பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள இந்நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதி வாரத்தில் ஒரு நாள் இன்று மதியம் இரண்டு மணிக்கு "Avatar 2" என அழைக்கப்படும் Avatar: The way of water திரைப்படத்தை காண செல்லப் போகிறோம் என்று எங்கள் மகன் கூறினார்.
[பார்த்த வரை எதுவும் புரியவில்லை என்பது தனி …]
மதியம் இரண்டு மணிக்கு படம் ஆரம்பித்து மூன்று மணி நேரங்கள் ஓடும் அம்மா.
மீண்டும் என் அய்யய்யோ!!
இரண்டே வரியில் முதல் பாகத்தின் கதையை கூறுங்கள் எனக் கேட்டு அறிந்து கொண்டேன். வில்லனாக வந்தவர் திருந்தி நல்லவனாக மாறுகிறார், அது தான் கதை [அட! அவ்வளவுதானா?]
Phoenix நகரின் Mesa பகுதியில் உள்ள Cinemark theatre உள்ளே நாங்கள்(நான், என் கணவர், மகன், கர்ப்பிணி மருமகள்) நுழைவதற்கு முன்பு google செய்ததில் "no food, no drinks allowed inside" என இருந்ததை பார்த்து மகனே ...என்ன செய்வது எனக் கேட்டேன்.
எப்போதும் போல் "I am pregnant" தான் என்றார். [இங்கே கர்ப்பிணிகளுக்கு சலுகை அதிகம்]
நானா?? என அலறினேன்

என் அடுத்த கேள்வி…
நம் ஊரில் ஆங்கிலப் படங்களுக்கு subtitle போடுவார்கள், இங்கே உண்டா?
இல்லை அம்மா, வேற்று மொழிப் படங்களுக்கு மட்டும் தான் போடுவார்கள்.
சிரமப் படாமல் மூன்று மணி நேர படத்தை எப்படிப் பார்ப்பது?
அதற்கு இந்த ஊரில்(நாட்டில்) வசதி உள்ளது ஏற்பாடு செய்கிறேன் அம்மா!
சரி என்று கூறிவிட்டு, செல்லும் வழியில் அவசரமாக Avatar 1 சில தகவல்களை விக்கிப்பீடியாவில் படித்தேன்.
எனக்குப் புரிந்த வரை உங்களுடன் பகிர்ந்து விட்டு திரைப்படம் பார்க்க செல்லலாம். [விக்கி மாமா வாழ்க!]
இந்த epic scientific படம் performance capture என்னும் தொழில்நுட்பத்தில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர்/இயக்குனர்/கதாசிரியர் திரு James Cameron அவர்களால் தயாரிக்கப்பட்டு 2009ஆம் வருடம் முதல் பாக மும் 2022 டிசம்பரில் இரண்டாவது பாகமும் வெளியிடப்பட்டது.
இருபத்து இரண்டாம் நூற்றாண்டில் (2154) நடப்பதாக இந்தக் கதை அமைக்கப் பட்டுள்ளது.
Alpha Centauri என்னும் நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள Pandora என்னும் உயிரினங்கள் வாசிக்கக் கூடிய ஒரு நிலவில் தொழில் நுட்பத்தில் முன்னேறிய Na'vi இன மக்கள் வசிக்கிறார்கள்.( இவர்கள் தம் தொண்டையை அழுத்தினால் walkie talkie குறிப்பிட்ட frequency உள்ளவருடன் போல் பேச முடிகிறது)
இவர்கள் மனிதர்களை போன்ற குணங்களை உடைய ஆனால் உருவ அமைப் பில் மாறுபட்ட humanoids.
