Saturday, 12 November 2022

ஐந்தாவது வட அமெரிக்கப் பயணம் (பகுதி- 1)

 

August 7, 2018 - February 7,2019

Chennai -Dubai -San Francisco

Emirates Airlines

ஐந்தாவது அமெரிக்க பயணம் என்றாலும் எப்போதும் போல் பல விதமான ஏற்பாடுகள். இம்முறை விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பும் மகள் மற்றும் பேரன்களுடன் நானும் என் கணவரும் உடன் செல்வதாக ஏற்பாடு செய்யப் பட்டது.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் பிசியான மாதமாக இருந்தது. 20ஆம் தேதி எங்கள் மூத்த பேரனின் உபநயன விழா (திருப்பெரும்புதூர்), 22 ஆம் தேதி என் கணவரின் 60 ஆவது பிறந்த நாள் (சத்தியமங்கலம் கோவில்), மீண்டும் சென்னையில் 30ஆம் தேதி என் கணவரின் "Retirement day" நிகழ்ச்சி என குடும்பத்துடன் பிசியோ பிசி.

அதைத் தொடர்ந்து வந்த ஒரு மாதமும் பயண ஏற்பாடுகளில் கழிந்தது.
பயண நாட்களுக்கு சில தினங்கள் முன்பாக முன்னாள் தமிழக முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

பயண நாளன்று நாங்கள் சென்னை வீட்டிலிருந்தும் மகள் குடும்பம் திருப்பெரும்புதூரிலிருந்தும் விமான நிலையம் சென்று சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. இரவு 9.45 க்கு கிளம்பும் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல வேண்டும்.
நாங்கள் மாலை 6.45 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் இரவு உணவுக்கான சப்பாத்திகளை மதியமே தயார் செய்து வைத்து விட்டேன். மதியம் இரண்டு மணியளவில் திரு கருணாநிதி மறைந்து விட்டார் என்றும் அலுவலகம் பள்ளிகளிலிருந்து வருபவர்களின் வசதிக்காக மாலை ஆறு மணிக்கு மேல் அறிவிப்பார்கள் என்றும் வாய் வழிச் செய்திகள் வர ஆரம்பித்தன.

அவசரமாக வீட்டை ஒழுங்கு செய்து விட்டு மகளுக்கும் தகவல் கூறி உடனே கிளம்பி வர சொல்லி விட்டு மூன்று மணிக்கே விமான நிலையத்திற்கு கிளம்பினோம். காலை முதலே இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டாலும், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக கிளம்புவது என்பது மிக கடினம் தான். வேறு வழியில்லை.

விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் சில மணி நேர “திக் திக்” காத்திருப்புக்கு பிறகு மகள் குடும்பம் 6.10 மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்களுடன் விமான நிலையத்தின் உள்ளே உடனடியாக சென்று check in செய்தோம். இரவு உணவை உண்டு முடித்து விட்டு விமானத்தில் ஏறினோம். 4.15 மணி நேர பயணம். துபாய் நேரம் இந்திய நேரத்தை விட 1.30 மணி நேரங்கள் குறைவு என்பதால் அங்கே சென்றடைந்த போது அங்கே நள்ளிரவு 12.30. எங்கள் அடுத்த விமானம் காலை 9.10க்கு தான்.

இரவு தங்குபவர்களுக்கான Loungeல் இடமே இல்லை. பெரிய ஹால் போன்ற இடத்தில் சாய்ந்து தூங்கும் வகையில் இருக்கைகள் இருந்தன. கிடைத்த இரண்டு இருக்கைகளில் மாறி மாறி சிறிது நேரம் தூங்கினோம்.
துபாய் வழியாக செல்வது எனக்கு முதல் முறை என்பதால் வேடிக்கை (Observe) பார்த்து பொழுதை கழித்தேன்.
அனைத்துக் கண்டங்களுக்கும் Hub ஆக இந்த விமான நிலையம் பயன் படுவதால் பல நாட்டு மக்களையும் காண நேர்ந்தது. குறிப்பாக ஆப்பிரிக்க மக்கள் நிறைய தென்பட்டார்கள்.

