சென்னை-ஆக்ரா-மதுரா-புதுதில்லி-ரிஷிகேஷ்-தேவபிரயாக்-ஜோஷிமட்-பத்ரிநாத்-கேதார்நாத்-ஹரித்வார்-புது தில்லி
புவியியலாளர்களின் கருத்துப்படி இமய மலைத் தொடர் Young fold mountains எனப்படும் மடிப்பு மலை வகையைச் சேர்ந்தவை. பூமியின் தெற்கில் லெமூரியா என்னும் கண்டம் கடலில் மூழ்கிய போது எடையை சமப்படுத்தும் வகையில் இமய மலைத் தொடர்கள் கடலுக்குள்ளிருந்து மேலெழும்பியதாகப் புவியியலாளர்கள் கூறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தின் (sub continent) சமவெளிகளையும் (plains) திபெத் பீடபூமியையும் பிரிக்கும் மிகப் பெரிய மலைத் தொடர் இது. அடுக்கடுக்காக அமைந்துள்ள இவை நேபாள், சீனா, பாகிஸ்தான், பூடான், இந்தியா ஆகிய நாடுகளின் குறுக்காக அமைந்துள்ளன. உலகின் மிக உயரமான சிகரங்கள் பலவும் இதில் உள்ளன. கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இங்கே உற்பத்தியாகின்றன. Young என்னும் வார்த்தைக்கு ஏற்ப இங்குள்ள பாறைகள் இன்னும் மற்ற மலைகளைப் போலக் கெட்டியாகவில்லை. அடிவாரத்தில் இருந்த கற்களில் சிலவற்றை எடுத்துப் பார்த்த போது சோன்பப்டி போல layer களுடன் உதிர்ந்தது.
ரிஷிகேஷ்
Garhwal Himalayas என்பது உத்தர்காண்ட் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள இமாலய மலைத் தொடர்களின் பெயராகும். [Himalaya= himam + aalayam; Himam= பனி, aalayam = இருப்பிடம்] இந்த மலைகளின் நுழைவாயிலாக ரிஷிகேஷ் அழைக்கப் படுகிறது. இங்கு பலப் பல ஆசிரமங்கள் உள்ளன. யோகா பயிற்சியின் தலைநகரமாக இது விளங்குகிறது. கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களின் புண்ணியத் தலமாக விளங்குகிறது. சார் தாம் (Char dham) என அழைக்கப் படும் கங்கோத்ரி (கங்கை உற்பத்தியாகும் இடம்), யமுனோத்ரி (யமுனை உற்பத்தியாகும் இடம்), பத்ரிநாத், கேதார் நாத் போன்ற இடங்களும் Garhwal himalayas பகுதியில் தான் அமைந்துள்ளன. இந்த நகரம் உத்தர்காண்ட் மாநிலத் தலைநகரான டேராடூனிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
Hrushikesh என்பதை hrishika + isha எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். Hrishikam=senses, Isha = Lord. (இந்திரியங்களை வென்றவன்/தலைவன் எனப் பொருள்)
மறுநாள் அதிகாலை இந்த ஊரை வந்தடைந்து நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள ஆண்டவன் ஆசிரமத்தை அடைந்தோம். வசந்த காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கும் நேரமாக இருந்ததால் வழியெங்கும் பசுமையும் அழகும் கொஞ்சி விளையாடியது. நாங்கள் தங்கியிருந்த இடம் ஊருக்கு வெளியில் சுற்றிலும் பல வண்ண மலர்ச் செடிகளுடன் இருந்தது மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
வழக்கம் போல காலையில் அனைவரும் நதிக்குச் (கங்கைக்கு) சென்று நீராடி விட்டு வரப் பணிக்கப் பட்டோம். (அதற்குள் காலை/மதிய உணவு தயாராகி விடும்) 1-1.5 கிலோமீட்டர் தொலைவில் கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அனைவரும் நடந்து சென்றோம். கரையின் இருபுறமும் மரங்களுடன் கங்கை அந்தப் பகுதியில் அமைதியாக ஆழம் அதிகமில்லாமல் ஓடுகிறது. எங்கள் குழுவைத் தவிர வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதால் அமைதியாக இருந்தது. என் தாயாரின் உதவியுடன் பிள்ளைகளைக் குளிப்பாட்டி நாங்களும் குளித்து துவைத்து… அற்புதமான அனுபவம். (துணி துவைத்துக் காய வைப்பதல்ல நான் குறிப்பிடும் அனுபவம் 😊)
