Friday, 28 May 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-3] : North Sea Cruise , Netherlands

April 8 (Night) & 9, 2016

மாலை ஆறு மணியளவில் Port Harwich சென்று சேர்ந்தோம். [ஹாரிச் என உச்சரிக்க வேண்டும்.]

எங்கள் பயணம் முதலில் நெதர்லாந்து நாட்டின் Hoek Van Holland (Hook of Holland) என்னும் துறைமுகத்தை நோக்கி திட்டமிடப்பட்டு இருந்ததால், அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான வடக்கு கடலை (North Sea) கடந்து mainland ஐரோப்பாவிற்கு Stena Shipping line என்னும் நிறுவனத்தின் மிகப் பெரிய Ferryயில் செல்வதற்காக தான் Harwich சென்றோம்.

United Kingdom என்பது ஐரோப்பாவின் ஒரு பகுதியே என்றாலும் தனி தீவுகளாய் உள்ளதால் Mainland ஐரோப்பாவை கடல் அல்லது ஆகாயம் அல்லது ஆங்கிலக் கால்வாயில் (English Channel) கடலுக்கடியில் குடைந்து அமைக்கப்பட்ட Channel Tunnel ரயில் மூலமாக அடையலாம். [லண்டனிலிருந்து பாரிஸ் நகரை மிக விரைவாக (2.20 hours) அடைய முடியும். ]

ஏறக்குறைய 204 கிலோமீட்டர் கடற்பயணம். 6.30 மணி நேரங்களில் கடந்து விடலாம் என்பதால் இந்த பெர்ரிக்கள் இரவு நெதர்லாந்து சென்று விட்டு மீண்டும் காலையில் கிளம்பி Harwich வந்து விடுகின்றன. (கோவை, பிருந்தாவன், வைகை எக்ஸ்பிரஸ்கள் போல. ரயில்கள் போகும் போது ஒரு எண்ணுடனும் வரும்போது வேறொரு எண்ணுடனும் குறிப்பிடப் படுவது போல Brittanica /Hollandica ஆகியவை sister ships).

Stena Hollandica / Brittanica என்னும் பெர்ரியில் செல்வதற்கும் சர்வதேச விமான பயணம் செல்லும் போது அனுசரிக்க வேண்டிய அதே விதிமுறைகள் தான்.

3 மணி நேரங்கள் முன்பாக பெட்டிகளை Check-in செய்து விட்டு, Immigration, security check. முடித்து விட்டு கப்பலுக்குள் செல்லும் போது roll-on பெட்டி /கைப்பை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

காத்திருக்கும் நேரத்தில் சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஐரோப்பா கண்டம் நம் இந்திய துணைக்கண்டத்தை போல 3000+ ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. எனவே அதன் வரலாறு மற்றும் பூகோளம் முக்கியமானது. இந்த பயணக் கட்டுரையில் ஆங்காங்கே சரித்திரமும் பூகோளமும் சுற்றி சுற்றி வரும்.

நாங்கள் 6 மணிக்கே சென்றாலும் கப்பல் துறைமுகத்தில் இருப்பது போல தகவலே இல்லை. ஒரே கப்பலே இரண்டு துறைமுகங்களுக்கும் இடையில் பயணப்படுகிறது என்று கூறினேன் இல்லையா? தாமதமாக வந்த கப்பலில் சரக்குகள், பயணிகளின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள் இடைப்பட்ட நேரத்தில் என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.

நாங்கள் இருவரும் தான் புதிதாக அந்த குழுவில் சேர்ந்தவர்கள் என்பதால் அனைவருடனும் அறிமுகப் படுத்திக் கொண்டோம். காத்திருப்பு ஹாலில் பெட்டிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டு(டே) இருந்தோம்.

பெண்மணிகள் பொதுவாக தாங்கள் சென்ற பயணங்கள் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் குடும்ப கதைகளை எந்த சூழ்நிலையில் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். [ பயணக் கதைகள் என் விருப்பம்]

7.00 மணிக்கு பெட்டிகளை check in செய்து விட்டு immigration முடித்து விட்டு மீண்டும் மற்றொரு ஹாலில் வரிசையில் அமர்ந்து காத்திருந்தோம். [இந்த immigration பகுதியில் மட்டும் தான் எங்கள் Shengen visa வை சோதனை செய்தார்கள்.] பழைய நாட்களில் கல்யாண விருந்துக்கு அமர்வது போல பெஞ்சு வரிசைகள் என்பதால் கதைகள் கேட்க வாய்ப்பில்லை. பசி, தூக்கம் (jetlag). பேச யாருக்கும் தெம்பில்லை?! திருப்பதி தரிசன queue ஹால்களைப் போல அந்த ஹாலிலிருந்து வெளியேற முடியாது. Restroom கிடையாது. (immigration, security check முடிந்த பிறகு வெளியில் செல்ல அனுமதி இல்லை என்பது பொது விதி).

