24-25 ஏப்ரல்,2018
ஆஸ்திரேலியப் பயணத்தின் இறுதிக் கட்டமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியை நோக்கி கிளம்பினோம்.
ஆஸ்திரேலியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே மக்கள் வசிக்கும் ஒரு கண்டம்/நாடு.
மணற்பாங்கான பாலைவனங்கள் உடைய கண்டம் என்பதால் தரை மார்க்கமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது சற்றே சிரமமான காரியம்.


ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு காரில் பயணம் செய்யும் போது சில நாட்களுக்கு தேவையான உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் /டீசல் போன்றவற்றை எடுத்து செல்வார்களாம். கார் ரிப்பேர் ஆகி விட்டால் உதவி வந்து சேர சமயத்தில் 2,3 நாட்கள் கூட ஆகுமாம். சாலையில் சக பயணி என்பவரை பார்ப்பதே அரிது.
சில நாட்களே நாங்கள் அந்தக் கண்டத்தில் பயணித்ததால் விமானப் பயணமே சாலச் சிறந்தது என தீர்மானித்து நகரங்களுக்கிடையே விமானத்தில் பறந்தே சென்றோம்.
ஆஸ்திரேலியக் கண்டத்தின் கிழக்கு கடற்கரைப் அமைந்துள்ள சிட்னி நகரம் அக்கண்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது.
சிட்னி என்றாலே நமக்கு நினைவில் வருவது கிரிக்கெட் மற்றும் ஓபரா ஹவுஸ் தான். ஆஸ்திரேலிய பயணம் முழுவதுமே நாம் இன்று என்ன இடத்தை காணப் போகிறோம் அதன் சிறப்புக்கள் என்ன என்ற சஸ்பென்ஸ் தான். காரணம் ஆஸ்திரேலிய நகரங்களை பற்றி நாம் அதிகம் கேள்விப் படுவதில்லை .
பல சிறப்பம்சங்களைக் கொண்ட சிட்னி நகரை அடைய விமானத்தில் (JET STAR) 1.30 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும்.
Brisbane விமான நிலையக் காத்திருப்பு நேரத்தில் எங்கள் குழுவின் மேனேஜர் ஆஸ்திரேலியாவின் பிரபல Perfume ஆன "Clover"ஐ சலுகை விலையில் 100ml பாட்டில்களில் விற்கிறார்கள். விரும்புபவர்கள் வாங்கலாம் என்று கூறினார். 60 A$ பெறுமானமுள்ள அந்த பாட்டிலை 20 டாலர்களுக்கு சலுகை விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். நானும் இன்னும் சிலரும் வாங்கினோம்.
பயண நேரம் மதிய உணவு நேரம் என்பதால் விமானத்திலேயே உணவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. Budget Airlines என்றாலும் முன்பே ஏற்பாடு செய்திருந்தால் உணவளிப்பார்கள். எங்கள் அனைவருக்கும் vegetarian cup noodles தரப் பட்டது. நூடுல்ஸ் தட்டையாக இருந்தது. அதனுள் 5 mm X 5mm அளவில் வெட்டப்பட்ட ஒரே ஒரு கேரட் துண்டு, ஒரு இஞ்சி துண்டு, ஒரு பீன்ஸ் துண்டு மற்றும் கண்ணுக்கே தெரியாத அளவில் பொடியாக நறுக்கப் பட்டு தூவப்பட்ட கொத்துமல்லியும் தென்பட்டது. எந்த வித சுவையும் இல்லாத அந்த உணவை முடிந்த வரை உண்டோம். வேறு வழி?! (சாப்பாடு சுவையாக இல்லாத நாட்களை என் மாமியாரின் வார்த்தைகளில் கூறினால் " ஹ்ம்ம் இன்று ஏகாதசி என்று நினைத்துக் கொள்கிறேன்")
மதிய உணவை சாம்பாரும் பொரியலுமாக உண்டு பழகிய நம் மக்களுக்கு அன்று அதிருப்தியோ அதிருப்தி.
