அக்டோபர்
22, 2022 - ஏப்ரல் 18, 2023
BRITISH
AIRWAYS
CHENNAI
– HEATHROW (LONDON) – SAN FRANSCISCO -PHOENIX
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் உடல் நிலை, கொரோனா போன்ற பல காரணங்களால் மிக மிக அத்தியாவசியமான உள்நாட்டுப் பயணங்களை மட்டுமே மேற்கொண்ட (கடைசி வெளிநாட்டுப் பயண முடிவு நாள் பிப்ரவரி 6, 2019) எங்களது ஆறாவது வட அமெரிக்கப் பயணம் நவம்பர் 2022ல் என முடிவு செய்யப்பட்டது. (எங்களால் அல்ல :) )
பயண நோக்கம் மருமகளின் வளைகாப்பு, சீமந்தம்,
தலைப் பிரசவத்திற்கு உதவுவது ஆகியவைகளே.
ஏற்கனவே பலமுறைகள் பயணம் செய்திருந்தாலும் இம்முறை எப்படி 22 மணி நேர விமானப் பயணத்தை பிரச்சினை இல்லாமல் மேற்கொள்ளப் போகிறோம் எனச் சற்றே பதட்டமாக இருந்தது. இடையில் மூன்று வருடங்கள் வீட்டை விட்டு எங்கும் செல்லாதது ஒரு காரணம். மற்றொன்று பயண நேரம் முழுவதும் முகக் கவசம் அணிந்தபடி இருக்க வேண்டும் என்பது.
இடைப்பட்ட மூன்று வருட காலத்தில் என் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரைகளை விரிவாக எழுதி முடித்தேன். (அக்டோபர் 2020-அக்டோபர் 2022) சுலபமாகக் குறுகிய காலத்தில் எழுதி முடித்து விடலாம் என நினைத்திருந்தேன் ஆனால் முழுவதுமாக எழுதி முடிக்க இரண்டு வருடங்கள் ஆயின. (தற்சமயம் 2013 முதல் எழுதிய என் பதிவுகள் அனைத்தையும் முக்கியத் தலைப்புக்களின் கீழ் பிரித்து புகைப்படப் புத்தகமாக (என் வருங்கால சந்ததியினர் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில்) அச்சிட்டு விட்டேன்)
பயணத்திற்காகப் பல முன்னேற்பாடுகள் எப்போதும் போல.
முக்கியமான முதல் வேலையாக மகள் வழிப் பேரன்கள் பிறக்கும் முன்பு என் பாட்டி, அம்மா, பெரியம்மா, நான் என நால்வரும் வீட்டில் எங்கள் பரம்பரையாகப் பின்பற்றப்படும் பிரசவ பத்திய முறைகள் பற்றிய குறிப்புக்களைக் கலந்தாலோசித்து எழுதி digitalize செய்து வைத்துள்ள fileஐத் தேடித் கண்டு பிடித்தேன். (வெளிநாட்டில் பிள்ளைப்பேறு நடைபெற்றாலும் எப்படி சமாளிப்பது எனக் கூடுதலாக என் அனுபவங்களையும் அதில் எழுதியுள்ளேன்)
பத்திய முறைக் குறிப்புக்களைப் படித்துத் தேவையான பொடி வகைகள், மருந்துகள், வற்றல்கள், சிறு குழந்தைக்குத் தேவையான பொருட்கள் என (எங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு மகளின் பிரசவத்திற்காக கனடா செல்ல வேண்டி இருந்த) எதிர்வீட்டுத் தோழியுடன் கலந்தாலோசித்து தேடித் தேடி வாங்கி சேகரித்தேன் (தோம்)
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு கறிவேப்பிலை, துளசி, தூதுவளை, வெற்றிலை, அவரை, வெண்டை, கொத்தவரை என ஆரம்பித்து விதம் விதமான மருத்துவ குணம் கொண்ட காய்களை, இலைகளை, மருந்துச் சாமான்களை, பருப்புக்களை வெயிலில் காய வைத்துப் பொடியாக்கி, மருந்தாக்கி, லேகியமாக்கி... கிளம்புவதற்குச் சில நாட்களுக்கு முன்பு கூரியரில் அனுப்பி விட்டுப் பயணத்திற்குத் தயாரானோம்.
இடையிடையே வளைகாப்பு சீமந்தத்திற்குத் தேவையான பொருட்களையும் சேகரித்தேன்.
திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகக் கிளம்ப வேண்டிய சூழ்நிலை (மகளின் புது மனை புகுவிழா) ஏற்பட்டதும் முன்னேற்பாட்டு வேலைகளை அவசரமாக முடித்து விட்டுக் கிளம்பினோம். (Travel Insurance, medical check up…)
தற்சமயம் நாங்கள் வசிக்கும் இல்லம் சென்னைக்கு மிக அருகில் சென்னை பெங்களூர் மார்க்கத்தில் சவீதா மருத்துவமனையைத் தாண்டி 4.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் அதிகாலை 5.30 மணி விமானத்தைப் பிடிக்க முதல் நாளே கிளம்பி தாம்பரத்தில் இருக்கும் என் சகோதரரின் இல்லத்திற்குச் (அவரது அழைப்பின் பேரில் தான்) சென்று விட்டோம்.
நாங்கள் சான் பிரான்ஸிஸ்கோ செல்வதற்கு அடுத்த நாளே தீபாவளி, அதற்கடுத்த இரண்டு நாட்களில் மகளது புதுமனை புகுவிழா, அதற்கடுத்த மாதத்தில் வளைகாப்பு என வரிசையாக சுப நிகழ்வுகள் என்பதால் அனைவருக்கும் புத்தாடைகள், வளைகாப்பு, சீமந்தத்திற்கு தேவையான பொருட்கள் என ஐந்து பெரிய பெட்டிகளுடன் (extra baggage $170 கட்டினோம்) விமானம் ஏறினோம்.
(ஒருவர் 23kg x 2 பெட்டிகள், 7kg x 1 பெட்டி மற்றும் laptop bag (அ) ladies handbag ஆகியவற்றை எடுத்து செல்ல BA அனுமதிக்கிறது)
ஏற்கனவே லண்டன் ஹீத்ரோ சென்றிருக்கிறோம் என்றாலும் இம்முறை உள்ளேயே வேறு விமானம் மாற வேண்டும் என்பதால் கைப்பெட்டிகளுள் ஒன்றையும் check-in செய்கிறேன் என்று எவ்வளவோ கூறியும் என சென்னை விமான நிலைய check-in counter பெண்மணி மறுத்து விட்டார்.
சென்னையில் விமானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் கணத்தில் விமானப் பணிப் பெண்ணின் "வாங்கம்மா வணக்கம்மா" என்ற குரலைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். 26Aவா? வலது பக்கமா போங்கம்மா என வழி காட்டினார்.
Dreamliner என அழைக்கப்படும் Boeing 786 ரக விமானம் அது. ஏற்கனவே இது போன்ற விமானத்தில் பயணித்திருந்தாலும் இந்த விமானம் சற்றே வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. 3-3-3 என இருக்கைகள். (விமானக் கம்பெனியின் தேவைக்கேற்ப Boeing/Airbus ஆகியவை இருக்கை அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொடுக்கும்)
பல இருக்கைகள் காலியாக இருந்தன. கைப்பெட்டியை எடை கூடப் பார்க்காமல், check-in செய்யாமல் எடுத்து செல்லுங்கள் என ஏன் கூறினார்கள் என அப்போது புரிந்தது.
பயணிகளில் பெரும்பாலோர் ஆங்கிலேயர்கள் என்றாலும் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் லண்டனை அடையும் வரை கூறப்பட்டன. ஆனந்த் மற்றும் சரண்யா இன்று உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்களை அணுகுங்கள் என்று அறிவித்தார்கள்.
In-flight entertainment படு அறுவை. பழைய திரைப்படங்கள், பெயர் தெரியாத பிரிட்டிஷ் படங்கள், நாடகங்கள். குறிப்பிடும் படி எதுவும் இல்லை.
Jain vegetarian உணவு என்பதால் பால், தயிர், வெண்ணை, வெங்காயம், பூண்டு, மசாலா, காரம் என எதுவும் இல்லாமல் சாதம், பருப்பு, சப்பாத்தி, பருப்பு, ரொட்டி, காய்கறி, காய்கறியிலிருந்து எடுத்த வெண்ணெய்,Fruit salad என சாத்வீகமான உணவுகளைத் தந்தார்கள்.
Oats biscuits, cookies (Made in Scotland), orange apple juices என snacks.
எங்கள் இல்லத்தில் TATA SKY தொடர்பை ஆரம்பித்த புதிதில் OTT யில் (Over-The-Top media service) ஒரு மாதம் இலவச சேவை வழங்கினார்கள்.(நமக்குப் பிடித்திருந்தால் அடுத்த மாதத்திலிருந்து கட்டணம் கட்டிப் பார்க்கலாம்) அச்சமயம் பல டாக்குமெண்டரி தொடர்களைக் கண்டேன். அதில் ஒன்று Taj in-flight catering service பற்றியது.
