Saturday, 12 November 2022

ஐந்தாவது வட அமெரிக்கப் பயணம் (பகுதி- 2)


August 7, 2018 - February 7,2019

சிகாகோ நகரிலிருந்து கிளம்பி Milwaukeeயை கடந்து மிச்சிகன் ஏரியை ஒட்டி வடக்கே மூன்று மணி நேர பயணத்தில் உள்ளது இந்த ஊருக்குள் சென்றோம்.

வருடத்தில் எட்டு மாதங்கள் பனி பெய்யும் இந்த Green Bay நகரில் Fox என்னும் பெயருடைய நதி பாய்கிறது. மிக அழகான சிறிய ஊர். இது பற்றி தனியாக ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

Green Bay பற்றிய பதிவினை படிக்க தேவையான link:

ஒரு மாதம் தங்கி இருந்து இந்த ஊரையும் அதன் சுற்றுப் புறத்தையும் சுற்றி பார்த்தோம். ஒவ்வொரு வார இறுதியிலும் அருகில் இரண்டு மணி நேர தொலைவில் இருந்த ஊர்களை கண்டோம்.

ஒரு வார இறுதியில் Washington island சென்றோம்.

மிச்சிகன் ஏரியில் அமைந்துள்ள இந்த தீவானது Plum Island, Detroit Island, Hog Island, Rock Island, Pilot Island, Fish Island மற்றும் Washington Island ஆகியவற்றின் தொகுப்பாகும். Washington Island தான் இவற்றில் பெரிய தீவு.

இந்த தீவின் மக்கள் Scandinavia விலிருந்து வந்து குடியேறியவர்கள். குறிப்பாக Iceland நாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த தீவை அடைய Ferryயில் செல்ல வேண்டும். காரை ferryயின் அடித் தளத்தில் நிறுத்தி விட்டு மேல் தளத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறே தீவை அடைந்தோம்.

தீவிற்குள் நம் காரிலேயே பயணம் செய்து Lavender தோட்டம் ஒன்றிற்கு சென்றோம். அச்சமயத்தில் அங்கே பூக்கள் இல்லையென்றாலும் அவைகளை பயிரிடும் முறை பற்றி விவரமாக கூறினார்கள். அங்கிருந்த கடையில் லாவெண்டரால் செய்யப் பட்ட சோப்பு, perfume போன்றவற்றை விற்கிறார்கள். அங்கேயே மதிய உணவை உண்டோம்.

தீவின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் மாலை ferryயில் ஏரியைக் கடந்து வீட்டை அடைந்தோம்.

நடுவில் ஒரு பூங்காவில் Indoor Golf விளையாடினோம். இயற்கை காட்சிகள் தவிர்த்து குறிப்பிடும்படி எதுவும் இல்லை.
மற்றொரு வார இறுதியில் இல்லினாய்ஸ் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள Munising என்னும் ஊருக்கு சென்றோம். இங்கே விஸ்கான்சின் மாநிலத்தை விட ஒரு மணி நேரம் அதிகம்.

Pictured rocks எனப்படும் வண்ணப் பாறைகளை கொண்ட 25 மைல் சுற்றளவுள்ள தீவினை வேகப் படகு (Speed boat) ஒன்றில் சுற்றி பார்த்தோம். 800 மீட்டர் ஆழமுள்ள நன்னீர் ஏரி என்பது தெரியாமலே விசைப்படகில் பயணித்தது thrilling and adventurous ஆக இருந்தது.

படகுப் பயணம் முடிந்ததும் சிறிது தொலைவு ட்ரெக்கிங் செய்து நீர்வீழ்ச்சிகளையும் சுற்றியுள்ள வனத்தையும் ஒரு பழங்காலப் பொருட்கள் வைத்திருந்த அருங்காட்சியகத்தையும் கண்டோம். [பழைய தையல் இயந்திரம், வில் அம்பு, பழங்குடி மக்களின் ஆயுதங்கள் …]

நீர்வீழ்ச்சியிலிருந்து வந்த நீர் மூலிகைகளின் மேலே பாய்ந்து வருவதால் brown நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அந்த இடத்தில் சிறு பாலத்தின் அருகிலேயே நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றையும் கண்டோம். மொத்தம் பத்தே பேர் கொண்ட குழு அது. (எண்ணினேன்)

பனிக் காலம் முடிந்து வசந்தம் தொடங்கி இருந்த நாட்கள் என்பதால் பனி உருகி ஆங்காங்கே சிறு நீர்வீழ்ச்சிகளும் பெரு நீர்வீழ்ச்சிகளுமாக அற்புதமாக இருந்தது அந்த பகுதி.
இது பற்றியும் தனியாக ஒரு பதிவு எழுதியுள்ளேன்.


மற்றொரு வார இறுதியில் விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான Madison சென்றோம்.

