SFO சர்வதேச விமான நிலையத்திலிருந்து Southwest airlines விமானம் மூலம் Phoenix நகருக்குக் காலை ஐந்து மணிக்குக் கிளம்பினோம்.
அதிகாலை நேரப் பயணம் என்பதால் சூரிய உதயக் காட்சி காணக் கண்கொள்ளாத ஒன்றாக இருந்தது. விமானத்தில் தரப்பட்ட சூடான சுவையான hot chocalateஐக் குடித்த வண்ணம் ஜன்னல் இருக்கையில் அமர்ந்த படி மேற்கண்ட காட்சியைக் கண்டது இன்னும் இனிமை.
நகரின் ஆரம்பத்தில் தொழிற்சாலைகள், warehouses போன்ற கட்டிடங்கள் நிறையத் தென்பட்டன. இந்நகரம் ஒரு தொழில்நகரமாக இருக்க வேண்டும் என நினைத்து மகனிடம் கேட்டேன். அவரது பதில் எப்போதும் போல "may be". இதற்குப் பொருள் உன் கையில் உள்ள தொலைபேசியில் கூகிள் செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளவும் என்பது தான்.
6.25க்கு இந்த நகரில் தரையிறங்கி விட்டோம். விமான நிலையம் நகரின் மத்தியில் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் பகுதி புறநகராக இருந்திருக்கலாம்.
நகருக்குள் நுழைவதற்குள் ஒரு சிறு அறிமுகம்.
வட அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் தலைநகர் இது.
Colorado நதியின் ஓட்டத்தினால் பல மில்லியன் ஆண்டுகளாக அரிக்கப்பட்ட Grand Canyon எனப்படும் மலைத் தொடர்களுக்கு இந்த மாநிலம் மிகவும் பிரசித்தம்.
நிற்க. விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்து விட்டோம்.
கலிபோர்னியாவை விடக் குளிர் சற்று குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டாலும் திறந்த வெளியில் காலை நேரத்தில் நின்றபோது Uber வருவதற்குள் குளிர் ஊசி போல உடலைக் குத்தியது. Tempeயைக் கடந்து மகன் வசிக்கும் Chandler என்னும் பகுதியை 20 நிமிடப் பயண நேரத்தில் வந்தடைந்தோம்.
2017லேயே அரிசோனா மாநிலத்தின் Grand Canyon மற்றும் Las Vegasஐக் கண்டிருக்கிறேன் என்றாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுப் புது விஷயங்கள் கண்ணில் படத் தவறுவதில்லை.
வழியெங்கும் மிக உயரமான சப்பாத்திக் கள்ளிகளை அலங்கார மரமாக நட்டுள்ளார்கள். ஈச்ச மரங்களும், கள்ளி வகைகளும், காட்டு மரங்களும், செடிகளும் எங்கெங்கும் தென்பட்டன. ஊரைச் சுற்றிலும் மலைத் தொடர்கள் தென்படுகின்றன. (வெயிற்காலத்தில் புழுதிப் புயல் வீசும் என்று கூறினார்கள்)
சாலையோரங்களிலும் வீடுகளிலும் முடிந்தவரை செடிகள், மரங்களை நட்டுப் பசுமையாக வைத்திருக்கிறார்கள். குளிர்காலம் என்பதால் மரத்தில் இலைகள் அவ்வளவாக இல்லை.
ஆங்காங்கே செயற்கையாகக் கால்வாய்களை வெட்டியும் ஏரிகளை அமைத்தும் குடியிருப்புக்களை
Chandler - Gilbert எல்லையில் மகன் வசிக்கும் அபார்ட்மெண்ட் உள்ளது. Greenbay packers என்னும் கால்பந்துக் குழுவின் ரசிகர் என்பதால் அதன் கொடியை balconyயில் தொங்க விட்டுள்ளார். 😊(எங்கள் வீடு எது என்று கண்டு பிடியுங்களேன் _ மருமகள்)
மிகப் பெரிய நிலப்பரப்பில் 310 அபார்ட்மெண்ட்களை உள்ளடக்கிய ஒரு காலனி இது இங்கும் ஈச்ச மரங்கள், பலன் தராத இலைகள் மட்டுமே உள்ள மரங்கள், முள் செடிகள், கள்ளிகள், காகிதப் பூச்செடிகள் என நட்டுப் பசுமையை ஏற்படுத்தி உள்ளார்கள் வீட்டின் எதிரிலேயே பச்சைப் பசேலென்ற புல்வெளி. காலனி முழுவதும் loop போல் நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளது. தினமும் முதல் தள வீட்டிலிருந்து கீழிறங்கிக் காலனியை ஒரு முறை சுற்றி வந்தால் 1.5 km.