எப்படி ஒவ்வொரு விமானத்திற்கு தேவையான உணவுகளை தயாரித்து சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்பது ய நிகழ்ச்சி. சமையலறை என்பது மிகப் பெரிய கூடம். பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சைவம், அசைவம் (அவற்றுள்ளும் பல உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தொடர்பில்லாத தொலைவில்) உணவு தயாரிக்கப் படுகிறது. காய்கறி, மாமிசம், மீன் என நறுக்கும் board கூட வெவ்வேறு நிறங்களில் உள்ளன
இந்த டாக்குமென்டரியைக் காணும் முன்பு விமானத்தில் சாப்பிடவே யோசிப்பேன். (அந்நியன் படம் நினைவுக்கு வரும்)
இம்முறை ரசித்தே சாப்பிட்டேன். (பருப்பு, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் அதே பருப்பு தான்😊)
சென்னை - ஹீத்ரோ பத்து மணி நேரங்கள்; அங்கிருந்து சான் பிரான்ஸிஸ்கோ பத்து மணி நேரங்கள்.
ஜன்னல் இருக்கையின் வழியே விமானத்தின் இறக்கையில் என்ஜினுக்கு அருகில் கருப்பாக புகை போல படியத் தொடங்கியதைக் கண்டதும் என்ஜினில் தீ பிடித்து விட்டதோ என மிகவும் பயந்து போனேன். Stewardஐ அழைத்துக் காண்பித்தேன். (பெண்- Air hostess, ஆண்-Steward)
காற்றில் உள்ள அழுக்குகள் தான் அவ்வாறு படிகின்றன கவலைப்பட ஏதுமில்லை என்கிறார். சிறிது நேரத்தில் அந்த கறுப்புத் துகள்கள் காணாமல் போயிருந்தன.
இன்னும் சிறிது நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கப் போகிறோம் எனத் தமிழில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கினோம்.
விமானம் தாழப் பறந்து சென்ற போது ஊருக்கு வெளியிலும் உள்ளேயும் தேம்ஸ் நதி பாயும் அழகைக் காண முடிந்தது. சூரிய ஒளி பட்டு நதி மினுமினுத்தது. மிக அருகில் நகரைச் சுற்றிப் பார்த்திருந்தாலும் பறவைப் பார்வையில் காண்பது கூடுதல் அழகு. [லண்டன் மற்றும் அதன் புறநகரின் அழகினை ஏற்கனவே என் ஐரோப்பியப் பயணக் கட்டுரையில் விவரித்திருக்கிறேன்]
டெர்மினல் 5ல் இறங்கி அதே டெர்மினலில் மாறும் வண்ணம் எங்கள் பயண சீட்டுகள் வாங்கப் பட்டிருந்தன. (அனைத்து transferகளும் ஐந்தாவது டெர்மினலில் தான்)
இடையில் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே. அடுத்த விமானத்தில் ஏற 40 நிமிடங்களுக்கு முன்பாக Gateஐ கண்டு பிடித்து செல்ல வேண்டும் என்பதால் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க முடியாது.
இங்கும் வித்தியாசமான அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது.
ஒரே டெர்மினல் என்றாலும் உலகின் மிகப் பெரிய / பிஸியான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று என்பதால் விமானம் எந்த Gateல் வந்து நின்று எங்களை ஏற்றி செல்லும் என்பது 40 நிமிடங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப் படும் என பலகையில் இருந்தது. A, B, C எனப் பல பிரிவுகள் அவைகளில் பல gates. அதிலும் A 32-40 என்பது போல இருந்தது.1-31 எங்கே? நிறையக் குழப்பங்கள்.
மூன்று
மாடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள Elevatorகளில் ஏறி இறங்கி, நடந்து
ஒரு வழியாக security checkஐ
முடிந்தோம். மீண்டும் மையமாக ஒரு notice board அருகிலேயே காத்திருந்தோம்
நியூயார்க், லண்டன் போன்ற பழமையான விமான நிலையங்களில் தான் உயரமான elevatorகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன என நினைக்கிறேன்.
உதாரணமாக இந்தியா (சென்னை, பெங்களூரு, புதுடில்லி, மும்பை etc), ஐரோப்பிய நகரங்கள், சிங்கப்பூர் என விமானங்கள் லண்டன் வருகின்றன என வைத்துக் கொள்வோம். இதிலிருக்கும் பயணிகள் வெவ்வேறு ஊர்களுக்கு / நாடுகளுக்குச் செல்ல வேண்டும். ஒரே ஊருக்குச் செல்லும் பயணிகளை மொத்தமாக ஒரு விமானத்தில் ஏற்றி விடுவார்கள்.
இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு connecting flight எண் BA 123 எனவும் மற்றொரு ஊருக்கு IC 234 எனவும் மற்றொரு நாட்டுக்கு AL 666 என கொள்வோம். ஆனால் அனைவருடைய சான் பிரான்சிஸ்கோ connecting விமானம் ஒன்றே தான் என்பதால் display போர்டில் இந்த மூன்று எண்களும் மாற்றி மாற்றிக் காட்டப்பட்டது. குழப்பமான குழப்பம்.
