Monday, 18 March 2019

இன்னும் மேலே ......


கடந்த 2018 ஆம் வருட அமெரிக்க பயணத்தில் Latitude 47.60 & longitude -122.33 coordinates ல் அமைந்த வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (Green Bay , WI ஐ விட இது வடக்கே  3 டிகிரி அதிகம் ) 

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பரப்பும், மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்புமாக அமைந்திருக்கும்  சியாட்டில் நகருக்கு San Jose நகரிலிருந்து Thanks Giving Day வாரத்தில் பயணம் செய்தோம். ( ஸ்பானிஷ் மொழியில் J என்ற எழுத்துக்கு உச்சரிப்பு இல்லை . Jalapino - alappino  Javi - avi  Jose -ose ) 

ரோம் நகரைப் போல ஏழு குன்றுகளின் நகரம் இது. நகரின் நடுவே மிகப் பெரிய வாஷிங்டன் ஏரி தொடங்கி எங்கெங்கும் ஏரிகள், அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகள், காடுகளின் நடுவே செல்லும் ஒற்றை சாலைகள், ஆங்காங்கே குடியிருப்புகள், அலுவலகங்கள்  என வித்தியாசமான ஊர்.  

நாங்கள் சென்ற நாட்களில் இரவில் -2 டிகிரி குளிர் இருந்தாலும் கூடவே மழையும் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. (மழை இல்லாமல் சியாட்டில் இல்லை என்று கூறினார்கள்) நகரைத் தாண்டி 2 மணி நேர பயணத்தில் பனிப்பொழிவு . தெருவோரம் தொடங்கி எங்கெங்கும் பனி . 

உறவினரது வீட்டின் மிக அருகிலேயே Sammamish ஏரி உள்ளது . 11 kms நீளமும் 2 kmச் அகலமும் உடையது . மழை, குளிர் காரணமாக ஏரிக்கு அருகில் நடந்து செல்ல முடியவில்லை . 

தினமும் காலை 11 மணிக்கு Bruch எனப்படும் உணவை முடித்துக் கொண்டு கையில் snacks, தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கார்களில் மூன்று குழந்தைகள் ஏழு பெரியவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புவோம். 

இரண்டு ஸ்வெட்டர்கள் அதன் மேல் ஒரு Heated Jacket, Thermal மற்றும் Jeans pants, குல்லாய் , gloves,  woolen socks, scarf அணிந்து குடை சகிதம் எங்கள் சியாட்டில் பயணம் snowqualme நீர்வீழ்ச்சியிலிருந்து ஆரம்பித்தது. அதே பெயரில் அமைந்த நதியிலிருந்து மழை மற்றும் பனி உருகுவதால் நீர்ப் பெருக்கு அதிகரித்திருந்த காலத்தில் அதைக் கண்டோம். உயரத்திலிருந்து கொட்டுவதால் சாரல் மேலே தெறிக்கிறது . அருமையான அனுபவம். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். 

மறுநாள் ஸ்டீவன்ஸ் பாஸ் (Stevens pass) என்னும் இடத்திற்கு சென்று பனியில் விளையாடி விட்டு திரும்பினோம் . அன்று பனிப்பொழிவு இல்லை. முதல் நாள் பெய்த பனியே சாலையோரம் இருந்தது. 

மறுநாள் Leavenworth என்னும் ஜெர்மனியின் Bavarian styleல் அமைந்த கிராமத்தைக் காண சென்றோம் . இந்த இடத்தை அடைய ஸ்டீவன்ஸ் பாஸ்(Stevens pass)வழியாகத் தான் செல்ல வேண்டும் (https://leavenworth.org/). சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற விதவிதமான பொழுது போக்குகள் அமைந்த இடம். வெயிற் காலத்தில் திரைப்பட விழா, பனிக்காலத்தில் ஊரெங்கும் விளக்கு அலங்காரங்கள் என வெவ்வேறு விதமான நிகழ்வுகள் அங்கே நடைபெறுகின்றன.

சியாட்டில் நகரிலிருந்து  Leavenworth செல்லும் போது பாதி வழியில் Stevens pass லிருந்து பனிப்பொழிவு தொடங்கியது. கடும் பனிப் பொழிவுக்கு நடுவில் காரில் பயணித்தது வித்தியாசமான அனுபவம் . ஊசியிலை மரங்களின் மேல் பனி விழுந்து குச்சி குச்சியாக நீட்டிக் கொண்டும், கீழே உதிர்ந்து கொண்டும் இருந்ததை கண்டோம். வித்தியாசமான அனுபவம். 