விமான நிலையத்தில் மக்கள் வெள்ளம் என்றே சொல்லலாம்.

காலை 7.30 மணியளவில் Security Check ஆரம்பம். சிங்கப்பூர் போல ஒவ்வொரு Gateக்கும் தனிக் கண்ணாடிக் கூடு, உள்ளே சோதனை, காத்திருப்பு இருக்கைகள் என இருந்தன.

பர்தா அணிந்த ஒரு பெண்மணி என்னையும் என் பேரன்களையும் வரிசையில் போய் நில்லுங்கள் என்று கூறினார். இவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று சற்று யோசித்த பிறகு தான் புரிந்தது. அங்கே பெண் போலீசார் இது போலவும் ஆண் போலீசார் நாம் திரைப்படங்களில் ஷேக் அணியும் ஆடைகள் போலவும் சீருடை அணிந்திருந்தார்கள். (பெண்கள் கருப்பு, ஆண்கள் நீண்ட வெள்ளை அங்கி தலையில் கருப்பு வளையம்)

அந்தப் பெண்மணி யாரென்று புரிந்ததும் பேரன்களை உஷார்ப்படுத்தி வரிசையில் சேர்ந்து கொண்டோம்.

பாதுகாப்பு சோதனையில் துபாயில் கேட்கப்படும் முக்கியமான கேள்விகள்: "உங்கள் பெட்டிகளை நீங்களே அடுக்கி வைத்தீர்களா? வேறு யாருக்காகவும் நீங்கள் மருந்து மாத்திரைகள் கொண்டு செல்கிறீர்களா?"

Cabin baggage எனப்படும் கைப்பெட்டி Laptop கணினி இரண்டும் சேர்ந்து ஏழு கிலோ இருக்க வேண்டும் என்றார்கள்.
என் இட்லி பொட்டலத்தை கண்டதும் இது என்ன என்கிறார். பேரன்களுக்கான காலை உணவு சில நிமிடங்களில் உண்டு விட்டு விமானத்தில் ஏறுவோம் என்றேன். சரி என்று அனுமதித்தார்கள்.

துபாயிலிருந்து கிளம்பி வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் ஆர்க்டிக் வளையம் (Arctic Circle) வழியாக பறந்து செல்கின்றன. இதுவும் எனக்கு புது அனுபவம் தான். A380 ரக Airbus விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் நம் இருக்கையிலிருந்தே வெளியிலிருப்பதை இருக்கை TV யில் காணலாம்.

விமானம் Arctic Circleஐக் கடக்கும் சமயம் பேரன்களின் ஜன்னல் இருக்கையை போராடி வாங்கி அமர்ந்து கொண்டு ஜன்னலை சில நொடிகள் திறந்து வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுத்தேன். UV கதிர்களின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் ஜன்னலை திறக்க அனுமதியில்லை. மேலும் கடுமையான வெயில்.
சான் பிரான்சிஸ்கோ நகரை அடைந்ததும் வழக்கம் போல தரையிறங்க அனுமதி கிடைக்கும் வரை விமானம் மேலே தாழ்வாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. விமானத்திலிருந்து Bay, பிரசித்தி பெற்ற Golden Gate Bridge, Twin Bridge, Downtown என தெரியும் அனைத்தும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். [இது எனக்கு மட்டும் தான்]

தாழ்வாக பறப்பதால் காற்றழுத்தம் காரணமாக சிறு குழந்தைகள் காது வலியால் அழுவார்கள். விமானம் தரையிறங்கினால் தான் அழுகை நிற்கும்.

