Tuesday, 11 October 2022

ஆஸ்திரேலியப் பயணம் (பகுதி – 3)

April 20-22, 2018

பூங்கா நகரமான மெல்போர்னை கண்டு களித்து விட்டு Brisbane நகருக்கு விமானத்தில் பயணித்தோம். மற்ற சுற்றுலாக்களைப் போல பேருந்தில் அழைத்து செல்லாததற்கு காரணங்கள் 1. நேரமின்மை 2. வழியெங்கும் பாலைவனம் என்பதால் இயற்கைக் காட்சிகள் அதிகம் இல்லை. ஏறக்குறைய 1200 கிலோமீட்டர்கள் கொண்ட இந்த பயணத்தை JETSTAR விமானத்தில் மேற்கொண்டோம். குறிப்பிடும் படியான சம்பவங்கள் எதுவும் இல்லை. குறைந்த தொலைவு பயணம் என்றாலும் Brisbane நகரை சென்றடைய மதியமாகி விட்டது.

Gold Coast செல்ல போகிறோம் என்பது தவிர பெரிதாக தகவல்கள் எதுவும் சொல்லப் படாத பயணம்.

இந்த நகரம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேனிலிருந்து 75 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இங்கே தான் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன என்பதால் சாலைகளும் விளையாட்டு மைதானங்களும் இன்றளவும் மிக சுத்தமாக தரமாகப் பராமரிக்கப் படுகின்றன.

GoldCoast நகர் சுற்றுலாவிற்கு சிறப்பு பெற்றது. இதன் பகுதிகளான South Port மற்றும் Surfers Paradise இந்நகரின் சுற்றுலா Stripல் அமைய பெற்றுள்ளன. (Tourist Strip என்பதை ஊர் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் சுற்றுலாப் பயணிகள் தங்கவும் பொழுது போக்கவும் ஏற்படுத்தப் பட்ட பகுதி எனக் கொள்ளலாம்.) South Port to Coolangatta முடிய இந்த tourist strip உள்ளது. பல தங்கும் விடுதிகளும் பொழுது போக்கு வசதிகளும் இந்தப் பகுதியில் அமைக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றன.

நாங்கள் சென்று தங்கிய பகுதி Surfers Paradise. இது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது இல்லை இல்லை அமைக்கப் பட்டுள்ளது. 1850களில் இந்த பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி கட்டப் பட்டது அதனைத் தொடர்ந்து பல விடுதிகள் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டு இந்தப் பகுதி பிரபலமடைந்தது.

Surfing செய்ய ஏற்ற பகுதி என்பதால் உலகெங்கிலிருந்தும் மக்கள் வந்து குவிகிறார்கள். Jet skiing, snorkeling, scuba diving, hot air balloon rides போன்றவைகளும் இங்கே பிரசித்தம்.

Hot air balloon ride செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். பசிபிக் பெருங்கடல் மேலே பறப்பதா, அய்யய்யோ _ என் கணவர். எங்களுடன் பயணித்த சிலர் அதிகாலை மூன்று மணியளவில் கிளம்பி சென்று அதில் பறந்து வந்தார்கள்.

கோல்ட் கோஸ்ட் நகரில் Nerang நதி ஓடுகிறது. மேலும் சில நீர் நிலைகளும் இந்நகரை சுற்றி பாய்வதால் இயற்கையாகவும் செயற்கையாகவும் வாய்க்கால்களும் தீவுகளும் நீர் நிலைகளை ஒட்டிய வீடுகளும் வழியெங்கும் தென்பட்டன. ஆங்காங்கே அடர்த்தியான மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் காண முடிந்தது. ஊரின் ஆரம்பத்தில் கடற்கரையில் Surfers Paradise என்னும் பெயருடன் கூடிய Arch உள்ளது.

நீண்ட கடற்கரையை ஒட்டி பயணித்து நாங்கள் தங்கிய Hotel Mantra Legends சென்றடைந்தோம்.  18 தளங்களைக் கொண்ட இந்த விடுதியில் நாங்கள் 17ல் தங்கி இருந்தோம்.

ஒவ்வொரு அறைக்கும் தரப்படும் Magnetic keyயை பயன்படுத்தி தான் லிப்ட்டில் செல்ல முடியும். மற்ற தளங்களுக்கு அனாவசியமாக செல்ல முடியாது. 

Surfers Paradiseல் கட்டப்பட்ட ஒவ்வொரு விடுதியின் ஒவ்வொரு அறையுமே கடலைக் காணும் வண்ணம் கட்டப் பட்டுள்ளது. அறையில் அமர்ந்த படியே கடலை வேடிக்கை பார்த்தோம். அறைக்கு உள்ளேயே சிறிய சமையலறை இருந்தது என்றாலும் நாங்கள் எதையும் உபயோகிக்கவில்லை.