Leavenworth கிராமத்திற்குள் நுழைந்தவுடன் தெருவெங்கும் பனி. சுற்றிலும் cascade மலை தொடரின் பனி மூடிய சிகரங்கள். மாலை நான்கு மணிக்கே இருட்டு . ஊருக்குள் நடந்து சென்று விளக்கு அலங்காரங்களை கண்டோம். (0 டிகிரி குளிரில் நானும் பேரக்குழந்தைகளும்  ice cream சாப்பிட்டோம்.)

திரும்பும் வழியில் பனி கெட்டியாகி வாகனங்கள் break பிடிக்காமல் வழுக்கி வழுக்கி ... திக் திக் நிமிடங்கள். 

பனிப் பொழிவுள்ள ஊர்களில் வாகனங்களின் நான்கு சக்கரங்களும் ஒரே சமயத்தில் பிரேக் பிடித்தால் நிற்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும் அல்லது அதற்கென அமைந்த சங்கிலியால் சக்கரங்களைப் பிணைத்து விட்டு ஓட்ட வேண்டும்.

எங்களுக்கு பின்னால் வந்த காரில் உள்ளவர்கள் கூறியதை கேட்ட பிறகு தான் உண்மை புரிந்தது . நாங்கள் சென்ற காரின் நிலையை கண்டு "திக் திக்" அவர்களுக்கு தான் என்று. காரணம் நாங்கள் சென்ற கார் முன் இரண்டு சக்கரங்கள் மட்டுமே பிரேக்கை அழுத்தினால் நிற்கும் வாகனம் . பனிப்பொழிவை எதிர்பார்க்காத காரணத்தால் சக்கரங்களை பிணைக்கும்  சங்கிலி கொண்டு வரவில்லை.
  
ஒரு வழியாக ஊறி ஊறி மலையை விட்டு கீழிறங்கி வீடு வந்தோம்.

எங்கள் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியான Mount Rainier செல்ல முடியவில்லை பனிப்புயல் காரணமாக சாலைகள் மூடப்பட்டு விட்டன. (விமானத்தில் செல்லும் போது அந்த மலை மேலே தான் போகும் பார்த்துக் கொள்ளுங்கள் _ உறவினர் )

மற்றொரு நாள் ....

நகரின் மையத்தில் பறந்து விரிந்த வாஷிங்டன் ஏரி . கடலும் மிக அருகில் உள்ளது. கடல் வழியாகவோ அல்லது வான் வழியாகவோ அலாஸ்கா செல்ல மக்கள் கூடும் ஊர் இது. ஏரியைக் கடந்து சென்றால் Downtown.மழை நின்ற ஒரு நாளில் மிகப் பிரபலமான Seattle Tower மீது ஏறி நகரின் இரவு நேர அழகினைக் கண்டோம். (அதோ பாருங்கள் அந்த தீவு தான் பிரபல Microsoft நிறுவனரின் வீடு இருக்கும் தீவு. மொத்த தீவுமே அவருக்கு தான் சொந்தம். இதோ பாருங்க Amazon அலுவலகம்)

சியாட்டில் நகரம் மிகப் பிரபலமான Microsoft மற்றும் Amazon என்ற இரண்டு நிறுவனங்களின்  தலைமையிடம்  . இவை தவிர Facebook போன்ற பிரபல நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும் , இந்நிறுவனங்கள் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கும் இந்நகரம் பிரசித்தம். (Microsoft நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை நேரத்தில் பல சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் இருப்பதால் அங்கே வேலையில் சேர்ந்தவர்கள் நீடித்து இருப்பதாக கூறினார்கள்)

பழமையான தொழில்களான Lumbering, மீன் பிடித்தல் போன்றவைகளை இந்நிறுவனங்கள் ஓரம்   கட்டிவிட்டது போல தோன்றுகிறது. 

இந்திய உணவகங்களில் விதம் விதமான உணவு வகைகள் கிடைக்கின்றன . கோவில்கள், திருவிழாக்கள், பாட்டு, நடனம், கலை விழாக்கள் என மற்றொரு கலிபோர்னியா.

மற்றொரு நாள் , Ferry எனப்படும் வாகனங்களையும் ஏற்றி செல்லும் படகின் மூலம் அருகிலுள்ள BainBridge தீவிற்கு சென்று இருட்டிய பிறகு மீண்டும் நகருக்குள் வந்தோம்.  Ferry மூலம் திரும்பும் சமயம் கண்ட நகரின் இரவு நேரக் காட்சிகள் கண்ணுக்கும் மனதுக்கும்  அருமை. பல திரைப்படங்களில் இந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்கள்.