எங்கள் gate எண் தெரிந்ததும் மீண்டும் ஏறி இறங்கி நடந்து என ஒரு வழியாக எங்கள் C62 gateஐ அடைந்தோம். போர்டிங் கேட்டிலும் மீண்டும் எண்களை மாற்றி மாற்றிக் காண்பித்து ... மீண்டும் குழப்பம். (குழப்பம் எனக்கு மட்டும் தான் என் கணவர் தெளிவாகவே இருந்தார்)
விமானத்தில் ஏற மிகச் சில நிமிடங்களே இருந்த சமயத்தில் அருகிலிருந்த ரெஸ்ட்ரூம், குடிநீரை பாட்டிலில் நிரப்புதல் என முடித்துக் கொண்டு விமானத்தில் ஏறினோம். (Airbus 380 மிகப் பெரிய விமானம் என்பதால் பயணிகள், சரக்கு மற்றும் எரிபொருளுடன் மேலேறி குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டு சீராகப் பறக்கத் தொடங்கக் குறைந்த பட்சம் 45-60 நிமிடங்கள் ஆகும். கண்டிப்பாக 45 நிமிடங்களுக்கு தண்ணீர் கூடத் தர மாட்டார்கள்)
Airbus 380 மாடல் விமானம். மாடி பஸ் போல மாடி விமானம். முன்பே இது போன்ற விமானத்தில் பயணம் செய்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் இது.
ஜன்னல் இருக்கைதான் வேண்டும் என ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்க எண்ணி இருந்தேன். மிகப் பெரி ........ய இறக்கைகளைக் கொண்ட விமானம் என்பதால் இறக்கை ஏறக்குறைய 10 வரிசைக்கான ஜன்னல் சீட்டுக்களின் அளவில் இருந்தது. வெளிக் காட்சிகள் எதுவும் அவ்வளவாகத் தெரியவில்லை.
அவ்வளவு பெரிய இறக்கையை வேடிக்கை பார்ப்பதே அலாதியாக இருக்கும். அதன் நுனியில் விளக்கு
எரிவதும், flapகள் மேலெழும்புவதும், இடையிடையே தெரியும் சூரிய உதய அஸ்தமனக் காட்சிகள், நட்சத்திரங்கள் என மனதிற்கு இனிமையாக இருக்கும்.
இரண்டாவது விமானத்திலும் மூன்றாவது இருக்கையில் யாரும் இல்லை; வந்து அமர்ந்த ஒருவரும் இருக்கை மாறிச் சென்று விட்டார். நல்ல ஜெயின் உணவுகள் இங்கேயும் தரப்பட்டன. கால் வைக்கும் இடமும்(leg room) தாராளமாக இருந்ததால் நன்றாகத் தூங்கி கொண்டே 8/10 மணி நேரப் பயணத்தை முடித்தேன். பயணித்த மொத்த தூரமும் பகல் நேரமாக வெளிச்சமாக இருந்தாலும் இந்திய நேரப்படி இரவு என்பதால் நல்ல தூக்கம்.
Inflight entertainmentல் எந்த சினிமாவும் பார்க்கும்படி சுவாரசியமாக இல்லை என்பதால் தூங்கியே கழித்தோம். நான் பார்த்த வரையில் தெற்காசிய மக்களே பயண நேரம் முழுவதும் in-flight entertainmentல் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டே பயணிப்பார்கள். நம்மால் ஒரு நொடி கூடத் தூங்க முடியாது.
விமானப் பயணத்தின் கடைசி நிமிடங்களில் தரப்படும் குடியுரிமைப் பகுதியில் தர வேண்டிய form எதுவும் தரப்படவில்லை.
வழக்கம் போல சிறு குழந்தைகளின் அழுகுரல்களுக்கிடையில் மாலை 3.30 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் தரையிறங்கினோம்.
குடியுரிமைப் பகுதியில் பல கேள்விகள் கேட்டார்கள். ஏன் மூன்று வருடங்களாக இங்கே வரவில்லை என்பது முக்கிய கேள்வி.
கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்கப் பட்ட கேள்வி அது எனத் தோன்றியது.
(Intern என்னும் ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் 60+ வயதானவர். மிகப் பெரிய வேலையிலிருந்து ஓய்வு பெற்று, பொழுது போகாமல் மீண்டும் Intern ஆக வேலையில் சேர இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு வருவார். தேர்வு செய்பவர் வழக்கமாக கேட்கப்படும் "where do you think yourself in next ten years?" எனக் கேட்பார். கதாநாயகன் "Who knows, I will be 70+ and may be dead " என்பார்.