நாங்கள் அங்கே சென்ற போது மாலையாகி விட்டதால் சுற்றி பார்க்க வேறெங்கும் செல்லவில்லை. மிக அருகிலேயே கடற்கரை என்பதால் காலாற நடந்து சென்று ஊரினை சுற்றி பார்த்தோம்.

வழியில் பலதரப்பட்ட மக்களை காண முடிந்தது. சிறு குழந்தைகள் தொடங்கி சிறுவர்கள் வரை பங்கேற்கும் வகையில் வயதுக்கேற்ற விளையாட்டுகள் இருந்தன. Indoor sky diving போன்ற விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கடற்கரையில் Surfing Board கையில் ஏந்திய படி ஒரு ஆண் அல்லது பெண் கடற்கரைக்கு வருவார். தனியாக கடலுக்குள் சென்று விடுவார். மிதமான காற்றும் அலைகளும் உடைய  கடலுக்குள் மறைந்தவர் எப்போது மீண்டும் வருவார் எங்கே போனார் என்றே தெரியாது. வேடிக்கை பார்த்த எங்களுக்கு வியப்பு தான் மிஞ்சியது.

சிறிய ஊர் என்றாலும் இந்தப் பகுதி Entertainment stripல் உள்ளதால் போக்குவரத்து வசதிகள் நன்றாக உள்ளன. எங்கள் விடுதிக்கு அருகில் தான் Tram Station Terminus. சாலையின் நடுவிலேயே தான் அதன் Track இருக்கும். அதை தாண்டி souvenir கடைகளுக்குள் சென்று வேடிக்கை பார்த்தோம்.

1986ல் ஒலிம்பிக் போட்டிகள் இங்கே நடை பெற்றதை நினைவூட்டும் வகையில் செய்யப்பட்ட   ஒலிம்பிக் கொடியை ஏந்தி நிற்பது போன்ற குட்டி கோலா கரடி பொம்மைகளை (12) அச்சமயம் அங்கே சென்ற என் நண்பர் எங்களுக்கு வாங்கி தந்தார். அதே போன்ற பொம்மைகளை நாங்கள் சென்ற போதும் ஒவ்வொரு சிறிய கடை வாசலிலும் அடுக்கி வைத்திருந்தார்கள். 2A$ க்கு 12 பொம்மைகளை வாங்கி வந்தேன்.

ஆங்காங்கே சிறுவர்களுக்கான விளையாட்டு மையங்கள் (indoor) இருந்தன. தெருக்களில் பறவைகள் நடமாடிக் கொண்டிருந்தன.

Surfers Paradiseல் தான் 1986 ஒலிம்பிக் விளையாட்டு நீச்சல் போட்டிகள் நடைபெற்றன என்று கூறினார்கள்.

கடலில் குளித்து விட்டு வருபவர்கள் கரையில் மீண்டும் நல்ல நீரில் குளிக்கும் வண்ணம் ஆங்காங்கே திறந்த வெளிக் குழாய்கள் தென் பட்டன.

விடுதியின் உள்ளேயும் பிரம்மாண்டமான நீச்சல் குளம் இருந்தது. மக்கள் அங்கேயும் குளித்துக் கொண்டிருந்தார்கள். 

இரவு எட்டு மணி வரை சுற்றி விட்டு நேரெதிரில் உள்ள Tandoori Place என்னும் இந்திய உணவகத்தில் இரவு உணவினை உண்டோம். அங்கே இருந்த மூன்று இரவுகளும் இரவு உணவு அங்கே தான்.

மறுநாள் விடியலில் எழுந்து நமக்கு தெரிந்த கடல் சார்ந்த ஒரே செயலான கடற்கரை நடைப் பயிற்சியை  மேற்கொண்டோம். எங்களுடன் பயணித்த சிலரும் நடந்து கொண்டிருந்தார்கள்.


வெப்பநிலை சென்னையை போல தான் இருந்தது. சூரிய உதய சமயத்தில் கிரணங்கள் பட்டு அந்த ஊரின் கட்டிடங்கள் தங்க நிறத்தில் ஜொலித்தன. அதனால் கூட Gold Coast என்னும் பெயர் அந்த ஊருக்கு கிடைத்திருக்கலாம் என நாங்கள் பேசிக் கொண்டோம்.