8.30 மணியளவில் கப்பலுக்குள் செல்லும் நடைபாதை [foot passenger walkway for embarkation] வேலை செய்யவில்லை அதனால் பயணிகளை பேருந்தில் ஏற்றி கப்பலுக்குள் 4 ஆவது தளத்தில் இறக்கி விடுவோம் அங்கிருந்து 9 ஆவது தளத்திற்கு மின் தூக்கியில் (lift) செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 9,10,11 மட்டுமே பயணியருக்கானது. 

9 மணிக்கு பேருந்தில் கப்பலுக்குள் இறக்கி விடப்பட்டோம். புதுமையான அனுபவம்.

கப்பலில் சரக்குகள் மற்றும் வாகனங்களை ஏற்றி செல்லும் வகையில் தளங்கள் இருந்தன. மிகப் பெரிய டிரக்குகள் (சரக்குகளுடன்), கார்கள், பிற வாகனங்கள், அட்டை மற்றும் மரப்பெட்டிகளில் சரக்குகள் என அங்கே இருந்தன. Warehouse ல் இருப்பது போல தோன்றியது. அவற்றை வேடிக்கை பார்த்து கொண்டே 9 ஆவது தள receptionஐ அடைந்தோம். அங்கே எங்களுக்கு அறை சாவி தரப்பட்டது. wifi password ம் தரப்பட்டது.

சில ஊர்களில் ஹோட்டலில் தரப்படும் wifi password வேலை செய்யாது. மீண்டும்

அவர்களையே அணுகி அவர்களின் IP address வாங்கி உபயோகப்படுத்தினால் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். கப்பலிலும் அதே பிரச்சினை தான் ஏற்பட்டது. எங்களுடன் பயணித்தவர்கள் அனைவருமே வயதானவர்கள், பலரும் இன்டர்நெட், wifi உபயோகம் பற்றி அதிகம் அறியாதவர்கள் என்பதால் மேடம் எனக்கும் wifi போட்டுக் கொடுங்கள் என சில அன்பர்கள் கேட்க அவர்களுக்கு உதவி விட்டு அறைக்கு சென்றோம்.

10,11 ஆவது தளங்களில் நடைபாதையின் இருபுறமும் ஹோட்டல் போல வரிசையாக அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் உள்ளே இருவர் படுத்துறங்கும் வகையில் பங்க் பெட் (bunk bed), TV, கப்பலின் பின் பகுதியில் அமைக்கப்பட்ட காமிராவின் காட்சிகளை அறையிலிருந்தே பார்க்கும் வண்ணம் மற்றொரு மானிட்டர், attached bathroom என சிறிய வசதியான அறை. கைப்பையை வைத்து விட்டு இரவு உணவிற்கு சென்றோம்.  

https://www.directferries.co.uk/stena_line_stena_hollandica.htm

9 ஆவது தளத்தில் ஒரு பாதி reception, lounge , bar , tv, foreign exchange counter, gift shop  போன்றவைகள் இருக்க மறுபாதியில் பெரிய உணவகம் உள்ளது. கப்பலின் உணவகத்தில் பயண ஏற்பாட்டாளர்களின் முன்னேற்பாட்டின்படி இந்திய உணவு வகைகள் கிடைத்தன. Buffet வகையிலான உணவகம் ஆனால் பரிமாற ஆட்கள் இருந்தார்கள். கப்பலின் ரெஸ்டாரன்டில் தென்னிந்திய உணவுகள் கிடைத்தன.

கப்பலின் பின்பக்கம் தெரிந்த இரவு நேர லண்டன் நகரை வேடிக்கை பார்த்து கொண்டே உண்டு முடித்து விட்டு கப்பலின் மற்ற பகுதிகளை சுற்றி பார்த்தோம். மேல் தளத்தில் நின்று இரவு நேர லண்டன் நகரின் அழகினைக் கண்டோம். குளிர் காற்று வீசியது. Deck முழுவதும் நடந்து சென்று சுற்றி பார்த்தோம். கீழ்த் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தெரிந்தன.