மீண்டும் நடந்து வந்து தங்குமிடத்தில் இருந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டு, உணவை உண்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். பேருந்தில் ஏறி நகரின் மையப் பகுதியின் நெரிசலான பகுதிகளைக் கடந்து வடகிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் லக்ஷ்மண் ஜூலா என்றழைக்கப்படும் தொங்கு பாலத்தைக் (suspension bridge) காணச் சென்றோம். (2020 முதல் இந்தப் பாலம் மூடப்பட்டு விட்டதாக விக்கி மாமா கூறுகிறார்) இந்தப் பாலம் கங்கையின் மேற்குக் கரையில் உள்ள Tapovan என்னும் ஊரை கிழக்குக் கரை ஊரான Jonk உடன் இணைக்கிறது. ராமாயண காலத்தில் லட்சுமணன் சணல் கயிறால் ஆன பாலத்தில் நடந்து சென்று கங்கையைக் கடந்தாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. பின்னாட்களில் நல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாங்கள் குளித்த பகுதியில் அமைதியாக ஆழம் முறைவாக சற்றே குறுகலாக ஓடிய கங்கை இந்தப் பகுதியில் ஆழமும் அகலமுமாக ஓடிக் கொண்டிருந்தது. தொங்கு பாலத்தின் மேல் அனைவரும் தள்ளாடியபடி நடந்து சென்றோம். பாலம் கீழே இறங்கி இறங்கி ஏறியது. பயந்து கொண்டே நடந்து சென்று திரும்பி வந்தோம். அருகிலேயே புதுப் பாலம் கட்டப்பட்டு தற்போது அதில் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தப் பாலத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அகலமான ராம் ஜூலா என்னும் பாலமும் உள்ளது.
அடுத்ததாக கங்கையின் கரையில் அமைந்துள்ள கடைவீதியில் ஷாப்பிங் செய்தோம். அங்கு வாங்கிய மிக மெல்லிய பூரி தேய்க்கும் குழவி (ஒரு பக்கக் கைப்பிடி உடைந்த போதும்) இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. ருத்ராக்ஷம், க்ரிஸ்டல் எனப்படும் கண்ணாடிக் கற்களால் ஆன மாலைகளைப் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். (இந்த ஊர் யோகா பயிற்சியின் தலைநகரம் மற்றும் ஆசிரமங்களுக்கும் புகழ்பெற்றது என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்) அமைதியான இந்த ஊரில் நாமும் வாழ வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் சுற்றிலும் பசுமையுடன் கூடிய ஆசிரமங்கள் தென்பட்டன. நாங்கள் மாலை 6 மணிக்கு நடந்து கொண்டே ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது சின்மயா ஆசிரமத்தின் 6 மணிக்கான மணியோசையைக் கேட்க நேர்ந்த போது .தெய்வீக உணர்வு ஏற்பட்டது. முதுமைக்காலத்தில் ரிஷிகேஷில் வசிக்க வேண்டும் என நினைத்தேன்.
இரவு உணவுக்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் மூடிவதற்குள் செல்ல வேண்டும் என அவசரமாக ஏகாந்த சேவை எனப்படும் இறைவனை உறங்க வைக்கும் நிகழ்வுக்குச் சென்றோம். திருப்பதி போன்ற அமைப்புடைய கோவில், கடவுளின் சிலை என அழகாக இருந்தது. வீணை வாசித்து லாலி பாடியதை நிதானமாக சந்நிதியில் அமர்ந்து கேட்டு, இறைவனை தரிசித்து விட்டு பிரசாதமாகக் கைநிறையக் கிடைத்த உலர்பழங்களை உண்டு விட்டுத் தங்கியிருந்த இடத்திற்கு வந்து ஓய்வெடுத்தோம்.