இருந்த ஒரே ஒரு இந்தியக் குடும்பமும் நாங்கள் சந்திக்கும் முன்பே காலி செய்து விட்டார்கள். காலனியில் 90%க்கு மேல் ஸ்பானிஷ், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் தென்படுகிறார்கள். நாங்கள் இந்த ஊரில் இருந்த நாட்களில் தெற்காசிய மக்கள் ஓரிருவரே கண்ணில் தென்பட்டனர்.
இந்த காலனி ஒரு சிறிய பறவைகள் சரணாலயம் போல உள்ளது. தினமும் காலையும் மாலையும் கீகீயென சத்தமிட்டவாறு பல்வேறு பறவைகள் இங்குள்ள மரங்களில் அங்குமிங்கும் தாவிச் செல்கின்றன.
காக்கா, புறா, சிட்டுக் குருவி, மிகச் சிறிய இறக்கையுடன் கூடிய ஒரு பறவை (பறக்கும் போது இதன் இறக்கை ஹெலிகாப்டரின் இறக்கை போல விரிந்து கொள்கிறது), மரம் கொத்திப் பறவை, மற்றொரு பறவையின் இறக்கை பின் பக்கம் விசிறி போல கருப்பு வெள்ளை நிறத்தில் மிக அழகான patternல்
திருமணமாகி மனைவியுடன் 2022 மே மாதம் புதுக் குடித்தனத்தைத் தொடங்கிய மகனது இல்லத்தின் பொருட்களைச் சீராக்கி ஒழுங்குபடுத்துவதில் முதல் சில நாட்கள் கழிந்தன. அதன் பிறகு கூகிள் ஐயனாரின் உதவியுடன் எங்கள் நடைப் பயிற்சி மற்றும் ஊரை explore செய்தலை ஆரம்பித்தோம்.
அதிக பட்சமாக 60-75 நிமிடங்கள் மட்டுமே நடைபயிற்சிக்குச் செல்வோம்.
காலை நேர நடைப்பயிற்சியின் (நான் மட்டும்) போது காலனியின் All-in-all அழகு ராஜாவான ஒரு பெரியவரை அவரது buggyயிலோ, கையில் குப்பை பொறுக்கும் fork அல்லது நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்யும் வலையுடனோ காண்பேன். பரஸ்பரம் Hi , Good morning கூறிக் கொள்வோம்.
சென்னையில் வசிக்கும் எங்கள் குடும்ப நண்பரின் மகள் இரண்டரை மைல் தொலைவில் வசிக்கிறார். காரில் சென்றால் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது என்றாலும் என் கணவர் நடந்து சென்று பார்த்து வருவார். ஒரு நாள் அவர் இல்லத்தில் மதிய உணவு அளித்தார்.
குளிர் வாட்டி எடுத்தாலும் பனி இல்லை. பகலில் சூரியனார் எட்டிப் பார்த்தாலும் வெயில் உரைப்பதில்லை. காற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் வெயிற்காலத்தைப் போல ஒரு நாளுக்கு குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லிட்டர்கள் நீர் அருந்த வேண்டி உள்ளது. தவறினால் மருத்துவமனை சென்று glucose ஏற்றிக் கொள்ள வேண்டும்.
சென்ற முதல் நாளே இது பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் என் உடல் இந்த ஊரின் தட்ப வெப்பநிலையை ஏற்றுக் கொள்ளாமல் ஆரம்ப நாட்களில் அடிக்கடி நீர்க் கடுப்பு வருவது போன்ற நிலைக்கு சென்று மீண்டு வந்தேன். (Las Vegas பயணத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வந்து தானாகவே உறைந்து மூச்சு விட முடியாமல் மூக்கடைத்துக் கொண்ட அனுபவமும் உண்டு. அன்று முதல் கடும் குளிரோ, மலையோ, பாலைவனமோ எங்கு சென்றாலும் மருத்துவரின் அறிவுரைப்படி saline solutionஐக் கையோடு எடுத்துச் செல்கிறேன்)
அதைக் கண்டவுடன் காலனியின் அருகில் உள்ள CVS pharmacyயில் rehydration liquid, Trader Joe'sலிருந்து Cranberry juice, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஒன்றை ஒரு ஜக் தண்ணீரில் கலந்து அதில் உப்பு சர்க்கரை சேர்த்துத் தயாரித்த நீர் எனக் குடித்து நாட்களைக் கடத்தினேன்.
-2 டிகிரி குளிராக இருந்தாலும் எங்கு சென்றாலும் குடிநீர் பாட்டில் இல்லாமல் செல்ல முடியாது.
நடைப்பயிற்சி நேரங்களில் எங்கெங்கே பூங்காக்கள் உள்ளன, அவற்றில் என்னென்ன வசதிகள் உள்ளன, வழியில் எங்கெங்கே ஆரஞ்சு, எலுமிச்சை, ஈச்சை போன்ற மரங்கள் காய்த்து தரையில் விழுந்து கிடக்கின்றன, எந்தச் சாலையில் போனால் எத்தனை கிலோமீட்டர்கள், எங்கெங்கே பள்ளிகள் உள்ளன இப்படிப் பலவற்றையும் பார்த்து வந்து சொல்வோம்.