விமான நிலையத்திலிருந்து Milpitas நகரில் உள்ள வீட்டை நோக்கிய பயண நேரத்தில் வழியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எந்த கடை எங்கே இடம் மாறியுள்ளது என கவனித்து மகளிடம் கூறிக் கொண்டே சென்றேன். 2010 ஆம் ஆண்டு வழியெங்கும் கண்ட Daffodil தோட்டங்கள் தற்போது இல்லை. அங்கே அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு விட்டன.

என் நான்காவது பயண முடிவில் மகளின் புது வீட்டிற்கு குடிபெயர்ந்த மறுநாளே கிளம்பினேன் என்று குறிப்பிட்டிருந்தேன் இல்லையா? அதே வீட்டிற்கு தான் தற்போது செல்கிறோம்.

தெரு முனையில் நேரெதிரில் தெரிந்த மலை, சுற்றிலும் தோட்டம் என இயற்கையோடு இணைந்த வீட்டில் ஒரு மாதம் ஆவணி அவிட்டம், பிறந்த நாள் விழாக்கள், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு என பிஸியான நாட்கள்.

செப்டம்பர் 1, 2018.

Labour day வார இறுதியில் சிகாகோ வழியாக மகன் அச்சமயம் வசித்து வந்த Green Bay, Wisconsinக்கு கிளம்பினோம்.

Chicago வரை 4.30 மணி நேர விமானப் பயணம், அதன் பிறகு காரில் மூன்று மணி நேர பயணத்தில் அந்த ஊரை அடையலாம். அந்த வாரம் Labour Day வார இறுதி என்பதால் சிகாகோவில் தங்கி ஊர் சுற்றி பார்த்து விட்டு பிறகு கிளம்புவதாக திட்டமிட்டோம்.

நாங்கள் சென்ற விமானத்தில் ஏற கிராமத்து பேருந்துகளை போல ஓடிப் போய் இடம் பிடிக்க வேண்டும். இருக்கை முன் பதிவு வசதி கிடையாது. எப்படி ஓடியும் எனக்கு ஒரு ஒரு வரிசையில் நடு இருக்கையும் என் கணவருக்கு முன் வரிசையில் ஒரு நடு இருக்கையும் கிடைத்தது. இரு ஆண்களுக்கு இடையில் Sandwich போல நசுங்கி கொண்டே பயண நேரத்தில் கையில் கொண்டு சென்ற இட்லி, இறங்கியதும் விமான நிலையத்திலேயே கோதுமை ரவை உப்புமா என உண்டு முடித்து மகனுக்காக காத்திருந்தோம்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக கடலோ என நினைக்கும் அளவுக்கு ஒரு மிகப் பெரிய நீர்ப்பரப்பை கடந்து சென்றது. சற்று யோசித்ததும் அது மிச்சிகன் ஏரி (Lake Michigan) என நினைவுக்கு வந்தது. ஏரியை இவ்வளவு பிரம்மாண்டமாக நான் கண்டதில்லை. [எதுவுமே உனக்கு சற்று யோசித்த பிறகு தான் நினைவுக்கு வருமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஏழாம் வகுப்பில் படித்த Great lakes பற்றி உடனுக்குடன் நினைவில் கொண்டு வருவது அசாத்தியமே]

சான் பிரான்சிஸ்கோவிற்கும் சிகாகோவிற்கும் 3.30 மணி நேர வித்தியாசம் என்பதால் காலையில் கிளம்பினாலும் அங்கே சென்று சேர்ந்த போது மதியம் மூன்று மணி ஆகி இருந்தது.

இல்லினாய்ஸ், விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் இருக்கும் பகுதியை Midwest என அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் நேரம் Pacific Standard Time லிருந்து 3.30 மணி நேரங்கள் அதிகமாக கணக்கிடப் படுகிறது.

O’Hare விமான நிலையத்திற்கு அருகிலேயே நண்பரின் மகள் வீடு என்பதால் 10 நிமிடங்களில் சென்று சேர்ந்து விட்டோம். இந்தப் பகுதி ஊரை விட்டு வெளியில் அமைந்துள்ளது.