Milwaukeeக்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டது (Lake Mendota, Lake Monona, Lake Kegonsa and Lake Waubesa).

இந்நகரின் The University of Wisconsin, the Wisconsin State Capitol, the Overture Centre for the Arts, and the Henry Vilas Zoo போன்றவை முக்கியமான இடங்களாகும். ஊருக்குள் நுழைந்ததுமே நேர் கோடு போட்டது போல தெரு முனையில் Capitol கட்டிடம்.

நாங்கள் முதலில் சென்ற இடம் Olbrich Botanical Gardens என்னும் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்த Outdoor தோட்டமும் பத்தாயிரம் சதுரடியில் அமைந்த Conservatoryயும் கொண்ட பூங்கா.

இங்கே The Sunken Garden-English Garden, The Thai Garden (Rock Garden-Conifers & Alpines), Meadow Garden (perennial grasses, wildflowers, and plants grown from bulbs), Rose Garden (Roses, Starkweather Creek and Atrium), Shade Gardens (Ferns) என செடிகொடிகள் வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப் படுகின்றன.

Thai gardenல் Bhumibol Adulyadej என்னும் தாய்லாந்து அரசர் அன்பளிப்பாகத் தந்த தாய் சிற்பக் கலையின் அடிப்படையில் கட்டப் பட்டுள்ள ஒரு மண்டபமும் உள்ளது. சுற்றிலும் பல்வேறு மரம் செடி கொடிகள், மண்டபத்துக்கு செல்லும் வண்டியில் சிறிய ஏரியினை கடந்து செல்லும் வண்ணம் சிறிய பாலம் என அழகாக உள்ளது.

இது தவிர The Bolz Conservatory என்னும் பெயருடைய 10,000 சதுர அடி Greenhouseல் 750க்கும் மேற்பட்ட Tropical & subtropical (வெப்பம், மிதவெப்பம்) செடி, கொடி, மரங்களை நட்டுப் பாதுகாக்கிறார்கள். இந்தியா, மலேசியா, பிரேசில் போன்ற வெப்ப, மித வெப்ப நாடுகளிலிருந்து கொண்டு செல்லப் பட்ட வெற்றிலை, வாழை போன்றவற்றை அங்கே காண முடிந்தது.
பூக்கள் மட்டுமல்லாமல் waxbills போன்ற பறவைகளுக்கும், Goldfish, Frogs, தவளை போன்றவற்றிற்கும் வாழ்விடமாக உள்ளது இந்த conservatory.

இந்தப் பூங்காவை பகுதி பகுதியாக சுற்றிப் பார்த்து விட்டு அருகிலிருந்த ஏரிக் கரை பூங்காவில் மதிய உணவு உண்டு, ஒய்வு எடுத்துக் கொண்டு நகரின் மையப் பகுதியை நோக்கி கிளம்பினோம்.

Capitol கட்டிடம் இருக்கும் பகுதி என்பதால் அதை விடஉயரமான கட்டிடங்கள் கட்ட அங்கே அனுமதி இல்லை என்று கூறினார்கள். சாலை முனையில் தெரிந்த அந்த கட்டிடத்தின் வாசலை நாங்கள் அடைந்த போது மாலை 4.15 இருக்கும். உள்ளே செல்ல அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது 3,4 புது மண தம்பதிகள் தங்கள் குழுவினர் சூழ இந்த கட்டிடத்தின் படிக்கட்டுகளில் நின்று விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மணப்பெண் தோழிகளின் உடைகள் ஒவ்வொரு திருமணத்திலும் ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு color scheme & theme உடன் இருந்தன.

என்ன செய்வதென்று தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நின்றிருந்த போது மாலை 4.30 மணிக்கு ஒரு குழு முன் கதவின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்ததை கண்டு நாங்களும் சென்றோம். 30 நிமிடங்களே உள்ளன சீக்கிரம் பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறினார்கள். ஓட்டமாக ஓடி மேல் மாடிக்கு முதலில் சென்று நகரினையும் சுற்றிலும் தெரிந்த ஏரிகளையும் கண்டோம் .

பின் கீழே இறங்கி வந்து மற்ற இரண்டு தளங்களையும் முடிந்த வரை பார்த்து விட்டு உள்ளேயும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஐந்து மணிக்கு வெளியில் வந்தோம்.

North wing, West wing என திசைகளின் பெயரில் கட்டிடத்தின் பகுதிகள் உள்ளன. அமெரிக்க தலைநகரான Washington DCயில் உள்ள வெள்ளை மாளிகையை போலவே இந்தக் கட்டிடம் வடிவமைக்கப் பட்டுள்ளது என்று கூறினார்கள்.

அன்று பாராளுமன்ற அலுவலகிற்கு வார இறுதி விடுமுறை என்பதால் கட்டிடத்தின் பல பகுதிகளும் பூட்டப் பட்டு இருந்தன.