1.30 மணி நேர விமானப் பயணம் என்பது மிகக் குறைவான நேரமே, அதுவும் சாப்பிட்டு பிரச்சினையும் சேர்ந்து கொள்ள சிட்னி வந்ததே தெரியவில்லை.
விமானம் தாழ்வாக கடற்கரையோரமாக பறந்து நகரின் மேலே சென்ற போது ஓபரா ஹவுஸ் உட்பட நகரின் அனைத்துக் கட்டிடங்களும் தெரிந்தன. CBD க்கும் விமான நிலையத்திற்கும் இடையில் 12 கிலோமீட்டர் தொலைவு தான்.
கடற்கரையை ஒட்டி தரையிறங்கி, செயற்கையாக அமைக்கப் பட்ட கால்வாய்களை ஒட்டி பயணித்து (taxiing) விமான நிலையத்தை மதியம் மூன்று மணியளவில் அடைந்தோம்.
ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் baggage belt தரையோடு தரையாக அமைந்து வித்தியாசமாக இருந்தது. விமான நிலையங்களில் நகருக்குள் நுழைந்ததற்கு அடையாளமாக நம்முடைய பாஸ்ப்போர்ட்டில் தேதியுடன் முத்திரை குத்தப் படுவதில்லை. நாங்கள் ஆஸ்திரேலியா சென்று வந்ததற்கான சாட்சி எங்கள் பாஸ்ப்போர்ட்டில் இல்லை. கணினியில் குறித்துக் கொண்டு வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.
அன்றைய தினம் சிட்னி நகரை panoramic tour ஆக சுற்றி பார்ப்பதாக திட்டம். பேருந்தில் ஏறி முதலில் நாங்கள் சென்ற இடம் Bondi Beach. இந்த புறநகர்ப் பகுதி CBD யிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வழியில் சிட்னி கிரிக்கெட் கிரௌண்டை தொலைவிலிருந்தே கண்டோம். வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
Bondi என்ற வார்த்தையின் மூலம் Boondi என்னும் ஆதிவாசி மொழிச்சொல். இதன் பொருள் Surf என்பதாகும்.
ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கடற்கரை 1800 களில் தனியார் கடற்கரையான இருந்து பின்னாளில் அரசாங்கத்தின் தலையீட்டால் பொதுமக்களின் கடற்கரையாக மாறியது.
மாலையில் சூரியன் மறையும் நேரம் என்பதால் கடற்கரை தங்கமாக ஜொலித்தது. தண்ணீருக்கு அருகில் செல்லவில்லை. சிறிது தொலைவு நடந்து சென்று பார்க்க பொறுமையும் இல்லை நேரமும் இல்லை. கூட்டமும் அதிகமாக இருந்தது. மெரினா கடற்கரையில் பிறந்து வளர்ந்து சுண்டல் சாப்பிட்ட நமக்கு இது மிக சாதாரணமான காட்சி. கடற்கரையில் Surfing செய்பவர்களின் பாதுகாப்புக்கான ரோந்து செல்லும் அலுவலகம் இருந்தது. கடலில், கரையில் கூட்டமாக இருந்தாலும் அதை ஒட்டிய தெரு அமைதியாக இருந்தது.
தொலைவில் மக்கள் நீச்சல் அடித்துக் கொண்டும் surfing செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த பகுதியில் கடலுக்குள் Whale net எனப்படும் கடல் வாழ் விலங்கினங்களை காக்கும் பகுதிகள் உள்ளன.
சிறிது நேரம் அங்கே ஓய்வெடுத்து?! விட்டு மீண்டும் நகரை சுற்றி பார்க்க கிளம்பினோம்.
நெரிசலான சாலைகளில் பல விதமான கடைகள். நகரில் எங்கும் சைக்கிள் ஓட்டுனர்களை காண முடியவில்லை.
நகருக்குள் இருட்டில் பயணித்த போது Mammoths Australian Museum, Central Library போன்ற பிரபலமான கட்டிடங்களை கண்டோம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் தாக்கம் இந்நகரின் தெருக்களிலும் தென்பட்டன.