மாலை ஆறு மணிக்கே சாப்பிட்டு விட்டு Chicago Architectural Night Cruise காணக் கிளம்பினோம்.

காரில் கிளம்பி, ரயிலில், uberல், நடந்து என வெகு தொலைவு ஊருக்குள் பயணித்து படகு கிளம்பும் இடத்தை சென்றடைந்தோம். நண்பரின் மகளின் காரில் பாதி தொலைவு சென்றோம். Downtown நெரிசலைக் கடந்து சரியான நேரத்திற்கு படகுத் துறையை அடைய முடியாது என்பதால் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு Uber ல் சென்றோம். அந்த ஓட்டுநர் வளைந்து நெளிந்து கூட்டத்திற்குள் திறமையாக ஓட்டி சென்றார்.

பல வருடங்களுக்கு முன் என் மகன் இந்நகரை பார்த்து விட்டு வந்து, அம்மா எனக்கு இந்த நகரின் அமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது. வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த பயணத்தில் நாங்கள் சுற்றி பார்த்த சில இடங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டுள்ளேன். (linkஐ Click செய்து படிக்கலாம்) பதிவு செய்யப்படாத இடங்களை பற்றி சற்றே விரிவாக இந்த பதிவில் கூறியுள்ளேன்.

Chicago நகரைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் சுற்றி பார்க்க கிளம்புவோம்.

1837 ஆம் ஆண்டு Great Lakes மற்றும் Missisippi நதிகளின் நீர் போக்குவரத்து பகுதியில் மிச்சிகன் ஏரியின் கரையில் அமைக்கப் பட்ட நகரம் இது.

Illinois என்னும் மாநிலத்தின் மிகவும் பிஸியான நகரம் இது. 1871 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் வீடுகளும் அழிந்தாலும் இந்த நகரம் மீண்டு வந்தது.
கல்வி, கலை, கலாச்சாரம், போக்குவரத்து, வியாபாரம் என பல துறைகளிலும் சிறந்து விளங்கும் நகரம் என்பதால் மக்கள் தொகை பெருக்கத்திற்கும் வாகன நெரிசலுக்கும் பஞ்சமில்லாத நகரம் இது.

வருடத்தில் ஆறு மாதங்கள் கடும் பனிப் பொழிவு இங்கே உண்டு. இந்தியர்கள் பலர் வசிப்பதால் சான் பிரான்ஸிஸ்கோவின் Bay area போல இந்தியக் கோவில்களும், உணவு விடுதிகளும் அதிகம் தென்படுகின்றன. நாங்கள் சென்ற ஒரு விடுதியில் இந்திய நகரமான சித்தூரிலிருந்து செயல்படும் "சம்ஸ்க்ருத பாரதி" நடத்தும் வகுப்பு சேர்க்கை பற்றிய விவரங்களை ஒட்டி வைத்திருந்தார்கள்.

மிச்சிகன் ஏரியில் Architectural night tour என்னும் பிரசித்தமான படகுப் பயணம் ஆரம்பம். இரவு பத்து மணி. இருட்டில் ஏரியின் நீரில் தெரிந்த கட்டிடங்களின் விளக்கொளியில் படகு நகர ஆரம்பித்தது. நகரின் பிரபல கட்டிடங்களை பற்றிய விவரங்களைக் கூறிக் கொண்டே அழைத்து சென்றார்கள்.

இடது பக்கம் Chicago Tribune, அதோ Willis Tower, நேரே தெரிவது Trump Tower & Hotels என அந்நகரின் சரித்திரத்தையும் விளக்கிக் கொண்டே வந்தார்கள்.
பயணத்தின் இறுதியில் ஓரிடத்தில் படகை நிறுத்தி அங்கு நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண செய்தார்கள்.

லேசான குளிரில் இரவு நேர விளக்கொளியில் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான மிச்சிகனில் பயணித்தது வித்தியாசமான அனுபவம்.
மீண்டும் வீடு செல்ல இரவு ஒரு மணி ஆனது.