இங்குள்ள முக்கிய சாலைகள் அநேகமாக சதுர வடிவில் பல மைல்களுக்கு நீண்டு செல்கின்றன. (குறைந்தது பத்து மைல்கள்)
நம் ஊர்களைப் போலத் தெருக்களில் பழ மரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்து உள்ளார்கள். குத்தகைக்கு விடுவார்கள் போல. சில நாட்களில் மொத்தப் பழங்களும் காணவில்லை. ஒரு நாள் Walmart வாசலில் உள்ள பேரீச்சை மரத்திலிருந்து தரையில் பழங்கள் கொட்டிக் கிடந்தன. சிலவற்றை எடுத்து வந்தோம் இங்கு யாரும் எடுக்க மாட்டார்கள். (சுவையாக இருந்ததாக மகன் கூறினார்)
நிறைய barber shops, pizza shops, coffee shops, private storages இந்தப் பகுதியில் உள்ளன. அருகில் ரயில்வே தண்டவாளம் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயிலின் விசில் சப்தம் வீட்டிலிருந்தே கேட்பதை காலை நடைபயிற்சியின் போது கவனித்தேன். (காலையில் தினமும் இரண்டு, மதியம் ஒன்று தவறாமல் வருவதாக என் கணவர் கூறினார்)
இந்த ஊரில் பயணியரை ஏற்றிச் செல்லும் ரயில் இல்லை. சரக்கு ரயில்கள் தான்.
அதனை ஒட்டியே “ESPEE PARK”. South Pacific (espee) பூங்கா பெரும் தனவந்தர் குடும்பம் ஒன்றால் நகருக்கு தானமாக அழைக்கப்பட்ட 33 ஏக்கரா பரப்பளவுள்ள பூங்கா. ஒரு முறை நடந்தாலே கால்கள் ஓய்ந்து போகின்றன.
(Home to Chandler’s first official bike park, refreshing spray gardens, and sports fields Espee Park is a recreational paradise. The 33-acre park offers over four miles of thrilling bike courses at varying levels for all rider's abilities. Not for the faint of heart, the bike park features a jump box, double roller, molehill, Hubba ledge, and vertical surface that is taller than a basketball hoop.
The park is also known for its spray pad, ideal for splashing around and cooling off during Arizona’s hot days. Park-goers can enjoy a water tower, three candy cane-shaped showers, four spray rings, and a ground spray. The park also includes three lighted baseball and softball fields as well as covered awning seating for spectators)
அதனையொட்டி நகரில் எங்கெங்கும் வண்ண விளக்குகள். ஈச்ச மரத்திற்கும் விளக்குகள் உண்டு. :) ஏரிக்கரை வீடுகள் விளக்கலங்காரத்தில் ஜொலித்தன.
மற்றொரு திசையில் நடந்தால் மிகப் பெரிய செயற்கை ஏரியுடன் கூடிய தனியார் பூங்கா. அங்கும் வண்ண விளக்கு அலங்காரங்களைக் கண்டோம். பகலில் நடைப்பயிற்சி நேரத்தில் கண்ட இடங்களை இரவில் காரில் சென்று வேடிக்கை பார்த்தோம். (குளிரோ குளிர்)
Holiday seasonல் ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களைச் சுற்றிப் பெரிய அளவில் அலங்காரம் செய்து அனுமதி சீட்டு விற்றுப் பார்வையாளர்களை அனுமதிப்பார்கள்.
(குளிர்காலத்தில் வட அமெரிக்கா வரும்போது ஒவ்வொரு முறையும் ஹாலோவீன், கிறிஸ்துமஸ் அலங்காரங்களை இரவில் காரில் சென்று வேடிக்கை பார்ப்பது வழக்கம் இம்முறை லிவர்மோர், பீனிக்ஸ்)
வார இறுதி நாட்களில் மருத்துவமனை / வீட்டிலிருந்து அதிக பட்சம் 30 - 60 நிமிடப் பயண நேரத்தில் உள்ள இடமாகத் தேர்ந்தெடுத்து இந்த ஊரில் உள்ள மிகச் சில பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வந்தோம். (மிகச் சில = இந்த ஊரில் மிகச் சிலவே உள்ளன)
நிற்க… மருமகளுக்கு உதவி செய்வதாகக் கூறி விட்டு ஊர் சுற்றிக் கொண்டா இருந்தீர்கள் என்ற உங்கள் mind voice கேட்கிறது. அதற்கு பதில் சொல்லி விட்டு மேலே தொடர்கிறேன்.
பிப்ரவரி ஐந்தாம் தேதி தான் due date என்றாலும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மருமகளுக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய சூழல். பிரதி செவ்வாய் scan வெள்ளி குழந்தையின் vitals, contraction checkup.