அந்தச் சம்பவம் தான் என் நினைவுக்கு வந்தது)
பெட்டிகள் வரக் காத்திருந்த சமயத்தில் என் கணவர் trolley எடுத்து வருகிறேன் அதுவரை roll-on பைகள் மற்றும் லேப்டாப் பையை கையில் வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் நில் என்று கூறி சென்று விட்டார். பணம் போட்டால் மட்டுமே trolley வெளியில் வரும். செக்யூரிட்டி அலுவலர் ஒருவரின் உதவியுடன் எடுத்து வர சில நிமிட நேரங்களாகி விட்டன.
துப்பறியும் நாயைக் குடியுரிமைப் பகுதியிலேயே அழைத்து கொண்டு நடுநடுவே நடப்பார்கள் பெட்டிகள் வரும் luggage carousalஐ சுற்றி சுற்றி நாயை அழைத்து வந்தார் ஒரு பெண் காவலர். (சென்னையில் வெளிப்பக்கத்திலேயே நடந்தது இம்முறை)
நாய் என் கணவரின் லேப்டாப் பையை முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்தது. காவலர் ஆணைகள் தரத் தர அது ஒவ்வொரு பெட்டியாக முகர்ந்து கொண்டே நகர்ந்து சுற்றி சுற்றி வந்தது.
மற்ற பயணிகள் சுறுசுறுப்பாகப் பெட்டிகளை இழுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார்கள்.
என் கணவரிடம் சீக்கிரமாக பெட்டிகளை எடுத்துக் கொண்டு நகரலாம் என்று எத்தனை முறை சூசகமாக சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. அதிகப்படி அட்டைப் பெட்டியை கையில் தூக்கி செல்ல முடியாததால் இந்த பிரச்சினை.
சற்று தொலைவில் ஒரு இளைஞரின் மேல் நாய் தாவி குதித்து அவரது பையை பிடிக்கவே, அதிகாரி அவரை சோதனை போட ஆரம்பித்தார்.
நாங்கள் சட்ட விரோதமாக எதையும் எடுத்து வரவில்லையென்றாலும் போலீஸ் என்றால் பயம் இன்றளவும். மற்ற பெட்டிகளையும் மோப்பம் பிடிக்க அடுத்த முறை நாய் எங்கள் அருகில் வருவதற்குள் வேகமாக நகர்ந்து விட்டோம். [எங்கள் சின்னம்மாவின் மாமனார் காவலராக வேலை செய்தார் என்பதால் சித்தப்பாவுடன் பல வருடங்கள் பேச பயந்தவள் நான்]
வந்திறங்கிய மறுநாள் (அக்டோபர் 23, 2022) தீபாவளி.
மருமகனும், மருமகளும் எங்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். வீட்டில் உறவினர்கள் சிலரும் இருக்க, வந்தவுடன் பெட்டியைத் திறந்து, இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பலகாரங்களை அனைவரும் உண்டு அப்போதே தீபாவளியை ஆரம்பிக்க... jetlagல் என் தலை சுற்ற ...( அட்டைப் பெட்டியில் முறுக்கு சுட்டு கொண்டு வந்திருக்கிறீர்களா பாட்டீ? _ சின்ன பேரன்)
மப்பும் மந்தாரமுமாக எழுந்து நலங்கு, எண்ணெய்க் குளியல், புத்தாடைகள், பிரார்த்தனைகள், விருந்துணவு, மத்தாப்பு, விருந்தினர்கள் என பட்டாசுகள் தவிர்த்து அனைத்தும் இடம்பெற சிறப்பாக தீபாவளி முடிந்தது.
Milpitas வீட்டின் பின் தெருவில் குடியிருக்கும் மகள் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள சகோதரி எங்கள் வரவை எதிர்பார்த்து தினமும் பூங்காவில் நடைப்பயிற்சி, கூடி இருத்தல் எனப் பல திட்டங்களை வைத்திருந்தார். மகளின் திடீர் வீடு மாற்றம் அவருக்கு (எங்களுக்கும் தான்) மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. கிடைத்த இரண்டு நாட்களும் நடைப்பயிற்சி செய்தோம்.
நாங்கள் வந்திறங்கிய நாள் முதல் குளிர்/மழை தான். Bay area பகுதி இலையுதிர் காலம் காரணமாக வண்ண மயமாக இருந்தது.
புது வீடு அமைந்திருக்கும் Livermore என்னும் பகுதியைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே.
Livermore, Arroyo & Del என்னும் பெயரில் மூன்று பள்ளத்தாக்குகளை (Valleys) உடையது இந்த ஊர். இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி தான் பள்ளத்தாக்கு என்கிறது பூகோள புத்தகம்.