South Port என்றழைக்கப் பட்ட நகரம் 18ஆம் நூற்றாண்டின் Gold Rushற்குப் பிறகு வெளி நாட்டு மக்கள் குடியேறியபோது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் real estate விலைகள் கிடுகிடுவென ஏறத் தொடங்கியதாம்; அந்த ஊர் மக்கள் நமக்கு தங்க புதையல் எதுவும் கிடைத்தால் தான் இங்கே இனி வாழ முடியும் என்ற பொருளில் Gold Coast எனக் குறிப்பிட தொடங்கினார்களாம்.

காலை நேரத்திலும் Surfers கடலுக்குள் சென்று கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம் 1.30 மணி பயண நேரத்தில் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Warner Bros Movie World Theme Park ஐக் காண சென்றோம்.

Warner Bros என்பது திரைப்படங்கள் எடுக்கும் அமெரிக்க நிறுவனம். இதன் அலுவலகம் Burbank, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.

தங்கள் திரைப்படங்களை கருவாகக் கொண்டு இந்த தீம் பார்க்கை உருவாக்கி உள்ளார்கள். Disney world போல தான் இதுவும் இருந்தது. அங்கங்கே அவர்களது திரைப்பட கதாபாத்திரங்களை வைத்து வடிவமைக்கப் பட்ட ride கள், Show கள் , கிராமங்கள், தெருக்கள், உணவகங்கள் என typical theme park. அங்கேயே மதிய உணவு வழங்கப்பட்டது.

சில rideகளில் சென்றோம். விவரம் தெரியாமல் Scooby Doo என்னும் rideல் நான், என் கணவர், நண்பர் தம்பதி ஏறி விட்டோம். உள்ளே படகு போன்ற ஒரு ஆசனத்தில் இரண்டிரண்டு பேராக அமர ஓட்டம் ஆரம்பம். இருட்டில் ஒரு குரல் Are you ready எனக் கேட்டது. எதாவது பிரச்சினை என்றால் இருக்கையிலேயே இருங்கள் நீங்கள் 27 அடி உயரத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் வந்து உங்களை அழைத்து செல்கிறோம் என்றது அந்தக் குரல். நாங்கள் சம்மதம் என அறிவித்ததும்  அந்த படகுகள் ஓடத் தொடங்கின. 27 அடி உயர roller coaster. முன்னும் பின்னுமாக அது ஓட நாங்கள் அலற, ஒரு வழியாக வெளியில் வந்து சேர்ந்தோம். 

எப்போது அந்த இடத்தை விட்டு கிளம்புவோம் என்பது போல இருந்தது. எந்த ride ல் ஏறினாலும் தலை சுற்றல் தான்.   

மாலை வரை அங்கே இருந்து விட்டு மாலை ஐந்து மணியளவில் விடுதிக்கு திரும்பினோம்.

இந்தப் பூங்காவின் வெளிப்பக்க கதவருகில் ஆஸ்திரேலியக் கொடியுடன் இந்திய தேசியக் கொடியும் பறந்து கொண்டிருந்ததை கண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு எட்டு மணிக்கு தான் உணவு விடுதிக்கு செல்ல வேண்டும் அது வரை மீண்டும் கடற்கரையில் நடை, ஊர் சுற்றி பார்த்தல் என பொழுது போக்க கிளம்பினோம்.

ஏறக்குறைய 20,000 மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய ஊரில் கல்விக் கூடங்களும் உள்ளன. உயரமான கட்டிடங்களை கொண்டது இந்த ஊர். மிக நீண்ட மணற்பாங்கான கடற்கரை என்பதால் மக்கள் நடமாட வசதியாக உள்ளது.

இந்த ஊர் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது. ஏப்ரல் 22, 2018 ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாலையில் கடற்கரையில் சந்தை கூடியிருந்தது. இந்த சந்தை வாரத்திற்கு மூன்று நாட்கள் கூடுகிறது சந்தையில் வழக்கம் போல் சோப்பு, சீப்பு, bracelet, rubber band, பந்துகள், உணவுப் பொருட்கள், பலூன்கள் என விற்றுக் கொண்டிருந்தார்கள்.

கூடுதலாக Opal கற்கள் மற்றும் அதில் செய்யப் பட்ட நகைகளையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். 

ரத்தினக் கற்கள் எனப்படும் Gem Stoneகள் வரிசையில் diamond, ruby, sapphire, emerald and tanzanite ஆகியவைகளுக்கு அடுத்த இடத்தில Opal உள்ளது. வானவில்லின் வர்ண ஜாலங்களும் கலந்த அமைப்பை உடையது இந்தக் கல்.

சீன பட்டு, ஆப்பிரிக்க வைரம் என்பது போல ஆஸ்திரேலியாவின் Opalகள் உலக பிரசித்தி பெற்றவை.