நீல நிறம், எட்டு விரல்கள், நீண்ட ஜடை, அதை விட நீண்ட வால், மூன்று மீட்டர் உயரம், பறக்கும் தன்மை என உருவ அமைப்பு உள்ளது. இறை நம்பிக்கை உடையவர்கள். அங்கும் பூமியில் நாம் வணங்கும் அரசமரம், வேப்பமரம் போல மரங்கள் உள்ளன.
unobtanium என்னும் பெயருடைய மதிப்பு மிக்க தாது இவர்களது மிகப் புனிதமான மரத்தின் கீழே (diamond, uranium, platinum போல) உள்ளது.
[unobtanium,humanoids, Na’vi மொழி என இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளவை பலவும் கற்பனையே. தமிழில் கற்பனையூர், ஆங்கிலத்தில் dreamsville, splitsville எனக் கூறுவது போல]
Pandora நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள வாயு சூழ்ந்த பகுதி என்பதால் அங்கே புவியீர்ப்பு விசை இல்லை. மிதக்கும் மலை, மரங்கள், பறக்கும் மிருகங்கள், அதன் மேலேறி பறக்கும் Na'vi மக்கள் அங்கே உண்டு. அகலமான மரங்களே அம்மக்களின் வீடுகள். (நட்சத்திரங்கள் வாயுக்களால் ஆனவை)
இவர்கள் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு இவர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வளி மண்டலத்திலிருந்து பிரித்துத் தருகிறது. மனிதர்கள் அங்கே செல்லும் போது விசேஷமான முகமூடி அணிந்தால் போதுமானது.
நிற்க.இவ்வளவு நேரமா ஓடிக்கொண்டா இருந்தோம் என்று கேட்கிறீர்களா ?
[என் சிறு வயதில் நான் படித்த கதைகளில் ஒரு தகவலை சொல்லிக் கொண்டிருக்கும் போது வேறு தகவலுக்கு மாற இப்படி தான் "நிற்க" சொல்வார்கள். ஆங்கில இலக்கியத்தில் degression]
இருபத்து இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் கனிம வளங்கள்(mineral resources) அனைத்தும் தீர்ந்து பூமி பல பிரச்சினைகளை (chaos) சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் தொழில் நுட்பத்தில் முன்னேறிய, அரசின் அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் பால்வெளியில் (galaxy) உள்ள வேறு கிரகங்களுக்கு சென்று பூமிக்கு தேவையான கனிமங்களை எடுத்து வருகிறது. [colonization]
வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பவும் அங்கிருந்து கனிமங்களை பூமிக்கு கொண்டு வரவும், தேவைப்பட்டால் சண்டையிடவும், அதி நுட்ப வாகனங்களை பயன்படுத்தும் வல்லமை கொண்ட அந்த நிறுவனம் மனிதன் & Na'vi மக்களின் geneகளை வைத்து நூதனமான ஒரு “அவதாரத்தை” உருவாக்குகிறது.
இந்த Avatar ஒரு virtual உருவம் தான், யாருடைய Avatarஐ செய்கிறார்களோ அவரது மனித உடல் பூமியில் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு கூடு போன்ற அமைப்பில் இருக்கும்; அவரது மூளையின் கட்டுப்பாட்டில் Telepathy மூலம் அவதார் Pandoraவில் செயல்படும்.
சற்றே கால் ஊனமாகி கடற்படையிலிருந்து (Marine) ஒய்வு பெற்ற Jake Sullyயின் அவதாரை Pandora விற்கு அனுப்பி அங்குள்ள மக்களுடன் பழக விட்டு unobtanium எங்கே இருக்கிறது என்று உளவு கூற சொல்கிறார்கள். (of course, உன் காலை சரி செய்கிறோம் நீ கண்டு பிடித்து எங்களுக்கு சொல் என கூறித் தான்)
அவருடன் ஒரு அவதாரக் கூட்டமே வருகிறது. இறை நம்பிக்கை, அன்பு பாசம் நேசம் ஒற்றுமை என வாழும் அந்த மக்களை காட்டிக் கொடுக்க Jake விரும்புவதில்லை. உடன் வந்தவர்கள் அவரை கொல்ல முயற்சிக்கையில் Na'vi கூட்டத் தலைவரின் மகள் Neiythri நம் Jakeஐ காப்பாற்ற இருவரும் காதல் கொள்கிறார்கள்.