சுற்றிலும் மலைத் தொடர்களுடன் பாலைவன நில அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஊர். சான் பிரான்ஸிஸ்கோ நகரின் ஒரு பகுதியாக இது கருதப் பட்டாலும் இடையே 58 மைல்கள் உள்ளன. (92 km)
நீர் அதிகம் தேவைப்படாத zerophyte வகைத் தாவரங்கள் இங்கே அதிகம் காணப்படுகின்றன. ரோஜா போன்ற பூச்செடிகளை வளர்க்க அதிகம் நீர் தேவைப்படுவதால் மிகச் சில வீடுகளில் மட்டுமே வளர்க்கிறார்கள்.
நானும் என் கணவரும் Google map உதவியுடன் முடிந்த போதெல்லாம் நடைப்பயிற்சி செய்தோம். வீட்டைச் சுற்றி நீண்ட சாலைகள். செவ்வகம் போல ஒரு முறை நடந்து வந்தால் 2.5 km.
சாலையோரங்களில் மாதுளை, Raspberry, Olive, எலுமிச்சை, கருப்பு திராட்சை போன்ற பழங்கள் பறிக்க ஆளில்லாமல் காய்த்துக் குலுங்குகின்றன. [Google lensஐ பயன்படுத்தி என்னென்ன பழங்கள் என அறிந்து கொண்டேன்] வீட்டில் மகளிடம் கூறிய போது ஓ.. அப்படியா எதையும் பறித்து விடாதீர்கள் என்றார்.
Livermore பகுதி திராட்சைத் தோட்டங்களுக்குப் பிரசித்தி பெற்றது. 2010ஆம் வருடம் நாங்கள் கண்ட காட்சிக்கும் தற்போதைய நிலைக்கும் நிறைய வித்தியாசம்.
திராட்சைத் தோட்டங்களை அழித்து வீடுகளைக் கட்டி மக்கள் குடியேறி விட்டார்கள். சில வீடுகளில் வாசலில் ரோஜாச் செடிகள் போல திராட்சை கொடிகள் குலை குலையாக பழுத்து தொங்கி கொண்டிருந்தன.
மக்கள்
ஏன் இவற்றை பறித்து உண்பதில்லை என்ற என் கேள்விக்கு என் குடும்பத்தாரின் பதில்: “இங்குள்ள
மக்களுக்கு திராட்சை பிடிக்காது wine தான் பிடிக்கும்”
விதம் விதமான நிறங்களில் காட்டுப் பூச்செடிகள் எங்கெங்கும் தென்பட்டன. Boulevard என்றாலே இரு புறமும் மரங்கள் அடர்ந்த சாலை எனப் பொருள். அதற்கேற்றாற்போல் சாலைகளின் இருபுறமும் நடுவிலும் மரங்கள் உள்ளன. இலையுதிர் காலம் என்பதால் மரங்களில் இலைகள் பச்சை நிறம் மாறி மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, brown என வண்ணக் கோலம் தான்.
0.7 கிலோமீட்டரில் சின்ன பேரனின் பள்ளியும் 1.5 கிலோமீட்டரில் பெரிய பேரனின் பள்ளியும் உள்ளன.
சிறியவனை என் கணவர் தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளியில் விட்டு அழைத்து வருவார். முடிந்த நாட்களில் நானும் செல்வேன். தினமும் காலையில் கடும் குளிராக இருந்தது (-1, -2) இரண்டு ஜாக்கெட்டுகள், இரண்டு warmer pants, gloves, குல்லாய் எனக் கிளம்புவோம். அப்படியாவது வெளியில் செல்ல வேண்டுமா என நீங்கள் கேட்பது புரிகிறது இதுவும் ஒரு அனுபவம் தான் இல்லையா? (சென்னையில் குளிர் சாதனப் பெட்டியின் freezerல் கூட +1 டிகிரி இருக்காது)
நடக்கும் போது சூரிய பகவான் வானில் இருந்தாலும் குளிர் காரணமாக மூக்கில் நீர் வரும். (சளி இல்லை) கையில் ஒரு tissue paperஐயும் எடுத்து செல்வோம். வீடு வந்த சில நிமிடங்களில் தானாகவே சரியாகி விடும்.
புது மனை புகுவிழாவன்று மருமகள் தண்ணீர் பாட்டிலைக் காலில் போட்டுக் கொண்டதில் விரல் வீங்கி ஓய்வுக்கு சென்றதால் திட்டமிட்டபடி எங்கும் வெளியூர் பயணம் செய்ய முடியவில்லை.
Thanks giving day வார இறுதியில் San Mateoவில் நடைபெற்ற International Bead Showவிற்கு மட்டும் மகன் மருமகளுடன் சென்று வந்தேன்.
27/11/2022 அன்று மருமகளின் வளைகாப்பு சீமந்த நிகழ்வு நடைபெற இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை நான்கு மாதங்கள் முன்பிருந்தே தொடங்கி, அமெரிக்காவிலும் தொடர்ந்து ஒரு வழியாக வெற்றிகரமாக முடித்தோம்.