19 ஆம் நூற்றாண்டின் தங்க வேட்டை சமயத்தில் ஆரம்பித்த தொழில் இது. அதிக ஆயுதங்கள் இயந்திரங்கள் இல்லாமல் சாதாரணமான உளிகள் மற்றும் வெடி மருந்துகளைக் கொண்டு சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப் படுகிறது.

Opalன் சிறப்பு என்னவென்றால் ஒரு கல்லை போல மற்றொரு கல் இருக்காது. They are unique. உங்களிடம் opal இருந்தால் you are the unique owner என்று சொல்லலாம். மேலும் விவரங்களுக்கு :

https://theaustralianopal.com/ 

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த Opal நகைகளை/ கற்களை தெருவில் கொட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள் சந்தையில். ஒவ்வொரு கல்லும் / நகையும் 200A$ல் ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் விலை சொன்னார்கள்.

ஆஸ்திரேலியா செல்கிறோம் என்றதுமே Opal நகை வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் விலை?? பயண முடிவில் சிட்னி விமான நிலையத்தில் 60A$ க்கு pendant உடன் கூடிய ஒரு செயின் வாங்கினேன். இன்றளவும் அதற்கு ஏற்ற தோடுகளை வாங்க முடியவில்லை. ஓபல் கற்கள் ஒரே போல கிடைக்கவே கிடைக்காது. ஒரே கல்லில் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

அன்றைய தினம் அங்கே குறும்பட விழா நடை பெற்றது. கடற்கரையில் மிகப் பெரிய திரையில் போட்டிக்கு அனுப்பப் பட்ட படங்கள் திரையிடப் பட்டன. நிறைய பார்வையாளர்கள் அவைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள் மணலில் அமர்ந்து சில குறும்படங்களைப் பார்த்தோம்.

இடையில் New Zealand நாட்டிலிருந்து தன் 6, 2 வயது குழந்தைகளுடன் விடுமுறைக்கு வந்திருந்த ஒரு பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுடன் பயணித்த பெண்கள் அவர் பேசிய ஆங்கிலம் புரியாமல்  என்னை அவருடன் பேச சொல்லி விட்டு நழுவி சென்றார்கள்.

அந்த பெண்ணுக்கு இந்தியா என்று ஒரு தேசம் இருப்பதே தெரியவில்லை. எங்கே இருக்கிறது என்று விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டார். நானும் அவரை ஒரு குட்டி பேட்டி எடுத்து விவரங்கள் தெரிந்து கொண்டேன். இரவு உணவை முடித்து கொண்டு விடுதிக்கு சென்றோம்.

மறுநாளும் கடற்கரை நடைபயிற்சியுடன் தான் தொடங்கியது. அன்று என் பிறந்த நாள். நாங்கள் தங்கி இருந்த Mantra Legends விடுதியின் முன்புறத்தில் பெரிய பரிசு பொருட்கள்/ நினைவுப் பொருட்கள் கடை இருந்தது. என் கணவர் அங்கே என் பிறந்த நாளுக்காக ஆஸ்திரேலியா கண்டத்தின் அமைப்பில் pendant உள்ள சங்கிலி வாங்கி பரிசளித்தார். 

Bay Watch படத்தில் வருவது போல அங்கங்கே Watch tower, jeep, Coast guards என வித்தியாசமான கடற்கரை. கடலுக்குள் surfing செய்ய சென்றவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உதவி செய்ய இவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். மாலை ஐந்து மணிக்கு மேல் கடலுக்கு அருகில் செல்ல அனுமதி இல்லை. சாலையோர பகுதிகளில் மட்டுமே நடமாடலாம். Coast guards ஜீப்பில் கடற்கரையில் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள்.

காலை உணவுக்கு பின் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள Sea World Theme Parkற்கு அழைத்து செல்லப் பட்டோம். இதுவும் Warner Bros நிறுவனத்தால் நிர்வகிக்கப் படுகிறது இது கடலில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. Seal, Whale, Dolphin, Walrus, Sea lion போன்றவைகளுடன் Showக்கள் நடத்துகிறார்கள். திறந்த வெளியில் அமர்ந்து காணலாம். பல விதமான rideகள் இங்கேயும் உண்டு.

மிதமான வெயிலில் புல்லில் அமர்ந்து கடல் பிராணிகளை வைத்து நடைபெற்ற காட்சிகளைக் கண்டோம்.( வேறு வழி ?!) வட அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் இது போன்ற Sea World காட்சிகளை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பென்குவின்களுக்கு தனிப்பகுதி உண்டு. ஆடாமல் அசையாமல் அவைகள் நின்று கொண்டிருந்ததை பார்த்த போது அவைகள் உயிரற்றவையோ என்று எண்ணத் தோன்றியது. போலார் கரடிககளுக்கும் தனிப்  பகுதி இருந்தது.