கடலில் அலைகள் இல்லாமல் அமைதியாக இருந்ததால் கப்பல் நகர்வதே தெரியவில்லை. சென்னையிலிருந்து கிளம்பும் முன்பாக எங்கள் மருத்துவரை சந்தித்த போது நாங்கள் கப்பல் பயணம் செல்ல போகிறோம் Sea sickness வரும் என்று சொல்கிறார்களே அதற்கு முன்னேற்பாடாக மாத்திரை தாருங்கள் என்று கேட்டேன். அவரது பதில்: ஒன்றும் ஆகாது அமைதியாக பயணத்தை அனுபவியுங்கள். உண்மை தான். எந்த விதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. (Sea sickness என்பது அலைகளின் மேல் கப்பல் செல்லும் போது ஏற்படும் அசைவு காரணமாக வயிற்று பிரட்டல் வாந்தி வருதல்).

நள்ளிரவு 12 மணிக்கு கப்பல் புறப்பட்டதும் அறைக்கு சென்று உறங்கி விட்டு விடியலில் எழுந்து குளித்து பைகளுடன் நேராக காலை உணவு உண்ண சென்றோம். அவல் உப்புமா மற்றும் பல சுவையான உணவு வகைகள் கிடைத்தன.

மீண்டும் மேல் தளம் சென்று புகைப்படங்கள் எடுத்து கொண்டோம். விடியலில் கண்ட நெதர்லாந்தின் சூரியோதய காட்சி ரம்மியமாக இருந்தது தூரத்தில் தெரிந்த காற்றாலைகள் நெதர்லாந்தை நெருங்கி விட்டதை உணர்த்தின. கடற்கரையில் dike எனப்படும் கற்களால் ஆன தடுப்பு சுவர்கள் தென்பட்டன.

நெதர்லாந்து கடல்மட்டத்தை விட தாழ்வான நாடு என்பதால் கடல் நீர் ஊருக்குள் வராமல் இருக்க dike என்னும் கற்களால் ஆன தடுப்பு சுவர் கடற்கரையோரங்களில் அமைக்கப் பட்டுள்ளன. (சென்னையில் எண்ணூர் பகுதியில் இது போல அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம்)

அதை கண்டதும் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் படித்த கதை நினைவுக்கு வந்தது ஹான்ஸ் ஆண்டர்சன் என்னும் பெயருடைய ஒரு டச்சு (Dutch) சிறுவன் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயம் dike ல் ஏற்பட்ட சிறு துளை வழியாக தண்ணீர் ஊருக்குள் வருவதை காண்கிறான். உதவிக்கு யாரும் இல்லை இரவு முழுவதும் தன்னுடைய விரலால் அந்த ஓட்டையை அடைத்து அந்த ஊரை காப்பாற்றுகிறான். மறுநாள் பெரியவர்கள் வந்து அந்த தடுப்பு சுவரின் ஓட்டையை சரி செய்கிறார்கள். சிறுவனின் வீரத்தை பாராட்டி பரிசளிக்கிறார்கள் என்பதாக கதை முடியும்.

சற்று நேரத்தில் நங்கூரம் பாய்ச்சி விட்டார்கள் இறங்க தயாராகுங்கள் என உத்தரவு வரவே வரிசையில் நின்று இறங்க தயாரானோம். கப்பலில் வழியெங்கும் செக்யூரிட்டிகள் வழி நடத்தினார்கள். இம்முறை ஏரோபிரிட்ஜ் நேரே immigration office அருகில் பயணியரை கொண்டு சேர்த்தது.

வரிசையில் நடந்து immigration பகுதியை கடந்து வெளியில் வந்தோம். இந்த இடத்தில் பாஸ்ப்போர்ட்டில் Shengen நாடுகளில் நுழைவதற்கான முத்திரை எதுவும் குத்தவில்லை. [பயணியின் வருகையை கணினியில் மட்டும் பதிவு செய்து கொள்ளும் முறை 2016 லேயே அங்கே செயல்பாட்டில் இருந்துள்ளது என்று இப்போது தோன்றுகிறது. [நாங்கள் 2018 ல் ஆஸ்திரேலியா சென்றதற்கு அடையாளமாக எந்த முத்திரையும் எங்கள் பாஸ்போர்ட்டில் இருக்காது.]

Travelatorல் கீழிறங்கி நடந்து வருகையில் கப்பலில் எங்களுடன் பயணித்த சரக்கு வண்டிகள் அனைத்தும் வெளியில் வந்து கொண்டிருந்ததை கண்டோம். (டைட்டானிக் அளவில் கப்பலை பற்றி யோசிக்காதீர்கள் மக்களே. நாங்கள் பயணித்தது cruise கப்பலே இல்லை மிகப் பெரிய அளவிலான ferry தான்.) சிறு வயது எர்ணாகுளம்கொச்சி ferry பயண அனுபவம் இருந்தாலும் இது வித்தியாசமான பயணம் என்பதில் சந்தேகம் இல்லை.