ஒவ்வொரு பெரிய நகரிலும் உலகெங்கிலும் ஒரு உயரமான கோபுரம் (Transmission Tower) இருக்கும். அதில் தொலைக்காட்சி வானொலிகளின் ட்ரான்ஸ்மிட்டர்களை உயரத்தில் பொருத்தி இருப்பார்கள். இங்கே சிட்னி டவர். இருட்டில் வண்ண விளக்குகளுடன் ஜொலித்து நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தெரிந்தது.
அதை தொடர்ந்து Bridge Street க்கு அழைத்து செல்லப் பட்டு இறக்கி விடப்பட்டோம். அந்த இடம் இந்நகரின் பிரசித்தி பெற்ற Harbour bridge அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கிருந்து பார்த்தாலே இரவு நேர ஓபரா ஹவுஸ் விளக்கொளியில் இதழ் விரித்த வெள்ளைத் தாமரைப் பூப்போன்ற தோற்றத்தில் தெரிந்தது.
அருகில் தெரிந்த பாலமும் மிகவும் அழகாக வண்ண விளக்குகளுடன் தெரிந்தது. சிறிது நேரம் வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கப் போகும் Rendezvous Studio Hotel யை நோக்கி பயணித்தோம்.
இந்த விடுதி நகரின் முக்கியமான ரயில் நிலையமான Sydney Central க்கு நேரெதிரில் அமைந்துள்ளது. மிக நெரிசலான One Way சாலை என்பதால் விடுதியின் எதிர்பக்கத்திலேயே பேருந்தை நிறுத்தி, சாமான்களை எடுத்துக் கொண்டு தெருவை கடந்து செல்லுமாறு எங்களுக்கு கூறப் பட்டபடி விடுதியை சென்றடைந்தோம்.
ஐரோப்பிய பயணத்தில் Frankfurt அருகில் வசிக்கும் என் மருமகனின் நண்பர் ஒருவரை சந்திக்க முடியாமல் போனது பற்றி ஐரோப்பிய பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா? அது பற்றிக் கேள்விப் பட்டிருந்த மற்றொரு நண்பர் எங்கள் ஆஸ்திரேலிய பயணத் திட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை சிட்னியில் சந்தித்தே தீர வேண்டும் என பல மாதங்கள் முன்பே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த ஏற்பாட்டின் படி நாங்கள் எங்கள் விடுதி வரவேற்பு பகுதியில் நுழையும் போதே தொலைபேசி நான் விடுதிக்கு வெளியில் உங்களை அழைத்து போக காத்திருக்கிறேன் என்றார்
பெட்டிகளை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு அவருடன் புறநகர் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றோம்.
சிட்னி நகரில் இந்தியர்கள் பலரும் வசிக்கிறார்கள். ஞாயிறு அன்று காலை இந்திய கடைகளில் காய்கறிகள் வாங்கி கொள்ளலாம். நேரம் கழித்து சென்றால் கிடைக்காது. சைக்கிளில் செல்பவர்கள் தனிப் பாதையில் செல்வார்கள். அவர்களுக்கென தனியாக பாலங்களும் நகருக்குள்ளேயே உண்டு.
இவர்கள் வசிக்கும் புறநகர் பகுதி காடுகளை வகிடெடுத்து சாலை அமைத்து வைத்தது போல இருந்தது. வெளிச்சம் குறைவான அடர்த்தியான மரங்களடர்ந்த சாலைகளில் சென்றோம்.
நகரை சுற்றிக் காட்டி விவரங்களை கூறிய படியே நண்பர் அழைத்து சென்றது நகரை பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூடுதலாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.
இங்கே பத்து வாரங்கள் தொடர்ந்து பள்ளிகளை நடத்தி விட்டு பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவார்களாம். வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு சிரமமான ஒரு விஷயம் இது என்பதால் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வீட்டுப் பெரியவர்களை உடன் வைத்து கொள்கிறார்கள்.