மாநிலத்தின் தலைநகர் என்றாலும் அதற்கான பரபரப்போ மக்கள் தொகையோ இங்கே காணப் படவில்லை.

மற்றொரு நாள் Green Bayயில் உள்ள Railway Museum சென்று பார்த்தோம். Fox நதிக் கரை ஓரமாக அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் 1850களில் Midwest Railroad Servicesஆல் உபயோகிக்கப் பட்ட ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

ஆரம்ப நாட்களில் Minneapolis பகுதியிலிருந்து சிகாகோவிற்கு பார்லி எடுத்து வர ரயில்களை பயன்படுத்தினார்களாம்.

Big Boy எனப்படும் மிகப் பெரிய Steam என்ஜின் மற்றும் பல பிரபலமான ரயில்களும் இங்கே உள்ளன. 1800களில் அமெரிக்க ரயில்களில் இருந்த வசதிகள் இன்றளவும் நம் இந்திய ரயில்களில் இல்லை என்றே சொல்லலாம்.
இங்கே அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் ஒரு ரயில் பிரயாணமும் செய்யலாம். ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த ரயில் பாதை அருங்காட்சியகத்தை சுற்றி செல்கிறது. கண்டக்டர் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் எழுந்து கொள்ளாதீர்கள் என 100 safety instructions கூறினார்.

ரயில் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இரண்டு முறை சுற்றி வந்தது. நடுநடுவே ரயிலை ஆங்காங்கே நிறுத்தி அருங்காட்சியகம் பற்றிய விவரங்களை கூறினார்.

அமெரிக்காவில் சிறு ஊர்களில் ரயில்களே அரிது என்பதால் சிறு குழந்தைகளுக்கு ரயிலில் செல்வது மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை party hall போல வடிவமைத்து வட்ட வடிவில் மேசை நாற்காலிகள் போடப்பட்டு அலங்கரிக்கப் பட்டு இருந்தது. நாங்கள் வெளியில் வந்த சமயம் வேறொரு இடத்தில் திருமணம் முடிந்து விருந்துக்கு அங்கே கூடிக் கொண்டு இருந்தார்கள்.

நம் நாட்டில் தை, சித்திரை, ஆவணி போல அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் திருமண மாதம் போல. எங்கெங்கு சென்றாலும் திருமண நிகழ்வுகளை, புதுமணத் தம்பதிகளைக் காண முடிந்தது. ஏரிக் கரை, பூங்கா, நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகம் என அவர்களது திருமணம் நடைபெறும் இடமும் பொது இடமாக இருப்பதும் நம் கண்ணில் படக் காரணமாக இருக்கலாம்.

Fox நதியின் கரையை ஒட்டியே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்டியகத்தின் பின் பகுதியில் ஒரு Watch tower உள்ளது. அதன் மேலேறி நகரினை கண்டோம்.

மற்றொரு வார இறுதியில் Oshkosh நகரில் உள்ள EAA Aviation Museum சென்றோம். இங்கே பழமையான, உலகப் போர்களில் பங்கேற்ற மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப் பட்ட விமானங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

Wright சகோதர்கள் செய்த முதல் விமானம் போல ஒரு மாதிரி விமானம் கூட இங்கே வைத்துள்ளார்கள். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப் பட்ட விமானங்கள், விமானிகளின் உடைகள், விமான சக்கரம் போன்றவைகளும் வேறு பல கலைப் பொருட்களும் உள்ளன.

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதை அறிந்து அமெரிக்க மக்கள் எப்படி அதிர்ந்து போனார்கள் என்றும் விவரம் இருந்தது. அதை வீசிய விமானி அமெரிக்க மக்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதையும் காட்சிப் படுத்தி உள்ளார்கள். [அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்தேன் என்று நினைத்திருந்தேன், தற்சமயம் அதைக் காணவில்லை]

பல அரிய வரலாற்றுத் தகவல்களை இந்த அருங்காட்சியகத்தில் அறிந்து கொள்ள முடிந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதை வெளியிட்ட செய்தித்தாள் மற்றும் பல ஆவணங்களும் அங்கே இருந்தன.

விமானங்களின் இறக்கைகள் மரத்தால் செய்யப் பட்டிருந்தன. போர் விமானங்கள் பல விதமாக இருந்தன.

Fox நதிக் கரையோரம் அமைந்துள்ள நகரங்களுக்கு Fox Cities என பெயர். Oshkosh, Appleton, Kaukauna, Manitowoc, Ashwaubenon போன்ற நகரங்களுக்கும் சென்று வந்தோம். இந்நகரங்களைச் சுற்றிலும் பலவிதமான தொழிற்சாலைகளும் பால் பண்ணைகளும் உள்ளன.