செவ்வாய் காலை ஆறு மணிக்கு எழுந்து (நடுக்கும் குளிரில்) விரைவாக மற்றும் மருமகளுக்கு வாந்தி வராமல் உண்ணக் கூடிய ஒரே உணவான நான் செய்யும் இட்லியைக் காலை உணவாக எடுத்துக் கொண்டு 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு மகனும் மருமகளும் (எட்டு மணிக்கு முதல் appointment) செல்வார்கள். Scan முடிந்ததும் 9.30 மணியளவில் பெண் மருத்துவருடன் சந்திப்பு.
Phoenix சென்ற முதல் வாரம் scan செய்யும் நாளன்று மருமகள் வருந்தி அழைத்த காரணத்தால் அவருடன் சென்று குட்டிப் பேரனின் முகம் (கையை கண்களின் மேல் வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்), கை, கால் என 4D scan திரையில் கண்டேன்.
மருத்துவமனை வாசலிலேயே அலுவலக மீட்டிங் இருந்தால் பேசி முடித்து விட்டு, காருக்குள்ளேயே காலை உணவை முடித்துக் கொண்டு, 10.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்த அடுத்த நொடி மகன் ஓட்டமாக ஓடி அலுவலகக் கணினியை login செய்வார். விட்ட மணித்துளிகளைப் பிடிக்க இரவு ஏழு முடிய வேலை செய்வார்.
பிரதி வெள்ளிக்கிழமை மீண்டும் இட்லி, எட்டு மணி appointment. மருத்துவரைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதால் சீக்கிரமாக வீடு திரும்புவார்கள்.
மருமகளுக்குப் பிடித்த வகையில் சமைத்து தருவேன். அவரால் முடிந்த உதவிகளைச் செய்வார்.
நால்வரும் தரையில் பாய் போட்டு அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் (மருமகளின் விருப்பம்) பார்த்துக் கொண்டே உண்போம். தொலைக்காட்சியில் செய்திகள், டாக்குமெண்டரி மட்டுமே பார்க்கும் ரக மான நானும் என் கணவரும் இந்த இரண்டு மாதங்களில் "நாய் சேகர்" உட்பட OTTயில் வெளியான அனைத்துத் தமிழ் மற்றும் வேற்று மொழித் திரைப்படங்களையும் பார்த்தோம். எந்தப் படமும் மனதில் நிற்கவில்லை.
தினமும் நடைப்பயிற்சி, வாரம் இரண்டு நாட்கள் யோகா வகுப்புக்கள், மருத்துவமனையில் நடத்தப்பட்ட birthing வகுப்புக்கள் எனச் சென்று வந்தார்கள் மகனும் மருமகளும். (அங்கே தரப்பட்ட புத்தகங்களை நான் தான் படித்தேன்)
கருவின் திருவில் எந்த மாற்றமும் இல்லாததால் ஒரு வித எதிர்பார்ப்புடன் நாட்கள் சென்று கொண்டிருந்தன.
இடையில் Avatar-2, வாரிசு, துணிவு போன்ற திரைப்படங்களைப் மருமகள் பார்க்க விரும்பியதால் திரையரங்கில் சென்று பார்த்தோம். அவர் செல்ல விரும்பிய இடங்களுக்கு நாங்களும் உடன் சென்றோம்.
இது தொடர்பாக என் நினைவில் நிற்கும் ஒரு சம்பவத்தையும் இங்கே பகிர விரும்புகிறேன்.
40, 50 வருடங்களுக்கு முன் வளைகாப்பு, சீமந்தம் முடிந்து தாய் வீடு சென்றுவிட்டால் குழந்தை பிறந்து 90 நாட்கள் கழித்தே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டது. கோவில்கள், உறவினர் வீடுகள் என எங்கும் செல்ல அனுமதியில்லை. (காரணத்தை நான் விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்)
10 வருடங்களுக்கு முன்பு...
மகளது இரண்டாவது பிரசவத்திற்கு 15 நாட்கள் முன்பு தான் சான் பிரான்ஸிஸ்கோ வந்தேன். (ஜெனரல் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டிருந்த சமயம் அது) பிரசவத் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் மகள் “அம்மா எனக்கு கோமள விலாஸில் சாப்பிட வேண்டும் அனுமதிப்பாயா” என்றார். சம்மதித்து அவருடன் நானும் சென்றேன்.