காலையில் மகளிடம் கப்பல் பயணத்தைப் பற்றி விவரிக்கையில், கப்பல் அசைவதே தெரியவில்லை, அருமையான பயணம். கப்பலில் எங்கும் சிறு சத்தம் கூட இல்லை 5 ஸ்டார் விடுதிகள் போல மிக அமைதியாக இருந்தது என்று கூறினேன். அதற்கு மகளது பதில், " டைட்டானிக் கப்பல் போல ஏதாவது ஆனால் தான் அம்மா சத்தம் வரும்."

வெளியில் வந்ததும் எங்களுக்கான பேருந்து காத்திருந்தது

. கப்பலிலேயே குளியல், காலை உணவு போன்றவை முடிந்து விட்டதால் நேராக அடுத்த ஊரை நோக்கிய பயணம் தான். எங்கள் பெட்டிகள் ஒரு சிறிய ட்ரக்கில் மொத்தமாக பேருந்தின் அருகில் கொண்டு வந்து தரப்பட்டன. அவரவர் பெட்டிகள் வந்து சேர்ந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு, அவைகளை பேருந்தின் அடிப்பாகத்தில் அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு பேருந்தில் ஏறினோம். யாருக்கு எந்த இருக்கை என்பது முன்பே தெரியுமாதலால் எப்போதும் அது பற்றிய பிரச்சினை வரவில்லை.

இந்த பேருந்து லண்டன் பேருந்தை விட பெரியது. கூடுதல் அம்சங்களாக உள்பகுதியில் ஆங்காங்கே டிவி மானிட்டர்கள் மற்றும் பேருந்தின் பின்பகுதியில் பெட்டிகளை வைக்கும் வண்ணம் ஒரு இணைப்பு பெட்டியும் இருந்தன. பயணிகள் ஏறியதும் பேருந்தின் கதவு மூடப்படும். (Electronic lock). ஓட்டுனரால் மட்டுமே இயக்கும் வகையிலானது

நெதர்லாந்து நாட்டின்Hook of Holland” நகரிலிருந்து “The Hague” என்னும் (20 கிலோமீட்டர்கள்) ஊரை நோக்கி பயணம் தொடங்கியது. [தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பது விதி என்பதால் பேருந்தில் அமர்ந்தபடி எடுத்த எங்களின் விடியோக்கள் வே......கமாக தெரியும்.]

பயணிக்கும் நேரத்தில் சில முக்கிய செய்திகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியே ஹாலந்து. ஆனால் மக்களின் பயன்பாடு ஹாலந்து என்றே உள்ளது என்பதால் நாமும் ஹாலந்து என்றே சொல்வோம். அங்கு வசிக்கும் மக்கள் Dutch என அழைக்கப் படுகிறார்கள். Dutch மொழி பேசுகிறார்கள். டச்சு மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் காலனிகளை ஏற்படுத்தினார்கள். முன்பு வடஅமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள Green bay என்னும் ஊரைப் பற்றிய கட்டுரையிலும் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

http://manjooz.blogspot.com/2018/11/44-31-9-n-88-1-11-w.html

ஆம்ஸ்டெர்டாம் ரோட்டர்டாம் நகரங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நகரமாக கருதப்படுகிறது The Hague நகரம். நாம் கடக்கப் போகும் இந்த 20 km தூரமும் ஏரி மாவட்டம் எனப் பெயர் பெற்றது. (தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் தான் ஏரி மாவட்டம் என ஐந்தாம் வகுப்பு புவியியல் பாடத்தில் படித்திருக்கிறேன்.)

வழியெங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏரிகளும், கால்வாய்களும், பச்சைப் பசேலென்ற வயல்களும், டூலிப் மலர்த் தோட்டங்களும், பழமையான மற்றும் புதுமையான காற்றாலைகளும் (windmills) தென்பட்டன. வசந்த காலத்தில் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாத முதல் வாரம் முடிய ஒவ்வொரு வருடமும் டூலிப் மலர்கள் மலர்ந்து வண்ண மயமாக காணப்படும். பொதுவாக ஏப்ரல் 12-20 தேதிகளுக்குள் மலர்ந்திருக்கும். இவற்றின் ஆயுள் அவ்வளவே. உடனே பறித்து விற்பனை செய்து விடுவார்கள். 10 நாட்களும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி உண்டு. [Tulip festival]