Monorailலில் சென்று பூங்காவின் எல்லா பகுதிகளையும் கண்டோம்.

மோனோரயிலில் செல்லும் போது தெரிந்த  கோல்ட் கோஸ்ட் நகரின் skyline, backwaters ல் சென்று கொண்டிருந்த படகுகள், பூங்காவின் வாசலில் நிறுத்தப் பட்டிருந்த நூற்றுக் கணக்கான கார்கள், Sea World பூங்காவின் வண்ண மயமான show stages போன்றவைகள் கண்ணுக்கு இனிமையான காட்சிகள்.

எங்கெங்கும் மக்கள் வெள்ளம். பல நாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.

இந்த பூங்காவிலும் இந்திய ரெஸ்டாரண்ட் இருந்தது. அருமையான உணவு வகைகள் வழங்கப்பட்டன.

மாலை வரை அங்கே சுற்றி பார்த்து விட்டு விடுதிக்கு திரும்பினோம்.

விடுதிக்கு மிக அருகில் Sky Point என்னும் பெயருடைய 77 மாடி Residential Complex உள்ளது. 270 மீட்டர் உயரமுடைய இந்த கட்டிடத்தில் மக்கள் குடியிருப்பதுடன் 230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Observation deckல் நின்று யார் வேண்டுமானாலும் நகரை, கடற்கரையை, சுற்றுப்புறங்களை வேடிக்கை பார்க்கலாம். (அனுமதி சீட்டு உண்டு)

இந்த நிகழ்வை நாங்களே தீர்மானித்து சென்று வந்தோம். அமைப்பாளர்கள் அழைத்து செல்லவில்லை.

வரிசையில் நின்று லிப்ட்டில் 10 வினாடிகளில் 77 மாடிகளை அடைந்து 360 டிகிரி கோணத்தில் பகல், இரவுக் காட்சிகளைக் கண்டு களித்தோம். இரவு நேரக் கட்டணம் எப்போதும் அதிகம். நாங்கள் மாலையில் சென்றதால் சூரிய அஸ்தமனத்தையும் இரவுக் காட்சிகளையும் மேலிருந்து காண முடிந்தது.

Adventure செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் இதற்கு மேலும் கட்டிடத்தின் வெளிப் பக்கமாக அமைந்துள்ள படிக்கட்டுக்களில் ஏறி 270 மீட்டர் வரை செல்லலாம்.

நடந்து சென்ற போது ஆங்காங்கே சிறுவர் பூங்காக்கள் தென்பட்டன. ஒரு வயதுக் குழந்தையை கூட பெல்ட் அணிவித்து bungee jumping, mini zipline போன்றவற்றில் விளையாட வைத்துக் கொண்டிருந்தார்கள் தாய்மார்கள். சிறுவயது முதலே அவர்கள் இது போன்ற விளையாட்டுக்களுக்கு பழக்கப்பட்டு விடுவதால் தான் அவர்களால் பிற்காலத்தில் தைரியமாக adventure sports விளையாட முடிகிறது. நம்மைப் போல் அவர்கள் பயப்படுவதில்லை.

மற்றொரு காரணம், மேல் நாடுகளில் சிறுவர் பூங்காவின் ஊஞ்சலில் கூட safety belt இருக்கும். பயப்பட தேவையே இருக்காது. நமக்கும் அது போன்ற வசதிகள் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.

வயதானவர்களான எங்களை Theme Park, Sea World போன்றவைகளுக்கு அழைத்து சென்றது மனதுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. பண விரயம், நேர விரயம் என்று தான் எண்ண தோன்றியது. (வெளி நாட்டு பயணம் செய்பவர்கள் எங்கெங்கு அழைத்து செல்ல போகிறார்கள் என்பதை முன்பே அறிந்து கொண்டு பயணத்தை முடிவு செய்வது நலம்)

நிதானமாக மூன்று நாட்களும் ஊரை சுற்றி பார்த்து அறையிலிருந்து, அருகிலிருந்து பசிபிக் பெருங்கடலை கண்டு, பறவைகளுடன் நாங்களும் நடந்து, நல்ல உணவை உண்டு ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் காலை சிட்னி நகருக்கு பயணப் பட தயாரானோம்.

Surfers paradise surfing செய்ய தெரிந்தவர்களுக்கான சொர்க்கம்.

நமக்கு ஏறக்குறைய சொர்க்கம்.  

அனுபவங்கள் தொடரும் ...



No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...