அந்நாட்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும் திருவல்லிக்கேணி ரத்னா கபே போல நீண்ட பெஞ்சுகளில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள் முருங்கைக்காய் அரைத்து விட்ட சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், கூட்டு, அப்பளம், தயிர் என unlimited meals. ஒரு ஆங்கிலேயப் பெண்மணி தான் பரிமாறினார். பையனா பெண்ணா எனக் குசலம் விசாரித்து, பையனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்கிறது போல என பார்த்துப் பார்த்துப் பரிமாறினார். (தாயின் கருவை விட்டு வெளியில் வந்ததும் அவருக்கு அந்தக் காய் பிடிக்கவில்லை :) இன்றளவும் விரும்பி உண்ண மாட்டார்)
நாங்கள் மருமகன் வருவதற்காகக் வெளியில் காத்திருந்த கணத்தில் அந்த ஹோட்டலின் மேனேஜர் (தமிழர்) என் மகளிடம் என்று due date எனக் கேட்டார் நாளை என்றதும் அவருக்கு மிகுந்த கோபம் வந்து இன்னும் எதற்கு அம்மா ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறாய் ஓடு வீட்டிற்கு என்று விரட்டினார். என் தாயார் உடன் இருக்கிறார் கணவர் வந்தவுடன் கிளம்பி விடுகிறேன் எனப் பதவிசாக பதில் கூறியதும் "சரி சீக்கிரம் கிளம்பு" எனக் கூறிச் சென்றார்.
எதற்கு மருமகள் சென்ற இடமெல்லாம் உடன் சென்றேன் என இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.
மகனுடன் வார இறுதியில் இந்தியர்களால் நடத்தப்படும் ஒவ்வொரு கடையாகச் சென்று காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி வந்தேன். (என் கணவர் தண்ணீர், பால் வாங்க மகனுடன் செல்வார். வெளி உலகை எட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்)
இடையில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அமெரிக்காவில் கோதுமை மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. உக்ரைன் போர் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் இந்திய அரசாங்கம் கோதுமை ஏற்றுமதியை அந்த நாட்டுக்கு திருப்பி விட்டதே காரணம்.
இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் கலிபோர்னியாவின் Bay area எனப்படும் சான் பிரான்ஸிஸ்கோ மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கூடக் கோதுமை கிடைக்கவே இல்லை. இந்த ஊரில் விலை அதிகமாக இருந்தாலும் சில நாட்களுக்குக் கிடைத்தது. எங்களுக்கும், மகள் மற்றும் நண்பர் ஒருவருக்குமாக மூன்று பைகள் (20 lbs) ஒவ்வொன்றும் $25 என்ற அசாத்திய/ அநியாய விலைக்கு வாங்கி வந்தோம்.
அடுத்த சில நாட்களில் ஒருவருக்கு ஒரு பை மட்டுமே என நோட்டீஸ் ஒட்டி விட்டார்கள். அடுத்த சில நாட்களில் அதுவும் இல்லை.
Patel Brothers என்னும் இந்தியரால் நடத்தப்படும் கடையில் அனைத்துக் காய்கறிகளும் கிடைக்கின்றன. மளிகை சாமான்களின் விலை அதிகம் என்பதால் மற்றொரு கடையில் வாங்குவோம். (வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கடைகளின் பெயர்கள் அநேகமாக Cloves, Turmeric என்பது போலவே இருக்கும்)
உதாரணமாக counterல் கொத்துமல்லி ஒரு கட்டு $1.49 என்றால் இந்தப் பையில் 15 கட்டுக்கள் $1.99 என விற்கப்பட்டன. சில வாரங்கள் பயன்படுத்தினோம். வெந்தயக் கீரை ஒரு கட்டு $1.99, இதில் ஐந்து கட்டுக்கள் $1.99.
ஆரம்பத்தில் இப்படி விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமாக இருக்காது, ஓரிரண்டு நாட்களில் சமைத்து விட வேண்டும் என்று கூறிய என் மருமகள் அவைகள் தரமாக இருப்பதைக் கண்ணால் கண்டதும் மற்றவர்களுக்கும் இது பற்றிய தகவலைப் பகிர்ந்தார்.
பிரதி வியாழக்கிழமை இரவு அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று வருவோம். காலனிக்கு வெளியே மெயின் ரோடு. அதைத் தாண்டினால் கோவில். (தூரம் அதிகமில்லை gentlemen, 1.5 கிலோமீட்டர் தான்)
கோவில் நம் ஊர் கோவிலைப் போல இல்லை. ஒரு பெரிய ஹாலில் சாய்பாபா, ஹனுமான், ராதா கிருஷ்ணர், சிவலிங்கம் ஆகிய தெய்வங்களின் சிலைகள் உள்ளன. முக்கியமான பண்டிகை நாட்களில் கடவுளின் திருவுருவச் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீனிவாச கல்யாணம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன இந்திய மக்களின் கூட்டத்தை இங்கே காண முடியும். யாரும் மற்றவர் முகம் பார்த்துச் சிரிப்பது கூட இல்லை.