உடன் வந்தவர்களுடன் சண்டையிட்டு Pandoraவின் அமைதிக்காக போராடுகிறார் Jake. (அவரின் அவதார்)
Na'vi மக்கள் Jake தவிர அனைவரையும் (அவதாரங்களையும்) பூமிக்கு திருப்பி விரட்டி விடுகிறார்கள். Jakeன் மனித mutation பகுதியை மட்டும் அழித்து Na'vi உருவத்துடன் தங்களில் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மீண்டும் நிற்க.
முன்கதை சுருக்கத்தை தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
இனி Avatar: The way of water படம் பார்க்க செல்வோம்.
[இதுவா சுருக்கம் எனக் கேட்காதீர்கள். முதல் பாக கதையே தெரியாமல் எப்படி என்னுடன் இரண்டாம் பாகம் பார்ப்பீர்கள்?]
மீண்டும் நிற்க. [நின்று நின்று செல்ல இதென்ன corporation குப்பை லாரியா என்ற உங்கள் mind voice எனக்கு கேட்கிறது]
திரைப்படத்தை Subtitle உதவியுடன் காண போகிறோம் . எனவே அது பற்றிய தகவலையும் தெரிந்து கொண்டே உள்ளே செல்லலாம்.
திரையரங்கில் நாம் பார்க்க திரையின் கீழே தெரிவது open caption. அதில் நடிகர்களின் பேச்சுக்களை மட்டும் வசனமாக்கிப் போடுவார்கள்.
Closed caption என்பது அடிப்படையில் மொழி புரியாத மக்களுக்கானது அல்ல. கேட்டல் குறைபாடுள்ள மக்களுக்கானது. (CC என Hotstar, Netflix, Amazon prime போன்றவற்றில் பார்த்திருப்போம்)
இந்த வகை captionனில் பேச்சுக்களுடன் non-speech gesturesகளையும் மொழிபெயர்த்துத் தருவார்கள். பெருமூச்சு விடுதல் (hmmm), அப்படியா என ஆச்சரியப்படுதல் (Oh!) போல.
Closed captionஐ திரையரங்கில் மூன்று விதமாக தருகிறார்கள்.
1.Cup holder stand (இருக்கையின் cup holderல் பொருத்தி விட்டு திரையில் காட்சிகளுக்கு ஏற்ப தோன்றும் வசனங்களைப் படித்துக் கொள்ளலாம்)
2.Cup holder mirror (திரையரங்கின் மேல் பகுதியில் projector அருகில் வசனங்களை தலை கீழாக திரையிடுவார்கள். கண்ணாடி நமக்கு நேராகக் காட்டும்)
3.Special effect glasses (விசேஷ கண்ணாடியை அணிந்தால் படம் + CC சேர்ந்து தெரியும்)
நாங்கள் சென்ற அரங்கில் cup holder stand தந்தார்கள். இரண்டு வாங்கி, எப்படி அது வேலை செய்யும் எனத் தெரிந்து கொண்டோம். (அப்போது மதியம் 1.45)
சிறிது நடந்ததும் 3D கண்ணாடி தந்தார்கள்.
[மீண்டும் என் அய்யய்யோ! மூன்று மணி நேரப் படத்தை 3D கண்ணாடி அணிந்து வேறு பார்க்க வேண்டுமா? என்ன கொடுமை சரவணன் இது?]
திரையரங்குக்குள் நுழைந்தோம். திரையில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. தட்டு தடுமாறி அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் மகன், மருமகள், நான், என் கணவர் என்ற வரிசையில் அமர்ந்து கொண்டோம்.
இந்திய மற்றும் வேற்று நாட்டுப் படங்களுக்கு இது போல விளம்பரங்களை ஒட்டுவதில்லை. ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே என மருமகள் கூறினார்.