மறுநாள் காலை நாங்களே சமைத்து கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் நகருக்குள் ரயிலில் பயணித்து Downtown வந்து சேர்ந்தோம். Yellow line, Pink line, Blue line, Green line என விதம் விதமான ரயில் தடங்கள். Downtown செல்வதற்கு எதிர் திசை ரயிலில் தெரியாமல் ஏறி விட்டோம். கூட்டமான அந்த நேரத்தில் ஒரு இளம்பெண் எழுந்து எனக்கு தன் இருக்கையை விட்டு கொடுத்தார். அதை கண்ட ஒரு வயதான ஆங்கிலேய பெண்மணி "உன்னை உன் தாயார் நன்றாக வளர்த்திருக்கிறார்" என்று அந்தப் பெண்ணைப் பாராட்டினார்.

அதை அனுபவிக்க தான் எனக்கு கொடுப்பினை இல்லை, அடுத்த நிலையம் வந்ததும் தவறை கண்டு பிடித்து இறங்கி எதிர் திசையில் பயணித்தோம்.

Downtown.

நெரிசலான பகுதி மட்டுமல்லாமல் சாலையின் குறுக்கே இரும்பாலான மேம்பாலம் அமைக்கப் பட்டு அதன் மேல் ரயில் செல்கிறது . ஆங்காங்கே station கள் வேறு. Downtownஐ சுற்றி சுற்றி ஒரு லைன் செல்கிறது. மக்கள் எங்கு தேவையோ அங்கே இறங்கி ஏணிப் படிக்கட்டுகள் வழியாக தெருவுக்கு வந்து விடலாம்.

சிகாகோ நகரின் தட்பவெப்ப நிலை unpredictable வகை என்பதால் எங்கள் காரை நிறுத்தி விட்டு கனமான ஜாக்கெட்டை (நாம் ஸ்வெட்டர் என்று சொல்வதை அவர்கள் ஜாக்கெட் என்கிறார்கள்) கையில் எடுத்துக் கொண்டு நடந்து Millennium Park நோக்கி சென்றோம்.


இந்த இடத்தை Urban icon of beauty and culture எனக் குறிப்பிடலாம். 24.5 ஏக்கர் நிலத்தில் மிச்சிகன் ஏரியை ஒட்டி அமைந்துள்ளது இந்த பூங்கா. பல விதமான செடிகொடிகளை கொண்ட இந்த பூங்காவில் கலை நிகழ்ச்சிகளுக்கான pavilion களும் உண்டு. பல பாகங்களைக் கொண்ட இந்த பூங்காவின் முன்பகுதியில் மிகப் பெரிய Stainless Steel அமைப்பு உள்ளது.

2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்காவின் star attraction “Chicago bean” என்று மக்களால் அழைக்கப் படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன Cloud gate என்னும் பெயருடைய ஒரு கலைப் பொருள். அவரைப் பருப்பு போன்ற அமைப்பில் உள்ளதால் அந்த பெயர்.
கலை ரசிகர்களுக்கு அது சிறப்பான ஒன்றாக இருந்தாலும் சாதாரணர்களுக்கு selfie எடுத்துக் கொள்ள ஏற்ற ஒரு பொருளாக உள்ளது.

இதன் 80% நகரின் கட்டிடங்களை பிரதிபலித்து, அதன் வளைந்த வடிவத்தால் கதவு போல மடக்கி காட்டுகிறது. மேகத்தை கதவு போல காட்டுவதால் Cloud gate?

நாங்கள் அங்கே சென்ற போது Labour day weekend என்பதால் பூங்காவில் கூட்டமான கூட்டம்.
பச்சை பசேலென்ற வனப்புடன் வண்ண மலர்களைக் கொண்ட பூங்காவை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அருங்காட்சியகத்திற்கு (The Field Museum) நடந்தே சென்றோம்.