தேவபிரயாகை @ கண்டமென்னும் கடிநகர்
மறுநாள் அதிகாலையில் கண்டமென்னும் கடிநகர் என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தேவப்பிரயாகையை நோக்கிய எங்கள் 74 கிலோமீட்டர் பயணம் ஆரம்பமாகியது. கார், பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் shared taxi or jeep மூலம் பயணிக்கலாம்.
செல்லும் வழியெங்கும் அடர்த்தியான வனங்களும், அழகான சிறு கிராமங்களும், ஆங்காங்கே ஆசிரமங்களும், படிக்கட்டுக்கள் போல அமைக்கப்பட்ட விவசாய நிலங்களுமாக (terraced fields) அருமையான காட்சிகள் தென்பட்டன. இந்திய ராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் குறுகலான மலைச் சாலையில் பயணம் செய்தோம். வழியில் எங்கெங்கும் பல வண்ணப் பூக்கள் தென்பட்டன. ஆங்காங்கே பேருந்தை நிறுத்திச் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டே முன்னேறினோம். சுற்றுலா செல்ல ஏற்ற சமயம் என்பதால் வழியெங்கும் நிறையப் பேருந்துகள் தென்பட்டன.
பண்டிட் நிலைக்கான வகுப்பில் (ஸம்ஸ்கிருதம்) மஹாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட ரகுவம்சம் என்னும் காவியத்தின் ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. அதில் இமயமலையும் கங்கையும் மிகவும் சிறப்பித்து எழுதப் பட்டுள்ளன. திலீபன் என்னும் அரசன் பல காலம் குழந்தை வரம் இல்லாமல் தன் குலகுருவான வசிஷ்டரை சந்தித்து, காமதேனுவின் குழந்தையான நந்தினியை வழிபட்டு பிள்ளை வரம் பெறுகிறான். அவனே “பரதன்”. அவனது பெயரை ஒட்டியே நம் நாடு பாரதம் எனப் பெயர் பெற்றது.
வசிஷ்டரின் ஆசிரமம் உள்ள இடம், திலீபன் வசித்த இடம், பசுவை இமய மலையின் வனத்தில் மேய்த்தல், அங்கு பெருக்கெடுத்து மிகுந்த சத்தத்துடன் விழும் கங்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வனப்பு எனக் கலாரசனையான உவமைகளுடன் மிக அருமையாக விளக்கியுள்ளார் கவி. [உவமா காளிதாச: என்பது அவருக்களிக்கப்பட்ட பட்டப் பெயர். உவமை என்றாலே காளிதாசர் தான்]
அவரது சில வர்ணனைகளை மட்டும் உங்களுடன் இங்கே பகிர விரும்புகிறேன். சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அரசன் வெற்றியுடன் திரும்பி ராஜபாட்டையில் நடந்து வரும்போது பெண்கள் வறுத்த தானியங்களை வாரி இறைப்பது போலப் பூக்களை திலீபனின் தலையில் இறைத்தனவாம். (தற்காலத்தில் அரிசியை மஞ்சளுடன் சேர்த்து அட்சதை போடுவது போல வறுத்த தானியங்களை வாரி இறைத்தல் என்பது பண்டைய கால நடைமுறை).