Kaukaunaவில் ஒரு இந்தியக் கோவில் உள்ளது. நாங்கள் சென்ற தினம் பிள்ளையார் சதுர்த்தி வாரம் என்பதால் 40 சிறுவர் சிறுமியர்கள் களிமண்ணால் பிள்ளையார் செய்யும் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் படைப்புக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

அந்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் கூடும் இடமாக இந்த கோவில் உள்ளது. நாங்களும் சில முறை சென்று வந்தோம்.

Twin Cities என்னும் ஊரில் மிச்சிகன் ஏரியில் மக்கள் மெரினா கடற்கரை போல குளித்து விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். Manitowoc சென்று திரைப்படங்கள் பார்த்தோம். தியேட்டரில் எங்கள் மூவரை தவிர யாரும் இல்லை.

பல Screenகளை உடைய அந்த திரையரங்கில் ஒவ்வொரு screenக்கும் உள்ளே செல்வதற்கு முன்பாக பொதுவான இடத்தில் ஒரு இயந்திரத்தில்(கணினி) திரைப்படத்தை எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று program செய்து வைத்து விடுகிறார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் நேரத்திற்கு திரையில் படம் ஓடும் என்று எங்கள் மகன் கூறினார்.

Oshkosh நகரின் பிரசித்தமான Fox Mall சென்று Falafel (மசால் வடை) மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி சாப்பிட்டோம். பச்சடிக்கும் வேறு பெயருண்டு. :)

வெளியூர் செல்லாத நாட்களில் மாலை நேரங்களில் Fox நதிக் கரையோர பூங்காக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில பூங்காக்கள், சாலையோரங்களில் பனி உருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், Indoor Bowling, Walmart, Indian Store, Indian Restaurant, Farmers market, Library போன்ற இடங்களுக்கு சென்றோம்.

Green Bay மற்றும் அதன் சுற்றுப் புறங்கள் சில
நூற்றாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்தது. இந்தப் பகுதியில் பயிர் செய்ய தேவையான நிலங்கள் இருப்பதை முதலில் இங்கே குடி பெயர்ந்த ஐரோப்பிய நாட்டினர் புரிந்து கொண்டதும் அந்த தகவலை பரப்ப ஐரோப்பிய கண்டத்தின் பல நாட்டவர்களும் இங்கே குடி பெயர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

மேலும் பழங்குடியினரும் இங்கே வசித்து வந்துள்ளனர். சீனாவின் Silk route போல இந்தப் பகுதியும் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் வரலாற்று சிறப்பு மிக்கதாக உள்ளது. இந்த ஊரின் பகுதிகள் மற்றும் தெருக்களின் பெயர்களும் ஜெர்மன், பிரஞ்சு, டச்சு என பல ஐரோப்பிய மொழிகளிலும் உள்ளன.

Indian storeல் சேப்பங்கிழங்கு, வெண்டைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் தவிர காய்கறிகள் இல்லை. அதுவும் பிரதி புதனன்று மட்டுமே புதுக் காய்கறிகள் வரும். மளிகை சாமான்கள் கிடைக்கின்றன.

உழவர் சந்தை பிரதி சனிக்கிழமை காலையில் downtownல் கூடுகிறது. வருடத்தில் பனி இல்லாத ஆறு மாதங்கள் மட்டுமே கூடும் இந்த சந்தையில் பூசணிக்காய் உட்பட அனைத்து இந்தியக் காய்களும் கிடைத்தன. பலவிதமான பழங்களும் கிடைத்தன.
Walmartல் 1$ க்கு 10 மக்காச்சோளம் கிடைத்தது. பக்கத்து மாநிலத்தில் மக்காச்சோளம் அதிகம் விளைவதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். Spring முடிந்து Winter ஆரம்பிக்கும் சமயம் என்பதால் சலுகை விலையில் ஆடைகளும் விற்பனை செய்தார்கள். 1$ க்கு கூட சிலவைகள் கிடைத்தன.

நானும் என் கணவரும் நடைப்பயிற்சி நேரத்தில் அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் விற்பனை செய்யும் உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றையும் வாங்கி வருவோம்.

ஊருக்குள் செல்ல பேருந்து வசதியும் உண்டு. பல மணி நேரங்களுக்கு ஒரு முறை மகன் குடியிருந்த பகுதியை தாண்டி செல்லும்.

Fox நதியில் படகுப் பயணம் செய்ய நேரமில்லை. அங்கே விதம் விதமான பறவைகள் (migratory birds) வந்து செல்கின்றன. அவைகளை பற்றிய குறிப்புக்களும் படத்துடன் அங்கங்கே ஆற்றினை ஒட்டிய பூங்காவில் வைத்திருந்தார்கள். கனடா, ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து அவைகள் வருவதாக குறிப்பு கூறியது.

பூங்காவில் பல விதமான செடிகள் இருந்தன. நடந்து சென்று அவற்றை கண்டு களித்தோம்.

