அவளா நீ??
வலைத்தளங்களும் கூகுள் மேப்பும் அதிகம் பயன்படுத்தப்படாத 2010ல், மகள் வாழும் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் எங்கே இருக்கிறது என்று அட்லாஸ் பார்த்து தெரிந்து கொண்டு, என் முதல் அமெரிக்கப் பயணம் அமைந்தது.22 நாட்களே இருந்த அந்தப் பயணத்தில் சான்பிரான்ஸிஸ்கோ சென்ற மறுநாளே நயாகரா நீர்வீழ்ச்சியை காண மீண்டும் கிழக்கு கடற்கரை நோக்கி விமானத்தில் அட்லாண்டா வழியாக நியூயார்க் மாநிலத்தை சேர்ந்த Buffalo நகருக்கு சென்றோம்.
குடும்ப நண்பர் ஒருவரும் Buffaloவில் எங்களுடன் இணைந்து கொள்ள Niagara Falls City யை நோக்கி சுமார் 40 நிமிடங்கள் பேருந்தில் 27 km பயணம். Jetlagல் மப்பும் மந்தாரமுமான பயணம்.பேருந்தில் சென்ற போது பல மைல்களுக்கு அப்பாலிருந்தே மேகமூட்டம் தெரிகிறது. அந்த பகுதியில் செடி கொடிகளோ மரங்களோ தென்படவில்லை. Niagara Falls City சிறிய, எல்லா வித கடைகளும் உள்ள, Floating population அதிகம் உள்ள ஊர்.
[Horse shoe (கனடா), American மற்றும் Bridal veil (வடஅமெரிக்கா) என மூன்று பிரிவாக நீர் விழுகிறது. குதிரை லாட வடிவில் இருப்பதால் Horse shoe falls, மணப்பெண்ணின் தலையிலிருந்து நீ......ளமாக தொங்கும் சல்லாத்துணி போல இருப்பதால் Bridal veil என்ற காரணப் பெயர்கள். American falls உயரம் குறைவானது. (https://en.wikipedia.org/wiki/Niagara_Falls)]
வாருங்கள்..நீர்வீழ்ச்சியை காண செல்வோம்.
ஆகஸ்ட் மாதம் அங்கே வெயிற்காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம். குறிப்பாக இந்தியர்கள், மற்றும் கிழக்காசியர்களே அதிகம் தென்பட்டனர்.
[Lake Erie மற்றும் Lake Ontarioவை[Great Lakes என அழைக்கப் படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகள்] இணைக்கும் நீர்ப் பாதையே (drainage) நயாகரா நதி. Lake Erie யிலிருந்து நயாகரா நதி பிரிந்து அமைதியாக ஓடி வந்து 51 மீட்டர்(167 அடி ) உயர பள்ளத்தாக்கில் செங்குத்தாக பெரும் சப்தத்துடன் விழுகிறது. மீண்டும் அமைதியாக ஓடி Lake Ontario வில் கலக்கிறது.]
பூங்காவின் உள்ளே சிறிது தொலைவு நடந்தால் நீர்வீழ்ச்சி தென்பட தொடங்குகிறது. அருகில் நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைத்தது.
நயாகரா நீர்வீழ்ச்சி அதன் அழகுக்கு மட்டுமல்லாமல் மின்சார உற்பத்திக்கும் பெயர் பெற்றது.
பூங்காவிலிருந்து பார்க்கையில் கனடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் சுழலும் ரெஸ்டாரண்டுகள் observation tower, அங்கு உலாவும் மக்கள் எனப் பலவும் தெரிகிறது. வலப்புறம் தலையை திருப்பினால் ரெயின்போ பாலம், அமெரிக்க பகுதியின் Horse Shoe Falls, observation tower, அமெரிக்க பகுதி நீர்வீழ்ச்சிகள், கீழே குனிந்தால் படகுகள் எனப் பல காட்சிகளையும் காணமுடிகிறது.
[இரண்டு ஏரிகளும், நயாகரா நதியும் பாதி வடஅமெரிக்கப் பகுதியிலும் மீதி கனடா நாட்டுப் பகுதியிலும் அமைந்துள்ளன. Ontario நகரத்திலிருந்து 121 km தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நதிக்கு இருபுறமும் உள்ள ஊர்களின் பெயரும் Niagara Falls City தான்.]
காலை எழுந்ததும் electric cooker ல் சாதம் வடித்து பொடி தொக்கு தயிர் வகையறாக்களுடன் சாப்பிட்டு விட்டு கிளம்புவோம். மதியம் பூங்காவில் உள்ள விடுதியில் உண்போம். அங்கு தான் நம் நாட்டு மக்களுடனான சந்திப்பு பேச்சு வார்த்தைகள் எல்லாம். இரவில் கையில் கொண்டு சென்ற சப்பாத்திகள் உதவின. [1.5 வயது கேசவ் காய் இல்லாமல் சாப்பிட மாட்டார் அந்நாளில். எல்லா காய்க்கும் கக்கக்காய், கம்மக்காய் ,கொம்மக்காய் என்று ‘க’ வரிசையில் பெயர் வைத்து கூறுவார். கக்கக்காய் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்பார். [சாப்பாட்டுக்கே வழியில்லை காய்க்கு எங்கே செல்வேன் கொடுப்பதை சாப்பிடு _ அவரின் தாயார்]
நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்திற்கு மிக அருகில் செல்ல அமெரிக்க பகுதியில் செயல்படும் Maid of the Mist Cruises என்னும் பெயரில் செயல்படும் மின்சார படகில் சென்றோம்.(கனடா பகுதியில் Hornblower Cruises) அவர்களே வழுக்காத செருப்பு மற்றும் raincoat( நீல நிறம்) ஒவ்வொருவருக்கும் தருவார்கள்.(Disposable) மிக அருகில் சென்ற போது கீழே விழும் நீர்த்துளிகள் தெறித்து மழையில் நனைவது போன்ற நிலை. ஒரு புறம் நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டம் கண்டு பயம் மறுபுறம் மகிழ்ச்சி எனக் கலவையான உணர்வுகள்.