மற்றொரு உவமை. காமதேனு சிங்க உருவில் மாயாவியாக ஒரு குகை வாயிலில் தேவலோகப் பசு காமதேனுவின் மகள் நந்தினியை (மாட்டை) தன் வாயில் கவ்விக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அந்தக் குகையானது கங்கை பெரு நீர்வீழ்ச்சியாகத் தரையில் விழும் போது தெறிக்கும் நீரால் வளர்ந்த அடர்த்தியான புற்களின் அருகில் உள்ளது என்கிறார் கவி. திலீபன் காமதேனுவை விட்டு விடு என வேண்டுகிறான். சிங்கம் இங்கே பார்வதிக்கு மிகவும் பிரியமான தேவதாரு மரத்துக்குக் காவலாக என்ன நியமித்துள்ளார். முன்பொரு சமயம் ஒரு யானை தன் தும்பிக்கையை இந்த மரத்தில் உரசிய போது அதன் தோல் பிய்ந்து போயிற்று. அதைக் கண்டதும் பார்வதி அசுர்களுக்கெதிரான போரில் விஷ அம்பு கார்த்திகேயன் மேல் பாய்ந்த போது எப்படித் துடித்தாளோ அது போலத் துடித்துப் போனாள். ஆகையால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் கிடைத்த உணவையும் விட மாட்டேன் என்கிறது சிங்கம். கங்கையும் இமயமலையும் இன்றளவும் அப்படியே தான் உள்ளன. வழியில் காண நேர்ந்த இமயமலையும் கங்கையும் எங்கோ என்னை இழுத்துச் சென்று விட்டன.
நிற்க.
தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகக் கருதப்படும் அலகானந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடம் தேவப்ரயாகை. இங்கே சங்கமித்த பிறகு “கங்கை” எனப் பெயர் பெறுகிறது. அதன் பயணம் தொடர்ந்து அலகாபாத்தை அடையும் போது யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளுடன் சங்கமிப்பதால் “திரிவேணி சங்கமம்” எனப்படுகிறது. இங்கிருந்து கங்கை எனப் பெயர் பெரும் நதி உத்தரப்பிரதேசத்தின் சமதளங்களை நோக்கிப் பாய்ந்து அந்தப் பகுதியை வளப்படுத்துகிறது.
ப்ரயாக் என்றால் இரண்டு சம அளவிலான நதிகளின் சங்கமம். உத்தர்காண்ட் மாநிலத்தில் அலகாந்தாவுடன் ஐந்து நதிகள் சங்கமிக்கின்றன.(பஞ்ச ப்ரயாக்) பத்ரிநாத் செல்லும் வழியில் நாம் காணும் முதல் ப்ரயாக் “தேவப்ரயாக்”.
அலகானந்தா + பாகீரதி -> தேவப்ரயாக்
அலகானந்தா + தௌலிகங்கா -> விஷ்ணுப்ரயாக்
அலகானந்தா + நந்தாகினி ->நந்தப்ரயாக்
அலகானந்தா + பிண்டர் -> கர்ணப்ரயாக்
அலகானந்தா + மந்தாகினி -> ருத்ரப்ரயாக்
அலகாநந்தாவும் பாகீரதியும் கூடும் இடம் பேருந்து நின்ற இடத்திலிருந்து ஏறக்குறைய 200 அடி கீழே. இரண்டு நதிகளும் மிகுந்த வேகத்துடன் சுழித்துக் கொண்டு வந்து ஒன்றாகக் கலக்கின்றன. அந்தப் பகுதியில் நிற்கவே பயமாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் தான். நீருக்குள் இறங்கிக் குளிப்பதெல்லாம் நடக்காது. மிகுந்த வேகத்துடன் சுழித்துக் கொண்டு கங்கையாக மாறும் நதியின் கரையில் பிடித்துக் கொண்டு நிற்கத் தடுப்புப் கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. அனைவரும் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றோம். தவறி விழுந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது. எங்கள் குழுவுடன் சமைப்பதற்காக வந்த உதவியாளர் ஒருவர் பெரிய காது வைத்த தூக்கில் தண்ணீரை முகர்ந்து எங்கள் அனைவரின் தலையிலும் ஊற்ற…அது தான் குளியல்.