சுகமான, அகலமான recliner இருக்கை. ஆனந்தமாக காலை நீட்டி சாய்ந்து அமர்ந்தேன்.
மகன் cup holderல் என் CC standஐ பொருத்திவிட்டு தனக்கும் ஒன்று பொருத்திக் கொண்டார்.
சாய்ந்த வண்ணம் பார்த்தால் Stand ஒரு விதமாக வளைந்து நின்றது. திரைக்கு கீழ் பாகத்தில் இருக்கும் படி பொருத்தினால் தானே காட்சிக்கு ஏற்ற வசனத்தை படிக்க முடியும்?
இருக்கையை லேசாக முன்பக்கம் நிமிர்த்தி அமர்ந்தேன். வலது கையால் வளைந்த standஐ நேராக்க முயற்சி செய்து 50% வெற்றி பெற்றேன்.
படம் இரண்டு மணிக்கு ஆரம்பம் எனக் கூறப்பட்டாலும் மூன்று மணி வரை அலுக்க சலிக்க விளம்பரங்கள், புதுத் திரைப்படங்களுக்கான trailorகள் என ஓடிக் கொண்டே இருந்தது. நம் ஊரை போலத்தான் இங்கும், trailerல் காட்டப்படும் பல படங்கள் திரைக்கு வருவதே இல்லை வந்தாலும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் அறியப்படுவதில்லை.
[கழுத்தை வளைத்து உடம்பை நெளித்து ....எப்படிப் பார்த்தாலும் வசனமே தெரியவில்லை.
மகனே...வசனமே தெரியவில்லையே ...
விளம்பரங்கள் தெரியாது, படம் ஆரம்பித்ததும் தெரியும்]
Standஐ பிடித்துக் கொண்டே இருந்ததில் கை வலிக்க தொடங்கியது ...
முக்கிய திரைப்படம் ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று இப்போது நீங்கள் 3D கண்ணாடியை அணியலாம், இனிமேல் வரும் விளம்பரங்கள் 3Dயில் வரும் என திரையில் தோன்றியது.
[அச்சச்சோ ...3D கண்ணாடி இருப்பதை மறந்தே போய் விட்டேன், எங்கே வைத்தேன்? Cup holder stand அக்கப்போரில் கண்ணாடியை எங்கே வைத்தேன்?]
Standஐ விட்டு விட்டு 3D கண்ணாடியை தேடி எடுத்து (அரையிருட்டு) நான் எப்போதும் அணியும்
கண்ணாடி/KN95 foldable protective 3D maskகளுக்கு மேல் அணிந்து கொண்டேன். (3D மாஸ்க்கிற்கும் திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை)
நம் சென்னையில் தந்த கண்ணாடி போல இல்லாமல் light weight ஆக நான் ஏற்கனவே அணிந்திருந்த கண்ணாடியுடன் இணை பிரியா உறவு போல ஒட்டி கொண்டது மட்டுமில்லை திரையில் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரிந்தன.
3D என்றாலும் நம் படங்களைப் போல பாம்பு நம் கண்ணைக் குத்தாமல், துப்பாக்கி குண்டு முகத்தில் விழாமல் மென்மையான இசையுடன் இயல்பான நிலையில் காட்சிகள் வந்து சென்றன.
[Technical ஆன சில குறிப்புக்கள் உங்கள் புரிதலுக்காக இங்கே ...
2D என்பது இரண்டு பரிமாணங்கள் உடையது. (நீளம், அகலம்) இதற்கு உதாரணம் புகைப்படம், காகிதம், செய்தி தாள் போன்றவைகள்.
3D என்பது நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நம் இரண்டு கண்களாலும் ஒரே சமயத்தில் பார்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் 3Dயில் தெரிபவை தான்.