Diamond Harbour பகுதி தான் CBD (Central Business District = Downtown) அதை சுற்றித் தான் சிட்னி நகரின் வாழ்க்கை சுழல்கிறது. அலுவலகங்கள், சுற்றுலா, கல்விக் கூடங்கள், கடைகள் என ...
பப்ளிக் பார்க்கிங் இங்கே விலை அதிகம் என்பதால் மக்கள் முடிந்த வரை பொது போக்குவரத்திலேயே செல்கிறார்கள். சிட்னி நகர போக்குவரத்து கட்டமைப்பு மிக சிறப்பாக உள்ளதால் மக்கள் வசதியாக எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடிகிறது.
இந்நகருக்கு தேவையான குடிநீர் the Blue Mountains மற்றும் the Southern Highlands பகுதிகளிலிருந்தும் Hawkesbury–Nepean நதிகளிலிருந்தும் பகுதிகளிலிருந்து கிடைக்கிறது.
இது போல பல தகவல்களை அறிந்து கொண்டு, இரவு உணவை அவர்களுடன் உண்டு முடித்த பிறகு, நாளையும் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்த அவர்கள் வீட்டு செல்ல மகளிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, நண்பர் காரிலேயே மீண்டும் விடுதிக்குச் சென்றோம்.
எங்களுடன் வந்திருந்த மற்ற அன்பர்கள் விடுதிக்கு மிக அருகில் சில அடிகள் தொலைவே இருந்த இந்திய உணவகத்தில் இரவு உணவை உண்டதாக கூறினார்கள். (அன்றைய இரவு உணவு சிறப்பான ஒன்றல்லவா? மதிய நேர cup noodles எப்போதோ காணாமல் போயிருக்குமே)
இரவு நன்றாக ஓய்வெடுத்த பின் அதிகாலை சிட்னியை காண விரும்பி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சாலையில் சீராக கோடுகள் வரையப்பட்டு மற்ற ஆஸ்திரேலிய நகரங்களை போல காலை 5,30 மணி தொடங்கி போக்குவரத்து சீராக செல்ல தொடங்கி இருந்தது.
மேலும் எங்கள் விடுதிக்கு அடுத்த சில மீட்டர்களிலேயே சிட்னி பல்கலைக் கழகம் உள்ளது.
எந்த நாட்டுக்கு/ஊருக்கு சென்றாலும் காலை நேரத்தில் அறையை விட்டு வெளியில் நடந்து சென்று வேடிக்கை பார்ப்பது எங்கள் வழக்கம். அதன் படி தினமும் காலையில் விடுதியை சுற்றிய பகுதிகளில் நடைப்பயிற்சி செய்தோம்.
நாங்கள் சென்ற மறுநாள் அங்கே விடுமுறை தினம். ANZAC DAY.
[Anzac Day (/ ˈ æ n z æ k /) is a National Day of Remembrance in Australia and New Zealand that broadly commemorates all Australians and New Zealanders "who served and died in all wars, conflicts, and peacekeeping operations" and "the contribution and suffering of all those who have served".]
அன்று கடைகள் எதுவும் இல்லை. தெருக்களில் வாகனங்கள் குறைவு. ஆங்காங்கே parades. வண்ண விளக்கு அலங்காரங்கள் .
நகரின் நடுவே ANZAC என்னும் பெயருடைய பலம் உண்டு. ஒவ்வொரு முறையும் எங்கள் விடுதியிலிருந்து செல்ல அந்த பாலத்தை கடந்தே சென்றோம்.
காலை உணவை அதே விடுதியில் முடித்துக் கொண்டு அன்றைய தினத்தின் சுற்றுலா இடமான Port Philip நோக்கி பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம். சிட்னி நகரிலிருந்து ஏறக்குறைய 205 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு 2.30 - 3 மணி நேரங்களில் சென்றடையலாம்.