குளித்து முடித்ததும் நதியின் குறுக்காக அமைந்துள்ள பாலத்தைக் கடந்து இந்தச் சிறிய ஊரின் மேடான பகுதியில்108 படிக்கட்டுக்களுடன் அமைந்துள்ள “ரகுநாத்ஜி” கோவிலை அடைந்தோம். தேவப்ரயாகை அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் 108 வைணவத் தலங்களுள் ஒன்று. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இந்தக் கோவிலின் கடவுளர்கள் நீலமேகப் பெருமாள்/ புருஷோத்தமன் மற்றும் புண்டரீகவல்லி தாயார் ஆவர்.
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-
ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்றருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.
-பெரியாழ்வார்
இந்த ஆலயம் ஆதிசங்கரரால் நிறுவப் பட்டதாகக் கூறப்படுகிறது. கலிங்கச் சிற்பக் கலையின் அடைப்படையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்குள்ள கல்வெட்டுக்கள் இதன் சரித்திரத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. பெரியப்பா விவரங்கள் கூற நாங்கள் கடவுளை தரிசித்தோம். [நாமே ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா என்பதால் எந்த அவசரமும் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் நன்றாக அனுபவித்துப் பார்க்க முடிந்தது]
மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி பத்ரிநாத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தோம். (இரண்டு நாட்கள் பயணம் செய்த பிறகு தான் பத்ரிநாத் வரும்)காலையில் சமைத்து எடுத்து வரப்பட்ட உணவு மதியம் ஒரு பூங்காவில் தரப்பட்டது. சற்று நேரம் இமயமலையின் அழகைக் கண்டு விட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். வழியெங்கும் மரங்களில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. கத்திரிப்பூ நிற வாதநாராயண மலர்களை முதன்முதலாக அங்கே கண்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். [இம்முறை கேமரா கடந்த பயணத்தில் இருந்ததை விடbetter என்பதால் புகைப்படங்கள் நிறைய எடுத்தோம்]
சூரிய ஒளி இரவு எட்டு மணி வரை இருந்ததால் அது வரை தினமும் பயணம் செய்தோம். மலை மேலமைந்த ஆபத்தான சாலை என்பதால் மணிக்கு 15-20 கிலோமீட்டர் வேகத்தில் தான் பேருந்து செல்லும். 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிபில்கோடி(Pipilkoti) என்னும் அழகிய சிறு கிராமத்தை இரவு சென்றடைந்தோம். பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கிச் செல்கிறார்கள்..jpg)
.jpg)
இளைப்பாறிய நேரத்தில் எங்களுடன் பயணித்த நண்பரின் உறவினர் (ஹோமியோபதி மருத்துவம் தெரிந்தவர்) வயிற்றின் செரிமான சக்தியைப் பாதுகாக்கும் வகையில் வெள்ளை நிறக் குளிகைகளை என்னிடம் தந்து அனைவருக்கும் தருமாறு கூறினார். மீதி இருந்த குளிகைகளை நானே விழுங்கி விட்டேன். (அதிக dosage)
இரவு உணவாக சாதமும் ராஜ்மா பீன்ஸ் குழம்பும் தரப்பட்டது. மலைப் பிரதேசங்களில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உணவுப் பொருட்கள் வேக அதிக நேரமாகும். சாதம், ராஜ்மா இரண்டுமே சரியாக வெந்திருக்கவில்லை. நடுவில் தொட்டி முற்றத்துடன் கூடிய விடுதி. எங்கள் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினார்கள். மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரமாக (அப்போதே மணி பத்து இருக்கும்) உறங்கச் சென்றோம்.
ஜோஷிமட்
மறுநாள் அதிகாலை திட்டமிட்டபடி கிளம்பினோம். வழியில் மற்றொரு வைணவத் தலமான “திருப்பிரிதி@ஜோஷிமட்” டை அடைந்தோம். இமய மலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சிப் பகுதி இது. பத்ரிநாத் கோவிலுக்குப் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் இமயமலையில் மலை ஏறுபவர்களுக்கும் Valley of flowers செல்பவர்களுக்கும் இது தான் ஆரம்ப நுழைவாயிலாக உள்ளது இந்த ஊர். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களுள் ஒன்று இங்குள்ளது. ஒவ்வொரு திசைக்கும் ஒரு மடம் அதற்கொரு வேதம் எனப் பிரித்தளித்து அந்த மடத்தைச் சேர்ந்தவர்கள் தமக்களிக்கப் பட்ட வேதத்தைக் காப்பாற்றவும் வளர்க்கவும் பாடுபட வேண்டும் எனப் பணித்தார்.