மிகவும் பரபரப்பான நகரின் மையப்பகுதியில் இது போன்ற பூங்காவை கண்டது வித்தியாசமான அனுபவம்.


Downtownல் நடந்து சென்ற போது முதல் நாள் இரவில் படகிலிருந்து தெரிந்த கட்டிடங்கள் பலவற்றையும் அருகிலிருந்து காணும் வாய்ப்பு கிடைத்தது. Willis tower, Tribune tower, Trump tower (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான கட்டிடம்; இவர் அடிப்படையில் ஒரு தொழிலதிபர்), Holy name cathedral, John Hancock centre என அனைத்தும் கையெட்டும் தூரத்தில் தெரிந்தன.

நடுத்தெருவில் தலைக்கு மேலே இரும்பு கர்டார்களால் ஆன ரயில் பாதையில் ரயில்கள் செல்ல, கீழே மற்ற போக்குவரத்துக்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல என வித்தியாசமான சாலை அமைப்பு அங்கே.

சாலைக்கு இருமருங்கும் விதம் விதமான கடைகள், அங்கங்கே மரங்கள் செடிகள் என கண்ணுக்கு குளுமையான சாலைகள்.

சிகாகோவில் எப்போது குளிர் எப்போது காற்றடிக்கும் என்பது போல காலநிலை பற்றிய தகவல்களை அனுமானிக்கவே முடியாது என்று கூறியதால் கெட்டியான ஜாக்கெட்டுகளை சுமந்து கொண்டே ஊர் சுற்றினோம். (கவனிக்கவும், அணிந்து கொண்டே அல்ல... அன்றைய தினம் மிதமான வெப்பத்துடன் இருந்ததால் குளிராடை தேவைப் படவே இல்லை)


The Field Museum of Natural History @ The Field Museum என்பது அறிவியல் மற்றும் கலை சார்ந்த பொருட்களுக்கான அருங்காட்சியகம்.

உலகெங்கிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 24 மில்லியன் பொருட்கள் இங்கே நிரந்தரமாகக் காட்சி படுத்தப் பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்த படுகிறது. [These collections include the full range of existing biodiversity, gems, meteorites, fossils, and rich anthropological collections and cultural artifacts from around the globe_ நன்றி விக்கிபீடியா]
மிகப் பெரிய இந்த அருங்காட்சியகத்தை பகுதி பகுதியாக சென்று பார்த்தோம். மதிய உணவை அங்கேயே உண்டு விட்டு Gems, Fossils பகுதிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். மிகவும் அருமையான பகுதியாக இருந்தது அதற்குள் மாலை ஐந்து மணியை நெருங்கி விட்டோம்.

வெளியில் செல்லுமாறு மைக்கில் அறிவிப்பு தொடர்ந்தது. கிளம்பவே மனசில்லாமல் கிளம்பி சென்றோம்(றேன்). அற்புதமான அருங்காட்சியகம்.

அதற்கடுத்து நாங்கள் சென்றது 108 மாடி உயர Willis Tower (முன்பு Sears Tower) வருடத்திற்கு 1.7 மில்லியன் மக்கள் இந்த கட்டிடத்தின் மேல் பகுதியிலுள்ள observation deckல் ஏறி நகரை வேடிக்கை பார்க்கிறார்கள்.
Anodized aluminum & black glass ஆல் ஆனது இதன் வெளிப்புறத் தோற்றம். Sears நிறுவனத்தின் தலைமையகமாக இருந்த இந்த கட்டிடம் Willis Groupஆல் வாங்கப்பட்டதும் பெயர் மாறியது. இந்த கட்டிடத்தின் முக்கியமான வாடகைதாரர்(tenant) UNITED AIRLINES.