ஆஸ்திரேலியா பாலைவனங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான நிலப் பரப்புக்களை உடைய நாடு என முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
Anna Bay என்ற இடம் Birubi beachஐ ஒட்டி அமைந்துள்ள பகுதி. கடலை ஒட்டிய இந்தப் பகுதியில் உயரமான மணற்குன்றுகள் உள்ளன. இந்த பகுதியில் பல நதிகள் கடலுடன் சேருகின்றன. இப்படி நதிகள் கடலுடன் கூடும் இடத்திற்கு Estuary என்று பெயர்.
இந்த Bayவை ஒட்டிய Worimi beach Sea Surfing ற்குப் பெயர் பெற்றது என்றால் இந்த Anna Bay Sand Surfing & Boarding ற்குப் பெயர் பெற்றது.
கடலும் பாலைவனமும் சேர்ந்த இந்த பகுதியில் 4WD பேருந்தில் பத்து நிமிடங்கள் பயணித்தால் மணற்குன்றுகள் வரும். Sand boarding செய்ய online மூலம் முன்கூட்டியே அனுமதி சீட்டுகள் வாங்க வேண்டும்.
Anna Bay யில் நாம் சென்ற வாகனங்களை நிறுத்தி விட்டு 4WD பேருந்துகளில் பயணித்தால் தான் மணற்குன்றுகளை அடைய முடியும்.
4WD என்பவை 4 Wheel Drive வாகனங்கள். எனக்கு புரிந்த வகையில் இது பற்றி சிறிய விளக்கம் தர முயல்கிறேன். சாதாரணமாக வாகனங்கள் 2WD தான். 2 சக்கரங்கள் ஒரு AXLE உடன் (ஒரு சக்கரம் மற்றதற்கு எதிர்புறமாக இருக்கும் வண்ணம்) இணைக்கப் பட்டிருக்கும். வாகனம் திரும்பும் போது ஒரு சக்கரம் வேகமாகவும் மற்றது சற்றே வேகம் குறைவாகவும் திரும்ப வேண்டும் இல்லையென்றால் வாகனம் கவிழ்ந்து விடும் இல்லையா?
4WD என்பது நான்கு சக்கரங்களும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரே axle ல் இணைக்கப் பட்டிருக்கும். மணற்குன்றுகளின் மேலும் கீழுமாக கடும் காற்றுக்கு இடையில் செல்ல வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.
பாலைவனப் பகுதி என்பதால் வெயில் அதிகம். கையில் தண்ணீர் பாட்டிலுடன் பேருந்தில் ஏறினோம். பத்து நிமிடங்களுக்கொருமுறை சென்று வரும் 10-12 மட்டுமே செல்ல கூடிய பேருந்தில் ஏறி அமர்ந்தோம். கண்டிப்பாக seatbelt அணிந்து கொள்ளுமாறு பணிக்க பட்டோம்.
இது வரை நான் செய்த பயணங்களிலேயே மிகக் கடுமையான 10 நிமிடப் பயணம் இது தான் என்று சொன்னால் மிகையாகாது.
பின்னாளில் வட அமெரிக்காவின் Lake Superiorல் சென்ற 2.30 மணி நேர Rip tide speed boat பயணம் கூட இவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை.
உடம்பு தூக்கி தூக்கி அடித்தது, தலை வலித்தது, வாந்தி வருவது போன்ற உணர்வு என கடுமையான போராட்டத்திற்கு பிறகு (பத்தே நிமிடங்கள் தான்) Sand boarding பகுதிக்கு சென்று சேர்ந்தோம்.
ஒவ்வொருவருக்கும் sand board (surfing board போல மரத்தாலானது) தரப்பட்டது. என் கணவரும் அவரது நண்பரும் போர்டை கையில் எடுத்துக் கொண்டு உயரமான சிறு மலை போன்ற மணற்குன்றின் மேலேறி அங்கிருந்து போர்டின் மேலே அமர்ந்து சறுக்கி கொண்டே கீழே வந்தார்கள். நாங்கள் photography மட்டுமே. கடும் வெயிலில் யார் மேலேறுவது?