நாங்கள் சென்ற ஏப்ரல் 8 என்பதால் பூக்களை (மொட்டுக்கள் என்றே சொல்லலாம், bulbs என்பார்கள் ஆங்கிலத்தில்) பனியிலிருந்து காப்பாற்ற பெரிய பெரிய Greenhouse களில் பனியிலிருந்து பாதுகாத்து ஏக்கர் கணக்கில் வைத்திருந்தார்கள். டூலிப் மலர்கள் விலை உயர்ந்தவை அவைகளை பாதுகாத்தல் மிக அவசியம் ஒரு வாரம் கழித்து சென்றிருந்தால் சங்கர் படங்களில் காட்டுவது போன்ற டூலிப் பூக்களை பல வண்ணங்களில் கண்டிருக்கலாம்.எதிர்பார்ப்பு இல்லை என்பதால் ஏமாற்றம் இல்லை. ஆம்ஸ்டெர்டாம் நகரின் Keukenhof tulip garden என்ற பிரசித்தி பெற்றது.

https://cosmopoliclan.com/travel-with-kids/inspiration/keukenhof-gardens-amsterdam-tulip-garden/

ஏப்ரல் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரின் Tulip festival சமயத்தில் வண்ண வண்ண மலர்களை கண்டு களித்தோம். (பெரிய அளவில் இல்லையென்றாலும் இதன் புகைப்படங்களையும் இந்த பதிவுடன் பகிர்கிறேன். நெதர்லாந்தில் இதை விட பல மடங்கு பெரிய தோட்டங்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.)

சூரியனை சிறு குடையால் மறைக்க முடியுமா என்பார்களே அது போல தெருவோரங்களில், கால்வாய் ஓரங்களில், ஏரி ஓரங்களில் என ஒற்றை டூலிப் பூக்கள் பல வண்ணங்களிலும் ஆங்காங்கே வழியெங்கும் காற்றுக்கு தலையசைத்து எங்களை வரவேற்பது போல இருந்தன. கொள்ளை அழகு.  

நெதர்லாந்து காற்றாலைகளுக்கு பிரசித்தி பெற்றது. பழமையான காற்றாலைகளை அழகுக்காக விட்டு வைத்திருக்கிறார்கள். டூலிப் வயல்களுக்கு நடுவே ஒற்றை காற்றாலை நிற்பது மனதுக்கு ரம்மியமான காட்சி.

வழியில் பிரபலமான ஸ்டேடியம் ஒன்றை கண்டோம். Multi-purpose ஸ்டேடியம் என்ற போதிலும் கால்பந்து ஹாக்கி விளையாட்டுக்கள் அங்கே அதிகமாக  நடைபெறுகின்றன என வழிகாட்டி கூறினார். [Kyocera Stadion]

The Hague நகரம் International Court and Arbitration க்கு பிரசித்தி பெற்றது. United Nations Organisation ன் சட்ட பிரிவு அலுவலகங்களின் தலை நகரம் இதுவே. 200 அலுவலகங்கள் உள்ளன இங்கே. இந்நகரம் சிறிய நகரமே என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம்.

இந்நகரின் Scheveningen என்னும் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு சென்றோம். இந்த பகுதியின் மூத்த குடியினர் ANGLO-SAXONS ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது .

ஆங்கில இலக்கிய பாடத்தில் படித்த ஒரு செய்தியை இங்கே

பகிர்கிறேன். ஆங்கில மொழியானதுஇந்தோ-ஜெர்மானிக்” எனப்படும் மொழி வகையை சார்ந்தது. சம்ஸ்க்ருதம், ஈரானிய மொழி, பிராகிருதம் என பல மொழிகளிலிருந்து சொற்கள் கையாளப்பட்டு திரிந்து பின்பு ஆங்கில மொழியாக மாறியதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்திற்கு முற்பட்ட மொழி பிரஞ்சு மொழி.

Anglo-saxons எனப்பட்ட ஒரு நாடோடி குழுவினர் ஆசியாவிலிருந்து ஹாலந்து நாட்டின் கடற்கரையோரங்களில் குடிபெயர்ந்து வசித்ததாக சரித்திரம். அவர்களின் மொழி Anglis-> Englis -> English என பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் இங்கிலாந்து நாட்டில் குடியேறியதன் விளைவாக பிரெஞ்சு மொழி பேசி வந்த அவர்கள் புது மொழியான ஆங்கிலத்தை பேச தொடங்கினர். ஆங்கில மொழிக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது.

