Saturday, 31 October 2020

முதல் வட அமெரிக்கப் பயணம் [பகுதி - 1]


 

என் இனிய வாசகர்களே |

முதலில் என் வெளிநாட்டு பயண மற்றும் காத்திருப்பு நேர அனுபவங்களை எழுத ஆரம்பித்ததும்  இவ்வளவா? என நானே ஆச்சரியப்படும் விதத்தில் நிறைய அனுபவங்கள் உள்ளன. எனவே பல பகுதிகளாகப் பிரித்து பதிவிட எண்ணி  உள்ளேன் .

அந்தந்த கண்டத்தில் /தேசத்தில் / ஊர்களில் பெற்ற அனுபவங்களை அவ்வப்போதே எழுதி வந்திருக்கிறேன்.

அவைகளுக்கான links ஐயும் இந்த பதிவுகளில் தரத் திட்டமிட்டுள்ளேன். 

என் உள் நாட்டுப் பயண விவரங்கள் பற்றிய பதிவை படித்த நண்பர்களின் கேள்வி: எப்படி எல்லா நிகழ்வுகளையும் தேதிகளையும் தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்? டைரியில் குறித்து வைத்துக் கொள்வீர்களா ?

என் பதில்: இல்லை. அனுபவங்களை நான் மறப்பதில்லை. என் நினைவிலிருந்தே எழுதுகிறேன். சந்தேகங்கள் தோன்றினால் என் கணவர் மற்றும் பிள்ளைகளை கேட்டு உறுதி செய்து கொள்வேன். (ஓரிரு முறைகளே கேட்டிருக்கிறேன்.)

உங்களின் ஆதரவிற்கு நன்றி.

இனி கட்டுரைக்கு செல்வோம் .......

 

வெளிநாட்டுப் பயணங்கள் பலவிதம் – 1 [பகுதி - 1]

Aug 25, 2010-Sep 22, 2010

CHENNAI – BRUSSELS- NEW YORK- SAN FRANCISCO [Jet Airways – American Airlines]

முதல் வெளிநாட்டு பயணம். வழியனுப்பும் குழுவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மகன், என் நண்பர் மற்றும் சகோதரர் இடம் பெற்றிருந்தனர். என் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிளம்பி சென்று விட்டார் தனியாக செல்வதால் துணை தேவை (Guidance needed) என்ற option கேட்டிருந்தோம். சென்னை விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளி சென்றார்கள். நடந்து வந்து guidance கொடுக்க மாட்டார்கள் போல ...எனக்கு தேவைப்படவில்லை.  

(உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கான சேவை அது.)

வழியனுப்பு குழுவினர் சக்கர நாற்காலி தள்ளியவருக்கு 100 ரூபாய்களை கொடுத்து பார்த்து ஏற்றி விடுங்கள் (??) என்று சொல்லி சென்றார்கள். Immigration வரை ஒருவர் அதற்கு பிறகு மற்றொருவர் என அழைத்து சென்று Gate அருகில் விட்டு விட்டு காணாமல் போய் விட்டார்கள்.

அதிகாலை 1.30 க்கு சென்னையிலிருந்து மழைக்கு இடையில் கிளம்பியது. அழகான தமிழில் வரவேற்பு,பாதுகாப்பு விதிகள் என துவங்கியது பயணம் . கிளம்பிய சிறிது நேரத்தில் சாப்பிட கொடுத்தார்கள். (உப்புமா என்று பின்னர் அறிந்து கொண்டேன்).

நான் அலுவலகத்தில் உதவி மேலாளராகப் பணி புரிந்து கொண்டிருந்த காலம். கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு இடது கை சுட்டு விரலில் நகசுற்று வந்திருந்தது. மருத்துவமனைக்கு செல்ல நேரமில்லை. வலியுடன் கிளம்பி விட்டேன். விமானம் கிளம்பியதும் நகசுற்று தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. விடிய விடிய கடுமையான வலி...கையில் எந்த மருந்தும் இல்லை.