அடுத்ததாக அதற்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள Nelson Bay நோக்கி பயணித்தோம் இந்த பகுதி dolphin and whale watching, surfing, diving, fishing and other recreational aquatic activities ற்குப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது.
டால்பின்கள் மற்றும் திமிங்கிலங்களை அவைகளுடைய இயற்கை வாழ்விடத்திலேயே (Natural habitats) கண்டு களிக்க 1.30 மணி நேரங்கள் ஒரு பெரிய படகில் பயணம் செய்து கண்டு வருவது தான் பயணத் திட்டம்.
உணவு விடுதியுடன் கூடிய மிகப் பெரிய படகில் நாங்கள் அழைத்து செல்லப் பட்டோம். எங்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் அரிசி சாதம், பப்பாளி பழ துண்டுகள், உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தவிர எதையும் அடையாளம் காண முடியவில்லை. இந்திய உணவுகள் என்றே அழைக்கப் பட்டாலும் அவைகளின் தோற்றங்கள் convincing ஆக இருக்கவில்லை.
சைவ அசைவ உணவுகள் தனியாக வைக்கப் படவில்லை. எப்போதும் சுமந்து சென்ற பருப்பு பொடி, இதயம் நல்லெண்ணெய் போன்றவைகளை பேருந்திலேயே வைத்து விட்டு சென்று அன்றும் மற்றொரு ஏகாதசி ஆனது எங்களுக்கு (எங்கள் இருவருக்கு மட்டும்)
பப்பாளி பழமும், சிப்ஸும் சாப்பிட்டு அன்றைய உணவை முடித்துக் கொண்டு, டால்பின்களைக் காண படகின் வெளிப்பகுதிக்கு சென்று நின்று கொண்டோம்.
அப்பகுதியில் அமர்ந்து செல்ல பெஞ்சுகள் இருந்தன.
படகின் பின் பகுதியில் வலை ஒன்று கட்டி வைக்கப் பட்டிருந்தது. படகிலிருந்து சறுக்கு மேடையில் சறுக்கி கொண்டே வலையில் இறங்குவது போல ஒரு அமைப்பும் இருந்தது. எதற்காக என்று முதலில் புரியவில்லை.
டால்பின்களைக் காண 1.30 மணி நேரம் கடலுக்குள் பயணம் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் சென்ற பிறகு அந்த வலையை இறக்கி விட்டார்கள். ஒரு தாய் தன்னுடைய இரண்டு சிறு பிள்ளைகளை நீச்சலுடையுடன் அழைத்து வந்து, பிள்ளைகளை சறுக்கு மேடையில் சறுக்க விட்டு தானும் வலையில் இறங்கி நின்றார். பிறகு மூவரும் கடலுக்குள் அந்த வலை மேல் நடந்து, குளித்து மகிழ்ந்ததை நாங்கள் வேடிக்கை பார்த்தோம்.
அதற்குள் படகின் முன் பகுதியில் மக்களின் சலசலப்பு. என்னவென்று காண சென்ற போது கடலுக்குள் படகை சுற்றி பல டால்பின்கள் துள்ளிக் குதித்துக்
கொண்டிருந்தன. ஆரவாரம் செய்யாமல் அமைதியாக அந்த காட்சிகளை சில நிமிடங்கள் கண்டு களித்தோம்.
மேலும் சிறிது தொலைவு கடலில் பயணித்து திமிங்கிலங்கள் தென்படுகின்றனவா என பார்த்தோம்.
அன்றைய தினம் எதுவும் தென்படவில்லை என்றதும் கரையை நோக்கி 1.30 மணி நேரங்கள் பயணித்து திரும்பினோம்.
டால்பின் பார்க்க அழைத்து செல்லும் படகுகள் நிற்கும் இடம் கண்ணுக்கு ரம்மியமாக இருந்தது. அமைதியான நீர்பரப்புடைய நீலக் கடலை வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ள பெஞ்சுகளில் அமர்ந்து சிறிது நேரம் வேடிக்கை பார்த்தோம்.