பொதுவாக வெளிநாடுகளில் கோவிலில் பிரசாதம் நம் ஊரைப் போல ஒரு ஸ்பூன் தருவதில்லை. To go box எனப்படும் பெட்டியில் நிறையத் தருவார்கள். ஒருவர் தாராளமாக வயிறு நிறைய உண்ணலாம்.
வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையலுக்கு விடுமுறை. எடுத்து வரும் பிரசாத்துக்கு ஈடாக அரிசி, பருப்பு, பழங்கள், காய்கறிகள் என நம்மால் என்ன முடியுமோ அதைத் தந்து விட்டு வருவோம்.
(நாமும் சமைத்து எடுத்துச் சென்று கோவிலில் தந்தால் கடவுளுக்குப் படைத்து விட்டு பக்தர்களுக்குத் தருவார்கள். ஒரு முறை நாங்கள் சமைத்துத் தந்த சாம்பார் சாதம் எங்களுக்கே வந்தது)
ஓரிரு வாரங்களுக்குப் பிறகு என் கணவரும் மகனும் மட்டும் சென்று வந்தார்கள்.
கார்த்திகைப் பண்டிகையை பீனீக்ஸில் கொண்டாடுவோம் என எண்ணிப் புது விளக்குகள், ஆடைகள் போன்றவற்றை ஒரு பெட்டியில் போட்டு மகன் சென்ற போது கொடுத்தனுப்பி விட்டோம். குறித்த நேரத்தில் கிளம்ப முடியாததால் மகள் தந்த புது விளக்குகளை மருமகள் ஏற்ற டிசம்பர் 7ஆம் தேதி லிவர்மோரிலேயே கொண்டாடினோம். கார அப்பம், வெல்ல அப்பம் எனச் செய்து, பூஜைகளை தடபுடலாகச் செய்தோம்.
மார்கழி பிறந்ததும் கடந்த வருடம் எங்கள் வில்லா வாசலில் தினமும் விதம் விதமாக வண்ணப் பொடிகளைக் கொண்டு கோலமிட்டதை நினைத்துக் கொள்வதைத் தவிர எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தேன்.
கடவுளுக்கு தினமும் கோலமிட என 1' X 1' ஒரு பலகையும் வண்ணக் கோலப் பொடிகளும் கொண்டு வந்தது நினைவுக்கு வரவே, கடைசி பத்து நாட்கள் மட்டும் தினமும் அந்தக் குட்டிப் பலகையில் வண்ணக் கோலங்கள் போட்டேன்.
டிசம்பர் மாத இறுதி வாரத்தில் Seattle செல்லும் திட்டத்தில் இருந்த மகளது குடும்பம், அந்த ஊரில் கடும் பனிப் புயல் காரணமாக விமானங்கள் பல நாட்கள் செல்லாத காரணத்தால் திடீர் முடிவெடுத்து காரில் புறப்பட்டு பீனிக்ஸ் வந்து சேர்ந்தார்கள். (750 மைல்கள் 11 மணி நேரம்)
அவர்களுடன் சில நாட்கள் ஊருக்கு உள்ளேயும் இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள வெளி ஊர்களையும் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஒரு நாளிரவு வீட்டிற்கு அருகிலிருக்கும் 3D mini golf என்னும் உள்விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று விளையாடினோம். அரங்கத்தை 3D effectல் அமைத்திருக்கிறார்கள். 3D கண்ணாடி அணிந்து கொண்டு விளையாட வேண்டும். ஒவ்வொரு bayவாகச் சென்று பந்தை குழிக்குள் தள்ள வேண்டும். யார் ஒரே முறையில் தள்ளுகிறாரோ அவருக்கு அதிக மதிப்பெண்கள். ஒரு காகிதத்தில் ஸ்கோரைக் குறித்துக் கொண்டே முன்னேறினால் (15-20) வெற்றி பெற்றவரை அறியலாம். குழு விளையாட்டு இது.
என் மகனின் வார்த்தைகளில் சொல்வதானால்: Time pass; என் வார்த்தைகளில்: ஆலையில்லா ஊருக்கு ...
போகிப் பண்டிகையன்று மருமகளின் வேண்டுகோளின் படி மகனுடன் Tempeயில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். Tempeயும் Phoenix நகரின் ஒரு பகுதி தான்.
Tempeயில் தான் Arizona State University உள்ளது. வழியெங்கும் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக இந்தப் பகுதி முழுவதும் அபார்ட்மெண்டுகளைக் கட்டி இருப்பதைக் கண்டேன்.