[தெற்கு – சிருங்கேரி-யஜுர், வேதம்
மேற்கு – துவாரகா -சாம வேதம்
வடக்கு – ஜோஷிமடம் – அதர்வண வேதம்
கிழக்கு – புரி – ரிக் வேதம்]
ஜோஷிமட் ஆலயத்தின் முக்கிய தெய்வம் ஸ்ரீ நரசிம்மர் ஆவார். பத்ரிநாத் ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் பத்ரிநாத் கோவில் பனிக்காலத்தில் ஆறு மாதங்கள் மூடப்பட்டிருக்கும் போது பத்ரி நாராயணரின் சிலை இந்தக் கோவிலில் வைக்கப்பட்டுப் பூஜிக்கப் படுகிறது. 108 வைணவத் திருத் தலங்களுள் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பு. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிறப்புடையது இந்தக் கோவில். நரசிம்மரைத் தரிசித்து விட்டு பத்ரி நாராயணரை தரிசிப்பதற்கான அடுத்த கட்டப் பயணம் தொடர்ந்தது. இமயமலையின் அடுக்கடுக்கான தொடர்களுக்கிடையில் பயணம். குறுகலான சாலை.
இந்திய ராணுவத்தால் பராமரிக்கப்படும் இந்தச் சாலைகள் மலையைக் குடைந்து அமைக்கப் பட்டுள்ளன. ஒரு புறம் உயர்ந்த மலைத் தொடரும் மறுபுறம் அதல பாதாளத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் கங்கையும் என ஆபத்தான சாலையில் பயணம். மேலே செல்லச் செல்ல உச்சியில் பனி படர்ந்த மலைகள் தென்பட்டன. வழியெங்கும் சாலையின் நடுவே பனி உருகி நீர் சிறு சிறு நீர்வீழ்ச்சிகள் போலப் பெருகிக் கொண்டிருந்ததால் பேருந்து மிக மெதுவாகச் சென்றது. வசந்த காலம் காட்சிகள் தென்பட்டன. ஆங்காங்கே அடர்ந்த வனங்களும் கூடத் தென்பட்டன. வழியெங்கும் கண்ட இயற்கைக் காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளில்லை என்னிடம்.
பத்ரிநாத்
சென்று சேர்வதற்குள் பத்ரிநாத் பற்றி ஒரு சிறு அறிமுகம்.
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
என திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்ற தலம் இது.
திருவதரி/பத்ரிகாசிரமம் என ஆழ்வார்களால் பாடப் பெற்ற பத்ரிநாத் சுற்றிலும் பனி படர்ந்த நர, நாராயண மலைகளுக்கிடையில் அலகாநந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி (Garhwal) கர்வால் ஹிமாலயப் பகுதியில் உள்ளது. வைணவர்கள் வழிபடும் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று என்பதால் புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து ஒன்பது (9) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள “நீல்காந்தா” மலைகளுக்குச் செல்பவர்கள் மலையேற்றத்திற்காக இங்கே வருகிறார்கள். (Mountaineering) 14 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றால் மிக அருமையான பூந்தோட்டம் (Valley of flowers) ஒன்றும் உள்ளது. எங்கள் பயணத் திட்டத்தில் இந்த இடம் இல்லை என்பதால் நாங்கள் செல்லவில்லை.