அரை குறையாக தூங்கி, விடியற்காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டேன். பல்துலக்கி (நீண்ட பயணங்களில் யாரும் பல் துலக்குவதே இல்லை என பின்னாளில் அறிந்து கொண்டேன்.) காபி வாங்கி குடித்தேன்.

எட்டு மணிக்கு அனைவரையும் எழுப்பி முகம் துடைக்க சூடான நாப்கின்(இடுக்கியால் எடுத்து) தந்து , ஜூஸ் மற்றும் உப்பு நிலக்கடலை தந்தார்கள். (விமானத்தில் சுப்ரபாதம் எல்லாம் பாட மாட்டார்கள். எல்லா விளக்குகளையும் போட்டு விடுவார்கள். வெள்ளை விளக்குகள் எரிந்தால் தூங்கியது போதும் எழுந்திருங்கள் சாப்பாடு கொடுக்க போகிறோம், நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் மங்கலான விளக்குகள் எரிந்தால் அனைவரும் தூங்குங்கள். மக்கள் விடிய விடிய இருக்கைக்கு முன்னால் இருக்கும் சிறிய டிவியில் - INFLIGHT ENTERTAINMENT திரைப்படம் பார்த்துக் கொண்டோ பாட்டு கேட்டு கொண்டோ வருவார்கள். வெளிச்சம் கண்ணை உறுத்தும். போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு தூங்க வேண்டியது தான். நீண்ட பயண நேரங்களில் socks, கண்ணை மூடிக் கொள்ளும் திரை, காதுக்கு வைத்து கொள்ள அடைப்பான்கள் தருவார்கள்.) சற்று நேரத்தில் சுடச்சுட பொங்கல், வடை என காலை உணவு தந்தார்கள்.

3,4,3 என இருக்கைகள் நான் சென்ற விமானத்தில். சென்னையிலிருந்தே BOEING 747.

எனது இடப்புற நான்கு இருக்கைகளில் ஒரு பிரஞ்சு குடும்பம். இந்தியாவிற்கு சுற்றி பார்க்க வந்துவிட்டு France திரும்பிக்கொண்டு இருந்தார்கள். 8 வயதில் ஒரு பெண் 4 வயதில் ஒரு ஆண் என இரு குழந்தைகள். குழந்தைகளின் தகப்பனார் தனக்கும் மற்றவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் வெள்ளெழுத்து கண்ணாடி அணிந்து புத்தகம் படித்து கொண்டே வந்தார். தாயார் பிள்ளைகளின் சண்டைகளை பஞ்சாயத்து செய்வது, தூங்க வைப்பது, சாப்பிட வைப்பது என போராடி கொண்டே வந்தார். இரவு தரையில் படுத்து உறங்கினார். [பின்னாளில் ஒரு முறை என் மகள் தன்னுடைய குட்டி பையனை அழைத்துக் கொண்டு இந்தியா வந்த போது பையன் இவருடைய இருக்கையையும் ஆக்கிரமித்து கொண்டு இடம் தர மாட்டேன் என்று அடம் பிடிக்க தான் தரையில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறினார். இனி மேல் பயணம் செய்யும் போது விமானத்தில் தரை டிக்கெட் என ஒரு பிரிவு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் அம்மா.]

பொங்கலை ஊட்ட ஆரம்பித்ததும் சிறுவன் எழுந்து ஓட ஆரம்பிக்க விமான பணிப்பெண் துரத்த .....

200 gm alpenleibe மிட்டாய் பாக்கெட்டை லஞ்சமாக கொடுத்து பொங்கலை சாப்பிட வைத்தார். அவரது அக்கா தனக்கும் வேண்டும் என கேட்க தர மாட்டேன் என்று இவர் சொல்ல அம்மா சொம்பும் துண்டும்  இல்லாத நாட்டாமையானார். அதற்குள் நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.