நாங்கள் சென்ற சமயம் கோவிலில் ஒரு நடனப் பள்ளியின் ஆசிரியையும் சிறுமிகளும் திருப்பாவைப் பாசுரங்களுக்கு விளக்கம் கூறி நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் ஆங்கிலத்தில் விளக்கம் கூறப்பட்டது. நடனமாடும் சிறுமிகளின் பெற்றோர்களைத் தவிரப் பார்வையாளர்கள் யாரும் இல்லை என்று தோன்றியது. (கோவிலுக்கு வந்த ஓரிருவரையும் உஷ் உஷ் என விரட்டினார்கள்)
கோவில் என்பது ஒரு பெரிய கூடம். அதில் கடவுளர்களின் ஆளுயர திருவுருவச் சிலைகள் உள்ளன. அவற்றிற்கு முன்பாக நடனம் அடிக்க கொண்டிருந்ததால் தொலைவிலிருந்தே வழிபட்டு விட்டுக் கிளம்பினோம்.
இடையில் பொங்கல் பண்டிகையையும் கொண்டாடி முடித்தோம். தலைப் பொங்கல். அபார்ட்மெண்ட் வாசலில் பெரிய கோலம் வரைந்து வண்ணப் பொடியால் அலங்கரித்தேன்.
Stainless steel பாத்திரத்தில் மஞ்சள் கிழங்கைக் கயிற்றில் கட்டிப் பாலைக் காய்ச்சி, குக்கரில் பொங்கல் செய்தோம். நாங்கள் எங்கே மஞ்சள் ,கரும்பு, இஞ்சி கிடைக்கிறது என்று துப்பு கிடைத்துச் செல்வதற்குள் தீர்ந்து விட்டது. வாழைப்பழம் எப்போதும் கிடைக்கும். நடுங்கும் குளிரில் மறுநாள் பால்கனியில் கனு வைத்தோம். நான்கு வெற்றிலைகள் $1 அல்லது $2 என விற்கப்படுகிறது.
பொங்கல் முடிந்த சில நாட்களில் காய்கறிகள் வாங்கக் கடைக்குச் சென்ற போது மாங்காய் இஞ்சி, மஞ்சள், கரும்பு, சேனைக்கிழங்கு என அனைத்தும் இருந்தன. சேனை 1lb (pound) $6.99, மாங்காய் இஞ்சி 1lb = $5.99, முருங்கைக்கீரை ஒரு பெரிய பை $5.99 எனவும் விற்கப்படுகிறது. (1lb =453.500 கிராம்)
எங்கள் நடைப்பயிற்சியும், மருமகளது மருத்துவமனைப் பயணங்களும் மேலும் தொடர்ந்தன.
இடையில் குட்டிப் பாப்பாவை வரவேற்கும் நோக்கில் Registry பதிவு செய்திருந்தார் மகன். Crib, stroller, bibs, rubber sheet, rocking chair, car seat என ஒவ்வொன்றாகக் கூரியரில் வந்திறங்கின.
(ரமணி vs ரமணி தொடரில் ஒரு எபிசோடில் வருவது போல புதுமனை புகுவிழா என்றால் அனைவரும் கடிகாரம் வாங்கிப் பரிசளித்திருப்பார்கள். அது போல அல்லாமல் திருமணம், காது குத்து என எந்த விழாவாக இருந்தாலும் நமக்கு என்ன தேவையோ அவைகளை ஒரு பட்டியலாகத் தயார் செய்து அமேசான்/வால்மார்ட் போன்ற கடைகளில் பதிவு (Registry) செய்து வைத்து விட்டு அந்த linkஐ விழா அழைப்பிதழுடன் உறவினர் நண்பர்களுக்குப் பகிர வேண்டும்.
பரிசளிக்க விரும்புபவர்கள் அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ற பொருளுக்கான பணத்தைக் கடையில் செலுத்தி விட்டால் அந்தப் பொருள் நம் வீட்டை வந்தடையும். யாரும் வாங்கித் தராத பொருட்களை நாம் கடைசியில் வாங்கிக் கொள்ளலாம். மேல் நாடுகளில் இம்முறை மிகவும் பிரபலம்)
ஒரு நாள் எங்கள் மகனின் நண்பர் அனுப்பிய Green bay packers bib, socks ஆகியவைகளும் வந்தன. Crib ஐத் தயார் செய்து அதன் மேல் Green bay துண்டை விரித்து ...
நாம் தொடர்ந்து பொருட்கள் வாங்கும் கடைகளிலிருந்து பாப்பாவுக்கான feeding bottle, vitamin D, bib, பால் பவுடர், wet wipes போன்றவைகளும் gift ஆக வரத் தொடங்கின. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பெட்டிகளும் காரில் தயாராக வைக்கப்பட்டன.
மொத்தத்தில் நாங்கள் தயார்.
பொங்கல் பண்டிகை முடிந்த ஒரு வாரத்தில் அங்கங்கே பூக்கள் பூக்கத் தொடங்கின. குளிர் குறையவில்லை என்றாலும் ஜனவரி இறுதி வாரத்தில் காகிதப்பூ, ஆரஞ்சு மஞ்சள் சிவப்பு வண்ணப் பூக்கள் எல்லா இடங்களிலும் தென்படத் தொடங்கின. சப்பாத்திக் கள்ளி கூடப் பூக்க ஆரம்பித்தது.