பத்ரிநாத் உத்தர்கண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். (நகரப் பஞ்சாயத்து) Chardham (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி)களில் ஒன்று இந்த இடம். பனிப் புயல்களாலும் பூகம்பங்களாலும் பலமுறை அழிந்து போன இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கோவிலில் வேலை செய்பவர்கள், பூசாரிகளின் குடும்பங்கள் தங்கிய 20 குடிசைகளுடன் ஆரம்பித்த இந்த இடம் தற்சமயம் பல லட்சம் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
மாலை நான்கு மணியளவில் இந்தச் சிறு நகரை அடைந்து, தங்குமிடத்தில் பெட்டிகளை வைத்து விட்டு நேராக பத்ரி நாராயணரை தரிசிக்கக் கிளம்பினோம். மரத்தாலான அந்த விடுதியின் உட்புறம் வெயில் படாதால் குளிராக இருந்தது. கடவுளைத் தரிசிக்க வருவதற்கு ஏற்ற பருவ காலம் என்பதால் மக்கள் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்திறங்கிக் கொண்டே இருந்தார்கள். [எங்களுக்கு அடுத்ததாக ராஜஸ்தானிலிருந்து பக்தர்கள் வந்திறங்கியது இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த Dormitoryல் தான் அவர்களும் தங்கினார்கள். கத்திக் கத்திப் பேசினார்கள்.] பேருந்து நிலையத்தைச் சுற்றிப் தங்கும் இடங்களும் பல விதமான கடைகளும் உணவகங்களும் மருத்துவமனையும் தென்பட்டன. அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள ஊர். (பல வருடங்களுக்கு முன்பே)
அலகாந்தாவின் மேல் அமைந்த பாலத்தைக் கடந்தால் கோவில். கோவிலின் வாசலில் வெந்நீர் ஊற்று உள்ளது. (தப்த் குண்ட் என அழைக்கப்படும் கந்தக நீரூற்றுக்கள்) அங்கே குளித்து விட்டுக் கோவிலுக்குள் செல்ல வேண்டும். மிகுந்த வெப்பத்துடன் வெளிப்படும் நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என்பதால் பெரிய தொட்டியில் சேமித்துப் பின் பயன்பாட்டுக்குத் தரப்படுகிறது. சிறு குளம் போலப் படிக்கட்டுகளுடன் அமைந்த தொட்டியின் படிகளில் அமர்ந்து குளிக்கலாம். ஆடவர் பெண்டிருக்கென தனித் தனிப் பகுதிகள் உள்ளன.
குளிக்கச் சென்ற சமயத்தில் அதிகப் படியாக மதியம் நான் முன் தின்ற ஹோமியோபதி மருந்தும் வேகாத சாதம் ராஜ்மாவும் சேர்ந்து தன் வேலையைக் காட்டத் தொடங்கின. கடும் வயிற்றுப் போக்கு ஆரம்பிக்கவே கோவிலுக்குச் செல்லாமல் தங்குமிடத்திற்கு எங்கள் குடும்பம் மட்டும் (என் பெற்றோர் உட்பட) திரும்பினோம். நிலைமை கட்டுக் கடங்காமல் போகவே மருத்துவரான என் தந்தை oral dehydration திரவத்தைத் தர ஆரம்பித்தார். சமதளத்தில் (plains) வசிப்பவர்கள் மலையில் Glucose ஏற்றிக் கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என என் தந்தையார் கூறினார்.
அப்போது தொடங்கி மறுநாள் முழுவதும் என் சுய நினைவில்லாமல் படுத்திருந்தேன். (வயிற்றுப் போக்கு நின்ற பிறகும்). என் தந்தையார் என் வாயில் oral dehydration திரவத்தை அவ்வப்போது ஊற்றிக் கொண்டும் என் pulseஐ கணக்கிட்டுக் கொண்டும் அருகிலேயே அமர்ந்திருந்தது மட்டுமே என் நினைவில் உள்ளது. Dormitory போன்ற பெரிய அறையில் அனைவரும் தங்கி இருந்தோம் என்பதால் மக்கள் நடமாட்டம் பேச்சுக் குரல்கள் இருப்பது தெரிந்தது ஆனால் யார் வந்தார்கள் என்ன பேசினார்கள் எதுவும் தெரியாது. மதியம் இரண்டு மணியளவில் கூட மரத்தாலான அந்த அறையில் குளிராக இருந்தது. (எனது காய்ச்சலும் காரணமாக இருக்கலாம்) வெளியில் 22 டிகிரி வெயில். வெளியில் போய் ஒரு சிறு பாலத்தின் மேல் என் தந்தையின் மடியில் தலை வைத்து சுள்ளென்ற வெயிலில் மயக்கமாக படுத்துக் கிடந்தது மட்டும் நினைவில் உள்ளது.