ஆற்றினை ஒட்டிய ஒரு கம்பி வேலி நிறைய பூட்டுக்களை தொங்க விட்டிருந்தார்கள். (Love locks) நம் ஊரில் திருமணம் ஆக, பிள்ளை பிறக்க என வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டுவது போல இதுவும் காதல் நிறைவேறி திருமணத்தில் முடிய வேண்டுதல் தான். பாரிஸ் நகரிலும் இது போல பார்த்தோம்.


ஒரு நாள் Fox நதியின் மற்றொரு பகுதியை லேசான குளிரில் இரவு நேரத்தில் கண்டோம். நதியின் மறுகரையில் Downtown வண்ண விளக்கொளியுடன் தெரிந்தது. அருகிலேயே ஒரு அருங்காட்சியகம். (உள்ளே சென்று பார்க்கவில்லை)

வெயில் 3 டிகிரி farenheitக்கு குறைய தொடங்கியதும் கலிபோர்னியாவுக்குக் கிளம்பினோம். [Green Bay பற்றிய என் பதிவினை தவறாமல் படிக்க பரிந்துரைக்கிறேன். எப்படி அங்கே வாழ்க்கை முறை உள்ளது என விரிவாக என் அனுபவங்களுடன் சேர்த்து விளக்கியுள்ளேன்]

அந்த வருடம் Arctic Vortex காரணமாக Green Bay பகுதியின் சீதோஷ்ணம் அண்டார்டிகாவுக்கு நிகரான -47 டிகிரி குளிர் நிலைக்கு சென்றது.

செப்டம்பர் மாதத்தின் கடைசி சனியன்று சிகாகோ வரை கார், அங்கிருந்து விமான பயணம் என சென்றது போலவே மீண்டும் பயணிக்க வேண்டும்.

சிகாகோ செல்ல Milwaukee நகரைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த நகரம் மிச்சிகன் ஏரிக் கரையில் அமைந்துள்ள விஸ்கான்சின் மாநிலத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்.

1840கள் தொடங்கி ஜெர்மானிய மக்கள் இங்கே குடி பெயரத் தொடங்கினர். இன்றளவும் German-American மக்கள் தொகையே இங்கு அதிகம் வசிக்கிறார்கள். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்நகரில் குடியேறியுள்ளார்கள்.

இந்நகரம் கலை, கல்வி மற்றும் தொழிற்சாலைகளுக்கு புகழ்பெற்றது. Fortune 500 நிறுவனங்களில் பல இங்கே உள்ளன. Breweriesக்கு பெயர் பெற்றது இந்நகரம்.
Great Lakes பகுதியில் இருப்பதால் பனியும் இங்கே அதிகம். மில்வாக்கி நதி மற்றும் இரண்டு நதிகள் நகரின் நடுவே பாய்கின்றன.

நகருக்குள் பயணித்து Harley Davidson Museum சென்றோம்.

Harley -Davidson Inc (1903) என்பது மில்வாக்கியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மோட்டார் சைக்கிள் நிறுவனம்.

மிகப் பிரபலமான இந்த மோட்டார் சைக்கிள்கள் உலக பிரசித்தம். இந்தியாவில் cheapest modelன் விலை 11.99 லட்சங்கள் என்கிறது கூகிள். அதிகபட்ச விலையாக 39-40 லட்சங்கள். இவை மணிக்கு 160 கிலோமீட்டர் பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை.

இந்த வகை வாகனங்களின் பெட்ரோல் டேங்க் நீர் துளி போல இருப்பது தான் இதன் சிறப்பு. (Water droplet)
விலை அதிகம் என்பதற்காக மோட்டார் சைக்கிள் பிரியர்கள் கவலைப் படுவதில்லை. இந்த நிறுவனம் வருடத்திற்கு 3,30,000 வண்டிகளை தயாரிக்கிறது என்பதே இதற்கு சாட்சி.

2008 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்ட இந்த அருங்காட்சியகம் 20 ஏக்கர் பரப்பளவில் Menomonee நதியோரத்தில் அமைந்துள்ள இரண்டடுக்கு கட்டிடம்.

இங்கே 450 மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களை இங்கே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. இங்கே 1000 மோட்டார் சைக்கிள்களும் 500 கார்களும் நிறுத்தும் வண்ணம் பார்க்கிங் வசதி உள்ளது.