வீட்டிலேயே விழாவை நடத்தியதால் ஒரே நாளிலேயே காலை ஏழு மணிக்கு வளைகாப்பும் பத்து மணிக்கு ஆரம்பித்து சீமந்த விழாவும் கொண்டாடினோம். குறிப்பிட்ட சில நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தோம். [Thanks giving வார இறுதி ஞாயிற்றுக்கிழமை] விழாவில் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
என் கணவரின் நண்பரும் என் பயணக் கட்டுரைகளின் ரசிகருமான திரு.பிரேம்நாத் மற்றும் என் தகப்பனாரின் பெரியப்பா வழி உறவினரான திரு.ஆனந்த் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
மறுநாள் விடிந்ததும் முதல் நாள் விழாவுக்கு வந்திருந்த அன்பர் ஒருவருக்கு Covid positive எனத் தகவல் வந்தது. (பத்த வெச்சுட்டியே பரட்டை) உடனே வந்திருந்த அனைவருக்கும் தகவல் அனுப்பி உடல் நலனைக் கண்காணிக்க வேண்டினோம்.
அனைவரும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்து கொண்டே இருந்தோம். இருமல், சளி, காய்ச்சல் வருவது போன்ற நிலை, மூச்சிரைப்பு, தொண்டை வலி, காது வலி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பு. மருத்துவமனை, மருந்துகள் எதுவும் இல்லை. Tylenol, Halls மிட்டாய், இருமல் மருந்து (மகனுக்கு மட்டும்), நாட்டு மருந்து கஷாயம் தான் மருந்துகள்.
கர்ப்பிணியான மருமகளால் மட்டும் சமாளிக்க முடியாமல் மருத்துவனை சென்றார். சாதாரணமாக இருந்தாலே இங்குள்ள மருத்துவர்கள் மருந்து எதுவும் தரமாட்டார்கள். கர்ப்பிணி வேறு ஒரு நாள் முழுவதும் காத்திருந்த பிறகு இருமல் மருந்து அவசியம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாயால் சொல்லி over the counter வாங்கி கொள்ள சொல்லி அனுப்பினார்கள்.
Covid
test எடுத்து எங்களை நாங்களே கண்காணித்துக் கொண்டோம். நோயாளிக்கு சத்தான உணவு சமைத்து
தந்தோம். வீட்டிற்குள்ளேயே
முகக்கவசம், சமூக
இடைவெளி என கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றினோம்.
மேற்படி பிரச்சினைகளால் மகன் வசிக்கும் Phoenix நகருக்குக் கிளம்புவதில் ஒரு வார தாமதம் ஏற்பட்டது.
அவரவர் உடல் நலத்தை அவரவர் பேண வேண்டும் என்ற என் மகளின் கொள்கைப்படி மீண்டும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.
இந்தப் பகுதி முழுவதும் அநேகமாகத் தனி வீடுகளே. சில வீடுகள் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படுவது போல 4-5 கார் garage, drive way, fountain என அமைந்து பிரம்மாண்டமாக உள்ளன.
எல்லா வீடுகளிலும் solar panel அமைத்து மின்சாரம் உபயோகிக்கிறார்கள்.
Downtown எனப்படும் நகரின் மைய பகுதியில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தென்படவில்லை. மாறாக Spring town பகுதியில் அமைந்துள்ள சிவா விஷ்ணு கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் அபார்ட்மெண்ட் கட்டிடங்களைக் கட்டி விட்டார்கள்.
வீட்டிற்கு அருகில் இரண்டு மைல் தொலைவில் உள்ள நூலகத்திற்குச் செல்லும் வழியெங்கும் திராட்சைத் தோட்டங்கள். அமைதியான அழகான walking trail கள் லிவர்மோர் பகுதியில் ஆங்காங்கே தென்படுகின்றன. Historic trail என நடைபாதையை இன்னாருக்கு அர்ப்பணிக்கிறோம் என விவரமும் வைத்துள்ளார்கள்.
மற்றொரு திசையில் நடந்து செல்லும் தொலைவில் Del valley. அங்கே ஒரு ஏரி உள்ளது. அது ஒரு picnic spot. செல்ல நேரம் அமையவில்லை. Kayaking, boating செய்யலாம். (2010 ஆம் ஆண்டு Labour day அன்று நாள் முழுவதும் அங்கே நேரம் செலவழித்தோம்)
நாள் முழுவதும் குளிர் அவ்வப்போது மழை எனப் பருவநிலை. மொத்தத்தில் குளிரோ குளிர். பெரிய வீடு என்பதால் இரண்டு heaterகள் ஓடினாலும் அவ்வளவாக சூடு உறைப்பதில்லை. குல்லாய், கையுறைகள், wollen socks என 1.5 மாதங்கள் பொழுது போனதே தெரியவில்லை. வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல குறைந்த பட்சமாக ஒரு ஸ்வெட்டர், சாக்ஸ் நாள் முழுவதும் உண்டு.