நதிக்கு மறுகரை கனடா என்று சொன்னேன் நினைவிருக்கிறதா? ஹெலிகாப்டர் நிலையத்தை தாண்டியவுடன் கனடா நாட்டுக்கு செல்ல check post. கனடா நாட்டு விசா உள்ளவர்கள் காரில் சென்று கனடா பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சியை கண்டு மகிழலாம். பாதசாரிகளுக்கு தனியாக Rainbow bridge என்னும் பாலம் உள்ளது. [நாமும் செல்லலாம் என்று கூறினேன். விசாவுக்கு application போட்டு விட்டு பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திரு ஒரு மாதத்தில் கிடைத்து விடும் போய் பார்த்து விட்டு வீடு வந்து சேர் நாங்கள் கிளம்புகிறோம் என்றார் மகள்]
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு நேரெதிரில் ஹெலிகாப்டர் நிலையம்(?!). 4 தூண்கள் அதன் மேல் சதுரமான தளம் அவ்வளவே. கீழே பயணச்சீட்டு கொடுக்கும் இடம். அவரே உதவியாளர். ஹெலிகாப்டர் பைலட் வெளியில் வந்து நம்மை அழைத்து செல்வார். நான் என் கணவர் மற்றும் நண்பர் சென்றோம். என் கணவரின் seat belt clip வேலையே செய்யவில்லை அவர் அலற அலற ஹெலிகாப்டர் [குட்டி கேசவின் மழலையில் TITATO] கிளம்பியது. பெல்டை ஒரு கையிலும் உயிரை மற்ற கையிலுமாக பிடித்துக் கொண்டு பயணித்தார் என்றே சொல்லலாம். [விமானப் பயணம் என்றாலே பயப்படுபவர் என் கணவர்.] நான் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். வானில் இரண்டு முறை நீர்வீழ்ச்சியை சுற்றி வட்டமடித்து கனடா பகுதியிலும் பயணித்து விட்டு வந்தோம்.வானிலிருந்து பார்க்கையில் Horse shoe நீர்வீழ்ச்சியின் மேல் வானவில் தோன்றி spectacular என்ற வார்த்தையை உண்மையாக்கியது. மறக்க முடியாத அனுபவம்.
முன்பொரு முறை Lake Superior, Lake Michigan பற்றி எழுதிய போது அவைகள் கடலளவு பெரியவை என்பதால் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது என்று கூறினேன். அது போல வெல்லண்டு கால்வாய் (The Welland Canal) Lake Ontario மற்றும் Lake Erie ஆகியவைகளை இணைக்கிறது. அந்த இடத்தில் கப்பல்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து செல்வதற்காக 8 கதவுகள் அமைக்கப்பட்டு, கப்பல் வரும் சமயத்தில் திறந்து விடப்படுகின்றன. (Courtesy: Wikipedia)

Bridal veil மற்றும் American நீர்வீழ்ச்சிகளை காண Goat Island என்னும் பகுதிக்கு சென்று அனுமதி சீட்டு,வழுக்காத செருப்பு raincoat (மஞ்சள் நிறம்) வாங்கி கொண்டு ஒரு குகையின் உள்ளே நடந்து பின் (The Cave of the Winds) elevator வழியாக மேலேறினால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் அடிவாரத்தில் நாம் இருப்போம். அருவி நம்மை கண்டிப்பாக குளிப்பாட்டி விடும். அற்புதமான அனுபவம்.
Prospect Point Observation Tower மேலே ஏறி நின்று நயாகரா நீர்வீழ்ச்சியை(Horse shoe falls) மற்றொரு கோணத்தில் காணலாம். Prospect Point பூங்காவிலிருந்தும் பாதசாரிகள் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்க முடியும்.

(https://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk)
நிதானமாக 3 பகல்கள் 2 இரவுகள் சுற்றி சுற்றி நீர்வீழ்ச்சியை ரசித்தது இன்றளவும் மறக்க முடியாத அனுபவம்.
பின்னாளில் ஐரோப்பா ஆஸ்திரேலியா ஆசியா என பல கண்டங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தாலும் முதல் வெளிநாட்டுப் பயணம் முக்கியம் இல்லையா?
வரலாறு முக்கியம் அமைச்சரே…
பின் குறிப்பு :
இந்த நீர்வீழ்ச்சியின் அழகை "ஜோடி" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் காட்டியிருக்கிறார்கள் .( கனடா பக்கத்திலிருந்து)
No comments:
Post a Comment