இங்கே நிரந்தர பொருட்காட்சி தவிர restaurant, café, retail shop, and special event spaces எனப் பலவும் உள்ளன. 1915 ஆம் ஆண்டு முதல் இந்த Harley Davidson நிறுவனம் தாங்கள் தயாரித்த ஒவ்வொரு மாடலுக்கும் ஒரு வண்டி என சேமித்து வைத்திருந்ததை இந்த தனியார் அருங்காட்சியகத்திற்கு தந்து உதவியுள்ளது. இங்குள்ள 85% கலைப் பொருட்கள் அந்நிறுவனம் நன்கொடையாக அளித்தவைகள்தான்.
120 ஆண்டு கால வரலாற்றை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் முதன் முதலாக தயாரிக்கப் பட்ட சாதாரண சைக்கிளில் என்ஜின் பொருத்தப் பட்ட மோட்டார் சைக்கிள் தொடங்கி latest model வரை உள்ளது. Chronological order ல் வைத்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் காவல் துறையினரால் மட்டுமே உபயோகிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் வாகனங்கள் எப்படி பந்தயங்களுக்கு மாறி பின் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது என வரிசைப் படுத்தி கட்சிப் படுத்தி உள்ளார்கள். ஒவ்வொரு வாகனத்தைப் பற்றியும் அதனருகிலேயே குறிப்பு உள்ளது.

இந்த நிறுவனத்தின் சரித்திரம் குறித்த தகவல்கள், கலைப்பொருட்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் , Video footages போன்றவையும் இங்கே உள்ளன.

மோட்டார் சைக்கிள் என்ஜின்கள் எப்படி வேலை செய்கின்றன என நாம் அறிந்து கொள்ளும் வகையில் interactive exhibits ம் இங்கே உள்ளன. நாமே அவற்றை இயக்கி பார்க்கலாம். இவை தவிர ஆங்காங்கே 10 மோட்டார் சைக்கிள்களை பார்வையாளர்கள் ஏறி அமர்ந்து அனுபவிக்கும் வகையில் நிறுத்தி உள்ளார்கள். அதிக பட்சமாக நாம் செய்ய கூடியது புகைப்படம் எடுத்துக் கொள்வது தான்.

இந்த அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் கடந்த 70 வருடங்களாக இந்த வாகனத்தின் petrol tank வடிவமைப்பு எப்படி மாறி இருக்கிறது என காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஜப்பானிலிருந்து அடித்துக் கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை சேர்ந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் காட்சிப் படுத்தி உள்ளார்கள்.

Captain America போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப் பட்ட இந்நிறுவனத்தின் வாகனங்களைப் போலவே செய்து வைத்திருக்கிறார்கள். (Customized vehicles)

இந்த வகை வாகனங்களை பற்றிய விவரங்கள் இதற்கு முன் எனக்கு தெரியாது. அவை பற்றிய குறிப்புக்களை படிக்க வியப்பாக இருந்தது.
[நம் நாட்டிலும் நடிகர் அஜித் குமார் போன்ற பைக் ரேஸ் பிரியர்கள் இது போன்ற மோட்டார் சைக்கிளை உபயோகிக்கிறார்கள்]

நிதானமாக இந்த அருங்காட்சியகத்தை கண்டு களித்து விட்டு மாலை சிகாகோவில் உள்ள நண்பரின் மகள் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம்.

இரவு உணவை இந்திய உணவகத்தில் உண்டு விட்டு மறுநாள் காலை அவர் செய்து தந்த இட்லிகளை வாங்கி கொண்டு விமானத்தில் ஏறி San Jose விமான நிலையத்தை சென்றடைந்தோம்.

Milpitas, California

October.நவராத்திரி, ஹாலோவீன் மாதம்.

கொலு வைத்த அன்று காலை குடும்ப நண்பரான இளைஞர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி ICU வில் இருப்பதாக தகவல் வர, அவரைக் காண ஓடினோம். அடுத்த ஐந்து வாரங்களுக்கு எங்கள் மகள் வீட்டிலேயே தங்கி இருந்த அவரோடும் அவரது தாயாருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. (அந்த நட்பு இன்றளவும் தொடருகிறது)

அக்டோபர் 31 அன்று ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பேரன்களுடன் இரவில் வீடு வீடாக Trick or Treat என கேட்டு சிலர் செய்த trickகளை ரசித்து விட்டு , treatகளை வாங்கி கொண்டு வீடு வந்தோம்.
நவம்பர் மாதமென்பது இலையுதிர் காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கும் நேரம். மகளது வீட்டிற்கு அருகிலிருந்த மரத்தின் இலைகள் வித்தியாசமாக மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.

Thanks Giving Day மாதமும் கூட. மகளது உறவினர் வீடு இருக்கும் Seattle நகருக்கு ஒரு வாரம் சென்று வந்தோம்.
மகனும் எங்களுடன் சேர்ந்து கொள்ள -2 டிகிரி குளிரில் கார்த்திகை பண்டிகையை அப்பம் வடை பாயசம் செய்து விளக்கேற்றி கொண்டாடினோம்.

தினமும் காலை 11 மணிக்கு கிளம்பி சுற்று புறத்தில் இருந்த இடங்களை பார்த்தது விட்டு இரவில் வெளியில் இந்திய உணவகங்களில் உண்டு விட்டு வீடு திரும்புவோம்.