இவ்வகை திரையரங்குகள் RealD 3D, Dolby 3D, XpanD 3D, and IMAX 3D என பல விதமான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
(RealD, Dolpy, XpanD போன்றவைகள் நிறுவனத்தின் பெயர்கள். IMAX என்பது Imaging maximum என்பதன் சுருக்கம்)
நாங்கள் பார்த்தது RealD 3D திரையரங்கு என்பதால் அதற்கு ஜோடியான கண்ணாடியை எங்களுக்கு தந்திருந்தார்கள்.
3D திரையிடுதலுக்கு ஏற்ற கண்ணாடியை அணிந்தால் தான் துல்லியமாக தெரியும். [சென்னையில் நான் 3D படம் பார்த்த போது உருவங்களை சுற்றி பல வண்ணங்கள் தெரிந்தன. பொருத்தமான கண்ணாடிகளை தரவில்லை போலும் என இப்போது தோன்றுகிறது]
RealD 3D கண்ணாடிகள் stereoscopic முறையில் circular polarization என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என அறிகிறேன். இம்முறைப்படி ஒரு frame முதலில் வலது கண்ணில் மூன்று முறையும் anticlockwise ஆக வந்து இடது கண்ணில் மூன்று முறையும் தெரிய வைக்கப்படுகிறது.
ஒரு காட்சி என்பது நிமிடத்திற்கு 24 frameகள். இம்முறையில் 48 frameகள் ஒன்று சேர்ந்து நமக்கு ஒரு காட்சி 3Dயில் துல்லியமாகத் தெரிகிறது]
அனைவரும் ... (மொத்தமே 20 பேர் கூட இல்லை) ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவதார் 2 ஆரம்பம்.
திரையை ஆவலுடன் 3D கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்ததில் CC பற்றி மறந்து விட்டேன். நம் Jake Sully & Neiythriயின் 15 ஆண்டு குடித்தனத்தின் விளைவாக இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை, ஒரு அவதார் பெற்றுத் தந்த தத்து பெண் மற்றும் பூமியிலிருந்து வந்த வில்லன் மனைவியின் அவதார் Pandoraவில் பெற்ற மனித ஆண் குழந்தை என பெரிய குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. மனிதக் குழந்தையை பூமிக்கு விசேஷ வாகனத்தில் அழைத்து போக ஏற்ற வயது இல்லை என்ற காரணத்தால் Pandora விலேயே விட்டு சென்று விட்டார்கள்.
[இதற்கு வசனம் தேவையே இல்லை.
சில நிமிடங்களில் நினைவு வந்து stand வழியாகப் பார்த்தால் எதுவுமே தெரியவில்லை. வளைந்து இருந்த ஸ்டாண்டை நிமிர்த்தி, தலையை வளைத்து ,உடம்பை நிமிர்த்தி ....ம்ம்ஹூம் ...ஒன்றும் தெரியவில்லை .
கிசுகிசு குரலில்: மகனே...எதுவும் தெரியவில்லை
தெரியும் பொறுமையாக இருங்கள்... [அவருக்கும் எதுவும் தெரியவில்லை :)]
பூமியில் இம்முறை வேறு விதமாக genetic mutation செய்து அவதார்களை உருவாக்கி Pandoraவிற்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள்
[முக்கியமான discussion நடக்கிறதே ...வசனங்கள் சரியாக புரியவில்லையே ...மீண்டும் ஸ்டாண்டை நிமிர்த்தி ...தலையை வளைத்து, உடம்பை நிமிர்த்தி ...]
வில்லன் இம்முறை Pandora செல்ல காரணங்கள் இரண்டு.
1. பூமி புத்திரர்களுக்கு எதிராக மாறிய Jakeஐ தீர்த்துக் கட்டுவது
2. Tulkun எனப்படும் திமிங்கிலம் போன்ற ஒரு (மூன்று கண் விசித்திர மிருகம்) மிருகத்தின் மூளையில் உள்ள Amrita (நம் ஊர் அமிர்தம் தான்) என்னும் enzyme ஐ எடுத்து வந்து மனிதனின் ஆயுளை நீட்டிப்பது.