லண்டன் நகரின் மேட்டுக்குடியினரால் பேசப்பட்ட, அந்நகரின் கல்விக் கூடங்களில் கற்பிக்க பட்ட மொழியே உலகளவில் ஆங்கிலம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த புது வார்த்தையும் Oxford அகராதியில் இடம் பெற்றால் மட்டுமே ஆங்கில மொழி வார்த்தையாக அங்கீகரிக்கப் படுகிறது.

இன்றளவும் அமெரிக்க ஆங்கிலத்தை ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் anglo-saxons 17ஆம் நூற்றாண்டில் அங்கே குடி பெயர்ந்தாலும் இன்றளவும் பழமையான ஆங்கில மொழியினை பேசுகிறார்கள் என்பதே.

http://manjooz.blogspot.com/2021/05/blog-post_27.html

நாங்கள் சென்ற பகுதியின் பெயர் CARLSON BEACH. அங்கே beach, esplanade, pier, மற்றும் ஒரு lighthouse இருந்தன. சுவாரசியமாக ஒன்றும் இல்லை அங்கே. (என் மகளின் விமர்சனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை இங்கே_ அம்மா நீ மெரினா கடற்கரையில் காலாற நடந்து சுண்டல் தின்று வளர்ந்தவள் உலகத்தின் எந்த கடற்கரைக்கு உன்னை அழைத்து சென்றாலும் உனக்கு சுவாரசியமாக இருக்காது.)

[Beach—மணற்பாங்கான கடற்கரை, Esplanade—நதி அல்லது கடலுக்கு அருகில் நடந்து செல்லும் வண்ணம் அமைந்த அகலமான பகுதி, Pier—திரைப்படங்களில் வயதான அப்பா  மகள் அல்லது மகனுடன் கடற்கரை அல்லது ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலத்தில் மேல் நின்று மீன் பிடிப்பார்களே அது தான் இது, Lighthouse—கலங்கரை விளக்கம் 

அந்த கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்து கொண்டு அங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆம்ஸ்டெர்டாம் நகரை நோக்கி கிளம்பினோம்.

The Hague நகரிலிருந்து வரும் வழியெங்கும் வாய்க்கால்களும் பச்சை பசேலென்ற புல்வெளிகளும் டூலிப் வயல்களும் காற்றாலைகளுமாக எங்கெங்கும் பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. வழியில் Schiphol விமான நிலையம் உள்ளது. உலகப் போர்களின் போது அமைக்கப் பட்ட இந்த விமான நிலையம் தற்போது பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து செல்லும் ஐரோப்பாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது. டூலிப் மலர்கள், மரக்காலணிகள் (clogs) என பலவும் ஏற்றுமதி செய்யப்படுவதால் எப்போதும் பிஸியாக இருக்கிறது இந்த விமான நிலையம். இங்கே இறங்கி ஏற கட்டணம் அதிகமாக உள்ளதால் முக்கியமான airlines விமானங்கள் கூட இந்நகருக்கு வருவதை நிறுத்தி விட்டதாக அறிகிறோம்.

இந்த விமான நிலையத்திற்கு வரும் / செல்லும் விமானங்களின் taxiwayயானது பேருந்துகள் செல்லும் பாதைக்கு மேலே உள்ள பாலத்தோடு இணைந்தது. [பாலத்தின் மேலே விமானம் செல்கிறதா பாருங்கள் என்று வழிகாட்டி சொன்னார் என்பது பற்றி. முன்பே குறிப்பிட்டிருந்தேன்] பேருந்து சென்ற சாலையை ஒட்டியே விமானங்கள் நின்று கொண்டிருந்தன. [நியூயார்க் நகரின் நடுவில் பாலத்தின் மேலே சென்ற விமானத்தின் உள்ளிருந்து தரையில் சென்ற வாகனங்களை கண்ட அனுபவம் எனக்கு நியூயார்க் - சான் பிரான்ஸிஸ்கோ செல்லும் போது கிடைத்தது.]

ஆம்ஸ்டர்டாம் நகரம் நாங்கள் காண நேர்ந்த முதல் typical ஐரோப்பிய நகரம் என சொல்லலாம். [லண்டன் சற்றே வித்தியாசமாக இருந்தது.]

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் அந்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கே பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வசிக்கிறார்கள். Amstel என்னும் நதியின் காரணமாக அமைந்த பெயர் கொண்ட ஊர் இது. திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரத்தில் வெனிஸ் நகரைப் போல பல வாய்க்கால்கள் இருப்பதால் இது "Venice of the north" என அறியப்படுகிறது. Dutch wooden clogs என அழைக்கப்படும் மரத்தாலான காலணிகளுக்கு பிரசித்தி பெற்றது இந்த ஊர். [நீர் நிலைகள் நிறைந்த பகுதி என்பதால் மரக்காலணிகள் அணிகிறார்கள்.]