என் நீண்ட நாள் கனவு  சியாட்டில் சென்று tulip பூக்களின்  கண்காட்சி மற்றும் Boeing Factoryயைக் காணுதல் . துலிப் பூக்களின் கண்காட்சியை ஏப்ரல் மாதம் சென்றால்  தான் காண  முடியும்.(காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலேயே அது போன்ற கண்காட்சியை  கடந்த ஏப்ரல்  மாதத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது )

போயிங் தொழிற்சாலையை  என் கணவர், மகள் மற்றும் மகனுடன் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. (15- 17 வருடங்களுக்கு பிறகு நாங்கள் மட்டும்). 

பின்னணியில் சிகரங்களில் பனிபடர்ந்த மலைத் தொடர்கள் தென்பட Everette என்னும் இடத்தில் அமைந்த போயிங் தொழிற்சாலையைக் காண மிக்க ஆவலுடன் (நான் மட்டும் ஆவலுடன் மற்றவர்கள் மிகுந்த அசுவாரஸ்யத்துடன் சென்றோம் .பாட்டி அங்கே பார்க்க ஒன்றும் இல்லை tour சீக்கிரம் முடிஞ்சுடும் படு bore _ என் பேரன்)

விமானத்தின் பல்வேறு பகுதிகள் வேறு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கே ஒருங்கிணைக்கப்படுவதை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே  பேருந்து மூலம்  அழைத்து சென்று காட்டினார்கள். (90 நிமிடங்கள்)

மிகப்பெரிய விசாலமான பகுதி. நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒவ்வொரு விமானத்தின் அருகிலும் உயரமான இடத்திலிருந்து (observation deck) காணும் வண்ணம் அழைத்து சென்றார்கள். நாங்கள் சென்ற போது  (1)Boeing 747-8 [cargo], (2)Boeing 767[Cargo] , (3)Boeing 777X[Commercial], (4)787-9(Commercial- Dreamliner )என நான்கு விமானங்களின் ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

ஒரு விமானத்தின் விலை $340 மில்லியன் என்று சொன்னார்கள். Boeing 777  விமானம்  ஒரே வாரத்தில் தயாராகிறது என்று வியக்க வைக்கும் தகவலையும் கூறினார்கள். 35,000 தொழிலாளர்கள் மூன்று shift களில் வேலை செய்து வருகிறார்கள் என்று வழிகாட்டி கூறினார். (2.30 am ஷிப்ட்டில்  20,000 பேர், 10 am ஷிப்ட்டில் 10,000, பேர் இரவு ஷிப்ட்டில் 5,000 பேர் )
 
தயாராகிக் கொண்டிருந்த நான்கு விமானங்களில் இரண்டு  விமானங்கள் அடுத்த சில நாட்களிலேயே வானில் பறக்க ஆரம்பித்து விட்டதாக செய்தியில் படித்தேன். . Boeing 777X[Commercial]இரண்டு நாட்களுக்கு முன்பு வானில் பறக்க தொடங்கி விட்டது .

இவைகள் தவிர உலகின் பல விமான நிறுவனங்களுக்கும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து தருகிறார்கள். தொழிற்சாலையின் வெளிப்புறம்  தயாரான விமானங்கள் நின்று கொண்டிருந்தன. (கார் showroom போல )

பயணத்தின் இறுதிக் கட்டமாக மகள் முறையிலான உறவினருடன் Microsoft campusஐ சுற்றி வந்தோம். (Seattle வந்து விட்டு இதை பார்க்காமல் போனால் எப்படி ?)

நகரில் நான் கண்ட வித்தியாசமான ஒரு விஷயம் தெருக்களின் பெயர்கள். 123N , 342SW என திசைகளின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் தெரு பெயர்கள். முக்கியமான இரண்டு பகுதிகள் சேரும் தெருவுக்கு அந்த இரண்டு பகுதிகளின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார்கள். 

பனிப் பொழிவு ,மழை , குளிர், வெய்யில், மலை, ஆறு, ஏரி ,பெருங்கடல்  (North Pacific Ocean), நீர்வீழ்ச்சி , அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வனம் , அதற்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை போன்ற சாலை, வன விலங்குகள் நடமாடும் வனப்ப பகுதியில் அமைந்த பள்ளி , படகுகள் , மீனவர்கள், மரம் அறுத்தல் என இயற்கையும், வானளாவிய கட்டிடங்கள், அலுவலகங்கள், கடைகள், விமான கப்பல் போக்குவரத்துக்கள் என புதுமையும் நிறைந்த நகரம் Seattle.

உறவினர் தம்பதியின்  அருமையான உபசரிப்பில் பயணம் சிறப்பாக அமைந்ததில் வியப்பில்லை. கார்த்திகை பண்டிகையையும் அங்கே அப்பம், வடை, பாயசம் என சமைத்து -2 டிகிரி குளிரில் சிறப்பாகக் கொண்டாடினோம்.

அமைதியான அழகான ஊர். 












No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...