குட்டி பெண் பேசிக்கொண்டே வந்தார் என்னுடன். அன்புக்கு மொழி தேவையில்லையே.குட்டி பெண் French மொழியில் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்தார்.(அவரது தாயார் மொழி பெயர்த்து கொண்டே வந்தார்) குட்டி பையன் என் மடியில் அமர்ந்து ஜன்னல் வழியே அருகில் பறந்த JET விமானங்களை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தார். ஜன்னல் இருக்கைக்கான சண்டை வேறு நடந்தது.

Brussels விமான நிலையத்தின் அருகிலேயே மற்றொரு JET விமான தளம் உள்ளது பக்கத்தில் டவுன் பஸ் போல விமானங்கள் பறந்து சென்றன. (பின்னாளில் ஐரோப்பிய பயணத்தில் இந்த ஊரை சுற்றி பார்க்க நேர்ந்தது, அதுவும் குறிப்பாக 2016ல் அங்கே நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கான எதிர்ப்பு தினத்தன்று)

அங்கே விமானத்தை நிலையத்திற்கு வெகு தொலைவில் தள்ளி நிறுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். தண்ணீர் tanker போல பெரிய டேங்கரிலிருந்து மிகப்பெரிய குழாயின் மூலம் எரிபொருளை நிரப்பினார்கள். விமானத்திலிருந்து இறங்கி பேருந்தில் டெர்மினல் செல்லும் வரையில் அருகில் ஏறி இறங்கிய ஜெட் விமானங்களில் புகையின் டிசைன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். (எப்பவும் பராக்கு பார்ப்பதே உன் வேலை _ என் குடும்பம்)

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் ப்ரஸ்ஸல் வரும் பயணிகளை இறங்க சொல்லி, யார் எந்த ஊருக்கு செல்கிறார்களோ அவர்களை சீட்டு குலுக்குவது போல தனி தனி குழுக்களாக்கி மீண்டும் பயணத்தை தொடர வைப்பார்கள்.

இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் செக்யூரிட்டி பரிசோதனை. அதற்கென தனி அறை கிடையாது. வரிசையில் செல்ல செல்ல சோதனை. எனக்கு முன்னால் நம் ஊர் பெண்மணி ஒருவர் ஜரிகை பார்டர் வைத்த புடவை ரவிக்கை அணிந்து வந்திருந்தார்.

Security officer ஆகிருதியான பெண். மெட்டல் டிடெக்டர் கத்தியது. (தங்க நகைகள் அணிந்திருந்தால் இந்தியா தவிர மற்ற  நாடுகளில் சத்தம் கொடுக்கும்.)

S.O: Remove your blouse.

நம் பெண்மணி: why?

S.O: Metal detector beeps, it is gold

நம் பெண்மணி: No gold, it is matching blouse

S.O: No no, gold remove

நம் பெண்மணி: (புடவை பார்டரையும் ரவிக்கை பார்டரையும் காண்பித்து) No no matching matching saree blouse

பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்த பெண்மணியை உள்ளே விட்டார்கள்.

(Security checking சமயத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவம் எனக்கு. அதற்கு தனிப் பதிவே போடுகிறேன்.)

ப்ரஸ்ஸஸ் விமான நிலையத்தில் உடன் பயணித்த சென்னை தம்பதியினருடன் நட்பானேன். அவர்கள் நியூயார்க் சென்று கொலம்பஸ் என்ற ஊருக்கு செல்ல வேண்டியவர்கள். பேசிக்கொண்டே வந்ததில் சரத்குமார் படம் போல, எங்கள் சென்னை வீட்டிற்கு மிக அருகாமையில் வசிப்பவர்கள் என்பது தெரிந்தது. அவரது பெயர் திருமதி ராதா. இன்றளவும் அவரது முகவரி என்னிடம் உள்ளது. ஏனோ தொடர்பு கொள்ளவில்லை.

நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறினேன்.

 

(அனுபவங்கள் தொடரும் .....)

 

 

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...