[வாய்க்கால் (canal) - மனிதனால் உருவாக்கப்படுவது கால்வாய் (Channel) - இயற்கையாக அமைந்தது

உதாரணமாக English Channel]

நகருக்குள் வந்ததும் வாய்க்கால்களில் செலுத்தப் படும் படகில் ஏறி ஊரை சுற்றி பார்த்த்தோம். வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் கண்ணாடி கூரையுடன் அமைந்த விசைப்படகு. (motor boat). இவை தவிர ஒவ்வொரு வீட்டிற்கு அருகிலும் வாய்க்காலில் அவரவருக்கு சொந்தமான  சிறு படகுகள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தன.

இந்த நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்கால்கள் நகரை சுற்றியும் ஊருக்குள்ளும் செல்கின்றன. ஆங்காங்கே பாலங்கள். இருகரைகளிலும் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்கள் (மியூசியம்), புகழ்பெற்ற  புராதனமான கட்டிடங்கள் உள்ளனதனித்தனியாக ஒவ்வொன்றையும் காண பல வருடங்கள் தேவைப்படும் என்பதால் இந்த வாய்க்கால்களில் படகுகளில் சென்று அவைகளை வெளியிலிருந்து கண்டோம்.பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்கள் (மியூசியம்), புகழ்பெற்ற புராதனமான கட்டிடங்கள் உள்ளனதனித்தனியாக ஒவ்வொன்றையும் காண பல வருடங்கள் தேவைப்படும் என்பதால் இந்த வாய்க்கால்களில் படகுகளில் சென்று அவைகளை வெளியிலிருந்து கண்டோம்.

Van Gogh என்னும் புகழ்பெற்ற ஓவியர் இந்நாட்டை சேர்ந்தவர். அவரது பெயரிலேயே ஒரு அருங்காட்சியகமும் உள்ளது இங்கே. எந்த கட்டிடம் என்ன ஏது என்று விவரம் சொல்ல ஆளில்லை. கீழ்காணும் விவரங்களை மட்டும் வழிகாட்டி கூறினார். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நகர நிர்மாணம் தொடர்வதால் புராதன தன்மை எங்கும் உள்ளது. கட்டிடங்களில் சிற்பங்கள், மரவேலைப்பாடுகள், தங்கமுலாம் பூசிய சிலைகள் என அமையப் பெற்ற அழகான ஊர் ஆம்ஸ்டெர்டாம். கட்டிடங்களில் நுட்பமான மர  வேலைப்பாடுகள் சிற்பங்களை செதுக்கி வைத்துள்ளார்கள்.

இந்த ஊரில் மக்கள் எங்கெங்கும் bicycle ல் தான் பயணிக்கிறார்கள். அதற்கென தனிப்பாதைகள் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டு ஆங்காங்கே உள்ளன. அரசே காற்றில் மாசுக் கட்டுப்பாட்டை (air pollution) தவிர்ப்பதற்காக மக்களை சைக்கிள் உபயோகிக்க ஊக்குவிக்கிறது. மக்கள் உபயோகப்படுத்திய பழைய சைக்கிள்களை வாய்க்கால்களில் போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்; வருடம் தோறும் 10 - 15 ஆயிரம் சைக்கிள்களை அரசாங்கம் ஊரிலுள்ள வாய்க்கால்களிலிருந்து எடுப்பதாக கூறப்படுகிறது. ஊருக்கு வெளியிலிருந்தே சிவப்பு வண்ணத்தில் உள்ள சைக்கிள் பாதைகள் ஆரம்பித்து விடுகின்றன. எங்கெங்கும் மக்கள் மிதிவண்டிகளில் (bicycle ) சென்று கொண்டிருப்பதால் கவனமாக நடந்து செல்லுங்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் எங்கள் வழிகாட்டி.  

அரசாங்கமே அங்கங்கே சைக்கிள்களை நிறுத்தி வைக்கிறது. Bar code ஸ்கேன் செய்தால் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் அரசுக்கு சென்று விடும். பூட்டப்பட்ட சைக்கிளின் பூட்டு திறக்கும் நாம் உபயோகப்படுத்தி விட்டு

நகரத்தின் வேறு பகுதிகளிலும் இது போன்ற நிறுத்தங்களில் நிறுத்தி விட்டு செல்லலாம். முதல் 30 நிமிடங்களுக்கு இலவசம், அதன் பிறகு தான் கட்டணம் ஆரம்பம். மாணவர்களை ஊக்குவிக்கத் தான் இலவச ஏற்பாடு.30 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி எடுத்து சென்றாலும் அரசு கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிறத்தில் சைக்கிள்கள் இருந்தன. [லண்டனிலும் சைக்கிள்களை கண்டேன். ஆனால் அங்கே வெகு சிலரே சைக்கிள் ஒட்டி செல்வதை காண முடிந்தது.]