என் அமெரிக்கப் பயண நோக்கம் எதுவாக இருந்தாலும் முக்கிய உள்நோக்கம் இங்குள்ள நூலகங்களுக்குச் சென்று Large type எனப்படும் பெரிய அச்சில் உள்ள புத்தகங்களை எடுத்துப் படிப்பது. இம்முறை நிறையப் புத்தகங்களைப் படிக்க முடியவில்லை.
இங்குள்ள நூலகங்களில் அந்தந்தப் பகுதியில் (county) உள்ள மக்கட்தொகைக்குத் தகுந்தவாறு பல்வேறு மொழிப் புத்தகங்களை வைத்திருப்பார்கள். இம்முறை ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மட்டுமே. Foreign languages என்ற பகுதி இல்லை (கலிபோர்னியாவின் லிவர்மோர் நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிப் புத்தகங்களே இருந்தன)
கடந்த வருடம் என் ஐரோப்பியப் பயணக் கட்டுரைகளை Photobook ஆக மகனது உதவியுடன் அச்சிட்டேன். அதற்கு நண்பர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக நான் 2013ஆம் ஆண்டிலிருந்து என் facebook மற்றும் blogல் வெளியிட்ட பதிவுகள் அனைத்தையும் Photobook ஆக இந்த ஆறு மாதங்களில் அச்சிட விரும்பினேன்.
தலைப்பு வாரியாகக் கணினியில் ஏற்கனவே பிழை திருத்தம் செய்து சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களை மீண்டும் ஒரு முறை பிழை திருத்தி வண்ண மயமாக்கி jpeg fileகளாக மாற்றி photobook ஆக மற்றும் வேலையை அக்டோபர் கடைசி வாரத்தில் இங்கு வந்திறங்கிய நாளிலிருந்தே ஆரம்பித்தேன்.
பகல் நேரத்தில் கனடா, கலிபோர்னியா வந்திருக்கும் தோழிகளுடனும் நடைபயிற்சி நேரத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்களுடனும் குறிப்பாக என் தாயாருடனும் பேசுவேன்.
பொங்கலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு சென்ற check upல் மருமகளது ரத்தக் கொதிப்பு ஒரே சீராக இல்லை எனக் கூறப்பட்டது. Blood, urine எனப் பரிசோதனைகள் செய்தார்கள். இங்கே முடிவுகள் சாதாரணமாக இருந்தால் ஈமெயில் மட்டும் அனுப்புவார்கள். ஏதேனும் பிரச்சினை என்றால் மட்டுமே தொலைபேசியில் அழைத்துக் கூறுவார்கள்.
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகும் இரண்டு நாட்களுக்கு யாரும் தொடர்பு கொள்ளாததால் நாங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
38ஆவது வாரம் ஆரம்பித்து விட்ட நிலையில் மருமகளின் உடல் நிலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை . ரத்தக் கொதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டதே தவிர அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் நாங்களும் அவருக்காக உணவில் உப்பைக் குறைத்து உண்டோம்.
ஜனவரி 22, 2023. அதிகாலை 5.30 மணிக்கு மகன் அறையிலிருந்து எழுந்து வந்து எல்லா விளக்குகளையும் போட்டதும் என் கணவர் பதறி எழுந்து என்னவோ வித்தியாசமாக நடந்திருக்கிறது எழுந்திரு என என்னையும் எழுப்பினார்.
பரிசோதனை முடிவுகள் வெளி வந்து மூன்று நாட்களாகியும் அதைக் கண்ணால் கூடக் கண்டிராத மருத்துவர் அன்று அதிகாலை தான் பார்த்துள்ளார் போலும். முடிவுகள் சரியாக இல்லை. காலை எட்டு மணிக்கு மருத்துவமனையில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
எப்போதும் பேசாத மருத்துவரின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததால் தெரியாத எண் என மகன் பேசாமல் விட்டிருக்கிறார். மருத்துவர் வாய்ஸ் மெயில் போட்டு திருப்பி அழைக்கச் சொல்லவே பேசி இருக்கிறார். மருத்துவர் இந்தியர். மனிஷா ...... (Second name வேண்டாமே)
செயற்கையாகப் பிரசவ வலியை ஏற்படுத்தப் போகிறோம். 24 - 72 மணி நேர முயற்சி இது. தயாராக வாருங்கள் என மருத்துவர் கூறவே சாப்பாட்டு மூட்டைகளுடன், மகளுக்குத் தகவல் அனுப்பி விட்டு, காலை 7.30 மணிக்கு -1 டிகிரி குளிரில் (ஆனால் சூரியனார் தென்பட்டார்) மருத்துவமனையை நோக்கிக் கிளம்பினோம்.
Mountain Vista Medical Center, Mesa.
அனுபவங்கள் தொடரும்…
No comments:
Post a Comment