[என்னென்னவோ பேசிக் கொள்கிறார்களே ...
மீண்டும் மகனே...
இம்முறை என் தொல்லை தாங்காமல் மகனும் மருமகளும் வெளியே சென்று வேறு ஒரு standஐ வாங்கி வந்து தந்தார்கள். இம்முறை வரும் போதே CC தெரிந்தது.
மகன் நீங்களே பாருங்கள் எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டு இருக்கைக்கு சென்று விட்டார்.
சரி ...ஏற்கனவே cup holderல் இருந்த ஸ்டாண்டை எப்படி வெளியில் எடுத்து புதியதை பொருத்துவது? படம் வேறு தொடங்கி விட்டது…
முதல் முறை உள்ளே பொறுத்தவே சிரமப் பட்டோமே...வளைந்து கோணையாக வேறு நிற்கிறது]
நான் யோசித்து முடிப்பதற்குள் Jake எதிரிகளின் வருகையை ஊகித்து மனைவியுடன் கலந்தாலோசித்து பிள்ளைகளுடன் வேறு இடத்திற்கு குடி பெயர முடிவு செய்து விட்டார்.
[சரி, காலை நீட்டி வசதியாகத் தானே அமர்ந்திருக்கிறோம், புது ஸ்டாண்டை மடியில் வைத்து கையில் பிடித்துக் கொண்டே பார்க்கலாம் ...கண்ணுக்கு நேராக திரைக்கு கீழாக ...]
விசித்திரமான பறக்கும் விலங்கின் மேலேறி பண்டோராவின் வேறு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கே உள்ள இனத்தவர் “பச்சை” நிறத்தில் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் “கடல் சார்ந்த இனத்தவர்கள்”.
நீல நிறத்தவர்கள் தரையில் வசிப்பவர்கள் என்பதால் பச்சை தலைவர், அவர் மனைவி மற்றும் பலரும் இவர்களை வரவேற்பதில்லை.
[நீள நீளமான வசனங்கள் ...கை வலி ...சற்றே கனமான இரும்பு ஸ்டாண்டை சிறிது அசைத்தாலும் முதல் இரண்டு வரிகளே தெரிந்தன மூன்றாவது வரி வசனம் என் ஊகத்திற்கே ...சரி இடது கையில் பிடித்து கொள்வோம் என மாற்றினேன்]
படம் தொடர்கிறது ...ஆரம்பத்தில் வெறுக்கப்பட்ட நம் jake குடும்பத்தினர் பச்சை மக்களால் நாளடைவில் பல நெருக்கடிகள், விமர்சனங்களுக்கிடையில் சிறிதளவு ஏற்றுக் கொள்ளப் படுகிறார்கள். (இரண்டாவது பையன், தத்து பெண், மனிதப் பையன் ஆகியோருக்கு 10 விரல்கள் என்று கேலி செய்கிறார்கள். காரணம் இவர்கள் மனித gene உடையவர்கள்)
[இடது கையை மருமகள் இடிக்கிறார் ...என்னவென்று திரும்பினால் ...ரிப்பன் சேவு பொட்டலம்...அப்பாவிற்கு கொடுங்கள்...வலது கையிற்கு stand மாற்றம்]
பச்சை பிள்ளைகள் நீலப் பிள்ளைகளை கடலுக்கு அழைத்து சென்று பயிற்சி தருகிறார்கள்.
விசித்திரமான, அடிபட்ட tulkunஐ காண்கிறார்கள்...கதை தொடர்கிறது... கதை தொடர்கிறது…
[அப்பப்பா...கை வலி ...3D மாஸ்க் உள்ளே சூடான காற்று வெளியேற முடியாமல் ...அமெரிக்காவில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது விதி]
இடையில் தத்துப் பெண் கடலுக்கடியில் உள்ள புனித மரத்துடன் தன்னை தொடர்பு படுத்தி தன் தாய் யாரென அறிந்து கொள்கிறாள். பின்னலை மரத்துடன் கட்டினால் connection activated

வலிப்பு வந்து விடுகிறது.