என்ன நடந்தது எப்படி எங்கள் குடும்பமும் நண்பர்களும் அன்றைய தினத்தைக் கழித்தார்கள் என்பதைப் பின்னால் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நாங்கள் அங்கிருந்த தினம் அமாவாசை என்பதால் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய விரும்பிய ஆண்களை என் பெரியப்பா அலகாநந்தாவிற்கு அழைத்து சென்றார் எனவும் தண்ணீரில் கை வைக்க முடியாத அளவில் குளிர்ந்து இருந்ததாகவும் மிகுந்த சிரமப் பட்டு பூஜைகளை முடித்ததாகவும் கூறினார்கள். கோவிலுக்கும் பல முறை சென்று வரிசையில் நின்று கடவுளை வணங்கினாலும் கூட்டம் காரணமாக சில நொடிகள் மட்டுமே தரிசிக்க முடிந்தது என்றும் கூறினார்கள்.
மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் உடல் சற்றே நலம் பெற்றுக் கண் விழித்தேன். எட்டு மணிக்கு கேதார்நாத் கிளம்ப வேண்டும் என்பதால் பல் விளக்கி வேறு உடை மாற்றிக் கொண்டு குளிரில் நானும் என் கணவரும் மட்டும் கோவிலை நோக்கிக் கிளம்பினோம். அந்த நேரத்திலேயே இருள் விலகி வெளிச்சமாக இருந்தது. எங்களுக்கு முன்பே என் பெற்றோர் கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். வழியெங்கும் சிறு கடைகளில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வாணலியில் ஜிலேபிகளை சுட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தர்கள் அவற்றை வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானமாக வழங்கிக் கொண்டே நடந்து சென்றார்கள். தங்க நிறத்தில் நூல் போல மெல்லியதாக பார்க்கவே அழகான அந்த ஜிலேபிகளை சாப்பிட ஆசையாக இருந்தாலும் பிச்சைக்காரர்களுக்குத் தானமாகத் தருவதற்கானவை அவை என்பதால் என் ஆசை நிறைவேறவில்லை.
சோவென்று ஆர்ப்பரித்து ஓடும் அலகாநந்தா பாலத்தைக் கடந்து கோவிலுக்கு சென்ற சமயம் திருப்பள்ளியெழுச்சி சேவை ஆரம்பம். பின்புறம் பனி படர்ந்த சிகரங்களை உடைய மலைத் தொடர்களும் முன்புறம் பாய்ந்தோடும் அலகாநந்தாவும் உள்ள அந்தக் கோவிலின் அமைப்பு பௌத்த விஹாரங்களைப் போன்ற அமைப்பில் உள்ளது. கோவிலில் கடவுளர்கள் கல் வடிவில் உள்ளார்கள். (சாலிக்கிராமம்) குளிர்காலம் தொடங்கியதும் ஜோஷிமடத்திற்கு பத்ரிநாராயணர் சென்று விடுகிறார். வெகு சிலரே இருந்ததால் கடவுள் சந்நிதானத்திற்கு முன்பாக 20 நிமிடங்கள் நின்று வணங்கினோம். பிரசாதமாக் கை நிறையக் கிடைத்த கல்கண்டு, பாதாம், முந்திரி கலவையைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.
அனுபவங்கள் தொடரும்...
No comments:
Post a Comment