மாலை மங்கத் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலிய உணவு விடுதிகளை மூடி விடுவார்கள் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். (மலை ஐந்து மணிக்கே). எனவே இரவு நேர சுற்றுலா என்பது அங்கே கனவு தான். உணவு விடுதியில் சிறப்பு கோரிக்கை வைத்து 6.00 வரை திறந்து வைக்க சொல்லி எங்களுக்கு உணவளித்தார்கள் எங்கள் சுற்றுலா அமைப்பாளர்கள்.
அன்றைய தினம் கேரள நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி நடத்தும் விடுதியில் உண்டோம். சுவையான இட்லி, விதம் விதமான சட்னிகள், சாதம், சாம்பார், ரசம், சப்பாத்தி, காய்கறிகள் என சுவை மிக்க தென்னிந்திய உணவுகளை உண்டோம். நம் மக்கள் அரிசி சாதத்தை அதிகமாக எடுத்ததும் மீண்டும் சமைக்க வேண்டி இருந்தது. சாதம் தான் நிறைய சாப்பிடுவீர்களா மற்ற பண்டங்களை எடுத்துக் கொள்ள மாட்டீர்களா என அந்தப் பெண்மணி எங்களை கேட்டதை இன்னும் மறக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து மீண்டும் நிறைய சாதம் வடித்து கொண்டு வந்து வைத்தார். உணவை முடித்துக் கொண்டு விடுதியை நோக்கி பயணித்த போது ஷாப்பிங் செய்வதற்காக CBD யில் உள்ள China Town அழைத்து சென்றார்கள். அங்கே பரிசு பொருட்கள் மற்றும் வேறு பொருட்களையும் பெரிய சந்தை (Complex)போன்ற கடைகளில் வாங்கலாம் என உள்ளே சென்றோம்.
பெருநகரங்களில் மட்டும் மாலை 7 மணி முடிய கடைகள் இருக்கும்.
அச்சமயம் மணி 6.15 இருக்கும். எல்லாக் கடைகளையும் மூடிக் கொண்டு இருந்தார்கள். நான் OPAL நகை வாங்க விரும்பி அணுகினேன். கடைக்காரர் மிக தெளிவாக இப்போது நேரமாகி விட்டது இன்று போய் நாளை வா என கூறினார்.
மற்றொரு கடையில் திரையை விலக்கி (கதவு கிடையாது) fridge magnets எடுத்து தர சொல்லி அவசரமாக வியாபாரத்தை முடித்து கொள்வதற்குள் முன் பக்க கதவை மூடி விட்டார்கள். பின் பக்க கதவு வழியாக வெளியே அனுப்பினார்கள். (துரத்தி விட்டு கதவை பூட்டினார்கள் என்பதே சரியான வாக்கியமாக இருக்கும்.)
50 பேர் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்களே என்ற கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை; நேரத்தை கடைப்பிடிப்பதை முக்கியமாகக் கருதுகிறார்கள்.
China Town என்றாலும் நாங்கள் சென்ற கடைகளில் சீன வியாபாரிகள் இல்லை, மற்ற நாட்டவர்களைத் தான் கண்டோம்.
வியாபாரத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த சமயம் வழக்கம் போல எங்களுடன் வந்த சிலரை காணவில்லை. காத்திருந்து தேடி அவர்களையும் பேருந்தில் அழைத்து வர சொல்லி தன் உதவியாளருக்கு பணித்து விட்டு மேனேஜர் பெண்மணி விடுதிக்கு சென்று விட்டார்.
சற்றே இருட்டான சாலைகளில் அவர்களை தேடிக் கண்டு பிடித்து அழைத்து கொண்டு விடுதிக்கு சென்றோம்.
ஆஸ்திரேலிய பயணத்தின் இறுதி நாளை எதிர்பார்த்து உறங்க சென்றோம்.
அனுபவங்கள் தொடரும் ...
No comments:
Post a Comment