103 ஆவது மாடியில் தரையிலிருந்து 412.4 மீட்டர் உயரத்தில் கட்டிடத்தின் வெளிப்பக்கமாக அமைக்கப் பட்டுள்ள கண்ணாடிக் கூட்டில் நின்று பார்த்தால் நகரம் மட்டுமல்லாமல் மிச்சிகன் ஏரி இண்டியனா, மிச்சிகன் , விஸ்கான்சின் மாநிலங்களை கடந்து செல்வது கூட தெளிவாக தெரியும் என்று கூறப் படுகிறது. (பருவ நிலை சாதகமாக இருக்கும் நாட்களில்)

நாங்கள் மாலை 5.30 மணியளவில் அந்த கட்டிடத்தின் கீழே சென்று உள்ளே செல்லலாமா என்று விசாரித்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் அனுமதி சீட்டு என்பதால் காத்திருங்கள் என்று கூறினார்கள்.

உள்ளே சென்று பார்க்கையில் ஏற்கனவே திருப்பதியில் நிற்பது போல queue. ஏறக்குறைய மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு Elevatorல் எங்களுக்கான முறை வந்தது. 60 வினாடிகளில் மேலே செல்லக் கூடிய அதில் பத்து பத்து பேராக ஏற்றி செல்கிறார்கள்.

உயரமான கட்டிடங்களில் எப்போதும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மக்களை (எடையை) ஏற்றுவார்கள். ஒரு குழு இறங்கி வந்ததும் அடுத்த குழுவை மேலேற்றுவார்கள்.

ஒரு வழியாக மேலேறி சென்றோம். அருமையான இரவுக் காட்சிகளை கண்டோம். 

வெளிப் புறமாக அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி கூட்டை Ledge என்கிறார்கள். அந்த இடத்திற்கு செல்ல மீண்டும் நீ .....ண்ட வரிசையில் நின்று எங்கள் முறை வந்ததும் உள்ளே சென்று கீழே பார்த்து(ஒரு மாடி உயரத்திலிருந்து கீழே பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும் ...) புகைப்படம் எடுத்துக் கொண்டு சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்து விட்டு கீழிறங்கி வீடு திரும்பினோம்.


மறுநாள் காலை ஏழு மணிக்கே கிளம்பி அருகிலிருந்த Patel Store சென்றோம். இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து விதமான மளிகை சாமான்களும் காய்கறி பழ வகைகளும் இங்கே கிடைப்பதால் விடுமுறை நாட்களில் கடை திறக்கும் போதே கூட்டமாக இருக்கும் என்பதால் காலை ஏழு மணிக்கு சென்றோம். சீக்கிரமாக செல்ல விட்டால் காய்கறிகள் தீர்ந்து விடக் கூடும் _ மகன்

மிகப் பெரிய கடை. அனைத்து விதமான பொருட்களும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
Bachelor ஆன மகன் வீட்டிற்கு முதன் முறையாக சென்றதால், மகனே உன் வீட்டில் துவரம் பருப்பு இருக்கிறதா உப்பு இருக்கிறதா என அவரிடம் கேட்டு கேட்டு மளிகை சாமான்களையும் காய்கறிகளையும் வாங்கி காரில் ஏற்றிக் கொண்டோம்.

வழியில் Arora என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசித்து விட்டு அங்கேயே அவர்களின் கேன்டீனில் (சலுகை விலையில் பிரசாதங்களை விற்பனை செய்கிறார்கள்) சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

பொதுவாக அமெரிக்க நகரங்களில் உள்ள இந்தியக் கோவில்களில் பிரசாதங்களை இலவசமாகவோ சலுகை விலையிலோ தருகிறார்கள். இந்தக் கோவிலில் தோசை நன்றாக இருக்கும், அந்தக் கோவிலில் புளி சாதம் நன்றாக இருக்கும் என பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் வார இறுதி நாட்களில் இரண்டு மூன்று மணி நேரங்கள் கூட காரில் பயணம் செய்து கடவுளை தரிசித்து விட்டு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். குடும்பஸ்தர்களும் செல்வது உண்டு.

அரோராவிலிருந்து கிளம்பி Green Bay நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

அனுபவங்கள் தொடரும் ...







No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...