படகுப் பயணத்தில் பல அடுக்குகளைக் கொண்ட மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்டை கண்டோம். [Mega cycle parking]

வாய்க்காலுக்கு ஒரு கரையில் ஒற்றை இலக்க பதிவு எண் (Registration number) கொண்ட வாகனங்களும் மற்றொரு கரையில் இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. பாலங்களின் மேல் மக்கள் சைக்கிளுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். மக்கள் தொகை கூடுதலாக தென்பட்டது.  

அங்கிருந்த வீடுகளின் அமைப்பும் சற்றே வித்தியாசமாக இருந்தது. 1 + 4 மாடி வீடுகள் தான் இருப்பினும் வாசல் கதவுகள் சிறியதாகவும் மேல் மாடிகளில் உள்ள அறைகளின் ஜன்னல் போன்ற அமைப்பு அகலமாகவும் இருந்தது. மேல் மாடி வீடுகளுக்கு பொருட்களை ஏணியில் ஏறி அந்த அகல ஜன்னல் வழியே கொண்டு செல்கிறார்கள்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படகில் பயணம் செய்து ஊரை சுற்றி பார்த்த பிறகு மதிய உணவுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தது.

இது எங்கள் பயணத்தின் நான்காவது நாள். (8/4/2016) முதல் மூன்று நாட்களும் ஊரை சுற்றி பார்க்கும் மகிழ்ச்சியில் இந்தியாவிற்கு தொடர்பு கொள்ளும் ஆவல் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

நாங்கள் ஆம்ஸ்டெர்டாம் சென்ற சமயம் எங்களுடன் பயணித்த தோழி கலாவின் மகன் வேலை நிமித்தம் அங்கே வசித்து வந்தார். அவருடன் தொடர்பு கொள்ள முடியாமல், call card வாங்கலாமா எப்படி வாங்குவது, பொது தொலைபேசியில் பேசலாமா என தடுமாற, நண்பர் ஒருவர் தன் தொலைபேசியை தந்து உதவ, ஒரு வழியாக உணவகத்திற்கு வந்து சேர்ந்தார் அவரது மகன்.

மதிய உணவு வழக்கம் போல பஞ்சாபி உணவு வகைகள் தான். காரம், உப்பு, புளி, மசாலா பொருட்கள், எண்ணெய், வெண்ணை என பயண நேரத்தில் உடலை பாதிக்காத உணவுகள். டெஸெர்டுக்கு Cornetto போல ஒரு ஐஸ்கிரீம் தந்தார்கள்.

உணவு உண்டு முடித்து விட்டு வரும் நிதானமாக நடந்து வழியில் பாலங்களை கடந்து புகைப்படம் எடுத்து கொண்டு பேருந்தை வந்தடைந்தோம். அமைதியான அழகான ஊர்.

பழமையும் புதுமையும் இயற்கையும் கலந்த அருமையான நாடு நெதர்லாந்து. நாங்கள் சென்ற நாளில் பனிப் பொழிவு இல்லாத நிலையில் மிதமான குளிருடன் தட்ப வெப்ப நிலை மனதுக்கு ரம்மியமாக இருந்தது. வெய்யில் உரைக்கவில்லை. லேசான குளிர் காற்று வீசியது. லண்டனை போல இல்லாமல் நெதர்லாந்து நாட்டில் சாலைகள் சற்றே அகலமாக இருந்தன. மக்கள் தொகை நிறைய இருந்தாலும் நகரம் சுத்தமாக இருந்தது.


எந்த ஊரில் உன் ஓய்வுக் காலத்தை கழிக்க விரும்புகிறாய் என்று யாராவது என்னை கேட்டால் நெதர்லாந்து நாட்டின் lake district பகுதி. என்று தான் சொல்வேன்.

மதிய உணவிற்கு பிறகு 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெல்ஜியம் நாட்டின் தலைநகரை நோக்கிப் பயணத்தை தொடங்கினோம்.

B..R..U..S..S..E..L..S!!

அனுபவங்கள் தொடரும் ...

 

 

 

 

 

 

 

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...