்டு பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திரு ஒரு மாதத்தில் கிடைத்து விடும் போய் பார்த்து விட்டு வீடு வந்து சேர் நாங்கள் கிளம்புகிறோம் என்றார் மகள்]
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு நேரெதிரில் ஹெலிகாப்டர் நிலையம்(?!). 4 தூண்கள் அதன் மேல் சதுரமான தளம் அவ்வளவே. கீழே பயணச்சீட்டு கொடுக்கும் இடம். அவரே உதவியாளர். ஹெலிகாப்டர் பைலட் வெளியில் வந்து நம்மை அழைத்து செல்வார். நான் என் கணவர் மற்றும் நண்பர் சென்றோம். என் கணவரின் seat belt clip வேலையே செய்யவில்லை அவர் அலற அலற ஹெலிகாப்டர் [குட்டி கேசவின் மழலையில் TITATO] கிளம்பியது. பெல்டை ஒரு கையிலும் உயிரை மற்ற கையிலுமாக பிடித்துக் கொண்டு பயணித்தார் என்றே சொல்லலாம். [விமானப் பயணம் என்றாலே பயப்படுபவர் என் கணவர்.] நான் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். வானில் இரண்டு முறை நீர்வீழ்ச்சியை சுற்றி வட்டமடித்து கனடா பகுதியிலும் பயணித்து விட்டு வந்தோம்.வானிலிருந்து பார்க்கையில் Horse shoe நீர்வீழ்ச்சியின் மேல் வானவில் தோன்றி spectacular என்ற வார்த்தையை உண்மையாக்கியது. மறக்க முடியாத அனுபவம்.
முன்பொரு முறை Lake Superior, Lake Michigan பற்றி எழுதிய போது அவைகள் கடலளவு பெரியவை என்பதால் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது என்று கூறினேன். அது போல வெல்லண்டு கால்வாய் (The Welland Canal) Lake Ontario மற்றும் Lake Erie ஆகியவைகளை இணைக்கிறது. அந்த இடத்தில் கப்பல்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்வதற்காக 8 கதவுகள் அமைக்கப்பட்டு, கப்பல் வரும் சமயத்தில் திறந்து விடப்படுகின்றன. (Courtesy: Wikipedia)
நயாகரா நீர்வீழ்ச்சியை கயிறு கட்டி கடந்து செல்லுதல் படகில் செல்லுதல் நடந்து செல்லுதல் போன்ற வீர விளையாட்டுக்கள், வீர மரணங்கள், பனிக்காலத்தில் உறைதல் எனப் பல தகவல்கள் கொண்ட டாக்குமெண்டரி ஒன்றையும் கண்டோம். Maple மரங்களை முதலில் அங்கு தான் பார்த்தேன். [காய்ந்த இலை ஒன்றை சென்னைக்கு எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தேன்.]
Bridal veil மற்றும் American நீர்வீழ்ச்சிகளை காண Goat Island என்னும் பகுதிக்கு சென்று அனுமதி சீட்டு,வழுக்காத செருப்பு raincoat (மஞ்சள் நிறம்) வாங்கி கொண்டு ஒரு குகையின் உள்ளே நடந்து பின் (The Cave of the Winds) elevator வழியாக மேலேறினால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் அடிவாரத்தில் நாம் இருப்போம். அருவி நம்மை கண்டிப்பாக குளிப்பாட்டி விடும். அற்புதமான அனுபவம்.
Prospect Point Observation Tower மேலே ஏறி நின்று நயாகரா நீர்வீழ்ச்சியை(Horse shoe falls) மற்றொரு கோணத்தில் காணலாம். Prospect Point பூங்காவிலிருந்தும் பாதசாரிகள் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க முடியும்.
அடுத்த நாள் காலை நயாகரா பூங்காவை அங்குள்ள குட்டி ரயிலில் ஏறி சுற்றி பார்த்தோம். நதிக்கரையில் அமர்ந்திருந்தோம். அமைதியாக ஓடி வரும் அந்த நதி சில அடிகளை கடந்ததும் பெருத்த ஓசையுடன் ஆர்ப்பரித்து கொட்டுவது இயற்கையின் விந்தை.
Horse shoe falls இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். கனடா பகுதியிலிருந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உண்டு. பாதசாரிகள் செல்ல ஒரு பாலம் உண்டு என்று சொன்னேன் இல்லையா அதில் பாதி தூரம் விடுவார்கள். இரவில் குளிரில் நடுங்கி கொண்டே பாலத்தில் அமர்ந்து வாண வேடிக்கைகளை கண்டு களித்தோம். நதியின் நீர் புல்லின் பச்சை நிறம் போல் வித்தியாசமாக இருக்கிறது. அதில் உள்ள உப்புக்களும் உடைந்த பாறைகளின் துகள்களும் தான் அந்த வித்தியாசமான நிறத்திற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது .
(https://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk)
நிதானமாக 3 பகல்கள் 2 இரவுகள் சுற்றி சுற்றி நீர்வீழ்ச்சியை ரசித்தது இன்றளவும் மறக்க முடியாத அனுபவம். பின்னாளில் ஐரோப்பா ஆஸ்திரேலியா ஆசியா என பல கண்டங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தாலும் முதல் வெளிநாட்டுப் பயணம் முக்கியம் இல்லையா? வரலாறு முக்கியம் அமைச்சரே… பின் குறிப்பு :
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை "ஜோடி" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் காட்டியிருக்கிறார்கள் .( கனடா பக்கத்திலிருந்து)