விடிய விடிய குளிர், பகலில் நச நசவென மழை, வெய்யில், ஊரை விட்டு ஒரு மணி தொலைவு பயணித்தால் கொட்டும் பனி என வித்தியாசமான நகரம் இது.

Microsoft, Amazon, Facebook போன்ற பிரபல நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ள ஊர் என்பதால் நிறைய இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

உறவினருடன் Microsoft campusஐ பார்த்து வந்தேன். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. எப்போதுமே work from home கலாச்சாரம் அமெரிக்காவில் உண்டு என்றாலும் சிறு குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களுக்குக் கூடுதல் சலுகை உண்டாம்.

குறித்த நேரத்தில் வேலை முடித்து கொடுத்தால் போதும்; அலுவலகம் வர தேவை இல்லை. இது போல பல சலுகைகள் இருப்பதால் இங்கு வேளைக்கு சேரும் பெண்கள் பொதுவாக வேறு நிறுவனங்களுக்கு மறுவதோ வேலையை விடுவதோ இல்லை என்கிறார்கள்.

ரோம் போல இதுவும் ஏழு குன்றுகளின் நகரம். மழை காரணமாக அடர்த்தியான மரங்கள் எங்கெங்கும். உறவினர் மகள் படிக்கும் பள்ளியில் ஒரு நாள் கரடி வந்தது என்று கூறினார்கள். ஊரை சுற்றிலும் ஏரிகள் குளங்கள் நீர்வீழ்ச்சி. இந்திய விழாக்களும் பண்டிகைகளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் படுகின்றன.

இந்த நகரை பற்றிய தனிப் பதிவுக்கான link:


ஒரு வாரப் பயணத்திற்கு பிறகு வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள் முற்றிலுமாக மஞ்சள் நிறத்தில் மாறி இருந்தன. அவர்கள் வீட்டுக் காரும் அதே நிறத்தில் இருக்கும். பார்க்க அருமையான காட்சி.

சில நாட்களில் மரத்தின் இலைகள் உதிர ஆரம்பித்தன. புல்வெளியும் சாலையும் மஞ்சள் நிறமாக வெயிலில் ஜொலித்தன.
ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் அரசாங்கத்தின் மரம் அறுக்கும் வாகனம் ஒன்று வந்து மரத்தின் தேவை இல்லாத கிளைகளை வெட்டி மற்றொரு இயந்திரத்தில் போட, அந்த இயந்திரம் கிளைகளையும் இலைகளையும் தூளாக்கி டிராக்டர் போன்ற ஒரு வாகனத்தில் கொட்டியது. தரையில் கிடந்த இலைகளையும் உறிஞ்சி தூளாக்கி எடுத்துக் கொண்டு கிளம்பிய அந்த வாகனத்தை வியப்புடன் வேடிக்கை பார்த்தேன். புகைப்படம் வீடியோ என எடுத்தேன்.

கலிபோர்னியாவில் நம் வீட்டு வாசலில் நமக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கும் மரமாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்த பிறகு அதை வெட்டும் உரிமை நமக்கு இல்லை. அரசாங்கத்தின் உத்தரவு பெற்றால் அவர்களே மரத்தை அறுக்கவோ வெட்டவோ செய்வார்கள்.
டிசம்பர் மாத இறுதியில் பெரிய பேரனின் பிறந்த நாளை ஒட்டி விடுமுறையும் சேர்ந்து கொள்ள இம்முறை நாங்கள் கலிபோர்னியா, நிவேடா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள Lake Tahoe மற்றும் Reno ஆகிய இடங்களுக்கு சென்றோம்.

உறவினர் குடும்பமும் சேர்ந்து கொள்ள காரில் கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரான Sacramento வைக் கடந்து Lake Tahoe வை அடைந்தோம். Sacremento கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரம் என்றாலும் சான் பிரான்ஸிஸ்கோ தான் அதிக பரபரப்புடன் உள்ள நகரம். மக்கள் தொகையும் அதிகம்.

நாங்கள் அங்கே சென்று கேபிள் காரில் செல்ல
காத்திருந்த போது -4 டிகிரி Fahrenheit.

லேசான?! பனிக்காற்றில் எப்போது கேபிள் கார் சேவையை நிறுத்துவார்களோ என பயந்து, ஒரு வழியாக “ஒரு மணி நேரம் பனியில் திறந்த வெளியில்” காத்திருந்து உயரே கிளம்பி சென்றோம்.

அந்தக் குளிரிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

உயரமான இடத்திலிருந்து Tahoe ஏரியை பார்க்க மிக அற்புதமாக இருந்தது. இந்த ஏரியானது 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று கூறப் படுகிறது. Sierra Neveda மலையில் உள்ள இந்த ஏரி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

வருடம் முழுவதும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெயிற்காலத்தில் இந்த ஏரியில் படகுப் பயணம் செல்லலாம். குளிர் காலத்தில் குளிரை அனுபவித்து கொண்டே வேடிக்கை பார்க்கலாம். (வெயிற்காலத்தில் நான் சென்றதில்லை)
இந்த ஏரியை சுற்றிய பகுதி இயற்கை சூழ்ந்த கண்ணுக்கு குளுமையான பகுதி.