பூமியிலிருந்து வைத்தியர்களை Jake வர வைக்கிறார். இனிமேல் புனித மரத்தின் அருகில் தத்து பெண் செல்லக் கூடாது என்று கூறி செல்கிறார்கள்.
[இம்முறை வலது கையில் இடி...சேவு பொட்டலம் return ...ஸ்டாண்ட் கைமாற்றம் ...ஸ்ஸ்ஸப்பா...என்ன வலி இது]
இதற்குள் வில்லன் அவதாரங்கள் மருத்துவர்களை பின் தொடர்ந்து வந்து இவர்களை கண்டு பிடித்து விடுகிறார்கள். பச்சை தலைவரை மிரட்டி Jake குடும்பம் எங்கே எனக் கேட்டு மிரட்டுகிறார்கள்...
[ஒழுங்காக சாயாமல், சற்றே குனிந்து ஸ்டாண்டை பிடித்ததில் முட்டி வலி ஆரம்பம் காலை மடக்குவோம்...மடக்கினால் கையில் உள்ள ஸ்டாண்ட் கோணையாகி வசனம் தெரியவில்லை ...]
மனித சிறுவனை தன்னுடையது என்று வில்லன் கண்டு கொண்டு அவனை தாஜா செய்து விவரம் அறிய பார்க்கிறார். அவர்களின் மொழியையும் சிறுவன் கற்றுக் கொடுக்கிறான். (தந்தையின் கெட்ட நோக்கம் அறியாத சிறுவன்)
Jake உடன் சண்டை, உடன் tulkunகளின் மூளையிலிருந்து amrita எடுக்கும் வேலை என வில்லன் பிசி ...
[மீண்டும் இடது கையில் இடி ...இம்முறை பிஸ்கட் ...ஸ்டாண்ட் கை மாற்றம்]
மூன்று குழந்தைகளை வில்லன் கப்பலில் சிறைப் பிடிக்கிறார்... சண்டை…
[ஸ்ஸ்ஸப்பா ...மூச்சே விட முடியவில்லை ...முகக் கவசத்தை லேசாக இறக்கி மூடினேன். எதற்கு இவ்வளவு சிரமம்? சிரிப்பாக வருகிறது.
இடையில் பிஸ்கட் பொட்டலம் return]
பச்சைத் தலைவன் மற்றும் நீலத் தலைவன் சண்டையிட்டு குழந்தைகளை மீட்கிறார்கள்.
[-10 டிகிரி குளிருக்கான Puffer jacket உடல் சூட்டை அதிகரிக்க ... Jacket டைக் கழற்றுவோமா? ம்ஹூம்… ஸ்டாண்டை விடுத்து Jacketடைக் கழற்றும் நேரம் கதையில் என்ன நடக்குமோ ...சகித்து கொள்வோம்]
வில்லன் மீண்டும் இரண்டு குழந்தைகளை சிறைப் பிடித்து வைத்துக் கொண்டு, Jake நேரில் வந்தால் குழந்தைகளை விடுகிறேன் எனக் கூற ...Jake செல்ல ஒத்துக் கொள்ள, Neiythri மறுக்க ...
[Intermission எப்போது வரும்? அப்போது கைகளுக்கும் ஓய்வு, jacket ஐயும் கழற்றி விடலாமே!
அதெல்லாம் கிடையாது அம்மா _ மருமகள்
அய்யய்யோ ...ஏற்கனவே 2-4.30 உள்ளே இருக்கிறோம்]
மற்றொரு பக்கம் பூமியிலிருந்து போர் வாகனங்கள் பல வந்து கடலில் tulkun களை கொன்று குவிக்க கோவம் கொண்ட பச்சை மக்கள் எதிர்த்து போராட....