(மிகப் பெரிய நான்கு அறைகள் இரண்டு கூடங்கள் என அமைந்த வீடாக இருப்பினும் விழாவிற்கு வந்த விருந்தினர்கள், பிறகு கொரோனா போன்ற காரணங்களால் எனக்கும் என் கணவருக்கும் பேமிலி ரூம் எனப்படும் கூடத்து சோபாவில் பல நாட்கள் தூங்கும் வாய்ப்புக் கிடைத்தது எங்கள் வயதும் மற்றொரு காரணம்:) சிறு குழந்தை, கர்ப்பிணி, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு முன்னுரிமை தந்தோம்.
சுற்றிலும் கண்ணாடி கதவுகளும் ஜன்னல்களுமாய் உள்ள கூடம் பின் பக்கத் தோட்டத்தோடு இணையும் கதவுடன் கூடியது. அதன் தாழ்ப்பாள் என்பது நம் கிராமப் பகுதியில் உள்ள குடிசை வீட்டுப் படல் கதவின் கொக்கி போல மிக லேசாக இருக்கும்.
இரவு பத்து மணி முதல் காலை ஏழு மணி முடிய கும்மிருட்டாகத் தெரியும் வானின் நட்சத்திரங்களையும் விமானங்களையும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி படுத்திருப்பேன். கடும் குளிர் அல்லது மழை.
இந்தப் பயணத்தின் முதல் கட்டம் என இந்த ஒன்றரை மாதங்களைக் கூறலாம். தினசரி வேலைகள் தவிர்த்து என் எழுத்து வேலைகளையும் அவ்வப்போது செய்து வந்தேன்.
10/12/2022 அதிகாலை ஐந்து மணிக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து கிளம்பும் Southwest airlines விமானத்தில் மகன் வசிக்கும் Phoenix நகருக்குப் பயணம் முடிவு செய்யப்பட்டது.
சென்னை - லண்டன் - சான் பிரான்சிஸ்கோ - பீனிக்ஸ் என்பது தான் எங்கள் பயணத் திட்டம் என்பதால் இது எங்கள் கடைசி கட்டப் பயணம். எனவே பெட்டிகளில் சாமானை அடுக்குதல் எடை போடுதல் மீண்டும் அடுக்குதல் என முதல் நாள் மாலை முடித்தோம். உள்நாட்டுப் பயணம் என்பதால் கூடுதலாக இந்தப் பயணத்தில் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் என என்ன வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்; ஆனால் check in செய்ய வேண்டும்.
காலை ஐந்து மணி விமானத்திற்கு பல விதமான குளிராடைகளுடன் 2.30 மணிக்கே கிளம்பி ஒரு மணி நேரம் பயணம் செய்து விமான நிலையத்தை அடைந்தோம். இப்போதும் ஒரு அட்டைப் பெட்டி உடன் வந்ததால் செக் இன் செய்து விட்டு உள்ளே சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற அழைக்கப்பட்டோம்.
மருமகள் கர்ப்பிணி என்பதால் விமானத்தில் ஏற முன்னுரிமை அனுமதி வாங்கிக் கொண்டோம். [கர்ப்பிணிகள், சிறுகுழந்தைகள்(stroller), சக்கரநாற்காலிப் பயனாளர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு]
கைப்பெட்டிகளுடன் முன்னால் சென்று டவுன் பஸ் போல இடம் பிடித்தோம். உள்நாட்டு விமானங்களில் இருக்கை முன்பதிவு கிடையாது.
1.30 நிமிட பயண நேரத்தில் Coffee/ Tea/ Hot chocalate/ soda varieties/ pretzels எனத் தரப்பட்டது. தூக்கக் கலக்கத்துடன் பசியும் சேர்ந்து கொள்ள கிடைத்த hot chocalateஐக் குடித்தேன். நன்றாக இருந்தது.
1.25 நிமிட நேர பயணத்தில் இருட்டு விலகி பூமிப் பந்தின் வழியே மெள்ள மெள்ளத் தெரியத் தொடங்கிய சூரியனின் ஒளியில் தெரிந்த காட்சிகள் அற்புதமாக இருந்தன.
விமானத்திலிருந்து தெரிந்த பாலைவனக் காட்சிகள் நகரை நெருங்கியதை உணர்த்தியது. நகரின் எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே நீர்நிலைகளும் தொழிற்சாலைகளும் தென்பட்டன.
பலவித எதிர்பார்ப்புக்களுடன் ...
Phoenix
அனுபவங்கள் தொடரும் ...
No comments:
Post a Comment