ஏரியை கண்டு களித்து விட்டு Reno நகரை நோக்கி பயணித்தோம். முன்பே பதிவு செய்திருந்த Silver Legacy என்னும் விடுதியில் போய் இரவு தங்கினோம். -8 டிகிரி Fahrenheit.

காரிலிருந்து இறங்கி சாமான்களை எடுத்துக் கொண்டு அறைக்கு செல்வதற்குள் நடுங்கி விட்டோம்.
Reno நகரம் Nevada மாநிலத்தில் உள்ளது. இந்த ஊர் காசினோக்களுக்கு பிரசித்தி பெற்றது. இந்த மாநிலத்தில் மட்டுமே சூதாட்டம் சட்டப்படி குற்றமில்லை.

குடும்பத்தினர் அனைவரும் சோர்வு காரணமாக தூங்கி விட நானும் என் கணவரும் மருமகனுடன் இரவு சில நிமிடங்கள் காசினோவுக்கு சென்று விளையாடி 11$ வெற்றி பெற்று அறைக்கு திரும்பினோம்.

பிரபல IT நிறுவனங்களால் இந்த சிறு நகரம் தற்போது பிரபலமடைந்து உள்ளது. மறுநாள் காலை Burney falls மார்க்கமாக பல உறைந்து போன ஏரி, குளம், ஆறுகளை தாண்டி சான் பிரான்ஸிஸ்கோ வந்தடைந்தோம்.

கலிபோர்னியா மாநிலத்தில் பனியே கிடையாது என்றே நினைத்திருந்த எனக்கு சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு இரண்டு மணி நேர தொலைவில் பனி மட்டுமே என பார்த்த போது வியப்பாக இருந்தது.

இடையில் சான் பிரான்ஸிஸ்கோ Golden Gate பாலத்திற்கு கீழ் பகுதியில் கடற்கரையில் பெரிய பேரனின் பிறந்த நாள் கேக் வெட்டும் விழாவையும் கொண்டாடினோம்.

பேரன்களின் பள்ளி விழாக்கள், Spelling Bee competition, திரு சசி கிரண்,திரு உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் கர்நாடக இசைக் கச்சேரி,பூங்காவில் சகோதரியுடன் நடைப்பயிற்சி, பொங்கல், Doron Park (Sonoma county), என கழிந்தது ஜனவரி மாதம்.

ஜனவரி மாதம் நாலாம் தேதியன்று சென்னையில் எங்கள் எதிர் வீட்டில் வசித்து வந்த நண்பர் திரு M.G .ரவி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

சம்ஸ்க்ருத பாரதி நடத்தும் நான்கு நிலை பரீட்சைகளில் இரண்டாவதற்கான பாடங்களை அச்சமயத்திலேயே Online வகுப்புக்கள் மூலம் கற்று, ஜனவரி கடைசி ஞாயிறன்று வெளியூரில் /வெளிநாட்டில் இருப்பவர்களுக்கான முறைப்படி மகளின் வீட்டிலிருந்தே பரீட்சையை எழுதி (பேரன்களின் கடுமையான supervision உடன்) scan செய்து email செய்தேன்.

என் தோழி அனுப்பிய வகுப்பு நேர ஆடியோக்கள், ஆசிரியையின் வாட்ஸாப் ஆடியோ வகுப்புக்கள் மற்றும் Milpitasல் வசிக்கும் சகோதரி ஒருவரின் தொலைபேசி வகுப்புக்கள் என பல விதத்திலும் உதவி கிடைத்தது. (நன்றி சகோதரிகளே)

ஏற்கனவே நான்கு முறைகள் வந்து சென்றிருந்தாலும் முதல் முறை தவிர மற்ற சமயங்களில் பேரன்கள் சிறு குழந்தைகளாக இருந்தார்கள் மற்றும் வேறு பல காரணங்களால் பல ஊர்களுக்கும் செல்ல முடிந்ததில்லை.

2018 ஆம் வருட பயணம் எந்த வித கட்டுப்படும் இல்லாத விதமாக அமைந்தது மற்றும் என் கணவரும் உடன் வந்ததால் பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க முடிந்தது.
பிப்ரவரி 6 ஆம் தேதி ஐந்தாவது அமெரிக்க பயணம் முடிவுக்கு வந்தது. துபாய் மார்க்கமாக சென்னை வந்து சேர்ந்தோம் இனிய பல நினைவுகளுடன்.

அனுபவங்கள் தொடரும் ...
























WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...