[மாஸ்க் உள்ளே...புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் ... சுடு காற்று …மூச்சு விட முடியவில்லை ... வலது தோள்பட்டை, கை வலி அதிகரிக்கிறது. இடது கையில் பிடித்தால் திரையின் angle சரியாக இல்லை]
Jakeன் முதல் மகன் அடிபட்டு இறக்க, அவன் மேல் காதலாய் இருந்த பச்சை தலைவனின் பெண் சோகப்பட...Neiythri வருந்தி சண்டைக்கு தயாராய் ஆயுதம் ஏந்த ....
[உடல் சூடு தாங்கவில்லை ...தாகம் ...என்னங்க தண்ணீர் பாட்டிலை எடுத்து தாங்க ...]
கர்ப்பிணியான பச்சை தலைவியும் கணவன் மறுத்தும் சண்டைக்கு தயாராக...
[மீண்டும் இடது கையில் இடி...மீண்டும் சேவு ...மீண்டும் ஸ்டாண்டை வலது கை மாற்றம் ... வசனம் போச்சே ...
முதுகு வலி ...சற்றே சாய்ந்து கொள்வோம் ...வசனம் தெரியவில்லை ...மீண்டும் முன்னால்... recliner இருக்கை என்பதால் நீட்டிய காலை மடக்க முடியவில்லை, மடக்கினால் வசனம் தெரியவில்லை]
அடிபட்ட tulkunஐ இரண்டாவது மகன் காப்பாற்றி அதனுடன் டெலிபதி மூலம் என்ன காரணத்திற்காக அதை ஒதுக்கி வைத்துள்ளார்கள் என அறிந்து கொள்கிறார்
[திரையை பார்த்த வண்ணம் CC படித்த வண்ணம், கதையை குத்து மதிப்பாக புரிந்து கொண்ட வண்ணம்... இடது கையும், தலையும் வலிக்க தொடங்குகி ன்றன, இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி? கடிகாரத்தை பார்க்கிறேன்]
வில்லன் Jake சண்டையிடும் கப்பல் தண்ணீரில் மூழ்குகிறது. பெரிய குழந்தைகள் வில்லனின் பையனால் விடுவிக்கப் படுகிறார்கள்.
[என் கண்ணாடி, 3D கண்ணாடி, மாஸ்கின் எலாஸ்டிக் எல்லாம் சேர்ந்து என் காதுகளை அழுத்த்த்த்திக் கொண்டிருக்க ... காது மடல் வலி...எப்போது படம் முடியும்? என்னங்க ...தண்ணீர் பாட்டிலை எடுங்க]
குட்டிப் பெண்ணும் அம்மாவும் தண்ணீரில் மாட்டிக் கொள்ள தத்துப் பெண் புனித மரத்தின் பலனால் positive vibesஐ தண்ணீரில் பரப்ப இருவரும் தப்பி வெளியில் வருகிறார்கள்.
வில்லன் அடிபட்டு கிடக்கும் நிலையில் அவரைக் கொல்லாமல் பூமிக்கே விரட்டி விடுகிறார் Jake.
(அப்போது தானே Avatar 3 எடுக்க முடியும்?)
[படம் இன்னுமா முடியவில்லை??]
நாங்கள் இங்கே வந்ததால் உங்களுக்கு சிரமம் ஆபத்து நாங்கள் வேறு இடம் பார்த்து போகிறோம் என்று Jake பச்சை தலைவனிடம் கூற, அவர் No no, now you are one among us என கூறுகிறார். வில்லனின் மகனை தன் இறந்து போன மகனுக்கு பதிலாக வந்த மகன் என அரவணைத்து அழைத்து செல்கிறார்.
சுபம்.
[அப்பாடா...]
பின் குறிப்பு:
புதுமையான அனுபவத்திற்காகத் தான் Closed caption stand உதவியுடன் திரைப்படம் பார்த்தேன். ஆங்கிலம் புரியாமல் அல்ல.
Good article!! Wish it was more focused to just your experience of the movie rather than what happened in the movie.
ReplyDelete